Navigation


RSS : Articles / Comments


9:44 AM, Posted by sathiri, No Comment

ஈழப் போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம்எழுதியவர் சி. புஸ்பராசா அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை

எங்கள் ஈழ மக்களது வரலாற்றில் மிகப்பெரும் ஒரு சாபக்கேடு எங்கள் வரலாறு பற்றி அவ்வப்பொது போதுமான பதிவுகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சியால் பதிந்து விட்டு போன பதிவுகளும் எதிரிகளால் அவ்வப்போது திட்டமிட்டு அழிக்கப் பட்டும் இங்கு புஸ்பராசா போன்றவர்களால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டும் எழுதப்படும் புனைகதைப் புளுகுகளே வரலாறாக தூக்கி பிடிக்கப்பட்டு தமிழின எதிரிகளின் தாராள விளம்பரத்தால் அவையே காலப் போக்கில் தமிழனின் வரலாறாகத் திட்டமிட்டு மாற்றப்படும் அபாயமும் இருக்கின்றது.

புஸ்பராசாவின் இந்த ஈழ பொராட்டத்தில் "எனது சாட்சியம்" என்கிற புத்தகம் வெளியான போதே அதனை வாங்கிப் படித்த நான் மற்றும் பல நண்பர்களும் இந்த புத்தகத்தில் பல வரலாற்று திரிபுகளும் அதில் ஈழ போராட்டத்தில் ஆரம்பகால மென்முறை (சாத்வீகப் போராட்டம்)போராட்டத்திலிருந்து அதனை வன்முறை போராட்டமாக மாற்றிய ஆயுதப் போராட்டத்தின் தந்தை என்று புஸ்பராசா அவரகள் தன்னை தானே கோடிட்டு காட்ட முயற்ச்சித்துள்ளார் என்பதும் அவரது புத்தகத்தில் தெளிவாக தெரிகின்றது.

அதனால் அந்தப் புத்தகத்தைப் பற்றியும் புஸ்பராசாவைப் பற்றியும் ஒரு விரிவான விளக்கமான ஒரு கட்டுரை எழத வேண்டும் என்று நான் நினைத்தாலும் அவரது அந்தப் புத்தகம் வெளிவந்த ஆரம்பத்தில் தமிழர்கள் மத்தியில் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாமல் எந்த இணையங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அதை பற்றிய விபர விவாத விளக்கங்களோ பெரிதாக வெளி வராததால் நானும் எனது கட்டரை எழுதும் நோக்கத்தை கை விட்டு விட்டேன் ஆனால் புஸ்பராசாவின் இறுதிக் காலங்களில் இந்திய பிரபல சில தமிழ் பத்திரிகைகளிலான அவரது பேட்டிகள் மற்றும் அய்ரோப்பாவில் சில வானொலி ஒரு தொலைக்காட்சி என்பனவும் அவரது பேட்டிகளை தொடர்ந்து வெளியிட்டதனால் அவரைப் பற்றி தெரிந்திராத பலரும் யார் அந்த புஸ்பராசா? அவர் புத்தகத்தில் என்ன எழதியிருந்தார் என்று அறியப் பலரும் ஆர்வமாக இருந்தார்கள். அவரை பற்றிய விவாதங்களும் கட்டுரைகளும் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் மாறி மாறி அடிபடத் தொடங்கியது .

ஊரில் இருந்த வயதானவர்களிற்கு இவர் யார்? ஈழ போராட்டத்தில் இவரின் பங்கு என்ன? என்று நன்றாகத் தெரியும் ஆனால் இணையங்களில் உலாவுகின்ற எமது இளைய சமுதாயம் இவரது பேட்டிகளைப் படித்து விட்டு இவர்தான் ஈழப்போராட்டத்தின் தந்தையா? என்கிற ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். அதைவிட இந்திய பிரபல பத்திரிகைகளில் அவரது பேட்டி வந்தபடியால் உண்மையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு எண்ணம் இவரைத் தெரியாத பலருக்கு ஏற்பட்டது . இந்த விடயத்தில் புஸ்பராசாவும் அவரை இயக்கியவர்களும் அவர்களது நோக்கத்தில் ஓரளவு வெற்றி கண்டனர் என்பது உண்மைதான்.

