Navigation


RSS : Articles / Comments


திருமதி செல்வி ( சிறுகதை ) –

11:41 AM, Posted by sathiri, No Comment

திருமதி செல்வி ( சிறுகதை ) – சாத்திரி பிரான்ஸ்

download (28)

12.03.2014
நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அந்த வீட்டின் கதவு திறக்கப் படுகின்றதா என்கிறதைக் கவனித்தபடியே சிங்கக்கொடி பறந்து கொண்டிருந்த இராணுவ ஜுப்பில் சாய்ந்தபடி சிகரற்றை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான் றோகித. அவன் இங்கு வந்தது இதுதான் முதற் தடைவை மட்டுமல்ல, அவனிற்கு இது புதிய வேலையும்கூட. இலங்கையில் இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்கள். நாட்டைக் காக்க கட்டாய இராணுவப் பயிற்சி சட்டம் என்று அனைத்திற்குமே தப்பித்துத் திரிந்தவன் கடைசியாக பயங்கர வாதத்தை வெற்றி கொண்டு விட்டோம் என தளபதி வீர வாளை சனாதிபதியிடம் கொண்டு போய் கொடுத்து தென்னிலங்கை எங்கும் வெடிகொழுத்தி கிரிபத்(பாற் சோறு) பொங்கி உண்டு மகிழ்ந்தபோது பாற்சோற்றை வாங்கி உண்டு விட்டு இனி உயிருக்குப் பயம் இல்லை என்று உறுதி செய்து கொண்டு இராணுவத்தில் சேர்ந்தவன்தான் றோகித. இப்பொழுது அவன் முல்லைத் தீவிற்குள் முதல் புகுந்த டிவிசன் இராணுவத்தின் முதன்மை இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜனத்ஜெயாவின் மெய்பாதுகாவலன்,வாகன ஓட்டி. அவரின் வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் என வாங்கி வரும் வேலைக்காரன் என்று எல்லாமே அவன்தான். இப்பொழுது இராணுவக் குடியிருப்பிற்கு அருகே உள்ள இன்னொரு குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு தனது எசமான் ஜனத்ஜெயாவை கொண்டு வந்து இறக்கி விட்டவன், அவரின் வரவிற்காக காத்து நிற்கிறான்.

வீட்டுக் கதவு திறந்து கொள்ள தனது சட்டையின் கீழ் இரண்டு பட்டன்களை மட்டும் போட்டுவிட்டு ஜுப்பை நோக்கி ஜனத்ஜெயா வருவதைக் கண்டதும் தனது சிகரற்றை அணைத்து விட்டு ஜுப்பில் ஏறி அதை இயக்கினான் றோகித. வாகனத்தில் ஏறிய ஜனத்ஜெயா இது யார் வீடு தெரியுமா??
தெரியாது சேர்..
பெரிய பெண் புலி..
அப்படியா? யார் சார்?
பெயர் செல்வி,அது மட்டுமில்லை, பெரிய புலித்தளபதியோடை பெண்டாட்டி.
அப்படியா??

ம்…இப்ப என்னுடைய இந்த சிகறர் மாதிரி..என்றபடியே அதை இழுந்துப் புகையை விட்டவன், அதன் இறுதி கட்டையை இரண்டு விரல்களால் ஜுப்பின் யன்னல் வழியாக சுண்டியபடி, இப்பிடி எல்லாத்தையுமே சும்மா சுண்டி விட்டிட்டம் பாத்தியா?? நாங்கள் சிங்கத்தின் புதல்வர்கள் எப்பவுமே தோற்கமாட்டம் என்றவனிடம் ஒரு வெற்றியின் மிதப்பும் அதனை அனுபவித்த மகிழ்ச்சியும் சேர்ந்தேயிருந்தது. ஜுப் உருளத் தொடங்கியிருந்தது.
0000000000000000000000
20.07.1995
வலிகாமத்தில் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்து ஒரு மூன்று நாளாகிவிட்டிருந்தது. அதன் வெற்றியின் பின்னர் இடம் பெயர்ந்த பலர் மீண்டும் தங்கள் வீடுகளிற்கு திரும்பியிருந்தார்கள். மற்றையவர்களைப் போலவே யோகநாதனும் தனது குடும்பத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வீடும் செல் விழுந்து கூரை இடிந்து சேதமடைந்திருந்தது. மகள் மேகலாவின் அறை பெரும்பாலும் இடிந்திருந்ததோடு அவளது படிக்கும் மேசை புத்தகங்கள் எல்லாமே சேதமாகியிருந்தது. ஆமியா இயக்கமா யார் அடிச்ச செல் என்று தெரியாமல் இரண்டு பேரையுமே திட்டியபடி அவசரமாக பிரான்சில் இருக்கும் தன் மகனிற்கு போனடித்து விடயத்தைச் சொல்லி உடனே உண்டியலில் வந்த பணத்தை எடுத்து வீட்டைத் திருத்தத் தொடங்கியிருந்தார் யோகநாதன். அந்தச் சண்டையில் இறந்து போன மாவீரர்களின் பெயர்விபரங்களை அறிவித்த புலிகள் இயக்கம், அவர்களிற்கு சந்தியில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பிய பல குடும்பங்களில் தங்கள் வீடுகள் பத்திரமாக இருந்தவர்களிற்கு மகிழ்ச்சி. சேதமடைந்த வீட்டுக் காரர்களிற்கு கவலை. சண்டையில் இறந்து போவர்கள் குடும்பங்களில் அழுகையும் ஒப்பாரியுமாக அந்தவாரம் முழுதும் கடந்து போய்கொண்டிருந்தவேளை மேகலாவும் யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்து அழுதுகொண்டேயிருந்தாள்.

வீடு உடைந்து அவளது புத்தகங்கள் சேதமடைந்தது இவ்வளவு தனது மகளைப் பாதித்திருக்கும் என்று யோகநாதனும் அவரது மனைவி சகுந்தலாவும் நினைத்திருக்கவில்லை. மேகலா படிப்பில் கெட்டிக்காரிதான். பன்னிரண்டாவது படித்தக்கொண்டிருந்தாள். ஆனால் சேதமடைந்த புத்தகங்களிற்காக இப்படி நாட்கணக்கில் அழுது கொண்டிருந்தவளை ஆறுதல்ப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரம் கழிந்து விட்ட நிலையில் தன் நண்பியை பார்த்து வருவதாக கூறிச்சென்ற மேகலா வீடு திரும்பவில்லை. அவள் நண்பிவீட்டிற்கும் செல்லவில்லை. யோகநாதனும் சகுந்தலாவும் அழுதபடியே ஊர் முழுதும் தேடிவிட்டு புலிகளின் முகாம்களிலும் விசாரித்துக் களைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய்விட்டிருந்தார்கள்.

