Navigation


RSS : Articles / Comments


அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்

11:51 AM, Posted by sathiri, No Comment

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்
சாத்திரி (ஒரு பேப்பர்)
 April 8, 2012
பிரான்சில் தேர்தல் இந்த மே மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் François hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண்டிருந்தவர் திடீரென தேர்தல் களத்தில் குதித்தார்.தேர்தலில் குதித்த எல்லாக்கட்சிகளுமே முன்வைத்த முக்கியமான விடையங்கள் பொருளாதார சரிவு. வேலையில்லா திண்டாட்டம். வெளிநாட்டவர்களின் வருகை எனபதே பேசு பொருளாகியிருக்கின்றது. அதிதீவிர வலது சாரிக்கட்சியோ (F.N) வழைமை போல வெளிநாட்டவர் வருகையை தடுக்கவேண்டும் என்றும் பிரான்ஸ் ஜரோப்பிய ஒன்றித்திலிருந்து வெளியேறவேண்டும் என்பதே அதன் தலைவி Marine lepen அவர்களின் முக்கிய பிரச்சாரம்.நான் ஆட்சிக்கு வந்தால் முதலாவது வேலையாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்சை நீக்கி பொருளாதார கொள்கைளில் மாற்றம் கொண்டு வருவேன். அதோடு வெளிநாட்டவர் வருகை அதோடு ஆசிய ஆபிரிக்க அகதிகளின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்று அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவிட்படி சார்க்கோசி களத்தில் குதித்ததும் மற்றைய கட்சிகள் வாயடைக்க கருத்துக்கணிப்பில் சார்க்கோசியின் புள்ளிகள் மளமளவென மேலேறி சோசலிச கட்சி வேட்பாளரை தொட்டு நின்றது.இப்படி தேர்தல் களம் சூடு பிடித்துக்கொண்டிருக்கும் பேது ஒரு துப்பாக்கிச்சூடு அத்தனை யையும் புரட்டிப்போட்டது.

11 ந்திகதி மார்ச் மாதம்பிரான்சின் துலூஸ் நகரப் பகுதியில் வசிக்கும் ஒரு இராணுவவீரர் தன்னுடைய ஸ்கூட்டர் விற்பனைக்குள்ளதாக இணையத்தில் ஒரு விளம்பரத்தை போடுகிறார். விளம்பரத்தை போட்டவர் ஸ்கூட்டர் பற்றிய விபரத்தை மட்டும் போட்டிருக்கலாம். ஆனால் அவரிற்கு வேண்டாத வேலை தான் ஒரு இராணுவ வீரன் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கிறார். இங்குதான் வினையே ஆரம்பமானது. அவரது ஸ்கூட்டரை வாங்க விரும்புவதாகவும் அவர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அன்று மாலை நேரம் அந்த நகரத்தின் ஒரு பொது வாகனத் தரிப்பிடத்திற்கு வருமாறும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரிற்கு வந்திருந்தது. ஸ்கூட்டர் விற்ற பணத்தை காசாக வாங்கலாமா? காசோலையாக வாங்கலாமா ? என்று நினைத்தபடி வாகனத்தரிப்பிடத்தில் போய் காத்திருந்தவரை நோக்கி இன்னொரு ஸ்கூட்டரில் இருவர் வருகிறார்கள். வந்தவர்களில் ஒருவன் அவர் அருகில் வந்ததும் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரது நெற்றியில் பொட்டென்று போட்டவன் .அவரது ஸ்கூட்டரை எடுத்தக்கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். அப்பொழுதான் சனிபகவான் ஏழாம் வீட்டிலிருந்து சார்கோசியை பார்த்து புன்னகைக்கிறார்.15.03.12 அன்று அதே நகரத்தில் இன்னொரு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இருவர் இயந்திர தப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள். 

 இறந்தவர்கள் மூன்று பிரெஞ்சு இராணுவத்தினர். ஆனாலும் வேற்று இனத்தவர்கள். இப்பொழுது இரண்டாவது தடைவையாக சனிபகவான் சார்கோசியை பார்த்து சிரிக்கிறார். 20.03.12 அதே நகரத்தின் இன்னொரு பகுதியில் யூத இனத்தவர்களின் மத பாடசாலையின் முன்னால் ஒரு ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுடுகிறார்கள் மூன்று யூத குழந்தைகள் சுருண்டு விழுகிறார்கள்.இப்பொழுது சனிபகவான் சார்கோசியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதுவரை உள்நாட்டு பிரச்சனையாக இருந்த விடயம் சர்வதேச பிரச்சனையாகின்றது.இஸ்ரேலிய பிரதமர் கண்டிக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம் தங்கள் கமராவை பிரான்ஸ் நோக்கி திருப்புகின்றனர்.பரபரப்பாக நடந்து கொண்டிருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் இரத்துச் செய்யப்படுகின்றது. பிரான்சில் சார்க்கோசியின் நிருவாகத்தில் பொதுமக்களிற்கு மட்டுமல்ல குழந்தைகளிற்கும் பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை சோசலிச கட்சி பிரமுகர் வீசுகிறார். அமைச்சரவை கூடுகின்றது . உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றார்கள். காவல்த்துறை கொலையாளியை கண்டு பிடிக்க தனிப்படைகளை அமைக்கின்றது. அப்பொழுதான் கொலையாளி பற்றிய முதலாவது ஆதாரம் சிக்குகின்றது. முதலாவதாக சுட்டுக்கொல்லப் பட்டவனின் ஸ்கூட்டர் இலக்கத்தை எடுத்த காவல்துறை அதில் பொருத்தப் பட்டிருக்கும் எலெக்றோனிக் தகட்டினை GPS முறைமூலம் தேடிய பொழுது அது காட்டிய புள்ளியில் போய் பார்க்கின்றார்கள். அது ஒரு வாகனத் திருத்துமிடம் ஸ்கூட்டரின் எலெக்றோனிக் தகடு தனியாக கழற்றிப் போடப்பட்டிருந்தது.அடுத்ததான கொலையாளியின் தொ.பே இலக்கத்தை கண்டு பிடித்த காவல்துறையினரின் இன்னொரு பிரிவினர் அதனை ஒட்டுக்கேட்கத் தொடங்கியிருந்தனர்.கொலையாளி அடையாளம் காணப்படுகிறான் முகமட்மேரா வயது 23 அல்ஜீரிய இனத்தை சேர்ந்தவன். அவனது விலாசத்தை அறிந்து கொண்ட கவல்துறையினர் அதன் அமைவிடம் பற்றியும் அவனது குடும்பம் பற்றிய விபரங்களை உடனடியாக சேகரித்து முடித்தனர்.

