Navigation


RSS : Articles / Comments


7:06 AM, Posted by sathiri, No Comment

MSN இல் சாத்திரியும் சோழியனும் ...

இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது

யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டிருக்கிறேன்.

சாத்திரி. வணக்கமண்ணோய் எப்பிடி சுகம்

சோழியன். வணக்கம் நல்ல சுகம் `ஹம் அம்மன் கோயில் தேருக்கு போயிருந்தன் அங்கை உந்த ஒரு பேப்பர் மற்றது ஒரு றேடியொ காரரும் வந்திருந்தவை

சாத்திரி. ஓமண்ணை கேள்விப்பட்டனான் அவங்கள் இப்பிடித்தான் எங்கையாவது அன்னதானம் சக்கரை தண்ணி ஊத்தினம் எண்டு கேள்விப்பட்டால் எத்தினையாயிரம் கிலோ மீற்றர் எண்டாலும் பிளைற் பிடிச்சு போடுவாங்கள் ஊர்ப்பழக்கம் திருத்த ஏலாது.

சோழியன். கி..கி..கி.. சரி அங்கை ஒரு பேப்பர் கிடைச்சது படிச்சன் கன பக்கத்தோடை நல்லா இருந்திது அது எங்கடை சிற்றிக்கும் தொடந்து கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி பண்ணஏலாதோ??

சாத்திரி. அண்ணோய் அதுக்கு நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி பண்ணவேணும் முடிஞ்சளவு எல்லா இடமும் அனுப்பினம் இதுக்குமேலை நீங்கள் ஏதாவது உதவினால் உங்கடை சிற்றி பிறீமனுக்கும் தொடந்து வர பண்ணலாம்.

சோழியன். அதுக்கு என்ன செய்யவேணும்

சாத்திரி. முடிஞ்சா அங்கை சபேசனொடை கதைச்சு பாருங்கோ ஏதாவது வழி பண்ணலாம் ஆளை தெரியும் தானே

சோழியன். ஓ நல்லா தெரியும் முந்தி நான் அவரின்ரை இடத்துக்கு பக்கத்திலை லிவகசனிலைதான் இருந்தனான்.

சாத்திரி. லிவகுசனிலையோ ?? அப்ப உங்களுக்கு மானிப்பாய் ராசுவை தெரியுமோ நாடகமெல்லாம் நடிக்கிறவர்.

சோழியன். ஓ நல்லா தெரியும் நாங்கள் யெர்மன் வந்த புதிசிலை ஒரே காம்பிலைதான் இருந்தனாங்கள் சோசல் காசு எடுக்கிற நாளிலை இரண்டு பேரும் ஒரே கொண்டாட்டம் தான்

சாத்திரி. ஓ அவர் என்ரை மாமா தான் அப்ப சிறி எண்டவரை தெரியுமா அதே காம்பிலை தான் இருந்தவர்.

சோழியன். ஓ அவரையும் தெரியும் யெர்மனியிலையே முதல் முதல் 85ம் ஆண்டு தமிழ் முறைப்படி நடந்த கலியணம்எண்டா அவரின்ரை கலியாணமாதான் இருக்கும். ஊரிலை பல வருசமாகாதலிச்சு இஞ்சை வந்துதான் செய்தவை.பிள்ளையும் நல்ல பிள்ளை

சாத்திரி. ம் தெரியும் அங்கை ஒரு எட்டு வருசத்துக்கு மேலை காதலிச்சு இரண்டு வீட்டு காரருக்கும் விருப்பம் இல்லாததாலை பெரிய சண்டையெல்லாம் நடந்தது

சோழியன்.. நாங்கள் காம்பிலை இருந்த எல்லாருமா சேந்துதான் செய்து வைச்சனாங்கள் . அந்த நேரம் இஞ்சை குத்து விளக்கு தேங்காயெல்லாம் கிடைக்காதுதானே. நான்தான் இரண்டு ஆஸ்ரேயை எடுத்து கீழை கம்பியாலை கட்டி அலுமினிய பேப்பர் எல்லாம் சுத்தி குத்துவிள்கு மாதிரி செய்து கொழுத்தி கலியாணத்தை நடத்தினாங்கள்.அதை மறக்கேலுமா

சாத்திரி. ஓ அப்ப தேங்காய் எப்பிடி செய்தனியள்

சோழியன். அது யாரோ எங்கையோ தேடிபிடிச்சு வாங்கியந்தான். பிறகு அவையளுக்கு இரண்டு பிள்ளையளும் பிறந்து சந்தோசமாய் இருந்திச்சினம் பிறகு நானும் சிற்றி மாறி தூரமா வந்தா பிறகு தொடர்புகள் இல்லாமல் போச்சுது.

