Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில் தமிழ்க்கவி அவர்கள் ..

10:49 AM, Posted by sathiri, No Comment


“ஆயுத எழுத்து“  ( நாவல் )     “ படித்ததில் புரிந்தது“ /       தமிழ்க்கவி
download-21.jpg




போராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது
”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.
1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா? இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.
சிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா?  தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.
பெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.
“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது
வெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.
ஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.
”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக  நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.
இந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்”  என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.
திட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.
“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது.   இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”
மற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உயிர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.
கதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும்  எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி
கற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது
எல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.
ஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர்  இங்கு நடமாடுவது  நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.
இவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது
ஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.
                     •••

ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா

3:03 PM, Posted by sathiri, No Comment

ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா?? சாத்திரி:-

ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா??  சாத்திரி:-
இலங்கைத்தீவில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை இன்றி  புலம் பெயர் தேசங்களில் நடக்கப் போகும் ஐந்தாவது மாவீரர் நாள் கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடக்கும் மாவீரர் நினவுநாளினை நான் எனது கட்டுரைகளில் மாவீரர் நாள் கொண்டாட்டம் என்று எழுதுவது வழமை ஏனெனில் அந்த நாள் மாவீரர் அஞ்சலி நாளாக இல்லாமல் ஆட்டம் பாட்டம்.கடைகள் . என்று கொண்டாட்டமாகவே நடைபெறுவது வழமை.அப்படி இன்னொரு கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம்.2009 ம் ஆண்டு மாவீரர் தினத்தின் போது தலைவரின் உரை கட்டாயம் வருமென அதன் ஏற்பாட்டளர்களால் அடித்துக் கூறப்பட்டிருந்தது.எப்படியும் தலைவரின் உரை வந்துவிடுமென நம்பிக்கையோடு பலரும்.வருமா வரதா என்று குழப்பத்தில் சிலரும்.வரக்கூடாது என்றவர்களும்.வராது என்று சொன்னவர்களும்.மாவீரர் தினஉரை வந்து விடுமோ என்று காத்திருக்க  2008ம் ஆண்டின் மாவீரர் தின உரையை மீள் ஒலிபரப்பு செய்திருந்தார்கள்.தலைவர் மாவீரர் தின உரை நிகழ்த்தினால் அவரின் இரகசிய இடத்தினை எதிரிகள் கண்டு பிடித்துவிடுவார்கள் அதனால்தான் பழைய உரையை மீள் ஒலிபரப்பு செய்தோம் அடுத்த வருடம் கட்டாயம் வரும் என்றார்கள்.அதையும் சிலர் நம்பதான் செய்தனர்.ஆனால் அடுத்த வருடமும் வரவில்லை.அது மட்டுமல்லாமல் ஐந்தாயிரம் பேரோடு தலைவர் ஐந்தாம் கட்டப் போருக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.எரித்தியாவில் நூறு குண்டு வீச்சு விமானங்களும் தயார் நிலையில் உள்ளது  என்கிற பிரசாரமும் நடந்துகொண்டுதான் இருந்தது.

ஆண்டுகள் செல்லச் செல்ல ஐந்தாயிரம் பேரும் காணமல்போய் எரித்தியாவில் நின்றிருந்த குண்டுவீச்சு விமானங்கள் பற்றிய கதைகளும் பறந்து போய். தலைவர் இருக்கிறார் என்பதும் இல்லாமல் போய்விட்டது .
ஈழத்துக்கான போராட்டத்தை புலம்பெயர் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று தலைவர் தனது கடைசி மாவீரர் தின உரையில் சொல்லியுள்ளார் எனவே நாம்தான் ஈழத்துக்கான அடுத்த கட்டப் போராட்டங்களை நடாத்தப் போகிறோம் என்று வெளிநாடுகளில் பல தமிழ் அமைப்புக்கள் கிளம்பியிருந்தார்கள்.அதில் பெரும் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் தொடங்கப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தனது முதலாவது தேர்தலை அறிவித்ததும் நான் நீ என போட்டி போட்டு அடிபட்டு தேர்தல் நடந்து முடிந்து அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.தேர்தலில் நின்றவர்கள் சிலர் பிரதமராக நியமிக்கப்பட்ட உருதித் ரகுமருக்கு எதிராக அறிக்கையும் விட்டு நாடுகடந்த தமிழ் ஈழ அரசைப்புறக்கணித்து பிரிந்து போனார்கள் .
இது இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே புலிகளின் வெளிநாட்டு பிரிவாக இயங்கிய அனைத்துலகச் செயலகம் அதன் மீது இருந்த தடை காரணமாக சில நாடுகளில் தமிழர் பேரவை என பெயர் மாற்றம் செய்துகொண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று ஒன்றை பெரும் பொருட் செலவில் நடத்திமுடிதிருந்தர்கள்.அந்த வாக்கெடுப்பின் பின்னர் அனைத்து நாடுகளிலும் 90.99வீதம் தேர்தல் வெற்றி மக்கள் தீர்ப்பை அப்படியே ஐ.நா  சபையில் கொண்டுபோய் கொடுப்போம் அடுத்தமாதம் தமிழீழம் என்கிற  பரபரப்பு பிரச்சாரங்களும் நடந்து முடிந்திருந்தது.
முள்ளிவாய்க்கால்  பேரவலத்தில் மனம் கொதித்துப் போயிருந்த மக்களும் எதாவது ஒரு மாற்றம் வந்துவிடாதா என்கிற ஆதங்கத்தில் இந்த இரண்டு வாக்கெடுப்புக்களுக்குமே பெருமளவில் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு காத்திருந்தார்கள். வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்திமுடித்து மாதங்கள் வருடங்களாக ஓடி விட்டது.அதை நடத்தியவர்களும் ஓடி விட்டார்கள் யாரையும் காணவில்லை.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசோ அடுத்த தேர்தலை அறிவித்து.. தேர்தலில் நிக்கவும் யாரும் முன்வரவில்லை என்பது மட்டுமல்ல ஓட்டுப் போடவே எவரும் போகாத நிலையில் அவர்களாகவே சில அமைச்சர்கள் என்று பெயர்களை அறிவித்து மீண்டும் உருத்திரகுமாரே பிரதமர் ஆனார்.நாடுகடந்த சில அரசுகள் இந்த உலகத்தில் இன்றும் இயங்குகின்றது. ஆனால் உலகத்திலேயே ஒரு மென்பொருளில்(SKYPE) அரசாங்கம் இயங்குகின்றது என்றால் அது நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்.அதற்காக மேன்மை தாங்கிய எமது பிரதமர் திரு .உருதிரகுமார் அவர்களுக்கு ஸ்கைப் நிறுவனம் எதாவது விருது வழங்குமாயின் நான் பெருமகிழ்வடைவேன்.
மேலே குறிப்பிட்ட இரண்டு பெரிய புலம் பெயர் அமைப்புக்களின் நிலைமை இப்படியென்றால் அடுத்ததாக புதியதோர் விதி செய்யப் புறப்பட்ட இளையோர் அமைப்புக்கள் கோடை காலத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடாத்தி ஆடிப்போடுவதோடு சரி.உலகத்தமிழர் பேரவை அவ்வப்போது எதாவது அறிக்கை மூலம் தனது இருப்பை அறிவிப்பார்கள் அதேபோல அண்மையில் தங்கள் அமைப்பு தமிழீழக் கொள்கையை கைவிட்டு விட்டதாக ஒரு அறிக்கையை விட்டிருகிறார்கள் இவர்கள் தமிழீழக் கொள்கையை கையில் தூக்கிப் பிடிதிருந்தபோதும் எதுவும் செய்யவில்லை.இனி அதை கை விட்ட பின்னரும் எதுவும் செய்யப்போவதில்லை என்பது உண்மை.பிரித்தானிய தமிழர் பேரவை அண்மைக் காலங்களாக தங்கள் போராட்டங்களில் புலிக்கொடியை கைவிட்டுள்ளனர் அதேபோல அவர்களும் தமிழீழக் கோரிக்கையையும் கை விட்டுவிட்டு ஊரில் வாழ்வாதாரத்துக்காக போராடும் மக்களுக்கு எதாவது செய்ய முன்வந்தால் மகிழ்ச்சி.
புலிகள்  அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் புதிதாக  போட்டி மாவீரர் தினத்தை  தொடங்கிய தலைமை செயலகதினரின் தலைகளையே காணவில்லை நாடு கடந்த தமிழ்ஈழ அரசுடன் கலந்து கரைந்து போய் விட்டார்கள்.மக்கள் அவையினரின் நிலைமை மிக மோசம் என நினைகிறேன் அறிக்கைகளும் இல்லை போராட்டங்களும் இல்லை..ஆனாலும் சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சிகளாக முகப்புதகத்தில் புலிக்கொடியையும் பிரபாகரன் படத்தையும் தங்கள் படங்களோடு கிரபிக்கில் இணைத்து தினமும் ஒரு குறள் என்பது போல தினமும் ஒரு வீரவசனத்தை இணைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .

வெளி நாடுகளில் ஈழபோரட்ட அமைப்புகளின் நிலை இப்படியென்றால் தமிழகத்தில்  ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததுமே ஈழ ஆதரவுப் போராட்டம் டான்சி நிலமாக மாறிவிட்டது.ஒட்டு மொத்த ஈழப் போராட்டத்தையும் அவரே குத்தகைக்கு எடுத்து அவற்றை வளைத்து வேலி போட்டுவிட்டார் .ஈழம் ..ஈழத்தமிழர் பற்றி அவர் மட்டுமே அறிக்கை விடமுடியும் ..போராட்டம் நடத்த முடியும்..கடிதம் எழுதமுடியும் .அவரை மீறி யாராவது செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும். அதனால் ஐந்தாம் கட்டப் போர் .ஆயுதப்போர் என தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தவர்கள் வாயிலிருந்து இப்போ காத்துக்கூட வருவதில்லை ஆகவே அவர்களது ஈழ ஆதரவுப் போராட்டம் என்பது இப்போதிரைப்படங்களை எதிர்க்கும் போராட்டமாக மாறிவிட்டிருக்கின்றது.
தினம் தினம் தமிழ்நாட்டில்  ஈழத் தமிழர்களுக்காக இப்படிப் போராடும் எந்த அமைப்புக்கும் சிறப்பு முகாம் என்கிற பெயரில் தமிழகத்தில் வருடக்கணக்காக சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்கள் பற்றி ஏனோ நினைவில் வருவதேயில்லை.சரி தமிழகத்தில் இருக்கும் சிறப்பு முகம்களுக்காக போராட்டம் நடாத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகிவிடும் என்று கருதினால்  இலங்கையில் தேயிலைத்தோட்டங்களில் வேலைக்கு கூலிகளாக ஆங்கிலேயர்களால் தமிழ் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இன்னமும் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக  குறைந்த சம்பளத்தில் தினக் கூலிகளாக வேலை செய்துகொண்டு லயங்கள் என்கிற சிறு குடிசைகளில் வாழ்நாள் முழுதும் கழித்துமுடித்து அதே தேயிலை செடிகளுக்கு உரமாகிப்போகின்ற மலையகத் தமிழர்களுக்காக இதுவரை தமிழ் நாட்டில் எத்தனை போராட்டம் நடந்திருகிறது ...இபோதும் கூட  பதுளையில் மீரியபெத்தை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியில் குடியிருப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற் பட்ட மண் சரிவில் அங்கு குடிசைகளில் வசித்தவர்கள் புதையுண்டு போயுள்ளார்கள்.பன்னிரண்டு சடலங்கள் மீட்கப் பட்டுள்ளது முன்னுறுக்கும் அதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர் .அவர்களும் இறந்து போயிருக்கலாம் என்றுதான் நம்பப் படுகிறது என்று செய்திகள் தெரிவித்தாலும் அதுதான் உண்மை .உலக நாடுகளில் காணமல் போனவர் பட்டியலில் பெயர்களை இணைப்பதில்  இலங்கைக்கு நிகரான நாடு எதுவுமில்லை  ..வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பகுதி என்று தெரிந்தும் அங்கு வசித்தவர்களுக்கு மாற்று ஒழுங்குகள் செய்யாத அரசு மட்டுமல்ல அந்த மக்களின் பெயரால் அவர்களின் வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்ற கட்சியும் இத்தனை மனித இழப்புக்களுக்கும் பொறுப்பு. அதே நேரம் இந்த மலையக தமிழர்களுக்கு தமிழகத்து தமிழர் போராட்டமெல்லாம் நடத்த வேண்டாம். சிறை செல்ல வேண்டாம் இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு ஆதரவுக்கரம் நீட்டினலே போதும் அவர்களுக்கான உதவிகள் கூட செய்ய முடியாதா ?.தினசரிப் பத்திரிகையில் முன்பக்க செய்தியாக வராது என்கிற காரணமாகவும் இருக்கலாம் .அதைப்போலவே இவர்களைப் பற்றி ஒரு சிறு பக்க செய்தி கூட தமிழக பத்திரிகைகளில் வரவில்லை  என்பது மட்டுமல்ல தமிழகப் போராளிகள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனை . 
தமிழகத் தமிழர்களின்  உண்மையான தொப்புள்கொடி உறவு மலையகத் தமிழரே ..அவர்கள்தான் இரத்த உறவு .ஈழத் தமிழன் மாமன் மச்சான் உறவுதான் .முதலில் இரத்த உறவுகளுக்காக அவர்களின்  நிம்மதியான வாழ்வுக்காக போராடுங்கள் .பின்னர் ஈழத்தமிழர்களுக்காக  போராடலாம் காரணம் அவர்களுக்காக போராட வெளி நாடுகளில்  புலம்பெயர்ந்த  அவர்களது உறவினர்கள் யாரும் இங்கு இல்லை ..

அதே நேரம் இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கிய நேரத்தில்மேலும்  இரண்டு சம்பவங்களும் நடந்து முடிந்து விட்டிருக்கிறது ஒன்று தமிழக முதலமைச்சர் ஜெயலிதா அவர்கள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பிணையில் வெளியே வந்திருக்கிறார்.அவர் எப்படியும் பிணையில் வந்து விடுவார் என்று தெரிந்தும் தமிழகமே கொந்தளித்து வன்முறைகள் வெடித்திருந்தது .நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கி றார்கள்.நாடு கடந்த தமிழீழ அரசங்கமும் ஜெயலிதாவின் கைதை எதிர்த்து அறிக்கை விட்ட கோமாளிக்கூத்தும் நடந்தது. 
ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்   எந்தக் குற்றமுமே செய்யாமல் வெறும் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தூக்குதண்டனை  நிறைவேற்றப் பட்டு 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியபின்னர் உச்ச நீதி மன்றத்தால் அவர்களை விடுதலை செய்யும்படி தீர்ப்பு கூறிய பின்னரும் அவர்கள் விடுதலை செய்யப் படாமல் சிறையிலேயே வாடுகிறார்கள் இவர்களுக்காக தமிழகத்தில் ஒருசில மனிதவுரிமை ஆர்வலர்கள் அமைப்புகளை தவிர்த்து எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தவுமில்லை தமிழகம் பொங்கி எழவும் இல்லை என்பது வேதனையான விடயம்.இரண்டாவது சம்பவம் ஐரோப்பவில் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப் படுவதற்காக  ஐரோப்பிய யூனியன் கையாண்ட வழிமுறைகளில் தவறு உள்ளது மூன்று மாதங்களுக்குள் சரியான வழிமுறைகளை கையாண்டு தடையை நீடிக்கவேண்டும் அல்லது நீக்கவேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதனை அரைகுறை விளக்கத்தோடு  வெளிநாடுகளில் தங்களைத் தாங்களே தமிழ்த்தேசிய ஊடகங்கள் என சொல்லிக் கொள்பவர்கள் புலிகளின் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கிவிட்டதாக கும்மியடித்துக் கொண்டிருகிறார்கள் .

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஈழப் போராட்ட நிலை இப்படியென்றால் தமிழர் தாயகத்திலோ கடந்த தேர்தலில்  ஆளும் அரசு புனரமைப்பு என்று என்னதான்  பளபளப்பான வீதிகளைப் போட்டு, கட்டிடங்கள், பாலங்கள். என்று காட்டி தண்டவலதைப் போட்டு இரயிலை கொண்டுவந்து விட்டிருந்தாலும் தமிழ் மக்களுக்கு அதையும் தாண்டி தங்களுக்கான தேவைகள் என்பது வேறு இருக்கின்றது என்று கட்டவும் அரசின் மீதான அதிருப்தியை காட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  தங்கள் பெரும் பான்மை வாக்குகளை போட்டு அவர்களை பாராளுமன்றம் அனுப்பி விட்டிருந்தார்கள்.ஆனால் பாராளுமன்றப் படியில் கால் வைக்கும் போதே  வாக்குப் போட்ட தமிழ் மக்களை கால் மண்ணைப்போல தட்டிவிட்டு உள்ளே போய்விட்டார்கள் . தமிழர் பிரதேசங்களின் புனரமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கூட மெத்தனப் போக்கால் சரியாக கையாளாது விட்டு அது திரும்பிப் போனதும்.கூட்டமைப்பு என்கிற பெயரை வைத்து வாக்கு கேட்டு வென்று விட்டு பின்னர் தனித் தனி கட்சிகளாக பிரிந்து நின்று உள்மோதல்கள்..மாகாண சபை நிருவாகத்தில் ஊழல் என்று ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் ..மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான போக்குவரத்து குறைந்த விலையில் பயணம் செய்யக் கூடிய  யாழ்தேவி இரயிலின் வருகையை எதிர்ப்பார்களாம்..ஆனால் தங்களுக்கு வேண்டிய சொகுசு வாகனங்களை அரசின் அன்பளிப்பாகவும்  வரிச் சலுகைகளும் பெற்றுக் கொள்வார்களாம் ..மகிந்தவை வடக்கு வரவேண்டாம் என்று எதிர்த்து புறக்கணிப்பு செய்வாங்களாம் ..ஆனால் இவர்களே கொழும்பு போய் மகிந்தவை கட்டிப் பிடித்து கை கொடுத்து பக்கத்தில் அமர்ந்து விருந்துண்பார்களாம்.பாராளுமன்ற சொகுசுகள்,சொகுசு வாகனங்கள் , வெளிநாட்டுப் பயணங்கள் செலவுகள் எல்லாமே அரசாங்கத்திடமிருந்து இவர்கள் பெற்றுக் கொள்வார்கள்  ..ஆனால் மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளை புறக்கணிப்பர்களாம் . மக்களின் தேவைகளை புறக்கணிக்க முன்னுக்கு நிக்கும் இவர்கள் எத்தனை பேர்  காணமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்தும் போராட்டங்களிலும் இராணுவம் ஆக்கிரமித்து நிக்கும் தங்கள் நிலத்துக்காக போராடும் மக்களோடு நின்று போராடுகிறார்கள் என்று பார்த்தால் யாரோ ஒருவரோ இருவரோ தான் அங்கு நிக்கிறார்கள் .மிகுதிப்பேர் செய்திகளிலேயே அதனைப்படிகிறார்கள் ..எனவே இலங்கை அரசுக்கு எதிராக போராடும் மக்கள் அல்லது அமைப்புக்கள் அது தமிழர் பிரதேசமாகட்டும்,  தமிழ் நாடாகட்டும், வெளி நாடுகளாகட்டும் ,இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிராக போராடினால்தான் அவகளிற்கு மக்கள் மீது ஒரு மரியாதையாவது வரும்.அடுத்த தேர்தலும் நினைவுக்கு வரும்.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் எல்லாமே அனேகமாக தெரிந்த விடயங்கள் தானே எதுக்காக  மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்  என பலர் நினைக்கலாம்.வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை.இன்றைய செய்திகளே நாளை மறந்துபோகும் அல்லது  ஒரு செய்தியை இன்னொரு செய்தி முக்கியமற்றதாக்கிவிடும் காலத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.மக்களின் மறதியிலும். என்ன நடந்தாலும் எனகென்ன என்று விலகிப்போகும் சுயநலத்திலுமே இன்றைய அரசியலும் வியாபாரங்களும் நடை பெறுகின்றது .எனேவேதான் அவ்வப்போது சில விடயங்களை நினவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .

இவையெல்லாவற்றையும் தாண்டி புலிகளும் .புலிகளின் தலைமையும்.மாவீரர் தின உரையுமற்ற    ஐந்தாவது மாவீரர் தினம் வரவுள்ளது.இனியும் தலைவர் இருக்கிறார் மாவீரர்தின உரை வருமென்று கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது எனவே இனிவரும் காலங்களில் பிரபாகரன் பற்றிய பேச்சுக்களே இல்லாமல் அவர் சாவகாசமாக மறக்கடிக்கப்பட்டு விடுவார் என்பது உறுதி.ஆனால் ஈழத் தமிழினத்தின் விடிவு வேண்டி ஆயுதப்போரை வழிநடத்தி உலகின் உறுதியான கட்டமைப்பைக் கொண்ட கெரில்லாக்களாகவும் பின்னர் முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவத்தையும் உருவாக்கி நிழல் அரசு ஒன்றையும் நடத்திக்காட்டி தான் கொண்ட கொள்கைக்காக தனது குடும்பத்தையும் தன்னையும் பலியிட்ட பிரபாகரன் என்கிற மனிதனுக்கு ஒரு அகல் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த துப்பில்லாத இனமாக தமிழினம் இருகின்றதேன்பதே உண்மை.ஆனால் உண்மையாக மாவீரர்களையும் பிரபாகரனையும் நேசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெருமெடுப்பில் மண்டபங்களில் நடக்கும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் தொடரட்டும்.மண்டபங்கள் எங்கும் கொத்துரொட்டி வாசனை நிரவட்டும் ...