21.03 அதிகாலை 03.10 மணி
கொலையாளி தனியாக வசித்து வந்த வீடு காவல்த்துறையால் சுற்றிவளைக்கப்படுகின்றது. ஆட்களின் நடமாட்டத்தை அறிந்த கொலையாளி யன்னலை திறந்து பார்த்து காவல்த்துறை சுற்றி வளைத்ததை அறிந்தது தானியங்கி துப்பாக்கியால் சுடுகிறான். இரண்டு காவல்த்துறையினர் காயமடைகின்றனர்.
அதிகாலை 03.30
காவல்த்துறையினர் கொலையாளியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதெனவும் அதே நேரம் அந்த குடியிருப்பில் உள்ளவர்களை பத்திரமாக வெளியேற்றுவதெனவும் முடிவு செய்து பேச்சு நடத்துவதற்காக ஒரு negotiator வவைழைக்கப்பட்டதோடு குடியிருப்பிலிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
காலை 5.00 மணி
பேச்சு வார்ததை நடத்துவதற்கு இலகுவாக கொலையாளிக்கு ஒரு நடைபேசி(வோக்கி ரோக்கி) கொடுப்பதெனவும் அதற்கு பதிலாக அவன் தன்னிடமிருக்கும் ஆயுதங்களில் ஒன்றை வெளியில் எறியவேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகின்றது அதற்கு கொலையாளியும் இணங்குகிறான். அவர்களது பேச்சு வார்தையை பிரான்ஸ் அதிபர் சார்க்கோசியிலிருந்து முக்கிய அதிகாரிகள் புலனாய்வு துறையினர் அனைவருமே கேட்பதற்கு வசதி செய்யப் படுகின்றது.
காலை 5.30 மணி
கொலையாளியின் குடும்பத்தில் தாயார் அவரது சகோதரி இரண்டு மூத்த சகோதரர்கள் அனைவரும் வெவ்வேறு வீட்டில் கைது செய்யப்படுகின்றனர்.
காலை 7.20 மணி
கொலையாளிக்கு வோக்கி ரோக்கியொன்று யன்னலால் எறியப்படுகின்றது அவனும் colt 45 ரக துப்பாக்கியை ஜன்னலால் எறிகின்றான். பேச்சு வார்தை தொடங்குகின்றது அவனும் தன்னை அல்லாவின் இராணுவம் என்று அறிவித்தபடி பேசத் தொடங்குகிறான்.ஆப்கானிலும் ஈராக்கிலும் பொது மக்களை கொன்றதற்காக பிரெஞ்சு இராணுவத்தினரை கொன்றதாகவும் பாலஸ்தீனத்தில் குழந்தைகளை இஸ்வேல் கொலை செய்ததற்காக அதன் வலி யூதர்களிற்கும் தெரியவேண்டும் என்பதற்காக யூதக் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்தவன் நிறையவே பேசினான்.
காலை 9.15 மணி
அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் மேலும் பல ஆயுதங்களை காவல்துறையினரால் கைப்பற்றப்படுகின்றது. கொலையாளியிள் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் இருக்கலாமென நினைத்து அந்தப் பகுதியின் மின்சாரம் தண்ணீர்.மற்றும் காஸ் இணைப்புக்கள் துண்டிக்கப்படுகின்றது.
காலை 11.00
பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒரு கி.மீற்றர் தூரத்திற்கு அப்பால் நகர்த்தப்பட்டு தடை போடப்படுகின்றது பத்திரிகையாளர்களிற்கு செய்தி கொடுப்பதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார்.இனி அவர் சொல்வதுதான் செய்தி.
மதியம் 12.05
கொலையாளி மீண்டும் தொடர்பு கொள்கிறான் நாட்டின் அதிபரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் உசாராகின்றனர். தொடர்பு கொண்டவன் தனக்கு பசிக்கின்றது ஒரு KEBAB Sandwuch நல்ல உறைப்பு சோஸ் Harisa போட்டு உனனே வேணும் என்கிறான் .அதனை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒருத்தரையொருத்தர் பாரக்கிறார்கள். ஒரு போலிஸ் அதிகாரி சைரனை சுழல விட்டபடி KEBAB வாங்க விரைகிறார்.
பி.பகல் 13.20
கொலையாளியை உயிருடன் பிடிப்பதே எமது நோக்கம் என சார்க்கோசி அறிவிக்கிறார். கொலையாளியும் மாலை சரணடைய இருப்பதாக தகவலை வெளியிடுகிறார்.இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது தீவிர வலது சாரிக்கட்சி தலைவி மரின்லூப்பன் பிரான்சில் வெளிநாட்டவர்களின் தொல்ல அதிகரித்துவிட்டது சார்க்கோசி என்ன செய்கிறார் கர்சிக்கிறார். கொலையாளியை உடைனேயே கொன்றுவிட்டால் பிரான்சில் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்கை இழக்கவேண்டிவரும். அதே நேரம் அவனை பிடித்து அரசாங்க செலவில் வைத்து பராமரிக்கவேண்டுமா என யூதர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுக்காரர்களும் கேள்வி எழுப்பினார்கள். கொலையாளி தனியாகத்தானே இருக்கிறான் ஏன் அதிரடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென ஊடகங்களும் குடையத்தொடங்கியிருந்தன.தேர்தல் நெடுங்கும் நேரத்திலையா இப்பிடி ஒருத்தன் பிரச்சனை செய்யவேண்டும் என நினைத்த சார்க்கோசி அவர்கள் உள்துறை அமைச்சரையே சம்பவ இடத்திற்கு அனுப்பகிறார். மறுநாள் காலை11.30 கொலையாளி துப்பாக்கியால் சுட்டபடி யன்னலால் பாய்ந்தபொழுது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றது.

வலையமைப்பில் பிரான்சில் இயங்கிய பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை வைத்துப் பார்க்கும் போது கொலையாளி உணவு கேட்ட தருணத்திலேயே பிரான்சின் விசேட கொமாண்டோ படையணியினர் உள்நுளைந்து கொலையாளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணைகளை நடத்தி அவனிடமிருந்து சகல விபரங்களையும் கறந்த பின்னர் அவனை சுட்டுக்கொன்றுவிட்டு . பின்னர் சாதாரண காவல்த்துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவது போல் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு கொலையாளி கொல்லப்பட்டான் என அறிவித்திருக்கலாம். ஏனெனில் இது போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் தீவிரவாதிகள் மீது விசேட கொமாண்டோ படையினரின் நடவாக்கைகள் ஒன்றும் புதியது அல்ல. ஆனால் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் சாரக்ககோசிக்கு பொங்கு சனியா மங்கு சனியா என்று பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டும்

அகதிக்கொடி (சிறுகதை)

10:09 AM, Posted by sathiri, No Comment

 அகதிக் கொடி  சிறுகதை(சாத்திரி)
   எதுவரை  இதழ் 15 

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . ஆனால் அவனும் தன்னைப்போலவே திருப்பி அனுப்பபட்டிருப்பதால் அவன் மீது பரிதாபமும் வந்தது .எல்லாமே அந்த ஆதித்தனாலை வந்ததது… அடுத்தது என்ன நடக்கப் போகுதோ என்கிற பயத்தின் காரணமாக இரவு முழுவதும் பசிக்கவில்லை, கொஞ்சம் வைன் வாங்கி குடித்தால் நித்திரையாவது கொள்ளலாம் என நினைத்து ரமணன் பணிப்பெண்ணிடம் கேட்ட போது இவர்களிற்கு காவலாக வந்திருந்த பிரெஞ்சுக் கார அதிகாரி தண்ணீரை மட்டுமே குடிக்க அனுமதி என்றுவிட்டு இவர்களது வைனையும் தானே குடித்து உணவையும் சேர்த்தே சாப்பிட்டு நன்றாக நித்திரை கொண்டு எழும்பியிருந்தான் .
sa-p2விமானம் நின்று அனைத்துப்பயணிகளும் இறங்கி முடித்த பின்னர், நான்கு பேர் விமானத்தினுள் ஏறி அவர்களிற்கு அருகில் வந்து பிரெஞ்சு அதிகாரிக்கு தங்களை அறிமுகப்படுத்தி கை குலுக்கியதும் ஏற்கனவே போடப்பட்டிருந்த விலங்குகள் அகற்றப் பட்டு புதியதாய் வந்தவர்கள் கொண்டு வந்த விலங்கை மாட்டியதும் பிரெஞ்சு அதிகாரி ஒரு பைலை அவர்களிடம் கொடுத்து விடை பெற்றான் . இருவரையும் விமானத்தை விட்டு வெளியே கொண்டு சென்றதும் விமான நிலையத்தில் ரமணனை மட்டும் தனியாக ஒரு பாதையால் வெளியே கொண்டு சென்று வெள்ளை வான் ஒன்றில் அவனை ஏற்றி கண்களை கட்டியதும் வாகனம் ஓடத் தொடங்கியது.

வெள்ளை வேனைப்பார்த்ததுமே அது பற்றி கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் அவனிற்கு மனத்திரையில் ஓடத்தொடங்கியிருந்தது மட்டுமல்ல யாரோ ஒரு பெண்ணின் பெயரும் நினைவில் வந்து போனது. அது ஏன் இப்போது நினைவில் வந்தது என்று அவனுக்கே தெரியாதது மட்டுமல்ல அம்மாவும் அக்காவும் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் காசு வருமெண்டு காவல் இருப்பினம் என்று நினைக்க எதுக்கடா பிறந்தோம் என்றிருந்தது . கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தின் பின்னர் வாகனம் ஓரிடத்தில் நின்றதும் ரமணனை அழைத்துக் கொண்டு போய் கண்னை மட்டும் அவிழ்த்து விட்டு கதவை பூட்டி விட்டு போய் விட்டார்கள்.

