Navigation


RSS : Articles / Comments


மலரக்கா

6:11 AM, Posted by sathiri, One Comment



இந்தவருடம் கோடை விடுமுறையில் கட்டாயம் பாரிசிற்கு டிஸ்னிலாண்டிற்கு கூட்டிப்போவதாக மகளிற்கு ஊறதியளித்திருந்தேன். பயணத்திற்காண திட்டமிடலுடன் இரயில் தங்குமிட விடுதி பதிவுகள் எல்லாம் செய்தபின்னர் திடீரென கையில் ஒரு சிறிய சத்திர சிகிச்சை செய்யவேண்டிவந்திருந்தது . பாரிசிற்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரே சத்திர சிகிச்சையை முடித்துக்கொண்டு ஒற்றைக்கையை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டபடியே பாரிசிற்கு குடும்பமாக பயணமாயிருந்தேன். பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நான் இருக்கும் நகரத்திற்கு அன்றுமாலை திரும்பவேண்டும்.அதற்கு முன்னர் அன்று பாரிசில் கொஞ்சம் கடைத்தெருவில் உலாவியபொழுதுதான் மனைவி என்னிடம். "என்னப்பா எங்கடை இடங்களிலை கோயில்கள் இல்லைத்தானே வந்தஇடத்திலை இஞ்சை ஏதாவது ஒரு கோயிலுக்கும் போயிட்டு போகலாம்" என்றாள்..

எனக்கு கோயில்களில் ஆர்வம் இல்லை. எண்டாலும் மந்திர சொல்லை தட்டமுடியாதுதானே. லாசப்பல் பக்கம் போனால் பழைய நண்பர்கள் சிலரையும் சந்திக்கலாமென நினைத்து லாசப்பலிற்கு அருகில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போகலாமென முடிவெடுத்தேன் . அங்கிருந்த ஒரு கோயிலிற்கு மதியமளவில் போயிருந்தோம். கோயிலில் மதியகாலத்து பூசை ஆரம்பமாகியிருந்தது. மனிசி பூசையில் கலந்துவிட கோயிலின் உள்ளே போய் ஒரு சுற்றி விட்டு நானும் மகளும் கோயில் வெளியே வந்துவிட்டோம்.மகளிற்கும் என்னைப்போலவே கோயில்களில் அதிக ஆர்வமில்லை. வெளியே வந்த நாங்கள் கோயில் வாசற்படியில் அமர்தபடி மகளும் நானும் தொலைபேசியில் கேம் விழையாடத் தொடங்கியிருந்தோம்.அப்பொழுது அவசரமாக வந்த வயதான பெண்ணெருத்தி எங்களை கடக்கும் பெழுது என்னைப்பார்த்து தம்பி பூசை தொடங்கிட்டுது வரேல்லையோ என்றார். ஒரு செக்கன் மட்டுமே அவரை நிமிர்ந்து பார்த்த நான் சிறிய வியாபார புன்னகை ஒன்றை எறிந்துவிட்டு மீண்டும் கேம் விழையாடத் தொடங்கினாலும் அந்த ஒரு செக்கனில் அவரது முகத்தை எனது மூளை ஸ்கான் செய்திருந்தது.மீண்டும் அவரை திரும்பிப்பார்த்தேன் வெள்ளைக்குதிரையின் வாலைப்போல நரைத்திருந்த நீண்ட தலைமுடி கோயிலிற்குள் நுளைந்துவிட்டார்.என் பின் மூளை சூடானது. இவரைத்தெரியும். ஜபோனில் இணைய தொடர்பை ஏற்படுத்தும் போதும் திரையில் சுற்றும் தேடல் வட்டத்தைப்போல எனது முளையிலும் வட்டம் ஓடிக்கொண்டிருந்தது. தெரியும் ..நன்றாகத் தெரியும்..யார்??யார்??..

ஒருநாள் பரிசிலிருந்த எனது சிறுவயது நண்பன் இருள்அழகன் தொலைபேயில் கதைக்கும் பொழுது

டேய் உனக்கு மலரக்காவை தெரியுமல்லோ
ஓ அவாவை மறக்கேலுமோ அவாவுக்கு என்ன
அவா இஞ்சைதான் இருக்கிறா.கோயில்லை கண்டனான் கோயில்லைதானாம் இருக்கிறாவாம்.
கோயில்லைஇருக்கிறாவோ??ஏன் அவாவின்ரை சகோரங்கள் இஞ்சை தானே இருக்கினம்.
ஓமடா அவவின்ரை சகோதரங்கள் மட்டுமில்லை பிள்ளையளும் இஞ்சைதான் ஆனால் அவையள் அண்டுறேல்லையாம்.கோயில்லைதானாம்.

இருக்கலாம்.அவவாயிருக்கலாம்.

வா உள்ளை போவம்...

அப்பா என்னை விழையாடவிடு..

பிறகு விழையாடலாம் வா..

மகளையும் இழுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுளைந்து பக்கவாட்டாக சுவரோடு நின்றபடி கண்களால் துளாவினேன்.
கேம் விழையாட்டை குழப்பிய கோபத்தில் மகள் முறைத்தபடி தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.
ஜயர் ஒவ்வொரு தீபமாக சாமிக்கு காட்டிய இன்னமும் சமஸ்கிருதத்திலேயே ஏதோ சொல்லியபடியிருந்தார்.தமிழ்தான் நீச பாசையெண்டால் பிரெஞ்சிலையாவது பூசையை செய்திருக்கலாம்.

கைகூப்பி கண்களை மூடியபடி நின்றிருந்த எனது மனைவிக்கு பக்கத்திலேயே அவரும் நின்றிருந்தார். அவரை கீழிருந்து மேலாக ஆராச்சி செய்துகொண்டிருந்தபொழுது தற்செயலாக திரும்பி எங்களை கவனித்த மனைவி. வந்த இடத்திலும் தன்னை தன்னுடைய கணவன் பத்திரமாக கவனித்தபடி நிற்கிறான் என பரவசமடைந்திருக்கலாம்.சிறிய புன்னகையுடன் மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் இறங்கிவிட்டிருந்தாள்.


பூசை முடிந்து ஜயர் விபூதி குடுத்து முடிந்ததும் அவர் வேகமாக அங்கிருந்த அறை ஒன்றில் நுளைந்து அன்னதானம் வைத்திருந்த அண்டாக்களை திறந்து அதனை பரிமாறத்தயாராகிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அவரை முழுதாகப் பாரக்கமுடிந்தது. ஆனாலும் எனது மூளையில் சுற்றிய தேடும் வளையம் சுற்றி முடிந்திருக்கவில்லை.
பாரிசிற்கு வந்து பலநாளாய் பட்டினி கிடந்தவர்களைப்போல சிலர் முண்டியடித்துக்கொண்டு அங்கிருந்த கடதாசிக்கோப்பைகளை எடுத்தவாறே அன்னதானத்திற்கு ஓடிப்போய் வரிசையில் நின்றனர். வரிசை நகர்ந்துகொண்டிருந்தது.வரிசையில் நின் பெண்ணொருத்தர் என்ன மலர் எப்பிடியிருக்கிறாய்.என்றாதற்கு அவர் புன்னகைத்தபடி ஏதே கடவுள் புண்ணியத்திலை இருக்கிறம்.என்றார்.


அவரேதான்.மலரக்காதான். எனது தேடும் வளையம் நின்றது. கடைசியாய் அவரை பார்த்து எப்படியும் இருபத்தைந்து வருடங்களிற்கு மேல் இருக்கும் ஆனாலும் பழைய அவரது உருவங்கள் எனது மனத்திரையில் மாறி மாறி இறக்கிக்கொண்டிருந்தது. நானும் கையில் ஒரு பிளாஸ்ரிக்கோப்பையை எடுத்தபடி வரிசையில் நகர்ந்தேன்.


மனிசி மகளிடம் அப்பாக்கு ஞானம் கிடைச்சிட்டுதுபோலை என்றாள்.அப்பா இப்பதானே வரமுதல் டிஸ்னிகடையிலை பங்கு ஆட்டிறைச்சிக்கறியோடை சோறு சாப்பிட்டவர்.பிறகேன் கோப்பையோடை வரிசையிலை நிக்கிறார் என யோசித்து தலையை சொறிந்தாள்.
வரிசையில் எனது முறை வந்தது கோப்பையை நீட்டினேன். வெண்பொங்கலை கரண்டியால் அள்ளி அவர் கோப்பையில் வைக்கும்போது "மலரக்கா என்னை ஞாபகம் இருக்கோ" உற்றுப்பார்த்தவர் தெரியேல்லை என்பதற்கு அடையாளமாய் தலையாட்டினார். நான்தான் சிறி.சங்கக்கடை சாமான் துக்கிகொண்டு.........வசனத்தை முடிக்கவிலை.அவர் முகத்தில் சட்டென்று பல மாற்றங்கள்.மகிழ்ச்சியா அழுகையா என்று தெரியவில்லை கண்கள் கலங்கியது.படபடப்பாய்
ஓம்.. ஜயோ உன்னை எத்தினை வருசமாய் தேடினனான்.இரு வாறன் என்றவர் அங்கிருந்த ஒருவரிடம் கரண்டியை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாய் வந்தவர் சேலைத்தலைப்பால் கண்களை ஒற்றியபடி.எங்கையிருக்கிறாய்? எப்பிடியிருக்கிறாய்?.கலியணம் கட்டிட்டியா?பிள்ளையள் இருக்கா? கேள்விகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
ஓம் கட்டிட்டன் ஒரு மகள் அவையளும் வந்திருக்கினம்.நீங்கள் இஞ்சை இருக்கிறதாய் கேள்விப்பட்டனான் ஆனால் நான் இருக்கிறது வேறை சிற்றியிலை.ஆயிரம் கிலோ மீற்றர் தூரம்.நீங்கள் எப்பிடியிருக்கிறியள்.