பீனாகொலடா

2:28 PM, Posted by sathiri, No Comment

 பீனாகொலடா  (சிறுகதை )
.............................................................
மலைகள் இணைய   சஞ்சிகைக்காக  சாத்திரி


இன்று லீவு நாள் வழக்கம்  போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ  யை போட்டு எடுத்த  படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு  சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு  அறையில் இருந்து  மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை  கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை"  என்று  சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை ரீ  சேட் நீங்கள் போடுறதும் இல்லை வருசக் கணக்கா கிடக்கு  இந்த வருசமாவது எறியுங்கோ என்றபடி அதை மட்டும் தனியாக கையில் தந்தாள்.. வருசத்துக்கு ஒரு தரம்  இப்பிடித்தான் அலுமரிக்குள் இருக்கிற பாவிக்காத  உடுப்புகளை பொறுக்கி யெடுத்து கொண்டுபோய் செஞ்சிலுவைச்சங்க பெட்டிக்குள் போடுவது வளமை. செஞ்சிலுவை சங்க காரன் உன்மையிலேயே  அந்த உடுப்புக்களை இங்கை கஸ்டப்பட்ட ஆக்களுக்கு குடுக்குறானா அல்லது ஆபிரிக்காவுக்கோ ஆசியாவுக்கோ அனுப்புகிறானா அதையும் விடுத்தது  குப்பையிலை போடுகிறானா என்பதெல்லாம் அவங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.மனிசி தந்த உடுப்புக்களை கொண்டு மறுபடியும் ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் சரிந்த படி அங்கிருந்த சின்ன மேசையில் உடுப்புக்களை போட்டுவிட்டு அந்த பச்சை ரீசேட்டை கையில் எடுத்தபடி டிவி றிமோட்டை அமத்திய படி  டீ யை உறுஞ்சத்தொடங்கினேன் ..
        00000000000000000000000000000000000000000000000000000000
கொழுத்திய கோர வெய்யில்  தலையில் பட்டு விடாமல் தடுக்கும் முயற்சியாக புத்தக பையை தலைக்கு மேலே துக்கிப்பிடித்த படி புழுதி படர்ந்த பாதையில்  வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய் கொண்டிருந்தாள் அமுதவல்லி.வீட்டை நெருங்கும் போது அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வந்த புல்லட் வண்டி அவளை கடந்து போகும்போது அதிலிருந்த ராமலிங்கம் அவளைப்பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு போனான் .ஐயையோ இவன் என்னத்துக்கு வீட்டுக்கு வந்திட்டு போறான் அன்னிக்கு இப்பிடித்தான் தனிய வந்து கொண்டிருந்த நேரம் தீடிரென முன்னாலை வந்து  "ஏய் என்னை கட்டிகிறியா" எண்டு கேட்டிவிட்டு போனான் அவளும் பயத்தில யாருக்கும் சொல்லவேயில்லை .இப்ப நேர வீட்டிலேயே வந்து  வீட்டிலேயே கேட்டிட்டு போறனா..??

அமுதவல்லிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்க இன்னமும் வேகமாக வீட்டுக்குள் ஓடிப்போய் நுழைந்து மூச்சுவாங்க நின்றவளை   ஏய் பெட்டைக்கழுதை இப்பிடியா ஓடி வாறது கலியாணமாகி நாளைக்கே அடுத்தவன் வீட்டுக்கு வாழப்போற பெட்டச்சி அடக்க ஒடுக்கமா ஒழுங்க இரு என்று அவள் அம்மா திட்டியதும் எதோ நட்டக்கப்போகிறது என்று அவளுக்கு புரிந்தது நேரே அடுப்படிக்குள் போய் பானைக்குள் இருந்த தண்ணீரை செம்பில் நிரப்பியெடுத்து அவசரமாய் அண்ணாந்து குடிக்கும் போதே பாதி நீர் கடவாயால் கழுத்து வழியாக அவள் சட்டையை நனைத்தபடி கீழிறங்கிக் கொண்டிருக்க குடித்து முடித்தவள் சட்டையை உதறியபடி அம்மா எதுக்கு அவன் இங்கை வந்திட்டு போறான் முடிக்க முதலே கையை ஓங்கிக் கொண்டு  முன்னால் வந்த அம்மா மூடுடி வாயை. கட்டிக்க போறவனை போய் அவன் இவன் எண்டுகிட்டு...

என்னது கட்டிக்க போறவனா யாரை ??

உன்னையத்தான் ..

எனக்கு புடிக்கல நான் படிக்கபோறன்.

நீ பத்தாவது வரை படிச்சதே போதும் அப்பா வரட்டும் மீதியை பேசிக்கலாம் பொத்திக்கிட்டு உள்ளை போய் இரு...

அமுதவல்லிக்கு ஓடி வந்த களைப்பு கோபமாய் மாறி இப்போ அழுகையாக வெடிக்கும் போல இருந்தது அறைக்குள் போய் சாத்திக்கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அப்பாவும் தங்கையும் வந்து சேர்த்து விட்டிருந்தனர்.அம்மாவும் அப்பவும் மாறி மாறி கதைப்பது லேசாய் கேட்டது இடையே அறைக்குள் ஓடி வந்த தங்கை அவளை சுரண்டி அக்கா உனக்கு கல்யாணமாம் என்றுவிட்டு ஓடி விட்டாள்.விவாதம் முடிந்து அப்பா உள்ளே வந்த சதம் கேட்டு கட்டிலில் அமுதவல்லி  எழும்பி உட்கார்ந்து கொள்ள லேசாய் அவள் தலையை தடவியவர் .இந்தா பாரும்மா எனக்கும் பெரிசா பிடிக்கல ஆனா அம்மா சொல்லுறதிலையும் நியாயம் இருக்கு. நான் சாதாரண வாத்தியார் உனக்கு அடுத்ததும் பெண்ணு ஒன்னு வீட்டில இருக்கு. அதவிட அவங்கள் நம்ம ஜாதிக்காரங்க ஊரிலேயே பெரிய பணக்காரங்க வேறை.. ஒரே பையன்  அவனா  வீடு தேடி வந்து கேட்டிட்டு போயிருக்கான் போற இடத்துல நிச்சயமா நீ நல்லயிருப்பாயம்மா.தடவிய அப்பாவின் கைகளை பிடித்த படி இல்லலப்பா எனக்கு படிக்கணும் அவள் குரல் அடைத்தது.எனக்கும் நீ படிக்கணும் எண்டுதான் ஆசை ஆனா வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற மாதிரி உனக்கு அதுவும் பெரிசா வரல்லையே அதைவிட மேல உன்னை படிக்க வைக்கிற வசதி கூட என்கிட்டை இல்லம்மா யோசிச்சு சொல்லு.. அவள் தலையை தான் மார்போடு அணைத்தார்...

அமுதவல்லி அப்பாவின் பேச்சில் கரைத்து போனாள். ராமலிங்கம் வீட்டில் அவன் செல்லப்பிள்ளை ஊதரித்தனமாய் ஊர் சுற்றி திரிந்தவன் கலியாணம் ஆகிட்டால் அடங்கிடுவான் என்பதால் அவனது ஆசைக்கு யாரும் குறுக்கே நிக்கவில்லை.அதைவிட அமுதவல்லியின் தந்தை வசதி இல்லாது விட்டாலும் வாத்தியார் ஊரில் நல்ல பெயர் எடுத்தவர் உள்ளூர் யோசியரும் ஜாதகம் பார்த்து  கோவில் பூசாரியும் பூ போட்டு பார்த்து சரி சொன்னதில்  சீர் வரிசை அதிகம் எதிர்பார்க்காமல் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.நிச்சயதார்த்தத்தின் போதே  "ஏம்மா மருமகளே நீ முதல்லை எனக்கு ஒரு பேரனை மட்டும் பெத்துக்குடுத்துடு அது போதும் எனக்கு அவனுக்கு நான் எங்க குல தெய்வம் முனியாண்டிக்கு மொட்டை போட்டு காது குத்தணும்"என்று அவளின் வருங்கால மாமியார் சொன்னபோது அங்கு நின்ற அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தாலும்  அமுதவல்லிக்கு மட்டும் அடிவயிற்றில் இருந்து உருண்டைகள் உருள்வதுபோலஇருந்தது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சிங்கப்பூரின் இசூன் பகுதியில் நுழைந்த டாக்ஸி ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் முன்னால் நின்றுகொள்ள பணத்தை கொடுத்து விட்டு நான் இறங்கியதும் பின்னால் வந்து டிக்கியில் இருந்த சிறிய சூட்கேசை எடுத்து என் முன்னால் வைத்துவிட்டு டாக்ஸி காரன் விடை பெற்றான்.பாத்துமணிநேர விமானப்பயணம் போய் குளித்து விட்டுமுதல் வேலையாக வீட்டுக்கார  ஓனரம்மாக்கு போன் அடிச்சு நான் வந்திட்டன் எண்டு சொல்லிட்டு  வாடகையை கொண்டு போய் குடுக்க வேணும் என்று நினைத்தபடி வீடிற்குள் நுழைத்ததும் சூட்கேசை திறந்து அதில் இருந்த பைலை  எடுத்து பீரோவில் வைத்து பூட்டி விட்டு வீட்டு யன்னல்கள் எல்லாம் திறந்து விட்டேன்.மூன்று வாரதுக்கு மேலாக வீட்டில் இல்லை குளியலறை குழாய்களில் இருந்து வரும் நாத்தம் வீட்டை லேசாய் நிறைத்திருந்தது.குளித்து முடித்து வீட்டு வாடகையையும் கொண்டு போய் கொடுத்து விட்டு சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு வரும் வழியில்  கொஞ்சம் பியர்களையும் வாங்கிவிட்டு வழக்கம் போல அந்த  மலே டாக்சிகாரனின் இலக்கத்தை அழுத்தினேன்
போனை எடுத்தவன் சார் வந்தாச்சா எது வேணும் தாய்லாந்து. மலேசியா .பிலிப்பின் .ஸ்ரீலங்கா இந்தியா..

ஜப்பான் இல்லையா..??

என்ன சார் எப்ப பாத்தாலும்ஜப்பான் கேக்ககிறிங்க அது ரெம்ப கஷ்டம் சார்.. இந்தியா ஒண்ணு இப்பதான் புதிசு..

இந்தா பார் எல்லாருக்கும் சொல்லுற மாதிரி எனக்கும் இப்பதான் புதிசு எண்டு சொல்லாதை.எனக்கு புதிசெல்லாம் வேண்டாம் .பிறகு நான் பாடமெடுக்கவே விடிஞ்சிடும் அனுபவசாலியா அனுப்பு..

கடவுளே உங்களுக்கு போய்  பொய் சொல்லுவனா...

சரி எதுக்கு கடவுள் அவரை விடு .நோத்தா ?.சவுத்தா ?..

ஒரு நிமிசம் சார் கேட்டு சொல்லுறன் .

அவன் வேறு யாருக்கோ இன்னொரு போனில் பேசிவிட்டு.. சார் சவுத்தாம் சார்

கேரளாவா ..கன்னடாவா ..ஆந்திராவா??

அதெல்லாம் நீங்களே நேரில கேட்டு தெரிஞ்சுக்குங்க ஒரு நைட் தானே??

ம்......  ஆனா அடுத்த தடவையாவது ஜப்பான் றை பண்ணு.....

பேசாமல் நீங்க ஜப்பானிலயே போய் றை பண்ணுங்க இப்போ இந்தியாவை கூட்டிட்டு  அரை மணி தியாலத்தில வாரன்.தொலை பேசி கட்டானது ..

சே...இந்த ஜப்பான் மட்டும் கிடைக்கிதேயில்லை சின்ன வயசில இருந்தே சோனி .ஏசியா ..ஹோண்டா ..டொயோட்டா..கானோன்.. எண்டு பார்த்து பழகிட்டாதாலை ஜப்பான் மேலை அப்பிடி ஒரு ஈர்ப்பு. அவன் சொன்ன மாதிரி ஜப்பானுக்கே போக வேண்டியதுதான் .

இளையராஜாவின் இசை கானங்கள் காசெட்டை  எடுத்து வி .சி.ஆர் . இற்குள் போட்டுவிட்டு ஒரு சிகரட்டை பத்தவைத்து பால்கனியில் நின்று இழுத்து விட்டுக்கொண்டிருந்தபோதே டாக்ஸி காரன் வீட்டு பெல்லை அடித்தான் .டிவி யில் இளயராஜா "நான் தேடும் செவ்வந்திப்பூவிது  ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது"   பாடிக்கொண்டிருந்தார் .அவனிடம் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு அவளை உட்கார் என்றபடி கதவை சாத்தி  திரும்பினேன் சோபாவின் நுனியில்  கைப்பையை இறுக்கி மார்போடு அணைத்தபடி தலையை குனிந்து அந்தரத்தில் அமர்திருந்தவளிடம் சம்பிரதாய ஹாய் சொல்லிவிட்டு அவளை கண்களால் அளந்த படியே  ஆங்கிலத்தில் என்ன குடிக்கிறாய் ..

நீங்க தமிழா ?

"இல்லை இங்க்லீஷ் காரன் தமிழ்ப்பாட்டு கேட்கிறேன்"..சிரித்துவிட்டு  தமிழ்தான் ..கொஞ்சம் பதட்டத்தோடு.. எந்த ஊருங்க
பயப்பிடாதை நான் உன்னோட ஊர் இல்லை சிலோன் . என்ன குடிக்கிறாய்
தயங்கிய படியே ..தண்ணி என்ற படி வலக்கை பெரு விரலால் குடிப்பது போல சைகையிலும் கேட்டாள்.அவள் களைத்துப் போயிருந்தது கண்களிலேயே  தெரிந்தது கொண்டு வந்து கொடுத்த தண்ணீர் டம்ளரை அண்ணாந்து மடக்கு மடக்கென குடிதவள்  வாயை துடைத்தபடி நீட்டிய டம்ளரை வாங்கி படி   "என்ன சரியான டயட்டா இருக்கா" ...?

ஆமாங்க நேத்திக்கு ஒரு அரபிக்காரன் இன்னிக்கு மதியம் வரை குடுத்த காசுக்கு தூங்க விடவேயில்லை.ஒருக்கா குளிச்சிட்டா எல்லாம் சரியாயிடும் பாத் ரூம் எங்கயிருக்கு...
அந்த ரூமுக்குள்ளை போ அதுக்குள்ளையே பாத் ரூம் இருக்கு ஒண்டும் அவசரம் இல்லை குளிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு வெளியே போயிட்டு வாரன் என்ற படி அறை க்குள் போய் துவாயைஎடுத்து அவளிடம் நீட்ட  கைப் பையுடனேயே பாத் ரூமில் நுழைந்து கொண்டாள்.

அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறாளே எப்பிடி இந்த தொழிலுக்கு ..ஏமாந்திருப்பாளோ,?  ஆனா இப்பதான் புதிசு எண்டது உண்மை .நான் இங்கேயே இருந்தால் பயத்தில படுக்க மாட்டாள் கொஞ்சம் வேலையும் செய்வம்.போட்டோ கொப்பி கொஞ்சம் அடிக்கவேண்டியிருந்தது பூட்டியிருந்த பீரோவை திறந்து பைலை எடுத்து அதிலிருந்த சில ஆவணங்களை எடுத்துவிட்டு மீண்டும் அதை பீரோவில் வைத்து பூட்டி வெளியே வந்து கதவையும் பூட்டி விட்டு போட்டோ கொப்பி கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் .
                                    .........................................................
ஒரு மணி நேரம் கழித்து ஆறுதலாக வீடுக்கு வந்து கதவை திறந்தேன் நன்றாக இருட்டி விட்டிருந்தது பாட்டுக்கசெட் முடிந்து திரும்பவும் ரீவைண்ட் ஆகி விட்டிருந்தது.லைட்டை  போட்டு விட்டு அறைக்கதவை மெதுவாக திறந்து பார்தேன் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு வைத்தபடி  முழங்கால்களை மடித்து ஒருக்களித்து ஒரு குழந்தையைப்போல படுத்திருந்தாள்.இன்னும் கொஞ்ச நேரம் படுக்கட்டும் என நினைத்தபடி கொண்டு வந்த போட்டோ கொப்பிகளையும் வேறு ஆவணங்களையும் மேசையில் பரப்பி வைத்து விட்டு பெச்சில் .அழி ரப்பர் .கலர் கலராய் பேனைகளையும் எடுத்துப்போட்டு விட்டு எலோக்ரோனிக் டைப் ரைட்டரை எனக்கு முன்னால் இழுத்தபடி வேலையை  தொடங்கினேன் ..நேரம் போனதே தெரியவில்லை இரண்டு மணித்தியாலங்கள் ஓடி விட்டிருந்தது.காசை குடுத்து கூட்டியந்து தூங்க வைக்கிறமோ ..என்று யோசனை வர  எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு எழும்பும் போதே அவளும் எழும்பி வெளியே வந்தவள் ..ஐயையோ ரெம்ப நேரம் தூங்கிட்டனா மன்னிச்சுக்கோங்க என்றவளிடம் .மன்னிப்பு எல்லாம் கிடையாது தண்டனை உண்டு என்றபடி இன்னொரு பாட்டுக்கசெட்டை வி சி ஆர் ரில் தள்ளிவிட்டு  பிறிச்சை திறந்து பியரை எடுத்தபடி குடிப்பியா..??

விரும்பி குடிச்சதில்லை  கசப்பு ...ஆனால் குடிப்பன். கஸ்டமர் சந்தோசத்துக்காக பழகிட்டன்

சந்தோசம் கஸ்டமருக்கா.. உனக்கா??

எனக்கும்தான்..அந்த போதையிலேயே எல்லாத்தையும் மறந்து நல்லா தூங்கலாம்...

கசப்பு பிடிக்காது போதை பிடிக்கும் அப்பிடித் தானே..?

லேசா வெட்கத்தோடு. ம் .....தலையாட்டினாள்.இப்போ பயம் படபடப்பு இல்லாமல் சாதாரணமாக பேசியது பிடித்திருந்தது.ஒரு நிமிசம் என்றபடி அவசரமாக கீழே இருந்த கடைக்குப்போய் பொருட்களை வாங்கிவந்து கிச்சனில்  பரப்பி விட்டு ஒரு ரசாயன ஆய்வு கூ டத்தில் விஞ்ஞானி பல திரவங்களை குடுவையில் கலப்பதைப்போல.வாங்கி வந்த திரவங்களில் எல்லாத்திலும் கொஞ்சமாய் சில்வர் குடுவையில் ஊற்ரி ஐஸ் கட்டியை ஒரு துணியில் போட்டு அதை மேசையில் ஓங்கி அடித்து உடைத்த துண்டுகளையும் குடுவையுள்  போட்டு குலுக்கி அதை இரண்டு கிண்ணத்தில்  ஊற்றி மேலே லேசாய் நுரையோடு இருந்த இரண்டு கிண்ணங்களையும் தூக்கி வந்து ஒன்றை அவளிடம் நீட்டி விட்டு மற்றதை அவளது கிண்ணத்தோடு முட்டி சியஸ் சொன்னதும் அதுவரை ஒரு மாய வித்தை காரனை பார்ப்பது போல என்னையே  பார்த்துக்கொண்டு நின்றவள்  ஐ....கலர் கலரா இருக்கு என்றபடி கிண்ணத்தை  இரண்டு தடவை மூச்சை நிறுத்தி குடித்து முடித்து  பால் குடித்து முடித்த  பூனையொன்று தன் நாவால் உதடுகளை நக்குவது போல் தன் மேல் உதட்டில் ஒட்டியிருந்த நுரையைதனது நாவால் லாவகமாக நக்கி துடைத்தவள்.. மீண்டும் கிண்ணத்தை நீட்டி நல்லாயிருக்கு இன்னும் கொஞ்சம் யூஸ் குடுங்களேன்..

இது யூஸ் இல்லை  பீனாகொலடா..

என்னங்க எதோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு..

வார்த்தைகளில் கெட்டது நல்லது தீர்மானிக்கிறது யார் வார்த்தைகளை உருவாக்கியது?நாங்கள் தானே பிறகு எதுக்கு கெட்ட வார்த்தைகளை உருவாக்கினோம்..

"ஒன்னும் புரியல எனக்கு யூஸ் வேணும்" குடித்து முடித்த கிண்ணத்தை நீட்டியபடி  ஆமா உங்க பேர் என்ன சொல்லவேயில்லை ..

நீயும் கேட்கல நானும்  கேட்கல அதை தெரிஞ்சு என்ன பண்ணப்போறம்...

கொஞ்சம் யோசித்தவள்  என் பேரு ரோஸி ஊரு சென்னை
என் பேரு ரஜேந்திர சோழன்  என்று சிரித்த படியே அடுத்த கிண்ணத்தை நிரப்பி அவளிடம் நீட்டினேன் . முன்றாவது கிண்ணமும் முடிந்து விட்ட நிலையில் அறைக்குள் புகுந்து ஜன்னல் சீலைகளை இழுத்து மறைக்க அவளும் லேசாய் தள்ளாடியபடி பின்னால் வரவே விளக்கை அணைத்தேன்  "புதிய பூவிது பூத்தது புதிய வண்டு தான் பாத்தது " இளையராஜா சிற்றி வேசன் சோங்  போடத் தொடங்கியிருந்தார் .
                                      ...............................................................
முயங்கி முடித்த மூச்சுக் காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கிக் கொண்டிருக்க போர்வையால் மார்புவரை போர்த்தபடி கட்டிலில்  நிமிர்த்து அமர்தவள் லேசாய் விசும்புவது போலஇருக்க காற் சட்டையை  தேடியெடுத்து மாட்டி க்கொண்டு விளக்கை போட்டுப் பார்த்தேன்.அழத்தொடங்கியிருந்தாள்.
சே எதுக்கு இப்ப அழுகிறாய் ஆதரவாய் அவள் தலையை மார்போடு இழுத்து தடவிக் கொடுக்க.."நான் உங்களுக்கு பொய் சொல்லிட்டன் என் பேரு ரோசியிலை  அமுதவல்லி"

ரோஸி இல்லைன்னு தெரியும்.அமுதவல்லி என்னுதெரியாது..

ரோஸி இல்லேண்டு எப்பிடி தெரியும்..?

உன்னோட ஏஜெண்டு எல்லாருக்குமே வைக்கிற பேர் ரோஸி தான்..

என் ஊர் கூட சென்னை இல்லை..

ம் ...சொல்லு..

