Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் ...12

11:37 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம்  தொடர் ...12
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு  மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது.அதே நேரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி கோமாநிலைக்கு சென்றிருந்த ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நினைவு திரும்பியிருந்தார்.புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தவர்  காதுக்கு விடயம் சென்றது  புலிகளோடு இதற்கெல்லாம் பேசத் தேவையில்லை உடனடியாக  ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் அணைக்கட்டை மீட்டு விடுவோம் பின்னர் மிகுதி விடயங்களைப் பற்றி யோசிக்கலாம் எனவே ராணுவ நடவடிக்கையை தொடங்குங்கள் என்று கட்டையிட்டார்.சொர்ணம் எதிர்பார்த்தது நடந்தது ஜூலை மாதம் 26-ம் தேதி, அதிகாலை 5 மணி.இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோக்கள், கல்லாறு ராணுவ முகாமில் இருந்து மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை நோக்கி புறப்பட்டனர் .கல்லாறு ராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோ படையினர் தெற்கு நோக்கி நகர்ந்து, மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு வந்த நிலையில், அணைக்கட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூர்க்கமான தாக்குதல் தொடங்கியது. கமாண்டோ படையினரை நோக்கி, மோட்டார் மற்றுட் ஆட்டிலரி தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்த தொடங்கியதால், அதிரடிப் படையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இந்த தகவல் ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு உதவுவதற்காக இரு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை ராணுவத்தின் 8-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவு, மற்றும் 5-வது பாட்டிலியன் படைப்பிரிவினர் வந்து சேர்ந்தனர். வான் தாக்குதல்களின் உதவியோடு இலங்கை ராணுவத்தினரால் இஞ்ச்-பை-இஞ்சாகவே நகர முடிந்தது. 26-ம் தேதி காலை யுத்தம் தொடங்கிய நிலையில், 31-ம் தேதி மாலை இலங்கை ராணுவம் மாவிலாறு அணைக்கட்டு கதவுகள் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை நெருங்கி வந்துவிட்டனர்.தாம் இருந்த இடத்தில் இருந்து மாவிலாறு அணைக்கட்டை பார்க்க முடிந்தது. அணைக்கட்டில் விடுதலைப்புலிகள் யாரையும் காண முடியவில்லை. அங்கிருந்து வந்துகொண்டிருந்த ஆட்டிலரி தாக்குதல்களும் நின்று போயிருந்தன.விடுதலைப் புலிகள் அணைக்கட்டை கைவிட்டு பின்வாங்கி சென்றிருந்தார்கள்.“விடுதலைப் புலிகளை அசைக்க முடியாது, அவர்கள் மீது தாக்கி பின்வாங்க வைக்க முடியாது” என ராணுவத்திலேயே பலர் நினைத்திருந்தார்கள். மாவிலாறில் நடைபெற்ற யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியபோது, இலங்கை ராணுவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.அந்த எழுச்சியே, அடுத்தடுத்து பல இடங்களில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்த உத்வேகத்தை கொடுத்ததில், ராணுவம் தாக்க தாக்க, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கினார்கள். ஒவ்வொரு இடத்தில் இருந்தும் புலிகள் பின்வாங்க, பின்வாங்க, ராணுவத்தின் உத்வேகம் அதிகரித்து சென்றது.

