Navigation


RSS : Articles / Comments


9:30 AM, Posted by sathiri, One Comment

நிழலாடும் நினைவுகள்

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக

லெப் கேணல் அப்பையா அண்ணைஅப்பையா அண்ணை

புலிகள் இயக்கத்தின் தலைவரிலிருந்து புதிதாய் சேர்ந்த போராளிகள் வரை அவரை அழைப்பது அப்படித்தான் இயக்கங்கள் பல ஆரம்பித்த எண்பதுகளில் இயக்க பெடியள் என்றாலே இருபதுவயது கார இளைஞர்கள் மட்டுமே என்கிற எல்லாரது எண்ணங்களையுமே மாற்றியமைத்து புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே 50 வயதான ஒரு மனிதர் இருந்தார் என்றால் அது அப்பையா அண்ணைதான்.

ஈழ பொராட்ட வரலாற்றில் ஆரம்பங்களில் இலங்கையில் எங்கு கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் மக்களிற்கு புலிகள் இயக்கம் தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் புலிகள் இயக்கத்தினரிற்கோ உடனே ஞாபக்திற்கு வருபவர் அப்பையா அண்ணை காரணம் அண்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளிற்கு எதிராக நடாத்த பட்ட அத்தனை கண்ணி வெடித்தாக்குதல்களிலும் அப்பையா அண்ணையின் பங்கு இருந்தது.

1982ம் ஆண்டு யாழ் காரைநகர் வீதியில் பொன்னாலை பாலத்தில் வைத்து புலிகளால் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதல் ஒன்று சரியாக வெடிக்காததால் இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த தாக்குதல் பற்றி புலனாய்வு செய்ததில் அதில் அப்பையா அண்ணையின் பங்கு இருந்ததை தெரிந்து கொண்டு அன்றிலிருந்து அவரும் அரசபடைகளால் தேடப்பட அவரும் மற்றைய போராளிகள் போல தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளபட்டார்.

ஆனால் புலிகள் மீண்டும் இன்னொரு கண்ணிவெடித்தாக்குதலிற்கு திட்டமிட்டு அதற்கான கண்ணிவெடி மற்றும் வெடிக்கவைக்கும் பொறிமுறைகளை தயாரிக்கும் பணி அப்பையா அண்ணையிடம் ஒப்படைக்கபட்டது.அப்பையா அண்ணையும் அந்த பணியை செய்துமுடித்து விட்டு மற்றைய போராளிகளிடம் அதை ஒப்படைக்கும் போது சொன்னார் சொன்னார் தம்பியவை இந்த முறை பிழைக்காது என்றார். அவர் சொன்னது போலவே அந்த தடைவை பிழைக்கவில்லை1983 ம்ஆண்டு யூலை மாதம் 23 ந் திகதி இரவு 11 மணியளவில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியடியில் இலங்கை வரலாற்றையே புரட்டிபோட்ட அந்த கண்ணி வெடி வெடித்தது.

அந்த தாக்குதலில் அப்பையா அண்ணையும் பங்களித்திருந்தார். அதன்பின்னர் கண்ணிவெடிகள் செய்வது மட்டுமின்றி வெவ்வேறு என்னென்ன வடிவங்களில் எல்லாம் வெடிபொருட்களை பயன்படுத்தி எதிரிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து புதிது புதிதாய் ஏதாவது ஆராச்சிகளில் ஈடுபட்டு கொண்டேயிருப்பார் அது மட்டுமல்ல பல போராளிகளிற்கும் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஊட்டி பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்.அது மட்டுமல்ல போராட்டத்தின் ஆயுதபாவனையில் புதியமுறைகளை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் அவரிடம் இருக்கும். இன்று புலிகளின் இராணுவ அணியில் கிட்டு பீரங்கி படையணி குட்டிசிறி மோட்டார் என்று தனி படை பிரிவுகள் இயங்குகின்ற வேளை இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக அப்பையா அண்ணை இருந்தார் என்றாலும் மிகையாகாது.

