Navigation


RSS : Articles / Comments


சபீதா-சிறுகதை

1:29 PM, Posted by sathiri, No Comment

 

சபீதா-சிறுகதை-சாத்திரி

சாத்திரி 

இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு  சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க,  ‘ச்சே  ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன்.

கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து  வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா  வணக்கம் சொல்லிவிட்டு  ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன்.  என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால்,

“அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?”  என்றதும்,

“அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம்,

“நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…”  நான் சொல்லி முடிக்க முதலே,

“எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு  விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன்.

சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள்.  அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால்  வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள்.

‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.

“உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர  மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது,

’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு  சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை  கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம்  ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை  எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால்  இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே,

“இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள்.

“இதுவரை  எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு,  இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள்  கண்ணில் கெஞ்சல் தெரிந்தது.

வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும்,

“பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக்.

“உனக்குத்தான்  ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?”

“அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….?

“உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் .

அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான்  வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின்  மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது.

அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில்  மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது  பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை  நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம்  ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க,  மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.

வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை  கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில்  இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட  சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….