மாவிலாறு கைவிட்டுப் போனதால் உடனடியாகவே அடுத்ததொரு தாக்குதலை சொர்ணம் திட்டமிட்டார்.திருகோணமலை துறைமுகத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடல்படையின் கப்பல்களை முக்கியமாக துருப்புக்களை ஏற்றி இறக்கும் ஜெட்லைனர் கப்பலை  மூள்கடிப்பதாகும். காரணம் யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தினர்  போக்குவரத்து செய்ய, இலங்கையின் கைவசம் இருந்த ஒரேயொரு கப்பல்.அந்தக் கப்பல் துறைமுகத்தில் முடக்கப்பட்டால், யாழ்ப்பாணத்தைவிட்டு ராணுவத்தினரால் வெளியேற முடியாது, புதிய ராணுவத்தினரை அங்கு கொண்டு செல்ல முடியாது, யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு சப்ளை பொருட்களும் அனுப்ப முடியாது.இந்த தாக்குதல் வெற்றி செய்தியையாவது வன்னிக்கு அனுப்ப வேண்டுநினைத்த சொர்ணம் தாக்குதலுக்கு கட்டளையிட்டார் . காலை 10 மணி முதல் விடுதலைப் புலிகள் சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுகத்தின் வாய் பகுதியை நோக்கி ஆட்டிலரி ஷெல்களை ஏவிக்கொண்டு இருந்ததால், துறைமுகப் பகுதி மிகுந்த பதட்டத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் நோக்கம், துறைமுகத்தின் வாய் பகுதியை தாக்குதல் நடத்தி  மூட வைத்து, துறைமுகத்தை முற்றாக செயலிழக்க வைப்பது என்பதை, இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொட புரிந்து கொண்டார்.திருகோணமலை  கடற்படை தளத்திலிருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு அன்றிரவு   ஜெட்லைனர் கப்பல் உட்பட அனைத்து கப்பல்களையும் கடற்படையினர் துறை முகத்திலிருந்து பத்திரமாக காலி துறை முகத்துக்கு  நகர்த்தி விட்டிருந்தார்கள்.இந்த விடயம் மறுநாள் காலையே  புலிகளுக்கு தெரிய வந்தது சொர்ணத்தின் இரண்டாவது தாக்குதல் திட்டம் மட்டுமல்ல தொடர்ந்து தோல்விகளோடு பின்வாங்கிக் கொண்டிருந்தார்.ஆனால் எது எப்படியோ யுத்தம் தொடங்கிவிட்டது எனவே அதனை தொர்வது என பிரபாகரன் முடிவெடுத்தார் .முகமாலை, ஹபரண மற்றும் காலியில் புலிகள் நடத்திய தாக்குதல்கள் இலங்கை ராணுவத்துக்கு இழப்பைக் கொடுத்தது .

அதே நேரம்  மாவிலாறில் சண்டை தொடங்கியதுமே  வன்னியை ஊடறுத்து கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான வீதியான ஏ 9 பதையை மூடி விட்டனர் .இதனால் வன்னிக்குள் யாரும் போக முடியாத நிலைமை ஏற்பட்டது இதனால் வன்னிக்கு வெளியே சென்றிருந்த புலி உறுப்பினர்கள் குறுக்குப் பாதைகள் வழியாக வன்னிக்குள் சென்றார்கள் சிலர் இராணுவத்திடம் கைதானார்கள். இதற்கிடையில் நோர்வேயில் திட்டமிடலின்படி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் அக்ட்டோபர் மாதம் தொடங்கவிருந்தது இந்த பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு எந்தவிதமான திட்டத்தையும் தயார் செய்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகள் குழுவினருக்கு போக்கு வரத்து உதவியும் செய்ய முடியாது என மகிந்தா அறிவித்தார். இதனால் நோர்வே புலிகள் குழுவினருக்கு தனியார் விமான போக்குவரத்து சேவைகளை வாடகைக்கு அமர்த்தி ஜெனிவா அழைத்துச் சென்றிருந்தனர்.ஜெனிவாவில் பேச்சு வார்த்தை தொடங்கியதுமே  இலங்கை அரசு ஏ 9 பதையை உடனடியாக திறக்கவேண்டும்.இராணுவம் முன்னேறிய பகுதிகளில் இருந்து பின்வாங்கி பழைய நிலைகளுக்கு திரும்பினால் மட்டுமே தொடர்ந்து பேசலாம் என்று விட்டு தமிழ்ச்செல்வன் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.புலிகளாகவே பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறியதில் இலங்கை தரப்புக்கு உள்ளுர மகிழ்ச்சி .ஆனாலும்   அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால் புலிகள் நிரந்தரத் தீர்வை விடுத்து ஏ 9 வீதியை திறப்பது தொடர்பான தற்காலிக பிரச்சினையை முன்வைத்து பேச்சை குழப்பிவிட்டனர். இது நியாயமற்ற விடயமாகும். புலிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கவேண்டும்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் புலிகள் ஏ 9 வீதி திறப்பது தொடர்பான விடயத்ததைப்பற்றி மட்டுமே பேச முயற்சித்தனர். இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தையை தற்காலிக விடயங்களை முன்வைத்து புலிகள் குழப்பியமை தொடர்பாக அரசாங்கம் கவலையடைகின்றது. புலிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. அடுத்த கட்ட பேச்சுக்கான திகதியை நிர்ணயம்செய்ய அரசாங்கம் தயாரான போதும் புலிகள் அதற்கு இணங்கவில்லை. ஏ9 வீதியை திறந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும் என்று புலிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, புலிகளின் கோரிக்கை குறித்து விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதனையும் வலியுறுத்திக்கூறுகின்றோம். என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித்த போகொல்லாகம அறிக்கை விட்டார் .பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வேயின் பிரதிநிதி எரிக் சொல்கைம் வெளியேறிய தமிழ்செல்வனின் கைப்பற்றிப் பிடித்து "பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறினால் இனிவரும் காலங்கள் மிக மோசமானதாக இருக்கும் எனவே தயவு செய்து உள்ளே வாருங்கள்" என்று மன்றாட்டமாக கேட்டார்.