சாத்திரி. அவைக்கு இரண்டு பிள்ளையளில்லை மூண்டு பிள்ளையள் ஆனால் இப்ப டிவோஸ் இரண்பேரும்

சோழியன். சே உண்மையாவோ இல்லை பகிடியோ

சாத்திரி. உண்மையாதான் அண்ணை அது நடந்து ஒரு அஞ்சு வருசமாகிது

சோழியன். என் தம்பி இரண்டும் காதலிச்சு எவ்வளவு கஸ்ரபட்டு இஞ்சைவந்து கலியாணம் செய்து இருந்ததுகள் பெடியனும் நல்ல பெடியன். என்ன நடந்தது??

சாத்திரி. ஓமண்ணை எட்டு வருசம் காதலிச்சு உறவுகளை எதிர்த்து ஊரைவிட்டு வந்து கலியாணம் செய்து பதினாறுவருசம் குடும்பம் நடத்தி மூண்டு பிள்ளையளையும் பெத்து கடைசியிலை அந்த பிள்ளையளை வளக்கிறதாலை நடந்த பிரச்சனையிலை இப்ப பிரிஞ்சு போச்சினம்.

சோழியன். ஒண்டும் விளங்கேல்லை

சாத்திரி. உங்களுக்கு தெரியும்தானே பெடியன் கொஞ்சம் கண்டிப்பான ஆள் பிள்ளையளை கண்டிக்கிறதிலை தாய்க்கும் தகப்பனுக்கும் நடந்த சின்ன சின்ன பிரச்சனையளை பிறகு வந்து சேந்த சொந்தங்களும் அந்த பிரச்சனையளை ஊதி பெருப்பிச்சு போட்டினம்.

சோழியன்..அடடடடா உந்த சில செந்தங்களுக்கு இதுதான் வேலை புருசன் பெண்டாட்டி பிரச்னையை அவையை தீர்க்க விடுறேல்லை அதுக்கை புகுந்து ஏதாவது செய்து போடுவினம்.பிள்ளையளின்ரை எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறேல்லை

சாத்திரி. உண்மைதான் பெட்டையின்ரை பக்கம் சிலர் பிள்ளையளைஇஞ்சை அடிக்க ஏலாது நீ வேலைக்கு போறாய் காசு இருக்கு கார் இருக்கு அதோடை பாசையும் தெரியும் ஏன் புருசனுக்கு பயபிடுறாய் எண்டு உருவேத்த பெடியனின்ரை பக்கம் நீ ஆம்பிளை என்னவும் செய்யலாம் எண்டு ஏத்திவிட கடைசியா வீணான வீம்பாலை கோட்டடி வாசல்லை கதை கிழிஞ்சு போச்சுது

சோழியன். கேக்க கவலையாதான் இருக்கு

சாத்திரி .எனக்கும்தான் கவலை நானும் முடிஞ்சளவு முயற்சி பண்ணி பாத்தன் இரண்டு பேரையும் கோபத்தை விட்டு ஒரு மணித்தியாலம் மனம் விட்டு கதைக்கபண்ணினா ஏதாவது நல்லது நடக்குமெண்டு ஆனால் இரண்டு பேருமே தங்கடை வறட்டு கெளரவத்தை காப்பாத்துறதிலை பிள்ளையளை மறந்திட்டினம். இப்ப கடைசியா அவையின்ரை மன சாட்சி எண்டு ஒண்டு இருக்கும் தானே அதாலை சொந்தம் சினேகிதம் எண்டு எவையின்ரை தொடர்பும் இல்லாமல் எங்கையோ ஏதோ ஒரு மூலையிலை வாழ்ந்து கொண்டிருக்கினம்.

சோழியன். கல கலப்பா கதையை தொடக்கி இப்பிடி கவலையிலை முடிச்சு போட்டீர் சரி மனிசி சாப்பிட கூப்பிடுறா பிறகு சந்திப்பம்

சாத்திரி. சரியண்ணை மீண்டும் சந்திப்பம்

எனக்கு ASIA வேணும்

1:41 PM, Posted by sathiri, 3 Comments

எனக்கு ASIA வேணும்

தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு.

80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்கும் வகையில் ரயர் அகலம் குறைந்ததாக செய்ப்பட்டு இலங்கையில் அறிமுகமாகியது.இந்த சில மாற்றங்களால் இந்த சைக்கிள் மற்றைய சைக்கிள்களை விட கொஞ்சம் வேகமாக ஒடும்.இது இளையவர் மத்தியில் வெகு வேகமாக ஒரு இடத்தை பிடித்துகொண்டிருந்தது. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....எண்டு பிறேக் அடிக்கவும் பெட்டையளும் திடுக்கிட்டு ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.

