Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள் 4

6:50 AM, Posted by sathiri, One Comment

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இது ஈழத்தில் இந்தியபடையின் இருண்ட காலத்தில் ஒரு போராளியின் உண்மை கதைகதையின் காலம் 1988ம் ஆண்டு சித்திரை மாதம்யாழ்குடாவின் சண்டிலிப்பாய் கிராமம் ஒருநாள் மாலை நேரம் திடீரென துப்பாக்கிவெடிச்சத்தங்கள் கேட்கிறது இந்த சத்தங்கள் அந்த கிராமத்திற்கு ஏன் ஈழத்தின் எந்த கிராமத்திற்கும் புதியதல்ல சத்தம் கேட்டசில நிமிடங்கள் மக்கள் பரபரப்பாவார்கள் ஏதாவது ஒருமரணசெய்தி வரும் அது போராளியாகவும் இரக்கலாம் பொதுமக்களாகவும் இருக்கலாம்.சில நிமிடங்களில் மக்கள் வழைமை போல தங்கள்வேலைகளை பார்க்கபோய்விடுவார்கள் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் எல்லோருக்கும் பழகிபோய்விட்டது.

அன்றும் அப்படித்தான் சத்தம் கேட்டதும் மக்கள் ஒருவரையொருவர் பார்த்து "யாரோ மாட்டுபட்டிட்டாங்கள் போலை வெடிவிழுந்தது ஆமிக்கா பெடியளுக்கா எண்டு தெரியேல்லையெண்டு " என்று விட்டு தங்கள் வேலைகளில் கவனமானார்கள்.ஆனால் அந்த கிராமத்தில் இந்தியபடை காலத்தின் இக்கட்டான சூழலிலும் போராளிகளிற்கு ஆதரவளித்து அரவணைத்த சில வீடுகளில் ஒரு வீட்டில் அந்த தாய் மட்டும் சத்தம் கேட்டதுமுதல் நிம்மதியில்லாமல் வீட்டு படைலையை எட்டி பார்ப்பதும் வீட்டிற்குள் போவதுமாக இருந்தார்.

அவர் மனதில் ஒரு பதை பதைப்பு இண்டைக்கு பெடியள் வாற நாள் வெடிச்சத்தம் வேறை கேட்டது யார் வந்தாங்களோ அவங்களிற்கு ஏதும் நடந்துதோ கடவுளே அவங்களுக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்தபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை ரதி ஒருக்கா றோட்டு வரைக்கும் போய் பார் பிள்ளை என்று மகளை சொன்னவர் பின்னர் வேண்டாம் பிறகு உன்னை தேடி நான் வர ஏலாது நானே போய் பாக்கிறன் என்றவர் வீட்டை விட்டு ஓழுங்கையால் வந்து பிரதான வீதியை எட்டிப்பார்த்தார் வீதியில் சன நடமாட்டம் இருக்கவில்லை ஏதாவது செய்தி கேட்பம் எண்டா வீதியிலையும் யாரையும் காணவில்லையென நினைத்தபடி விட்டை நோக்கி நடந்தார்.

சில நிமிடங்களின் பின்னர் வெள்ளை கைத்துப்பாக்கியை ஒருகையில் இறுக்கி பிடித்தபடி அவனது சேட்டை களற்றி அதில் கைக்குண்டை சுற்றி இடுப்பில் கட்டியபடி தாண்டி தாண்டி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது உடல் எங்கும் கீறல் காயங்கள் அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை கண்டதும் அந்த தாயார் பதறியபடி தம்பி என்னடா அப்பவும் சத்தம் கேட்கேக்கை நான் நினைச்சனான் நீங்களா தான் இருக்குமெண்டு உனக்கு வெடிபட்டிட்டுதே என்றபடி அவனை அணைத்து பிடித்தபடி கேட்கவும் வெள்ளைக்கு மூச்சிரைத்ததில் பேச்சு வரவில்லை அப்படியே நிலத்தில் அமர்ந்தபடி கையால் தனக்கு ஒன்றுமில்லை என்று சைகை காட்டியவன் த...தண்ணி என்று தட்டுதடுமாறியபடி கேட்டான்.

அதற்கிடையில் மகள் ரதி தண்ணீரை கொண்டோடிவந்து கொடுக்கவும் அதை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தவன் மிகுதி தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு கொஞ்சம் அமைதியடைந்தவன் . நடந்ததை சொன்னான் அம்மா நானும் பிறேமும்(பிறேம் மானிப்பாயை சேர்ந்த போராளி இவனிற்று திக்குவாய் எனவே இவனை எல்லோரும் கொன்னை பிறேம் என்றுதான் அழைப்பார்கள்)அளவெட்டிக்கு போய் தும்பனை சந்திச்சிட்டு வந்து கொண்டிருந்னாங்கள் தொட்டிலடியிலை மெயின்றோட்டை கடக்கேக்கை ஆமிகாரன் திடீரெண்டு வந்திட்டாங்கள் எங்களை அவங்கள் மறிக்க நாங்கள் சைக்கிளை போட்டிட்டு ஒரு வீட்டு வேலியாலை பாஞ்சிட்டம். அவங்களும் சுட தொடங்கிட்டாங்கள்.