கையை உதறிய தமிழ்ச்செல்வன் "எப்பொழுதுமே எங்களில் தான் தவறை கண்டு பிடிக்கி றீர்கள் முடிந்தால் எங்கள் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் சொல்லி நிறைவேற்ற சொல்லுங்கள் தொடர்ந்து பேசலாம் முடியாவிட்டால் எங்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ அங்கேயே கொண்டுபோய் விட்டு விடுவதோடு உங்கள் பேச்சு வார்த்தை முயற்சிகளை முடித்துக் கொள்ளுங்கள் எங்கள் வழி எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி முடித்ததும் அதற்கு மேலும் ஏதும் பேச முடியாது எரிக் சொல்கைம் புலிகள் குழுவினரை வன்னிக்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது இலங்கை பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது துரதிஸ்டவசமானது மீண்டும் அவர்கள் அழைத்தால்  உதவ காத்திருக்கிறோம் என்றொரு அறிக்கையும் விட்டு விட்டு நோர்வே திரும்பிவிட்டார் .இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.இலங்கை பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயன்று முடியாது போய் விட்டதால் மேற்குலகம் அடுத்த திட்டத்தை நிறைவேற்றி பிரச்சனையை தீர்த்து விடுவது என்று முடிவெடுத்தார்கள் .அவர்களது அடுத்த திட்டம் புலிகளின் ஆயுதங்களை களைந்து பலவீனமாக்கி அழித்தொழித்து பிரச்சனையை தீர்ப்பது .
புலிகளின் பலம் என்பது கருணா பிளவு சர்வதேச கடல் கடத்தல் வலையமைப்பை அழித்தொழித்தது என்பதன் மூலம் அவர்களின் எழுபது வீதமான பலத்தை இழந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களது போரிடும் திறன், கையாளும் யுக்திகள், மனோபலம் என்பவற்றை குறைத்து மதிப்பிட முடியாது என்பதும் மேற்குலக நாடுகளுக்கு தெரியும்.

அன்று சிந்திய ரத்தம் தொடர் 11

1:51 PM, Posted by sathiri, No Comment

அன்று சிந்திய ரத்தம் தொடர் 11
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