ஆனால் என்ரை சிங்கர்சைக்கிள் அதுக்கு தடையாய் இருந்தது காரணம் சைக்கிளின் பாரத்தை குறைத்தால் வேகமாக ஓடும் எண்டு என்னுயிர் நண்பன் இருள்அழகன்(பட்டப்பெயர்தான்) சொன்னதை நம்பி நானும் மக்காட் செயின்கவர்.பெல்.டைனமோ.கெட்லைற் எல்லாத்தையும் கழட்டி அரை விலைக்கு வித்து கோயில் திருவிழாவிலை ஜஸ்பழம் வாங்கி குடிச்சிட்டன்.அதனாலை எப்பிடியும் ஒரு புது ஏசியா வாங்க அம்மாவை அனுசரணையாளராக்கி அப்பாவிடம் தூது அனுப்பிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நண்பன் இருள்அழகனே புது ஏசியாவில் வந்து எனக்கு முன்னால் சர்ர்ர்....எண்டு பிறேக் அடித்தான்.அதுக்கு மேலையும் என்னாலை பொறுக்க ஏலாமல் நானே நேராக களத்தில் இறங்கிஅப்பாவிடம் கேட்டு விடமுடிவுசெய்துஅப்பாவிடம் போய் " அப்பா எனக்கு எசியா சைக்கிள்வாங்கி தாங்கோ" என்றேன்.

என்னை மேலும் கீழுமாக பாத்து விட்டு "ஏன் இப்ப இருக்கிற சைக்கிளுக்கு என்ன அதுக்கும் இரண்டு சில்லு பெடல் ஒரு காண்டில் இருக்கு உழக்கினால் ஓடும்தானே" என்றார் இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று மனதில் நினைத்தபடி" அதில்லையப்பா என்ரை சினேதமெல்லாம் ஏன் இவன் இருள்அழகன் கூட ஏசியா வாங்கிட்டான் எனக்கு இந்த சைக்கிள்ளை பள்ளிகூடம் போக வெக்கமா கிடக்கு" என்றவும் மற்றவனை பாத்து எல்லாம் செய்ய வெளிக்கிடாதை எத்தினை பேர் பள்ளிகூடத்துக்கு நடந்து வாறாங்கள் அப்ப நீயும் அவங்களை மாதிரி நாளையிலை இருந்து நடந்து போ "என்று விட்டு போய்விட்டார்.தோல்வி என்கிற வார்த்தை எனது அகராதியிலேயே இல்லையென்று சொன்ன நெப்போலியன் ரஸ்யாவில் தோத்து போய் பிரான்ஸ் திரும்பியபோது என்ன மன நிலையில் இருந்திருப்பானோஅதே மன நிலையில் நானும் தலையை தொங்க போட்டபடி அடுத்ததாய் ஒரு முடிவுக்கு வந்தேன்(நெப்போலியன் வந்து தன்ரை மன நிலையை உன்னட்டை சொன்னவனா எண்டு கேக்க கூடாது)

இனிமேல் வெளியிலை எங்கைபோனாலும் சைக்கிளை பூட்டாமல் விட்டால் எப்பிடியும் யாராவது களவெடுத்துகொண்டு போவாங்கள்.பிறகு அதேசாட்டாக வைத்து புது ஏசியா வாங்கி விடலாமெண்டு நினைச்சு சைக்கிளை பூட்டாமலே விட்டு பாத்தன். ஆனால் யாருமே தொட்டு கூட பாக்கேல்லை.ஒருநாள் நண்பன் என்னட்டை டேய் இண்டைக்கு சங்கானை ஞானவைரவர் கோயில் பொங்கல் ரிவியிலை படம் போடுறாங்களாம் வாறியா போய் பாத்திட்டு வருவம் எண்டான்.அந்தகாலகட்டம் தான் ஊரிலை உந்த ரி.வி வந்த புதுசு எனக்கு ஆசையாய்தான் இருந்தது ஆனால் இரவிலை திரியவும் பயம் காரணம் பொலிஸ் ஆமிதிடீரெண்டு ரோந்து வருவாங்கள் அம்பிட்டா பிடிச்சு கொண்டு போடுவாங்கள் சில நேரம் வெடியும் விழும்.ஆனாலும் ஆமி பொலிசின்ரை ரோந்து எப்பிடியும் இரவு 11 மணிக்கு பிறகுதான் வருவாங்கள் நாங்கள் முதல் படத்தை பாத்திட்டு 10 மணிக்கெல்லாம் வந்திடலாமெண்டு இருள் அழகன் தந்த தைரியத்திலை இரண்டு பேருமா போய் வைரவர் கோயில்லை புக்கையையும் வாங்கி சாப்பிட்டபடி முதல் படத்தை பாத்தாச்சு ஆனால் இரண்டாவதாய் கமல் நடிச்ச புது படம் ஒண்டு போட்டாங்கள் இரண்டு பேருக்கும் வெளிக்கிட மனமில்லை ஒருத்தரையெருத்தர் பாத்தபடி சரி இதையும் பாத்திட்டு போவம் நாளைக்கு பள்ளி கூடத்திலை வகுப்பிலை நித்திரையை கொள்ளலாம் எண்டு நினைச்சு அதையும் பாத்திட்டு வெளிக்கிட ஒரு மணியாச்சுது.றோட்டிலை ஒருதரும் இல்லை பயமாகவும் இருந்தது.