நல்ல வேளை வெடி பிடிக்கேல்லை பிறேம் வேறை பக்கத்தாலை ஓடிட்டான் அவனுக்கும் ஒண்டும் நடந்திருக்காத எண்டுதான் நினைக்கிறன். என்ரை கஸ்ரகாலம் நான் பாஞ்ச வேலி முள்முருக்கை வேலி அதுதான் மேலெல்லாம் கீறி போட்டிது என்று அந்த வேதனையும் சிரித்தபடி சொன்னான் .அவனின் பெயர் வெள்ளை என்று எல்லோரும் அழைத்ததே அவனது நிறத்தால்தான். நல்ல வெள்ளை உயரமான உறுதியான உடல். காலிலையும் என்னவோ குத்தி போட்டுது என்றபடி காலை திருப்பி பார்த்தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

பொறுங்கோ அண்ணை நான் பாக்கிறன் என்றபடி ரதி அவனது காலை பார்தாள் கட்டை ஏதோ குத்தியிருக்கு பொறுங்கோ தண்ணி கொண்டவாறன் காலை கழுவிட்டு பார்ப்பம் என்றபடி தண்ணீரால் காலை சுத்தம் செய்து பார்த்தாள். ஒரு தடியொன்று ஆழமாக குத்தியிருந்தது அதை மெதுவாக எடுத்துவிட்டு அந்த காயத்திற்கு கைவசம் அவர்களிடம் இருந்த கைமருந்தாக கோப்பிதூளை வைத்து கட்டிவிட்டு சரி மேலெல்லாம் கீறியிருக்கு மேலை கழுவிட்டு வாங்கோ நான் தேத்தண்ணி போடுறன் என்றவாறு ரதி அடுப்படி பக்கம் போய்விட ஒரு சேட்டையும் சாரத்தையும் கொடுத்து அந்த தாயார் சொன்னார் தம்பி உன்ரை சாரமும் கிழிஞ்சிருக்கு இந்தா இதை மாத்து இந்த உடுப்பகளை போட இந்த வீட்டிலை இனியார் இருக்கினம் என்று அவள் தனது கணவரின் உடைகளை கொடுத்தார்.

காரணம் அந்த தாயாரின் கணவனையும் ஏற்கனவே இந்திய இராணுவம் வீதியில் வைத்து சுட்டுகொன்றுவிட்டிருந்தது.༢r />??ுளித்துவிட்டு உடைகளை மாற்றி கொண்டு தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிகொண்டு கண்ணாடியின்முன் நின்று பார்த்த வெள்ளை சிரித்தபடி சொன்னான் அம்மா சேட்டு சரியான பெரிசா இருக்கு ஏதோ காச்சல் காரர் மாதிரியிருக்கு எண்டாலும் பரவாயில்லை இதுக்கை பிஸ்ரல் என்ன ? ஏ.கே யையே மறைச்சு கொண்டு போகலாம் என்றவும்.எல்லோரும் சிரிக்கவும் அந்த தாயாரும் சிரித்தபடி சொன்னார் அடுத்த முறை உனக்கு அளவான சேட்டு தைச்சு வைக்கிறன் என்றபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை வெள்ளையின்ரை அளவை எடுத்து வை நான் பிறகு துணி வாங்கி தைக்கிறன் என்றார்.

உங்களுக்கு எதுக்கம்மா கரைச்சல் நான் வசதி கிடைச்சா அடுத்தமுறை துணி வாங்கி கொண்டு வாறன் இல்லாட்டி யாரிட்டையாவது குடுத்து விடுறன் தைச்சு வையுங்கோ என்றபடி தேனீரை குடித்து விட்டு சரி நான் போட்டு வாறன் சிலநேரம் பிறேம் எங்கையாவது ஓடி ஒழிச்சு இங்கை வந்தா சொல்லுங்கோ நான் ஏழாலைக்கு போறன் அங்கை வரச்சொல்லுங்கோ என்றபடி காலில் கட்டை குத்திய வலியை தாங்கியபடி தாண்டி தாண்டி நடக்க தொடங்கினான் வெள்ளை.அதை பார்த்த ரதி அவனிடம் அண்ணை இப்பிடி தாண்டி கொண்டு என்ணெண்டு ஏழாலைக்கு போகபோறீங்கள் வேணுமெண்டா என்ரை சைக்கிளை கொண்டு போங்கோ என்றவும் வேண்டாம் தங்கச்சி இடையிலை எங்கையாவது ஆமிமறிச்சால் நான் சைக்கிளை போட்டிட்டுதான் ஒடவேணும் பிறகு சைக்கிளை வைச்சு உங்களை அடையாளம் பிடிச்சாங்கள் எண்டால் பிறகு உங்களிற்கு சைக்கிளும் இல்லை உங்களையும் கொண்டுபோடுவாங்கள் உங்களுக்குதான் கரைச்சல் என்றபடி அந்த ஒழுங்கையை கடந்து மறைந்தான்.