இலங்கை பொதுத் தேர்தலையொட்டி 2005 ம் ஆண்டு புலிகளுக்கும் மகிந்தா தரப்புக்கும் இரகசியப் பேச்சுக்கள் தொடங்கியது புலிகள் தரப்பில் எமில் காந்தன் என்பவர் பேரம் பேசலில் ஈடுபட்டார் .ரணில்விக்கிரமசிங்க வுக்கு தமிழர்களின் வாக்குகள் சென்று விடாமல் தடுத்து மகிந்தாவை எப்படியும் வெற்றி பெறவைத்து விடுவதாக புலிகள் உறுதியளித்தார்கள் அதற்கு கைமாறாக பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டார்கள் இந்தப் பணத்தை எமில்காந்தனே பெட்டிகளில் எடுத்துச் சென்றதாகவும் பெற்றுக்கொண்ட பணம் சுமார் இரு நூறு மில்லியன் ரூபாய்கள் என அன்று செய்திகள் கசிந்திருந்தது.மகிந்தராஜபக்ச வுடன் நடந்த பேரம் பேசலின் பின்னர் எமில்காந்தன் வெளிநாடு சென்று விட்டார் . தேர்தல் மூலம் மகிந்தா அரசு அகற்றப்பட்டு புதிதாக பதவுயேற்ற மைத்திரி அரசு எமில் காந்தனுக்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது .இந்தக்கட்டுரை எழுதப்படுக் கொண்டிருக்கும் நேரம் எமில்காந்தன் இலங்கை சென்று நீதி மன்றத்தில் மகிந்தாவுடன் நடந்த பேரம் பேசல் மற்றும் கைமாறிய பணம் பற்றி வாக்கு மூலம் அளிக்கப் போவதாக சேதிகள் வெளியாகியுள்ளது.இந்தக்கட்டுரை வெளியாகும்போது சிலநேரம் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கலாம் .
தேர்தல் நெருங்கும் வேளை வாக்களிக்க தமிழர்களும் ஆவலாக காத்திருந்தார்கள் ஆனால் தேர்தலை புறக்கணிக்கும் படியும் யாரும் வாக்களிக்கக் கூடாது அப்படி மீறி வாக்களித்தால் அவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் அறிவித்தார்கள்.தேர்தல் நடந்து முடிந்தது மகிந்தா புலிகள் கூட்டணி எதிர்பார்த்தது போலவே தமிழர்கள் எவரும் ஓட்டுப் போடாத நிலையில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கே தோல்வியடைய இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று மகிந்தராஜபக்ச பதவியேற்றார்.அதே நேரம் பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தான் பதவியேற்றதும் புலிகள் தன்னைத்தான் குறி வைப்பார்கள் என்று மகிந்தா கணித்திருந்தார் .புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.ஒருவரிடம் தங்கள் தேவைகளை முடிதுக்கொண்டதுமே பிற்காலத்தில் அவரால் இரகசியங்கள் வெளியாகி எந்த பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை போட்டுத்தள்ளிவிடுவார்கள்.அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் இலங்கை சனாதிபயாகவிருந்த பிரேமதாசா மிகச் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிடுந்த காலத்தில் அவர்களை வெளியேற்ற அப்போது சனாதிபதியாக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்துக்கொண்டதோடு அவரிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பணமும் பெற்றிருந்தார்கள்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்களது வெளியேற்றத்தை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாதுரை அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரையும் பிரேமதாசவின் உதவியோடு கொழும்பில் வைத்து சுட்டுக்கொலை செய்தவர்கள்.சிலகாலத்திலேயே பிறேமதாசவையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்திருந்தனர்.எனவே பதவிக்கு வந்த மகிந்தவும் தனக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற கோத்தபாய ராஜபக்சே வுக்கும் தனித் தனியாக நூறு பேரடங்கிய விஷேட பயிற்ச்சி பெற்ற இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை உருவாக்கியதோடு தனது நடமாட்டங்களையும் இரகசியமாகவே வைத்திருந்தார்.அவர் எதிர் பார்த்தது போலவே புலிகள் அவர்மீதும் கோதாபய ராஜபக்சே மீதும் பல கொலை முயற்சிகளை நடத்தினாலும் அதிஸ்ட வசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.
இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் புலிகள் ரணிலோடு போட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவே புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என மகிந்தா அறிவித்தார் .அப்படியெல்லாம் முடியாது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தம் தனியே இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும் எனவே புதிய ஒப்பந்தம் எதுவும் போடத் தேவையில்லை என புலிகள் தரப்பும் அடம் பிடித்துக்கொண்டேயிருக்க பேச்சுவார்தைகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது .புலிகளையும் இலங்கை அரசையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்க நோர்வே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தது.எதுவானாலும் மேசையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பையும் ஒருவாறு 2006 ம் ஆண்டு பெப்ரவரி 22ஜெனிவாவுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த பேச்சு வார்த்தைகளில் கருணா குழுவுக்கு இலங்கை அரசு ஆதரவு கொடுத்து புலிகளை பலவீனமக்குகிறார்கள் அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் தரப்பு குற்றச்சாடு வைக்க அரசு தரப்பு அதை மறுக்க இரண்டு நாள் நடந்த பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்து இரண்டு தரப்புமே நாடு திரும்பியிருந்தார்கள்.