ரமணன் அறையை சுற்றி வரப் பார்த்தான் அது காவல் நிலையம் போல இல்லை ஒரு பொருள் கூட இல்லாத ஒரு வீட்டின் அறை போலவேயிருந்தது .மனதில் மரண பயம் தொற்றிக்கொண்டு அடுத்த செக்கன் என்ன நடக்கப் போகின்றது என்கிற படபடப்போடு திகிலானதாக கடந்து கொண்டிருந்தது. …… ஒருவன் வந்து ரமணனை இன்னொரு அறைக்குள் அழைத்துப்போனான் அந்த அறை எதோ ஒரு தொழில்கூடம் போல வகை வகையாக பல அளவுகளில் இறப்பர் குழாய்கள், கம்புகள், வயர்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது நடுவில் ஒரு வாங்கு , சுவர் ஓரமாக ஒரு மேசை இரண்டு கதிரை அவ்வளவுதான் .ரமணனின் விலங்கை அகற்றியவன் அவன் உடம்பிலிருந்த அனைத்து துணிகளையும் கழற்றச்சொன்னான். உடைகளை கழற்றி விட்டு ஜட்டியோடு நின்றிருந்தவனிடம் ஜட்டியையும் கழற்றச் சொல்லி உரத்து சொன்னதும் கொஞ்சம் கூச்சத்தோடு அதையும் கழற்றினான். மீண்டும் வலக்கையில் விலங்கை மாட்டி அவனை இழுத்துக் கொண்டு போய் வாங்கில் முகம் குப்புற படுக்க வைத்து விலங்கின் மறுபக்கத்தை வாங்கின் காலோடு பூட்டியதும் ரமணன் தனக்கு அடுத்து நடக்கப் போகும் சித்திரவதைகளை தாங்குவதற்கு மனதை தயார்ப்படுத்துவதை தவிர வேறு தெரிவுகள் எதுவும் அவனிடம் இருக்கவில்லை.

ரமணனின் பின் உடம்பு முழுதும் ஒருவன் மாறி மாறி அடித்த பின்னர், விடுகின்ற சிறிய இடைவேளையில் எதிரே கதிரையில் இருந்த ஒருவன் தனது கைத்தொலை பேசியில் அனைத்தையும் படமாக்கியபடி கேள்விகளைக் கேட்பான். ரமணன் பதில் சொன்னதும் திரும்ப அடி விழும் .அவனின் முதலாவது கேள்வி ..உனக்கு லீடர் யார் .. லீடர் என்றால் ஆதித்தன் பெயரைத் தான் சொல்ல வேண்டும் ஆனால் யாரும் இல்லை சார் என்று முனகினான்.ஒ அப்போ நீதான் லீடரா என்றதும் மீண்டும் அடிவிழத் தொடங்கும்.நீங்கள் எத்தனை பேர் …யார் உங்களுக்கு பணம் தருவது ,உங்கள் திட்டம் என்ன… இப்படி கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் ரமணனிடம் பதில் இல்லை ….விழுந்த அடியில் ஒன்று கழுத்துக்கு கீழே முள்ளந்தண்டில் விழ தலை சுற்றி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது …
0000000000000000000000000000000000000000000000
வேலையால் வந்த ரமணன் கடிதப் பெட்டியை திறந்தான் வழக்கம் போல விளம்பரங்களாலும் பணம் காட்ட வேண்டிய பில்களாலும் நிரம்பிப் போயிருக்கும் கடிதப் பெட்டியில் எப்போதாவதுதான் தேவையான அல்லது முக்கியமான கடிதம் வந்திருக்கும்.அன்று அவனுக்கு இரண்டு கடிதம் வந்திருந்தது. ஒன்று அவனது அம்மாவின் கடிதம் அடிக்கடி போனில் கதைத்தாலும் அம்மா கடிதம் எழுதுவதை நிறுத்துவதில்லை அது தேவையானது .அடுத்தது முக்கியமான கடிதம் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது.கொஞ்சம் படபடப்போடு அதைப்பிரித்தான் பிரெஞ்சு மொழியில் இருந்த கடிதம் புரியவில்லை உடனே அவனுக்கு கேஸ் எழுதின ஆதித்தனுக்கு போனடித்தவன் அண்ணை கொமிசனிலயிருந்து கடிதம் வந்திருக்கு போனமுறை வந்தது போலத்தான் இருக்கு என்றதும், அவர் உடனே கடிதத்தை கொண்டு வரச் சொல்லியியிருந்தார்.ரமணன் வீட்டுக்குள் போகாமல் திரும்ப சுரங்க ரயிலைப் பிடித்து ஆதித்தனின் அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருக்கும் போது ரயிலில் அம்மாவின் கடிதத்தை பிரித்தான்…….

கடிதத்திற்குள் அவன் கட்டத் தொடங்கியுள்ள வீட்டின் வரை படமும் இதுவரை அவன் அனுப்பிய பணத்துக்கான செலவுக்குறிப்புக்களும் அம்மாவின் எழுத்தும் இருந்தது.வரவு செலவு கணக்குத் துண்டுகள் அனுப்ப வேண்டாம் எண்டு சொன்னாலும் அம்மா விடுவதில்லை. தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறை எண்டு சொல்லி அனுப்பிக் கொண்டே இருப்பார்.இப்போ இந்த வீட்டை கட்டிமுடிப்பதுதான் அவனது பெரிய வேலை மட்டுமல்ல அவனது கனவும் கூட.எண்பத்தி ஐய்ந்தாம் ஆண்டு பலாலி ஆமி குரும்பசிட்டிக்கு வந்து நேரம் நீ வயித்திலை அக்கா வையும் கொண்டு கையிலை அகப்பட்டதை தூக்கிக்கொண்டு நானும் உன்ரை அப்பாவும் வெளிக்கிட்டனாங்கள்.நாங்கள் பரம்பரையாய் வாழ்ந்த வீடு எனக்கு சீதனமாய் தந்தவை எண்டு வீட்டைப் பற்றி அம்மா கதை கதையா சொல்லுவார்.

அதுக்குப்பிறகு அவனுக்கு நினைவில் இருந்ததெல்லாம் தொடர்ச்சியான இடப் பெயர்வும் மாறி மாறி சொந்தங்கள் தெரிந்தவர் வீடுகளில் குடியிருந்தது மட்டும்தான்.வன்னிக்குள் வந்து படித்துக் கொண்டிருந்தவன் வீட்டுக்கு ஒருவர் இயக்கத்துக்கு என்றதும் போய் விட்டான் .அக்கா காதலித்து கல்யாணம் செய்து கொண்டு போய் விட, அப்பாவும் நோயில் விழுந்து இறந்த செய்தி முகாமிலிருந்தவனுக்கு பிந்தியே கிடைத்திருந்தது.பேச்சு வார்த்தை தொடங்கி விட்டிருந்ததால் தனித்துப் போயிருந்த அம்மாவை அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவான்.அம்மாவுக்கு இரண்டு ஆண் சகோதரங்கள் ஒருவர் ஆஸ்திரேலியா மற்றவர் கனடா .கனடா மாமாவின் புண்ணியத்தில் அம்மாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது .

எல்லாமே வேகமாய் மாறி சண்டை தொடங்க அவனுக்கு அம்மாவின் தொடர்பு விட்டுப்போனது.தந்திரோபாய பின் வாங்கலில் தொடக்கி இரண்டு வருட இறுதியில் எந்த தந்திரோபயமும் இல்லாத பொழுதொன்றில் ஆயுதங்களை எறிந்த ஆயிரக்கணக்கானவர்களைப் போலவே அவனும் ஆயுதத்தை ஏறிந்து விட்டு கையைத்தூக்கியிருந்தான்.அப்பா அம்மா செய்த புண்ணியமோ என்னவோ சில விசாரணைகளுக்குப்பிறகு புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.அங்கு ஆறு மாதம் கழித்து வெளியே வந்தபோது அம்மா எப்பிடியோ தேடிப்பிடித்து கூட்டிப் போக வந்திருந்தார் கூடவே அக்காவும் நின்றிருந்தாள் .அவளுக்கு ஒரு ஆண்குழந்தை. அனைவரையும் ஒன்றாய் கண்டது மகிழ்ச்சி .ஆனால் அக்கா கண்ணைக் கசக்கினாள் காரணம் அத்தான் காணாமல் போனவர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவனை கண்டு பிடித்து விட்ட அம்மா அடுத்ததாக மருமகனின் தேடலை தொடங்கியிருந்தார் .புனர்வாழ்வு முடிந்து வந்திருந்தாலும் புலனாய்வாளர்களின் தொல்லை தொடரவே கனடா மாமாவின் உதவியோடு பிரான்சுக்கு வந்து இரண்டு வருடமாகிறது.அவனது அகதி தஞ்சக் கோரிக்கை இரண்டாவது தடவையும் நிராகரிக்கப் பட்டு கடிதம் வந்து விட்டது .அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனிற்கு அகதி தஞ்ச கோரிக்கையை எழுதிக்கொடுத்த ஆதித்தனின் அலுவலகத்திற்கு வந்துவிட்டிருந்தான் இப்போது……