நான் பத்தாவது படிக்கும்போதே நம்ம சாதி சனத்தில வசதியான இடத்தில கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க எனக்கு முதலாவது பெண்ணு பிறக்கும் வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது.எங்களோட சாதி சனத்தில முதலாவது பையனா பிறந்தா தான் ஊரிலை ஒரு மரியாதை பையனுக்கு ஊரையே கூட்டி  எங்க குல சாமி கோயில்லை மொட்டை போட்டு காது குதுவங்க.பெண்ணா பிறந்திட்டா கண்டுக்கவே மாட்டங்க.நானும் பிரசவத்துக்கு அம்மா  வீட்டுக்கு போயிருந்தனா பெண்ணு பிறந்திருக்கு எண்டு கேள்விப்பட்டதுமே என்னோட வீட்டுகாரர் வந்து பாக்கவேயில்லை.என்னோட துணிமணி எல்லாம் ஒருதரிட்டை குடுத்தனுப்பி என்னை வீட்டுப்பக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லிட்டாங்க.அப்பாக்கு ஊரில கொஞ்சம் மரியாதை இருந்ததாலை ஊர் பெரியவங்க எல்லாரும் போய்  அடுத்தது பையனா பெதுக்குடுப்பா எண்டு சமாதனம் பேசி  என்னையும் பிள்ளையையும் கொண்டுபோய் விட்டிட்டு வந்தாங்க.பெண்ணுக்கு நானே மகா லட்சுமி  என்னு பெயர் வச்சு நானே கூப்பிட வேண்டிய கொடுமை .அங்கை முன்னைய மாதிரி பெரிசாயாருமே  என்னை கண்டுக்கவேயில்லை  கொடுமையா இருந்திச்சி அப்பதான் எனக்கு ....

 எனும்போதே உடைந்து அழத்தொடங்கியவளின் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்து விக்கலாக வந்து கொண்டிருக்க தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து.. ஒண்டும் கவலைப்படாத ஆறுதலா மீதிய சொல்லு என்று  சமாதனப் படுத்தி விட்டு சிகரெட்டை  பற்ற வைத்து ஜன்னலை  திறந்து புகையை வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் போது சில மடக்கில் தண்ணீரை குடித்து முடித்தவள் பெட் சீட்டை  இழுத்து உடலில் சுத்திய படி குளியலறைக்குப் போய் முக்கை சீறி முகத்தை கழுவி விட்டு வந்து கட்டிலில் ஏறி குந்தியிருந்தபடி விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தாள்.அப்பதான்  எனக்கு இரண்டாவது பிரசவம் ஆச்சு. என்னோட உடம்பு ரெம்ப வீக்கா இருந்ததால பக்கத்து  ஊரில இருந்த கவர்மன்ட்  ஹாஸ்பிட்டல   கொண்டு போய் போடிட்டங்க அடுத்ததும்   பெண்ணாவே பிறந்திடிச்சு.செய்திய கேள்விப் பட்டு யாருமே வந்து பாக்கல.நாலு நாள் கழிச்சு அப்பதான் வந்து வண்டிய பிடிச்சு புருசன் வீட்டுக்கு கூட்டிட்டு போனார்.ஆனா வாசல்ல வண்டிய பாத்ததுமே  என் மாமியார்  எதுக்கு இங்க வந்தீங்க நாங்க தலை முழிகிட்டம் அப்பிடியே போயிடுங்க என்று கத்தினார். சரி என் பெண்ணு மகா லட்சுமியை குடுத்திடுங்க நான் போயிடுறன் எண்டதும் ..நீ பிரசவத்துக்கு போனதுமே அதுக்கு விசக் காச்சல் வந்து செத்துப்போச்சு  புதைச்சிட்டம் எண்டு சொல்லிட்டு உள்ளை போய் கதவை சாத்திட்டாங்க என்று....திரும்ப உடைந்து அழுதவள்   பாதி அழுகை பாதி வார்த்தைகளாக சொல்லி முடித்து  சில நிமிட மௌனத்தை இடைவேளையாக எடுத்துக் கொண்டாள் ...


எனக்கு இன்னொரு ஜுஸ்தாறிங்களா...

அது ஜுஸ் இல்லை பீனா கொலடா..

எதோ ஒண்ணு.. தாங்களேன்..

அவளின் கதையோ அழுகையோ எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை  சண்டையும் பாட்டும் இல்லாத ஒரு  படம் பார்ததை போலஇருந்தது அடுத்த இரண்டு பீனகொலடாவை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே கிச்சனுக்குள் வந்தவள். சாரிங்க என்னோட கதைய சொல்லி உங்களை குழப்பிட்டனா .?

அதெல்லாம் இல்லை இதவிட நிறைய கதை என்னட்டை இருக்கு இந்தா..  என்று கிண்ணத்தை நீட்டி விட்டு எப்பிடி சிங்கப்பூர் வந்தாய்
கிண்ணத்தில் உதட்டை வைத்து ஒரு உறுஞ்சு உறுஞ்சியவள் மேசை மேலே ஏறி அமர்ந்தபடி சிங்கப்பூர் வந்தாதா..அது வந்து ...ம் ..நான் அப்பாவோட வீட்டுக்கு போயிட்டானா திரும்பவும் ஊர் பெருசுகள் எல்லாம் ஒண்டு கூடி  இரண்டு வீட்டையும் எங்க குல தெய்வம்  சாமி கோயில்ல கூப்பிட்டு பேசினாங்க ஆனா புருசன் வீட்டில அறுத்து விடுங்க எண்டு சொல்லிட்டாங்க .அப்பா எனக்காக எவ்வளவோ கெஞ்சி கூத்தாடிப்பார்த்தார். உன் பொண்ணுக்கு சுகம் வேணுமெண்டால் அப்பப்ப அனுப்பிவை இனி சேர்ந்தெல்லாம் வாழ முடியாது எண்டு அப்பாக்கிட்ட என்னோட  மாமியார் சொன்ன வார்த்தை  அன்னிக்கு செத்துப்போயிடலாம் எண்டு தோனிச்சு..
மூதேவி முண்டை ..என்று தொடங்கி சில கெட்ட வார்த்தைகளால் திட்டி  பக்கத்துல இருந்த குப்பைத் தொட்டியில் காறித் துப்பியவள்.  ஊ ர் காரங்க அவங்களுக்கு அடங்கிப்போயிட்டங்க அறுத்து விட சொல்லிட்டாங்க .அப்பா போலிசில கூ ட போய் சொல்லிப் பார்த்தார் இது பெரிய வீட்டு பிரச்னை நீங்களே பேசி தீத்துக்குங்க எண்டு சொல்லி அனுப்பிடங்க .என் மூத்த மகளுக்கு என்ன நடந்தது உண்மையிலேயே காச்சல் வந்தாதா அல்லது கொன்னு போட்டங்களா எதுவுமே தெரியல ஒரு மூண்டு மாசம் அழுதபடியே வீட்டுகுள்ள கிடந்தனா அந்த ஊரிலையே எனக்கு இருக்கப் பிடிக்கல.கொஞ்சம் மாற்றம் வரட்டும் எண்டு அப்பா மதுரைக்கு  சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க அதிகம் படிக்காததாலை வேலையும் எதுவும் கிடைக்கல அங்கை ஒரு மூனு  மாசம் ஓடிட்டுது.

அப்பதான் ஒரு ஏஜெண்டு  சிங்கப்பூரில வீட்டு வேலை இருக்கு அம்பதாயிரம் செலவாகும் ஒரு வருசத்திலேயே அதை சம்பாதிச்சுடலம்  போறியா எண்டு கேட்டாரு. அப்பா ஊரில வீட்டை அடமானம் வச்சு குடுக்கும்போதே பின்னாடி உனக்கு ஒரு தங்கச்சி இருக்கு பாத்து நடந்துக்கோ இனி எல்லாம் உன் கையில தான் இருக்கு எண்டு சொல்லி கொடுத்திட்டார் .அப்பதான் நானும் சம்பாதிச்சு என்னோட ஊரிலையே போய் எல்லாரும் பாக்கிற மாதிரி வாழணும் எண்டு ஒரு வேகத்தோட  ஒரு வயசு குழந்தைய அம்மாக்கிட்ட குடுத்திட்டு இங்கை வந்து சேர்ந்தனா ..என்று அவள் இழுத்ததும் .ஒ கதை இன்னும் முடியலையா.. பொறு என்று விட்டு ஒரு கதிரையை எடுத்து அவளுக்கு முன்னால் போட்டு அவள் கால்களுக்கிடையில் அமர்ந்து கொள்ள கால்களை கதிரையில் தூக்கி வைத்தவள் ..

இங்கைவந்த என்னையும் இன்னொரு கேரளா பெண்ணையும்   ஏஜெண்டு கூட்டிப்போய் ஒரு வீட்டில விட்டிட்டு எங்களோட பாஸ்போட்டை வாங்கிட்டு போயிட்டான்.அங்க அம்மு எண்டு ஒரு பெண்ணு இருந்திச்சு அதுதான் எங்களை கவனிச்சுக்கிட்டு இருந்திச்சு இரண்டு நாளா சாப்பிடுறதும் கதை பேசிறதும் படுக்கிறதும் தான் வேலை எங்களுக்கு என்ன வேலை எண்டு அம்முவை கேட்டபோதுதான் நான் சட்டில இருந்து அடுப்பில விழுந்தது புரிஞ்சுது.ஆரம்பத்தில கொஞ்சம் கடுமையா எதிர்ப்பு காட்டி சாப்பிடாமல் இருந்தும் பார்த்தோம் ஆனால் என்னைப்  போலவே மற்ற கேரளா பெண்ணும் குடும்பத்தால பதிக்கப் பட்ட பெண்ணுதான்.எங்களோட குடும்ப பிரச்னை நாங்க பட்ட கடன் எவ்வளவு எண்டு எல்லா விபரமுமே அம்முவுக்கு அத்துப்படியா தெரிஞ்சிருக்கு.அதெல்லாம் சொல்லி அம்மு நிதானமா பேசினப்போ தான் இந்தியாவில உள்ள ஏஜென்ட் பிளான்பண்ணியே என்னை மாதிரி பெண்ணுங்களை தேடிப்பிடிச்சு அனுப்பிறான் என்று எனக்கு புரிஞ்சுது  .
பாஸ்போர்ட் கையில இல்ல. வெளியே போலிஸ் பிடிச்சா ஜெயில். அடம்பிடிச்சு ஊருக்கு திரும்ப போனாலும் வாங்கின கடனை அடைக்க முடியாமல் குடும்பத்தோடை தற்கொலைதான் செய்ய வேணும். ஆனா எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டா ஒரு வருசத்திலேயே கடனை அடைச்சிடலாம்.இனி எங்களுக்கெண்டு ஒரு வாழ்க்கை இல்லை குடும்பத்துக்காக பிள்ளைக்காக வாழப்போறம் அதை எப்படி வாழ்ந்தால் என்ன  எண்டு அம்மு சொன்னதெல்லாம் சரி எண்டே தோணிச்சுது நாங்களும் ஒத்துக்கொண்டம்.அம்முவே கஸ்டமரோட எப்பிடிஎல்லாம் பழக வேணும் எண்டு சொல்லிக் குடுத்தா.நாங்க சரி சொன்னதுக்கப்புறம் எங்களை வேறை ஒரு வீட்டுக்கு மாத்தினாங்க அங்கே கஸ்டமர் வந்து போவங்க ஒரு மாசத்துக்கு மேல வெளியே அனுப்பவே இல்லை.நான் நல்லபடியா நடந்துக்கிட்டதால வெளியே அனுப்புறாங்க.ஆனா பிரச்னை ஏதும் வந்திட கூடாதுன்னு தமிழ்நாட்டு  கஸ்டமர்கிட்ட அனுப்புறதில்லை விசாரிச்சுத்  தான் அனுப்புவாங்க ஆனா நான் இங்க வந்ததுமே தமிழ்ப்பாட்டு போட்டிருந்துதா நான் அதிர்ச்சியாயிட்டன்.நீங்க சிலோன் எண்டதும் கொஞ்சம் நின்மதி இங்க வந்த மூனு மாசத்தில நான் பாத்த முதல் தமிழ் கஸ்டமர் நீங்கள்தான்.


ஒ அதுதான் உன் கஸ்டமெல்லாம்என்கிட்ட சொன்னியா...??

செல்லமாய் என் தலையை இழுத்து வயிற்றோடு அணைத்தவள்.நீண்ட நாளா யாரிட்டயாவது சொல்லவேணும் போல இருந்த மனப்பாரம். நீங்களும் நல்லவராஇருந்தீங்களா இந்த ஜூசும் நல்லா இருந்திச்சு அதுதான் சொல்லிட்டன்.

ஜுஸ் நல்லா இருந்திருக்கும் ஆனால் என்னை எப்பிடி நல்லவன் எண்டு சொல்லுறாய் ...?

உள்ளை வந்ததுமே உடனையே துணியை கழட்டச் சொல்லாமல் தூங்க சொன்ன போதே ..

அப்ப உன்னை தூங்க சொன்னது விடிய விடிய விழித்திருக்கலாம் என்கிற சுயநலம் தான் என்றபடி அவளை அப்படியே அள்ளிக் கொண்டு அறைக்குள் போய் கொண்டிருக்கும்போது என் கழுத்தை கைகளால் கோர்த்தபடி
அதுசரி நீங்க எதுக்கு சிங்கப்பூர் வந்தீங்க சொல்லவே இல்லையே
இதுக்குத்தான் ...என்ற படி அவளை கட்டிலில் போட்டு விட்டு விளக்கை அணைத்தேன் .
                         .......................................................................

தொலை பேசி சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து அதை எடுத்து காதில் வைத்தேன்    இன்னும் ஒரு மணி நேரத்தில வந்துடுறன் ரெடி பண்ணுங்க போன் கட்டாகி விட்டது.அவளை கட்டிலில் காணவில்லை நேரத்தைப்பார்த்தேன்  பத்துமணியை தாண்டிக்கொண்டிருந்தது எதையாவது எடுத்துக்கொண்டு போயிருப்பாளோ சட்டென்று உறைத்தது.போக முடியாது இரவே கதவை பூட்டி சாவியை மறைத்து வைத்திருந்தேன். காற்ச்சட்டையை தேடினேன் காணவில்லை அவசரமாக பெட் சீட்டை இழுத்து இடுப்பில் சுற்றியபடி எழுந்தபோது அடுப்படிக்குள் இருந்து சத்தம் வந்தது போய் பார்த்ததும் முதல்நாள் இரவு அப்படியே போட்டு விட்டிருந்த பத்திரங்கள் அனைத்த்தும் கழுவி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது நான் போட்டிருந்த துணிகள் தோய்க்கப்பட்டு யன்னலுக்கு வெளியே கொடியில் தொங்கிக்கொண்டிருந்தது .நிலத்தை துடைத்துக்கொண்டிருந்தவள் என்னை கண்டதும்..

எழும்பியாச்சா போய் குளிச்சுட்டு வாங்க டீ செய்யிறன் என்றவளிடம்
 எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை

இதுக்கு எக்ஸ்ராவா எல்லாம் பணம் கேட்க மாட்டன் ...

டாக்ஸி காரன் போன் அடுச்சவன் ரெடியாகு ...

சட்டென்று  முகம் மாறியவள்   என்னும் எவ்வளவு நேரத்தில வருவான் ...?

ஒரு மணி நேரதுக்குள்ளை..

சரி...  பிறிச்சில குடிக்கிறதை தவிர சமையல் சாமான் ஒண்டும் இல்லை சீக்கிரமா குளிச்சுட்டு போய் கறி காய் எதாவது வாங்கிட்டு வாங்க எதாவது சமைச்சு வச்சுட்டு போயிடுறன்..அதெல்லாம் வேண்டாம் நான் குளிச்சுட்டு வாறன் நீ ரெடியாகு வெளியில எதாவது சாப்பிடலாம்.என்றபடி குளியல் அறைக்குள் போகும்போதே "ஒரு தடவையாவது உங்களுக்கு சமைச்சு போடணும். என்னமோ தோணிச்சுது உங்களுக்கு பிடிக்காட்டி வேண்டாம்" .அவள் குரல் தழுதழுத்தது.ஒரு விநாடிநின்று  அவளை உற்று பார்க்க  தலை குனிந்து நின்றாள் முதல் தடவையாக அவள் மீது எனக்கு கொஞ்சம் கரிசனை பிறந்திருந்தது .சரி வாறன் என்றபடி குளித்து முடித்து அவள் தந்த டீ யை அவசரமாக உறுஞ்சி விட்டு கீழே போய் ஏ .ரீ. எம்  மிசினில் எனது மட்டையை விட்டு எவ்வளவு பணம் இருக்கு என்று பார்த்தேன் உடனடி செலவு போக கூட்டிக் கழித்து விட்டு  டாக்ஸி காரனுக்கு போனடித்து அந்த பெண்ணு இன்னும் ஆறு நாள் என் கூடவே இருக்கட்டும் வந்து பணத்தை வாங்கிட்டு போ  என்றதும் ஐயையோ அதெல்லாம் முடியாது பிரச்சனையாயிடும் அவங்கள் சந்தேகப் படுவாங்க சார் மோசமான  ஆக்கள் பிறகு நான் தொழில் பண்ண முடியாது என்று கெஞ்சினான்.

அவனை சமாதனப் படுத்தி  அவளை  எனக்கு இன்னுமொரு ஆறு நாளைக்கு பிடிச்சிருக்கு அவ்வளவுதான். அதுக்கு மேல என்னட்டை பணம் இல்லை அவங்களுக்கு பணம் தானே வேணும் வந்து வந்து வாங்கிட்டுப் போ என்றேன்.டாக்ஸி காரன் இறங்கி வந்தான் டாக்ஸி  யிலிருந்து.இப்போ அவனே திட்டத்தை போட்டான்.இப்ப கூட்டிட்டு போயிட்டு இன்னொரு  பார்டிக்கு ஆறு நாளைக்கு வேணும் எண்டு சொல்லி சாயந்தரம் திரும்ப கொண்டாந்து விடுறேன் ஒருத்தருக்கும் பிரச்னை இல்லை என்றான்.அவன் சொன்னதும் சரியாகப் பட்டது.மேலே வந்த என்னிடம் என்னங்க வெறும் கையோட வாரிங்க எதுவுமே வாங்கலையா..இல்லை நீ இன்னிக்கு சமைக்க வேண்டாம் நாளைக்கு விரும்பின மாதிரி சமைக்கலாம் இப்ப புறப்படு என்று சொன்ன என்னை புரியாமல் பார்த்தவளிடம் டாக்ஸி காரனிட்டை பேசிட்டன் இன்னும் ஆறு நாள் என் கூடத்தான்.ஆனா இப்ப போயிட்டு சாயந்தரம் வரணும்.சொல்லி முடித்ததும் அவளிடம் முதலில் சந்தேகம். விபரமாய் சொன்னதும்  ஆச்சரியம். கட்டியணைத்து ஒரு இச் வைத்ததும் மகிழ்ச்சி.புறப்பட்டு போய் விட்டாள் .
                                   ...................................................

அன்று மாலை எதிபார்த்து கீழேயே நின்றிருக்க மானின் துள்ளலோடு டாக்ஸியை விட்டிறன்கினாள்.பணத்தை எண்ணி டாக்ஸிகாரனின் கையில் வைத்தேன்.சார் பிரச்னை ஒண்ணும் பண்ணிட மாட்டின்களே.. குழைந்தான். என்னை எவ்வளவு காலமா உனக்கு தெரியும் இதுவரை எதாவது பிரச்னை வந்திருக்கா..?

இல்லை சார் ஆனால் நீங்களும் முதல் தடவையா ஒரு வாரத்துக்குகேக்கிறீங்க .. தலையை சொறிந்தான்
சட்டப்படி செய்கிற எல்லா தொழிலையும் தான் பொய்யும் பித்தலாட்டமும் நிறைய இருக்கும்.இது மாதிரி நாங்கள் செய்கிற தொழில் எல்லாத்துக்குமே  நம்பிக்கைதான் முதல்ல முக்கியம் ..அது எப்ப போகுதோ அங்கை உயிரும் போயிடும்.ஒண்டு எடுக்கவேணும் அல்லது குடுக்கவேணும் இது எல்லாருக்குமே தெரியும்  ஒண்டும் பிரச்னை இல்லை நம்பலாம் போ...  சரி சார் பொண்ணு கிட்ட  போன் குடுத்து அனுப்பியிருக்கிறாங்க காத்தால ஒருக்கா ராத்திரில ஒருக்கா மறக்காம அவ ஏஜெண்டுக்கு போன் பண்ணிட சொல்லுங்க  ஒரு பாதுகாப்புக்கு அவ்வளவு தான் இல்லாட்டி அவங்களா போன் பண்ணினா உங்களுக்கு தொந்தரவு.. டாக்ஸி காரன் கிளம்பும் போது  ஆமா அவங்களிட்டை வேற பார்டி எண்டு தானே சொல்லியிருக்கிறாய்  சொல்ல மறந்திட்டன் சீனா காரன் எண்டு சொல்லியிருக்கிறன்  அவ போன் றின்ங் ஆனா நீங்க எடுத்திடாதீங்க சார் ... போய் விட்டான்.
பாவிப் பயலே ..ஆபிரிக்கா காரன் எண்டு சொல்லியிருந்தாலும் பெருமையா இருந்திருக்கும் இப்பிடி சீனாக்காரன் எண்டு சொல்லி சிறுமைப் படுத்திட்டானே என்று எரிச்சலாய் இருந்தது.ஆனாலும் அடுத்த ஆறு நாட்கள் எல்லாம் மறந்து சினிமா கடைகள் பார்க் என்று  சிங்கப்பூர் முழுதும் சுற்றினோம்.விதவிதமாய் சமையல் செய்தாள். அவளுக்காக சில துணிகள் எடுத்துக் கொடுத்தேன். .ஜீன்ஸ் ரீ சேட்டில் அழகாயிருந்தாள்.ஆறாவது பொழுதாக  சூரியனும் சுருங்கி விரிந்திருந்தன் என்னைப்போலவே.அன்று அவள் போக வேண்டிய நாள் இந்த ஆறு நாளில் நிறையவே பேசியிருந்தோம்.அவள் அழுகை, சிரிப்பு, கோபம் என்று அனைத்தையும் கொட்டியி ருந்தாள்.அதைவிட பீனா கொலடா காக்ரெயிலை  சுவையாக கலக்க கற்றுக்கொண்டிருந்தாள்.