புலிகள் மோட்டார் செல்களை தயாரிக்க தொடங்கிய காலம் அப்பையா அண்ணை மானிப்பாய் பகுதிகளில் இரு ஆயுததொழிற்சாலைகளை நிறுவி கண்ணிவெடிகள் மோட்டார் ஏவும் குளாய்கள் செல்கள் என்று என்று தாயாரிப்பில் இறங்கினார். அந்த காலகட்டங்களில் குறைந்தளவு தொழில் நுட்பவசதிகளுடன் உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இவைகளையெல்லாம் தயாரிக்கவேண்டிய கட்டாயம்.எனவே எங்கு பழுதடைந்த ( C.T.B ) இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துவண்டிகள் இருந்தாலும் அவற்றை கட்டியிழுத்து வந்து வெட்டி உடைத்து உருக்கி செல்லாக வடிவமைத்து கொண்டு போய் யாழ் கோட்டைபகுதியில் காவல் கடைமையில் இருக்கும் போராளிகளிடம் கொடுத்து சொல்லுவார் இண்டைக்கு யாரோ சிங்களவனுக்கு காலம் சரியில்லை தம்பி அடியடா என்பார் போராளிகளும் அதை வாங்கி செல்லை குளாயில் போட்டு பின்பக்கம் திரியை கொழுத்தி விடுவார்கள் அதுவும் அவை உள்ஊரிலேயெ குறைந்தளவு தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டிருந்ததால் சீறியபடி எழுந்து அங்கும் இங்கும் ஆடியபடிபோய் கோட்டை பகுதிக்குள் விழும்

வீழ்ந்ததம் சில வினாடிகளில் வெடித்து சத்தம் கேட்கும் போராளிகளும் அப்பையா அண்ணையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து துள்ளி குதிப்பார்கள்.சில நேரங்களில் அவை வெடிக்காமலும் போகும் ஆனாலும் சோர்ந்து போக மாட்டார் அடுத்தடைவை வெடிக்கும் என்று போராளிகளிற்கு நம்பிக்கையூட்டிவிட்டு போவார்.யாழில் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் முதன் முதலில் நடந்த கைதி பரிமாற்றம் ஒன்றின் போது அன்றைய புலிகளின் யாழ்மாவட்ட தளபதி கிட்ண்ணாவிடம் யாழ் கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கொத்தளாவளை சொன்னார் நிங்கள் அனுப்பிய அலுமினியம் கோட்டைக்குள் நிறைந்து கிடக்கிறது முடிந்தால் இரண்டு வாகனம் அனுப்புங்கள் எற்றி அனுப்பிவிடுகிறேன் அதுமட்டுமல்ல உங்கள் செல்லுங்கு பயந்து இருபத்தி நாலு மணி நேரமும் ஆமிகாரர் பாவங்கள் பங்கருக்குள்ளையே தான் வாழ்க்கை என்று சொல்லி சிரித்தார்.

ஒரு நாள் மானிப்பாய் வீதியில் தன்னுடைய 90 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு போராளியுடன் போய் கொண்டிருந்தார். அங்கு ஒரு வாகனங்கள் திருத்துமிடத்தின் முன்னால் சில இரும்பு கழிவுபொருட்கள் குவித்து வைக்கபட்டிருந்தது அப்பையா அண்ணை பின்னால் இருந்த போராளியிடம் தம்பிடேய் ஒடிப்போய் கராச்காரரிட்டை அந்த இரும்புகள் தேவையா எண்டுகேள் தேவையில்லாட்டி ஒரு பையிலை அள்ளிகொண்டுவா என்றார்.அந்த போராளியோ அண்ணை எதுக்கு அந்த கறள்பிடிச்ச இரும்புகள் பேசாமல் நடவுங்கோ என்றான் .