ஆதித்தன் அலுவலகத்தில் கணனியில் தமிழ் வானொலி கேட்டபடி எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.. அனேகமாக யாரோ ஒருவனின் ss-111தலைவிதியாகத்தான் இருக்கவேண்டும்.வெளிநாட்டில் அகதிகளுக்கு கேஸ் எழுதுபவர்கள் தான் பிரம்மாக்கள்.அவர்களுக்கு நான்கு தலை இல்லையே தவிர நான்கு தலைக்குரிய தலைக்கனம் இருக்கும் .பவ்வியமாக தனக்கு முன்னால் வந்தமர்த்த ரமணன் நீட்டிய கடிதத்தை வங்கிப் படித்தவர் உதட்டைப்பிதுக்கி ம் ….நாட்டிலை வசிக்கிறதுக்கு உமக்கு உண்மையில பிரச்னை எண்டுறதுக்கு ஆதாரம் போதாது அதாலை அகதிக் கோரிக்கையை நிராகரிக்கப் பட்டிருக்கு எண்டு எழுதியிருக்கிறாங்கள் என்று விட்டு கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அடுத்தது என்ன செய்யலாம் எண்டு மெதுவாக கேட்டான்.எத்தினையாயிரம் பேருக்கு விசா எடுதுக்குடுத்திருப்பன் இயக்கம் மட்டும் இருந்திருந்தால் இப்ப உம்மடை கையிலை விசா இருந்திருக்கும். அவங்கள் இல்லாமல் போனாப்பிறகு எனக்கு மட்டுமில்லை கனபேரின்டை தொழில் படுத்திட்டுது என்று அவர் கடிதத்தை கையில் வைத்து யோசித்துக் கொண்டிருக்கும் போது வானொலியில் செய்திகள் தொடங்கவே இவங்கள் வேற ஒரு செய்தியையே எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தி சொல்லுவாங்கள் என்றபடி அதை நிப்பாட்டப் போனவர் செய்தித் தலைப்பைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

செய்தியை பொறுமையாக கேட்டவர் உடனே ரமணனிடம் “தம்பி உம்மட்டை பேஸ் புக் எக் கவுண்ட் இருக்குதோ” என்றார் .ஓமண்ணை சொந்தப் பெயரில ஒண்டும் பேக் ஐடி இரண்டும் வைச்சிருகிறன் என்றபடி தனது ஐ போனை எடுத்து அவருக்கு காட்ட முயற்சிக்கும்போது, நல்லது அப்பிடியே வைச்சிரும் விசா இருக்கோ இல்லையோ உதுகளுக்கு மட்டும் குறையில்லை .இரண்டு பேக் ஐடி யும் பொம்பிளை பெயர் தானே ..இல்லையண்ணை ஒண்டுதான்.. லேசாய் நெளிந்தான் ரமணன் .சரி நான் சொல்லுறதை கவனமாய் கேளும் அதை ஒழுங்காய் செய்தால் உமக்கு விசா கிடைக்கும் என்றபடி திட்டத்தை விளங்கப் படுத்தினார்.அவர் கையை ஆட்டி கண்களை உருட்டி திட்டத்தை சொல்லி முடித்து கடைசியாய் மேசையில் ஓங்கி அடித்து எப்படி என்னோடை பிளான் எண்டு அவனைப் பார்த்துக் கேட்டார் .

வன்னியில் தாக்குதல் திட்டங்களை தளபதிகள் விளங்கப்படுத்திய போதே சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு இவரின் பிளான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது .”அண்ணை ஒண்டும் பிழைக்காது தானே ஏதும் பிரச்னை வந்தால் என்ன செய்யறது ” என்று இழுத்தவனுக்கு .தம்பி நான் ஒரு லோயர் சொல்லுறன் நீர் பயப்பிடாமல் சொன்னதை செய்தால் போதும் என்னோடை பிளான் பிசகாது எண்ணி ஆறு மாதத்திலை உமக்கு விசா ஒரு பிரச்சனையும் வராது. இவர் தன்னைத் தானே லோயர் எண்டு அடிக்கடி சொல்லிக் ..கொல்லுவாரே தவிர இதுவரைக்கும் பிரான்சிலை ஒரு கோட்டுப்படியேறி கோட்டுப் போட்டு வாதாடியதாய் அவன் கேள்விப்பட்டதேயில்லை .
சரியண்ணை நீங்கள் சொன்னபடி செய்யுறன் ஆனால் கொடி எங்கை வாங்கிறது என்றதும் எழும்பி பின்னாலிருந்த அலுமாரிக்கு மேலே இருந்த கடுதாசிப்பெட்டிக்குள் கையை விட்டு சுருட்டி இருந்த கொடி ஒன்றை எடுத்து அவனுக்கு முன்னால் போட்டார் .ஆச்சரியமாய் அவரிடம் “நீங்கள் கொடி யாவாரமும் செய்யிறீங்களோ” .தம்பி இந்தத் தொழிலில எல்லாம் செய்ய வேணும் இதெல்லாம் உங்களுக்கு புரியாது கொடிக்கு முப்பது யூரோ கடிதம் படிச்சு சொன்னதுக்கு இருபது யூரோ எல்லாமா ஐம்பது யூரோ எடும் நாளைக்கு சொன்ன வேலையை கச்சிதமா செய்திட்டு எனக்கு போன் அடியும் என்றார்.ஐம்பது யூரோவை எடுத்து அவரிடம் நீட்டி விட்டு கொடியை எடுத்துக்கொண்டு போய் விட்டான் .

அவரது திட்டத்தை நிறைவேற்ற இன்னொரு ஆள் தேவை, வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ரவி நினைவுக்கு வரவே போனடித்து விடயத்தை சொன்னான்.அவனும் குஷியாகி ஒண்டும் பிரச்னை இல்லை தான் வருவதாக சொன்னான்.
000000000000000000000000000000
வேலையிடத்தில் முதலாளியிடம் லீவு கேட்க வேண்டும் , அவரை சங்கரன் அண்ணை எண்டுதான் கூப்பிடுவான் .கடையில்அவர்கள் இருவர் மட்டுமே வேலை செய்வார்கள், ஆறுநாள் வேலை திங்களில் கடை பூட்டு அதைத் தவிர தலை போகிற விடயம் எண்டாலும் கடையைப்பூட்ட மாட்டார்.அவர் கனடா மாமாவின் நண்பர் என்பதால் அவனுக்கு விசா இல்லை எண்டு தெரிந்தும் வேலை கொடுத்திருக்கிறார். சம்பளம் குறைவுதான் ஆனாலும் நியாயமாக நடந்து கொள்வார்.அவரது பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்த்த இரண்டு வருடத்தில் தான் பிரான்ஸ் வந்து ரயில் நிலையத்தில் படுத்து கஸ்டப்பட்ட கதையை ஒருநாளைக்கு ஒரு தடவையாவது சொல்லாமல் விட மாட்டார் .அவர் நல்லவர்தான் ஆனால் அவருக்கு தொழில்தான் முக்கியம், அதைதவிர்த்து அரசியல் மற்றும் போராட்டம் அது உள்ளுராக இருக்கட்டும் உலக அளவில் இருக்கட்டும் எதுவுமே பிடிக்காது.

சொல்லப்போனால் இந்த ஆயுதப் போராட்டமே தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவரது வாதம் .
ஒரு தடவை அவரோடு போராட்டம் பற்றி கதைக்கப்போய் ,அண்ணை போராட்டம் நடந்த படியால் தானே காங்கேசன்துறையில இருந்த நீங்கள் பாரிசுக்கு வந்து கடை போட்டு வசதியாய் வாழ முடியுது என்று சொன்னதுதான்.. “தம்பி எனக்கு ஊரிலை இருந்த வெத்திலை தோட்டம் எவ்வளவு எண்டு தெரியுமோ? வெத்திலையின்டை பெறுமதி தெரியுமா நாங்கள் வெத்திலைக்கொடியை பொற்கொடி எண்டுதான் சொல்லுறனாங்கள்.ஒவ்வொரு இலையும் பொன் மாதிரி எங்கடை சடங்குகளிலை வெத்திலை இல்லாத ஒரு சடங்கை சொல்லு பாப்பம் அப்பிடிப் பட்ட வெத்திலை தோட்டம் ஏக்கர் கணக்கிலை வைசிருந்தனாங்கள் எண்டால் எவ்வளவு பணக்காரராய் இருந்திருப்பம் எண்டு யோசி..அங்கயும் உழைப்பு இங்கயும் உழைப்பு அப்பதான் முன்னேறலாம் இனி வீண் கதை என்னோடை கதைக்காதை” என்று அவனைப்போட்டு சப்பித் துப்பி விட்டிருந்தார் .நல்ல வேளை வேலையை விட்டு தூக்கவில்லை என்கிற நிம்மதி அன்று ஏற்பட்டது.
நாளைக்கு லீவு கேக்க வேணும் அதுவும் வெள்ளிக்கிழமை காய்கறி வியாபாரம் நல்லா நடக்கிற நாள்.