என்னத்தை சொல்ல கடவுள் எல்லாத்தையும் தந்தவர் எனக்குத்தான் அதை சரியா பயனபடுத்தத் தெரியேல்லை.இப்ப அனுபவிக்கிறன். அதுதான் கடைசியாய் கடவுளே கதியெண்டு இஞ்சை வந்திட்டன்.வாழ்க்கை ஏதோ போகுது.
பிள்ளையள்??உங்கடை சகோதரங்கள்.?
சகோதரங்கள் முந்தியே கதைக்கிறேல்லை.எனக்கு மூண்டு பிள்ளையள்.இரண்டு பெடியங்கள் சுவிசிலை கட்டிட்டாங்கள். கடைசி மகள் இஞ்சைதான் தங்கச்சியோடை. அதுகளும் என்னோடை கதைக்கிறேல்லை.


நான் கோப்பையோடு வரிசையில் நின்றதன் காரணம் அப்பொழுதுதான் மனிசிக்கும் மகளிற்கும் புரிந்திருக்கவேண்டும். எங்களை நோக்கி வந்தார்கள்.அவர்களை மலரக்காவிற்கு அறிமுகப்படுத்தினேன். மகளை குனிந்து கொஞ்சியவர். உன்ரை கொப்பரின்ரை பூனைக்கண் அப்பிடியே மகளிட்டை இருக்கு என்றவர். உன்னோடை கனக்க கதைக்கவேணும் நேரமிருக்குமோ??

இல்லையக்கா.நாங்கள் இப்ப திரும்ப போறம் உங்கடை கான்போன் நம்பர் இருந்தால் தாங்கோ நான் பிறகு ஆறுதலாய் அடிக்கிறன்.
என்னட்டை கான்போன் இல்லை எனக்கெதுக்கு அதெல்லாம்.உன்ரை வீட்டு நம்பரைத்தா நான் இஞ்சை கோயில்லையிருந்து கதைக்கலாம்.பிறீதான்.
பொக்கற்றினுள் கையை வைத்து பாவித்த ரெயில் றிக்கற்றில் 04.93...என்று தொடங்கி இலக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டு விடைபெற்றோம்.

எங்கள் இரயிலுக்கான நேரமும் மட்டுமட்டாக இருந்ததனால் அவசரமாக ஓடிவந்து எங்கள் ஊரிற்கு செல்லவேண்டிய அதிவேக இரயிலை பிடித்து அமர்ந்துகொண்டோம்.இரயில் வேகமெடுக்கத்தொடங்கியது.பயணக்களைப்பு மனிசியும் மகளும் இருக்கையில் சரிந்துகொண்டனர்.நானும் கண்களை மூடியிருந்தேன் நித்திரை கொள்ளவில்லை.அதிவேக இரயிலின் வேகத்தை விட பலமடங்கு வேகமாக என்நினைவுகள் பின்நோக்கி நகரத்தொடங்கியது........

.சிறிய வயதிலிருந்து நான் அம்மம்மா வீட்டில்தான் தங்கியிருப்பது வழைமை அங்கிருந்துதான் பாடசாலைக்கும் போய்வருவேன்.எனக்கு பதின்நான்கு வயதேயான காலம் .மலரக்கா அம்மம்மா வீட்டிற்கருகில் பின்னால் இருந்த ஒரு ஒழுங்கையில்தான் திருமணமாகி நான்று வருடங்களாககுடியிருந்தார்.பாதி கட்டி முடிக்கப்பட்ட கல்வீடு மேலே கூரை க்கு தகரம் போட்டிருந்தார்கள்.அப்போ அவரிற்கு ஒரு மகனும் இருந்தார் மூன்று வயதிருக்கலாம்.கணவரை மொட்டை மூர்த்தி என்றுதான் எல்லாரும் கூப்பிடுவோம்.ஏன் அப்பிடி கூப்பிடுறனாங்கள் என்று உங்களிற்கு விளக்கமாய் எழுதத் தேவையில்லையெண்டு நினைக்கிறன். மலரக்காவுக்கும் அவருக்கும் குறைஞ்சது பதினைஞ்சு வருச வித்தியசமாவது இருக்கும் அவருக்கு வயசு அதிகம்..சங்கானை முதலாளி ஒருவரிடம் சம்பளத்திற்கு கொழும்பு லொறி ஓடுபவர்.சரியான குடிகாரர்.பெரிய வசதியற்ற குடும்பம்.மலரக்காவை பார்த்தால் அந்தக்காலத்து நடிகை மஞ்சுளாவை பார்த்தமாதிரியே இருக்கும்அவ்வளவு அழகானவர்..நல்ல நீண்ட தலைமுடி இடுப்பிற்கு கீழே ஆடும். பெரும்பாலும் நீண்ட பாவாடை சட்டைதான் போடுவார்.அவரிற்கு பின்னால் விசிலடிக்கும் இளைஞர் கூட்டமும் ஒன்று இருந்தது. என்னை எப்பொழுதாவது வீதியில் பார்த்தால் ஒருபுன்னகையை பரிமாறுவோம்.என்னை விட பத்து வயது மூத்தவர்.இவ்வளவுதான் பதின்நான்கு வயதுவரை எனக்கு தெரிந்த மலரக்கா.
Posted Image

நான் அம்மம்மா வீட்டிலையே அதிகம் வளந்ததாலை சின்ன வயதிலை சரியான சாமி பக்தி சுத்த சைவம். அது மட்டுமில்லை படுக்கப் போக முதல் ஒவ்வொருநாள் இரவும் அம்மம்மா கதையள் சொல்லுவா புராணக்கதையள் அரச கதையள் மட்டுமில்லை இடைக்கிடைபேய்க்கதையளும் சொல்லுவார். அம்மம்மா சொன்ன எல்லா பேய்கதையளிலையும் பேய்கள் புளியமரத்திலைதான் இருந்தது ஏணெண்டுதெரியாது. அதாலை சின்னவயசிலை எனக்கு இரவிலை புளியமரத்துக்கு கீழை போறதெண்டாலே பேய்ப்பயம். மலரக்கா வீட்டுக்கு போற ஒழுங்கையிலையும் பெரியதொரு புளியமரம் நிண்டது.பேய்க்கதை கேட்ட அண்டைக்கு நான் மூத்திரம் பெய்யப் போறதெண்டால் அம்மம்மாவையும் பக்கத்திலை கூட்டிக்கொண்டுதான் போவன்.

இப்படி ஒவ்வொரு நாளும் கதைசொல்லி முடிய இலவச இணைப்பாய் பொய் சொல்ககூடாது எண்டிற குட்டிகதையும் கட்டாயம் இருக்கும்.அதை உங்களிற்கும் சொல்லிவிடுறன். மேல்லோகத்திலை கடவுளிட்டை எங்கடை பெயர் எழுதின பல குடுவைகள் இருக்குமாம். எங்கடை சந்திக்கடை ரவியண்ணை கடையிலை வைச்சிருக்கிற இனிப்புப் போத்தில்கள் மாதிரி.நாங்கள் ஒவ்வொருக்காலும் பொய் சொல்லேக்குள்ளை கடவுள் ஒரு கூழாங்கல்லிலை எங்கடை பெயரை எழுதி அந்தக் குடுவைக்குள்ளை போட்டுவைப்பாராம். நாங்கள் எத்தினை பொய் சொல்லுறமோ அத்தனை கூழாங்கல் சேரந்திருக்குமாம்.கடைசியாய் நாங்கள் கடவுளிட்டை போகேக்குள்ளை அவ்வளவு கல்லையும் கட்டாயம் கடிச்சு தின்னவேணுமாம்.அதுக்கு பிறகுதான் சொர்க்கத்துக்குள்ளை விடுவாராம்.கதை எப்பிடியிருக்கு விசர்க்கதைமாதிரி இருக்கல்லோ? அதாலை கடைசியாய் இந்தக் கதை சொல்லத்தொடங்க நான் நித்திரையாயிடுவன். ஆனாலும் பொய் சொல்லப்பயம் சங்கக்கடை அரிசியிலை வாற சின்னகல்லு சோத்திலை அம்பிட்டாலே பல்லுப்பட்டால் உயிர் போற வலி வலிக்கும்.இதுக்குள்ளை கூழாங்கல்லை எப்பிடி கடிச்சுத்தின்னிறது எண்டபயத்திலையே பொய்சொல்ல வாயெடுக்கும்போதெல்லாம் கடவுள் கையிலை கூழாங்கல்லையெடுக்கிற நினைப்பு வந்திடும்.