ஆனால் அவரோ விடுவதாய் இல்லை தம்பி அதுகளை வெட்டி பண்டிக்கை ( பண்டி சாச் என்பது ஒரு கண்ணிவெடியின் பெயர்) போட்டு அடிச்சா ஆமிகாரன் உடைனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கி வருத்தம் வந்து சாவான் என்றார்.இப்படி தமிழீழத்தின் பகுதிகளில் கிடைத்த சிறிய ஆணிகள் கம்பிகள் இரும்புகள் என்று எல்லாவற்றையுமே எதிரிக்கு எதிராய் எப்படி திருப்பலாம் என்று சிந்தித்து செயல்பட்டவர். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் புலிகளிற்கு விமானப்படை ஒன்றை உருவாக்கும் கனவும் ஒன்று அவரிடம் இருந்தது அதற்கான தயாரிப்பு வேலைகளிலும் அவர் இறங்கி இரு விமானங்களையும் தயாரித்திருந்தார் அவையின் பரீட்சாத்தமான பறப்புகள் வெற்றியை தரவில்லை பின்னர் இந்திய படையின் வருகை அவரின் தொடர் முயற்சிக்கு முட்டுகட்டையாக அமைந்து விட்டது மட்டுமல்ல மானிப்பாயில் அமைந்திருந்த இவரது தொழிற்சாலையும் இந்திய படைகளால் தாக்கியழிக்கபட்டது.

ஆனாலும் இவரது தொடர் முயற்சியின் பயனாக கிடைத்த பல கண்டுபிடிப்புகளான கண்ணி வெடிகள் கடல்கண்ணிகள் மோட்டார் செல்கள் என்று புலிகள் இயக்கத்தின் போராட்டகாலத்தில் அவைகளிற்கு பெரிதும் உதவியது.பின்னர் 1997ம் அண்டு யெயசுக்குறு காலப்பகுதியில் அவரது தள்ளாதவயதில் மல்லாவி பகுதியில் வைத்து கடத்திகொண்டுபோய் கொலைசெய்யபட்டார். இன்று புலிகளின் படையணியினர் ஏவியதும் சீறியெழுந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கு தவறாமல் துல்லியமாக எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஆட்லெறி செல்களை பார்க்கும் போது அன்று அப்பையாண்ணை செய்து ஏவியதும் ஆகாயத்தில் ஆடியாடி போகும் அந்த அலுமினிய செல்களையும் அதன் பின்னால் இருந்த அவரது உழைப்பையும் அவரையும் ஒரு கணம் நினைவு கூருவோம்.

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..

7:17 AM, Posted by sathiri, One Comment

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..
எழுதியவர் துரைரத்தினம்
Monday, 15 January 2007
- தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''...
பொதுநிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.
திருமாவளவன் அவர்கள் அண்மையில் சுவிஸிற்கு வருகை
தந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள்
காலையில் அவர் தாயகம் திரும்பிச்செல்லும் வழியில் சூரிச்
விமானநிலையத்தில் நிலவரம் இதழுக்காக அவரை சந்தித்தேன்.
குறுகிய நேரத்தில் அவர் வழங்கிய சிறப்பு செவ்வியை இங்கே
தருகிறோம்.
( இரா.துரைரத்தினம் )