எல்லாம் தயார் செய்து விட்டு டாக்ஸி காரனுக்காக காத்திருந்த அந்த இறுக்கமான பொழுதில் இரண்டு பீனா கொலடாவை தயாரித்து இரண்டு கிண்ணத்தில் கொண்டு வந்தவள் ஒன்றை என்னிடம் நீட்டி கடைசி சியர்ஸ் என்றவள்  உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா ....
என்ன இழுவை நீளமா இருக்கு. ம் ..கேளு
நீங்க எதுக்கு என்னைய மாதிரி பெண்ணுகளோட சகவாசம்.... ஒரு நல்லா பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமே
நான் நல்லவனா ,?

ம் ...ரெம்பவே ..

உன்னோட ஏஜெண்டு ?

நல்லவந்தான் .....

உனக்கு எல்லாம் சொல்லி தந்த அம்மு ?

அவளும்தான்...

உன்ன வைச்சு சம்பாதிக்கிறவனும் நல்லவன் உன்கிட்டை சுகம் அனுபவிக்கிறவனும் நல்லவன் .அப்போ நீ மட்டும் உன்னை எதுக்கு கெட்டவளா நினைக்கிறாய்..

நான் செய்யறது எனக்கு மனச்சாட்சி உறுத் துதே.அது என்னை கெட்டவள் எண்டு சொல்லுது..

நீ யாருக்காவது நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறியா..??

ம் ......எனக்கு தெரிஞ்சு இல்லை..

அப்போ நீ நல்லவள் தான்.இந்த உலகத்திலேயே நம்பிக்கை துரோகம் ஒண்டு மட்டும் தான்  கெட்டது மற்றபடி கொலை செய்தவன்.கொள்ளை அடிக்கிறவன்  கூட  நல்லவந்தான்.நீ முதல்ல உன்னோட மனச்சாட்சியை கொன்னுட்டு உனக்கு சரி எண்டு பட்டதை செய்திடு .காலமும்  நீ செய்தவைகளால் உனக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவைதான் நீ செய்தவை சரியா தவறா எண்டு தீர்மானிக்கும்...என்று குட்டி பிரசங்கத்தை முடித்தேன் .
என்னங்க எதோ சாமியார் மாதிரியே பேசுறீங்களே
அதலைதான் உன்னை மாதிரி அழகான பெண்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்
லேசாய் வெட்கப் பட்டு சிரித்தவள்  தனது பையிலிருந்து ஒரு சிறிய பார்சலை எடுத்து நீட்டி  இது உங்களுக்கு.வாங்கி பிரித்துப் பார்த்தேன்  எனக்கு பிடிக்காத பச்சை நிறத்தில் ஒரு ரீ சேட் .

இது எப்ப வாங்கினாய் ?

நீங்க எனக்கு ஜீன்ஸ் வாங்கும் போதே உங்களுக்கு தெரியாமல் வாங்கிட்டன்.பிடிச்சிருக்கா..?

ம் ..பிடிச்சிருக்கு என்றபடி அதை போட்டுக் கொள்ள டாக்ஸி வரவும் சரியாக இருந்தது.அவளிடம் கொடுக்க நினைத்து ஐம்பது டாலரை கையில் எடுத்ததுமே என்ன எனக்கு டிப்ஸ்சா என்கிற அவளது கடும் தொனியிலான கேள்வியால் கொஞ்சம் தடுமாறி.. ச்சே ..இந்த ஆம்பிள புத்தியே இப்பிடித்தான் சொதப்பிடும் என்று நினைத்தபடி பணத்தை சட்டென்று சட்டைப்பையில் வைத்து விட்டு என்ன குடுக்கலாம் யோசித்தேன் சட்டென்று பொறி தட்டியது காக்டெயில் கலக்கும் சில்வர் கிண்ணத்தை எடுத்து வந்து இந்தா உனக்குப் பிடித்த பீனா கொலடா செய்ய என்னோட ஞாபகமா...... அவள் முன்னால் நீட்ட அதை வாங்கி விட்டு என் கழுத்தை கையால் வளைத்து கன்னத்தில் அழுத்தமாய் ஒரு ப்... ச்  .....

நிச்சயமாய் அது சம்பிரதாய முத்தமாக இருக்கவில்லை ஒரு ஆத்மார்த்த அன்பு இருந்தது.ஏதோ என்னால உனக்கு செய்ய முடிஞ்ச உதவி இவ்வளவுதான்  இந்த ஆறு நாள் நின்மதியா சந்தோசமா இருந்தியா என்றதும் தலையை குனிந்து "கல்யாணமாகி மூண்டு வருசம் என் புருசனோட இருந்ததை விட இந்த ஆறு நாள் ஆயுள் முழுதும் போதும் நன்றி"  என்றவள்  டாக்ஸியில் கையசைத்து விட்டு சென்று விட்டாள்.நானும் சில நாளில் வேறு நாடுகளிற்கு போய்விட்டு சில மாதங்கள் கழித்து சிங்கப்பூர் போய் டாக்ஸி காரனிடம் விசாரித்தேன் அவளை கொங்கொங்  அனுப்பிவிட்டார்கள் இன்னொண்டு சவுத் இந்தியன் புதுசு வேணுமா என்றன்.சாமி இந்தியாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.ஆனால் நான் ஜப்பான் கேட்பதை நிறுத்தவில்லை அவனும் கடைசிவரை கொடுக்கவேயில்லை .
                     00000000000000000000000000000000000000000000000

கடந்த வருடம் நானும் மனைவியும் தமிழ்நாடு முழுக்க ஒரு சுற்றுப்பயணம் போவதாக முடிவு செய்திருந்தோம் ட்ராவல் ஏஜென்சி ஒரு வாரத்துக்கான பயண திட்டத்தை தந்தான்.அதிலிருந்த இடங்கள், கோவில்கள், ஊர்கள்  என பாத்துக்கொண்டு வந்தபோது ஒரு ஊ ரின் பெயரைப்பார்ததும் சட்டென்று அமுதவல்லி நினைவுக்கு வந்தாள்.பல வருடங்களுக்கு முந்திய நினைவுகளை என் மூளையின் நியாபக மடிப்புகளில் இருந்து வெளியே எடுக்க முயற்சித்தேன் அதில் பலனும் கிடைத்தது.அவளின் ஊருக்குள் எங்கள் வண்டி நுழைத்ததும் டிரைவரிடம் முனியாண்டி கோவிலை விசாரிக்கச்சொன்னேன்.பிரதான வீதியில் இருந்து  புழுதி படர்ந்த மண் பாதையில் வயலும் சிறிய பற்றை காடுகளையும் தாண்டிப்போய் முனியாண்டி கோவிலுக்கு முன்னால் வண்டி நின்றது.பரந்து விரிந்த பெரிய ஆல மரம் ஒரு மண்டபத்தில் சிறிது பெரிதாய் சிலைகள் அங்காங்கு நடப்பட்டிருந்த சூலமும் வேல்களும் லேசாய் ஒரு வித அச்ச உணர்வை தந்தது வண்டியில் இருந்து இறங்கிய மனைவி என்னங்க இப்பிடி ஒரு கோயிலுக்கு கூ ட்டியந்திருகிறீன்கள்
இது சக்தி வாய்ந்த கடவுளம் போய் கும்பிடு..

யார் சொன்னது ?

ஒரு பேஸ்புக் பிரெண்ட் சொன்னான்..

பேஸ்புக் பிரெண்ட் சொன்னதை எல்லாம் நம்பி வாறதா லூசா.உங்களுக்கு...

பேஸ்புக் பிரெண்ட் எண்டால் அவ்வளவு கேவலமா ..

இல்லை கோயில் சின்னதா இருக்கே.,??

கோயில் சின்னதா இருந்தா சாமியில சக்தி இருக்காதா??

என் கையில் இருந்த கற்பூரத்தை வெடுக்கென்று பிடிங்கியவள் கோயிலுக்குள் போய் கற்பூரத்தை கொழுத்தி கும்பிடும்போதே நான் கோவிலை நோட்டம் விட்டேன் அமுதவல்லி சொன்ன அடையாளங்கள் உபயகரரின் பெயர்கள் சரியாகவே இருந்தது இதுதான் அவளது குலதெய்வகோவில் என்று உறுதியானது.மனைவி கும்பிட்டு முடித்ததும் புறப்பட்டோம் பிரதான வீதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி போன் றீ சார்ச் பண்ணிட்டு வாறதா சொல்லிடு போய் அங்கிருந்த கடையில் நின்றிருந்த பெண்ணிடம் போன் இலக்கத்தை சொல்லி ஏர் செல் என்று ஐநூறு ரூபாயை நீட்டி விட்டு..இந்தாம்மா இங்கை அமுத வல்லி தெரியுமா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி சிங்கப்பூரில வேலை பார்த்தவங்க தெரியுமா என்றதும்.பதினெட்டு  வருசத்துக்கு முன்னாடியா அப்பஎனக்கு தெரியாதுங்க இது நான் வாழ்க்கைப்பட்ட ஊரு அந்த பெரியவரை கேளுங்க என்று மரத்தடியில் குந்தியிருந்தவரை காட்டினாள்.


அவரிடம் போய் அதே அமுதவல்லி கேள்வியை கேட்டதும் வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை பக்கத்திலிருந்த செடியின் மீது பொழிந்து விட்டு நான் கேட்டதற்கு பதில் தராமல் தம்பி எந்த ஊரு எங்கையிருந்து வாறிங்க..எதிர் கேள்வியை போட்டார்.ஐயா நான் சிங்கப்பூரில அமுதவல்லியோடை  வேலை பார்த்திருக்கிறன்.இப்ப இந்த பக்கமா வந்தனா சும்மா பாத்திட்டு போகலாம் எண்டு விசாரிச்சன் அவ்வளவுதான் என்றதும் அமுதவல்லியா.... என்று தாடையை தடவியவர் மேலதிகமா எதாவது க்குளு  கிடைக்குமா என்னை பார்த்தார்.அவ அப்பா வாத்தியார் பெரிய வீட்டில சம்பந்தமாகி பிரிஞ்சிட்டங்க இரண்டு பெண்ணு அதில ஒண்டு செத்துப்போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிழவர் கண்ணில் மின்னல் .அட நம்ம அமுதவல்லி வெளி நாட்டில வேலை செஞ்ச பெண்ணு அதோட மூத்த பெண்ணு செத்துப்போகல அவங்க மாமியார் தான் கோவத்துல குழந்தைய யாருகிட்டயோ குடுத்திருங்க அமுதவல்லி எப்பிடியோ அதை தேடிப்பிடிசுட்டுது இப்ப இரண்டு பெண்ணுங்களும் மெட்ராசில படிக்குது.

அமுதவல்லி இப்போ பெரிய ஏஜென்ட்டு எங்க ஊருல மட்டுமில்ல பக்கத்துக்கு ஊரு பெண்ணுகளை எல்லாம் வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்புது அடிக்கடி அதுவும் வெளி நாடெல்லாம் போய் வருது நம்ம சாதிக்கார பெண்ணு எண்டு சொல்லவே பெருமையா இருக்கு  என்று  இன்னொரு தடவை செடி மீது எச்சிலை பொழிந்தவரிடம்  வீடு எங்கை எண்டு சொல்லவே இல்லையே என்றதும்  இப்பிடியே நேரா போங்க இடப்பக்கம் பச்சை கலரில ஒரு மாடி வீடு வரும் அதோட பேர் கூட வாயில நுழையாத வெளிநாட்டுப் பேர் வைச்சிருக்கு அதுதான் வீடு .அவருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்படும்போது தம்பி உங்க பேரை சொல்லவே இல்லையே .என் பேரு ராஜேந்திர சோழன் .அவர் முகத்தில் திருப்தியில்லை மீண்டும் உங்க முழுப்பேரு என்னதம்பி.

அவர் என்பெயரில் என்னத்தை தேடுகிறார் என்று புரிந்தது  ஆனால் புரியாத மாதிரியே முளுப்பெயரா அப்பிடின்னா என்றதும் உங்க அப்பா பெயர் என்னதம்பி என்றார் .போன் சார்ச் ஆகி எஸ். எம் .எஸ் வந்தது அப்பா பெயர் ராஜ ராஜ சோழன் என்றுவிட்டு வண்டியில் ஏறி ரைவரிடம் கொஞ்சம் மெதுவா போப்பா என்றுவிட்டு இடப்பக்கம் இருந்த வீடுகளை கவனித்துக் கொண்டேயிருந்தேன் பச்சைக் கலர் மாடி வீடு வந்தது முன்னால் ஒரு டொயோட்டா வண்டி. மாடிச்சுவரில் pinacolada என்று எழுதியிருந்ததை பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது.வீட்டுக்கு இப்பிடி பெயரை யாராவது வைப்பாங்களா  சில நேரம் அவள் வாழ்க்கையில் அதுவே ஒரு மற்றதை குடுத்திருக்கலாம் அல்லது என் நினைவுகள் இன்னமும் இருக்கலாம் என்னுடைய பெயர் தெரியாததால் நான் கற்றுக் கொடுத்த pinacolada வின் பெயரை வைத்திருக்கலாம்  என்று நினைத்தாலும்  அவள் வசதியாக வாழ்வது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆனால்  பல பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புறதா அந்த கிழவர் சொன்னாரே அமுதவல்லியே அந்த ஏஜென்டா மாறியிருப்பாளா..? இருக்காது எவ்வளவு சிரமங்களை அனுபவித்தவள் அப்படி செய்ய மாட்டாள்.அப்போ எப்பிடி இவ்வளவு வசதி வாய்ப்புவந்தது..? இப்படி சந்தேகத்தையும் சமாதனத்தையும் மனது சொல்லிக்கொண்டிருந்தது.வண்டி ஊர் எல்லையை தாண்டிக்கொண்டிருக்க  உடம்பு சூடாவது போல இருந்ததால் ஏ சி யை கொஞ்சம் கூட்டி விட்டு அப்படியே சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.
                        .............................................................................

என்னப்பா நித்திரை இன்னமும் முறியேல்லையோ துணியளை கொண்டு போய் போட்டிட்டு கடைக்குப்  போய் பூனைக்கு சாப்பாடும் வங்கிக் கொண்டு வாங்கோ.. சத்தத்தை கேட்டு சோபாவிலில் சாய்ந்திருந்த நான் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன் ரீ  வி யில் செய்தி சொல்லிக்கொண்டிருந்த பிரெஞ்சு பெண் திடீரென என்னைப் பார்த்து நீ முதல்ல உன்னோட மனச்சாட்சியை கொன்னுட்டு உனக்கு சரி எண்டு பட்டதை செய்திடு .காலமும்  நீ செய்தவைகளால் உனக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவைதான் நீ செய்தவை சரியா தவறா எண்டு தீர்மானிக்கும்...என்று தமிழில் சொல்வது போல் இருக்க  கண்களை கசக்கிவிட்டு ரீ வி யை பார்த்தேன்.லெபனானில் கட்டிடங்களில் வீழ்த்து வெடித்த குண்டுகளின் கரும் புகை நடுவே வெள்ளையுடை அணிந்த குழந்தைகள் சிவப்பாய் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. கருப்பு துணியால் தன்னை முழுவதுமாக மறைத்த ஒருவன் ஆரஞ்சு துணியோடு முழங்காலில் அமர்திருந்த அமெரிக்க படப்பிப்டிப்பாளனின் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தான்.செய்தியில் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தது. பச்சை நிற ரீ சேட்டை இந்த வருடம் எறிந்து விடுவதென முடிவெடுத்தேன் ..

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்

11:51 AM, Posted by sathiri, No Comment

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்
சாத்திரி (ஒரு பேப்பர்)
 April 8, 2012
பிரான்சில் தேர்தல் இந்த மே மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் François hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண்டிருந்தவர் திடீரென தேர்தல் களத்தில் குதித்தார்.தேர்தலில் குதித்த எல்லாக்கட்சிகளுமே முன்வைத்த முக்கியமான விடையங்கள் பொருளாதார சரிவு. வேலையில்லா திண்டாட்டம். வெளிநாட்டவர்களின் வருகை எனபதே பேசு பொருளாகியிருக்கின்றது. அதிதீவிர வலது சாரிக்கட்சியோ (F.N) வழைமை போல வெளிநாட்டவர் வருகையை தடுக்கவேண்டும் என்றும் பிரான்ஸ் ஜரோப்பிய ஒன்றித்திலிருந்து வெளியேறவேண்டும் என்பதே அதன் தலைவி Marine lepen அவர்களின் முக்கிய பிரச்சாரம்.நான் ஆட்சிக்கு வந்தால் முதலாவது வேலையாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்சை நீக்கி பொருளாதார கொள்கைளில் மாற்றம் கொண்டு வருவேன். அதோடு வெளிநாட்டவர் வருகை அதோடு ஆசிய ஆபிரிக்க அகதிகளின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்று அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவிட்படி சார்க்கோசி களத்தில் குதித்ததும் மற்றைய கட்சிகள் வாயடைக்க கருத்துக்கணிப்பில் சார்க்கோசியின் புள்ளிகள் மளமளவென மேலேறி சோசலிச கட்சி வேட்பாளரை தொட்டு நின்றது.இப்படி தேர்தல் களம் சூடு பிடித்துக்கொண்டிருக்கும் பேது ஒரு துப்பாக்கிச்சூடு அத்தனை யையும் புரட்டிப்போட்டது.

11 ந்திகதி மார்ச் மாதம்பிரான்சின் துலூஸ் நகரப் பகுதியில் வசிக்கும் ஒரு இராணுவவீரர் தன்னுடைய ஸ்கூட்டர் விற்பனைக்குள்ளதாக இணையத்தில் ஒரு விளம்பரத்தை போடுகிறார். விளம்பரத்தை போட்டவர் ஸ்கூட்டர் பற்றிய விபரத்தை மட்டும் போட்டிருக்கலாம். ஆனால் அவரிற்கு வேண்டாத வேலை தான் ஒரு இராணுவ வீரன் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கிறார். இங்குதான் வினையே ஆரம்பமானது. அவரது ஸ்கூட்டரை வாங்க விரும்புவதாகவும் அவர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அன்று மாலை நேரம் அந்த நகரத்தின் ஒரு பொது வாகனத் தரிப்பிடத்திற்கு வருமாறும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரிற்கு வந்திருந்தது. ஸ்கூட்டர் விற்ற பணத்தை காசாக வாங்கலாமா? காசோலையாக வாங்கலாமா ? என்று நினைத்தபடி வாகனத்தரிப்பிடத்தில் போய் காத்திருந்தவரை நோக்கி இன்னொரு ஸ்கூட்டரில் இருவர் வருகிறார்கள். வந்தவர்களில் ஒருவன் அவர் அருகில் வந்ததும் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரது நெற்றியில் பொட்டென்று போட்டவன் .அவரது ஸ்கூட்டரை எடுத்தக்கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். அப்பொழுதான் சனிபகவான் ஏழாம் வீட்டிலிருந்து சார்கோசியை பார்த்து புன்னகைக்கிறார்.15.03.12 அன்று அதே நகரத்தில் இன்னொரு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இருவர் இயந்திர தப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள். 

 இறந்தவர்கள் மூன்று பிரெஞ்சு இராணுவத்தினர். ஆனாலும் வேற்று இனத்தவர்கள். இப்பொழுது இரண்டாவது தடைவையாக சனிபகவான் சார்கோசியை பார்த்து சிரிக்கிறார். 20.03.12 அதே நகரத்தின் இன்னொரு பகுதியில் யூத இனத்தவர்களின் மத பாடசாலையின் முன்னால் ஒரு ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுடுகிறார்கள் மூன்று யூத குழந்தைகள் சுருண்டு விழுகிறார்கள்.இப்பொழுது சனிபகவான் சார்கோசியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதுவரை உள்நாட்டு பிரச்சனையாக இருந்த விடயம் சர்வதேச பிரச்சனையாகின்றது.இஸ்ரேலிய பிரதமர் கண்டிக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம் தங்கள் கமராவை பிரான்ஸ் நோக்கி திருப்புகின்றனர்.பரபரப்பாக நடந்து கொண்டிருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் இரத்துச் செய்யப்படுகின்றது. பிரான்சில் சார்க்கோசியின் நிருவாகத்தில் பொதுமக்களிற்கு மட்டுமல்ல குழந்தைகளிற்கும் பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை சோசலிச கட்சி பிரமுகர் வீசுகிறார். அமைச்சரவை கூடுகின்றது . உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றார்கள். காவல்த்துறை கொலையாளியை கண்டு பிடிக்க தனிப்படைகளை அமைக்கின்றது. அப்பொழுதான் கொலையாளி பற்றிய முதலாவது ஆதாரம் சிக்குகின்றது. முதலாவதாக சுட்டுக்கொல்லப் பட்டவனின் ஸ்கூட்டர் இலக்கத்தை எடுத்த காவல்துறை அதில் பொருத்தப் பட்டிருக்கும் எலெக்றோனிக் தகட்டினை GPS முறைமூலம் தேடிய பொழுது அது காட்டிய புள்ளியில் போய் பார்க்கின்றார்கள். அது ஒரு வாகனத் திருத்துமிடம் ஸ்கூட்டரின் எலெக்றோனிக் தகடு தனியாக கழற்றிப் போடப்பட்டிருந்தது.அடுத்ததான கொலையாளியின் தொ.பே இலக்கத்தை கண்டு பிடித்த காவல்துறையினரின் இன்னொரு பிரிவினர் அதனை ஒட்டுக்கேட்கத் தொடங்கியிருந்தனர்.கொலையாளி அடையாளம் காணப்படுகிறான் முகமட்மேரா வயது 23 அல்ஜீரிய இனத்தை சேர்ந்தவன். அவனது விலாசத்தை அறிந்து கொண்ட கவல்துறையினர் அதன் அமைவிடம் பற்றியும் அவனது குடும்பம் பற்றிய விபரங்களை உடனடியாக சேகரித்து முடித்தனர்.