000000000000000000000000000000000000

26.02.1996

அன்று வன்னியின் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பயிற்சி முகாமொன்றில் சுமார் 160 பேர்கொண்ட பெண்கள் அணியின் பயிற்சி அணியின் இறுதிநாள் நிகழ்வுகள் நடந்து கெண்டிருந்தன . பயிற்சியினை முடித்துக்கொண்ட அனைத்துப் பெண் போராளிகளும் பயிற்சியினை முடித்த மகிழ்ச்சியோடு அன்று அவர்களிற்காக வழங்கப்பட்டிருந்த புதிய வரிச்சீருடைகளை அணிந்தபடி தங்கள் இறுதி அணிவகுப்பைச் செய்து, கொடிக்கு மரியாதை செய்து சத்தியப் பிரமாணம் எடுப்பதற்காக முகாமின் மைதானத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் முன்னால் நின்ற அவர்களின் தலைமைப் பயிற்சி ஆசிரியர் மலர்விழி போராளிகளைப் பார்த்து “பிள்ளையள் இண்டையோடை உங்கடை பயிற்சிகள் முடிவடையிது. உங்களுக்காக எங்கடை தலைவர் தளபதி வெற்றிச்செல்வன் அண்ணையிட்டை விசேடமாய் ஒரு செய்தி சொல்லியனுப்பியிருக்கிறார். வெற்றிச் செல்வன் அண்ணை இன்னும் கொஞ்ச நேரத்திலை இங்கை வரப் போறார். அவரை வரவேற்க எல்லாரும் தயாராய் இருங்கோ” என்று அறிவித்ததும் தலைவரே தங்களிற்காக விசேடமாய் செய்தி அனுப்பியிருப்தை அறிந்த அனைத்துப் போராளிகளிடமும் பயிற்சியின் வலிகள் அனைத்தும் போய் ஒருவர் கையில் மற்றையவர் தட்டியும் கட்டிப் பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப் படுத்திக்கொண்டிருந்தபோதே முகாமிற்குள் ஒரு பஜுரோ வாகனம் நுளைந்து அதன் கதவுகள் திறக்கப்பட, அதற்குள் இருந்து நான்கு பேர் இயந்திர மனிதர்களைப் போல் இறங்கி நிலையெடுத்து நிற்கவும், நேராய் நில்…நிமிர்ந்து நில். என்று மலர்விழியின் குரல் கடுமையாய் ஒலிக்க, அனைத்துப் போராளிகளும் உயர வரிசைப்படி உடலிற்கு சமமாக கைகளை இறுகப்பொத்தி நாடியை உயர்த்தி விறைப்பாக இராணுவ அணிவகுப்பில் நின்றிருக்கும் போது, சிரித்தபடியே சீருடையில் வாகனத்தை விட்டிறங்கிய வெற்றிச் செல்வன் மலர்விழியிடம் வந்து இராணுவ மரியாதையை (சல்யூட் அடித்து )தெரிவித்து விட்டு அணிவகுப்பில் நின்ற போராளிகளின் வரிசைகளை ஒவ்வொன்றாய் பார்த்தபடியே உற்றுப் பார்த்படியே மெதுவாய் நடந்துகொண்டிருக்கும்போது நான்காவது வரிசையில் பன்னிரண்டாவதாய் விறைப்பாய் நின்றிருந்த செல்வியின் முகத்திற்கு முன்னால் ஒரு இலையான் கிணு கிணுத்து வட்டமடடித்தக் கொண்டிருந்தது.


சனி பிடிச்ச இலையான் என்ரை முகத்துக்கு முன்னாலையே சுத்துது என்று அவள் முணு முணுக்க அவளிற்கு பின்னால் நின்றவளோ நீ காத்தாலை முகம் கழுவேல்லைபோலை அதுதான் உன்னைச் சுத்துது என்று சொல்லி கிளுக்கென்று சிரிக்க, கோபடைந்த செல்வி இலையானைப்பிடித்து கொல்லவேணும் என்று முணு முணுத்தபடி வாயால் சில தடைவை அதை நோக்கி பலமாக ஊதிப் பார்த்தும் பிரயோசமில்லாததால் தலையை வேகமாக அசைக்க அதே நேரம் வெற்றிச் செல்வன் அவள் நின்றிருந்த வரிசையை எதிரே கடந்துபோக எத்தனித்தபோது முன்னே வைத்த காலை ஒரு அடி திரும்ப பின்னால் எடுத்து தலையை பின்னால் சரித்து தலையசைத்த செல்வியை உற்றுப் பார்த்துவிட்டு அணி வகுப்பு வரிசையை பக்கவாட்டாக பார்த்துக்கொண்டு வரும்போதும் ஒரு வினாடி நின்று செல்வியை உற்றுக்கவனித்து விட்டே கடந்து போனான்.


எடியே உன்னைத்தான் செல்வன் அண்ணை கவனிக்கிறார். இலையானிற்கு தலையாட்டினதுக்கு உனக்கு பணிஸ்மன்ற் தரப்போறார் போல கிடக்கு என்று அதே பின்னால் நின்றிருந்தவள் சொன்னதும் செல்விக்கு லேசாய் பயம் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. அணிவகுப்பு முடிந்ததும் கொடியேற்றி சத்தியப் பிரமாணம் எடுத்து முடித்த போராளிகளிற்கு அங்கு தயாராய் வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சியில் தலைவரின் உரை போட்டுக் காண்பிக்கப் பட்டது. பின்னர் பயிற்சி முடித்த போராளிகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது வெற்றிச் செல்வன் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மலர்விழியிடம் செல்வியை காட்டி மெதுவாக ஏதோ கேட்கவும் இன்னொரு போராளியை அழைத்த மலர்விழி அவள் காதில் ஏதோ சொன்னதையும் செல்வியும் கவனிக்கத் தவறவில்லை. அணிவகுப்பில் தலையை ஆட்டினதற்கு பணிஸ்மன்ற் கிடைக்கப் போகிறது என்று அவளிற்கு பயம் அதிகரித்து. அழுகை வந்து விடும்போல இருந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடையும் கட்டத்தினை எட்டியதும் வெற்றிச் செல்வன் புறப்படுவதற்கு தயாராய் தனது வாகனத்திற்கு அருகாய் போனதும் அவரை நோக்கிப் போன மலர்விழி வெற்றிச் செல்வனிடம் ” நீங்கள் கேட்ட பிள்ளையின்ரை சொந்தப் பெயர் மேகலா. இப்ப இயக்கப் பெயர் செல்வி. எங்கடை சாள்ஸ் அன்ரனியிலை இருந்த லெப்ரினன் மாறனுக்கும் இவாவிற்கும் காதல் இருந்ததாம். மாறன் புலிப்பாச்சல்லை சாவடைஞ்சிட்டதாலை அந்தக் கவலையிலை இயக்கத்துக்கு வந்திட்டா. பயிற்சி முடிஞ்சதும் C.3 முகாமுக்கு அனுப்ப இருக்கிறம். இவ்வளவும்தான் தகவல்” என்று சொல்லி விடைபெற்றாள்.