கேள்வி: -
தமிழக அரசியலில் எப்போது நுழைந்தீர்கள், ஈழத்தமிழர் விவகாரத்தில் அதிகஈடுபாடு கொள்ளவைத்த காரணம் என்ன?
பதில்:-
1990களில்தான் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை உருவாக்கி அரசியல் கட்சியாக செயற்பட்டு வருகிறோம். 1980களிலிருந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். தமிழீழம் விடுதலைபெற வேண்டும் என விரும்புகிற பல்வேறு அமைப்புக்களில் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் ஒன்று . உலகத்தில் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் அதை விடுதலைப்புலிகளால்தான் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து எமது தார்மீக ஆதரவை வழங்கிவருகிறோம்.
கேள்வி :_நீங்கள் இப்போது ஆளும் தி.மு.க கூட்டணியில் இருக்கிறீhகள் அதில் இணைந்தபோது தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னார் சேரவேண்டிய இடத்தில் நீங்கள் சேர்ந்திருப்பதாக இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
பதில்:-
இனம் இனத்தோடு சேர்ந்திருப்பதாக கலைஞர் சொன்னார். தமிழ் இனத்தின் மீது தி.மு.கவுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் தமிழ் இன விடுதலையில் அக்கறையோடு செயற்படுகிறது. அதனால்தான் அவர் இனம் இனத்தோடு சேர்ந்திருப்பதாக கூறினார் என நினைக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்தோம். தங்களுடைய வேட்பாளர்களை விலக்கி எங்களுக்கு இடங்களை கலைஞர் ஒதுக்கி தந்தார். இப்போது கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கணிசமான வெற்றி பெற்று நகரசபை தலைவர் துணைத்தலைவர் உட்பட பலபதவிகளை பெற முடிந்தது. எனவே கலைஞரின் அரவணைப்பு எங்களை வெகுவாக ஊக்கப்படுத்தியிருக்கிறது.
கேள்வி :-
ஈழத்தமிழர் விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அனுதாபம் காட்டினாலும் உரியமுறையில் அழுத்தம் கொடுக்காது ஒரு நளுவல் போக்கை கடைப்பிடிக்கிறார் மத்திய அரசின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு என சொல்லி நளுவிக்கொள்வதாக சில விமர்சனங்கள் வருகின்றனவே?
பதில்:-
கலைஞர் அவர்கள் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் தமிழீழத்தை ஆதரிக்க வேண்டும், இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தொடர்ந்து சொல்லிவருகிறோம். காங்கிரஷ் உள்ளிட்ட தோழமைக்கட்சிகளுடன் தான் தி.மு.க ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது இடையூறு இல்லாது ஆட்சியை நடத்துவது என்ற அடிப்படையில் இக்கருத்தை கலைஞர் சொல்லியிருக்கலாம். நாங்கள் தோழமையுடன் கலைஞருக்கு வலியுறுத்தி வருகிறோம். உங்கள் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே தமிழீழ சிக்கலுக்கு விரைந்து தீர்வு காணமுடியும் என்றும் திராவிட முன்னேற்ற கழகம் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தி.மு.கவின் நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் வற்புறுத்தி வருகிறோம்.
கேள்வி:-
ஈழத்தமிழர் விவகாரத்தில் எத்தகைய அளுத்தத்தை திமுக மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கீர்கள்?
பதில்:-
இந்திய அரசு தமிழீழத்திற்கு ஆதரவாக செயற்படக்கூடிய வகையிலே தமிழீழத்தை வென்றெடுப்பதற்கு உறுதுணையாக நிற்கக்கூடியவகையிலே தி.மு.கஅரசு வற்புறுதத வேண்டும் என விரும்புகிறோம். ஏனென்றால் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ராடார் போன்ற கருவிகளை கொடுத்து உதவிவருகிறது. அதிவேக விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்கிவருகிறது. இவ்வாறான உதவிகளை சிங்களவர்களுக்கு செய்வதன் மூலம் சிங்களவர்கள் நிமிர்ந்து நின்று தமிழ் இனத்தை அழித்து வருகிறார்கள். தமிழாகளை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்த நினைக்கிறார்கள். ஆகவே தமிழர்களுக்கு விரோதமாக இந்திய அரசு செயற்படக்கூடாது. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இந்திய அரசு உறுதுணையாக நிற்கவேண்டும் என தி.மு.க இந்திய மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
கேள்வி:-
சென்னையில் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் நடத்துகின்ற போராட்டங்களை எந்த அளவிற்கு மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது?
பதில் :-
தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக்கட்சிகளும் வெளிப்படையாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்து கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்திவருகிறன. இந்திய அரசு இவற்றை உன்னிப்பாக கவனித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சிங்கள அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வந்தபோது அவரை வரவேற்கக்கூடாது திருப்பி அனுப்ப வேண்டும் என போராட்டங்களை நடத்தினோம். ஆனால் இந்திய அரசு அதை பொருட்படுத்தவில்லை என்பது தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் கவலைதான். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை இந்திய அரசு மதிக்கவில்லை அவர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என வேதனைப்படுகிறோம். இவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசு மதிக்க தவறினால்…………….தொடர்ந்தும் மக்கள் பொறுமை காப்பார்கள் என மத்திய அரசு நினைக்க கூடாது.
வாகரைப்படுகொலை நடந்த போது இந்திய அரசு இனியும் மௌனம் காப்பது சரியல்ல என கலைஞர் தெரிவித்திருந்தார். தமிழீழம் தவிர்க்க முடியாத தேவை என்பதையும் கலைஞர் தெரிவித்திருக்கிறார். கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும். இதற்காக கலைஞரை தொடர்ந்து வலியுறுத்;தி வருகிறோம்.
கேள்வி:-
ஈழத்தமிழர் விடயத்திலும் விடுதலைப்புலிகள் விடயத்திலும் எதிர்புணர்வுகளை காட்டிவந்த ஜெயலலிதா தற்போது அமைதியாக இருக்கிறார். ஏதாவது மனமாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் பதவியில் இல்லாத காரணத்தால் மௌனமாக இருக்கிறாரா ?
பதில்:-
மனமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த போது செஞ்சோலை படுகொலைலையை கண்டித்து அறிக்கை விட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜெயலலிதா அக்கொலையை கண்டித்து அறிக்கை விட்டார். கோவையில் சிங்கள காவல்துறையினருக்கான பயிற்சியை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தபோது எங்களுடன் சேர்ந்து அதிமுக உறுப்பினர்கள் 60பேரும் வெளிநடப்பு செய்தார்கள். இவை எல்லாம் அதிமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள்.
கேள்வி :-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரர் தினஉரையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு தமிழீழ தனியரசு என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான பாதையை மட்டுமே திறந்து விட்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் சுதந்திர தனியரசு அமைப்பதற்கு நீதியின் வழியில் செயற்படும் நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சுதந்திர தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தார். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன தமிழக மக்கள் சுதந்திர தமிழீழ தனியரசு பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார்கள்?
புதில்:-
ஒற்றையாட்சியின் கீழ் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது ஏமாற்றுவேலை. அதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள.; சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெறுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை துடைப்பதற்காக தமிழீழ தேசிய தலைவர் சமாதான பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் என்பனவற்றிற்கு உடன்பட்டார்கள்.சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த உடன்பாட்டிற்கு அவர் ஒத்துக்கொண்டார்கள். சமாதானத்திற்கு முதல் அடித்தளத்தை அமைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது விடுதலைப்புலிகள்தான். ஆனால் சர்வதேச சமூகம் சிங்களவர்கள் பரப்புகிற அவதூறுகளை பொய் உரைகளை நம்பிக்கொண்டு விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கும் போக்கு தொடர்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான் இனி பேச்சுவார்த்தையில் பயனில்லை. ஆறு ஆண்டுகள் கடத்தியது வீணாகிவிட்டது ஆகவே பேச்சுவார்த்தைக்கு காலத்தை ஒதுக்குவது வீணான வேலை என்ற அடிப்படையில் இனி பேச்சுவார்த்தை என்ற பழைய பாதையை பின்பற்ற போவதில்லை. தமிழீழ தனியரசை அமைப்பதே ஒரே இலக்கு எனவே நீதியின் படி நடக்கிற சர்வதேச நாடுகளே தமிழீழத்தை அங்கீகரியுங்கள் என்றும்
புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களே தொடர்ந்தும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றும் தமிழ் நாட்டு தமிழர்களே தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழீழ தனியரசை அமைப்பதற்கான பிரகடனமாகவும் அந்த உரை அமைந்திருக்கிறது.