நான் கடவுள் பக்தியெண்டதாலை ஒவ்வொருநாளும் பின்னேரப் பூசைக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறது வழக்கம். வயது வளர. நானும் வளர பூசை முடிய கோயிலடியிலை கொஞ்ச நேரம் பள்ளிக்கூட ஊர் சினேகிதங்களோடையும் நிண்டு அரட்டையடிச்சிட்டு போறது வழக்கமாகி போனது.வயதும் பதின்நாலாகிபோனதால் எங்கள் அரட்டைகளும் பள்ளிப்படிப்பை தாண்டி சினிமா அரசியல் ஊர்க்கதையள் ஊரில் உள்ள பெட்டையள் என்று விரிவடைந்தது.அப்பிடித்தான் ஒருநாள் ஒருத்தன் டேய் உங்களுக்கு மலரக்காவை தெரியுமல்லோ அவவுக்கும் எங்கடை சங்கக்கடை மனேச்சருக்கும் அதுவாம்.என்றுதொடங்கினான் ஆரம்பத்தில் எனக்கு அதில் பெரியளவு ஆர்வமில்லாமல் இருந்தாலும் அவன் கதை சொன்ன விதத்திலும் ஏற்கனவே எங்களிற்குள் புன்னகை பரிமாறும் அளவு பழக்கம் இருந்ததாலும் ஆர்வம் தூண்டியது.


அதே நேரம் பள்ளிக்கூட லீவும் வந்துவிட்டதால் மலரக்காவை கண்காணிக்கத்தொடங்கினேன்.அதே நேரம் சங்கக்கடை மனேச்சரை பற்றியும் சொல்ல மறந்திட்டன்.இவர் வேறை ஊர்காரன்.ஆளைப்பாத்தால் அன்றைய நடிகர் சுதாகர் மாதிரி இருப்பார்.முன்பக்கம் நெளிவைத்த தலையிழுப்பு உடுப்பும் அதேமாதிரி யானைக்கால் பெல்பொட்டம் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டால் பட்டின் தெறிக்கிற மாதிரி இறுக்கமான சேட்டு. சங்கக்கடைக்கு பின்னாலையே ஒரு அறை இருக்கு அதுக்கு பின்பக்கமாய் கதவும் இருக்கு கிழைமைநாள் முழுக்க அங்கைதான் தங்குவார். வெள்ளிக்கிழமை பின்னேரம் சங்கத்தை பூட்டிப்போட்டு ஊருக்கு போயிடுவார்.சங்கக்கடை மத்தியானம்12 மணிக்கு பூட்டி 3 மணிக்குத்தான் திறக்கும்.இவருக்கு மத்தியானச்சாப்பாடு கொண்டுபோய் குடுக்கிறது மலரக்காதான்.நான் தொடர்ந்து துப்பறிஞ்சதிலை கண்டு பிடிச்ச விசயம். பிள்ளையை பக்கத்து வீட்டிலை விட்டிட்டு மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..


அப்பிடித்தான் ஒருநாள் சங்கக்கடையிலிருந்து வாங்கிய சாமான்களை தூக்க முடியாமல் வைத்து வைத்து தூக்கியபடி போய்க்கொண்டிருந்தார் வேகமாய் சைக்கிளில் போய் பக்கத்தில் பிறேக்அடித்த நான் .
மலரக்கா பாரமோ தாங்கோ நான் கொண்டுவந்துதாறன்.

வேண்டாம் எதுக்கு உனக்கு கரைச்சல்

சே ......இதிலையென்ன கரைச்சல் தாங்கோ ...நானே சைக்கிளின் பின் கறியரின் கிளிப்பை இழுத்து அதற்குள் சாமான்பையை திணித்தபடி வீட்டு படலயடியிலை வைச்சுவிடுறன்.என்றபடி சைக்கிளை மிதித்தேன்.

படலையை திறந்து உள்ளை வைச்சுவிடடா.கவனமாய் போ..

மலரக்காவுடன் கதைத்து விட்ட சந்தோசம்.எனக்குள்ளே ஒரு பிலாக்கொட்டைக்குருவி சிறகடித்தது. இண்டைக்குப் பின்னேரம் இதை கோயிலடி சினேதங்களிட்டை சொல்லவேணும்.மலரக்கா வீட்டு படலையை திறந்து சாமான் பையை வைத்துவிட்டு போய்விட்டேன்.
அன்று மாலை கோயிலடி மடத்தடியில் வழைமையான கூட்டம் நான் தான் கீரோ..சாதரணமாய் பள்ளிக்கூட பின்வாங்கில் படக்கதை சொல்லுறதெண்டாலேயே கதை. வசனத்தை இசையோடை சுவாரசியமாய் சொல்லுறனான். மலரக்காவின்ரை கதையை சொல்லறதுக்காக நடிப்பு டைரக்சன் எண்டு மேலும் இரண்டு வேலை கூடிப்போச்சுது. இவை அத்தனையையும் கலந்து கலர்ப்படக் கதையொண்டை எல்லாருக்கும் சொல்லிப்போட்டு படத்தின்ரை கடைசியிலை ஏதாவது மெசேச் சொல்லத்தானே வேணும் அதாலை .இண்டைக்கு மலரக்காவின்ரை சங்கக்கடை சாமானை சைக்கிள்ளை ஏத்தினனான்..நாளைக்கு மலரக்காவை ஏத்துவான் ..நாளையிண்டைக்கு..வசனத்தை முடிக்காமல் எல்லாரையும் பாத்து கண்ணடிச்சன்.

சிலர் தங்கள் வாயை துடைத்தார்கள்.சிலரின் எப்பிடிடா??? எண்டிற பெருமூச்சு என்னில் பட்டுத்தெறித்தது . ஆனால் இருள் அழகன் மட்டும் முகத்தை உம்ம்ம்....எண்டு வைச்சுக்கொண்டு டேய் நீ உன்ரை படத்துக்கு நீ ஒட்டின போஸ்ரர் என்னவோ கிளுகிளுப்பாத்தான் இருக்கிது. ஆனால் போஸ்ரறிலை இருக்கிற கிளுகிளுப்பு கன படங்களிலை இருக்கிறேல்லை.உன்ரை கதையும் அப்பிடித்தான்போகப்போகுது எண்டான். வந்த கோபத்திற்கு அவனை அப்பிடியே ......ஆனாலும் அடக்கிக்கொண்டு டேய் ஒரு நாளைக்கு நடக்கும் பாரடா அண்டைக்கு நீதாண்டா எனக்கு காவல். விரலை சுண்டி சவால் விட்டேன்.

இரண்டு மூண்டு தடைவை சங்கத்து சாமான்களை ஏத்தி இறக்கியாச்சு.சமான் ஏத்தி இறக்கினதையே எத்தனை தரம்தான் கோயிலடியிலை பெடியளிட்டை மாத்தி மாத்தி வித்தியாசமாய் சொல்லமுடியும் அவங்களுக்கும் அது அலுப்படித்தது.இண்டைக்கு மலரக்காவை எப்படியும் சைக்கிளிலை ஏத்திறதெண்டு சவாலேடை முடிவெடுத்தன். நண்பன் இருள் அழகனுக்கும் சொல்லி வைச்சட்டன். எதிர்பாத்தபடியே மலரக்கா சாமான்களோடை வந்துகொண்டிருந்தா அவவிட்டை சாமான் பையை வாங்கி கரியரிலை வைச்சிட்டு மெயின் றோட்டு கடந்து கொஞ்சத்தூரம் சைக்கிளை உருட்டினபடிஒழுங்கை வரை வந்ததும்.

மலரக்கா சரியான வெய்யில் எதுக்கு சும்மா நடந்துகொண்டு.நீங்களும் ஏறுங்கோ கொண்டு போய் விடுறன்.

டேய் என்னையும் வைச்சு உழக்குவியோ..

இதென்ன நீங்கள் பெரிய பாரமே ஏறுங்கோ..