000000000000000000000000000000000000

12.04.1996
அம்மாச்சியின் வீட்டிற்கு முன்னால் பஜுரோ வாகனம் ஒன்று வந்து நின்றது. அம்மாச்சி இவர்தான் இயக்கத்தின் திருமணக் குழுவிற்கு பொறுப்பாளர். இயக்கத்தில் ஐந்து வருடங்கள் கழித்தபோராளிகள் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி திருமணம் செய்ய விரும்பும் ஆண் பெண் போராளிகள் தாங்கள் இயக்கத்திற்குள்ளேயோ அல்லது வெளியேயோ யாரையாவது காதலித்தால் இந்தத் திருமணக் குழுவிடம் முறையிடலாம். திருமணக் குழு அதனை பரிசீலித்து திருமணங்களை நடாத்தி வைக்கும். சில நேரங்களில் காதலிப்பவரையும் காதலிக்கப்படுபவரையும் அவர்களது பதவி நிலைகளை பொறுத்தும் இந்த திருமணக் குழு அதன் சட்டங்களில் இருந்து வளைந்து நெளிந்து தனது சேவைகளை நிறைவேற்றியும் இருக்கின்றது. பெரிய தளபதிகளின் திருமணம் என்றால்அவை தலைவரின் முன்னிலையில் நடக்கும். இந்த திருமணக் குழுவிற்கு பொறுப்பான அம்மாச்சி வீட்டின் முன்னால் வந்து நின்ற வாகனத்திலிருந்து வெற்றிச் செல்வன் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதுமே ஓடிப்போன அம்மாச்சி “என்ன நீங்களெல்லாம் இந்தப் பக்கம். வோக்கியிலை கூப்பிட்டிருந்தா நானே உங்கடை முகாமிற்கு வந்திருப்பனே” என்று பரபரப்பாய் வரவேற்றவரிடம், எனக்குத்தான் உங்களாலை ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கு. அதுதான் உங்களைத் தேடி வந்தனான் என்றபடி ஒரு குறூப் போட்டோவை எடுத்துக் காட்டி இதிலை உயரமா கலரா இருக்கிற இந்தப் பிள்ளையின்ரை பெயர் செல்வி C.3 முகாமிலை இருக்கிறார். இவரைத்தான் காதலிக்கிறன், கலியாணம் செய்யிறதா முடிவெடுத்திருக்கிறன் என்றதும் ஆனந்தமடைந்த அம்மாச்சி, ஓ….நல்ல விசயம்தானே அந்தப் பிள்ளைக்கும் சம்மதமோ?..அந்தப் பிள்ளைக்கும் சம்மதம் எண்டால் நான் நேராய் தலைவரிட்டையல்லோ போயிருப்பன். ஏன் இங்கை வாறன். அதுக்கு சம்மதமா எண்டு தெரியேல்லை. இரண்டு மூண்டு தடைவை சந்தர்ப்பம் கிடைக்கேக்கை எல்லாம் சாடை மாடையாய் கதைச்சு பாத்திட்டன். பிள்ளை பிடி குடுத்து பேசுற மாதிரித் தெரியேல்லை. நீங்கள் என்ன செய்யிறீங்களோ ஏது செய்யிறீங்களோ தெரியாது நீங்கள் அந்த முகாமுக்கு போய் அந்தப் பிள்ளையை சந்திச்சு கதைக்கிறதுக்கான அதிகாரம் முழுதும் உங்களுக்கு தாறன். இனி எல்லாம் உங்கடை கையிலைதான் என்றபடி படத்தை அம்மாச்சியின் கைகளில் திணித்து விட்டு எந்த நேரம் வேணுமெண்டாலும் நீங்கள் என்னைத் தனி நம்பரிலை வோக்கியிலை கூப்பிடுங்கோ என்றுவிட்டு வாகனத்தில் போய் ஏறிக் கொண்டார்.

000000000000000000000000000000000000

17.04.1996

செல்வியை அம்மாச்சி தன்வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு வாரமாகப் போகின்றது .அம்மாச்சியோ மதமாற்றம் செய்யும் ஒரு மதபோதகரைப் போல செல்வி காலை எழுந்ததிலிருந்து மாலை படுக்கப் .போகும்வரை அவளிடம் வெற்றிச்செல்வனைப் பற்றியே பேசி அவளது மனதை மாற்றிவிடும் முயற்சியில் இறங்கியிருந்தார். பெரிய தளபதி. வசதியான வீடு வாய்ப்புக்கள். தனிப் பாதுகாப்பிற்கு மெய் பாதுகாவலர்கள். அதுவும் தலைவர் தலைமையில் திருமணம் என்பதை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஆரம்பத்தில் அம்மாச்சி வெற்றிச் செல்வனைப் பற்றி சொல்லும் போதெல்லாம் செல்வி தனது காதலன் மாறனைப் பற்றி கதைத்தக்கொண்டேயிருப்பாள். ஆனால் இப்போ ஒருவாரம் கடந்து விட்ட நிலையில் மாறனின் பேச்சுக் குறைந்து போயிருந்தது மட்டுமல்லாமல் செல்விக்கு தான் திருமணம் செய்வதை விட தலைவரை ஒரு தடைவையேனும் நேரில் பார்த்துவிடவேண்டும் என்கிற அடிமனதில் இருந்த ஆவல் கடைசியாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தது. அந்தச் செய்தியை அக்காச்சி வெற்றிச் செல்வனிற்கு அறிவித்தாள். சில நாட்கள் கழித்து ஒரு மாலை வேளை திடீரென அம்மாச்சி செல்வியை அலங்கரித்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டைச் சுற்றிப் பலத்த காவல் போடப் பட்டிருந்தது. அங்கு முக்கிய சில தளபதிகள் மட்டும் இருந்தனர். அப்போதுதான் செல்விக்கு தனக்கு திருமணம் நடக்கப் போகின்ற விடயமே தெரிந்திருந்தது. வெற்றிச் செல்வனும் இராணுவசீருடை இல்லாமல் முதன் முதலாக சாதாரணமாக கறுப்பு நீழக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். இருள் கவிழத் தொடங்கியிருந்ததும் வேகமாக வந்த வேன் ஒன்றிலிருந்து சீருடையில் வந்திறங்கிய தலைவர் தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு மாலைகளை எடுத்துக் கொடுத்து மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டதும் மணமக்களோடு நின்று சில புகைப் படங்களை எடுத்துக்கொண்டு, வந்த வேகத்திலேயே தலைவர் வாகனத்திலேறிப் போய் விட்டார். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று செல்வி கிரகித்துக் கொள்ள முன்னரேயே எல்லாம் வேகமாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள் கனவுக் காட்சிபோல் நடந்து முடிந்து விட்டிருந்தது.