சிலநாட்கள் கழித்து பிறேம் கையில் ஒரு பையுடன் அந்த வீட்டிற்கு வந்தான் அதில் இரண்டு துணிகள் அதை கொடுத்து அம்மா வெள்ளை இதை உங்களிட்டை குடுத்து சேட்டு தைச்சு வைக்க சொன்னவன் எங்களிற்கு ஒரு முக்கியமான சில செய்திகள் வன்னியிலை இருந்து வந்திருக்கு அந்த அலுவலா நிக்கிறதாலை வெள்ளை இண்டைக்கு வரேல்லை வாறகிழைமை வருவம் தைச்சு வையுங்கோ என்று என்று விட்டு போய்விட்டான். சில நாட்கள் கழித்து வெள்ளையும் பிறேமும்இன்னொரு போராளியுமாக அங்கு வந்தனர். அவர்களிடம் ஒரு துணிப்பையில் நிறைய துண்டு பிரசுரங்கள் இருந்தது. வந்தவர்கள் அன்று அவசரமாகவே காணப்பட்டார்கள்.தம்பியவை சாப்பிட்டயளோ வழைமை போல அந்ததாயின் விசாரிப்பு.

அம்மா சாப்பிட்டம் தே தண்ணி தாங்கோ அதோடை கன வேலை இருக்கு வன்னியிலை தலைவரிட்டை இருந்து யாழ்ப்பாண மக்களிற்கு சில செய்தியள் பிரசுரமா அடிச்சு அனுப்பியிருக்கினம்.இந்த இக்கட்டான நிமையிலை எங்கடை திட்டங்கள் மற்றும் இந்த சிக்கலான சூழ்நிலையிலை மக்கள் எப்பிடியான செயல்பாட்டை முன்னெடுக்கவேணும் என்டு இதிலை இருக்கு படிச்சு பாருங்கோ என்று சில பிரசுரங்களை அந்த தாயிடம் நீட்டினான் . நீங்கள் படிச்சிட்டு உங்களிட்டை வாறவையிட்டையும் இதுகளை குடுங்கோ என்றான் வெள்ளை. சரி தம்பி என்று அதை பெற்று கொண்டவர் இந்தாப்பு இரண்டு பேருக்கும் சேட்டு தைச்சாச்சு போட்டு பாருங்கோ எண்று அவர் குடுத்த சேட்டினை வாங்கி போட்டு பார்த்து கொண்ட வெள்ளையும் பிறெமும் சரியம்மா நல்ல அளவாயிருக்கு நாங்கள் இந்த பிரசுரங்களை எல்லா ஊருக்கும் கொண்டு போய் குடுக்க வேணும் இப்ப நாங்கள் உடுவிலுக்கு போக வேணும்.

அதாலை அடுத்த தரம் வரேக்கை ஆறுதலாய் கதைப்பம் என்றபடி வெள்ளையும் மற்றவர்களும் பறப்பட தயாரானார்கள். அதில் பிறேமும் மூன்றாவதாய் வந்த போராளியும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவே அவர்களிற்கு அந்த பகுதி மக்கள் நல்ல பரிச்சயமானவர்கள். எனவே அவர்களில் யாராவது ஒரவர் முன்னே சென்றால் தான் இராணுவ நடமாட்டத்தை பொது மக்கள் அவர்களிற்கு தெரிவிப்பார்கள்.எனவே மூன்றாவது போராளி முன்னே செல்ல நடுவில் வெள்ளை தனது சைக்கிளில் துண்டு பிரசுரங்களுடனும் பின்னே பிறேமும் போவது என தீர்மானித்து மூவரும் தங்கள் கைத்துப்பாக்கிகளை ஒரு முறை தாயார் இயங்கு நிலையில் இருக்கிறதா என சரி பார்த்து விட்டு அங்கிருந்து விடை பெற்று கொண்டு சைக்கிள்களை மிதிக்கின்றனர்.

பிரதான வீதிகள் எங்கும் இந்திய இராணுவம் பரவியிருந்ததால் உடுவில் பகுதிக்கு உட்பாதை ஒழுங்கைகள் ஊடாக செல்வதுதான் பாது காப்பு எனவே அவர்கள் கல்வளை ஊடாக அந்திரான் சங்குவேலி வயல்பாதைகளினுடாக செல்வது என தீர்மானித்து போகிற பாதைகளில் எதிர்படுகின்ற மக்களிடம் இராணுவநடமாட்டம் இருக்கின்றதா என விசாரித்தபடியே போய் கொண்டிருந்தனர்.சங்கு வேலி வயற்பகுதிக்கு வந்ததும் டச்சு வீதியில் சில வினாடிகள் சைக்கிள்களை நிறுத்தி வயல் வெளியை நோட்டம் விட்டனர் ஏனெனில் அந்தவீதி சண்டிலிப்பாய் உடுவில் மற்றும் கந்தரோடை என்று ஒரு முக்கோண வடிவில் அமைந்திருந்த கிராமங்களை இணைக்கின்ற வீதி

இந்த மூன்று இடங்களிலும் இந்திய இராணுவத்தின் பெரிய முகாம்கள் அமைந்திருப்பதால் திடீரென எந்த நேரமும் இராணுவம் வரலாம்.இராணுவத்தின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி எதவுமில்லை வயல்களில் பலர் வேலை செய்து கொண்டும் தண்ணீர் பாச்சி கொண்டும் நின்றனர்.அப்போ எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்கள் அண்ணை அங்கலை ஆமி நிக்கிற சிலமன் இருக்கோ??வந்தவர் சொன்னார் நான் சண்டிலிப்பாய் பக்கமா இருந்து வாறன் தம்பியவை அந்த பக்கம் இல்லை என்றபடி போய் விட மூவரும் மிக அவதானமாக சில மீற்றர்கள் இடைவெளி விட்டு உடுவில் பக்கமாக சைக்கிளை மிதிக்கின்றனர். சங்குவேலி வயல்வெளி முடிந்து ஊர்மனைகளை அண்மித்து கொண்டிருந்த வேளை எதிரே மண்வெட்டியுடன் வந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் இந்த போராளிகளை அடையாளம் கண்டு கண்களால் சைகை செய்கிறார்.