வாகனங்கள் ஏதாவது வருதா எண்டு பாத்தபடியே சைக்கிளை மிதித்தபடி கட்டுடை வயல்வெளிக்கு வந்து விட்டோம் இந்த வயல் வெளியை கடக்கிறதக்கிடையிலை ஆமி வந்திட்டாங்கள் எண்டால் கதை கந்தல். வெளிக்குள்ளாலை எங்கையும் ஓட ஏலாது பிடிச்சு கொண்டு போடுவாங்கள் அதாலை வயல்வெளியை வேகமா கடக்க வேணும் எண்டு நினைச்சு சைக்கிளை வேகமாக மிதித்தோம். என்னை விட இருள்அழகன் சில மீற்றர் தூரம் முன்னுக்கு பேய் கொண்டிருந்தான் பாதி வெளியை கடந்தபோதுதான் பின்பக்கமா பெரிய வெளிச்சம் தெரிஞ்சுது திரும்பி பாத்தோம். ஆமிதான்.கன வாகனம் வந்து கொண்டிருந்தது.டேய் கெதியா மிதியடா ஆமி வாறான் எண்டு கத்தினபடி நண்பன் வேகத்தை கூட்டினான்.

அந்த வயல்வெளி முடிவில் இரண்டு வீடு தள்ளி ஒரு ஒழுங்கை வரும் அதுக்கை இறங்கினால் தப்பிடலாம் என நினைத்து நண்பனிடம் டேய் வாற ஒழுங்கையிலை திருப்பு என்று கத்தியபடி நானும் முடிந்தளவு வேகமாய் மிதித்தேன்.எனக்கு முன்னால் போய்கொண்டிருந்த நண்பன் என்னை பரிதாபமாய் பாத்தபடி ஒழுங்கையில் இறங்கி மறைந்து விட்டான்.இன்னும் சில மீற்றர் தூரத்தில் தான் ஒழுங்கை ஆமியும் நெருங்கிகொண்டிருந்தான்.என்னுடைய பலமெல்லாத்தையும் திரட்டி எழும்பி பெடலை மிதித்தேன் கால் வியர்வையில் செருப்பு வழுக்கி நடு பாரில் பலமான ஒரு அடி. சைக்கிளை எழும்பி மிதிக்கும் போது கால் வழுக்கினால் எங்கை அடி விழும் எண்டு அடி வாங்கின அனுபவ பட்ட அத்தனை ஆண்களுக்கும் தெரியும். அடிவயித்தை ஒரு கையால் பொத்திபிடிக்க சைக்கிள் தட்டுதடுமாறி ஒழுங்கை வழைவில் விழுந்து போனேன்.

ஆனாலும் சைக்கிளை தூக்கி திருப்பவும் ஓட நேரம் காணாது வாகனங்கள் நெருங்கி கொண்டிருந்தன.அந்த ஒழுங்கையில் ஒரு பக்கம் பெரிய தண்ணிவாய்க்கால் ஒண்டு இருந்தது அந்த வாயக்காலின் இரண்டு பக்கமும் பெரிசா வளந்திருந்த கோரை புல்லுக்கை புகுந்து படுப்பம் எண்டு நினைத்த போதுதான் ஒரு வீட்டு வேலியில் வளைஞ்சு நிண்ட பூவரசு கண்ணில் பட ஓடிப்போய் பாஞ்சு பூவரசு மரத்திலை ஏறி வேலியை தாண்டி அந்த வளவுக்குள்ளை பாஞ்சு ஒரு அடி எடுத்து வைச்சிருப்பன் கால் தடக்கி நிலை தடுமாறி தொம்மெண்டு தண்ணிக்குள்ளை விழுந்து தத்தளிச்சு மேலை வந்து பாக்கதான் நான் அந்த வளவு கிணத்துக்குள்ளை விழுந்து போனன் எண்டு விழங்கிச்சுது.

நல்ல வேளை நீந்த தெரிஞ்சதாலை தப்பிட்டன்.கிணத்து சுவரிலை படிக்கல்லை பிடிச்சடி கொஞ்ச நேரம் நிண்டன் வாகனங்கள் போற சத்தம் கேட்டுது.கிணத்துக்காலை வெளியாலை வந்து மெல்ல வேலியாலை எட்டிப்பாத்தன் ஒரு அசைவும் இல்லை வேலியை திரும்ப பாஞ்சு றோட்டுக்கு வந்து பாத்தன் ஆமி போட்டான் ஆனால் என்ரை சைக்கிளை காணேல்லை அவங்கள் தூக்கி கொண்டு போட்டாங்கள்.அடுத்த நாள் அப்பாவிட்டை நடந்த விசயத்தை சொன்னன் ஆனால் கோயிலுக்கு பொங்கலுக்கு போனது மட்டும் தான் படம் பாத்ததை இல்லை.அடுத்தநாள் பின்னேரம் அப்பா "டேய் வெளிக்கிடு உனக்கு சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் ரவுணுக்கு போட்டு வருவம்" எண்டார் எனக்கு சந்தோசத்தில் என்னைச்சுற்றி ஆயிரம் இலையான்கள்.(சந்தோசத்திலை பட்டாம் பூச்சிதான் பறக்க வேணும் எண்டு சட்டமா??)சைக்கிள் கடைக்குள்ளை போனதும் அப்பா சைக்கிள் கடை காரரிடம் விலை குறைஞ்சதா நல்லதா ஒரு சைக்கிள் வேணும் என்றவும்.