21.03 அதிகாலை 03.10 மணி
கொலையாளி தனியாக வசித்து வந்த வீடு காவல்த்துறையால் சுற்றிவளைக்கப்படுகின்றது. ஆட்களின் நடமாட்டத்தை அறிந்த கொலையாளி யன்னலை திறந்து பார்த்து காவல்த்துறை சுற்றி வளைத்ததை அறிந்தது தானியங்கி துப்பாக்கியால் சுடுகிறான். இரண்டு காவல்த்துறையினர் காயமடைகின்றனர்.
அதிகாலை 03.30
காவல்த்துறையினர் கொலையாளியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதெனவும் அதே நேரம் அந்த குடியிருப்பில் உள்ளவர்களை பத்திரமாக வெளியேற்றுவதெனவும் முடிவு செய்து பேச்சு நடத்துவதற்காக ஒரு negotiator வவைழைக்கப்பட்டதோடு குடியிருப்பிலிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
காலை 5.00 மணி
பேச்சு வார்ததை நடத்துவதற்கு இலகுவாக கொலையாளிக்கு ஒரு நடைபேசி(வோக்கி ரோக்கி) கொடுப்பதெனவும் அதற்கு பதிலாக அவன் தன்னிடமிருக்கும் ஆயுதங்களில் ஒன்றை வெளியில் எறியவேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகின்றது அதற்கு கொலையாளியும் இணங்குகிறான். அவர்களது பேச்சு வார்தையை பிரான்ஸ் அதிபர் சார்க்கோசியிலிருந்து முக்கிய அதிகாரிகள் புலனாய்வு துறையினர் அனைவருமே கேட்பதற்கு வசதி செய்யப் படுகின்றது.
காலை 5.30 மணி
கொலையாளியின் குடும்பத்தில் தாயார் அவரது சகோதரி இரண்டு மூத்த சகோதரர்கள் அனைவரும் வெவ்வேறு வீட்டில் கைது செய்யப்படுகின்றனர்.
காலை 7.20 மணி
கொலையாளிக்கு வோக்கி ரோக்கியொன்று யன்னலால் எறியப்படுகின்றது அவனும் colt 45 ரக துப்பாக்கியை ஜன்னலால் எறிகின்றான். பேச்சு வார்தை தொடங்குகின்றது அவனும் தன்னை அல்லாவின் இராணுவம் என்று அறிவித்தபடி பேசத் தொடங்குகிறான்.ஆப்கானிலும் ஈராக்கிலும் பொது மக்களை கொன்றதற்காக பிரெஞ்சு இராணுவத்தினரை கொன்றதாகவும் பாலஸ்தீனத்தில் குழந்தைகளை இஸ்வேல் கொலை செய்ததற்காக அதன் வலி யூதர்களிற்கும் தெரியவேண்டும் என்பதற்காக யூதக் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்தவன் நிறையவே பேசினான்.
காலை 9.15 மணி
அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் மேலும் பல ஆயுதங்களை காவல்துறையினரால் கைப்பற்றப்படுகின்றது. கொலையாளியிள் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் இருக்கலாமென நினைத்து அந்தப் பகுதியின் மின்சாரம் தண்ணீர்.மற்றும் காஸ் இணைப்புக்கள் துண்டிக்கப்படுகின்றது.
காலை 11.00
பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒரு கி.மீற்றர் தூரத்திற்கு அப்பால் நகர்த்தப்பட்டு தடை போடப்படுகின்றது பத்திரிகையாளர்களிற்கு செய்தி கொடுப்பதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார்.இனி அவர் சொல்வதுதான் செய்தி.
மதியம் 12.05
கொலையாளி மீண்டும் தொடர்பு கொள்கிறான் நாட்டின் அதிபரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் உசாராகின்றனர். தொடர்பு கொண்டவன் தனக்கு பசிக்கின்றது ஒரு KEBAB Sandwuch நல்ல உறைப்பு சோஸ் Harisa போட்டு உனனே வேணும் என்கிறான் .அதனை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒருத்தரையொருத்தர் பாரக்கிறார்கள். ஒரு போலிஸ் அதிகாரி சைரனை சுழல விட்டபடி KEBAB வாங்க விரைகிறார்.
பி.பகல் 13.20
கொலையாளியை உயிருடன் பிடிப்பதே எமது நோக்கம் என சார்க்கோசி அறிவிக்கிறார். கொலையாளியும் மாலை சரணடைய இருப்பதாக தகவலை வெளியிடுகிறார்.இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது தீவிர வலது சாரிக்கட்சி தலைவி மரின்லூப்பன் பிரான்சில் வெளிநாட்டவர்களின் தொல்ல அதிகரித்துவிட்டது சார்க்கோசி என்ன செய்கிறார் கர்சிக்கிறார். கொலையாளியை உடைனேயே கொன்றுவிட்டால் பிரான்சில் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்கை இழக்கவேண்டிவரும். அதே நேரம் அவனை பிடித்து அரசாங்க செலவில் வைத்து பராமரிக்கவேண்டுமா என யூதர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுக்காரர்களும் கேள்வி எழுப்பினார்கள். கொலையாளி தனியாகத்தானே இருக்கிறான் ஏன் அதிரடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென ஊடகங்களும் குடையத்தொடங்கியிருந்தன.தேர்தல் நெடுங்கும் நேரத்திலையா இப்பிடி ஒருத்தன் பிரச்சனை செய்யவேண்டும் என நினைத்த சார்க்கோசி அவர்கள் உள்துறை அமைச்சரையே சம்பவ இடத்திற்கு அனுப்பகிறார். மறுநாள் காலை11.30 கொலையாளி துப்பாக்கியால் சுட்டபடி யன்னலால் பாய்ந்தபொழுது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றது.

வலையமைப்பில் பிரான்சில் இயங்கிய பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை வைத்துப் பார்க்கும் போது கொலையாளி உணவு கேட்ட தருணத்திலேயே பிரான்சின் விசேட கொமாண்டோ படையணியினர் உள்நுளைந்து கொலையாளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணைகளை நடத்தி அவனிடமிருந்து சகல விபரங்களையும் கறந்த பின்னர் அவனை சுட்டுக்கொன்றுவிட்டு . பின்னர் சாதாரண காவல்த்துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவது போல் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு கொலையாளி கொல்லப்பட்டான் என அறிவித்திருக்கலாம். ஏனெனில் இது போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் தீவிரவாதிகள் மீது விசேட கொமாண்டோ படையினரின் நடவாக்கைகள் ஒன்றும் புதியது அல்ல. ஆனால் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் சாரக்ககோசிக்கு பொங்கு சனியா மங்கு சனியா என்று பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டும்

அகதிக்கொடி (சிறுகதை)

10:09 AM, Posted by sathiri, No Comment

 அகதிக் கொடி  சிறுகதை(சாத்திரி)
   எதுவரை  இதழ் 15 

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . ஆனால் அவனும் தன்னைப்போலவே திருப்பி அனுப்பபட்டிருப்பதால் அவன் மீது பரிதாபமும் வந்தது .எல்லாமே அந்த ஆதித்தனாலை வந்ததது… அடுத்தது என்ன நடக்கப் போகுதோ என்கிற பயத்தின் காரணமாக இரவு முழுவதும் பசிக்கவில்லை, கொஞ்சம் வைன் வாங்கி குடித்தால் நித்திரையாவது கொள்ளலாம் என நினைத்து ரமணன் பணிப்பெண்ணிடம் கேட்ட போது இவர்களிற்கு காவலாக வந்திருந்த பிரெஞ்சுக் கார அதிகாரி தண்ணீரை மட்டுமே குடிக்க அனுமதி என்றுவிட்டு இவர்களது வைனையும் தானே குடித்து உணவையும் சேர்த்தே சாப்பிட்டு நன்றாக நித்திரை கொண்டு எழும்பியிருந்தான் .
sa-p2விமானம் நின்று அனைத்துப்பயணிகளும் இறங்கி முடித்த பின்னர், நான்கு பேர் விமானத்தினுள் ஏறி அவர்களிற்கு அருகில் வந்து பிரெஞ்சு அதிகாரிக்கு தங்களை அறிமுகப்படுத்தி கை குலுக்கியதும் ஏற்கனவே போடப்பட்டிருந்த விலங்குகள் அகற்றப் பட்டு புதியதாய் வந்தவர்கள் கொண்டு வந்த விலங்கை மாட்டியதும் பிரெஞ்சு அதிகாரி ஒரு பைலை அவர்களிடம் கொடுத்து விடை பெற்றான் . இருவரையும் விமானத்தை விட்டு வெளியே கொண்டு சென்றதும் விமான நிலையத்தில் ரமணனை மட்டும் தனியாக ஒரு பாதையால் வெளியே கொண்டு சென்று வெள்ளை வான் ஒன்றில் அவனை ஏற்றி கண்களை கட்டியதும் வாகனம் ஓடத் தொடங்கியது.

வெள்ளை வேனைப்பார்த்ததுமே அது பற்றி கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் அவனிற்கு மனத்திரையில் ஓடத்தொடங்கியிருந்தது மட்டுமல்ல யாரோ ஒரு பெண்ணின் பெயரும் நினைவில் வந்து போனது. அது ஏன் இப்போது நினைவில் வந்தது என்று அவனுக்கே தெரியாதது மட்டுமல்ல அம்மாவும் அக்காவும் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் காசு வருமெண்டு காவல் இருப்பினம் என்று நினைக்க எதுக்கடா பிறந்தோம் என்றிருந்தது . கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தின் பின்னர் வாகனம் ஓரிடத்தில் நின்றதும் ரமணனை அழைத்துக் கொண்டு போய் கண்னை மட்டும் அவிழ்த்து விட்டு கதவை பூட்டி விட்டு போய் விட்டார்கள்.

ரமணன் அறையை சுற்றி வரப் பார்த்தான் அது காவல் நிலையம் போல இல்லை ஒரு பொருள் கூட இல்லாத ஒரு வீட்டின் அறை போலவேயிருந்தது .மனதில் மரண பயம் தொற்றிக்கொண்டு அடுத்த செக்கன் என்ன நடக்கப் போகின்றது என்கிற படபடப்போடு திகிலானதாக கடந்து கொண்டிருந்தது. …… ஒருவன் வந்து ரமணனை இன்னொரு அறைக்குள் அழைத்துப்போனான் அந்த அறை எதோ ஒரு தொழில்கூடம் போல வகை வகையாக பல அளவுகளில் இறப்பர் குழாய்கள், கம்புகள், வயர்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது நடுவில் ஒரு வாங்கு , சுவர் ஓரமாக ஒரு மேசை இரண்டு கதிரை அவ்வளவுதான் .ரமணனின் விலங்கை அகற்றியவன் அவன் உடம்பிலிருந்த அனைத்து துணிகளையும் கழற்றச்சொன்னான். உடைகளை கழற்றி விட்டு ஜட்டியோடு நின்றிருந்தவனிடம் ஜட்டியையும் கழற்றச் சொல்லி உரத்து சொன்னதும் கொஞ்சம் கூச்சத்தோடு அதையும் கழற்றினான். மீண்டும் வலக்கையில் விலங்கை மாட்டி அவனை இழுத்துக் கொண்டு போய் வாங்கில் முகம் குப்புற படுக்க வைத்து விலங்கின் மறுபக்கத்தை வாங்கின் காலோடு பூட்டியதும் ரமணன் தனக்கு அடுத்து நடக்கப் போகும் சித்திரவதைகளை தாங்குவதற்கு மனதை தயார்ப்படுத்துவதை தவிர வேறு தெரிவுகள் எதுவும் அவனிடம் இருக்கவில்லை.

ரமணனின் பின் உடம்பு முழுதும் ஒருவன் மாறி மாறி அடித்த பின்னர், விடுகின்ற சிறிய இடைவேளையில் எதிரே கதிரையில் இருந்த ஒருவன் தனது கைத்தொலை பேசியில் அனைத்தையும் படமாக்கியபடி கேள்விகளைக் கேட்பான். ரமணன் பதில் சொன்னதும் திரும்ப அடி விழும் .அவனின் முதலாவது கேள்வி ..உனக்கு லீடர் யார் .. லீடர் என்றால் ஆதித்தன் பெயரைத் தான் சொல்ல வேண்டும் ஆனால் யாரும் இல்லை சார் என்று முனகினான்.ஒ அப்போ நீதான் லீடரா என்றதும் மீண்டும் அடிவிழத் தொடங்கும்.நீங்கள் எத்தனை பேர் …யார் உங்களுக்கு பணம் தருவது ,உங்கள் திட்டம் என்ன… இப்படி கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் ரமணனிடம் பதில் இல்லை ….விழுந்த அடியில் ஒன்று கழுத்துக்கு கீழே முள்ளந்தண்டில் விழ தலை சுற்றி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது …
0000000000000000000000000000000000000000000000
வேலையால் வந்த ரமணன் கடிதப் பெட்டியை திறந்தான் வழக்கம் போல விளம்பரங்களாலும் பணம் காட்ட வேண்டிய பில்களாலும் நிரம்பிப் போயிருக்கும் கடிதப் பெட்டியில் எப்போதாவதுதான் தேவையான அல்லது முக்கியமான கடிதம் வந்திருக்கும்.அன்று அவனுக்கு இரண்டு கடிதம் வந்திருந்தது. ஒன்று அவனது அம்மாவின் கடிதம் அடிக்கடி போனில் கதைத்தாலும் அம்மா கடிதம் எழுதுவதை நிறுத்துவதில்லை அது தேவையானது .அடுத்தது முக்கியமான கடிதம் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது.கொஞ்சம் படபடப்போடு அதைப்பிரித்தான் பிரெஞ்சு மொழியில் இருந்த கடிதம் புரியவில்லை உடனே அவனுக்கு கேஸ் எழுதின ஆதித்தனுக்கு போனடித்தவன் அண்ணை கொமிசனிலயிருந்து கடிதம் வந்திருக்கு போனமுறை வந்தது போலத்தான் இருக்கு என்றதும், அவர் உடனே கடிதத்தை கொண்டு வரச் சொல்லியியிருந்தார்.ரமணன் வீட்டுக்குள் போகாமல் திரும்ப சுரங்க ரயிலைப் பிடித்து ஆதித்தனின் அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருக்கும் போது ரயிலில் அம்மாவின் கடிதத்தை பிரித்தான்…….

கடிதத்திற்குள் அவன் கட்டத் தொடங்கியுள்ள வீட்டின் வரை படமும் இதுவரை அவன் அனுப்பிய பணத்துக்கான செலவுக்குறிப்புக்களும் அம்மாவின் எழுத்தும் இருந்தது.வரவு செலவு கணக்குத் துண்டுகள் அனுப்ப வேண்டாம் எண்டு சொன்னாலும் அம்மா விடுவதில்லை. தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறை எண்டு சொல்லி அனுப்பிக் கொண்டே இருப்பார்.இப்போ இந்த வீட்டை கட்டிமுடிப்பதுதான் அவனது பெரிய வேலை மட்டுமல்ல அவனது கனவும் கூட.எண்பத்தி ஐய்ந்தாம் ஆண்டு பலாலி ஆமி குரும்பசிட்டிக்கு வந்து நேரம் நீ வயித்திலை அக்கா வையும் கொண்டு கையிலை அகப்பட்டதை தூக்கிக்கொண்டு நானும் உன்ரை அப்பாவும் வெளிக்கிட்டனாங்கள்.நாங்கள் பரம்பரையாய் வாழ்ந்த வீடு எனக்கு சீதனமாய் தந்தவை எண்டு வீட்டைப் பற்றி அம்மா கதை கதையா சொல்லுவார்.

அதுக்குப்பிறகு அவனுக்கு நினைவில் இருந்ததெல்லாம் தொடர்ச்சியான இடப் பெயர்வும் மாறி மாறி சொந்தங்கள் தெரிந்தவர் வீடுகளில் குடியிருந்தது மட்டும்தான்.வன்னிக்குள் வந்து படித்துக் கொண்டிருந்தவன் வீட்டுக்கு ஒருவர் இயக்கத்துக்கு என்றதும் போய் விட்டான் .அக்கா காதலித்து கல்யாணம் செய்து கொண்டு போய் விட, அப்பாவும் நோயில் விழுந்து இறந்த செய்தி முகாமிலிருந்தவனுக்கு பிந்தியே கிடைத்திருந்தது.பேச்சு வார்த்தை தொடங்கி விட்டிருந்ததால் தனித்துப் போயிருந்த அம்மாவை அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவான்.அம்மாவுக்கு இரண்டு ஆண் சகோதரங்கள் ஒருவர் ஆஸ்திரேலியா மற்றவர் கனடா .கனடா மாமாவின் புண்ணியத்தில் அம்மாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது .

எல்லாமே வேகமாய் மாறி சண்டை தொடங்க அவனுக்கு அம்மாவின் தொடர்பு விட்டுப்போனது.தந்திரோபாய பின் வாங்கலில் தொடக்கி இரண்டு வருட இறுதியில் எந்த தந்திரோபயமும் இல்லாத பொழுதொன்றில் ஆயுதங்களை எறிந்த ஆயிரக்கணக்கானவர்களைப் போலவே அவனும் ஆயுதத்தை ஏறிந்து விட்டு கையைத்தூக்கியிருந்தான்.அப்பா அம்மா செய்த புண்ணியமோ என்னவோ சில விசாரணைகளுக்குப்பிறகு புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.அங்கு ஆறு மாதம் கழித்து வெளியே வந்தபோது அம்மா எப்பிடியோ தேடிப்பிடித்து கூட்டிப் போக வந்திருந்தார் கூடவே அக்காவும் நின்றிருந்தாள் .அவளுக்கு ஒரு ஆண்குழந்தை. அனைவரையும் ஒன்றாய் கண்டது மகிழ்ச்சி .ஆனால் அக்கா கண்ணைக் கசக்கினாள் காரணம் அத்தான் காணாமல் போனவர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவனை கண்டு பிடித்து விட்ட அம்மா அடுத்ததாக மருமகனின் தேடலை தொடங்கியிருந்தார் .புனர்வாழ்வு முடிந்து வந்திருந்தாலும் புலனாய்வாளர்களின் தொல்லை தொடரவே கனடா மாமாவின் உதவியோடு பிரான்சுக்கு வந்து இரண்டு வருடமாகிறது.அவனது அகதி தஞ்சக் கோரிக்கை இரண்டாவது தடவையும் நிராகரிக்கப் பட்டு கடிதம் வந்து விட்டது .அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனிற்கு அகதி தஞ்ச கோரிக்கையை எழுதிக்கொடுத்த ஆதித்தனின் அலுவலகத்திற்கு வந்துவிட்டிருந்தான் இப்போது……

ஆதித்தன் அலுவலகத்தில் கணனியில் தமிழ் வானொலி கேட்டபடி எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.. அனேகமாக யாரோ ஒருவனின் ss-111தலைவிதியாகத்தான் இருக்கவேண்டும்.வெளிநாட்டில் அகதிகளுக்கு கேஸ் எழுதுபவர்கள் தான் பிரம்மாக்கள்.அவர்களுக்கு நான்கு தலை இல்லையே தவிர நான்கு தலைக்குரிய தலைக்கனம் இருக்கும் .பவ்வியமாக தனக்கு முன்னால் வந்தமர்த்த ரமணன் நீட்டிய கடிதத்தை வங்கிப் படித்தவர் உதட்டைப்பிதுக்கி ம் ….நாட்டிலை வசிக்கிறதுக்கு உமக்கு உண்மையில பிரச்னை எண்டுறதுக்கு ஆதாரம் போதாது அதாலை அகதிக் கோரிக்கையை நிராகரிக்கப் பட்டிருக்கு எண்டு எழுதியிருக்கிறாங்கள் என்று விட்டு கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அடுத்தது என்ன செய்யலாம் எண்டு மெதுவாக கேட்டான்.எத்தினையாயிரம் பேருக்கு விசா எடுதுக்குடுத்திருப்பன் இயக்கம் மட்டும் இருந்திருந்தால் இப்ப உம்மடை கையிலை விசா இருந்திருக்கும். அவங்கள் இல்லாமல் போனாப்பிறகு எனக்கு மட்டுமில்லை கனபேரின்டை தொழில் படுத்திட்டுது என்று அவர் கடிதத்தை கையில் வைத்து யோசித்துக் கொண்டிருக்கும் போது வானொலியில் செய்திகள் தொடங்கவே இவங்கள் வேற ஒரு செய்தியையே எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தி சொல்லுவாங்கள் என்றபடி அதை நிப்பாட்டப் போனவர் செய்தித் தலைப்பைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

செய்தியை பொறுமையாக கேட்டவர் உடனே ரமணனிடம் “தம்பி உம்மட்டை பேஸ் புக் எக் கவுண்ட் இருக்குதோ” என்றார் .ஓமண்ணை சொந்தப் பெயரில ஒண்டும் பேக் ஐடி இரண்டும் வைச்சிருகிறன் என்றபடி தனது ஐ போனை எடுத்து அவருக்கு காட்ட முயற்சிக்கும்போது, நல்லது அப்பிடியே வைச்சிரும் விசா இருக்கோ இல்லையோ உதுகளுக்கு மட்டும் குறையில்லை .இரண்டு பேக் ஐடி யும் பொம்பிளை பெயர் தானே ..இல்லையண்ணை ஒண்டுதான்.. லேசாய் நெளிந்தான் ரமணன் .சரி நான் சொல்லுறதை கவனமாய் கேளும் அதை ஒழுங்காய் செய்தால் உமக்கு விசா கிடைக்கும் என்றபடி திட்டத்தை விளங்கப் படுத்தினார்.அவர் கையை ஆட்டி கண்களை உருட்டி திட்டத்தை சொல்லி முடித்து கடைசியாய் மேசையில் ஓங்கி அடித்து எப்படி என்னோடை பிளான் எண்டு அவனைப் பார்த்துக் கேட்டார் .