"ஈழப் போராட்டத்தில் பல வரலாற்றுத தவறுகள் இருக்கின்றன விரும்பியவர்கள் எல்லாம் விரும்பிய படி விரும்பியவர்களிற்காக வரலாறு எழுதப்பட்டு விட்டது"என்று தனது புத்தகத்தின் முன்னுரையில் 15 வது பக்கத்தில் கூறிக் கொண்டு தானே தனக்கு விரும்பியதை விரும்பியபடி வரலாறாக எழுதிவிட்டு போயிருக்கிறார். எனவேதான் புஸ்பராசா அவர்கள் இறந்து விட்ட நிலையில் மீண்டும் அவரது புத்தகத்தின் மீதான எனது பார்வைக் கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ஆரம்பகால ஆயுதப் போராட்டத்திலிருந்து இன்று தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இருக்கும் பலர் மற்றும் புஸ்பராசா அவர்கள் தனது புத்தகத்தில் கூறியது போல ஈழ ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர்கள் பலரும் இருந்த அமைப்பான தமிழ் மாணவர் பேரவையின் தலைவராயிருந்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலன் ஆகியோருடனும் தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி மற்றும் எனக்கும் தனிப்பட முறையில் புஸ்பராசா அவர்கள் பற்றித் தெரிந்த தகவல்கைளையும் தருகிறேன்.

புஸ்பராசா அவர்கள் இளமைக் காலத்தில் அவரது பிறந்த ஊரான மயிலிட்டியில் தமிழரசுக்கட்சியின் பிரமுகராக இருந்த சிவனடியான் என்பவருடன் இணைந்து மயிலிட்டி சனசமூகநிலைய இளைஞர்களுடன் தமிழரசுக் கட்சிசார்பாக வேலைகள் செய்யத் தொடங்கினார். இதுதான் இவரது ஆரம்ப அரசியலுடனான தொடர்பு.அந்த கட்சி சார்பாக நடக்கும் கூட்டங்களிற்கு ஒழங்கு செய்தல். அன்று சிறீலங்கா அரசு கொண்டு வந்த தமழருக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து தமிழரசு கட்சி நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்டார். அதனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களை காவல் துறை வந்து அள்ளிக் கொண்டு போகும். அதில் இவரும் பலமுறை காவலில் வைக்கபட்டிருந்தார் என்பதும் உண்மை. இவரைப் போல அன்று ஏன் இன்றும் சிறிலங்கா அரசால் பொராட்டத்திற்கு ஆதரவானவர்களையும் சந்தேகத்தின் பெயரிலும் பல நூற்று கணக்கில் தமிழர்கள் சிறைகளில் வாடினார்கள் வாடிக்கொண்டும் இருக்கின்றார்கள். அதே போல புஸ்பராசா சிறையில் இருந்த காலங்களில் ஆயதமேந்தி போராட புறப்பட்ட வேறு பல இளைஞர்களும் இதே காலகட்டத்தில் பிடிபட்டு இவருடன் இருந்த காரணத்தால் புஸ்பராசாவிற்கும் அவர்களுடனான தொடர்புகள் ஏற்படக் காரணமாய் இருந்தது.

அதைவிட சிறையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை போக்க தங்கள் கவலைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்படி சிறையில் வாடிய ஆரம்பகால ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை இருக்கும் ஒரு சிலரும் தங்கள் குடும்ப வாழ்வில் மூழ்கிப் போய் பெரிதாக எந்தவித பதிவுகளையும் எழுதாததினால் புஸ்பராசா அப்படி அவர்கள் பகிர்ந்த கொண்ட கருத்தக்கள் சம்பவங்களை எல்லாம் சேர்த்து தன்னிடமிருந்த எழுத்துத் திறைமையினால் விடிந்து கோழிகூவுவதற்கு முதலே நாங்கள் எதிரியை தேடி ஆயுதங்களுடன் பறப்பட்டு விடுவோம் என்று தனது வாழ் நாளில் துப்பாக்கியால் ஒரு கோழியைக் கூட சுட்டிருக்காத இவர் தனது புத்தகத்தில் எங்களிற்கு பெரிய பூமாலையொன்றை சுத்துகிறார். எனவே மீதி விபரங்களை தொடர்ந்தும் படிப்பதற்கு . அடுத்த பேப்பருக்கு காத்திருங்கள்.
தொடரும்....
http://www.orupaper.com/issue48/pages_K__30.pdf

நிழலாடும் நினைவுகள்..!

1:20 PM, Posted by sathiri, One Comment

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கோ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார். அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது.

அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.