முன்னே சென்று கொண்டிருந்த போராளிக்கு இராணுவம் நிற்கிறது என்று புரிந்து விட்டது சைக்கிள் வேகத்தை குறைத்தபடி கையால் பின்னிற்கு வந்துகொண்டிருந்த வெள்ளைக்கு சைகை காட்டியபடி இராணுவம் எங்க நிற்கிறது என்று கண்களால் துளாவ "ஸ்ரொப் " என்றொரு சத்தம் கேட்டது அவனிற்கு சில மீற்றர் தூரத்தில் வேலி ஒன்றினுள் பூவரச மரங்களினுள் உருமறைப்பு செய்துகொண்டிருந்த ஒரு இராணுவத்தின் துப்பாக்கி அவனை நோக்கி குறிபார்த்த படி இருந்ததை கவனித்து விட்டான்.டேய் ஆமி பக்கத்திலையடா பாயுங்கோடா என கத்தியபடி அவன் தோட்டங்களினுள் பாயவும் பிறேம் பின்னால் தூரத்தில் வந்தபடியால் அவன் சைக்கிளை திருப்பிகொண்டு சண்டிலிப்பாய் பக்கமாக ஓடிவிட வெள்ளை சைக்கிளை போட்டு விட்டு அதில் இருந்த பிரசுரங்களையும் எடுத்து கொண்டு ஓட முயற்சித்தான்

ஆனால் பிரசுரங்கள் இருந்த துணிப்பை சைக்கிளில் மாட்டிவிட அவன் அதை இழுத்து கொண்டிருக்க இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது . அந்த குண்டுகள் வெள்ளையின் தொடைபகுதியை துளைத்து செல்ல அவன் காலை தாண்டியபடி தோட்டங்களினுடாக ஓட தொடங்கினான். வெள்ளைக்கு சூடு பட்டுவிட்டதை கவனித்த மற்றபோராளி அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து திரும்ப வெள்ளையை நோக்கி வர தொடங்கவும் அம்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தேடியபடி தோட்டங்களினுள் இறங்கி கொண்டிருந்தனர். இனி அந்த போராளியலும் ஓடமுடியாது அவர்கள் கண்டுவிடுவார்கள் எனவே அங்கு தோட்டத்திற்கு பசளைக்காக தாழ்ப்பதற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பூவரசம் குளைகளின் உள்ளே புகுந்து மறைந்து கொண்டான்.

இந்திய இராணுவத்தினர் கிந்தியில் கதைப்பது அவனிற்கு தெளிவாக கேட்டது அருகி்ல் வந்து விட்டார்கள் இனி தப்பமுடியாது என நினைத்தபடி தயாராய் இருந்த கைத்துப்பாக்கியை தனது நெற்றியின் அருகே வைத்து பிடித்தபடி அசையாமல் படுத்திருந்தான். அப்போ (இதர்கய் இதர்கய் பாக்கராவோ) இந்தா இருக்கிறான் ஓடிவா ஓடிவா .என்று ஒருவன் கிந்தியில் கத்துவது தெளிவாய் கேட்டது. அதை தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அது வெள்ளையின் கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் தான். அந்த போராளி ஒரு கணம் கண்களை மூடிகொண்டான் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. ஆம் இராணுவத்தினர் வெள்ளையை கண்டு கொண்டதும் வெள்ளை தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தன்னுயிரை போக்கி கொண்டான். இந்திய ஆதிக்க இராணுவத்தின் நித்திரையை நிம்மதியை கலைத்து கொண்டிருந்த ஒரு வீரன் எங்கள் மண்ணிற்காகவும் எங்கள் வாழ்விற்காகவும். எங்கள் மனங்களில் நீங்காத நினைவாகி போனான். தொடரும்.............

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் இறுதிப்பாகம்

12:17 PM, Posted by sathiri, 4 Comments

இந்திய இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க பட்ட தமிழ் தேசிய இராணுவத்திற்காக வீதிகளில் திரிந்த கண்ணிற்கு தெரிந்தவர்கள் மட்டுமென்றில்லை வீடு வீடாகவும் புகுந்து இளைஞர்கள் அனைவரும் வலுகட்டாயமாக பிடித்து இழுத்த கொண்டு செல்லபட்டு கட்டாய பயிற்சிகள் வழங்கபட்டனர் மறுத்தவர்களிற்கு கட்டிவைத்து கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல சுட்டும் கொல்லபட்டனர்.