கேள்வி:-
தலைவரின் உரைபற்றி தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிராமணர்களின் ஊடகங்கள் என வர்ணிக்கப்படும் இந்து போன்ற நாளிதழ்கள் என்ன கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். ஏனைய தமிழக ஊடகங்கள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றன.
பதில்:-
இந்து துக்ளக் போன்ற ஊடகங்கள் எந்த காலத்திலும் தமிழீழத்தை அங்கீகரித்ததில்லை. விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக பார்த்ததும் இல்லை. இன்றைக்கும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். உலகநாடுகள் ஒன்று சேர்ந்து தமிழீழத்தை அங்கீகரித்தாலும் இவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆகவே இவர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எத்தனையோ தமிழ் ஊடகங்கள் இன்று தமிழீழத்தை ஆதரித்து எழுதிவருகின்றன. அவ்வாறான ஒரு ஆதரவு தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
கேள்வி:-
தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கோ தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கோ ஆதரவு இல்லை என அண்மையில் இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறாரே?
பதில்:-
சிங்களவர்களின் ஊதுகுழலாக சிலர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். இது அவர்களின் வழக்கமான பொய்யுரை. இதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு தமிழ் நாட்டில் செல்வாக்கே இல்லை. இவர்கள் என்ன பொய்யை கூறுகிறார்கள் என பார்ப்பதற்காக சிலர் இவர்களின் பத்திரிகைகளை வாங்கி படிக்கிறார்கள் அவ்வளவுதான்.
கேள்வி :-
ஈழத்தமிழர்களின் விவகாரம் தொடர்பாக மத்தியஅரசின்
போக்கிற்கு டெல்லியில் இருக்கும் சில கொள்கை வகுப்பாளர்களும் தமிழர்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு கொண்டவர்களும் தான் காரணம் என கூறப்படுகிறதே?
பதில் :-
இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிகாரிகளைக் கொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை அணுகுவது என்பது இந்திய அரசு மேற்கொண்டிருக்கிற தவறான நிலைப்பாடு . அதிகாரிகளான சிவசங்கர் மேனன், நாராணயன் போன்றவர்கள் அடிப்படையிலேயே தமிழீழ விரோத போக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அவர்கள் தவறான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் கூடாது என்கிற கருத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்கள். இதன் விளைவாகத்தான் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக செயற்படுகிறது. ஆனால் தமிழக மக்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாற்று சிந்தனையை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு செயற்பட்டு வருகிறோம்;.
கேள்வி:-
இந்திய விஜயம் தனக்கு வெற்றியை அளித்திருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறாரே, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இந்திய அரசு சில உதவிகளை இலங்கைக்கு வழங்க சம்மதித்திருக்கிறதே?
பதில் :-
அவருடைய பார்வையில் வெற்றிதான். ஏனெனில் தமிழ் நாட்டு மக்கள் போர்க்கோலம் பூண்டு எதிர்ப்புக்களை தெரிவித்தும் ராஜபக்சவை திருப்பி அனுப்புங்கள் என்று கூக்குரல் போட்டும் டெல்லியில் வைகோவும் தமிழகத்திலே விடுதலைச்சிறுத்தைகள் பாட்டாளிமக்கள் கட்சி பழநெடுமாறனின் தமிழர் தேசிய ஒருங்கிணைப்பு குழு என பல்வேறு அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தியும் இந்திய ஆட்சியாளர்கள் ராஜபக்சவை வரவேற்று சிறப்பு செய்தது மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் திருமணவைபவத்திற்கு அவர்களை அழைத்தது இவை எல்லாம் ராஜபக்சவுக்கு தென்பைக்கொடுத்திருக்கிறது. ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்தாலும் தங்களை இந்தியா வரவேற்கும் என்ற நம்பிக்கை ராஜபக்சவுக்கு இருக்கிறது. எனவே ராஜபக்ச இந்திய விஜயம் தனக்கு வெற்றி என கொண்டாடாமல் வேறு என்ன செய்வார். ஆக இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை ராஜபக்ச உணர்ந்திருக்கிறார்.
கேள்வி:-
நாராயணன் போன்ற இந்திய அரசின் வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள் கொள்கை வகுப்பாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?
பதில்:-
தமிழீழ தனியரசு உருவானால் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய இறையாண்மைக்கு இடையூறாக அமையும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. சிவசங்கர் மேனன் நாராயணன் போன்றவர்கள் திராவிட எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். திராவிட தமிழர்கள் பலமடைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தை அடிப்படையில் கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் மலரக்கூடாது என்கிற எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடம் அதிகாரிகளிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
கேள்வி:-
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதை விட அனைத்துக்கட்சிகளையும் இணைத்து பலமான சக்தியாக இருந்துகொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் என்ன?
பதில்:-
எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் போராடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தனித்தனியே ஒவ்வொரு கட்சியும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தலாம். ஆனால் திமுக சொன்னால் இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் இருக்கிறது. கலைஞர் நினைத்தால் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியும். கலைஞரைப்பொறுத்தவரை தமிழீழத்திற்கு எதிரானவர் அல்ல. அவரது கட்சியை சேர்ந்தவர்களும் தமிழீழத்திற்கு ஆதரவாகத்தான் செயற்பட்டு வருகிறார்கள். கலைஞரின் மகள் கனிமொழி தலைமையில் தமிழீழ ஆதரவு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது.