கடை காரர் விலை குறைஞ்சதெண்டா அந்த பக்கம் சிங்கர். லுமாலா சைக்கிள் இருக்கு போய் பாருங்கோ எண்றார். எனக்கோ மீண்டும் நெப்போலியன்.... மீண்டும் ரஸ்யாவில்.... சே வேண்டாம் எதுக்கு உங்களை வெறுப்பேத்துவான் கதையை முடிக்கிறன். எனக்கு கோபமும் அழுகையுமா வரவே தலையை தொங்க போட்டபடி கடைக்கு வெளியே வந்து நிக்கவும் அப்பா என்னிடம் வந்து " ஏன் உனக்கு சைக்கிள் வேண்டாமோ??"என்றார். அப்பாவை அப்பாவியாக பாத்தபடி அப்பா எனக்கு ஏசியா தான்வேணும் என்றவும் சரி சரி வா வாங்கி தாறன் என்றபடி கடைக்கு உள்ளே போனார். என்னைச்சுற்றி மீண்டும் ஆயிரம் இலையான்கள் உண்மையாகவே. பக்கத்தில் கரும்பு சாறு விற்று கொண்டிருந்தவன் கையை அசைத்ததால் கரும்பு சக்கையில் இருந்த இலையான்களே அவை .

மறந்த நாள்

2:44 PM, Posted by sathiri, 2 Comments

மறந்த நாள்

ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன்.


ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை சரி அம்மா ஏதும் அவசரத்திற்கு அடிச்சாவோ தெரியாது போனை தூக்கி கொண்டு போய் கோலுக்கை நிண்டு ஒருக்கா அடிச்சு பாப்பம் என்று நினைத்து.எழும்பி நடக்க வல கால் சின்ன விரல் பாதி திறந்திருந்த கதவிலை படாரெண்டு அடிபட்டு நெட்டி முறிஞ்ச சத்தமும் கேட்டது.அம்மா... என்று மெல்ல முனகியவாறு லைற்றை போட்டு பாத்தன் பாதிநகம் பிய்ந்து இரத்தம் கசிந்தது.அதோடை நித்திரையும் முறிஞ்சு போச்சுது. மெதுவாய் பிய்ந்த நகத்தை வெட்டிவிட்டு ஒரு பிளாஸ்ரரை சுத்தி கொண்டு. போனை அடிச்சன் போனில்"ஒப அமத்த அங்கய பற்றிக்சாரய நமத "யாரது சிங்களத்தி கதைக்கிறாள் என்ன ஒண்டும் விழங்கேல்லை எண்டு யோசிக்கதான் நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று தமிழிலை சொல்லிச்சிது.

ஒரு பத்து நிமிசம் அடிச்சு பாத்தன் திருப்ப திருப்ப அதையே சொல்லி கொண்டிருந்தது. கால் வலியோடை இப்ப சாதுவா தலையும் வலிக்கிற மாதிரி இருந்திது.காலங்காத்தாலை எழும்பியிருந்து திருப்ப திருப்ப கேட்க இது என்ன சுப்பிர பாதமா எண்டு நினைச்சு சரி ஏதும் அவசரமெண்டா திருப்பி எடுப்பினம் தானேஎன்று நினைச்சபடி போய் திரும்ப படுத்தன். நித்திரை வரேல்லை கட்டிலிலை அங்கை இங்கை பிரண்டபடி கொஞ்ச நேரத்தாலை நித்திரையா போனன். திடீரெண்டு மனிசி பதறியபடி என்னை அடிச்சு எழுப்பிச்சிது. என்னப்பா நான் வழைமை மாதிரி ஆறு மணிக்கு அலாரம் வைச்சனான் அடிக்கேல்லை ஏழுமணியா போச்சுது நீங்களே அலாரத்தை நிப்பாட்டினது அய்யோ எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது எழும்புங்கோ இனி பஸ் பிடிச்சு போக ஏலாது என்னை காரிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ என்றபடி அவசரமாய் குளியலறையில் நுளைந்தாள்.