பாடசாலை வசல்களில் நின்றே பாடசாலை முடிந்ததும் அப்படியே பாடசாலை சீருடைகளுடனேயே மாணவர்களை அள்ளிசென்றனர். வெளியே போன பிள்ளைகள் வீடுவரவில்லெயென்று தேடியபடி இந்திய இராணுவ முகாம்களிலும் இந்த ஈ.பி யின் முகாம் வாசல்களிலும் கண்ணீருடன் காத்து நின்றபெற்றோர்களும் மிரட்டி விரட்டபட்டனர்.தங்கள் பிள்ளைகளை பாது காக்க அந்த காலகட்டங்களில் பெற்றோர்கள் பட்ட தயரங்களை இந்த கட்டுரையில் எழுத்தகளால் என்னால் விழக்கிவிட முடியாது.அது மட்டுமல்ல எந்த வீட்டிலாவது வயதிற்கு வந்த இளம் பெண்களை வைத்திருந்தவர்கள் பாடு இதைவிட மேசமானது அந்த பெண்களை தங்களை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் மறுத்தால் மறுநாள் அவள் கடத்தபடுவாள் எங்காவது அவர்கள் தங்கள் மிருகதனத்தை தீர்த்துவிட்டு மிச்சமாய் அவளது உயிரற்ற உடலமட்டும் மிஞ்சும்.

புலிகளிற்கு உதவியவர்கள் என்று சொல்லி தங்கள் சொந்த பகையாளிகளையெல்லாம் சுட்டு தள்ளினார்கள் புலிக்கு தேனீர் கொடுத்தவன் சாப்பாடு கொடுத்தவன் அந்த குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அவனது குடும்பம் என்று தேடி தேடி மனிதவேட்டையாடினர். எனது ஊரான மானிப்பாயில் மண்டையன் குழு என்று ஒரு ஈ.பி கும்பல் முகாம் இருந்தது இதற்கு பொறுப்பாய் இருந்தவன் தான் பின்னர் மட்டகளப்பில் கொல்லபட்ட ராசிக் என்பவன்.

இந்த குழுவிற்கு மண்டையன் குழு என்று சிறப்பு பெயர் வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர்கள் யாரையாவது கைது செய்தால் சுட்டு கொல்ல மாட்டார்கள் அந்த நபரின் தலையை மட்டும் வெட்டி முண்டத்தை எங்காவது போட்டுவிட்டு தலையை மற்றவர்கள் பார்வைக்கு படும்படியாக சந்திகளில் மதில்களில் வைத்துவிட்டு போவார்கள்.இந்த இயக்கத்தைதான் புஸ்பராசா அவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களிலேயே மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு இயக்கம் என்று புகளாரம் பாடியிருக்கிறார்.

இப்படியான இவர்களின் கொடுமைகளில் கொலைகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பிக்க இளவயது ஆண்களும் பெண்களுமாய் இரகசியமாய் புலிகள் இருந்த காட்டுபகுதிகளிற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள தொடங்கினர். இந்திய அதிகாரிகள் போட்டகணக்கு பிழைக்க தொடங்கியது.இந்த காலகட்டத்தில் தான் பிரான்சில் வசித்த புஸ்பராசா இந்திய அதிகாரிகளின் விசேட அழைப்பின் பெயரில் பிரான்சில் ஈ.பி அமைப்பிற்கு வேலை செய்த உமாகாந்தனையும் அழைத்து கொண்டு இலங்கை சென்றார்.

அங்கு இந்திய இராணுவ உலங்குவானூர்திகளிலும் வடக்கு கிழக்கு எங்கும் 50க்கும் மேற்பட்ட தேசிய விடுதலை இராணுவத்தினரின் ஆயுத பாதுகாப்பு வழங்க மேலதிகமாக முன்னும் பின்னும் இந்திய இராணுவத்தின் இராணுவ வாகன தொடரணிகளின் பாதகாப்புடன் வலம்வந்து யாழ் அசோகா விடுதியிலும் கொழும்பில் நட்சத்திர விடதிகளிலும் தங்கியிருந்த இவரிற்கு தங்கள் பிள்ளைகளை இழந்தபிள்ளைகிற்காய் கதறிய இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்ற துடித்த தாய்தந்தைகளின் அவலங்கள் புரியவில்லையென்று சொல்முடியாது.

காரணம் அசோகாவிடுதியில் முன்னால் இருந்த முகாமில் சித்திரைவதைபட்ட இளைஞர்களின் கதறல்கள் தன்னை கலவரபடுத்தியதென்றும் அவர்களை பார்க்க தினமும் அந்த முகாமின் முன்னால் வந்து அழுதபடிநின்ற பிள்ளைகளின் பெத்தவர்களை பார்க்க கவலையாய் இருந்ததென்றும் ஒரு ஒப்பிற்கு சப்பில்லாமல் ஒரு வசனத்தை எழுதி அவற்றிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல தப்பிக்க நினைக்திருக்கிறார்.