தலைவரைக் கண்ட அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலுமிருந்து மீளாதவளாக செல்வி நின்றிருக்கும் போதே மற்றையவர்களும் அங்கிருந்து போய்விட அம்மாச்சியும் செல்விடம் வந்து இனி உன்ரை வீடு இதுதான் என்று விடைபெறும்போது வெற்றிச்செல்வன் அம்மாச்சியை வாசல்வரைபோய் நன்றி சொல்லி அனுப்பிவைத்தான். இப்போ சில மெய்ப்பாது காவலர்களும் மணமக்களும் மட்டுமே அங்கு நின்றிருந்தார்கள். மாறன் என்று தனது பிரதான மெய்ப்பாதுகாவலனை வெற்றிச் செல்வன் அழைத்ததும் கொஞ்சம் திடுக்கிட்டவளாய் செல்வி அந்தப் போராளியை உற்றுப் பார்த்தவள், சே..இது அவனில்லை என்று அந்தக் கணமே பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, அங்கு வந்தவனிடம் பக்கத்திலை எங்கடை முகாம் இருக்கிற படியால பாதுகாப்பு பிரச்சனையில்லை. கொஞ்ச நேரத்திலை அங்கையிருந்து சாப்பாடு வரும். எங்களுக்கும் தந்திட்டு சாப்பிடுங்கோ நீயே மற்றவையளுக்கு சென்றியை(காவல்கடைமை) பிரிச்சுக்குடுத்துவிடு. பக்கத்திலை இருக்கிற வீட்டிலை நீங்கள் படுக்கலாம் என்றுவிட்டு கதைவைச் சாத்திக்கொண்டான். சிறிது நேரத்தில் வந்த சாப்பாட்டுப் பாசல்களில் இரண்டை எடுத்து கதவைத் தட்டி வெற்றிச் செல்வனிடம் கொடுத்து விட்டு மற்றையவர்களிற்கும் கொடுத்த மாறன் நானே முதல் சென்றியை பார்க்கிறன் நீங்கள் சாப்பிட்டு விட்டு அருகிலேயே இருந்த வீட்டில் படுக்கும்படி அனுப்பிவைத்துவிட்டிருந்தான்.

ஆனால் அன்று மாறனிடம் அசாதாரண நிலைமையை அவதானித்த அவனது நெருங்கிய தோழன் றூபன் சிறிது நேரத்திலேயே அவனை நோக்கி வந்திருந்தான். எப்பொழுதுமே விறைப்பாக துப்பாக்கியை நிமிர்த்திப் பிடித்தபடி நின்றிருக்கும் மாறன் துப்பாக்கியை சுவரில் சாத்தி வைத்துவிட்டு ஆகாயத்தை முறைத்துப்பார்த்தபடி நின்றிருந்தான். அவனது உணவுப் பார்சல் பிரிக்கப்படாமல் ஒரு கதிரையில் கிடந்தது. மாறனின் தோழில் கையை வைத்து “என்னடா ஏதும் பிரச்சனையோ” என்றதும், இல்லையடா கொஞ்சம் கஸ்ரமாயிருக்கு எப்பவுமே எங்களோடை இருந்து சாப்பிட்டு எங்களோடை காவல் நிண்டு எங்களோடை படுத்தெழும்பின செல்வன் அண்ணை இண்டைக்கு நிலைமை வேறை. நாடு, மக்கள், விடுதலையெண்டு பல கனவுகளோடை நான் தூக்கின இந்தத் துவக்கு இண்டைக்கு வேறை எதுக்கோ காவல் நிக்கவேண்டின நிலைமை. அதுதான் சாத்தி வைச்சிட்டன் என்றபடி தலையை குனிந்தான். சே… இதுக்கா கவலைப் படுறாய் இதெல்லாம் எங்கடை போராட்டத்தின்ரை ஒவ்வொரு வடிவங்களடா. இன்னும் கொஞ்ச நேரத்திலை செல்வன் அண்ணை செல் அடிக்கத் தொடங்கப் போறார். கொதியா சாப்பிட்டு வா ..நாங்கள் பங்கருக்குள்ளை பதுங்குவம் என்றபடி சாப்பாட்டு பாசலைப் பிரித்து மாறனின் கைகளில் வைத்து றூபன் சாப்பிடடா என்றான் .அறையில் கட்டிலில் இருந்த செல்வியை நெருங்கிய செல்வன் அவளிடம் நீ செல்வி நான் செல்வன் பெயரிலையே எவ்வளவு பொருத்தம் பாத்தியா?..என்றபடி அவளை அணைத்துச் சரிக்க, அவள் அறையின் மெல்லிய வெளிச்சத்தில் விட்டத்தில் பூச்சியை பிடிப்பதற்காகப் பதுங்கிக் கொண்டிருந்த பல்லியைப் பார்த்தவாறே படுத்திருந்தாள்.