நான் தான் காலைமை போன் எடுக்கிற அவசரத்திலை மணிக்கூட்டு அலாமை மாறி அமத்தி போட்டன் போலை என்றபடி எழும்பி போய் இரண்டு தேதண்ணியை போட்டு ஒண்டை குடிக்கவும் வழைமை போலை வயிற்றை கலக்கியது ரொய்லற்றுக்கை குந்தவும் மனிசி ரொய்லற் கதைவை தட்டி "என்னப்பா என்ன செய்யிறியள்??" எண்டாள்.
பொறு நல்ல படம் ஒண்டு போகுது பாக்கிறன் குழப்பாதை.


உங்களுக்கு இந்த அவசரத்திலையும் நக்கல் எனக்கு தெரியும் நீங்கள் உதுக்குள்ளை போனால் ஒரு பேப்பரை முழுசா படிச்சு முடிச்சிட்டு தான் வெளியாலை வருவியள் எங்கை என்ன செய்யிறதெண்டு தெரியாத மனிசன் கெதியா வாங்கோ நேரம் போட்டுது.

பின்னை ரொய்லற்றுக்கை இருக்கிற மனிசனிட்டை கதவை தட்டி என்ன செய்யிறியள் எண்டா என்னத்தை சொல்ல.பெரும் பணக்காரனிலை இருந்து பிச்சை காரன் வரை நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்கிற இடம் இதுதான் இதுவும் அவசரமெண்டா என்ன செய்ய. என்றவாறு வெளியில் வந்து வெளிக்கிட்டபடி தேத்தண்ணி போட்டு வைச்சனான் குடிச்சனியா?

உங்களுக்கென்ன 10 மணிக்கு வேலை நல்லா மூசி மூசி நித்திரை கொண்டிட்டு ஆறுதலா எழும்பி போகலாம் எனக்கு 8 மணிக்கு வேலை. வேண்டாம் நேரம் காணாது இருக்கட்டும் பின்னேரம் வந்து சூடாக்கி குடிக்கிறன்.

எட போட்டு வைச்ச தேதண்ணியை குடி எண்டு சொன்னதுக்கு ஏனப்பா கோவிக்கிறாய் சரி சரி வா எனறபடி சப்பாத்தை போட குனிந்து காலை பார்த்தேன்.அடிபட்ட சின்ன விரலும் வீங்கி
எனது வலக்காலில் இரண்டு பெருவிரல்கள் இருந்தது.சப்பாத்து போட முடியாத அளவுக்கு வலி ஒரு மாதிரி சமாளிச்சு சப்பாதை போட்டு கொண்டு வெளியில் லிப்ற் இருக்குமிடத்திற்கு வந்தேன். அதன் கதவில் ஒரு கடதாசியில் " இது வேலை செய்யவில்லை " என்று எழுதி ஒட்டியிருந்தது. நான் மனிசியை பார்க்க பிறகென்ன பாக்கிறியள் அதுதான் எழுதி ஒட்டியிருக்கெல்லோ வேலை செய்யாதெண்டு
கெதியா படியாலை இறங்குவம்
எண்றபடி மனிசி இறங்க தொடங்க நானும் பினாலை. 4 ம் மாடியிலிருந்து படிவழியாக கால் வலியெடுக்க தாண்டி தாண்டி இறங்கி கொண்டிருக்க.மனிசி என்னை திரும்பி பாத்துஏனப்பா தாண்டுறியள்??

இல்லையப்பா வாழ்க்கையிலை என்ன கஸ்ரம் வந்தாலும் தாண்ட பழகவேணும் எண்டு எனக்கு சின்னவயசிலை என்ரை அம்மம்மா சொல்லி தந்தவா அதுதான் தாண்டுறன்.

இப்ப என்னை வேலையிடத்துக்கு காரிலை கொண்டு போய் விட சொன்னது பெரிய கஸ்ரமோ

அய்யோ அதில்லையப்பா காத்தாலை கதவு காலிலை அடிச்சு போட்டுது அதுதான் தாண்டுறன் சரி சரி நீ நட என்றபடி மனிசியை வேலையிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு நேரத்தை பார்த்தேன் 8.30 எனக்கு 10மணிக்குதான் வேலை. திரும்ப வீட்டிற்கு போய் போக நேரம் காணாது. சப்பாத்து இறுக்க காலும் வலி கூடிகொண்டே போக சிற்றிக்குள்ளை(நகரமத்தி) போய் செருப்பு கடையிலை
ஒரு செருப்பு வாங்கி போட்டால் நல்லது பிறகு அங்கையிருந்து அப்பிடியே கைவே (அதி வேக வீதி)எடுத்து வேலைக்கு போகலாம் என நினைத்து சிற்றிக்குள்ளை போய் செருப்பு கடையடிக்கு போட்டன் ஆனால் கார் விட இடம் கிடைக்கேல்லை சரி ஒடிப்போய் ஒரு செருப்பை எடுத்து கொண்டு ஒடியாறதுதானே எண்டு நினைச்சு காரை எமேஜென்சி சிக்னலை போட்டு நடை பாதையிலை விட்டிட்டு ஓடிப்போய் கடைக்குள்ளை புகுந்தன்.