உற்ற நண்பர்களான பத்மநாபாவிடமோ வரதராஜபெருமாளிடமோ ஏன் உறுதுணையாக நின்ற இந்திய இராணுவ அதிகாரிகளிடமோ கூறி இவற்றை ஏன் அவரால் தடுக்கமுடியாமல் போனது . வேண்டாம் அதற்கான முயற்சிகளையாவது செய்தாரா?? என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன்??. இந்த தொடரை எழுத தொடங்கும் போதே பலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டனர் அது இறந்து போன ஒரு மனிதனை பற்றி எழுதுவது அவ்வளவு நாகரீகம் அல்ல என்றனர். இருக்கலாம் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்தவர்வர்களிற்கு புரிந்திருக்கும் இது அந்த இறந்து போன மனிதனின் சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனமோ அல்லது விசமகருத்துகளையோ நான் இங்கு எழுதியிருக்கவில்லை பொதுவாழ்வு என்றும் தன்னினத்திற்கான விடுதலை போராட்டம் புறப்பட்டு தான் தடுமாறியது மட்டுமன்றி தன்னுடன் சேர்ந்தவர்களையும் தடுமாறவைத்து தன்னினத்தையும் தத்தளிக்கவைத்தவரின் தன்னிலைவிளக்க புத்தகம் எல்லாம் எம்மினத்தின் வரலாற்று புத்தகமாக ஆகிவிடாது.

ஈழவிடுதலை போராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து போனாலும் மன்னிக்க முடியாதவர்களே. இதை எழுதுகின்ற நானும் படிக்கிற நீங்களும் ஒருநாள் இறந்து போகிறவர்களே எனவே மரணம் ஒன்று மட்டும் எல்லா மனிதனையும் புனிதன் ஆக்கிவிடாது என்று கூறி இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரகின்ற வேளை இந்த தொடரை எழுத எனக்கு எவ்வித நிபந்தனைகளையோ கட்டுபாடுகளையோ விதிக்காமல் சுதந்திரமாய் எழுதவிட்ட ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபிக்கும்.

இந்த தொடருக்காக ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகால தகவல்களை தந்துதவிய தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளரான திரு பொன்.சத்தியசீலன் அவர்களிற்கும்.மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்பகால போராளிகள்சிலரிற்கும். எனது கட்டுரைகளிற்கு வரும் விமர்சனங்கள் பாராட்டுகள் திட்டுக்கள் என்று எல்லாவற்றையுமே என்னுடன் சரிசமமாய் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேப்பர்காரன்கள் ஒரு பேப்பர்காரிகள் இந்த கட்டுரையை எழுத தூண்டுதலாய் அமைந்த யாழ்கொம் இணையதளத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அனைவரிற்கும் நன்றிகூறி விடை பெறமுன்னர்

ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் பங்குபற்றிய பலர் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தாங்கள் விடுதலை போராட்டத்தை ஏதோஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சில காரணங்களால் இடையில் விட்டு விட்டு வந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையில் ஒரு தவிப்பில் இருப்பதை அறிய முடிகிறது அவர்கள் அதை விடுத்து தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உண்மை பதிவுகளாக்க வேண்டும் அதுதான் அவர்கள் அடுத்த எமது சந்ததிக்காக விட்டு செல்லும் வரலாறு ஆகும். அதே போல மாணவர் பேரவை அமைப்பின் அமைப்பாளர் திரு பொன். சத்தியசீலன் அவர்களும் இதேபோன்ற ஒரு முயற்சியில் இருப்பதாக அறிந்தேன் அவரது முயற்சி விரைவில் பதிவாக வெளிவரும் என்கிற ஆவலுடன் எதிர்பார்த்து நன்றி வணக்கம்.

ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 11

8:28 AM, Posted by sathiri, No Comment

ஈழ போராட்டத்தில்.....பாகம் 11


ஈழபோராட்டத்தில் இறங்கிய போராட்ட இயக்கங்கள் இந்தியா தவிர்ந்த வேறு பிற நாடுகளிலும் பயிற்சிகள் எடுத்திருந்தன என்று கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அதில் முக்கியமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ அமைப்பான பி எல் ஓ விடமும் நிக்கரகுவா வின் விடுதலைஇயக்கங்களிடமும் பயிற்சிகளையும் எடுத்திருந்தனர். இதில் ஈரோஸ்.புளொட்.ஈபிஆர்எல்எவ். ஆகிய இயக்கங்களே அடங்கும் .அதைவிட இலங்கை அரசிற்கு ஆயுத உதவி மற்றும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய இஸ்ரவேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல தமிழ் இயக்கமான புளொட் அமைப்பிற்கும் பயிற்சிகளை வழங்கியது.


காரணம் இஸ்வேலின் இலங்கையுடனான நட்பு முழுக்க முழுக்க இராணுவ நலன் சார்ந்ததாகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.இலங்கையில் பிரச்சனை இருக்கும் வரைதான் தாங்கள் தங்களது இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது மட்டுமல்ல அவற்றை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை களமாகவும் இலங்கையை அது வைத்திருந்தது அதே போல தென்கிழக்காசியாவிலேயே இஸ்ரவெலிடம் இருந்து இலங்கை அரசே அதிகளவு ஆயுததளவாடங்களை வாங்கிய நாடும் ஆகும்.எனவே தான் மொசாட் அமைப்பு தமிழ் இயக்கங்களிற்கும் பயிற்சிகளை வழங்கியது இதன் விபரங்களை மொசாட்டின் ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிமிருந்தார். புளொட் அமைப்பில் பாலஸ்தீன பி்.எல்.ஓ விடம் பயிற்சி பெற்றதாக கூறிக்கொண்ட பலர் உண்மையிலேயெ மொசாட்டிடம்தான் பயிற்சி எடுத்திருந்தனர்.பயிற்சி எடுத்தவர்களிற்கு தாங்கள் உண்மையில் யாரிடம் பயிற்சி எடுக்கிறோம் என்று உண்மையில் தெரிந்திருந்திருந்ததா? என்பது தெரியவில்லை.