 பாரிஸ் புற நகர் பகுதியில் உள்ள ஒரேயொரு தமிழ்க்கடை அது. அங்கு இருகின்ற அனைத்து தமிழ்சனங்களும் வருவார்கள் வடிவா கவனிக்காட்டி வாற சனம் முருக்கங்காயையும் வெண்டிக்காயையும் முறிச்சு வைச்சிட்டு போயிடுங்கள்.லீவைப் பற்றி யோசித்தபடியே வேலையை செய்து கொண்டிருந்தான்.கடை பூட்டும் நேரம் சாமான் எல்லாம் எடுத்து உள்ளை வைத்து முடித்து முதலாளி முன்னால் போய் நின்றான். கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் தலையை நிமிர்த்தி “ஊருக்கு அனுப்பக்காசு கேட்டனியல்லோ எவ்வளவு வேணும்” என்றார் .ஓம் எழுநூறு யூரோ தங்கோ மாதம் முடிய கணக்கு பாப்பம் தலையை சொறிந்தான் .பணத்தை எண்ணி நீட்டியவர் ஏதோ வீடு கட்டத்தொடங்கினதா சொன்னனி என்ன மாதிரி, எங்கை கட்டுறாய் எண்டதும் அவசரமாய் போய் தனது பையிலிருந்து அம்மா அனுப்பிய கடிதத்தை கொண்டுவந்து பிரித்து வீட்டுப்பிளானை காட்டியபடி இது எங்கடை குரும்பசிட்டி காணிக்கை தான் கட்டப் போறன்.இப்ப மூண்டு மாதத்துக்கு முதல்தான் ஆமி அந்தப் பகுதியை சனத்துக்கு திருப்பிக் குடுத்தவன் .அதுக்கை இருந்த வீடும் இடிஞ்சு அத்திவாரம் கூட இல்லை. எல்லையை கண்டு பிடிக்கவே சரியா கஸ்டப் பட்டதா அம்மா சொன்னவா.அம்மாக்கு திரும்ப அதுக்குள்ளை ஒரு வீடு காட்ட வேணும் எண்டு ஆசை .தொடங்கியிருக்கிறன் பாக்கலாம் என்று பெரு மூச்சோடு முடித்தான் .

உன்னுடைய குடும்ப பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும் நீயும் உன்ர மாமன் மாதிரி நல்லவன்.என்ர குடும்பத்தில ஒருத்தன் மாதிரி ஏதும் உதவிஎண்டல் தயங்காமல் என்னட்டை கேள் தம்பி என்றதும், நாளைக்கு லீவு வேணும் அண்ணை ஒரு சிநேகிதன்டை கலியாணம் கட்டாயம் போகவேணும் .. தலையை குனித்தான் .இப்பதான் உன்னை நல்ல பெடியன் எண்டனான் .பொதுவா சனி ஞாயிறுலை தானே கலியாணம் வைக்கிறவங்கள் நாளைக்கு வெள்ளிக்கிழமை வேறை.. மரக்கறி வரும்… யோசித்தார் .அவரிடம் பொய் சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது ஆனால் வேறு வழியில்லை .இது நாள் நச்சத்திரம் பாத்து கோயில்லை நடக்கிற கலியாணம் அதுதான் வெள்ளிக்கிழமை வைக்கிறாங்கள் மத்தியானம் முடிஞ்சிடும் உடனை வந்திடுவன் ..அடுத்த பொய்யையும் சொன்னான்.சரி நான் சமாளிக்கிறான் போட்டு ஆறுதலாய் வா ….அனுமதி கொடுத்தார்.ரமணனுக்கு மகிழ்ச்சி இருபது யூரோவை நீட்டி அண்ணை சிம் காட்டை றீசார்ச் பண்ணி விடுங்கோ என்றான்.அந்த லைக்கா சிம் காட்டும் சங்கரன் தனது பெயரில்தான் பதிவு செய்து கொடுத்திருந்தார் .சிம் றீ சார்ஜ் ஆகி எஸ் .எம்.எஸ் .வந்ததும் விடை பெற்றான் .
000000000000000000000000000000000000000000000000000000000
அடுத்தநாள் எழும்பி அறையில் உள்ளவர்கள் வேலைக்கு போகும்வரை காத்திருந்தவன் போனில் சார்ஜ் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டு ரவி சம்பவ இடத்துக்கு வருவானா என்பதை உறுதி செய்து விட்டு ,செய்தி வெளியானதும் முதலாளிக்கு கட்டாயம் தெரிய வரும் கோவப் படுவர் என்ன செய்யலாம் ..? அதை பிறகு பாக்கலாம் .கொடியை எடுத்து விரித்துப் பார்த்தான் , கொடி கட்டத் தடிதேவை யோசித்த பொழுது மூலையில் கிடந்த தும்புத்தடி கண்ணில்பட தும்பும் தடியும் வேறு வேறானது ..இப்போ தடியில் கொடி..எல்லாம் சரி பார்த்தவன் ரயிலைப் பிடித்து சம்பவ இடத்துக்கு வந்திருந்தான், அவனைப்போலவே மேலும் பலர் கொடி பதாதைகளோடு வந்து கொண்டிருந்தார்கள்.இன்னொரு தடவை திட்டத்தை மனதில் ஓடவிட்டான்…ஸ்ரீ லங்காவிலிருந்து வந்திருக்கும் அமைச்சர் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார் அவருக்கு எதிர்ப்பு காட்ட இங்குள்ள தமிழ் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தது ..இந்த எதிர்ப்பில் ரமணனும் கலந்து கொள்ள வேண்டும்.. அமைச்சர் விடுதியிலிருந்து கூட்டத்திற்கு செல்லும் போது அவரின் வாகனத்தின் முன்னால் வீதியில் தீடிரென கொடியோடு பாய்ந்து நீதி வேண்டும்..சர்வதேச விசாரணை வேண்டும்.. வெளியே போ …என்று கத்தி விட்டு காவலுக்கு நிற்கும் போலிசின் கையில் அகப்படாமல் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் இதை இன்னொருவர் வீடியோவாக எடுக்க, அந்த கிளிப்பை உடனடியாக அவனது பேஸ் புக்கில் அப்லோடு பண்ணி பலருக்கும் ரக் பண்ணிவிட செய்தி எல்லா இடமும் பரவும் அவ்வளவுதான்..அமைச்சருக்கு எதிப்புத் தெரிவித்த்தால் ரமணன் ஸ்ரீலங்கா சென்றதும் கைது செய்யப்பட வாய்ப்புக்கள் அதிகம்.உயிருக்கும் ஆபத்து நேரலாம் எனவே அவரது அகதி விண்ணப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. இதுதான் ஆதித்தன் அகதிகள் விண்ணப்பதை பரிசீலிக்கும் அலுவலகத்துக்கு ஆதாரங்களோடு அடுத்து எழுதப்போகும் கடிதம்.