000000000000000000000000000000000000
15.05.2009

இறுகிவிட்டிருந்த இறுதி யுத்தம். இலட்சக் கணக்காண மக்கள் இரண்டே கிலோமீற்றர் சதுரப் பரப்பளவில் இருந்து உயிரை மட்டுமே காப்பாற்றிக் கொள்ளக் கடலாலும் காடுகளாலும் வீதிகளாலும் என்று எல்லாப் பக்கமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். செல்வியும் தனது ஒன்பது வயது மகன் திலீபனை கையில் பிடித்தபடியே எங்கே போவதென்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தாள். இப்போ அவளிற்கு மெய்பாதுகாவலர்கள் யாரும் இல்லை. ஏன் வெற்றிச் செல்வனே உயிரோடு இல்லை. இரண்டு மாதங்களிற்கு முன்னர்தான் அவன் விமானக்குண்டு வீச்சில் இறந்து போயிருந்தான். இப்போ அவள் சாதாரணமான ஒரு மனுசி. யாழ்ப்பாண இடப் பெயர்வின் பின்னர் வன்னியில் தங்கியிருந்த அவளது பெற்றோர்களை ஒரு தடைவை அவள் தேடிப் போயிருந்தபோது அவர்கள் அவளோடு பேசிக்கொள்ளவில்லை. காரணம் ஆசையாய் வளர்ந்த தங்கள் பிள்ளை இயக்கத்திற்கு போனது மட்டுமல்ல இயக்கத்தில் பெரிய தளபதியாய் இருந்தாலும் தங்கள் சாதியை விட குறைந்த சாதியில் ஒருவனை திருமணம் செய்தது அவர்களிற்கு பெரும் கோபம். பின்னர் அவர்களும் மகனிடம் பிரான்ஸ் போய் விட்டிருந்தார்கள். உறவென்று சொல்லவும் யாருமில்லை. இராணுவத்திடம் சரணடையப் போகும் நண்பர்கள் அவளைத் தெரிந்த மக்கள் கூட அவள் பெரிய தளபதியின் மனைவி என்பதால் தங்களிற்கு பிரச்சனை வராமல் இருக்க அவளோடு சேராமல் விட்டு விலகி தனியாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் செல்விக்கு தற்கொலை செய்து விடலாமா என்று எண்ணம் கூட வந்து போயிருந்தது. ஆனால் உறவுகள் நண்பர்கள் யாருமே இல்லாமல் தன் மகன் அனாதையாய் போய்விடக்கூடாது என்பதற்காகவே தன்னுயுரைத் தக்கவைக்க வேண்டும் என முடிவிற்கு வந்தவள், இராணுவத்திடம் மகனோடு தனியாகவே போய் சரணடைய நினைத்து அங்கு செல்லடியில் இறந்துபோய்க் கிடந்த பலரில் ஒரு வயதானவரின் வேட்டியில் இரத்தக்கறை படாதிருந்த வெள்ளைப் பக்கத்தை பல்லால் கடித்து கிழித்தெடுத்தவள், அதை ஒரு தடியில் கட்டி உயர்த்திப்பிடித்தபடி அவ்வப்போது வந்து விழும் செல்களிற்கெல்லாம் மகனை அணைத்தபடி நிலத்தில் வீழ்ந்து படுப்பதும் எழும்புவதுமாய் இராணுவம் இருக்கும் பகுதியை தேடி நடக்கத் தொடங்கியிருந்தாள்.

பாதையோரத்தில் ஒரு பற்றைக்குள் வரிச்சீருடையோடு கையில் ரி.56 ரக துப்பாக்கியோடு பதுங்கியிருந்த மாறன் தூரத்தில் மகனோடு கையில் வெள்ளைக் கொடியை பிடித்தபடி வந்து கொண்டிருந்த செல்வியை பார்த்ததும் வெறுப்பு வந்தவனாய் துப்பாக்கியை நீட்டி செல்வியின் தலையை நோக்கி குறிபார்த்தபோது ஒரு எறிகணை சீறிக் கொண்டு வந்து விழ மகனை கட்டிப் பிடித்தபடி கீழே விழுந்து படுத்து விட்டு பயத்தால் நடுங்கி அழுது கொண்டிருந்த மகனை அணைத்து தூக்கி அவளும் அழுதபடியே வந்துகொண்டிருக்கவே, மாறன் பற்றைக்குள் இருந்து வெளியே வந்து செல்விக்கு எதிரே நின்றிருந்தான். மாறனைக் கண்ட செல்விக்கு கொஞ்சம் நிம்மதியும் நம்பிக்கையும் வந்தவளாய் வேகமாய் வந்து மாறனின் கையைப் பிடித்தபடி ..ஏனடா இப்பிடி?? என்ன நடந்தது எங்களுக்கு?? எதுவுமே புரியேல்லை. எல்லாமே தலைகீழாய் மாறிப்போச்சு. என்னைப் பாத்து கதைக்க விரும்பின சனங்களே இப்ப என்னைப் பார்த்து தூர விலகி ஓடினம். எல்லாமே முடிஞ்சு போச்சு. நான் சரணடையப் போறன். ஆனா எங்கை போய் சரணடையிறது எண்டுதான் தெரியேல்லை. நீயாவது எனக்கு உதவி செய் என்று அழுதபடி நின்றவளிடம், எந்த உணர்ச்சியுமற்றவனான்.

மெதுவாக ம்…உண்மைதான் எல்லாமே தலை……கீழாய் நடந்திட்டுது என்று விட்டு அசையாமல் நிற்க, மீண்டும் ஒரு எறிகணை சீறிவரவே மூவருமாக நிலத்தில் வீழ்த்து படுத்தவர்கள். அது அவர்களைத் தாண்டிப்போய் வெடித்து முடிந்ததும் துப்பாக்கிகை கட்டிப் பிடித்தபடியே படுத்திருந்தவனிடம் “எல்லாமே முடிஞ்சு பேச்சே பிறகு எதுக்கு இன்னமும் என்ன கோதாரிக்கு உதை கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாய். அதை எறிஞ்சு போட்டு உடுப்பை மாத்திக் கொண்டு வா” என்று செல்வி சொன்னதும், அங்கு சிதறிக் கிடந்த உடைகளில் ஒரு சாறத்தையும் ஒரு சட்டையையும் எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் பின்னால் போனவன், துப்பாக்கின் குழலை இறுக்கிப் பிடித்து வேகமாக பல தடைவை மரத்தில் ஓங்கி அடித்து அதை உடைத்து விட்டு துணியை மாற்றியவன் கழுத்தில் இருந்த சயனைற் குப்பியை கழற்றி கையில் பொத்திப் பிடித்தபடி செல்வியிடம் வந்து வாங்கோ போகலாம் என்று அவர்களோடு சிறிய பாதையூடாக நடக்கத் தொடங்கியிருந்தான். அவனிற்கு அந்தப் பகுதியும் பாதைகளும் நன்கு பழக்கபட்டிருந்ததால் வேகமாக பிரதான வீதிக்கு அருகாக வந்திருந்தார்கள். அப்போது புலிகளையும் மக்களையும் சரணடையுமாறும் அன்பாக வரவேற்போம் என்கிற இராணுவத்தினரின் ஒலிபெருக்கி அறிவிப்பு காதில் கேட்கத் தொடங்கியிருந்தது. பிரதான வீதிக்கு வந்து சேர்ததும் மாறன் செல்வியை பார்த்து சந்தியிலை தான் ஆமி நிக்கிறாங்கள். நீங்கள் கொடியை உயர்த்தி பிடிச்சபடி மகனோடை போங்கோ என்றதும், ஏன் உனக்கும் என்னோடை வர பயமோ என்றவளிடம், இல்லை நீங்கள் முன்னாலை போங்கோ நான் பின்னாலை வருவன். கட்டாயம் வருவன். பயப்பிடாமல் போங்கோ என்ற மாறனை பார்த்து லேசாய் தலையாட்டிவிட்டு வலக்கையில் வெள்ளைக் கொடியையும் இடக்கையில் மகனையும் பிடித்தபடி நடந்து போனவள், இடையில் நின்று இன்னொரு தடைவை மாறனை திரும்பிப் பாத்தாள். அவனைக் காணவில்லை. செல்வி நடக்கத் தொடங்கியதுமே திரும்பவும் வந்த பாதை வழியே சிறிது தூரம் வந்த மாறன் பொத்திப் பிடித்திருந்த கையை விரித்து சயனைற் குப்பியை வாயுள் நுளைத்து கடவாய் பற்களிற்கு இடையில் செருகியவன் வலக்கையால் பலமாய் தன் கீழ் தாடையில் ஓங்கி அடித்து சரிந்தான்.

