1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஓட்டோவில் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ராணியக்காவை பாக்க போறன். இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள்.
இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை . ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள்.
தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள். நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் பொருள்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விற்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர். ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு தையல் இயந்திரமும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ..ஆடு ..மாடு.. கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.
அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னையும் அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது... நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ..ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .
சரி போகும்போதே கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் .. .. சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணிர் வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும். நில்லடா காகம் என்ற படிதோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நேக்கி எறிந்த படி.. பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் சோறு தண்ணிகூடக்கிடையாது...... என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது. ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம்
நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலான “இதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார். அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது
அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை. சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன். இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில்.. ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம் ஒரு இரவு ஒரு இடி விழுந்தது.
அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்குள் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா?? என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை
யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.
அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி .....வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக.... ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம்
தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள்
ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான். அவர்களது சத்தம் கேட்டு அந்த முகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது செய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதுக்குப் புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல
ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டைநோக்கி ஓடினோம். அங்கு நான் கண்ட காட்சி.. ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார்\. எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.
நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள். அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு சேலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம். வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம்.
உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார். யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது ...காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை. அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் ...என்ன செய்யலாமெண்டு யோசித்த போதுதான்
மானிப்பாய் வைத்திய சாலையில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வாகனத்தில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் நான் எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன் ஆனால் நான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய் .
அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது. ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார். அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும்
அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன். நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.
அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான். கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர்
என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன். எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடர்ச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர். மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன்
தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார். நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் .....தம்பி இப்ப வருத்தமெல்லாம் மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா
இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் வைத்தியர்கள் .. சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு . அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.
நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தயாராகிறபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வருவேன் என்றபடி அவரை உற்று பார்க்க அவர் கைகளை மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருக்க அவரது கண்களில் இருந்து கண்ணிர் மட்டும் வடிந்துகொண்டிருந்தது.
என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.
பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான்.
எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................ |
i have no words to tell my feelings but i am very sorry for what has happened to them
எம் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் சோனியாக்களே!
எம் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் சோனியாக்களே!
:(((((((((((((((((((((
//இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே................//
இன்று வரை தொடர்கிறதே.
ராகுல் காந்தி- இளஞ் சிங்கமாம்!
சோனிஆ தியாக திருவிளக்காம்!
சொல்வது யார்?
மஞ்ஜல் துண்டு!
உனது உடம்பில் ஓடுவது என்ன?ரத்தமா?சாக்கடையா?
இந்தியர்களின் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன.
போடாங்கா
சும்மா இப்படி எல்லாம் கதை எழுதி அனுதாபம் தேட பார்க்காதே
இந்தியா பிடிக்கவில்லை என்றால் எதுக்கு இந்தியாவிற்க்கு வரனும் அப்படியே நேரடியா ப்ரான்ஸ் போக வேண்டியது தானே
நன்றி கெட்டவர்கள் என்று உலகம் முழுதும் யாழ்பாண வாசிகளை ஏன் சொல்கிறார்கள் என்று இப்போது புரிகிறது
:((((
நீங்கள் ஒரு ராணியக்கா பற்றி எழுதியுள்ளீர்கள்.... இப்படி எத்தனையோ ராணியக்காக்கள்....
வரலாறு எம் நினைவுகளை இழபுகளால் மட்டுமே எழுதி செல்கின்றது...
//நன்றி கெட்டவர்கள் என்று உலகம் முழுதும் யாழ்பாண வாசிகளை ஏன் சொல்கிறார்கள் என்று இப்போது புரிகிறது//
அதற்காக உங்களது ராணுவம் செய்த அட்டூழியம், தமிழரை அழிக்க கொடுக்கும் ராணுவ, ஆயுத உதவி
போன்றவற்றுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? நல்லா சொல்லுறாங்கய்யா.
உண்மையை சொன்னால் இப்படி தான்.
Politicians' Drama 2009
:((.. மனதில் பாரத்தோடு!!
ஒருவன் துயரத்தின் எழுத்திலும் எப்படி மனிதர்களால் பின்னூட்ட எதிர்வினை செய்ய முடிகிறது:(
i am very sorry for what happened. I am an indian but i dont believe in violence. At the sametime i dont know what is the answer for conflicts. I am extremely sorry.I know nothing can bring back what you lost.
இவற்றை கதை என்று சொல்பவர்களின் அக்காள்,தஙகைகளுக்கு இது போன்று நடந்தாலும் இவ்வாறுதான் சொல்வார்களா?