மலரக்காவை ஏத்தியச்சு ஆனாலும் மனதுக்குள்ளை பிள்ளையாரே சினேகிதங்கள் மட்டும் யாராவது காணவேணும் ஆனால் வீட்டுகாரர் யாரும் காணக்கூடாது கண்டால் அவ்வளவுதான்.என்ரை நேத்திக்கடன் வீண்போகேல்லை நான் செற்றப் பண்ணினபடி இருள்அழகன் எதேச்சையாக வருவது போல எதிரே வந்துபோனான்.வீட்டுக்காரர் ஒருத்தரும் காணேல்லை.பெரிய ஒழுங்கை முடிஞ்சு மலரக்கா வீட்டை போற சின்ன கையொழுங்கைக்குள்ளை இறங்கிட்டன்.அது மணல் ஒழுங்கையெண்டபடியாலை சைக்கிளை மிதிக்க கஸ்ரமாயிருந்தது. கஸ்ரமெண்டால் இதிலை இறக்கிவிடடா என்றார்.சே இதென்ன கஸ்ரம் பேசாமல் இருங்கோ என்றபடி சைக்கிளை எழும்பி மிதிக்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக மலரக்காவுடன் உரசிக்கொண்டேன்.ஏன் முதன் முதலாக ஒரு பெண்ணுடனான உரசலும் அதுதான்.சைக்கிளை மேலும் வேகமாக மிதித்தேன்.என் முகம் அவரது முகத்திற்கு மிக அருகருகாக வந்து போனது.அவரது தலைமுடியின் சண்சில்க் சம்பூ வாசனை எனது நாசியில் இறங்கி உடல் முழுதும் பரவியது.இதயத்துடிப்பு அதிகரித்து வழைமையை விடஅதிகமாய் வியர்த்து என் காற்சட்டையும் விறைத்தது.மலரக்காவை படலையடியில் இறக்கிவிட்டு வேகமாக வயற்பக்கமாக சைக்கிளை மிதித்தேன் அங்கு உயரமாய் வளர்ந்து மஞ்சள் மயமாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த சணல் வயலிற்குள் மறைந்துபோனேன்.

""ஆத்தா நான் வயசுக்கு வந்து விட்டேன்"".............................

அடுத்தடுத்தநாட்களும் நான் மலவரக்காவை சைக்கிளில் ஏற்றிச்செல்வதும். பின்னர் சணலிற்குள் மறைந்து போவதும் கோயிலடியில் கதை சொல்வதுமாய் நன்றாய்தான் போய்க்கொண்டிருந்தது.அண்டைக்கும் அப்பிடித்தான் மலரக்காவை ஏத்திக்கொண்டு மணல் ஒழுங்கையில் எழும்பி எழும்பி சைக்கிளை மிதித்தபடிபோய்கொண்டிருந்போது எதிரே மரியம்மா வந்துகொண்டிருந்தா..மரியம்மா எங்கடை மாட்டிற்கு புல்லும் அம்மம்மாவிற்கு ஊர் கதையளையும் காவி வருபவர். அவரைக்கண்டதுமே எனக்கு வால்கட்டையை புடுங்கிவிட்டதுபோல இருந்தது.எங்களை கடந்த.. மரியம்மா நின்று நிதானித்து திரும்பிப் பார்த்துவிட்டு போய்கொண்டிருந்தார். மலரக்காவை இறக்கிவிட்டு வழைமைபோல் வயற்பக்கம் போகாமல் வேகமாய் அம்மம்மா வீட்டிற்கு சைக்கிளை மிதித்தேன்.நல்லவேளை மரியம்மா அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தார்.அவர் வந்து மாட்டிற்கு புல்லுப்போட்டுவிட்டு அம்மம்மாவுடன் அரட்டை தொடங்கும்வரை அவருக்கு பக்திலேயே நிண்டேன்.

ஊர்க்கதைகள் கதைக்கும்போது என்னை அருகில் வைத்திருக்கமாட்டினம்.காரணம் நான் சின்னப்பெடியனாம்.அதாலை கோயில் பூசைக்கு நேரமாச்சு போடா என்று அம்மம்மா என்னை துரத்தினார்.அந்த நேரம் பாத்து கோயில் பூசை மணியும் அடிச்சது.பிள்ளையாரப்பா என்னை கைவிட்டிடாதை என்று நேர்ந்தபடி மரியம்மாவை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டேன்.நான் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. என்னைத்தேடி கோயிலடிக்கு வேகமாக வந்த அம்மம்மா என்னட்டை


டேய் அந்தத் தேவடியாள் மலரை சைக்கிள்ளை ஏத்தினனியா?


இல்லையெண்டு சொல்ல வாயெடுத்தாலும் கடவுளும் கூழாங்கல்லும் நினைவிற்கு வந்தது அதே நேரம் கோயிலடியில் நின்றே பொய் சொல்ல முடியவில்லை அதனால்

ஓம் அவா சாமான் பாரத்தோடை வந்தவா அதுதான் ......என்று இழுத்தேன்

அவளிற்கு சாமான் பாரமெண்டால் நீயோ கிடைச்சனி இரு அவளை என்ன செய்யிறன் பார்..

என்றபடி வேகமாக மலரக்கா வீட்டை நோக்கி போனார். கொஞ்சத்தூரம் இடைவெளி விட்டு அம்மமாவிற்கு பின்னாலையே நானும் போனன்.மலரக்காவின்ரை கஸ்ரகாலம் அவா அம்பிட்டிட்டா அவாவின்ரை நீண்ட தலைமுடியை பிடிச்சிழுத்த அம்மம்மா ஏண்டி தோறை உனக்கு சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியர் காணாதெண்டு இப்ப சின்னபபெடியள் தேவைப்படுதோ என்று இரண்மூன்று அடி விழுந்தது.

சங்கக்கடை மனேச்சர் மட்டுமில்லை சந்திக்கடை ரவியரும் எண்டு எனக்கு அப்பதான் தெரிஞ்சது. ஆனாலும் மலரக்கா அடியாதேங்கோ எண்டு அம்மம்மாவிட்டை கெஞ்சினதும் அவாவின்ரை பிள்ளை வீரிட்டு அழுததும் எனக்கு என்னவோ மனசுக்கு கஸ்ரமாத்தான் இருந்தது அதுக்கிடையிலை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆக்கள் வந்து விலக்கு பிடித்து விட்டனர்.?கோபமாய் வந்த அம்மம்மா எனக்கும் மண்டையில் ஓங்கி ஒரு குட்டுப்போட்டு விட்டு இனி அவளோடை கண்டதெண்டு கேள்விப்பட்டன் உன்னை கொம்மானிட்டை கொழும்புக்கு அனுப்பிப்போடுவன் என்று பேசிவிட்டு போய்விட்டார்.


அதன் பின்னர் நானும் மலரக்காவை கனநாளாய் பாக்கேல்லை அவாவின்ரை முகத்தை எப்பிடி பாக்கிறதெண்டும் அந்தரமாய் இருந்தது. பள்ளிக்கூடமும் தொடங்கிட்டதாலை பாக்கிற சந்தர்ப்பமும் கிடைக்கேல்லை.நான் கோயிலடியிலை கதை சொல்லுறதும் நிண்டுபோச்சுது. எண்டாலும் மனசு கேக்கேல்லை சைக்கிளிலை ஏத்தி உரசுறது சங்கக்கடை மனேச்சர் போலை நானும்.... என்கிற கற்பனைகளைத்தாண்டி மலரக்காவை பாக்கவேணும் போல மனது அந்தரித்தது."வேதாளம் திரும்பவும் முருங்கையை அண்ணாந்து பாத்தது."என்ரை சைக்கிள் மலரக்காவின்ரை ஒழுங்கைக்குள்ளை இறங்கியது. பொழுது சாயத்தொடங்கியிருந்ததால் ஒழுங்கையில் யாரும் இல்லை மெதுவாக மலரக்காவின் படலையை துறந்தேன். ஏழுகடல் தாண்டி ஏழுமலைதாண்டி பாதாள உலகத்தின் புதையல் குகையின் கதவைத் திறப்பது போல் மனசில் ஒரே படபடப்பு. என்னைக்கண்டதும் நல்ல பேச்சு விழலாம் இல்லாட்டி சில நேரம் புருசன் காரன் மொட்டை மூத்தி நிண்டால்?? சரி நடக்கிறது நடக்கட்டும் என்று உள்ளே போய் மலரக்கா என்று கூப்பிட்டேன் வாய் மட்டும்தான் அசைந்தது சந்தம் வரவில்லை அடுத்த தரம் தொண்டையை சரிசெய்தபடி

மலரக்கா .....

பிள்ளையை இடுப்பில் தூக்கியபடி வெளியில் வந்தவர்

ஓ நீயா?உனக்கு வீட்டிலை நல்ல அடிவிழுந்திருக்போலை இந்தப்பக்கம் காணேல்லை.

எனக்கொண்டும் பெரிசாய் விழேல்லை திட்டுத்தான் விழுந்தது அது பிரச்சனையில்லை. நீங்கள்தான் பாவம்.எல்லாம் என்னாலைதானே..அந்த லூசு மனிசி அப்பிடி உங்களை அடிக்குமெண்டு நான் நினைக்கேல்லை .என்னிலை கேவமில்லைதானே??

உன்னிலை பிழையில்லை சைக்கிள்ளை ஏறினது என்னிலைதான் பிழை.உன்னிலை ஒரு கோவமும் இல்லை உனக்கு அடிவிழுந்திருக்கும் எண்டு நினைச்சு கவைலைப்பட்னான்.