000000000000000000000000000000000000

வெள்ளைக் கொடியுடன் வந்த செல்வியை அடையாளம் கண்டுகொண்ட ஒரு இராணுவ அதிகாரி அவள் முன்னால் வந்து சல்யூட் அடித்து வணக்கம் வாங்க திருமதி செல்வன் சுகமா? என நக்கலாக வரவேற்றுவிட்டு சரணடைந்த மக்களுடன் அவளை அனுப்பாமல் தனியாக ஓரிடத்தில் இருந்தியவன், நடைபேசியில் (வோக்கி)யாரோடோ கதைத்துக்கொண்டிருக்கும்போதே செல்வி சரணடைந்த செய்தி அறிந்து பல இராணுவத்தினரும் வந்து அவளை சுற்றி நின்று புதினம் பார்த்து கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். செல்வியோ பயத்தில் மகனை கட்டிப் பிடித்தபடி நிலத்தில் குந்தியிருந்தாள். வோக்கியில் பேசி முடித்த இராணுவ அதிகாரி அவளைச் சுற்றி நின்றவர்களை விரட்டிவிட்டு போகலாம் என்றவன், இன்னொரு இராணுவ வீரனை அழைத்து செல்வியின் மகனை தனியாக அழைத்துப் போகச் சொன்னதும், ஜயா என்ன வேணுமானாலும் செய்யுங்கோ. தயவு செய்து மகனை மட்டும் தனியா கொண்டு போகவிடமாட்டன் என்று சொல்லி முடிக்க முதவே அந்த அதிகாரியின் கை செல்வியின் கன்னத்தில் ஓங்கி இறங்க, பலநாட்கள் சரியான சாப்பாடோ தூக்கமோ இல்லாது பலவீனமாக இருந்த செல்வி அப்படியே மயங்கி விழுந்துபோயிருந்தாள். அவளை தூக்கி அங்கு நின்றிருந்த ஒரு பஸ் இருக்கையில் இருத்தி கையில் விலங்கிட்டு விட்டு மகனை தனியாக வோறொரு இடத்திற்கு அனுப்பிவிட்டிருந்தார்கள்.
மயக்கம் தெளிந்து செல்வி கண் விழித்துப் பார்த்தபோது பஸ் வண்டி குன்றும் குழியுமான பாதையில் குலுங்கியபடி ஓடிக்கொண்டிருந்தது. அவளிற்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு குளுக்கோஸ் பை பஸ் கம்பியில் கட்டப் பட்டிருந்ததோடு கையில் விலங்கிட்டு அதே கம்பில் இணைத்திருந்தார்கள். அவளைப் போல விலங்கிடப்பட்ட பலரும் பஸ்சில் நெருக்கமாக இருத்தி வைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சரணடைந்தவர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெண்போராளிகள். செல்விக்கு தெரிந்த பலரும் அதில் இருந்தார்கள். முதலில் கிளிநொச்சி முகாம். பின்னர் வவுனியா என்று அழைத்துவரப் பட்டு தங்க வைக்கப் பட்டவர்கள் இப்பொழுது நான்கு நாட்கள் கழித்து மின்னேரியா முகாமிற்கு அழைத்து வந்திருந்தனர். ஆரம்பத்தில் செல்வியோடு நூற்றுக்கண்கானர்கள் எல்லாரும் பிரித்தெடுக்கப்பட்டு இப்பொழுது அவளோடு பதினாறு போரே அந்த முகாமிற்கு கொண்டுவரப் பட்டிருந்தனர். அந்தப் பதினாறு பேரும் இயக்கத் தளபதிகளின் மனைவிகளும் பெரிய பதவிகளிலும் இருந்த செல்விக்கு பழக்கமான நெருக்கமான பெண்களே. ஆனால் யாரும் யாரோடும் பேசிக் கொள்ளாமல் மெளனமாக எங்கேயாவது வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் இதுவரை யாருமே விசாரிக்கப்பட்டிருக்கவில்லை.

பதினாறு பேரையும் அழைத்து வந்த ஒரு பெண் இராணுவ அதிகாரி அவர்களை ஒரு மண்டபத்தில் நிற்க வைத்து விட்டுப் போயிருந்தாள். இயந்திர மனிதர்கள் போல் டக் டக் என்கிற சப்பாத்து சத்தங்கள் எழுப்பியபடி இராணுவ மிடுக்குடன் பலர் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது அங்கு நுளைந்த ஒரு அதிகாரியைப் பார்த்து அனைவரும் விறைப்பாக நின்று சல்யூட் அடித்தார்கள். அவர் பெரிய அதிகாரி என்று அவனது சட்டையில் இடப்பக்கத்தில் ஜெனத் ஜெயா என்கிற எழுத்தின் கீழ் தொங்கிக் கொண்டிருந்த மெடல்களே சொல்லியது. வரிசையாய் நின்றிருந்த அனைவரையும் பார்த்தபடி நடந்து வந்தவன் செல்வியை கடந்து போனபோது முன்னால் வைத்த காலை மீண்டும் பின்னால் எடுத்து வைத்து தலையை சரித்து அவளை உற்றுப்பார்த்து லேசாய் புன்னகைத்தவன், நடந்துபோய் அறைக்குள் நுளைந்துகொண்டான். சிறிது நேரத்தில் ஒரு இராணுவ வீரன் வந்து செல்வியை மட்டும் அழைத்துப் போனான். அறைக்குள் காலைத் தூக்கி மேசையில் போட்டபடி அனாசயமாக அமர்ந்திருந்தவன் வெல்வியை அமருமாறு சைகை செய்ததும் கூட்டிவந்த இராணுவ வீரன் கதவைச் சாத்திவிட்டு வெளியேறிவிட்டிருந்தான்.