ரெலோவிற்கு இந்திய இராணுவமே பயிற்சிகளை தொடர்ந்தது. புலிகள் அமைப்பு பின்னர் தமிழ் நாட்டிலும் தமிழீழத்தின் பகுதிகளிலும் பயிற்சி பாசறைகளை நிறுவி தாங்களே பயிற்சிகளை வழங்க தொடங்கினார்கள் வேறு எந்த வெளிநாட்டிடமும் பயிற்சி உதவி என்று போகவில்லை. காரணம் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் 80 களில் ஆயுதபோராட்டம் முனைப்பு பெற்றவேளையில் அனேகமான எல்லா இயக்கங்களும் பாடசாலைகளிற்கு வந்து அங்கு மாணவர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டுவதற்காக மாணவர்களை அழைத்து வகுப்புகள் வைப்பார்கள்.

அப்படியே தங்கள்: அமைப்பில் இணைய விரும்புபவர்களையும் இணைத்து கொள்வார்கள்.அப்படி ஒரு நாள் நான் படித்த கல்லூரியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் ஒரு வகுப்பை வைத்தனர் நானும் போயிந்தேன் அதில் அவர்கள் கியுபா விடுதலை போராட்டம்பற்றி அழகாக விழங்கபடுத்தி அதை போல நாமும் போராடவேண்டும் என்று கூறி கியூபா விடுதலை போராட்டம்பற்றி தமிழில் சிறிய ஒரு புத்தகம் ஒன்றையும் அனைவரிற்கும் தந்துவிட்டு போனார்கள். அடுத்ததாக புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன் ஒரு வகுப்பை வைத்தார்.

அதில் முன்னர் ஈ.பி யினரின் வகுப்பில் கலந்து கொண்ட அனைவருமே திலீபன் நடாத்திய வகுப்பிற்கும் சென்றிருந்தோம்.அதில் திலீபன் இலங்கையரசின் அடக்குமுறைகள் படுகொலைகள் முக்கியமாக மாணவர்மீதான தரப்டுத்துதல் பற்றிய உள்நோக்கம் என்பனவற்றை விபரித்து விட்டு யாரிற்காவது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகேட்கலாம் என்றார். அப்போது ஒரு மாணவன் எழுந்து திலீபனிடம் அண்ணா முதலில் கூட்டம் வைத்த ஈ.பி யினர் கியூபா விடுதலை போராட்டத்தை பற்றி விழங்கபடுத்தி அழகாக உதாரணமும் காட்டி அந்த நாட்டு மக்களை போலவே நாங்களும் போராட வேண்டும் என்று சொல்லி இதோ இந்த புத்தகத்தையும் தந்தார்கள் ஆனால் நீங்கள் எந்தநாட்டு விடுதலை போராட்டத்தையும் உதாரணமாக சொல்லவில்லையே என் உங்களிற்கு தெரியாதா??என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

அதற்கு திலீபன் சிரித்தபடியே சொன்னார் தம்பி உதாரணத்தை நானும் சொல்லலாம் வியட்னாம் கியூபா பாலஸ்தீனம் என்று வேறுநாட்டு போராட்டங்களை பற்றி சொல்வது கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்கும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று காட்டி உங்களிடம் ஒரு மதிப்பை உயர்த்ததான் இவை உதவுமே தவிர உண்மையான எங்கள் போராட்டத்திற்கு இவை பெரிதாய் உதவாது எங்கள் போராட்டத்திற்கான உதாரணங்களை அனுபவங்களை எங்கள் போராட்டத்திலிருந்தேதான் பெறவேண்டும் உதாரணமாய் கியூபா கெரில்லா யுத்தத்திற்கு அந்த நாட்டின் இயற்கை அமைப்பு மலையும் காடுகளும் போராளிகளிற்கு உதவின அதைபடித்துவிட்டு காடுகளோ மலைகளோ இல்லாத எங்கள் யாழ் குடாநாட்டில் எப்படி கெரில்லா யுத்தத்தை முன்னெடுப்பது?? என்றுதலையை போட்டு குழப்பவேண்டாம்

எங்கள் குடாநாட்டின் ஒழுங்கை அமைப்புகள் தான் எங்கள் கெரில்லா யுத்தத்தின் காப்பரண்கள் விரும்பினால் அறிவை வளர்த்து கொள்ள மற்றைய விடுதலை போராட்டம்பற்றிய புத்தகங்களையும் படியுங்கள் என்றார். இந்திய படையுடனான புலிகளின் யுத்தத்தின் போதும் ஏன் இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன் திலீபன் அன்று சொன்னது எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.இப்படி வேறுநாடுகளில் பயிற்சிகள் பெற்றும் வேறுநாட்ட போராட்டங்களை பற்றியே பக்கம் பக்கமாக பேசியும் எழுதியுமே மற்றைய இயக்கங்கள் காலத்தை கடத்தி காணாமல் போயும் விட்டன.இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் அதன் செயற்பாடுகளை நியாயபடுத்தும் புஸ்பராசாவும் கூட விதிவிலக்கல.

