Navigation


RSS : Articles / Comments


கூர் வாளும்.. சாகாளும்...

2:05 PM, Posted by sathiri, No Comment

கூர் வாளும்.. சாகாளும்...

புது விசைக்காக

சாத்திரி.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிரணித் தலைவியாகவிருந்த  தமிழினி அவர்கள் எழுதி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட ஒரு கூர் வாளின் நிழலில் என்கிற அவரது சுய வரலாற்று புத்தகம் பெரும் சர்ச்சையையும் சமுக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களையும் கிளப்பியிருந்தது  அனைவரும் அறிந்ததே.விவாதங்கள் இன்னமும் முடிந்தபாடில்லை.தமிழினி தன் வரலாற்றை எழுதும் விடயத்தை அவரோடு உரையாடிய ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறிய பொழுது அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு புத்தகம் வெளியான பின்னர் புத்தகம் பற்றிய விமர்சனத்துக்குப் பதிலாக வரப்போகும் கடும் எதிப்புக்களையும் வசவுகளையும் தாங்குவதற்கு தயாராக இருக்கும்படியும் கூறி விட்டிருந்தேன்.பின்னர் அவரது புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்ததால் புத்தகம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டே யிருந்தது.இறுதியில் அவரது மரணத்தின் பின்னர் கணவர் ஜெயன் தேவா "கூர் வாளின் நிழலை" காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிக்கொண்டு வந்தார் .


 மறு பக்கம் .தமிழியின் புத்தகம் வெளிவரப் போகின்றது என்கிற செய்தி கசியத் தொடங்கியதுமே புலம் பெயர் மற்றும் தமிழ் நாட்டு தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் அதனை நிராகரிக்க அல்லது எதிர்க்க தங்களை தயார்ப்படுத்த தொடக்கி விட்டிருந்தனர்.அதனுள் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை .அதனை அறிய வேண்டிய தேவையும் அவர்களுக்கில்லை .காரணம் ஈழத்துக்கான  இறுதி யுத்தத்தின் தோல்வியின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்லது அதன் எதோ ஒரு கட்டமைப்பின் உறுப்பினராக இருந்தவர்களால் எழுதப் பட்ட கட்டுரையோ ,கவிதையோ ,புத்தகமோ, எதுவாக இருப்பினும் இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை கடும் விமர்சனங் களுக்குள்ளாக்கியதோடு கேள்விகளுக்குமுள்ளாக்கியிருந்தது.


விடுதலைப் புலிகளின் நடவடிக்கை மீதான கேள்விகள் என்பது அவர்கள் இல்லாதவிடத்து தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தங்கள் மீதான கேள்விகளாவே பார்த்து பயப்படத் தொங்கினார்கள் .காரணம் அது அவர்களது இருப்பு மற்றும் பிழைப்பு மீதான கேள்விகளாகவே அவர்களுக்கு படுகின்றது .
எனவே தங்கள் இருப்பை கேள்விக்குளாகி அசைத்துப் பார்க்கும் எந்தவொரு படைப்பையும் அல்லது படைப்பாளியை கண்ணை மூடிக்கொண்டு மூர்க்கமாக எதிர்ப்பது அவர்களது தலையாய கடைமையாகி விட்டிருக்கிறது.தமிழினியின்   புத்தகதில் உள்ளடக்கப் பட்டிருப்பது அத்தனையும் பொய் என  ஒட்டு மொத்தமாகவே எப்படி அதனை நிராகரிக்கலாமென்கிற  தேடலில் ஈடு பட்டிருந்தவர்களுக்கு அதன் பின் அட்டையில் இருந்த   "புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும்" என்று தொடங்கும் வாசகத்தில் கீழ் தமிழினி என்று அச்சிடப் பட்டிருந்தது .


அந்த வாசகமானது தமிழினி சிறிலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரேமாவதி என்பவரால் தமிழினிக்கு எழுதிய கடிதத்தில் வருகின்ற வரிகளே.தவறுதலாக தமிழினியின் வரிகள் என்று அச்சிடப் பட்டிருந்தது .எனவே அத்தனையும் பொய் என நிராகரித்தார்கள் .