கேள்வி:-
தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை என்ன?
பதில் :-
அகதிகளின் நிலை மிக வேதனைக்குரியது. அதை நேரில் பார்த்தால்தான் தெரியும். அவர்கள் பல நெருக்கடிகளுக்கும் வசதியீனங்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். 1983லிருந்து தொடர்ச்சியாக ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். இப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதோ அவர்களுக்காக குரல் கொடுப்பதோ இதுவரையில் தமிழகத்தில் நடக்காமல் இருந்தது. முதன்முறையாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புத்தான் அகதிமுகாம்களுக்கு சென்று அவர்களது நிலையை கண்டறிந்து ஒரு அறிக்கையை தமிழக அரசிற்கு வழங்கினோம். இதன் பின்னர் முதலமைச்சர் இரு அமைச்சர்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அகதிகளுக்கு இதுவரை காலமும் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகையை அதிகரிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வசிக்கின்ற முகாம்களில் மின்சார வசதி இல்லை. குடிநீர்வசதி சரியாக இல்லை. இவற்றை சீர்செய்ய வேண்டும் என அறிக்கையில் கேட்டிருந்தோம். அகதிகள் அங்கே வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு உறவினர்களை பார்க்க போவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தனித்தனியாக வௌ;வேறு முகாமில் இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதில் சிக்கல் இருக்கிறது. சிலரை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து விடுகிறார்கள். அவர்கள் பிணையில் கூட வெளிவரமுடியாத நிலை இருக்கிறது. ஆக ஈழத்தமிழ் அகதிகள் விடயத்தில் ஒரு கடும் போக்கை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இதற்கு காரணம் அகதிகளை எப்படி நடத்துவது என்ற ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையொப்பம் இடவில்லை. எனவே ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான ஆவணத்தில் இந்தியா கையொப்பம் இடவேண்டும் அதன் அடிப்படையில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கையாக இருக்கிறது.
கேள்வி:-
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவிரும்புகின்ற செய்தி என்ன?
பதில் :-
சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். சிங்கள இனவெறியர்களின் பொய்யுரைகளை அவதூறுகளை நம்பகூடாது. விடுதலைப்புலிகள் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஒரு போதும் இடையூறாக இருந்ததில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு ஒரு போதும் தீங்கு விளைவித்ததில்லை. தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலை அமைப்பு என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினத்தை அழிக்கும் சிங்கள படைகளோடுதான் விடுதலைப்புலிகள் மோதுகிறார்கள். எனவே விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற எண்ணத்தை சர்வதேச நாடுகள் கைவிட வேண்டும். பயங்கரவாத அமைப்புக்கள் வேறு. விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் வேறு என்பதையும் சர்வதேசம் சரியாக எடை போட வேண்டும்.
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றை ஆதரவு மட்டும்தான் இன்று விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வருகிற பெரிய பலம். சிங்கள அரசுக்கும் சிங்களவர்களுக்கும் பல நாடுகள் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றன. ஆனால் எந்த நாடும் எந்த அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை. சிங்களவர்களுக்கு ஆயுத உதவிகளை மட்டுமல்ல பொருளாதார உதவிகளையும் பல நாடுகள் செய்கின்றன. எனவே ஆதரவு என விடுதலைப்புலிகளுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தளம் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவிதான். ஆகவே தமிழீழ தனியரசை அமைப்பது ஒன்றுதான் எமது இலட்சியம் என்று தமிழீழ தேசியத்தலைவர் பிரகடனப்படுத்தியிருக்கின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களது பேராதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்க வேண்டும்.
அதிகாரிகளைக் கொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை அணுகுவது என்பது இந்திய அரசு மேற்கொண்டிருக்கிற தவறான நிலைப்பாடு . அதிகாரிகளான சிவசங்கர் மேனன், நாராணயன் போன்றவர்கள் அடிப்படையிலேயே தமிழீழ விரோத போக்குடையவர்களாக இருக்கிறார்கள் தமிழீழம் கூடாது என்கிற கருத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்கள். இதன் விளைவாகத்தான் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக செயற்படுகிறது
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வழங்கிவருகின்ற இந்த ஒற்றை ஆதரவு மட்டும்தான் இன்று விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வருகிற பெரிய பலம்.
(நிலவரம் - சுவிஸ்)
படப்பிடிப்பு து.கீர்த்திகன்