இதில் இந்தியா ஈழபோராட்ட அமைப்புகளிற்கு பயிற்சிகள் வழங்கினாலும் இந்த அமைப்புகள் ஒன்றாய் இணைந்துவிடாதபடி மிக கவனமாக பார்த்து கொண்டார்கள் ஏனெனில் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் தங்கள் கட்டுபாடுகளை மீறி இவர்கள் ஈழத்தை அமைத்து விடுவார்கள் என்கிற பயத்தினால் இடைக்கிடை அந்த அமைப்புகளிற்கிடையே பிரச்னைகளை உருவாக்குவதிலும் ஏன் அந்த இயக்கங்களின் உள்ளேயே கூட பிரச்சனைகளை உருவாக்கி விட்டுகொண்டும் தான் இருந்தனர்.இந்த விடயத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இயக்க உட்படுகொலைகளிற்கு றோவினரின் பினனணி இருந்தது என்று புஸ்பராசாவே ஒத்துகொள்கிறார்.

அதே நேரம் இந்த போராட்ட அமைப்புகளிற்கும் தமிழ் நாட்டு தமிழர்களிற்கும் அதிகளவு நெருக்கத்தையும் இந்தியபுலனாய்வு துறை விரும்பவில்லை அதற்குள்ளும் அவ்வப்போது ஏதாவது சதிசெய்துகொண்டேதான் இருந்தனர். ஆனாலும் இந்த விடயத்தில் றோ அதிகாரிகளால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லையென்றே சொல்லலாம்.தமிழ்நாட்டின் அரசியல் விழையாட்டுக்களை தவிர்த்து பார்த்தால் தமிழ்நாட்டு தமிழரின் ஆதரவும் அக்கறையும் ஈழத்தமிழரிற்கு எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.தற்பொழுது அது புத்துயிற் பெற்று இன்னும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவும் சில இந்திய கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில புலனாய்வு அதிகாரிகளிற்கும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது எனவே தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுஎழுச்சியும் ஈழத்தமிழரின் வெற்றியுமே இவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டுவரும்

.இதை விடுத்து இந்திய படை காலத்தை பார்த்தால் ஈழத்தில் இந்திய படைகாலத்தில் கூட இந்திய அரசு தங்கள் ஒட்டுகுழுவாக ஒரு குழுவை வைத்திருக்காமல் அங்கும் பல குழுக்களையே வைத்திருந்தனர் காரணம் ஒரேயொரு குழுவை வைந்திருந்து அது சில நேரம் தங்கள் மக்களை தாங்களே எப்படி துன்புறுத்தி படுகொலைகளை செய்வது என்று மனம் மாறியோ அல்லது வேறு விடயங்களால் இந்திய அதிகாரத்துடன் முரண்பட்டு பிரிந்து போய் விட்டாலோ அது இந்திய அதிகாரத்திற்கு பேரிழப்பாகிவிடும் எனவே தான் ஒன்று கைவிட்டு போனாலும் இன்னொன்று தங்கள் தாளத்திற்கு ஆடும் என்பதால் பல குழுக்களை இயக்கி அதில் எந்தகுழு தங்களிற்கு அதிக விசுவாசமாய் இருக்கிறதோ அதன் விசுவாசத்திற்கேற்ப அதற்கு சலுகைகளை வழங்கினர்.

அப்படி அதிகவிசுவாசம் காட்டியகுழுதான் புஸ்பராசா சார்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமாகும். அவர்களின் கீழ் ஒரு தமிழ் தேசிய இராணுவம் என்று ஒரு படையணியை உருவாக்கி ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பையும் நடாத்தி வடக்குகிழக்கு மகாணத்தை கடதாசியில் சில கையெழுத்துகளால் இணைத்து தங்கள் நூலில் ஆடும் வரதராஜபெருமாளை முதலமைச்சரும் ஆக்கினார்கள்.இன்று இந்திய அரசால் உருவாக்கபட்டஅந்த வடக்கு கிழக்கு கடதாசி இணைப்பைகூட தமிழருடன் செய்து கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தே பழக்கபட்ட சிங்கள இனவாதம் அதையும் கிழித்து குப்பையில் போட்டுவிட்டு கூத்தாடுகிறது. அதைபார்த்து மண்டையை சொறிந்தபடியே மகிந்தராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பு குடுத்து மகிழ்கிறது இந்திய மத்தியஅரசு.இந்த இந்திய இராணுவத்தால் உருவாக்கபட்ட தமிழ் தேசிய இராணுத்தின் பின்னால் தமிழ் மக்களின் சொல்லமுடியாத வேதனைகள் இழப்புக்கள் அழுகைகள் அவலங்கள் என்று ஏராளம் ஏராளம்.அடுத்த பாகத்தில் அவற்றையும் பார்த்து கொண்டு இந்த தொடரை முடிவிற்கு கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன்.