வன்னியில் தாக்குதல் திட்டங்களை தளபதிகள் விளங்கப்படுத்திய போதே சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு இவரின் பிளான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது .”அண்ணை ஒண்டும் பிழைக்காது தானே ஏதும் பிரச்னை வந்தால் என்ன செய்யறது ” என்று இழுத்தவனுக்கு .தம்பி நான் ஒரு லோயர் சொல்லுறன் நீர் பயப்பிடாமல் சொன்னதை செய்தால் போதும் என்னோடை பிளான் பிசகாது எண்ணி ஆறு மாதத்திலை உமக்கு விசா ஒரு பிரச்சனையும் வராது. இவர் தன்னைத் தானே லோயர் எண்டு அடிக்கடி சொல்லிக் ..கொல்லுவாரே தவிர இதுவரைக்கும் பிரான்சிலை ஒரு கோட்டுப்படியேறி கோட்டுப் போட்டு வாதாடியதாய் அவன் கேள்விப்பட்டதேயில்லை .
சரியண்ணை நீங்கள் சொன்னபடி செய்யுறன் ஆனால் கொடி எங்கை வாங்கிறது என்றதும் எழும்பி பின்னாலிருந்த அலுமாரிக்கு மேலே இருந்த கடுதாசிப்பெட்டிக்குள் கையை விட்டு சுருட்டி இருந்த கொடி ஒன்றை எடுத்து அவனுக்கு முன்னால் போட்டார் .ஆச்சரியமாய் அவரிடம் “நீங்கள் கொடி யாவாரமும் செய்யிறீங்களோ” .தம்பி இந்தத் தொழிலில எல்லாம் செய்ய வேணும் இதெல்லாம் உங்களுக்கு புரியாது கொடிக்கு முப்பது யூரோ கடிதம் படிச்சு சொன்னதுக்கு இருபது யூரோ எல்லாமா ஐம்பது யூரோ எடும் நாளைக்கு சொன்ன வேலையை கச்சிதமா செய்திட்டு எனக்கு போன் அடியும் என்றார்.ஐம்பது யூரோவை எடுத்து அவரிடம் நீட்டி விட்டு கொடியை எடுத்துக்கொண்டு போய் விட்டான் .

அவரது திட்டத்தை நிறைவேற்ற இன்னொரு ஆள் தேவை, வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ரவி நினைவுக்கு வரவே போனடித்து விடயத்தை சொன்னான்.அவனும் குஷியாகி ஒண்டும் பிரச்னை இல்லை தான் வருவதாக சொன்னான்.
000000000000000000000000000000
வேலையிடத்தில் முதலாளியிடம் லீவு கேட்க வேண்டும் , அவரை சங்கரன் அண்ணை எண்டுதான் கூப்பிடுவான் .கடையில்அவர்கள் இருவர் மட்டுமே வேலை செய்வார்கள், ஆறுநாள் வேலை திங்களில் கடை பூட்டு அதைத் தவிர தலை போகிற விடயம் எண்டாலும் கடையைப்பூட்ட மாட்டார்.அவர் கனடா மாமாவின் நண்பர் என்பதால் அவனுக்கு விசா இல்லை எண்டு தெரிந்தும் வேலை கொடுத்திருக்கிறார். சம்பளம் குறைவுதான் ஆனாலும் நியாயமாக நடந்து கொள்வார்.அவரது பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்த்த இரண்டு வருடத்தில் தான் பிரான்ஸ் வந்து ரயில் நிலையத்தில் படுத்து கஸ்டப்பட்ட கதையை ஒருநாளைக்கு ஒரு தடவையாவது சொல்லாமல் விட மாட்டார் .அவர் நல்லவர்தான் ஆனால் அவருக்கு தொழில்தான் முக்கியம், அதைதவிர்த்து அரசியல் மற்றும் போராட்டம் அது உள்ளுராக இருக்கட்டும் உலக அளவில் இருக்கட்டும் எதுவுமே பிடிக்காது.

சொல்லப்போனால் இந்த ஆயுதப் போராட்டமே தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவரது வாதம் .
ஒரு தடவை அவரோடு போராட்டம் பற்றி கதைக்கப்போய் ,அண்ணை போராட்டம் நடந்த படியால் தானே காங்கேசன்துறையில இருந்த நீங்கள் பாரிசுக்கு வந்து கடை போட்டு வசதியாய் வாழ முடியுது என்று சொன்னதுதான்.. “தம்பி எனக்கு ஊரிலை இருந்த வெத்திலை தோட்டம் எவ்வளவு எண்டு தெரியுமோ? வெத்திலையின்டை பெறுமதி தெரியுமா நாங்கள் வெத்திலைக்கொடியை பொற்கொடி எண்டுதான் சொல்லுறனாங்கள்.ஒவ்வொரு இலையும் பொன் மாதிரி எங்கடை சடங்குகளிலை வெத்திலை இல்லாத ஒரு சடங்கை சொல்லு பாப்பம் அப்பிடிப் பட்ட வெத்திலை தோட்டம் ஏக்கர் கணக்கிலை வைசிருந்தனாங்கள் எண்டால் எவ்வளவு பணக்காரராய் இருந்திருப்பம் எண்டு யோசி..அங்கயும் உழைப்பு இங்கயும் உழைப்பு அப்பதான் முன்னேறலாம் இனி வீண் கதை என்னோடை கதைக்காதை” என்று அவனைப்போட்டு சப்பித் துப்பி விட்டிருந்தார் .நல்ல வேளை வேலையை விட்டு தூக்கவில்லை என்கிற நிம்மதி அன்று ஏற்பட்டது.
நாளைக்கு லீவு கேக்க வேணும் அதுவும் வெள்ளிக்கிழமை காய்கறி வியாபாரம் நல்லா நடக்கிற நாள்.

 பாரிஸ் புற நகர் பகுதியில் உள்ள ஒரேயொரு தமிழ்க்கடை அது. அங்கு இருகின்ற அனைத்து தமிழ்சனங்களும் வருவார்கள் வடிவா கவனிக்காட்டி வாற சனம் முருக்கங்காயையும் வெண்டிக்காயையும் முறிச்சு வைச்சிட்டு போயிடுங்கள்.லீவைப் பற்றி யோசித்தபடியே வேலையை செய்து கொண்டிருந்தான்.கடை பூட்டும் நேரம் சாமான் எல்லாம் எடுத்து உள்ளை வைத்து முடித்து முதலாளி முன்னால் போய் நின்றான். கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் தலையை நிமிர்த்தி “ஊருக்கு அனுப்பக்காசு கேட்டனியல்லோ எவ்வளவு வேணும்” என்றார் .ஓம் எழுநூறு யூரோ தங்கோ மாதம் முடிய கணக்கு பாப்பம் தலையை சொறிந்தான் .பணத்தை எண்ணி நீட்டியவர் ஏதோ வீடு கட்டத்தொடங்கினதா சொன்னனி என்ன மாதிரி, எங்கை கட்டுறாய் எண்டதும் அவசரமாய் போய் தனது பையிலிருந்து அம்மா அனுப்பிய கடிதத்தை கொண்டுவந்து பிரித்து வீட்டுப்பிளானை காட்டியபடி இது எங்கடை குரும்பசிட்டி காணிக்கை தான் கட்டப் போறன்.இப்ப மூண்டு மாதத்துக்கு முதல்தான் ஆமி அந்தப் பகுதியை சனத்துக்கு திருப்பிக் குடுத்தவன் .அதுக்கை இருந்த வீடும் இடிஞ்சு அத்திவாரம் கூட இல்லை. எல்லையை கண்டு பிடிக்கவே சரியா கஸ்டப் பட்டதா அம்மா சொன்னவா.அம்மாக்கு திரும்ப அதுக்குள்ளை ஒரு வீடு காட்ட வேணும் எண்டு ஆசை .தொடங்கியிருக்கிறன் பாக்கலாம் என்று பெரு மூச்சோடு முடித்தான் .

உன்னுடைய குடும்ப பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும் நீயும் உன்ர மாமன் மாதிரி நல்லவன்.என்ர குடும்பத்தில ஒருத்தன் மாதிரி ஏதும் உதவிஎண்டல் தயங்காமல் என்னட்டை கேள் தம்பி என்றதும், நாளைக்கு லீவு வேணும் அண்ணை ஒரு சிநேகிதன்டை கலியாணம் கட்டாயம் போகவேணும் .. தலையை குனித்தான் .இப்பதான் உன்னை நல்ல பெடியன் எண்டனான் .பொதுவா சனி ஞாயிறுலை தானே கலியாணம் வைக்கிறவங்கள் நாளைக்கு வெள்ளிக்கிழமை வேறை.. மரக்கறி வரும்… யோசித்தார் .அவரிடம் பொய் சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது ஆனால் வேறு வழியில்லை .இது நாள் நச்சத்திரம் பாத்து கோயில்லை நடக்கிற கலியாணம் அதுதான் வெள்ளிக்கிழமை வைக்கிறாங்கள் மத்தியானம் முடிஞ்சிடும் உடனை வந்திடுவன் ..அடுத்த பொய்யையும் சொன்னான்.சரி நான் சமாளிக்கிறான் போட்டு ஆறுதலாய் வா ….அனுமதி கொடுத்தார்.ரமணனுக்கு மகிழ்ச்சி இருபது யூரோவை நீட்டி அண்ணை சிம் காட்டை றீசார்ச் பண்ணி விடுங்கோ என்றான்.அந்த லைக்கா சிம் காட்டும் சங்கரன் தனது பெயரில்தான் பதிவு செய்து கொடுத்திருந்தார் .சிம் றீ சார்ஜ் ஆகி எஸ் .எம்.எஸ் .வந்ததும் விடை பெற்றான் .
000000000000000000000000000000000000000000000000000000000
அடுத்தநாள் எழும்பி அறையில் உள்ளவர்கள் வேலைக்கு போகும்வரை காத்திருந்தவன் போனில் சார்ஜ் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டு ரவி சம்பவ இடத்துக்கு வருவானா என்பதை உறுதி செய்து விட்டு ,செய்தி வெளியானதும் முதலாளிக்கு கட்டாயம் தெரிய வரும் கோவப் படுவர் என்ன செய்யலாம் ..? அதை பிறகு பாக்கலாம் .கொடியை எடுத்து விரித்துப் பார்த்தான் , கொடி கட்டத் தடிதேவை யோசித்த பொழுது மூலையில் கிடந்த தும்புத்தடி கண்ணில்பட தும்பும் தடியும் வேறு வேறானது ..இப்போ தடியில் கொடி..எல்லாம் சரி பார்த்தவன் ரயிலைப் பிடித்து சம்பவ இடத்துக்கு வந்திருந்தான், அவனைப்போலவே மேலும் பலர் கொடி பதாதைகளோடு வந்து கொண்டிருந்தார்கள்.இன்னொரு தடவை திட்டத்தை மனதில் ஓடவிட்டான்…ஸ்ரீ லங்காவிலிருந்து வந்திருக்கும் அமைச்சர் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார் அவருக்கு எதிர்ப்பு காட்ட இங்குள்ள தமிழ் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தது ..இந்த எதிர்ப்பில் ரமணனும் கலந்து கொள்ள வேண்டும்.. அமைச்சர் விடுதியிலிருந்து கூட்டத்திற்கு செல்லும் போது அவரின் வாகனத்தின் முன்னால் வீதியில் தீடிரென கொடியோடு பாய்ந்து நீதி வேண்டும்..சர்வதேச விசாரணை வேண்டும்.. வெளியே போ …என்று கத்தி விட்டு காவலுக்கு நிற்கும் போலிசின் கையில் அகப்படாமல் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் இதை இன்னொருவர் வீடியோவாக எடுக்க, அந்த கிளிப்பை உடனடியாக அவனது பேஸ் புக்கில் அப்லோடு பண்ணி பலருக்கும் ரக் பண்ணிவிட செய்தி எல்லா இடமும் பரவும் அவ்வளவுதான்..அமைச்சருக்கு எதிப்புத் தெரிவித்த்தால் ரமணன் ஸ்ரீலங்கா சென்றதும் கைது செய்யப்பட வாய்ப்புக்கள் அதிகம்.உயிருக்கும் ஆபத்து நேரலாம் எனவே அவரது அகதி விண்ணப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. இதுதான் ஆதித்தன் அகதிகள் விண்ணப்பதை பரிசீலிக்கும் அலுவலகத்துக்கு ஆதாரங்களோடு அடுத்து எழுதப்போகும் கடிதம்.

அமைச்சர் வந்த செய்தியை கேட்டதும் ஆதித்தனுக்கு உதித்த திட்டம் இதுதான் .
ரவியைத்தேடி போனடித்தபோது ஒரு பியரை உறுஞ்சியபடி கூலாக நடந்து வந்து கொண்டிருந்தான்.என்னடா காலங் காத்தலையே தொடங்கிட்டியா இந்தா என்னை வடிவா போக்கஸ் பண்ணி எடு என்று தனது கைத்தொலை பேசியை கொடுத்து விட்டு நான் மற்றப்பக்கம் போறன் அங்கை நிண்டு றோட்டுக்கு குறுக்கா பாய்ஞ்சு வருவன் என்று விட்டு வீதியின் மறு பக்கம் போனவன் காவலுக்கு நின்ற போலீஸ்காரனுக்கு தூரமாக பாதுகாப்புக்கு போடப் பட்டிருந்த தடை வேலிக்கு அருகாக தயாராய் நின்றிருந்தான்.தூரத்தில் தெரிந்த விடுதியின் முன்னால் நின்றிருந்த வாகனத்தில் அமைச்சர் வந்து ஏறுவது தெரிந்தது அந்த வாகனத்திற்கு முன்னால் இரண்டு மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பு பொலிசார் தயாராய் நின்றிருந்தார்கள்.அமைச்சர் வாகனத்தில் ஏறியதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் உசாராகி கொடிகளையும் பதாதைகளையும் உயர்த்திப்பிடித்து கோசங்களை எழுப்பத் தொடங்கியிருந்தனர்.அமைச்சரின் வாகனம் உருளத் தொடங்க ரமணனுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து லேசாய் படபடப்பு தொடங்கியிருந்தது ரவியை மாதிரி ஒரு பியரை அடிச்சிட்டு வந்திருக்கலாமோ என்றும் யோசித்தான்.

அமைச்சரின் வாகனம் கிட்டே நெருங்கிக்கொண்டிருந்தது ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பிய கொட்டொலிச் சத்தங்களும் கோசங்களும் வேகம் பிடிக்கத் தொடங்க காவல்துறையினர் பரபரப்பானார்கள்.வாகனம் கிட்டே நெருங்கி விட்டது, ரமணன் எதிரே நின்ற ரவியைப் பார்த்தான் அவன் வலக்கை கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோவில் ரமணனை பதியத்தொடங்க ரமணன் கொடியை உயர்த்திப் பிடித்தபடி இனப் படுகொலை அரசு அமைச்சரே திரும்பிப் போ என்று கத்தியபடி தடுப்பு வேலியை தாண்டவும் எங்கள் தாகம் தமிழ் ஈழத் தாயகம் என்று சத்தமாக கத்தியபடி கொடியோடு இன்னொருவன் எதிரேயிருந்து தடுப்பு வேலி யை தாண்டி அமைச்சரின் வாகனத்துக்கு முன்னே பாய்ந்து வீதியில் குறுக்கே படுத்துக்கொள்ள .. எனக்கு குடுத்த ஐடியாவையே ஆதித்தன் இன்னொருத்தனுக்கும் குடுத்திட்டானோ..?? என்று ஒரு கணம் தடுமாறி நிக்க, மேலும் பலர் தடுப்பு வேலியை தாண்டி வீதியில் இறங்க முயற்சித்தனர் .காவலுக்கு நின்ற போலிசார் மேலதிகமாக கலகமடக்கும் போலிசாரின் உதவிக்கு அழைப்பு விடுத்த படியே வீதிக்கு வருபவர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள் .

எதிரே தடுப்பு வேலிக்கு பின்னால் நின்ற ரவியும் உற்சாகமாகி தடுப்பைக் கடந்து வந்து அனைத்தையும் கைத் தொலை பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தான் . யாரோ எங்கிருந்தோ எறிந்த பியர்ப்போத்தல் ஒன்று வீதியில் விழுந்து உடைந்து சத்தம் கேட்டது…. போலிஸ் வாகனங்களின் சைரன் சத்தங்கள் அந்த இடத்துக்கு அருகாக கேட்கத் தொடங்கியிருந்தது.வீதியில் படுக்க முனைந்தவனை பொலிசார் பிடித்து விலங்கு மாட்டிக் கொண்டிருக்க அமைச்சரின் வாகனம் அந்த இடத்தை கடந்து போய் விட்டிருந்தது.

ஆனால் பறந்து வந்த இன்னொரு பியர்ப்போத்தல் ஒன்று ஒரு போலிஸ் காரனின் முதுகைப்பதம் பார்க்க அவன் இடுப்பிலிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை கழற்றி ஆர்ப்பாட்டக் காரர்களை நோக்கி உருட்டி விட அந்த இடம் சிறிய கலவரமாக மாறிக்கொண்டிருந்தது. மேலதிகமாக வந்த போலீசாரில் ஒருவன் தன்னை நோக்கி வருவதைப்போல இருக்கவே ரமணன் கொடியை வீதியில் எறிந்து விட்டு வேகமாக தடுப்பு வேலியைத்தாண்டியபடி ரவியைத் தேடினான் காணவில்லை .கண்ணீர்ப்புகை காற்றில் கரைந்து அவனுக்கும் லேசாய் கண்ணில் எரிச்சல் ஏற்பட அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலில் ஏறிவிட்டான், வீட்டுக்குப் போவதா அல்லது வேலையிடத்துக்கு போவதா என்று குழப்பமாக இருந்தது.வீட்டுக்குப் போய் முதல் வேலையாய் ரவிக்கு போனடிப்பம் என்று முடிவெடுத்தான் .
000000000000000000000000000000000000
சங்கரன் கடையில் நல்ல சனம்.. தனியாக சமாளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவர் முருங்கைக்காய் ஒன்றை எடுத்து கொலை வெறியோடு அதை முறுக்கிக் கொண்டிருந்த வயதான பெண்ணைப் பார்த்து “அம்மா.. யூஸ் பிழிஞ்சு குடிக்க இது கரும்பில்லை முருங்கைக்காய், இதுக்கு மேலை முறுக்க வேண்டாம்” என்று கொஞ்சம் கடுப்பாக சொல்லிவிட்டு இண்டைக்கெண்டு இவன் லீவு எடுத்திட்டான் என்று ரமணனை திட்டியபடி பரபரப்பாக நின்றிருந்தவருக்கு கடைத்தொலை பேசியும் விடாமல் அடிக்க இலக்கத்தை பார்த்தார், அது அவரது வீட்டு இலக்கம்..மனிசி தான் இவளுக்கு நேரம் காலம் கிடையாது என்றபடி எகிறிய கோபத்தில் அதை எடுத்து காதில் வைத்து என்னடி வேணும் என்றதும் ..
என்னப்பா செய்தி பாத்தனியளோ…??
இப்ப ரெம்ப முக்கியம் உனக்கு வேறை வேலையில்லை வையடி ..என்றபடி போனை வைக்கப் போனவரிடம் ,முக்கியமான செய்தி டுபுக்கு டொட் கொம்மிலை போய் பாருங்கோ என்றதும் தொலைபேசி துண்டிக்கப்பட்டது .அப்பிடியென்ன முக்கிய செய்தியாயிருக்கும் என்றபடி தனது ஐ போனில் கூகிளில் புகுந்து டுபுக்கு டொட் கொம் என்று தட்டினார். போராட்டம் மாபெரும் வெற்றி.ஸ்ரீ லங்கா அமைச்சர் தனது வாகனத்திலிருந்து பின்கதவால் தப்பியோட்டம் என்கிற செய்தித் தலைப்பில் சில படங்களும் போடப் பட்டிருந்தது…. ஒரு படத்தில் ரமணன் கொடியை உயர்த்திப் பிடித்தபடி பாய்கின்றதைப்போல இருந்த படத்தப்பார்த்ததும் சங்கரனுக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி தன்னை மறந்து பரதேசி என்று சொல்ல அவருக்கு முன்னால் முறுக்கிப்பார்த்த முருக்கங்காயை கையில் பிடித்தபடி பணத்தை நீட்டிய பெண் “யாரைப் பாத்து பரதேசி என்டுறாய்
ஊரிலை எங்களுக்கு முருங்கை தோட்டமே இருந்தது உனக்குத்தெரியுமா இந்தா உன்ரை முருக்கங்காய் ” என்று அதை அங்கேயே எறிந்துவிட்டு போக, ஐயோ அம்மா நான் பரதேசி எண்டு சொன்னது உங்களை இல்லை அது வேற பரதேசி என்று சொன்னதும் அப்ப நான் வேற பரதேசியா என்றபடி அவர் கோபமாக கடையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதே இரண்டு பிரென்சுகாரர்கள் உள்ளே நுழைந்தார்கள் .சரி அவர் போனால் என்ன இப்ப வெள்ளைக் காரனெல்லாம் வெள்ளிக்கிழமை விரதம் பிடிக்கிறாங்கள் போல முறுக்கி எறிஞ்சிட்டு போன முருக்கங்காயை நிமித்தி இவங்களுக்கு விக்கலாம் என நினைத்து அதை எடுத்தபடி நிமிர்ந்தபோது வந்தவர்களில் ஒருவன் தனது அடையாள அட்டையை அவரது முகத்துக்கு நேரே நீட்டியபடி போலிஸ் என்றுவிட்டு ஒரு கைத்தொலை பேசியை எடுத்து காட்டி இது உங்களுடையதா என்றான்.