பின்னர் அப் புத்தகத்தை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் பின் அட்டை விடயத்தில் தவறு நடந்து விட்டது என மன்னிப்புக் கோரியதோடு அந்த வரிகளை நீக்கியிருந்தார்கள்.தமிழினியின் கணவர் ஜெயக்குமாரும் அது சம்பந்தமாக மன்னிப்புக் கோரி விளக்கமளித்திருந்தார் .ஆனாலும் எதிர்ப்பவர்கள் விடுவதாயில்லை.அட்டையில் ஏற்பட்ட தவறைப்போலவே உள்ளடக்கத்திலும் இடைச் செருகல்கள்,தவறுகள் உள்ளது என்கிற  அடுத்த வாதத்தை தூக்கிப் போட்டார்கள்.


அதனை நிருபிக்க ஜெயக்குமாரின் கடந்தகால வரலாற்று ஆராய்சியில் சிலர் இறங்கி அவர் முன்னர் எத்தனை திருமணம் செய்தார் ? எத்தனை பிள்ளைகள்.அவரின் கடந்த கால அரசியல் நிலைப்பாடு என்ன என்கிற ஆராய்சிகளில் .அவர் கடந்த காலத்தில் புலிகளை கடுமையாக விமர்சித்தவர்.எனவே புலிகளை பழிவாங்கவே திட்டமிட்டு தமிழினியை திரு மணம் செய்தது மட்டுமல்லாமல்,தமிழினி புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை செய்யவென வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு செய்து மோசடி செய்தார்.அதே போலவே தமிழினி எழுதியது போல ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்று  ஆராய்சியின்  இறுதியில் கண்டு பிடித்தார்கள் .


புலிகள் அமைப்பின் மீது விமர்சனம் கொண்ட ஒருவர் அந்த அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் கைதாகி சிறை சென்று புனர்வாழ்வு பெற்று வந்த ஒருவரை திருமணம் செய்வதன் மூலம் எப்படி அந்த அமைப்பை பழிவாங்க முடியும்.?..அடுத்து மக்களுக்காக போராடப்புறப்பட்ட தமிழினி மட்டுமல்ல. சிறையிலிருந்து வெளியே வந்த ஆயிரமாயிரம் போராளிகள்  தங்கள் வாழ்வாதாரதுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது எவரையுமே ஏறெடுத்தும் பார்க்காத தேசிய வாதிகள் தமிழினியின் மருத்துவ செலவுக்கு ஒன்றும் கொட்டிக் கொடுத்திருக்கவில்லை.


தனிப் பட்ட முறையில் ஒரு சிலரே தங்களால் முடித்ததை உதவினார்கள்.இத்தனை ஆராய்சிகள் செய்த தீவிர தமிழ்த் தேசிய வாதிகளிடம் சில கேள்விகள் ??புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த எத்தனை பெண் போராளிகளை உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்திருக்கிறார்கள்? ஒருவரை காட்ட முடியுமா?.சிறைக்கு போய் வந்தவர்கள் என்று ஒரு மாதிரியாகத் தானே பார்க்கப் படுகிறார்கள்.இதோ தமிழீழம் ..இறுதி யுத்தம் என்று சேகரித்த மில்லியன் கணக்கான நிதியை பதுக்கி வைத்து விட்டு இன்று இலங்கையரசோடு சேர்ந்து கூட்டு வியாபாரமும் செய்து கொண்டு தமிழ்த் தேசியப் போர்வையை போர்த்தியிருப்பவர்களுக்கு
யார் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் ஒரு எழுத்துப்பிழையை கண்டு பிடித்தாவது ஒட்டு மொத்த புத்தகத்தையும் நிராகரிப்பதுதான் அவர்கள் நோக்கம்..எதிர்ப்பதென்று முடிவெடுத்து விட்ட பின்னர் எந்த விளக்கத்தையும் புலிகளின் தலைமையைப் போலவே  தீவிர தமிழ் தேசியவாதிகள் கேட்பதில்லை .இது கடந்த கால வரலாறு.