தட்டித் தடக்கிய தமிழில் அவளிடம் எதுக்கு இங்கை கூப்பிட்டன் தெரியுமா? என்றவனிடம் குனிந்திருந்தபடியே தெரியேல்லை என்றாள். ஆனால் சத்தம் வரவில்லை. தொண்டையை செருமிவிட்டு மீண்டும் தெரியேல்லை சேர். விசாரணைக்கா?? என்றாள். விசாரணையா ?? என்றபடி சிரித்தவன், விசாரிக்க வேண்டிய தேவை எதுவுமே எங்களிற்கு இல்லை. எல்லாமே எங்களிற்கு தெரியும் என்றபடி ஒரு வெள்ளை ஒரு பழுப்பு நிறத்திலான இரண்டு பேப்பர் தாள்களை எடுத்தவன் அவள் முன்னால் போட்டுவிட்டு இருக்கையை விட்டு எழுந்து மேசையை சுற்றி அவள் பின்னால் வந்தவன் கொஞ்சம் குனிந்து தனது வலக்கையை அவளின் இடது தோளில் பிடித்தபடி நல்ல கவனமா கேளு. உனக்கு முன்னாலை இருக்கிற இரண்டு பேப்பரிலை எதிலை நீ கையெழுத்து போடப்போகிறாய் என்பதிலைதான் உன் வாழ்க்கை இருக்கு என்றபடி அவள் முன்னால் அவற்றை இழுத்து வைத்தபோது, சேர் …சேர்.. என்ரை மகனை ஒருக்கா பாக்கவிட்டாலே போதும். நீங்கள் சொல்லுகிற எந்தப் பேப்பரிலை வேணுமெண்டாலும் கையெழுத்து போடுறன் என்று அவனை அண்ணாந்து பார்த்து கை கூப்பி கும்பிட்டவளிடம் இந்த வெள்ளை பேப்பரிலை கையெழுத்து போட்டால் உன்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு மகனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி விடுவோம். மற்ற பேப்பரிலை கெயெழுத்து போட்டா இன்னைக்கே இப்பவே உன் மகனோடை எங்களோடை பாதுகாப்பில் வசதியோடை இருக்கலாம். இன்னொரு விசயம் உனக்கு தெரியுமா சரணடைஞ்ச உங்க மக்களே உங்கள மாதிரி புலியிலை பெரிய பதவிகளிலை இருந்தவங்கள் மேலைதான் கோபமா இருக்கிறாங்க. அவங்களாலை கூட உனக்கு பிரச்சனை வரும். நீ புத்திசாலி பெண்ணு எண்டு நினைக்கிறன். நீ கையெழுத்து மட்டும் போட்டால் போதும். அதிலை என்ன எழுதவேணுமோ அதை நாங்களே எழுதிக்கிறம் என்றபடி சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து அதன் மூடியை கழற்றிவிட்டு அவளிடம் கொடுத்தான். பேனாவை வாங்கியவள் பழுப்பு நிற காகிதத்தை எடுத்து சேர் இதிலை கையெழுத்துப் போட்டால் மகனை பாக்கலாம்தானே என்றவள், அதில் மளமளவென கையெழுத்துப் போட்டதும் தனது சுட்டு விரலால் அவளது கீழ் காதுமடலில் லேசாய் இரண்டு தடைவை தடவிவிட்டு வெளியே நின்றிருந்த இராணுவ வீரனை அழைத்து சிங்களத்தில் ஏதோ சொன்னதும் அவன் மரியாதையாக செல்வியை அழைத்துப்போனான்.

000000000000000000000000000000000000

இராணுவக் குடியிருப்பிற்கு அருகே இராணுவ பாதுகாப்பு அடங்கிய ஒரு வீட்டில் செல்வி மகனோடு குடியமர்த்தப்பட்டிருந்தாள். மகன் திலீபன் பாடசாலைக்கு போகத் தொடங்கியிருந்தான். ஒரு அரச ஊழியரிற்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் அவளிற்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது ஜனத்ஜெயா அவளிற்கு தொலைபேசியடித்து விட்டு வந்து போவான். அவன் வரும் இரவுகளில் மகனை தூங்கவைத்து பக்கத்து அறையில் படுக்கவைத்து அவனின் வரவிற்காக காத்திருப்பதுதான் அவளது வேலை. இப்படியே நான்கு வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அன்று வேறு பலருடன் பரபரப்பாக ஜனத் வந்திருந்தவன், செவ்வியை கொஞ்சம் மேக்கப் போட்டு சேலை உடுத்தி தயாராகச் சொன்னான் .வந்தவர்களில் ஒருவன் வீட்டு வரவேற்பறையில் வீடியோ கமறாவை நிறுத்தி சுவர் பக்கமாக கோணம் பார்க்கத் தொடங்கியிருந்தான். இன்னொருவன் லைற்றை பொருத்திவிட்டு காத்திருந்தான். நல்ல வேளையாக மகன் பாடசாலைக்கு போய்விட்டான் என்று நினைத்தபடி எதுவுமே புரியாமல் தயாராகி வந்தவளிடம் இப்போ நீ கமறாவிற்கு முன்னாலை கொஞ்சம் பேசவேணும். வெறும் 5 நிமிசம்தான் ஒண்ணும் கஸ்ரமில்லை. நீ பேசவேண்டியது இந்தப் பேப்பரிலை இருக்கு இரண்டு தடைவை பாத்து பாடமாக்கிட்டு பேசலாம் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது சட்டையில் ஒரு மைக்கை செருகினான். பேப்பரில் எழுதியிருந்ததை ஒரு தடைவைதான் படித்தவள், கமறாவிற்கு முன்னாலிருந்த கதிரையில் போய் அமர்ந்தாள். கமறாவை இயக்கியவன் கையை உயிர்த்தி விரல்களால் ஒன்று இரண்டு மூன்று என்று காட்டிவிட்டு கையை கீழே இறக்கியதும் செல்வி பேசத் தொடங்கியிருந்தாள். எல்லாம் முடிந்ததும் அவளிற்கு நன்றி சொன்ன ஜயத், நான் வெளிநாடு போகிறேன். திரும்ப வர ஆறு மாதமாகும். ஆனா உனக்கு வேண்டிய எல்லா ஒழுங்கும் செய்து விட்டுத்தான் போகிறேன் என்றபடி அவளின் கைகளில் கொஞ்சம் பணத்தை கொடுத்து வாகனத்தில் ஏறி அமர்ந்து கையசைத்தான்.