கால்வலி மாறும் மட்டும் நாலைஞ்சு நாளைக்கு போட்டிட்டு எறியிறதுதானே எதுக்கு விலையான செருப்பு வாங்குவான் என்று நினைத்து 9.90யுரோக்கு ஒரு செருப்பை வாங்கி கொண்டு ஓடியந்து பாத்தன் அதுக்கிடையிலை பொலிஸ்காரன் வந்து 30யுரோ தண்டம் எழுதிவைச்சிட்டு போய்கொண்டிருந்தான். சரி என்ன செய்யிறது 39.90யுரோக்கு செருப்பு வாங்கினது எண்டு நினைச்சு கொள்ளுவம் என்று நினைத்தபடி காரை கிளப்பினேன் நான் நின்ற இடத்திலிருந்து எனது வேலையிடம் ஒரு 50 கி்.மீ தூரம் வரும் கைவேயிலை போனால் அரை மணித்தியாலத்திலை போயிடலாம் எனவே காரை கைவேயில் ஏத்தி ஒரு 10 கி. மீ தூரம் ஒடியிருப்பன் முன்னால் போன வாகனங்கள் எல்லாம் எமெஜென்சி சிக்னலை போட்டபடி மெதுவாக ஓடி பின்னர் அப்படியே வீதியில் எல்லாம் அசையாமல நின்று விட்டன.

சரி கிழிஞ்சுது போ ஏதோ விபத்து பேலை காரை கைவேயிலை திருப்பி கொண்டா ஓட ஏலும் கொஞ்ச நேரத்திலை ஓட வெளிக்கிட்டா சரி. நேரத்தை பார்த்தேன் மணி 9.30 ஆகியிருந்தது சரி என்ன நடந்திருக்கும் எண்டு றேடியொவிலை TRAFIC F.M கேட்டா தெரியும் என நினைத்து சி.டி யிலை போய் கொண்டிருந்த "எங்கே செல்லும் இந்த பாதை " தமிழ்பாட்டை நிறுத்தி விட்டு TRAFIC F.M மை போட்டேன் அதில் "குட்பாய் மை லவ்வர் குட்பாய் மை பிறெண்ஸ்" என்று பாட்டு போய் கொண்டிருந்தது.

அட போய் தொலையடா இப்ப செய்தியை போடுவியா என்று நினைக்க பாட்டை நிறுத்தி செய்தி போனது பெரிய லொறி ஒண்டு விபத்திற்குள்ளாகி வீதியிலை குறுக்கை பிரண்டு போய்கிடக்கு அதலைதான் 10 கி.மீ தூரத்துக்கு வாகன நெரிசல் என்று அறிவிச்சாங்கள்.அட அந்த லெறி றைவருக்கு என்ன நடந்திருக்கும் பாவம் காயப் பட்டானா?? அல்லது போயிட்டானா என்று ஒரு நல்ல பாவப்படும் சிந்தனை கூட எனக்கு வரேல்லை உடைன நான் நினைச்சன் அட பிரண்டதுதான் பிரண்டான் பாதையிலை ஒரு ஓரமா பிரண்டிருக்க கூடாதா.

நடு றோட்டிலை கவிண்டு இப்ப எனக்கு வேலைக்கும் போக ஏலாமல் போட்டுது என்று நினைச்சபடி சரி முதலாளிக்கு போன் அடிச்சு விபரத்தை சொல்லுவம் என்று நினைச்சபோததான் நான் காலை அவசரத்தில் கைதொலைபேசியை கையை விட்டு விட்டு வந்தது ஞாபகத்தக்கு வந்தது. இனியென்ன போய் முதலாளியும் தாறதை வாங்குவம் என்றபடி எறும்பை விட மெதுவாக காரை ஓடிக்கொண்டிக்க என்ரை கார் கணணி பேசியது "உங்கள் வாகனத்தில் எரிபொருள் குறைந்தளவே உள்ளது " அப்பதான் திடுக்கிட்டு பார்த்தேன் மஞ்சள் லைற் எரிந்து கொண்டிருந்தது.

இப்ப எதுவுமே செய்யிற மாதிரி இல்லை சாதாரணமா ஓடினால் இன்னுமொரு 10 கி.மீ லை ஒரு பெற்றொல் செற் இருக்கு தப்பிடலாம் ஆனால் இப்பிடி ஊர்ந்து கொண்டு போனால் நடு றோட்டிலைதான் நிக்கவேணும் எதுக்கும் கடைசி லைனை பிடிச்சு ஓடினால் பெற்றோல் முடிஞ்சு கார் நிண்டாலும் அப்பிடியே கரையிலை நிப்பாட்டலாம் எண்டு நினைச்சு ஒரு மாதிரி கடைசி லைனுக்கு வந்திட்டன் ஆனால் நேரம் 10 மணியையும் தாண்டிவிட்டது அரை மணித்தியாலத்திலை ஒரு கி.மீ தூரம்தான் ஓடியிருப்பன் கார் மீண்டும் கதைத்தது " உங்கள் எரி பொருள் தீர்ந்து விட்டது இயந்திரத்தை நிறுத்தவும்" என்று இறுதியாய் கதைத்தது் சரி நான் நினைச்சபடி நடு றோட்டுத்தான் இண்டைக்கு.

காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அருகிலிருந்த S.O.S போனில் அழைத்து விபரத்தை சொன்னேன்.நிங்கள் நிற்கின்ற பகுதியில் வாகன நெரிசலாய் இருப்பதால் பாதை தெளிவானதும் உதவியாளர் எரி பொருளுடன் வருவார் என்று சொல்லி கார் என்ன கலர் அதின்ரை நம்பர் பெற்றோலா டீசலா என்ற விபரம் எல்லாம் எடுத்து விட்டு நன்றி வணக்கம் சொன்னார்கள். 11.30 தாண்டிவிட்டது எந்த வாகனமும் அசையவில்லை வெய்யில் ஏற ஏற தண்ணி தாகமும் எடுத்தது தண்ணி போத்தல் ஏதாவது இருக்குமா என்று கார் டிக்கியைபோய் திறந்து பார்தேன் ஓயில் கான் தான் இருந்தது. இதே ஊராய் அல்லது இந்தியாவாய் இருந்தால் செய்தி கேள்வி பட்டதும் இளனி சோடா ஏன் தோசை மசாலை வடை கூட கொண்டந்து விக்க தொடங்கியிருப்பாங்கள் இது கண்டறியாத வெளி நாடு ஒண்டும் இல்லை நடு றொட்டிலை காய வேண்டிகிடக்கு எண்டு நினைச்சன்.

ஒரு மாதிரி 11.30மணியளவிலை றோட்டு கிளியராகி பெற்றொலும் வந்து வேலைக்கு போய் முதலாளியிட்டை பம்மினபடி மன்னிப்பு கேட்டு நடந்ததை நடிச்சு காட்டி காலவலியோடை வேலையையும் முடிச்சிட்டு பின்னேரம் வீட்டை வந்து விரலிலை இரந்த பிளாஸ்ரரை களட்டிஎறிஞ்சிட்டு குளிப்பம் எண்டு குளியலறைக்கை புகுந்து தண்ணியை திறந்திட்டு தலையை நீட்ட வீட்டு போன் விடாமல் அடிச்சிது அட ஆரெண்டு பாப்பம் எண்டு துவாயை எடுத்து சுத்தி கொண்டு படுக்கையறைக்கு ஓடியந்தன் மீண்டும் அதே கதவு அதே இடத்தில் அச்சு பிசகாமல் படாரெண்டு அடித்தது. அய்யோ என்றபடி வாயில் வந்ததையெல்லாம் திட்டி கதவை எட்டி உதைந்து விட்டு போனை எடுத்து கலோ என்றேன் மறு பக்கம் அம்மா


" தம்பி காத்தாலை இருந்து உனக்கு அடிச்சு கொண்டேயிருக்கிறன் லைன் கிடைக்கேல்லை இண்டைக்கு உன்ரை பிறந்த நாள் அல்லோ அததான் வாழ்த்து சொல்ல அடிச்சனான் பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பிடி பிறந்த நாள் நல்லா போச்சுதோ "

ஓமம்மா அந்த மாதிரி போச்சுது என்று சொல்லி கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனை வைத்தேன். அப்போதுதான் தெரியும் காத்தாலை போன் வந்ததிலை இருந்து நடந்த குளப்பத்திலை எனக்கு இண்டைக்குஎன்ரை பிறந்தநாள் எண்டதே மறந்து போச்சு.மீண்டும் போய் குளித்த விட்டு வந்து மீண்டும் கால் விரலில் ஒரு பிளாஸ்ரரை ஒட்டிகொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைக்க மனிசி வேலை முடிந்து வந்து கதவை திறந்தபடி "என்னப்பா இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ நான் உங்களுக்கு ஒரு சேட்டும் வாங்கி வைச்சிருந்தனான் காலைமை நேரம் பிந்தினதாலை தர ஏலாமல் போச்சுது இந்தாங்கோ போட்டு பாருங்கோ" என்று சேட்டை நீட்டியபடி சரி காலைமை காலிலை ஏதோ அடிச்சதெண்டனிங்களல்லோ இப்ப எப்பிடியிருக்குஎன்றாள் நானும் சேட்டை போட்டு பார்த்தபடி" பட்ட காலிலேயே படும்" எண்டவும் மனிசி ஒன்றும் புரியாமல் என்னை பாத்தபடி இந்த மனிசன் எப்பவும் இப்பிடித்தான் நான் ஒண்டு கேட்டா தாணெண்டு சொல்லும் என்றபடி தொலை காட்சியை போட்டாள்.