அடுத்து.. தமிழ் விமர்சன உலகம் என்பது இப்போது ஒரு படைப்பை விமர்சனம் செய்வதை விடுத்தது படைப்பாளியை போட்டுத் தாக்குவது என்பதுதான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றது.தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் ஒருபடி மேலே போய் எமக்கு உவப்பிலாத எதையும் யாரும் எழுதவே கூடாது என்பதுதான் அவர்களது விமர்சனம்.தமிழினியின் ஒரு கூர் வாளின் நிழலில் புத்தகம் வெளியானபோது தமிழினியை மோசமாக விமர்சிக்க நினைத்து அகரமுதல்வன் என்பவர்  "சாகாள்".. என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். அகரமுதல்வன்  என்பவர் தற்போதுதான் வளர்ந்துவரும் வரும் தீவிர தமிழ்தேசியம் பேசும் ஒரு இளம் கவிஞர் என அறியப்பட்டவர்.நாய் பார்க்கிற வேலையை கழுதை பார்க்கக் கூடாது என்றொரு பழமொழி உண்டு .அகரமுதல்வன் பார்த்த வேலை அதுதான்.


கவிதைகளை தவிர்த்து சில கதைகளையும் எழுதினார் .அவர் எழுதியது கதைகள் என்பதற்கு பதிலாக கண்மூடித் தனமான பிற்போக்கு தீவிர  தமிழ்தேசியத்தை கண்டிப்பவர்கள் மீது காழ்ப்புணர்வோடு  நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவை.அதுவரை அகரமுதல்வனின் காழ்ப்புக்களை கதை என்று சொல்லி காவித்திரிந்து கூவிக் கும்மாளமிட்டு மகிழ்ந்த தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் "சாகாள்"  கதை வெளிவந்ததுமே சட்டென பல்டியடித்து "சாகாள்"  கதைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள் .ஆணாதிக்க வாதி,பெண் போராளிகளை கேவலப் படுத்திய மன நோயாளி என்று திட்டித்தீர்த்து பதிவுகள் போட்டார்கள் .






அப்படி திட்டுமளவுக்கு அந்தக் கதையில் என்னதான் இருக்கின்றது என்று பார்த்தால்  இறுதி யுத்தத்தின்போது புலிப் பெண் போராளி ஒருவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைகிறாள்.அவளை இராணுவம் நிர்வாணமாகக்கி  இருபத்து மூன்று தடவைகள் வன்புணர்வு செய்கிறார்கள்  (சரியாக கணக்கெடுத்திருக்கிறார் )கடைசியில் அவள் புற்றுநோய் வந்து இறந்து போகிறாள்.இந்தக் கதை தேசிய வாதிகளுக்கு பிரச்சனையாக இருந்திருக்காது.ஆனால் கதையின் நாயகிக்கு பெயர் தமிழினியின் சொந்தப் பெயரான சிவகாமி என்று வைத்ததே பிரச்சனைக்கு காரணம்.இங்குதான் தீவிர தமிழ்த் தேசியம் தனது புத்திசாலித் தனத்தை கட்டியது .தமிழ் ஈழ விடுதலையை மட்டுமல்ல தமிழ் கலாச் சாரத்தையும் தாங்களே ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர்கள் என்று நிரூபித்ததோடு.தமிழினியின் புத்தகத்தை எதிர்த்தவர்கள் சாகாள் கதையையும் எதிர்த்து தங்களை நடு நிலை வாதிகளாக்கி கட்டிக் கொண்டார்கள் .


வழக்கம் போலவே இந்தக் கதையும் ஆகா ,ஓகோ ,என்று காவிச் செல்லப் படுமென எதிர்பார்த்திருந்த அகரமுதல்வனுக்கு அதிர்ச்சியாத் தான் இருந்திருக்கும் ..தீவிர தமிழ்த் தேசியத்தை சரியாக கணக்குப் போட தவறியதன் விளைவு. அவர் வீசிய வாள் இரண்டு பக்கமும் கூர் கொண்டது அவரையே பதம் பார்த்து விட்டது.ஆனால் என்னைப் பொறுத்தவரை சாகாள் கதையில் சிவகாமி என்கிற பெயரை நீக்கி விட்டு அபிராமி என்றோ ராமாயி என்றோ போட்டு படித்தால் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பெண் போராளிகளுக்கு நடந்த கொடுமைகளை சொல்லும் ஒரு கதைதான் அது.