என்ன இருந்தாலும் சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியரையெல்லாம் இழுத்து அவா உங்களை அப்பிடி திட்டியிருக்கக்கூடாது..

"அந்த மெல்லிய இருளிலும் மலர் வாடியது தெளிவாய் தெரிந்தது"


என்னத்தை சொல்ல என்ரை விதி . என்ரை அப்பரம்மா சரியாய் இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காது.இப்பிடி திட்டு பேச்சு வாங்கவேண்டிய தேவையும் இருந்திருக்காது.எனக்கு அதெல்லாம் இப்ப பழகிட்டு.உன்ரை கொம்மம்மாவும் ஒண்டும் புதிசாய் திட்டேல்லை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

அப்ப அதெல்லாம் உண்மையோ..

உதெல்லாம் உனக்கெதுக்கு நீ சின்னப்பெடியன் ஏதாவது குடிக்கிறியா??

என்னை சின்னப்பெடியன் எண்டது எனக்கு கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கிய இலங்கை வேந்தனின் நிலைமையாய் இருந்தது.ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு

நான் இப்ப சின்னப்பெடியன் இல்லை வயது வந்த பெடியன்தான் எனக்கு சொல்லுங்கோ இல்லாட்டி நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டன். என்று அடம்பிடித்தாலும் மனதிற்குள் ஒரு பயத்துடன் மூத்தியண்ணை இன்னமும் வரேல்லையோ.எண்டு கேட்டன்.

அந்தாள் வர நாலைஞ்சு நாளாகும்.சில நேரம்தான் வீட்டை வரும் சிலநேரம் வராது.அது இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

மூத்தியர் வரமாட்டார் எண்டது நிச்சயம் பண்ணிக்கொண்டு"?? கொஞ்ச தண்ணி தாங்கோ குடிப்பம்" தண்ணி குடிக்கிற சாட்டிலை சைக்கிளை விட்டு இறங்கி திண்ணையிலை இருந்து இண்டைக்கு எப்பிடியும் முழுக்கதையும் கேட்டிட்டுத்தான் போறது.
பிள்ளையை கீழே இறக்கிவிட்டு உள்ளே போய் தண்ணியெடுத்து வந்தார் இருட்டிவிட்டிருந்தது நல்ல நிலவு எறித்துக்கொண்டிருந்ததால் விளக்கு இன்னமும் ஏற்றவில்லை.செம்பில் கொண்டுவந்த தண்ணீரை வாங்கி சில முறடு குடித்துவிட்டு.திண்ணையில் அமர்ந்தபடி சரி கதையை சொல்லுங்கோ எண்டன்.

நீ கதை கேக்காமல் போகமாட்டாய் போலைத்தான் கிடக்கு எண்டவர் எனக்கு பக்கத்திலே திண்ணையில் வந்து அமர்ந்தார்.அந்தத் திண்ணைமட்டும் அலாவுதீனின் பறக்கும் கம்பளமாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.பிள்ளையை அங்கையே விட்டிட்டு நானும் மலரக்காவும் பறந்து போய்...... சே.. வேண்டாம் மனக்குரங்கை இழுத்து அடக்கிவைத்தேன்.
குடும்பத்திலை நான்தான் மூத்தது எனக்கு பின்னாலை மூண்டு பெட்டையள் எண்டபடியாலை நல்லா ஏ.எல் படிச்சுக்கொண்டிருந்த எனக்கு மச்சான் முறை காரன் .படிப்பும் இல்லை மண்டையிலை மயிரும் இல்லை. லொறி ஓடுறவனை அவரசமாய் கட்டி வைச்சிட்டினம்.அதோடை படிக்கிற கனவெல்லாம் போட்டுது.பிறகுதான் அவரின்ரை பொட்டுக்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவந்திச்சுது.அவருக்கு ஏற்கனவே ஆராச்சிக்கட்டைக்கு அங்காலை ஒரு சிங்களத்திக்கு பிள்ளையும் இருக்காம்.அது மட்டுமில்லை கண்ட கண்ட இடங்களிலையெல்லாம் படுத்தெழும்பி நசல் பிடிச்சு தயிர் மருந்து பூசிக்கொண்டு திரிஞ்சதிலை அவளும் கலைச்சு போட்டாளாம் .இதெல்லாம் தெரிஞ்சும் மச்சான் எண்டதுக்காக எங்கடை வீட்டுக்காரர் கட்டி வைச்சிட்டினம். கட்டின புதிசிலை அவரின்ரை வருத்தம் எனக்கும் பிடிச்சு நடராசா பரியாரியிட்டை நாட்டு வைத்தியம் செய்து நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.அதுக்கு பிறகு நானும் பக்கத்திலை அடுக்கிறேல்லை.அடுக்கினாலும் பிரயோசனமில்லை வெறும் புஸ்வாணம்.அதுவும் தண்ணியடிச்சிட்டு வந்து லேகியத்தை விழுங்கிட்டு படுத்திடும். காசும் தாறேல்லை..இப்ப வாறதும் குறைஞ்சிட்டுது.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கண்ணிலிருந்துமுத்து முத்தாய் விழுந்த துளிகள் மார்புகளிடையே வழிந்தோடி மறைந்து போனது இடையிடையே கையால் துடைத்தபடி தொடர்ந்தார்.நானும் எங்களிற்குள் இருந்த இடைவெளியை குறைத்துக்கொண்டேன்.அவர் தோள்களுடன் எனது தோள் தொட்டுக்கொண்டிருந்தது.


அப்ப மனேச்சரோடை........எ .. ப்.. பி .. டி.. மிண்டி விழுங்கினேன்.

குனிந்து பாவாடையால் முகத்தை துடைத்து மூக்கையும் சீறிவிட்டு தொடர்ந்தார். அந்த நேரத்திலைதான் கூப்பன் சாமான் வாங்கபோற நேரத்திலை மனேச்சரோடை பழக்கம். நான் கலியாணம் செய்ய மனசிலை கற்பனை பண்ணி வைச்சிருந்தவரை போலவே இருந்தார். நல்ல மனுசன் எல்லா உதவியளும் செய்யிறார்.என்ரை குடும்பம் ஓடுறது அவராலைதான்.அதுக்கு உபகாரமா கொடுக்கிறதுக்கு என்னட்டை என்னைத்தவிர வேறையொண்டும் கிடைக்கேல்லைஅவரும் என்னை கட்டச்சொல்லி கேக்கேல்லை நானும் அவர் என்னை கட்டுவாரெண்டு நினைக்கேல்லை ..ஏதோ காலம் ஓடுது..

சந்திக்கடை ரவியர் எண்டது........

அப்பிடியொண்டும் இல்லை அது நான் அவனின்ரை கடைக்கு காய்கறி வாங்க போன இடத்திலை காய் கறியை தந்திட்டு காசு வேண்டாம் கடைக்கு பின்னாலை வரச்சொல்லி கேட்டான் ..நான் கோவத்திலை எல்லாத்தையும் எறிஞ்சு போட்டு வந்திட்டன் .. அதாலை அவனே கதையை கட்டி விட்டிட்டான் ஊரும் நம்பிட்டுது.. என்று சொல்லும்போதே விம்மி வெடித்து கைகளால் கண்களை பொத்தியபடி அழத்தொடங்கிவிட்டார்.

அழாதேங்கோ மலரக்கா. அவர்தலையை நிமித்தி கண்ணீரை துடைத்தேன்.டக்கென்று என்னை கட்டிப்பிடித்தவர் என்ரை தலையை தன் மார்போட இறுக்கிப்பிடிச்சபடி அழுதுகொண்டிருந்தார் சூடான அவரது கண்ணீர் என்தலையில் பாரமாய் விழுந்து கொண்டிருந்தது. திரிசங்கு சொர்க்கம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.அண்டைக்குத்தான் அது என்னவெண்டு தெரிஞ்சுது.விழையாடிக்கொண்டிருந்த குழந்தை அழத்தொடங்கியதால் என்னை விடுவித்தார்...சே .இன்னும் கொஞ்சம் கட்டிப்பிடித்தபடி இருந்திருக்கலாமேயென தோன்றியது.

சரியடா பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கவேணும்.உன்னையும் குழப்பிப் போட்டன் நீ போ இந்தப் பக்கம் இனி வராதை உனக்குத்தான் பிரச்சனை ..போட்டுவா..