அதே நேரம் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் பல இடங்களில் சிறு சிறு உரசல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும் கருணா குழுவினரும் புலிகளும் காண்கிற இடத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரோ என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்றார்கள்.அப்போதுதான் 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார் அதில் பொன்சேகா மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர் கோமா நிலைக்கு நிலைக்கு சென்று விடுகிறார் .இந்த செய்தியறிந்ததும் இலங்கை இராணுவத்தினர் புலிகளின் நிலைகளை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.பதிலுக்கு புலிகளும் சில கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தினரை குறிவைத்து தக்க பலர் கொல்லப்பட்டனர் .இப்படி நிலைமை மோசமாகிக்கொண்டேயிருந்தது.ஆனால் இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.

மாவிலாறு என்பது இலங்கையில்கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு அண்மித்து வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.இந்தப் பகுதியில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்று மூவின மக்களும் இந்த ஆற்றை நம்பியே விவசாயம் செய்வார்கள்.பேச்சு வார்த்தைகள் தொடங்கி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கியானது மேலும் பல கிராமத்து விவசாயிகள் பலனடையும் விதமாக மாவிலாறை புனரமைப்பு செய்து கொண்டிருந்தது.இதன் அணைகளையே தளபதி சொர்ணத்தின் கட்டளைக்கமைய புலிகள் அமைப்பினை சேர்ந்த இருவர் ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு பூட்டி விடுகிறார்கள்.மறுநாள் காலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதைக்கண்ட விவசாயிகள் வேளாண்மை அதிகாரியிடம் விடயத்தை சொல்ல அவரும் அணையை பார்வையிட சென்றபோது காவல் கடமையில் இருந்த புலிகள் அவரை தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
உடனே நூற்றுக்கும் அதிகமான சிங்கள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவே பிரச்னை பெரிதாக உருவெடுத்தது.அதன் பின்னரே புலிகளின் தலைமைக்கும் விடயம் தெரியவந்திருந்தது.சொர்ணம் எதுக்காக மாவிலாறை பூட்டினார் என்று விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்க அவகாசம் இல்லாத காரணத்தால் திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனிடம் (சசிதரன்) நிலைமைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டு விடுகிறார்.(இவரது மனைவியே ஆனந்தி பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர் .)சம்பவ இடத்துக்கு எழிலன் செல்லும்போதே அங்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் வந்து விட்டிருந்தனர் .அணை பூட்டிய விவகாரம் புலிகள் மீது விழுந்து விடாமலிருக்க உடனடியாக அங்கு உள்ள தமிழ் விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த வைத்த எழிலன் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை தமிழ் விவசாயிகள் பகுதி சரியாக புனரமைப்பு செய்யப்படவில்லை அதனால் அவர்களே அணையை பூட்டியதாக போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் சொல்கிறார் .
மறுபக்கம் சிங்கள விவசாயிகள் தாங்களே நேரில் சென்று அணையை திறக்கப் போவதாக புறப்பட இலங்கை இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த புலிகள் பாதையை பூட்டி விடுகிறார்கள். அங்கு நிலைமைகள் மோசமானதால் புலிகளின் தலைமையோடும் அரசோடும் பேசி நிலைமையை சரி செய்வதாக சொல்லிவிட்டு கண்காணிப்புக்குழுவினர் கொழும்பு திரும்பிவிடுகிறார்கள்.அதே நேரம் சொர்ணம் எதற்காக அணையை பூட்டும்படி கட்டளையிட்டார் என்று பார்த்துவிடலாம் .