சங்கரனின் கோபம் இப்போ பயமாக மாறி லேசாய் உதறல் எடுக்க, இல்லை என்றபடி தலையாட்ட அவனோ விடுவதில்லை ஒரு இலக்கத்தைச்saaaaaa சொல்லி இந்த இலக்க சிம் காட் உங்களுடையது தானே என்றான்.ரமணனுக்கு தன்னுடைய பெயரில் கடையின் விலாசம் போட்டு லைக்கா சிம் காட் பதிந்து கொடுத்தது நினைவில் உறைக்க லைக்கா எண்டாலே பிரச்சனையாக் கிடக்கு என்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று தொடங்கியவர் சகல விடயத்தையும் போலீஸ்காரரிடம் சொல்லி ரமணனனின் வீட்டு விலாசத்தையும் எழுதிக் கொடுத்து விட்டார் .நன்றி சொல்லியபடி காவல்த்துறையினர் போன பின்னர்தான் கவனித்தார் கடையில் நின்றவர்கள் மட்டுமல்ல கோபித்துக்கொண்டு போன பெண் கூட திரும்ப வந்து அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். “ஒண்டுமில்லை தெரிஞ்ச போலிஸ் காரங்கள்தான் ஒருத்தனைப்பற்றி விசாரிக்க வந்தவங்கள் ” என்று சொல்லி சமாளித்தாலும் அவருக்கு அது பெரிய அவமானமாக இருந்தது மட்டுமல்ல திரும்பவும் ரமணன் மீது கோபம் வர இனி இவனை வேலைக்கு வைசிருக்கிறேல்லை என்று முடிவெடுத்திருந்தார் .ஆனால் அவர் படித்த செய்தியில் ஒன்று மட்டும் அவருக்குப் புரியவில்லை வாகனத்திலிருந்த அமைச்சர் எப்பிடி பின் கதவால் தப்பியோடியிருப்பர் ஒருவேளை டிக்கியில் இருந்திருப்பாரோ .??
00000000000000000000000000000000000000000
வீடு வந்த ரமணன் ரவியின் போனுக்கும் தனது போனுக்கும் மாறி மாறி அடிதுக்கொண்டேயிருந்தான் ரிங் போய்க்கொண்டிருதது பதிலில்லை. அவனோடு தங்கியிருக்கும் சிவாவிற்கு அன்று லீவுநாள் ,அவன்தான் அன்று வீடு துப்பரவாக்கி சமைக்கவேண்டும் அப்போதுதான் நித்திரையால் எழும்பியவன் வீட்டு போனை போட்டு அமத்திக்கொண்டு நின்ற ரமணனிடம் என்னடா இண்டைக்கு வேலைக்கு போகேல்லையோ என்றபடி படுக்கையை எடுத்து மடித்துக் கொண்டிருக்க கதவில் யாரோ தட்டவே ரவியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தபடி அவசரமாக போய் திறந்தவன் உறைந்து போய் நின்றான் .

அடையாள அட்டையை காட்டிவிட்டு உள்ளே வந்த போலிசார் இருவரும் அவர்களிடம் விசாவை காட்டும்படி கேட்க சிவா அவசரமாக தனது விசாவை எடுத்துக் கட்டினான் அதிர்ந்து போய் நின்ற ரமணனிடம் மீண்டும் விசா என்றதும் தயங்கியபடியே ஒரு பைலை எடுத்து நீட்டினான்.அதற்குள் இரண்டு வருடத்திற்கு முன்னர் அவன் அகதி அந்தஸ்து கோரியதிலிருந்து கடைசியாய் அவனது கோரிக்கை நிராகரித்து வந்த கடிதம் வரை எல்லாமே இருந்தது.ஒருவன் மேலோட்டமாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க டேய் தும்புத் தடியின்ரை தும்பு இங்கை கிடக்கு தடி எங்கையடா என்று மெதுவாக ரமணனிடம் கேட்ட சிவாவைப் பார்த்து இங்கு பிரெஞ்சில் மட்டும்தான் கதைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு ரமணனை சோதனை செய்தபின்னர் விலங்கை மாட்டி அழைத்துக்கொண்டு போனார்கள்.சிவாவிற்கு எதுவும் புரியாமல் தும்பின் தடியை தேடத் தொடங்கியிருந்தான் .

காவல் நிலையத்தில் வைத்து ஒரு அதிகாரி அவனின் போனை காட்டி இது உன்னுடையதா என்று கேட்ட போதுதான் ரமணனுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்திருந்தது.கலவரத்தில் கைதான ரவி அப்புறுவராக மாறி பொலிசாரின் கையில் போனையும் கொடுத்து எல்லாமே விபரமாக சொல்லிவிட்டிருந்ததால் அவனை விடுதலை செய்து விட்டிருந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு நாள் கழித்து திங்கட் கிழமை காலை போலிசார் ரமணனை நீதிபதியின் முன்னால் கொண்டு போய் நிறுத்தியிருந்தர்கள். அவனுக்கு சரியாக பிரெஞ்சு மொழி தெரியாது என்பதால் ஒரு மொழி பெயர்ப்பாளரும் வந்திருந்தார்.நீதிபதி சொன்னதை மொழி பெயர்ப்பாளர் பெயர்த்தார்.பிரெஞ்சு நாட்டின் சட்டங்களை மீறியது ..காவல்துறையினரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தது..காவல் அதிகாரி ஒருவர் கடமையில் இருந்தபோது அவர் காயமடையக் காரணமாக இருந்தது ஆகிய குற்றங்கள் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது எனவே நீங்கள் குற்றவாளிய சுற்றவாளியா ..என்று கேட்டு விட்டு நீதிபதியும் மொழி பெயர்ப்பாளரும் அவனை உற்றுப்பார்த்தார்கள்..
எப்பிடி சொன்னால் என்னை விடுவினம் அண்ணை என்று மொழி பெயர்ப்பாளரிடம் அப்பாவியாய் அவன் கேட்க, எரிச்சலுடன் அவனை முறைத்தவர் தான் கடமை தவறாது அவனது கேள்வியையும் மொழி பெயர்த்தார்.

லேசாய் புன்னகைத்த நீதிபதி மீண்டும் அவனிடம் குற்றவாளியா சுற்றவாளியா ..சுற்றவாளி எண்டால் அதை நிருபிக்க வேணும் லோயர் வைக்க வேணும் அதெல்லாம் சிக்கல் பேசாமல் குற்றவாளி எண்டு ஒத்துக்கொண்டால் பாவம் பாத்து விட்டாலும் விடுவங்கள் அல்லது இரண்டு மூண்டு மாசம் உள்ளை போட்டிட்டு விடுவங்கள் என்று நினைத்து குற்றவாளி ஐயா என்றான்.நீதிபதி தொடர்ந்தார்.. குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரது அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாலும் அவருக்கு இந்த நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் ஆவணங்கள் எதையும் கொண்டிருக்காததால் அவர் உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
ஐயோ அண்ணை அவரிட்டை சொல்லுங்கோ என்னிலை எந்தப் பிழையும் இல்லை போலிஸ்காரனுக்கு போத்திலாலை எறிஞ்சது சத்தியமா யாரெண்டு எனக்கு தெரியாது.. என்று ரமணன் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே பொலிசார் மீண்டும் விலங்கை மாட்டி அவனை அழைத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்தார்கள்.அவன் கைது செய்யப்பட்டபோது அவனிடம் இருந்த ஏழுனூறு யூரோவையும் காவல் துறையினர் எடுத்திருந்தனர்.அந்தப் பணத்திலேயே அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து விட்டு அதற்கான பில்லையும் அவனிடம் காட்டிய பின்னர் அதனை ஒரு பைலில் போட்டு வைத்திருந்தார்கள் .அன்றிரவும் அவனுக்கு உணவு வாங்கிய பில்லோடு இன்னொரு
பேப்பரையும் ஒரு போலிஸ்காரன் காட்டினான் அது அன்றிரவு அவன் ஸ்ரீலங்கா செல்வதற்கான பயணச் சீட்டு ..ரமணனுக்கு இப்போ இரவா பகலா .. என்ன நாள் என்ன நேரம் என்று எதுவுமே தெரியாதவனாய் விடை தெரியாத கேள்விக்குறி ஒன்று மட்டும் முன்னால் தெரிந்தது .

000000000000000000000000000
பாரிஸ் சார்ல் டி கோல் விமான நிலையம், எயார் லங்கா விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னராக காவல் துறையினர் வாகனத்தில் ரமணனை அழைத்துப்போய் பரிசோதனை செய்து விமானத்தில் ஏற்றி அங்கு தயாராய் நின்றிருந்த அதிகாரியிடம் பைல் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.சிறிது நேரத்தில் அவனுக்குப் பக்கத்தில் இன்னொருவன் ரமணனைப் போலவே விலங்கிட்டு கொண்டு வந்து இருத்தினார்கள்.அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் வரவே யாரது….யோசித்தான்.
பயணிகள் விமானத்தில் ஏறத்தொடங்கியிருந்தனர்.சட்டென்று நினைவுக்கு வந்தது. அருகில் இருப்பவன்தான் அன்று அவனுக்கு எதிரே இருந்து ஓடி வந்து அமைச்சரின் வாகனத்துக்கு முன்னால் படுத்தவன் ,அவனே தான் ..காவலுக்கு வந்த அதிகாரி அவர்களுக்கு சீட் பெல்ட்டை போட்டு கை விலங்கு தெரியாமல் இருக்க போர்வையால் மூடி விட்டான் .விமானம் பயணிகளால் நிரம்பி உறுழத்தொடங்கியிருந்தது ..இதுவரை தனியாகப் போகிறோமே என்று கவலையோடு இருந்தவனுக்கு கொஞ்சம் தெம்பாக இருக்க பக்கத்தில் இருந்த அதிகாரிக்கு கேட்காமல் மெதுவாக தனது தலையை குனிந்து வாயை அவனது காதுக்குள் வைத்து உங்களுக்கும் விசாப்பிரச்சனையோ… இல்லை எனக்கு சிட்டிசன் என்று அலட்சியமாகவே சொன்னான் அவன்.

அதிகாரி இவர்களை லேசாய் முறைத்துவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதற்குள் புகுந்துவிட்டான். ஒரு சிட்டிசன் காரன் உண்மையாவே உணர்வோடை போராடியிருக்கிறான் என்று நினைத்த ரமணனுக்கு பக்கத்திலிருந்தவன் உயர்த்த ராஜகோபுரமாகத் தெரிந்தான் .விசாவுக்காக கொடி பிடித்த தன்னை நினைக்க கேவலமாக இருந்தது.ஆனால் சிட்டிசன் காரனை நாடு கடத்த மாட்டங்களே..என்கிற சந்தேகத்தில் மீண்டும் அவனிடம் அப்ப எதுக்கு நாடு கடத்துறாங்கள் என்றதற்கு.ஸ்ரீலங்காவிலை கனக்க மட்டையைப் போட்டிட்டன் .என்ரை பேரை இன்ரப்போல் போலிஸ் பட்டியலிலை போட்டிட்டாங்கள் அதுதான் இப்படி ஒரு ஐடியாவைப் போட்டு அமைச்சரிண்டை காருக்கு முன்னாலை பாய்ஞ்சனான் . செய்தி பரவினதும் இங்கை ஒரு லோயரை வைச்சு இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து எண்டு வழக்காடலாம் எண்டு நினைச்சன் ஆனால் பிழைச்சுப் போச்சு என்று உதட்டைப் பிதுக்கினான்.சில வினாடிக்கு முதல் ரமணனுக்கு ராஜகோபுரமாய் தெரிந்தவன் இப்போ அமெரிக்காவின் இரட்டைக்கோபுரமாய் இடிந்து விழுந்துகொண்டிருந்தான்.அதற்கு பிறகு அவனோடு பேசவேயில்லை.

0000000000000000000000000000000000000000000000000000
ரமணன் கண்ணை விழித்துப் பார்த்தான் அவன் மீது தண்ணீர் ஊற்றப் பட்டிருந்தது, ஒருவன் அவனது விலங்கை அகற்றி விட்டு அங்கு கிடந்த துணிகளை எடுத்துக் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னான்.ஜீன்ஸ், ரீ சேட், ரேபன் கண்ணாடி, ரீபக் சப்பாத்து அணிந்து அறைக்குள் ஒரு பைலோடு நுழைந்த அதிகாரி கதிரையில் அமர்ந்து பைலைப் பிரித்து அவனைப் பார்த்து சரளமான தமிழில் , பெயர் ரமணன் தியாகராஜா..இயக்கப் பெயர் சேரமான்,சிறுத்தைப்படைப் பிரிவு,சரணடைந்து வவுனியா புனர்வாழ்வு முகம் முடித்து வெளியேறியிருக்கிறாய்.எப்பிடியோ பிரான்ஸ் போயிட்டாய் அங்கை போய் அமைச்சருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம்.தவறு உன்னிடம் இல்லை எங்களிடம்தான் என்றவன், ரமணனிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை அங்கு நின்றவர்களிடம் சை கை காட்டி விட்டு போனான்.

ஒருவன் வந்து ரமணனின் கண்ணைக் கட்டி வாகனத்தில்ஏற்றினான்.சில மணி நேரப் பயணத்தின் பின்னர் அவனை இறக்கி நடத்தினார்கள் பாதை கடினமாக இருந்தது…. சில இடங்களில் தடக்கி விழப்போனான் .இப்போ பலர் அவனைச்சுற்றி நின்று கதைப்பது கேட்டது.யாரோ அவனை அமத்தி முழங்காலில் இருத்தி கண் கட்டை அவிழ்த்து விட்டான்.வெய்யில் வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.இமைகளை வெட்டி தலையை மெதுவாக திருப்பி வலப்பக்கம் பார்த்தான் அவனைப்போலவே மேலும் இரண்டு பேர் முழங்காலில் இருத்திவைக்கப் பட்டிருந்தனர்.இடப் பக்கம் தலையைத் திருப்பினான்… காலை சாதாரண உடையில் பைலோடு வந்த அதிகாரி இப்போ இராணுவச் சீருடையில் விறைப்பாய் நின்றிருந்தான். என்ன நடக்கப் போகிறது என்று ரமணன் ஊகிக்க முன்னரே பின்னால் பல துப்பாக்கிகள் லோட் பண்ணும் சத்தம் கேட்டது கண்களை இறுக முடினான்…….. அம்மாவும் அவர் அனுப்பிய வீட்டின் வரை படமும் கண்ணுக்குள் நிழலாய் அசைய துப்பாக்கிகள் சடசடத்த சத்தத்தில் காடு அலறி ஒய்ந்தது..

000000000000000000000000000
முக்கிய செய்திகள்.. இன்று மாலை பதவியா காட்டுப்பகுதியில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகள் அமைபிற்கு தலைமை தாங்கி அதற்கு saa-000000புத்துயிர் கொடுக்க முயன்ற மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் இறுதி யுத்தம் நடந்து முடித்த பின்னர் வெளி நாடுகளிற்கு பயணம் செய்து அங்குள்ள புலிகளின் அதரவு அமைப்புகளோடு தொடர்புகளைப் பெற்று அவர்களின் நிதியுதவியோடு மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடங்கும் நோக்கோடு ஸ்ரீலங்கா திரும்பியிருந்தார்கள்.இவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் சதித்திட்டம் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நானூருக்கும் அதிகமான இராணுவத்தினர் அவர்களது மறைவிடத்தை சுற்றிவளைத்த போது சுமார் அரை மணி நேரம் நடந்த மோதலில் அந்த இடத்திலேயே மூன்று புலி உறுப்பினர்களும் கொல்லப்பட ஒரு இராணுவ வீரர் காலில் காயமடைந்தார்.அவர்களின் மறைவிடத்திலிருந்து எராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது……
கொல்லப்பட்டவர்கள் சுப்பன் வான் புலிப்பிரிவு, தயாளன் கடற்புலிப் பிரிவு ,ரமணன் புலனாய்வுப் பிரிவுகளில் இயங்கியவர்கள் என அடையாளம் காணப்பட்டு அவர்களது உடலங்கள் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.காயமடைத்த இராணுவவீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய அமைச்சர் கருத்துக் கூறுகையில் இந்த நாடு மூவின மக்களும் சமாதானத்தோடும் சகோதரத்தவத்தோடும் வாழும் நாடு.இங்கு பிரிவினைக்கோ வன்முறைக்கோ இடமளிக்க முடியாது என்றார் .செய்திகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது…………………………..