அவரிடம் எதுவுமே சொல்லாமல் சைக்கிளை எடுத்து மிதித்தேன் கோயிலில் இரவு ஒன்பது மணி டாண் ..டாண்..என அடிக்கத்தொடங்கியிருந்தது. வழைமையாய் புளியமரத்திற்கு பயப்பிடும் நான் புளியமரம் கடந்ததே தெரியாமல் சைக்கிளில் வயற்கரை பக்கம் பேயிருந்தேன்.சணலாய் சலசலத்த வயல் மரவள்ளியாய் மாறியிருந்தது. மரவள்ளியின் உள்ளே நுளையவில்லை.வரம்பிலை சைக்கிளை போட்டு விட்டு அங்கேயே ஆகாயத்தை பாத்தபடி படுத்திருந்தேன்.என்னை ஒரு வெறும் தகர றம் ஒன்றில் போட்டு யாரே உருட்டிவிட்டது போல இருந்தது.சிந்தனைகள் குழம்பி குழம்பி எங்கொல்லாமோ ஓடியது. ஒரேயொரு தடைவையாவது மலரக்காவினுள் புதைந்து எழுந்தாலே போதுமென்று சுற்றித்திரிந்த என் மனதில் மாற்றங்கள் தொடங்கியிருந்தது. பாவம் மலரக்கா இனி மலரக்காவை பற்றி கோயிலடியிலை கதைக்கிறேல்லை யாராவது கதைச்சாலும் பல்லை உடைக்கவேணும்.

அதே நேரம் மலரக்காவின் மார்பிலேயே காலமெல்லாம் களிக்கவேணும் என்று சிந்தனைகள் சுற்றிக்கொண்டிருக்க.நேரம் போனதே தெரியவில்லை.அங்கிருந்த காவற்கொட்டில் ஒன்றிலிருந்த றேடியோவில் இரவின் மடியில் நிகழ்ச்சி தொடங்கி ""இது மாலை நேரத்து மயக்கம் இது கால தேவனின் கலக்கம்"என்கிற பாடல் காற்றில் கலந்து காதில் புகுந்து கொள்ளத்தான் நேரம் போனதையறிந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி மிதித்தேன்..

எங்கள் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கிவிட்டிருந்தது.கலர் கலராய் டியூப் லைற்றுகள்.நாலு வீதியிலையும் லவுஸ்பீக்கர். வாழை தோரணம் என்று நானும் நண்பர்களுடன் சேர்ந்து அலங்கரித்தோம்.கொடியேத்தத்திற்கு மலரக்கா பட்டுச்சீலை உடுத்தபடி வந்திருந்தார். சீலையோடை நான் அவரை பாத்தது அதுதான் முதல் தடைவை.நல்ல வடியவாயிருந்தார். இன்றுவரை பெண்களிற்கு கவர்ச்சியான உடை எது எண்டு கேட்டால் சேலை தான் எனது முதலாவது தெரிவு. இரண்டாவது ஜுன்ஸ்.ரீசேட்.. கோயிலடியில் எப்படியாவது கதைக்கலாமெண்டால் முடியேல்லை சுத்திவர சொந்தக்காரர்.தெரிஞ்சாக்கள். அவரும் நானும் புன்னகைகளை மட்டும் பரிமாறிக்கொண்டம்.அந்த நேரம்தான் எங்கடை ஊரிலை ஒரு காதல் ஜேடி சாதி மாறி காதலிச்சவை விசுவமடுவுக்கு ஓடிட்டினமாம் எண்டு கதை அடிபட்டது.அந்த நேரம் காதலிச்சு ஊரை விட்டு ஓடுபவை விசுவமடு அக்கிராயன் பக்கம் ஓடிட்டினம் எண்டு கதை அடிபடும் .அந்த ஊர்கள் எங்கை எந்தப்பக்கம் இருக்கொண்டு எனக்குத்தெரியாது.நான் யாழ்ப்பாணம் ரவுணுக்கு இரண்டு மூண்டுதரம் போயிருக்கிறன் அதுக்கங்காலை நாவக்குளி கோப்பாய் பாலத்தை தாண்டினது கிடையாது. திருவிழா நேரம் விசுவமடு அக்கிராயன் எங்கை யிருக்கொண்டு சிலரிட்டை விசாரிச்சன் அவை சொன்ன விபரங்கள் பிடிபடேல்லை.அந்த நேரம் எங்கடை ஊர் காரர் வன்னியிலை தோட்டம் செய்யிறவர் திருவிழாவுக்கு வந்திருந்தார். அவர் வன்னியாலை வரேக்குள்ளை மரைவத்தல் பண்டியிறைச்சி தொங்குமான் இறைச்சியெண்டு கொண்டுவந்து ஊருக்குள்ளை விக்கிறவர்.அவர் என்ரை மாமாவின்ரை சினேதன் அவரை கோயில்லை கண்டு பிடிச்சன் .
அண்ணை நீங்கள் வன்னியிலைதானே காணி செய்யிறியள் அது எங்கை??

அது பூவரசங்குளம்
அது எங்கையிருக்கு
அதுவந்து தம்பி வவுனியா மன்னார் றோட்டிலையிருக்கு
அங்கை எப்பிடி போறது கன தூரமோ??
நீ சண்முகத்தின்ரை மருமேனனல்லோ உனக்கேன் உந்த விபரங்கள்.
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வன்னியிலை காணி செய்யவேணுமெண்டு கேட்டார் அதுதான்....
அவரை என்னட்டை வரச்சொல்லு விளக்கமாய் சொல்லுறன் நீ சின்னப்பெடியன் உனக்கு இதுகள் விளங்காது...
அவரின் சின்னப் பெடியன் எண்ட வசனம் என்னை கோபப்படுத்தியது. ஆனால் எனக்கு வன்னிக்கு போகிற வழிமட்டும் சரியாய் தெரியவேயில்லை.மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லவேணும். அவா எப்பிடியும் ஓமெண்டுவா அவாவை கூட்டிக்கொண்டு எங்கையாவது ஓடிடவேணும்.ஆனால் எங்கையெண்டுறதுதான் தெரியாது.யாழ்ப்பாணத்திலை எங்கையும் ஓடமுடியாது எல்லாப்பக்கமும் சொந்தக்காரர் பிடிச்சிடுவாங்கள்.வன்னிக்கு போகவும் வழிதெரியேல்லை.சினேதங்களிட்டை கேக்கவும் விருப்பம் இல்லை அவங்களுக்கு இதை சொன்னால் பயத்திலை உடைனையே வீட்டிலை சொல்லிடுவாங்கள்.ஒரு வழியும் இல்லையெண்டால் படங்களிலை வாற மாதிரி தற்கொலைதான்.சாகிறதுக்கும் பயமாய்தான் இருந்தது.ஆனால் மலரக்காவை கட்டிப்பிடித்தபடியே தற்கொலை செய்தால் பயம் இருக்காது.ஆனால் தூக்கு மட்டும் போடக்கூடாது கயிறு கழுத்தை இறுக்கிற மாதிரி நினைத்துப்பார்க்கவே கைகால் நடுங்கியது.கிணறு ..வேண்டாம் மூச்சடக்கும் எனக்கு நீந்தத் தெரியும் .அதாலை பொலிடோல்தான்.முடிவுசெய்தேன்.

எதுக்கு உடைனையே தற்கொலை முடிவெல்லாம் முதல்லை மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுவம். எங்கை ஓடிப்போறதெண்ட ஜடியாவை அவாவிட்டை கேப்பம்.அவாக்கு ஏதும் வழி இருக்கலாம்.பிறகு யோசிக்கலாம்.கொஞ்ச பூவரசம் இலையளை புடுங்கி சுருட்டி கோயில் கேணிசுவரில் சிறி..மலர் என்று எழுதினேன். 5ம் திருவிழாவுக்கிடையிலை எப்பிடியாவது மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுறது அதுக்கிடையிலை ஓடிப்போறதுக்கு கொஞ்ச காசு சேர்க்கிறதெண்டு முடிவெடுத்தன்.வீட்டிலை அம்மம்மா காசு வைக்கிற மல்லிப் பேணி மிளகாய்ப்பேணி எல்லாத்தையும் திறந்து பாத்து எங்கை எவ்வளவு இருக்கெண்டு கணக்கெடுத்து வைச்சிருந்தன்.எல்லாம் கடைசி நாளண்டுதான் எடுக்கவேணும்.மலரக்காவை ஏத்திக்கொண்டு ஓடுறதத்துக்கு என்னட்டை சைக்கிள் நிண்டது.ஆனால் அவாவின்ரை பிள்ளை?? திரும்பவும் பிரச்சனை அவா பிள்ளையை விட்டிட்டு வருவாவோ ??பிள்ளையையும் கொண்டு ஓடுறதெண்டால் இருக்க இடம் எல்லாம் ஒழுங்கு பண்ணிட்டுத்தான் போகவேணும்.ஒரே குழப்பம்.அதுவும் அவாவிட்டையே கேப்பம்.