அமைச்சர் வந்த செய்தியை கேட்டதும் ஆதித்தனுக்கு உதித்த திட்டம் இதுதான் .
ரவியைத்தேடி போனடித்தபோது ஒரு பியரை உறுஞ்சியபடி கூலாக நடந்து வந்து கொண்டிருந்தான்.என்னடா காலங் காத்தலையே தொடங்கிட்டியா இந்தா என்னை வடிவா போக்கஸ் பண்ணி எடு என்று தனது கைத்தொலை பேசியை கொடுத்து விட்டு நான் மற்றப்பக்கம் போறன் அங்கை நிண்டு றோட்டுக்கு குறுக்கா பாய்ஞ்சு வருவன் என்று விட்டு வீதியின் மறு பக்கம் போனவன் காவலுக்கு நின்ற போலீஸ்காரனுக்கு தூரமாக பாதுகாப்புக்கு போடப் பட்டிருந்த தடை வேலிக்கு அருகாக தயாராய் நின்றிருந்தான்.தூரத்தில் தெரிந்த விடுதியின் முன்னால் நின்றிருந்த வாகனத்தில் அமைச்சர் வந்து ஏறுவது தெரிந்தது அந்த வாகனத்திற்கு முன்னால் இரண்டு மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பு பொலிசார் தயாராய் நின்றிருந்தார்கள்.அமைச்சர் வாகனத்தில் ஏறியதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் உசாராகி கொடிகளையும் பதாதைகளையும் உயர்த்திப்பிடித்து கோசங்களை எழுப்பத் தொடங்கியிருந்தனர்.அமைச்சரின் வாகனம் உருளத் தொடங்க ரமணனுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து லேசாய் படபடப்பு தொடங்கியிருந்தது ரவியை மாதிரி ஒரு பியரை அடிச்சிட்டு வந்திருக்கலாமோ என்றும் யோசித்தான்.

அமைச்சரின் வாகனம் கிட்டே நெருங்கிக்கொண்டிருந்தது ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பிய கொட்டொலிச் சத்தங்களும் கோசங்களும் வேகம் பிடிக்கத் தொடங்க காவல்துறையினர் பரபரப்பானார்கள்.வாகனம் கிட்டே நெருங்கி விட்டது, ரமணன் எதிரே நின்ற ரவியைப் பார்த்தான் அவன் வலக்கை கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோவில் ரமணனை பதியத்தொடங்க ரமணன் கொடியை உயர்த்திப் பிடித்தபடி இனப் படுகொலை அரசு அமைச்சரே திரும்பிப் போ என்று கத்தியபடி தடுப்பு வேலியை தாண்டவும் எங்கள் தாகம் தமிழ் ஈழத் தாயகம் என்று சத்தமாக கத்தியபடி கொடியோடு இன்னொருவன் எதிரேயிருந்து தடுப்பு வேலி யை தாண்டி அமைச்சரின் வாகனத்துக்கு முன்னே பாய்ந்து வீதியில் குறுக்கே படுத்துக்கொள்ள .. எனக்கு குடுத்த ஐடியாவையே ஆதித்தன் இன்னொருத்தனுக்கும் குடுத்திட்டானோ..?? என்று ஒரு கணம் தடுமாறி நிக்க, மேலும் பலர் தடுப்பு வேலியை தாண்டி வீதியில் இறங்க முயற்சித்தனர் .காவலுக்கு நின்ற போலிசார் மேலதிகமாக கலகமடக்கும் போலிசாரின் உதவிக்கு அழைப்பு விடுத்த படியே வீதிக்கு வருபவர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள் .

எதிரே தடுப்பு வேலிக்கு பின்னால் நின்ற ரவியும் உற்சாகமாகி தடுப்பைக் கடந்து வந்து அனைத்தையும் கைத் தொலை பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தான் . யாரோ எங்கிருந்தோ எறிந்த பியர்ப்போத்தல் ஒன்று வீதியில் விழுந்து உடைந்து சத்தம் கேட்டது…. போலிஸ் வாகனங்களின் சைரன் சத்தங்கள் அந்த இடத்துக்கு அருகாக கேட்கத் தொடங்கியிருந்தது.வீதியில் படுக்க முனைந்தவனை பொலிசார் பிடித்து விலங்கு மாட்டிக் கொண்டிருக்க அமைச்சரின் வாகனம் அந்த இடத்தை கடந்து போய் விட்டிருந்தது.

ஆனால் பறந்து வந்த இன்னொரு பியர்ப்போத்தல் ஒன்று ஒரு போலிஸ் காரனின் முதுகைப்பதம் பார்க்க அவன் இடுப்பிலிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை கழற்றி ஆர்ப்பாட்டக் காரர்களை நோக்கி உருட்டி விட அந்த இடம் சிறிய கலவரமாக மாறிக்கொண்டிருந்தது. மேலதிகமாக வந்த போலீசாரில் ஒருவன் தன்னை நோக்கி வருவதைப்போல இருக்கவே ரமணன் கொடியை வீதியில் எறிந்து விட்டு வேகமாக தடுப்பு வேலியைத்தாண்டியபடி ரவியைத் தேடினான் காணவில்லை .கண்ணீர்ப்புகை காற்றில் கரைந்து அவனுக்கும் லேசாய் கண்ணில் எரிச்சல் ஏற்பட அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலில் ஏறிவிட்டான், வீட்டுக்குப் போவதா அல்லது வேலையிடத்துக்கு போவதா என்று குழப்பமாக இருந்தது.வீட்டுக்குப் போய் முதல் வேலையாய் ரவிக்கு போனடிப்பம் என்று முடிவெடுத்தான் .
000000000000000000000000000000000000
சங்கரன் கடையில் நல்ல சனம்.. தனியாக சமாளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவர் முருங்கைக்காய் ஒன்றை எடுத்து கொலை வெறியோடு அதை முறுக்கிக் கொண்டிருந்த வயதான பெண்ணைப் பார்த்து “அம்மா.. யூஸ் பிழிஞ்சு குடிக்க இது கரும்பில்லை முருங்கைக்காய், இதுக்கு மேலை முறுக்க வேண்டாம்” என்று கொஞ்சம் கடுப்பாக சொல்லிவிட்டு இண்டைக்கெண்டு இவன் லீவு எடுத்திட்டான் என்று ரமணனை திட்டியபடி பரபரப்பாக நின்றிருந்தவருக்கு கடைத்தொலை பேசியும் விடாமல் அடிக்க இலக்கத்தை பார்த்தார், அது அவரது வீட்டு இலக்கம்..மனிசி தான் இவளுக்கு நேரம் காலம் கிடையாது என்றபடி எகிறிய கோபத்தில் அதை எடுத்து காதில் வைத்து என்னடி வேணும் என்றதும் ..
என்னப்பா செய்தி பாத்தனியளோ…??
இப்ப ரெம்ப முக்கியம் உனக்கு வேறை வேலையில்லை வையடி ..என்றபடி போனை வைக்கப் போனவரிடம் ,முக்கியமான செய்தி டுபுக்கு டொட் கொம்மிலை போய் பாருங்கோ என்றதும் தொலைபேசி துண்டிக்கப்பட்டது .அப்பிடியென்ன முக்கிய செய்தியாயிருக்கும் என்றபடி தனது ஐ போனில் கூகிளில் புகுந்து டுபுக்கு டொட் கொம் என்று தட்டினார். போராட்டம் மாபெரும் வெற்றி.ஸ்ரீ லங்கா அமைச்சர் தனது வாகனத்திலிருந்து பின்கதவால் தப்பியோட்டம் என்கிற செய்தித் தலைப்பில் சில படங்களும் போடப் பட்டிருந்தது…. ஒரு படத்தில் ரமணன் கொடியை உயர்த்திப் பிடித்தபடி பாய்கின்றதைப்போல இருந்த படத்தப்பார்த்ததும் சங்கரனுக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி தன்னை மறந்து பரதேசி என்று சொல்ல அவருக்கு முன்னால் முறுக்கிப்பார்த்த முருக்கங்காயை கையில் பிடித்தபடி பணத்தை நீட்டிய பெண் “யாரைப் பாத்து பரதேசி என்டுறாய்
ஊரிலை எங்களுக்கு முருங்கை தோட்டமே இருந்தது உனக்குத்தெரியுமா இந்தா உன்ரை முருக்கங்காய் ” என்று அதை அங்கேயே எறிந்துவிட்டு போக, ஐயோ அம்மா நான் பரதேசி எண்டு சொன்னது உங்களை இல்லை அது வேற பரதேசி என்று சொன்னதும் அப்ப நான் வேற பரதேசியா என்றபடி அவர் கோபமாக கடையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதே இரண்டு பிரென்சுகாரர்கள் உள்ளே நுழைந்தார்கள் .சரி அவர் போனால் என்ன இப்ப வெள்ளைக் காரனெல்லாம் வெள்ளிக்கிழமை விரதம் பிடிக்கிறாங்கள் போல முறுக்கி எறிஞ்சிட்டு போன முருக்கங்காயை நிமித்தி இவங்களுக்கு விக்கலாம் என நினைத்து அதை எடுத்தபடி நிமிர்ந்தபோது வந்தவர்களில் ஒருவன் தனது அடையாள அட்டையை அவரது முகத்துக்கு நேரே நீட்டியபடி போலிஸ் என்றுவிட்டு ஒரு கைத்தொலை பேசியை எடுத்து காட்டி இது உங்களுடையதா என்றான்.