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05

1:06 PM, Posted by sathiri, No Comment

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 5

மிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததே தவிர, மற்றும்படி இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்.
அதுவரையான காலகட்டத்தில் பிரபாகரனை நிழலாக தொடர்ந்ததால், பிரபாகரனது குடும்பத்திற்கும் சொர்ணத்திற்கும் எப்படியான உறவு இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், சொர்ணம் திருமலைக்கு அனுப்பப்ட்டு விட்டார். அந்த நாட்களில் பிரபாகரனது மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கு 10 வயதுகள் இருந்தது. அவர் சொர்ணத்தை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஏதோ தற்காலிக சமாதானம் சொல்லியிருக்க வேண்டும்.
1996 இல், இம்ரான் பாண்டியன் படையணியின் நிகழ்வொன்று நடந்தது. அதற்கு பிரபாகரன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த நிகழ்வில் சொர்ணத்தை சந்திப்பேன் என சாள்ஸ் அன்ரனி நினைத்திருந்தார். ஆனால் எல்லா தளபதிகளும் வந்த நிகழ்வில் சொர்ணம் மட்டும் இல்லை. சொர்ணம் மாமாவை காணவில்லை, எங்கே அவர் என சாள்ஸ் அன்ரனி பகிரங்கமாகவே தந்தையாரிடம் கேட்டார்.
“அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இங்கே வரமாட்டார். அவர் கொஞ்சநாள் அங்கால இருக்கத்தான் வேணும்” என தந்தையார் பதிலளித்தார்.
அதற்கடுத்த நான்கு வருடங்களில் ஈழப்போரியலின் மிகப்பெரிய பண்புமாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதுவரை நினைத்தே பார்த்திருக்காத பெரும் போர்க்களங்கள் எல்லாம் நடந்தன. இந்த சமயத்தில்த்தான் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய காவலரண் வரிசையை அமைத்தார்கள். பலநூறு கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மன்னார் கடற்கரையிலிருந்து, மறு அந்தத்தில் இருந்த மணலாற்றின் நாயாற்று கடற்கரைவரை தொடர் காவலரண் அமைத்து தெளிவான எல்லைக்கோடு வகுத்து போரிட்டார்கள். இருதரப்பும் யுத்த டாங்கிகள், ஆட்லறிகள் கொண்டு மோதிக் கொண்டிருந்தன. அதாவது ஒரு மரபுப்போரின் அத்தனை அம்சங்களுடனுமான போர்.
இந்த சமயத்தில் சொர்ணம், திருகோணமலை காடுகளில் மறைந்திருந்து கெரில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இயக்கத்தில் இணைந்த காலப்பகுதில் எப்படியான போர் உத்திகளை பாவித்தாரோ, அதே உத்திகளுடனான ஒரு போர்க்களத்தில் வாழ்ந்தார். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்தது.
இந்த சமயத்தில் தமிழீழ போர்க்களம் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்கள் எதிலும் சொர்ணத்தை பங்கு கொள்ள வைக்காமல், தொலைவில் இருந்து பார்க்க வைத்து காலம் ஒரு விசித்திர கதையெழுதியது. புதிய புதிய தளபதிகள் உருவானார்கள். சொர்ணத்தின் முன்பாக மூக்குச்சளி ஒழுகத் திரிந்தவர்கள் எல்லாம், சொர்ணம் திரும்பி வந்தபோது, அவரிற்கு நிகராக களங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களில் அவர் பங்கு கொள்ளாததாலோ என்னவோ, மீண்டும் களமுனைக்கு திரும்பியவரால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதன் பின்னர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று களத்தை திறந்தார்கள். மிகப் பெரியவளங்களையும், ஆளணியையும், போரியல் உத்திகளையும் அந்தக்களம் புலிகளிடம் கோரியது. அவர்களும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஆயுதப் பஞ்சம் புலிகளிடம் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆளணிப் பஞ்சமும் ஏற்பட்டது. கிராமியப்படை, எல்லைப்படை என ஆட்களை திரட்டி சமாளித்து கொண்டிருந்தார்கள்.
இதே காலப்பகதியில் இன்னொரு தட்டுப்பாடும் அவர்களிடம் ஏற்பட்டது. யுத்தகளத்தை வழிநடத்தும் கட்டளைத்தளபதியொருவரை புலிகள் தேடினார்கள். என்னதான் புதிய நட்சத்திரங்கள் தோன்றினாலும், முழுக்களங்களையும் வழிநடத்தும் திறமை மற்றும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான தன்மை என்பனவற்றை கொண்டவரும், அதேசமயத்தில் மூத்த தளபதியாகவும் இருக்கும் ஒருவரை புலிகள் தேடினார்கள்.
இதுவரை அந்த பாத்திரத்தை வகித்து வந்த கருணா பற்றிய பல கசப்புக்கள் இயக்கத்திற்குள் உருவாகியிருந்தது. குறிப்பாக களமுனைகளில் அவர் சப்தகி முதலான சில பெண்போராளிகளுடன் கொண்டிருந்த பகிரங்க பாலியல் உறவு களமுனையிலிருந்த எல்லா போராளிகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முறைதவறிய பாலியல் உறவிற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பிற்கிடமில்லாத மரணதண்டனை வழங்கினார்கள். எனினும், ஜெயசிக்குறு களம் தீவிரம் பெற்றபின்னர், ஆட்பஞ்சம் நிலவியதாலும், வருடக்கணக்கில் போராளிகள் காடுகளில் அடைந்து கிடப்பதாலும் இந்த விவகாரத்தில் சற்று மேம்போக்கான கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். எனினும் நடைமுறைகள் ஒரு மரபாக உருவாவதைப் போல, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவென்பது தண்டனைக்குரிய அல்லது மனித நடத்தைக்கு முரணான விடயம் என்பதைப் போன்ற ஒரு மனப்பிரதிமை பெரும்பாலான போராளிகளிடம் படிந்திருந்தது. இந்த சூழலில் போராளிகளின் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தளபதியின் நடத்தை விடுதலைப்புலிகளை சங்கடப்படுத்தியது. அதற்காக அவரை தண்டனைக்குட்படுத்தவும் முடியவில்லை. ஜெயசிக்குறு களமுனையின் கட்ளைத்தளபதி அவர்தான். மற்ற மூத்ததளபதிகள் கள அனுபவமற்றிருந்தனர்.
பொட்டம்மான் விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாகரனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் களமுனையை வழிநடத்தும் நிலைக்கு அப்பால் சென்று விட்டார். மற்ற மூத்தவர்களில் ராயு, கடாபி, சூசை, பதுமன் போன்றவர்கள் தரைக்களமுனை செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவில்லை. எதோவொரு துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.  பானு, தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றவர்கள் கட்டளைத்தளபதிகளாக தங்களை நிரூபிக்காதவர்கள்.
இப்பொழுதுதான் தீபன் புதிய நட்சத்திரமாக உருவாகியிருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக பொறுப்புக்களை ஒப்படைக்கும் மனநிலையில் பிரபாகரன் இருக்கவில்லை.
எஞ்சியவர் சொர்ணம். அவர் கிழக்கில்.
ஒரு மனிதர் எவ்வளவுதான் அதிதீவிர திறமை கொண்டவர் எனினும், ஒழுக்கம், முன்னுதாரணம், அமைப்பு விசுவாசத்தில் சறுக்கினாலும் பிரபாகரன் அவருடன் சமாளித்துக் கொள்வதில்லை என்பதற்கு அந்த சமயத்தில் இரண்டு உதாரணங்கள் இருந்தன. ஒன்ற கருணா. மற்றது பால்ராஜ். நான் குறிப்பிட்ட இந்த மூத்தளபதிகள் பட்டியலில் பால்ராஜ் இருக்கவில்லை. அவர் இந்த சமயத்தில் ஒதுங்கியிருந்து விட்டு, மெதுமெதுவாக மீண்டும் அரங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார். 1998இல் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். பெருமளவு ஆட்லறிகளை கைப்பற்றிய பின்னரும், அதனை பத்திரமாக கொண்டு வரும் பாதை கைப்பற்றப்படாததால் அவை அங்கேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியடையவில்லை. இந்த தாக்குதலை வழிநடத்திய பால்ராஜ் அதன்பின், பலகாலம் முகாமில் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்தார். (பால்ராஜ் தொடர்பில் பின்னர் விரிவாக பார்க்கலாம்).
ஆனையிறவிற்கு அப்பாலான களமுனைகளில் முதற்கட்ட மாற்றம் செய்ய பிரபாகரன் நினைத்து அந்த பகுதிகளில் பால்ராஜ் கட்டளை வழங்கினார். எனினும், அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில இளநிலை கட்டளைத்தளபதிகள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன், கருணாவை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டதுடன், கிழக்கு அணியை கிழக்கிற்கே அனுப்பி வைத்தார்.
மீண்டும் சொர்ணத்தை அழைத்தார் பிரபாகரன். யாழ்ப்பாணத்திற்கான சண்டையை வடக்கிலுள்ளவர்களே பிடிக்க வேண்டும் என்பதும் பிரபாகரனின் நிலைப்பாடாக இருக்கலாம் என இந்த கட்டுரையாளர் ஊகிக்கிறார். அந்த சமயத்தில் வன்னியில் தங்கிய கிழக்கு படையணிகள் பின்தள பணிகளிலேயே ஈடுபட்டன.
மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, அரசியல்த்துறை தாக்குதலனி, சாள்ஸ் அன்ரனி படையணி என்பன களத்தில் இருந்தன. தென்மராட்சியின் பெரும்பகுதி புலிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் வரை சென்றிருந்த புலிகள் சில கிலோமிற்றர்கள் பின்வாங்கி பாதுகாப்பான பகுதிகளில் நிலைகளையமைத்து கொண்டனர். இந்த களம் சொர்ணத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மீதான புலிகளின் நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து இராணுவமும் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. இராணுவத்தரப்பிலும் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. மேஜர் ஜெனரல்கள் ஜானக பெரேரா, சரத் பொன்சேகா போன்றவர்கள் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்கள் இடைவெளி எடுத்து இருதரப்பும் தங்களை மீள் ஒழுங்கு செய்தன. இந்த அவகாசம் இந்திய தலையீட்டால் உருவானதென இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவம் தங்களை மீள் ஒழுங்கு செய்ததன் பின்னர், தென்மராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த சமயத்தில் ஜானகபெரேராவின் இராணுவ நுட்பங்கள் புலப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள சொர்ணத்திடம் எந்த உத்தியும் இருக்கவில்லை. அதுவரை மிகப்பெரும் போர்க்கள அதிசயங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு வந்த படையணிகளிற்கு என்ன நடந்ததென்பது  யாருக்கும் புரியவில்லை.
இதற்கு சில வாரங்களின் முன்னர்தான் புலிகள் இத்தாவிலில் ஒரு பெட்டித் தாக்குதல் நடத்தி ஆனையிறவை வீழத்தி தென்மராட்சிக்குள் நுழைந்தார்கள். அதே பெட்டியை ஜானகபெரேராவும் கையிலெடுத்தார். சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து, தென்மராட்சியில் படையினர் பெட்டித்தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான போராளிகள் மரணமாகிக் கொண்டிருந்தார்கள். மாலதி மற்றம் சோதியா படையணி போராளிகள்தான் அதிகளவில் இறந்தனர். போராளிகள் மரணமானதுடன், ஒவ்வொரு இடமாகவும் பறிபோய்க் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ஆளணி இழப்பில்லாத யுத்தம் பற்றி பிரபாகரன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்த சமயம். அவரது சிந்தனைக்கு நேர் எதிரான யதார்த்தம் தென்மராட்சியில் நிலவியது.
இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நவீன ஆயுதமொன்றையும் இறக்குமதி செய்திருந்தனர். 14.5 mm ரகத்தை சேர்ந்த கனரக பீரங்கியது. அந்த ஆயுதத்தை ஏனைய போராளிகளே அறியாமல்த்தான இரகசியமாக வைத்திரந்தார்கள். அதற்கு “ஆமை”யென்ற சங்கேதப் பெயரும் வைத்தார்கள். அந்த யுத்தத்தில் இராணுவத்தால் முதன்முதலில் அந்த ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலதிகமாக ஆட்களை இழக்க கூடாதென்பதற்காக விடுதலைப்புலிகள் தங்கள் படையணிகளை முகமாலைவரை பின்வாங்கிக் கொண்டார்கள். சொர்ணத்திற்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு, பயனற்றது. அவர் பற்றி மேலும் மோசமான அப்பிராயம் பிரபாகரனிடம் ஏற்பட்டது. அவர் தரையுத்தமுறைக்கே ஏற்றவர் அல்லவென நினைத்தாரோ, அல்லது அளவிற்கதிகமாக அவரை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்க நினைத்தாரோ தெரியவில்லை, அவரிற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினார். அவர் கடற்புலிகளிற்கு மாற்றம் செய்யப்பட்டார். சூசை தலைமையில் இயங்கிய கடற்புலிகளில், மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பாக சொர்ணம் நியமிக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகள் அடுத்த நெருக்கடியை சந்திக்கும் வரை அவர் அந்த பொறுப்பிலேயே இருந்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய வேண்டியிருந்தது. “கிழக்கு குழப்பக்காரர்களை” கட்டுப்படுத்த பிரபாகரன் தேர்வு செய்தது சொர்ணத்தை. ஏற்கனவே மாத்தையா விவகாரத்தையும் அவர்தான் கையாண்டார். என்னதான் களமுனை செயற்பாடுகளில் அதிருப்தியிருந்தபோதும், அவர் பற்றிய நம்பிக்கை பிரபாகரனிடம் குறைந்து விடவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
கிழக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், சொர்ணம் மீண்டும் திருகோணமலை பொறுப்பாளராகினார்.
திருகோணமலையின் மாவிலாற்று பகுதியில் போராளிகளின் தற்காலிக காவல்மையம் இருந்தது. இரவில் ஆற்றைக்கடக்கும் முன்னர் போராளிகள் ஆற்றின் நீரை மறித்துவிட்டு செல்வதும், மறுநாள் திரும்பும் போது திறந்து விட்டு வருவதும் வழக்கம்.
ஒருநாள் இந்த நடைமுறை தவறிவிட்டது. காவல்க்கடமைக்கு சென்ற அணி திரும்பி வரும்போது ஆற்றை திறந்துவிட மறந்து விட்டனர். ஆற்றுநீர் வராததையடுத்து, சிங்கள விவசாயிகள் நினைத்தார்கள், விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆற்றுநீரை மறித்துள்ளார்கள் என. விவசாயிகள் தரப்பில், திருகோணமலை அரசியல்த்துறை பொறுப்பாளர் எழிலனுடன் ஒரு சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளிற்கு ஒரு தொகை பெற்றோல் உள்ளிட்ட பொருட்களை வழங்க சிங்கள விவசாயிகள் தாமாக முன்வந்தார்கள். தானாக வருவதை ஏன் விட வேண்டும் என எழிலன் நினைத்தார். அதனை சொர்ணத்திடமும் சொல்லி, ஆற்றுநீர் திறந்து விட வேண்டுமெனில் சற்று அதிகமாக பொருட்கள் புலிகளால் கோரப்பட்டது. இதன் பின்னர் நடந்தவை வரலாறு.
சொர்ணம் தலைமையில் மூதூர் மீது ஒரு படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் மீது மிகை மதிப்பீடு உலகளாவிய அளவில் இருந்தது. ஏன், விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. அந்த நடவடிக்கையின் முடிவில், முழு திருகோணமலையையும் விட்டு புலிகள் பின்வாங்கி வந்தனர்.
சொர்ணம் வன்னி வந்ததன் பின்னர், இந்த கட்டுரையாளர் உள்ளிட்ட சில நண்பர்கள் கூடியிருந்த சமயம் ஒன்றில் சொர்ணத்தை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர், திருகோணமலையில் என்ன நடந்ததென கேட்டார். சொர்ணம் தனது வழக்கமான பாணியில் சிரிப்புடன் பதில் சொன்னார். “எடேய்.. எங்கடயாக்களின்ர கோமணம் எந்தளவில இருக்குதென்டு பார்க்க, ஒரு ரெஸ்ற் நடத்தின்னான். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டுது. தொங்கல் வரை ஓட நீங்களும் ரெடியாக இருங்கோ” என்றுவிட்டு போனார்.
இதன் பின்னர் யுத்தம் வன்னிக்கு வந்தது. மன்னாரில் ஆரம்பித்த யுத்தத்தை எதிர்கொள்ள புலிகள் ஒவ்வொரு தளபதிகளாக மாற்றிமாற்றி பார்த்தனர். அதனால் பலன் ஒன்றும் கிட்டவில்லை. சிலர் சற்று கூடுதல் காலம் தாக்குப்பிடித்தார்கள் அவ்வளவுதான். தீபன் மல்லாவியில் சில காலம் தாக்குப் பிடித்தார். வேலவன், ஜெயபுரத்தில் தாக்குப்பிடித்தார். ஆனாலும் படையினர் கையாண்ட நீர்பரவுவதைப் போன்ற உத்திக்கு, அகன்ற களத்தில் ஒரு இடத்தில் பலவீனம் தென்பட்டாலே போதும். இதற்குள்ளால் படையினர் நுழைந்து விடுவார்கள். மல்லாவியும் வீழ்ந்ததன் பின்னர், மீண்டும் சொர்ணம் களமிறக்கப்பட்டார். ஒவ்வொரு சிறு பட்டினங்களும் ஒவ்வொரு தளபதியின் பொறுப்பில் இருந்தது. மாங்குளம் சொர்ணத்திடம் வந்தது. போர்க்களத்தில் அவரைத் துரத்திய துரதிஸ்டம் அங்கும் வந்தது.
அந்த சமயத்தில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் தீவிரம் பெற்றிருந்தது. தளபதிகள் குறிவைக்கப்படாமல் இருக்க, களமுனைகளிற்கும், மூத்ததளபதிகளிற்கும் இரும்புக்கவசமிட்ட பவள் கவசவாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மாங்குளத்தில் நடந்ததை அந்த சமயத்தில் போராளிகள் பகிடியாக இப்படி சொல்வார்கள். மாங்குளம் களத்திற்கு சொர்ணம் பவள் கவசவாகனத்தில் சென்றார். சில நாளிலேயே நடந்து பின்வாங்கி வந்தார். ஏனெனில், இராணுவத்திடம் அவரது பவள் கவசவாகனமும் சிக்கிக் கொண்டது.
இதன் பின்னர் புலிகளிற்கு தெரிவுகள் இருக்கவில்லை. எல்லாப்பக்கத்தாலும் யுத்தம் அவர்களை சூழ்ந்து விட்டது. பிரபாகரன் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சொர்ணத்தை ஏற்கனவே இரண்டுமுறை தனக்கு துணையாக அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இபபொழுது மூன்றாவது முறையாகவும் அழைத்தார். யுத்தம் புதுக்குடியிருப்பிற்கு வந்து விட்டது. இந்த சமயத்தில் சிதறியிருக்கும் விடுதலைப்புலிகளின் வளங்களையும், ஆளணியையும் ஒருங்கிணைக்க பாதுகாப்பு செயலர் என்ற ஒரு பதவிநிலையை புலிகளும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் முதலாவது பாதுகாப்பு செயலர் தமிழேந்தியப்பா. அந்த சமயத்தில் புலிகள் கேப்பாப்பிலவின் மீது ஒரு தாக்குதல் நடத்தினார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் செய்த குறிப்பிடும்படியான ஒரேயொரு வெற்றிகரமான தாக்குதல் அதுதான். அவர் கணக்கில் புலி. அது மாதிரி எந்த தளபதியிடம் எத்தனை போராளிகள் உள்ளனர் என்பதை பார்த்து, பொறுக்கியெடுப்பதிலும் கில்லாடி. ஆனால், இந்த திறமை மட்டும் போதவில்லை போலும். மற்றும் இன்னதென இந்த கட்டுரையாளரால் தெளிவாக குறிப்பிட முடியாத காரணங்களினால் அவர் மாற்றப்பட்டு, சொர்ணம் அந்த பொறுப்பை எடுத்தார்.
ஆனந்தபுரம் சண்டையும் முடிந்ததன் பின்னர், புலிகள் தவிர்க்கவே முடியாத ஒரு வலிந்த தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் தளபதிகள் இருவர். ஒருவர் சொர்ணம். மற்றவர் சாள்ஸ் அன்ரனி. முள்ளிவாய்க்கால், மாத்தளன், சாலை உள்ளிட்ட நிலப்பிரப்பை பிரிக்கும் சிறுகடலை கடந்து தேவிபுரம் பகுதியில் ஏறுவதுதான் திட்டம். அதன் பின்னர், சுதந்திரபுரம் பகுதிவரை பக்கவாட்டாக பரவி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஏறுவது. இராணுவத்தின் பின்தளத்தை குழப்புவது இதுதான் திட்டம். கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இரண்டு மூன்றுநாள் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 800 போராளிகள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில்  விடுதலைப்புலிகளில் ஏற்பட்டிருந்த இன்னொரு மாற்றத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி அமைப்பிற்குள் குறிப்பிடும்படியான நிலைக்கு முன்னகர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் கனிணி பிரிவுதான் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு நிர்வாக அலகு என்பதற்கு அப்பால், தனியான இயக்கத்தைப் போல ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டன. இதனால் போராளிகள், நீ பிரபாகரனின் இயக்கமா, சாள்ஸின் இயக்கமாக என பகிடியாக கேட்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.
சாள்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளன். மோசமான தலைவன். அவரது நிர்வாக நடைமுறைகள், போர்க்களக்கதைகள் பற்றிய நகைச்சுவை சம்பவங்களை ஒருபெரும் திரட்டாகவே தயார் செய்யலாம். அவரை போராளிகள் இரகசியமாக புலிகேசியென அழைத்து வந்தனர். (இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னனை ஒத்த செயற்பாடுகளை குறிக்க அந்த பெயர் பயன்படுத்தப்பட்டது)
சாள்ஸின் வரவு தளபதிகளிற்குள் என்னவிதமாக எண்ணத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் தெளிவாக குறிப்பிட முடியாதென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், அப்படியான சம்பவங்கள் பரவலாக பதிவு செய்யப்படவில்லை. பல தளபதிகள் சாள்ஸை அரவணைத்து செல்லவே விரும்பினார்கள். இவர்களில் பானு முன்னிலையில் இருந்தார். இதனால், பானு எது சொன்னாலும் சரியாக இருக்குமென சாள்ஸ் நம்பினார். சாள்ஸ் தொடர்பான எதிர்மறையான இரண்டு சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. கடற்புலிகளின் தளபதி சூசை சாள்ஸின் முன்னிலைக்கெதிரான அதிருப்தியை பல சந்தர்ப்பத்திலும் காட்டினார். சாள்ஸ் நடத்திய பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் இரண்டு விதமாக சாள்ஸை பேசியிருக்கிறார்.
ஒருமுறை, “கொப்பர் உருவாக்கினதெல்லாததையும் அழிக்கிறதுக்கென்டே பிறந்திருக்கிறாய்” என பல போராளிகளின் மத்தியில் மாத்தளனில் பேசினார். மற்றது இன்னும் கடுமையானது. தமிழுணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைப்பது. அதனை சூசை பற்றிய பகுதியில் பார்க்கலாம்.
தேவிபுரத்திற்குள் புலிகளின் படையணிகள் நுழைந்ததும், படையினர் வேவுவிமானங்களின் உதவியுடன் அந்த சாவலை எதிர் கொண்டனர். அணிகள் நகர்வதை வேவுவிமானங்களினால் அவதானித்து, தரை நகர்வு மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த சண்டை மிகமோசமான தோல்வியில் முடிந்தது.
சண்டையின் இரண்டாம் நாளே சொர்ணம் மிக மோசமாக காயமடைந்தார். அவரது கால்த் தொடை எலும்பொன்று உடைந்தது. சாள்ஸ் அன்ரணியும் காயமடைந்தார். இதனையடுத்து அணிகள் பின்வாங்கத் தொடங்கின.
இந்த சமயத்தில் தேவிபுரத்தில் 75 பேரைக் கொண்ட பெண்கள் அணியொன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அத்தனைபேரும் இரண்டொருநாள் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள். இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டதும், அவர்கள் ஒரு தோட்டாவைத்தானும் சுடாமல் கைகளை உயர்த்தி விட்டனர்.
அவர்கள் முன்னரங்க நிலைகளில் இருந்த படையினரின் உடற்தேவைக்காக பகிர்ந்து வழங்கப்பட்டார்கள். பின்னர், மாத்தளன் வைத்தியசாலைக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் இருந்த படையினரின் முன்னரங்க மண்ணரனில் நிர்வாணமாக ஏற்றிவிட்டனர்.
அந்த யுத்தகளத்தில் எதிர்த்தரப்பை கோபமடைய வைக்க இப்படியான நிறைய வேலைகள் நடந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு வழிகளிற்குள் நுழைந்த படையினர் அந்த பெண்கள் பற்றிய கிண்டல்களை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்களிற்கு எதிர்முனையில் தமது சகபோராளிகளான பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தது, முன்னரணில் இருந்த போராளிகளிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அது அவர்களின் உளவுரணை சிதைக்கவல்லது. காலையில் ஏற்றப்பட்டவர்கள். விடயம் சாள்ஸ்சின் ஆலோசனையில் இருந்து, பின்னர் அவர் தனது தந்தையுடன் ஆலோசித்தார். அந்தப்பெண்களின் கைகளில் துவக்கு கொடுக்கப்பட்டிருந்ததுதானே. இனி நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியே வைத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சினைப்பர் அணி அந்தப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மண்ணரனில் நின்றவர்களை சுட்டார்கள். அது தவிர, எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதன் பின்னர், சொர்ணம் படுத்த படுக்கையாகவே இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தே களத்தை வழிநடத்தினார். அவர்தான் முழு களத்தையும் கவனித்து கொண்டிருந்தார்.
இதே சமயத்தில் அவர் தன்னுடனிருந்த போராளிகளிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். “அண்ணைக்கு ஏதும் நடக்க முதல் நான் செத்திடுவன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் ஆளணி தட்டுப்பாடு, ஆயுதத்தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. இதனால் களமுனைகளை கட்டுப்படுத்த முடியாமல் சொர்ணம் திண்டாடிக் கொண்டிருந்தார். அந்த தட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பத்தில் அவரை விரக்தியடைய வைத்தது. தொலைத் தொடர்பு கருவியிலேயே அனைவரும் அனைத்தையும் பேசிக் கொண்டனர். பின்தளங்களிற்கு வந்து சந்திக்க பொழுதும் இடமும் இருக்கவில்லை. இந்த கட்டுரையாளர் சொர்ணத்தின் கட்டளைகளையும், விரக்தி பேச்சுக்களையும் தொடர்ந்து தொலைத்தொடர்பு வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார்.
2009 மே 14ம் திகதி அன்று காலையில் கட்டளைத்தளபதி வேலவனுடன் சொர்ணம் ஏதோ தர்க்கப்பட்டு கொண்டிருந்தார். ஆளணி பற்றாக்குறையையடுத்து, வேலவனின் உதவியாளர்களையும் களமுனைக்கு அனுப்பும்படி சொர்ணம் சொல்ல, வேலவன் ஏதோ அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இது நடந்து ஒரு அரைமணித்தியாலத்திற்குள்- காலை சுமார் 10 மணியிருக்கும், அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அவருக்கு மிக அருகில் எறிகணையொன்று விழுந்தது. அதன் சிதறலில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட காலைவிட மற்றக்காலிலும் காயமடைந்து விட்டார். அவரிற்கு அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர்களும் சுதாகரிக்க முன்னர், தனது கழுத்தில் இருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு மரணமானார். அவரது உடலத்தை அந்த முகாமிலேயே (வெள்ளாமுள்ளிவாய்க்கால்) போராளிகள் புதைத்தனர்.
(அவர் 2009.05. 14 அன்று மரணமானபோதும், அவர் 15ம் திகதி இறந்ததாகவே தற்போது குறிப்பிடப்பட்டு வருகின்றது)