அண்டைக்குகுமாரசாமியரின்ரை 5ம் திருவிழா வாணவேடிக்கை சின்னமேளம் எண்டு திருவிழா களைகட்டும்.எனக்கு காலையிலை இருந்தே ஒரே பதட்டம் என்ரை நண்பர் எல்லாரோடையும் போய் சும்மா பாத்து கதைச்சன்.பகல் திருவிழாவிலை மலரக்காவை பாத்து இரவு திருவிழாவுக்கு வருவார் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.திருவிழா முடிய கோயில்லையே அன்னதானத்தை சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்து விட்டேன் இரவு திருவிழா தொடங்கியது எல்லாரும் வரத் தொடங்கிச்சினம்.மலரக்கா பிள்ளையோடை வந்திருந்தா.சங்கக்கடை மனேச்சரும் நிண்டார்.அம்மம்மாவும் கோயிலடியிலைதான் நிண்டா.உடைனையே வீட்டை ஓடிப்போய் பேணியளிலை அவா போட்டு வைச்சிருந்த காசு எல்லாத்தையும் எடுத்து எண்ணிப்பாத்தன் ஒரு 150 ருபாய் வரை இருந்தது எடுத்துக்கொண்டுகோயிலடிக்கு வந்திட்டன்.சாமி வீதிஉலா எல்லாம் முடிஞ்சு 9 மணியளவிலை ஊரிலை உள்ள குமருகள் எல்லாம் வீடுகளுக்கு போட்டினம். மலரக்காவும்அவரது பக்கத்து வீட்டுகாரரோடை போய்கொண்டிருந்தா.அவர் வீதிக்கு வந்ததும் ஓடிப்போய் என்ன போறிங்களோ எண்டு கேட்டன். பிள்ளைக்கு சாப்பாடு குடுத்திட்டு பக்கத்து வீட்டிலை படுக்கவைச்சிட்டு சீலையை மாத்திக்கொண்டு திரும்பவும் வில்லுப்பாட்டு பாக்க வருவன் எண்டா. மனேச்சரும் போக வெளிக்கிட்டார் அவர் மலரக்கா வீட்டுப்பக்கம் போகிறாரா என வேவு பார்த்தோன். அவர் கடைப்பக்கமாய் போய்க்கொண்டிருந்தார்.அப்பாடா என்றொரு நிம்மதி பெருமூச்சு ஒண்டை விட்டன்.

மேளச்சமா முடிந்து சின்னமணியின் வில்லுப்பாட்டுத் தொடங்கியிருந்தது நளன் தமயந்தி கதையை நளினத்தோடை சொல்லிக்கொண்டிருந்தார்.மலரக்கா கையில் ரோச்லைற்றோடை பக்கத்து வீட்டுக்கார மனிசியோடை வந்துகொண்டிருந்தார் அவர் வரும்வரை காத்திருந்த நான் அவரிட்டை போய் மெதுவாய் காதிலை "நீங்கள் திரும்ப வீட்டை போகேக்கை தனியா வாங்கோ உங்களிட்டை ஒரு விசயம் சொல்லவேணும்" என்று விட்டு ஓடிவிட்டேன் அவர் என்னையே ஆச்சரியமாய் பார்த்தபடிபோய்விட்டார்.

வில்லுப்பாட்டு முடிந்திருந்தது நேரம் பன்னிரண்டை தொட்டுக்கொண்டிருந்தது. அடுத்ததாய் சின்னமேளம் தொடங்க ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.கோயிலடியில் மிச்சம் மீதமிருந்த பெண்களும் சின்ன பெடியள்கூட வீடுகளிற்கு போகத் தொடங்கியிருந்தனர்.கோயில் நிருவாகத்திலையிருந்த பெருசு ஒண்டு யாராவது சின்னப் பிள்ளையள்.இளம் பெண்கள் இருக்கினமோ எண்டு கவனித்து அவையளை வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.பெரும்பாலும் வயதான ஆண்களும் ஆண்டு அனுபவிச்சு முடிஞ்ச கிழவியளும்தான் மிச்சம்.மலரக்காவும் பக்கத்து வீட்டு மனிசியும் போவதற்கு தயாரானார்கள். மலரக்கா அவரிடம் ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு வடக்கு வீதியில் என்னைப்பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரருகில் போய்
சைக்கிள்ளை ஏறுங்கோ.

ஆரும் கண்டாலும் எதுக்கு .முதல் வாங்கிக் கட்டினது காணாதோ.
எல்லாரும் சின்னமேளம் பாக்க குந்திக்கொண்டிருக்கினம் கெதியாய் ஏறுங்கோ
ஏதோ கதைக்கவேணும் எண்டுபோட்டு இப்ப சைக்கிள்ளை ஏறச்சொல்லுறாய்.
அதை சொல்லுறதுக்குத்தான் ஏறச்சொல்லுறன்.
அவர் கையை பிடித்து இழுத்து சைக்கிளில் ஏத்தியபடி சைக்கிளை மிதித்தேன். சின்னமேளம் தொடங்கிவிட்டிருந்தது ஒலிபெருக்கியில்....

ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா


பராசக்தி பாடல் போய்க்கொண்டிருந்தபொழுதே மலரக்கா வீட்டு ஒழுங்கைக்குள் இருந்த புளியமரத்தடிக்கு வந்துவிட்டேன்.ஒரே கும்மிருட்டாய் இருந்தது சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினேம். ஒருவருக்கொருவர் அருகருகே நின்றாலும் நிழலாய்தான் தெரிந்தது.
என்னத்தை சொல்லப்போறாய் அதுவும் புளியமரத்துக்குக் கீழை கும்மிருட்டிலை வைச்சோ உனக்கு சொல்லவேணும்.பாம்பு கீம்பு வந்து கொத்தப் போகுது
என்றபடி மலரக்கா ரோச்வெளிச்சத்தை அடிச்சு நிலத்தை பாத்திட்டு என்னை நோக்கி வெளிச்சத்தை அடிச்சார்.அவர் கையிலிருந்த ரோச்சை பறித்து நிற்பாட்டி விட்டு
மலரக்கா நான் உங்களை லவ் பண்ணுறன்.
கொல்லென்று சிரித் தார் இருட்டில் அவரது முகபாவத்தை பார்க்கமுடியவிலை.
சரி சரி சைக்கிளை எடு போவம்.
மலரக்காவை இறுக்க கட்டிப் பிடித்தேன்
பகிடியில்லை மலரக்கா சத்தியமா. பிள்ளையாரான அம்மாளான உங்களை லவ் பண்ணுறன்.மாட்டன் எண்டு மட்டும் சொல்லிடாதேங்கோ.

என்னுடைய பிடியை பிரித்தெடுத்தவர் அந்த இருட்டிலும் குறி தப்பாமல் என் கன்னத்தில் பளாரெண்டு அவரது கை இறங்கியது.

டேய் உனக்கென்ன விசரா.என்ன கதைக்கிறாய். நான் ஏதோ சின்னப்பெடியன் எண்டு நினைச்சால்.நீ பெரிய...

நான் சின்னப் பெடியன் இல்லை..இல்லை..இல்லை..

சரி ஆனால் நான் அப்பிடியெல்லாம் நினைச்சு உன்னோடை பழகேல்லையடா.

அப்ப அண்டைக்கு உங்கடை கதையெல்லாம் சொன்னது என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சது.கொஞ்சினது.

எனக்கொரு தம்பி மாதிரி நினைச்சுத்தான்ரா அதெல்லாம் சொன்னான் ஏதோ என்ரை ஏலாத்தன்மை கட்டிப்பிடிச்சன்.

அதெல்லாம் எனக்கு தெரியாது.....

சரி நீ பெரிய பெடியன் .நான் உன்னோடை வாறன்.என்னை வைச்சு காப்பாத்துவியா? உனக்கு வருமானம் இருக்கா வேலை இருக்கா?

என்னட்டை 150 ருபாய் இருக்கு..

டேய் லூசு மாதிரி கதைக்காதை உன்ரை 150 ருபாயிலை ஒருகிழைமை தின்னலாம் பிறகு.என்ன செய்யிறது

எங்கையாவது ஓடிப்போகலாம்.நான் ஏதாவது வேலை செய்வன்.

எங்கை ஓடுறது??உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?? ஓடிப்போற இடத்திலையும் வயித்தை கழுவ நான் ஒரு சங்கக்கடை மனேச்சரைத்தான் பிடிக்கவேணும்.எங்கை ரோச்லைற்ரை கொண்டுவா

அழுதபடி கோவத்தில் ரோச்லைற்றை பத்தைக்குள் வீசி எறிந்துவிட்டு
அதெல்லாம் எனக்குத் தெரியாது.நான் உங்களை லவ் பண்ணுறன். நீங்கள் இல்லையெண்டால் நான் தற்கொலை செய்திடுவன்.

மீண்டும் கட்டிப்பிடிக்கப் போன எனக்கு அதே கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது
சரி வா....

அவரின்ரை வீட்டுக்கு என்ரை கையை பிடிச்சு இழுத்துக்கொண்டு போனார்.

என்ரை சைக்கிள்..

அது கிடக்கட்டும்வா ..

வீட்டிற்கு இழுத்துப் போனவர் முத்தத்தில் கிடந்த சாக்கு கட்டிலில் வேகமாய் என்னை தள்ளி என்ரை சேட்டை இழுத்துக் கழட்டினார்.தன்ரை சட்டையையும் உள் சட்டையையும் கழட்டியவர் என்னுடைய தலையை மார்போடு அணைத்தார்.
இந்தா இதுதானே உனக்கு வேணும்.இதுதான் உன்ரை காதல்.இதுக்குத்தானே தற்கொலை செய்யப் போறன்எண்டனி.