சங்கரனின் கோபம் இப்போ பயமாக மாறி லேசாய் உதறல் எடுக்க, இல்லை என்றபடி தலையாட்ட அவனோ விடுவதில்லை ஒரு இலக்கத்தைச்saaaaaa சொல்லி இந்த இலக்க சிம் காட் உங்களுடையது தானே என்றான்.ரமணனுக்கு தன்னுடைய பெயரில் கடையின் விலாசம் போட்டு லைக்கா சிம் காட் பதிந்து கொடுத்தது நினைவில் உறைக்க லைக்கா எண்டாலே பிரச்சனையாக் கிடக்கு என்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று தொடங்கியவர் சகல விடயத்தையும் போலீஸ்காரரிடம் சொல்லி ரமணனனின் வீட்டு விலாசத்தையும் எழுதிக் கொடுத்து விட்டார் .நன்றி சொல்லியபடி காவல்த்துறையினர் போன பின்னர்தான் கவனித்தார் கடையில் நின்றவர்கள் மட்டுமல்ல கோபித்துக்கொண்டு போன பெண் கூட திரும்ப வந்து அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். “ஒண்டுமில்லை தெரிஞ்ச போலிஸ் காரங்கள்தான் ஒருத்தனைப்பற்றி விசாரிக்க வந்தவங்கள் ” என்று சொல்லி சமாளித்தாலும் அவருக்கு அது பெரிய அவமானமாக இருந்தது மட்டுமல்ல திரும்பவும் ரமணன் மீது கோபம் வர இனி இவனை வேலைக்கு வைசிருக்கிறேல்லை என்று முடிவெடுத்திருந்தார் .ஆனால் அவர் படித்த செய்தியில் ஒன்று மட்டும் அவருக்குப் புரியவில்லை வாகனத்திலிருந்த அமைச்சர் எப்பிடி பின் கதவால் தப்பியோடியிருப்பர் ஒருவேளை டிக்கியில் இருந்திருப்பாரோ .??
00000000000000000000000000000000000000000
வீடு வந்த ரமணன் ரவியின் போனுக்கும் தனது போனுக்கும் மாறி மாறி அடிதுக்கொண்டேயிருந்தான் ரிங் போய்க்கொண்டிருதது பதிலில்லை. அவனோடு தங்கியிருக்கும் சிவாவிற்கு அன்று லீவுநாள் ,அவன்தான் அன்று வீடு துப்பரவாக்கி சமைக்கவேண்டும் அப்போதுதான் நித்திரையால் எழும்பியவன் வீட்டு போனை போட்டு அமத்திக்கொண்டு நின்ற ரமணனிடம் என்னடா இண்டைக்கு வேலைக்கு போகேல்லையோ என்றபடி படுக்கையை எடுத்து மடித்துக் கொண்டிருக்க கதவில் யாரோ தட்டவே ரவியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தபடி அவசரமாக போய் திறந்தவன் உறைந்து போய் நின்றான் .

அடையாள அட்டையை காட்டிவிட்டு உள்ளே வந்த போலிசார் இருவரும் அவர்களிடம் விசாவை காட்டும்படி கேட்க சிவா அவசரமாக தனது விசாவை எடுத்துக் கட்டினான் அதிர்ந்து போய் நின்ற ரமணனிடம் மீண்டும் விசா என்றதும் தயங்கியபடியே ஒரு பைலை எடுத்து நீட்டினான்.அதற்குள் இரண்டு வருடத்திற்கு முன்னர் அவன் அகதி அந்தஸ்து கோரியதிலிருந்து கடைசியாய் அவனது கோரிக்கை நிராகரித்து வந்த கடிதம் வரை எல்லாமே இருந்தது.ஒருவன் மேலோட்டமாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க டேய் தும்புத் தடியின்ரை தும்பு இங்கை கிடக்கு தடி எங்கையடா என்று மெதுவாக ரமணனிடம் கேட்ட சிவாவைப் பார்த்து இங்கு பிரெஞ்சில் மட்டும்தான் கதைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு ரமணனை சோதனை செய்தபின்னர் விலங்கை மாட்டி அழைத்துக்கொண்டு போனார்கள்.சிவாவிற்கு எதுவும் புரியாமல் தும்பின் தடியை தேடத் தொடங்கியிருந்தான் .

காவல் நிலையத்தில் வைத்து ஒரு அதிகாரி அவனின் போனை காட்டி இது உன்னுடையதா என்று கேட்ட போதுதான் ரமணனுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்திருந்தது.கலவரத்தில் கைதான ரவி அப்புறுவராக மாறி பொலிசாரின் கையில் போனையும் கொடுத்து எல்லாமே விபரமாக சொல்லிவிட்டிருந்ததால் அவனை விடுதலை செய்து விட்டிருந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு நாள் கழித்து திங்கட் கிழமை காலை போலிசார் ரமணனை நீதிபதியின் முன்னால் கொண்டு போய் நிறுத்தியிருந்தர்கள். அவனுக்கு சரியாக பிரெஞ்சு மொழி தெரியாது என்பதால் ஒரு மொழி பெயர்ப்பாளரும் வந்திருந்தார்.நீதிபதி சொன்னதை மொழி பெயர்ப்பாளர் பெயர்த்தார்.பிரெஞ்சு நாட்டின் சட்டங்களை மீறியது ..காவல்துறையினரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தது..காவல் அதிகாரி ஒருவர் கடமையில் இருந்தபோது அவர் காயமடையக் காரணமாக இருந்தது ஆகிய குற்றங்கள் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது எனவே நீங்கள் குற்றவாளிய சுற்றவாளியா ..என்று கேட்டு விட்டு நீதிபதியும் மொழி பெயர்ப்பாளரும் அவனை உற்றுப்பார்த்தார்கள்..
எப்பிடி சொன்னால் என்னை விடுவினம் அண்ணை என்று மொழி பெயர்ப்பாளரிடம் அப்பாவியாய் அவன் கேட்க, எரிச்சலுடன் அவனை முறைத்தவர் தான் கடமை தவறாது அவனது கேள்வியையும் மொழி பெயர்த்தார்.

லேசாய் புன்னகைத்த நீதிபதி மீண்டும் அவனிடம் குற்றவாளியா சுற்றவாளியா ..சுற்றவாளி எண்டால் அதை நிருபிக்க வேணும் லோயர் வைக்க வேணும் அதெல்லாம் சிக்கல் பேசாமல் குற்றவாளி எண்டு ஒத்துக்கொண்டால் பாவம் பாத்து விட்டாலும் விடுவங்கள் அல்லது இரண்டு மூண்டு மாசம் உள்ளை போட்டிட்டு விடுவங்கள் என்று நினைத்து குற்றவாளி ஐயா என்றான்.நீதிபதி தொடர்ந்தார்.. குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரது அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாலும் அவருக்கு இந்த நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் ஆவணங்கள் எதையும் கொண்டிருக்காததால் அவர் உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
ஐயோ அண்ணை அவரிட்டை சொல்லுங்கோ என்னிலை எந்தப் பிழையும் இல்லை போலிஸ்காரனுக்கு போத்திலாலை எறிஞ்சது சத்தியமா யாரெண்டு எனக்கு தெரியாது.. என்று ரமணன் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே பொலிசார் மீண்டும் விலங்கை மாட்டி அவனை அழைத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்தார்கள்.அவன் கைது செய்யப்பட்டபோது அவனிடம் இருந்த ஏழுனூறு யூரோவையும் காவல் துறையினர் எடுத்திருந்தனர்.அந்தப் பணத்திலேயே அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து விட்டு அதற்கான பில்லையும் அவனிடம் காட்டிய பின்னர் அதனை ஒரு பைலில் போட்டு வைத்திருந்தார்கள் .அன்றிரவும் அவனுக்கு உணவு வாங்கிய பில்லோடு இன்னொரு
பேப்பரையும் ஒரு போலிஸ்காரன் காட்டினான் அது அன்றிரவு அவன் ஸ்ரீலங்கா செல்வதற்கான பயணச் சீட்டு ..ரமணனுக்கு இப்போ இரவா பகலா .. என்ன நாள் என்ன நேரம் என்று எதுவுமே தெரியாதவனாய் விடை தெரியாத கேள்விக்குறி ஒன்று மட்டும் முன்னால் தெரிந்தது .