படங்களாகவும், வீடியோ கிளிப்புகளாகவும்,நேரடி சாட்சியங்களாகவும்  எவ்வளவோ ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.அவற்றையெல்லாம் கலாச்சா காவல் என்கிற போர்வையில் மூடி மறைக்கவே விரும்புபவர்கள் ஐ.நா  சபை விசாரணை வேண்டும்,போர் குற்ற விசாரணை வேண்டும் பதிக்கப் பட்ட எங்கள் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கூவிக் கொண்டு வருடா வருடம் ஜெனீவா விற்கு காவடி எடுக்காமல்.இறுதி யுத்தத்தின்போது .சரணடைந்த அனைவரையும் இலங்கை இராணுவம் வடை பாயாசத்தோடு விருந்து வைத்து வரவேற்று பெண்களை கடவுளாக நினைத்து காலில் விழுந்து வணங்கி பத்திரமாக பல்லாக்கில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள் என்றொரு அறிக்கையை விட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். எது எப்படியோ ..புத்தகம் வெளி வந்தபோது நல்ல வேலை தமிழினி உயிரோடு இல்லை .இல்லாவிடில் அவரை வசை பாடியே கொன்றிருப்பார்கள் ..

பிப்பிலிப் பேய்

11:22 AM, Posted by sathiri, No Comment

பிப்பிலிப் பேய்


கதையின் காலம் 1984..



"ஆஆஆஆஆஆஆஆஆஆ".............."ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"..
 ஜயோ".......

.வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள்.

"டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம்".. என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன் சிவா .

" டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை".. என்றான் காந்தன்.

"விசர் பிடிச்சிட்டுதா நல்ல படிச்ச பெட்டையல்லோ யாழ்ப்பாணம் கற்றன் நசினலிலை (வங்கி)வேலை செய்தவள்" இது நான். வேலைக்கு போய் வாற நேரத்திலை மினிபஸ் கொண்டெக்கரர் பெடியன் ஒருத்தனை லவ் பண்ணினவளாம் அது தெரியவந் து தகப்பன் காரன் சரியான அடியாம். பிறகு வேறையிடத்திலை மாப்பிளை தேட வெளிக்கிடேக்குள்ளை பெட்டைக்கு விசர் பிடிச்சது எண்டினம் சிலபேர் . ஆனால் செய்வினை செய்ததிலை பேய் பிடிச்சிட்டுது எண்டும் சொல்லினம். இரவிலை அவளை சங்கிலியிலை கட்டித்தானாம் வைக்கிறது. சரியா உண்மை பொய்தெரியேல்லை என்று நீண்ட விளக்கத்தை சொன்னான் சசி.

"அவள் கத்துறது சரி ஆனால் இரவிலை வீடுகளுக்கு கல்லெறியிறது ஆராம்"?? கேட்டுவிட்டு எல்லாரையும் பார்த்தேன். மற்றவர்களும் ஆளையாள் பார்த்தார்கள்.

சத்தியமா பேய்தானாம் உலாவுறது போன கிழைமை சாமத்திலை போன யாரோ சங்கனை காரனுக்கு அடிச்சு அவன் ரத்தம் ரத்தமா சத்தியெடுத்தவனாம்.உது கனவருசமா உலாவுதாம். ஆனா இடைக்கிடைதானாம் இப்பிடி தன்ரை வேலையை காட்டுமெண்டுஅம்மா சொன்னவா . என்று சொல்லும் போதே இருள் அழகனின் முகத்தில் பேயறைந்தது போலவே பயம் தெரிந்தது.


இன்னொரு விசயம் தெரியுமோ முக்கியமா சனி ஞாயிறு இரவிலைதான் பேய் உலாவுதாம் அண்டைக்குத்தானம் அனேகமா கல்லெறி விழுறது . பேய் லீவுநாளிலைதான் உலாவவேணும் எண்டுஏதும் சட்டம் இருக்குதோ தெரியாது எண்டு தனது திக்கு வாயால் திக்கி திக்கி சொல்லி முடித்து விட்டு சிரித்தான் பிறேம். நானும் கேள்விப்பட்டனான் சனி ஞாயிறுகளிலைதானாம் கல்லெறி விழுறது எண்டு றோட்டுக்கரையிலை இருக்கிற சனங்கள் சொல்லினம். சிலநேரம் ரோந்து போற ஆமிக்காரன்தான் எறியிறானோ எண்டும் பயத்திலை அவை வெளியாலை வந்து பாக்கிறேல்லை... என்று  நான் சொல்லி முடிக்க முதலே சரி இந்த சனி ஞாயிறு நாங்கள் ஒருக்கா ரோந்து போய் பாப்பம் எண்டான் காந்தன்.