0000000000000000000000000000000000000000000000

26.04.14

ஒல்லாந்து நாட்டின் இலங்கைத் தூதரகம் அங்கு ஒழுங்கு செய்திருந்த இரவு விருந்தில் பல பத்திரிகையாளர்கள், இராஜதந்திரிகள் அதிகாரிகள் கூடியிருந்தார்கள். உயர்ரக மதுவை நிரப்பிய மதுக்கோப்பைகள் அனைவர் கைகளும் தாங்கியிருக்க, விதம் விதமான உணவு வகைகள் அவ்வப்போது வாயில் பேட்டு சுவைத்தபடி இருக்க, அங்கிருந்த பெரிய திரையில் ஓடிக்கொண்டிருந்த ஆவணப் படத்தில் ஒரு இலங்கை இராணுவ வீரன் சரணடைய வந்த வயதான மூதாட்டியை ஓடிப்போய் அணைத்துத் தூக்கி வந்து இருத்தி அவளிற்கு தண்ணீரைப் பருக்கி அவள் தலையை கோதிவிட்டு அடுத்த வயதானவரை தூக்குவதற்காக ஓடுகிறான். இன்னொரு இராணுவ வீரன் காயம் பட்ட குழந்தையை தூக்கியபடி ஓடிக்கொண்டிருந்தான். இன்னொரு இராணுவத்தினன் குழந்தைகளிற்கு பிஸ்கற்றும் பழ ரசமும் கொடுத்துக் கொண்டிருந்தான். வெள்ளைக் கொடியோடு வந்தவர்களை வரவேற்று உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இராணுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் நான் தப்பியோடி வரும்போது காலிலை சுட்டிட்டாங்கள். என்னை கடவுள் மாதிரி வந்து காப்பாத்தின உங்களுக்கு நன்றி என்று இராணுவ வைத்தியரை கையெடுத்துக் கும்பிட்டான். அப்போதுதான் திரையில் செல்வி தோன்றினாள். அப்பொழுது ஓடிக்கொண்டிருந்த படத்தை அப்படியே நிறுத்திய ஜயத் ஜெயா நண்பர்களே இவரை உங்களிற்கு தெரிந்திருக்கலாம். புலிகள் அமைப்பின் முக்கியமானதொருவர் பெரிய தளபதியின் மனைவி செல்வி. இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று விட்டு மீண்டும் ஒட விட்டான். அனைவரும் திரையை பார்த்தனர். அவளது பேச்சு மொழி பெயர்ப்பில் கீழே போய்க்கொண்டிருந்தது. அனைவரிற்கும் வணக்கம் சொன்ன செல்வி தொடர்ந்து பேசினாள். நான் முள்ளி வாய்காலிலை சரணடைந்த பிறகு கிளிநொச்சி முகாமிலையும் அதுக்குப் பிறகும் எங்களை நல்லபடியா இலங்கை இராணுவத்தினர் கவனித்தார்கள். எனக்கு மட்டுமில்லை சரணடைஞ்ச மற்ற போராளிகளிற்கும் அவையள் எந்த பிரச்னையும் தரவில்லை . விசாரணை கூட நடத்தேல்லை. எல்லாரையும் தங்கடை சகோதரங்களாக நினைச்சு கவனித்தவை. அதேடை எங்களிற்கு வேண்டிய பாதுகாப்பு மட்டுமில்லாமல் எல்லா தேவைகளையும் அவையள்தான் நிறைவேற்றி வைக்கினம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறம். நன்றி வணக்கம் என்றாள். அனைவரும் கைகளைத் தட்டி ஜெயத்ஜெயாவிற்கு கைகொடுத்து வாழ்த்துச் சொன்னதும் அவன் கையிலிருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட்டிருந்தான்.

000000000000000000000000000000000000

இரவு பத்துமணியைத் தாண்டி செல்வியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. மகனைக் கட்டியணைத்தபடி படுத்திருந்தவள் அவனை விலக்கிவிட்டு வந்து கதவைத் திறந்தாள். கொஞ்சம் போதையில் தள்ளாடியபடி நின்றிருந்த ஒருவன் அவளை உள்ளே தள்ளி கதவை சாத்தியதும் அவனிடம் கோபமாக ஏய் இது யார் வந்து போகிற வீடு தெரியுமா என்றதும், உஸ்….மெதுவா பேசு உள்ளை உன் மகன் தூக்கத்திலை இருப்பான். அவனை எழுப்பாதை. இங்கை வாறது பெரிய தளபதி ஜயத்ஜெயா தெரியும். அவரை கூட்டி வாறதே நான்தான். என் பேர் றோகித அதெல்லாம் உனக்கு எதுக்கு என்றபடி இடுப்பில் செருகியிருந்த ஒரு கைக்குண்டை எடுத்து மேசையில் வைத்தவன், நான் ஒண்டும் மோசமானவன் இல்லை. எனக்கு வன்முறை பிடிக்காது. அதனாலைதான் சண்டை முடிஞ்ச பிறகு ஆமியிலை சேர்ந்தனான். உனக்கு பிடிச்சா மட்டும்தான் இல்லாட்டி நான் வந்த வழியே திரும்ப போயிடுவன். ஆனா நாளைக்கு எல்லாப் பத்திரிகையிலும் முக்கிய செய்தி. மீள இணையும் புலிகள். முன்னை நாள் புலித் தளபதி செல்வனின் மனைவி செல்வி வீட்டில் கைக்குண்டு மீட்பு எது வசதி என்றான். சிறிது நேரம் யோசித்தவள் அறைக்கு போய் தூக்கத்திலிருந்த மகனை தூக்கி அடுத்த அறையில் படுக்கவைத்துவிட்டு தனது அறைக்குள் போய் கட்டிலில் சாய்ந்து கொண்டாள். மெல்லிய வெளிச்சத்தில் விட்டத்தில் ஒரு பல்லி பூச்சியை பிடிப்பதற்காக பதுங்கியிருந்தது. ஆனால் கடந்த காலங்களில் அவள் பார்த்த பல்லியை விட இந்தப் பல்லி ஒல்லியாக இருந்தது.