000000000000000000000000000
பாரிஸ் சார்ல் டி கோல் விமான நிலையம், எயார் லங்கா விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னராக காவல் துறையினர் வாகனத்தில் ரமணனை அழைத்துப்போய் பரிசோதனை செய்து விமானத்தில் ஏற்றி அங்கு தயாராய் நின்றிருந்த அதிகாரியிடம் பைல் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.சிறிது நேரத்தில் அவனுக்குப் பக்கத்தில் இன்னொருவன் ரமணனைப் போலவே விலங்கிட்டு கொண்டு வந்து இருத்தினார்கள்.அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் வரவே யாரது….யோசித்தான்.
பயணிகள் விமானத்தில் ஏறத்தொடங்கியிருந்தனர்.சட்டென்று நினைவுக்கு வந்தது. அருகில் இருப்பவன்தான் அன்று அவனுக்கு எதிரே இருந்து ஓடி வந்து அமைச்சரின் வாகனத்துக்கு முன்னால் படுத்தவன் ,அவனே தான் ..காவலுக்கு வந்த அதிகாரி அவர்களுக்கு சீட் பெல்ட்டை போட்டு கை விலங்கு தெரியாமல் இருக்க போர்வையால் மூடி விட்டான் .விமானம் பயணிகளால் நிரம்பி உறுழத்தொடங்கியிருந்தது ..இதுவரை தனியாகப் போகிறோமே என்று கவலையோடு இருந்தவனுக்கு கொஞ்சம் தெம்பாக இருக்க பக்கத்தில் இருந்த அதிகாரிக்கு கேட்காமல் மெதுவாக தனது தலையை குனிந்து வாயை அவனது காதுக்குள் வைத்து உங்களுக்கும் விசாப்பிரச்சனையோ… இல்லை எனக்கு சிட்டிசன் என்று அலட்சியமாகவே சொன்னான் அவன்.

அதிகாரி இவர்களை லேசாய் முறைத்துவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதற்குள் புகுந்துவிட்டான். ஒரு சிட்டிசன் காரன் உண்மையாவே உணர்வோடை போராடியிருக்கிறான் என்று நினைத்த ரமணனுக்கு பக்கத்திலிருந்தவன் உயர்த்த ராஜகோபுரமாகத் தெரிந்தான் .விசாவுக்காக கொடி பிடித்த தன்னை நினைக்க கேவலமாக இருந்தது.ஆனால் சிட்டிசன் காரனை நாடு கடத்த மாட்டங்களே..என்கிற சந்தேகத்தில் மீண்டும் அவனிடம் அப்ப எதுக்கு நாடு கடத்துறாங்கள் என்றதற்கு.ஸ்ரீலங்காவிலை கனக்க மட்டையைப் போட்டிட்டன் .என்ரை பேரை இன்ரப்போல் போலிஸ் பட்டியலிலை போட்டிட்டாங்கள் அதுதான் இப்படி ஒரு ஐடியாவைப் போட்டு அமைச்சரிண்டை காருக்கு முன்னாலை பாய்ஞ்சனான் . செய்தி பரவினதும் இங்கை ஒரு லோயரை வைச்சு இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து எண்டு வழக்காடலாம் எண்டு நினைச்சன் ஆனால் பிழைச்சுப் போச்சு என்று உதட்டைப் பிதுக்கினான்.சில வினாடிக்கு முதல் ரமணனுக்கு ராஜகோபுரமாய் தெரிந்தவன் இப்போ அமெரிக்காவின் இரட்டைக்கோபுரமாய் இடிந்து விழுந்துகொண்டிருந்தான்.அதற்கு பிறகு அவனோடு பேசவேயில்லை.

0000000000000000000000000000000000000000000000000000
ரமணன் கண்ணை விழித்துப் பார்த்தான் அவன் மீது தண்ணீர் ஊற்றப் பட்டிருந்தது, ஒருவன் அவனது விலங்கை அகற்றி விட்டு அங்கு கிடந்த துணிகளை எடுத்துக் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னான்.ஜீன்ஸ், ரீ சேட், ரேபன் கண்ணாடி, ரீபக் சப்பாத்து அணிந்து அறைக்குள் ஒரு பைலோடு நுழைந்த அதிகாரி கதிரையில் அமர்ந்து பைலைப் பிரித்து அவனைப் பார்த்து சரளமான தமிழில் , பெயர் ரமணன் தியாகராஜா..இயக்கப் பெயர் சேரமான்,சிறுத்தைப்படைப் பிரிவு,சரணடைந்து வவுனியா புனர்வாழ்வு முகம் முடித்து வெளியேறியிருக்கிறாய்.எப்பிடியோ பிரான்ஸ் போயிட்டாய் அங்கை போய் அமைச்சருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம்.தவறு உன்னிடம் இல்லை எங்களிடம்தான் என்றவன், ரமணனிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை அங்கு நின்றவர்களிடம் சை கை காட்டி விட்டு போனான்.

ஒருவன் வந்து ரமணனின் கண்ணைக் கட்டி வாகனத்தில்ஏற்றினான்.சில மணி நேரப் பயணத்தின் பின்னர் அவனை இறக்கி நடத்தினார்கள் பாதை கடினமாக இருந்தது…. சில இடங்களில் தடக்கி விழப்போனான் .இப்போ பலர் அவனைச்சுற்றி நின்று கதைப்பது கேட்டது.யாரோ அவனை அமத்தி முழங்காலில் இருத்தி கண் கட்டை அவிழ்த்து விட்டான்.வெய்யில் வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.இமைகளை வெட்டி தலையை மெதுவாக திருப்பி வலப்பக்கம் பார்த்தான் அவனைப்போலவே மேலும் இரண்டு பேர் முழங்காலில் இருத்திவைக்கப் பட்டிருந்தனர்.இடப் பக்கம் தலையைத் திருப்பினான்… காலை சாதாரண உடையில் பைலோடு வந்த அதிகாரி இப்போ இராணுவச் சீருடையில் விறைப்பாய் நின்றிருந்தான். என்ன நடக்கப் போகிறது என்று ரமணன் ஊகிக்க முன்னரே பின்னால் பல துப்பாக்கிகள் லோட் பண்ணும் சத்தம் கேட்டது கண்களை இறுக முடினான்…….. அம்மாவும் அவர் அனுப்பிய வீட்டின் வரை படமும் கண்ணுக்குள் நிழலாய் அசைய துப்பாக்கிகள் சடசடத்த சத்தத்தில் காடு அலறி ஒய்ந்தது..

000000000000000000000000000
முக்கிய செய்திகள்.. இன்று மாலை பதவியா காட்டுப்பகுதியில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகள் அமைபிற்கு தலைமை தாங்கி அதற்கு saa-000000புத்துயிர் கொடுக்க முயன்ற மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் இறுதி யுத்தம் நடந்து முடித்த பின்னர் வெளி நாடுகளிற்கு பயணம் செய்து அங்குள்ள புலிகளின் அதரவு அமைப்புகளோடு தொடர்புகளைப் பெற்று அவர்களின் நிதியுதவியோடு மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடங்கும் நோக்கோடு ஸ்ரீலங்கா திரும்பியிருந்தார்கள்.இவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் சதித்திட்டம் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நானூருக்கும் அதிகமான இராணுவத்தினர் அவர்களது மறைவிடத்தை சுற்றிவளைத்த போது சுமார் அரை மணி நேரம் நடந்த மோதலில் அந்த இடத்திலேயே மூன்று புலி உறுப்பினர்களும் கொல்லப்பட ஒரு இராணுவ வீரர் காலில் காயமடைந்தார்.அவர்களின் மறைவிடத்திலிருந்து எராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது……
கொல்லப்பட்டவர்கள் சுப்பன் வான் புலிப்பிரிவு, தயாளன் கடற்புலிப் பிரிவு ,ரமணன் புலனாய்வுப் பிரிவுகளில் இயங்கியவர்கள் என அடையாளம் காணப்பட்டு அவர்களது உடலங்கள் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.காயமடைத்த இராணுவவீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய அமைச்சர் கருத்துக் கூறுகையில் இந்த நாடு மூவின மக்களும் சமாதானத்தோடும் சகோதரத்தவத்தோடும் வாழும் நாடு.இங்கு பிரிவினைக்கோ வன்முறைக்கோ இடமளிக்க முடியாது என்றார் .செய்திகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது…………………………..