அவரின் வெறும் மார்பு என்முகத்தில் பட்டதும் நெருப்பு சட்டி பட்டது போலை இருந்தது.விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தேன். மலரக்காவும் அழுதார்.சில நிமிட அழுகைளின் பின்னர் மெளனம்.

அய்யோ இல்லை மலரக்கா இதுக்காக லவ் பண்ணேல்லை..

அப்ப எதுக்கு??

தெரியேல்லை....

என்னை நெற்றியில் முத்தமிட்டவர்.சாக்குக்கட்டிலில் சரிந்து படுத்தக்கொண்டு என்னையும் இழுத்து அணைத்துக்கொண்டார்.இருவருமே ஆள் பாதி ஆடை பாதி.எனக்குள் எந்த உணர்ச்சியும் இல்லை காற்சட்டை விறைக்கவில்லை...இருவருமே ஆடாமல் அசையாமல் ஆகாயத்தை பார்த்தபடி படுத்திருந்தோம்.சிறிது நேரத்து மொளத்தை அவரே கலைத்தார்.

எனக்கு தெரியும். ..நீ நல்ல பெடியன்.இப்பிடியெல்லாம் குறுக்காலை போற மாதிரி யோசிக்காமல் நல்லபடியாய் படி பெரியாளாய் வா உனக்கு நல்ல மனிசி கிடைப்பா.சரிதானே.

ம்.........

எனி தற்கொலை அது இதெண்டு சொல்லுவியா??

இல்லை...

இப்பவும் என்னை லவ் பண்ணுறியா???

...........................................................................மொளனம்.

அவரும் எழும்பி சட்டையை போட்டபடி
சரி எழும்பு சேட்டை போடு....

ம்......................

புறப்படத்தயாரானேன்.
டேய் கிட்டவா

ம்.........

என்ரை கையை தனது தலையில் எடுத்து வைத்தவர்.போகமுதல் எனக்கு இரண்டு சத்தியம் பண்ணிட்டுபோ..

என்னது.....

உனக்கு உண்மையிலையே என்னிலை அன்பு இருந்தால்.நீ தற்கொலை செய்யிறணெண்டு போகக்கூடாது.அடுத்தது இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது. என்னை எங்கை கண்டாலும் கதைக்கவும்கூடாது நானும் கதைக்கமாட்டன்.சத்தியம் பண்ணு.

சத்தியம்.....

நான் சொன்னதை திருப்பி சொல்லி சத்தியம் பண்ணு....

அவர் சொன்னவைகனை திரும்பச்சொல்லி சத்தியம் பண்ணிவிட்டுபுளியமரத்தடிக்கு வந்து சைக்கிளை எடுத்தன் ஆனாலும் வீட்டை போக மனம் இல்லை அங்கையே புளியமரத்து வேரிலை கொஞ்சநேரம் இருந்தன். புத்தனுக்கு போதி மரம் எண்டு படிச்சிருக்கிறன் எனக்கு புளியமரம்.

அதுக்கு பிறகு அம்மம்மா வீட்டிலை இருக்கப் பிடிக்காமல் வீட்டிற்கே வந்து விட்டிருந்தேன். மலரக்காவை சந்திக்கவேயில்லை. அவரது செய்திகள் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும்.

மொட்டை மூத்தி செத்துப்போச்சாம்...
மனேச்சருக்கும் மலரக்காவுக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம்.
மலரக்கவை விட்டிட்டு மனேச்சரும் கலியாணம் கட்டி வேறை ஊருக்கு போட்டாராம்.
மலரக்காவின்ரை சகோதரங்கள் வெளிநாடு வந்து கலியாணம் கட்டிட்டினமாம்.
மலரக்காவின்ரை பிள்ளையளையும் மலரக்காவையும் சகோதரங்கள் வெளிநாட்டுக்கு கூப்பிட்டவையாம் பிள்ளையள் இரண்டும் வந்திட்டுதாம்.மலரக்கா தாய்லாந்திலை பிடிபட்டு ஜெயில்லையாம்.
ஜெர்மனியிலையிருந்து போன ஒரு ஏஜென்சி மலரக்காவை ஜெயில்லை இருந்து வெளியாலை எடுத்து ஜெர்மனிக்கு கொண்டு வந்திட்டாராம்.மலரக்கா இப்ப அந்த ஏஜென்சிகாரனோடைதானாம். ஒருபிள்ளையுமாம்.அவர் ஏற்கனவே கலியாணம் ஆனவராம்.
ஏஜென்சிக்காரன் வேறையொரு பெட்டையோடை தொடர்பாம் அதாலை மலரக்கா பிள்ளையோடை பிரான்சுக்கு வந்திட்டாவாம்
மலரக்காவின்ரை தங்கச்சிக்காரி ஒண்டுக்கு பிள்ளையள் இல்லாததாலை கடைசி பிள்ளையை அவா தத்தெடுத்திட்டாவாம்.மலரக்கா பாரிஸ் 12 லை தனியா றூமெடுத்து தங்கியிருக்கிறாவாம்.
மலரக்காவோடை சகோதரங்கள் பிள்ளையளும் கதைக்கிறேல்லையாம் இப்ப கோயில்லைதானாம் அவாவின்ரை சீவியம் போகுது.


அதிவேக இரயில் ஒரு நிறுத்தத்தில் நின்றது பயணிகள் பலர் ஏறவும் இறங்கவும் செய்தனர். நான் கண்ணை விழித்துப்பார்த்தேன்.மனைவியும் குட்டித் தூக்கதிலிருந்து எழுந்துவிட்டாள்.மகள் நல்ல நித்திரை ..

யாரவா..

எவா கோயில்லை கண்டவாவோ.??

ஓம் அவாதான்..

எங்கடை ஊர்க்காரி..

சொந்தமே??

இல்லை நல்ல பழக்கம்.

கோயில்லைதான் இருக்கிறனெண்டு ஏன் சொன்னவா குடும்பம் பிள்ளையள் இல்லையோ?

புருசன் இல்லை.பிள்ளையள் சகோதரங்கள் இஞ்சைதான் இருக்கினம். ஆனால் ஒருத்தரும் அவாவை அடுக்கிறேல்லை.

பிள்ளையளுமா??

ஓமாம்..

ஏன் அப்பிடி??

அது வந்து..அவாக்கு வாழ்க்கை சரியாய் அமையேல்லை அதாலை அவாவும் ஊரிலை கொஞ்சம் அப்பிடி இப்பிடி..ஆளும் நல்ல வடிவெண்டபடியாலை உண்மையை விட பல பொய்வதந்தியள்தான் உலாவினது.

பாத்தனான் இப்பவே நல்ல வடிவாய்தான் இருக்கிறா.அந்தநேரம் இளமையிலை இன்னும் வடிவாய் இருந்திருப்பா. நீங்களும் பின்னாலை திரிஞ்சனியளோ.

கொஞ்சம் பதறியவனாய் ""சேச்சே அப்பிடியெல்லாம் இல்லை "" கடவுள் உள்ள கல்லிலேயே பெரிய கூழாங்கல்லாய் தேடியெடுத்து எனது பெயரை எழுதி குடுவையில் போடும் சத்தம் கேட்டது.

அப்ப எதுக்கு வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்கொடுத்தனீங்கள்.

அன்று நள்ளிரவில் அதே புளியமரத்தின் கீழே வைத்து அதே அறை விழுந்ததுபோல் ஒரு பிரமை.கன்னத்தை மெதுவாய் தடவியபடி. "அதை கவனிச்சிட்டியா.??"

சரி நடந்ததை விளக்கமாய் சொல்லுறன்".அப்ப எனக்கு பதின்நாலு வயசு என்று தொடங்கிய நான். அனைத்தையும் விபரமாய் சொல்லி.அவா கேட்டமாதிரியே இனிமேல் உங்களை எங்கை கண்டாலும் கதைக்கமாட்டன் என்று மலரக்கா தலையில் அடித்து சத்தியம் பண்ணிட்டன்.இண்டைக்கு ஏதோ தற்செயலாய் சந்திச்சிட்டன். சிலநேரம் மலரக்கா என்னட்டை சத்தியம் வாங்கினதையே மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கேல்லை அதுதான் வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்குடுத்தனான். என்ரை சத்தியத்தை நான் காப்பாத்திட்டன்.

ஊகும்....இவர் பெரிய சத்தியவான்.காப்பத்திட்டாராம். இன்னும் இப்பிடி எத்தினை கதை இருக்கோ??..மனைவியிடமிருந்து ஒரு பெருமூச்சு ஒன்று வெளியானது.

நாங்கள் வசிக்கும் நகரத்திற்கு வந்துவிட்டதாக இரயிலில் அறிவித்தபடி வேகம் குறையத் தொடங்கியது. மகளை தட்டிஎழுப்பினேன்.