தளபதி சொர்ணம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் திருகோணமலையில் தான் வளர்ந்து கல்வி கற்றுவந்தவர் 1983 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைத்தவர் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக பலகாலம் இருந்தார்.புலிகளின் ஆரம்ப காலத் தாக்குதல்கள் பலவற்றை திறம்பட நடத்தி சொர்ணம் என்கிற பெயரை கேட்டாலே ஸ்ரீலங்கா இராணுவம் கலங்கும் அளவுக்கு முன்னணித் தளபதியாகவும் வலம்வந்துகொண்டிருந்தவர்.இந்தியப்படைகள் மணலாறுப் பகுதியில் ஒப்பரேசன் பவான் என்கிற நடவடிக்கை முலம் பிரபாகரனை சுற்றி வளைத்திருந்தபோது அந்த முற்றுகையை உடைத்து பிரபாகரனை காப்பாற்றிய பெருமையும் சொர்ணத்துக்கு உண்டு .ஆனால் புதிய யுக்திகளை புகுத்தாது ஒரே முறையிலான தாக்குதல்கள் காலப் போக்கில் எதிரிக்கு பழகிப்போனதால் அவரது தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுத்ததோடு சில தாக்குதல்கள் தோல்வியிலும் முடிந்தது.புதிய யுக்திகளை கையாண்டு பெரும் வெற்றிகளை குவித்த கருணா ,பால்ராஜ் ,பானு ,தீபன் ,ஜெயம் ,போன்றவர்கள் முன்னணித் தளபதிகளாக வலம்வரத் தொடங்கியதோடு தலைமைக்கும் நெருக்கமகிக்கொண்டிருக்க 90 களின் பின்னர் சொர்ணம் சண்டைக்களத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு முற்றாகவே காணாமல்போயிருந்தார்.தன்னை நம்பி தலைவர் இப்போ எந்த சண்டையையும் தருவதில்லை என்பது சொர்ணத்துக்கு பெரும் அவமானமாகவே இருந்தது.வன்னியில் சும்மா இருந்த சொர்ணத்தை கருணா பிரிவின் பின்னர் கருணா அணிக்கு எதிராக படை நடத்த தலைமை கிழக்கிற்கு அனுப்பி வைத்தாலும் பானுவையும் கூடவே அனுப்பி வைத்தார் தலைவர் .
நீண்ட காலத்துக்குப் பின்னர் படை நடத்த ஒரு சந்தர்ப்பம் அதுவும் கிழக்கின் வீரத்தை உலகறிய வைத்து பலவருடங்கள் கூடவே இருந்து ஒன்றாகப் பழகி உண்டு உறங்கிய நண்பனுக்கு எதிராக படை நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல இன்னொரு நெருங்கிய நண்பனாகவும் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த பதுமனையும் கருணா பிரிவின் பின்னர் சந்தேகத்தில் புலிகளின் தலைமை வன்னிக்களைத்து கைது செய்திருந்தனர் இப்படி பல விடயங்களாலும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் பட்டிருந்த சொர்ணம் கருணாகுழுவுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் அனைவரும் வன்னி திரும்பியிருந்தாலும் அவர் மட்டும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தார்.அது மட்டுமல்லாது நீண்ட காலமாகவே தலைமை சண்டையை தொடக்கிவிட சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததால் இனி நடக்கப் போகும் சண்டையில் எப்படியாவது ஒரு பெரு வெற்றியை பெற்று மீண்டும் தனது திறமையை தலைமைக்கு நிருபித்து விடுவதென மனதுக்குள்ளே சபதமெடுத்து விட்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். வடக்கு கிழக்கில் சிறு சிறு மோதல்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு நடந்துகொண்டிருந்தாலும் பெரிய யுத்தம் எதுவும் நடக்கவில்லை எனவே மாவிலாறை பூட்டுவதன் மூலம் எப்படியும் இராணுவம் ஒரு தாக்குதல் நடவடிகையை செய்யும் அதனை முறியடித்து வெற்றி செய்தியை வன்னிக்கு அனுப்பி விடலாம் என்பது சொர்ணத்தின் திட்டமாக இருந்தது.