எதுக்கும் சுடலையில் பிணம் எரிக்கும் சந்திரனிட்டை பேயை பற்றி கேட்டுப் பாக்கலாமெண்டு யோசிச்சாலும். அவனிட்டை கேட்டு பேயை அலேட் ஆக்காமல் நாங்களாகவே தேடி பிடிக்கிறதெண்டு முடிவாயிட்டுது.
சரி இந்த சனி இரவு பேய் பிடிக்கிறதெண்டு முடிவாகியது.

"பேயோடையெல்லாம் விழையாடாதையுங்கோ நான் வரேல்லை"..என்று அடம்பிடித்த இருள்அழகனையும் விடாப்பிடியாய் எங்களோடு கட்டாயம் வரவேணும் இல்லாட்டி எங்களோடை சேரக்கூடாது எண்டு சொல்லியாச்சு அவனும் மெளனமாய் தலையாட்டியிருந்தான்.

திட்டத்தை போடத்தொடங்கினோம்.பேய் பிடிக்கப் போவதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. நானும் பிறேமும் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் எங்களிடம் ரி.என்.ரி ரக கைக்குண்டுகள் இருந்தது. அடுத்தது காந்தன் அவன் புளொட் அவனிடமும் பென்ரலைற் குண்டு ஒன்று இருந்தது.சசி ஈ.பி யிலை இருந்தவன் அவனிட்டை குத்திப்போட்டு எறியிற குண்டு இருந்தது இறுதியாக குணம் மற்றும் இருள் அழகன் இவர்கள் எந்த இயக்கங்களையும் சாராது கல்வியே கண்ணாயிருந்தவர்கள். . அவர்களிற்கு ஆயுதத்திற்கு என்ன செய்யலாமென யோசித்த பொழுதுதான். கோயிலில் ஜயர் வேட்டை திருவிழாவிற்கு வாழை வெட்டும் வாள் நினைவுக்கு வந்தது. இரண்டு வாள்கள் கோயில் வாகன சாலையில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும்.
யாருக்கும் தெரியாமல் அதை எடுப்பது என்று முடிவானது.


அன்று சனிக்கிழைமை இரவு பதினொன்றை தொட்டுக்கொண்டிருந்தது பேய் பிடிக்கப்போகும் ஆறு பேர் கொண்ட எங்கள் அணி ஆளிற்கு ஒவ்வொரு ரோச் லைற்றும் ஆயுதங்களோடு தயாராகியிருந்தது. எங்கள் திட்டப்படி பிறேமும் இருள்அழகனும் மானிப்பாய் மருதடிக்கும் பிப்பிலிக்கும் இடையில் வரும் வயல் வெளியில் இடையில் உள்ள நாயுருவி பத்தைக்குள் போய் ஒழித்திருப்பது. அங்கிருந்து நீளமான வீதியில் இரண்டுபக்கமும் பாக்கலாம் ஆமி ரோந்துவந்தால் அதை அவர்கள் கவனிக்வேண்டும். ரோந்து வருபவர்கள் பேசாமல் நேரை போனால் அப்படியே பதுங்கியிருக்கவேணும். அவங்கள் இறங்கி றோட்லை வீடுகளிலை சோதனை செய்ய தொடங்கினால் குண்டு அடிக்கிறது.. அப்ப நாங்கள் எல்லாரும் வீடுகளிற்கு போய்விடுவது.

 காரணம் அப்பஎங்களிடம் வோக்கியோ செல்போன்களோ இல்லாத காலம்.
அடுத்ததாய் நானும் காந்தனும் தோட்டவெளிகளுக்குள்ளாலை சுடலைக்குள் போய் பார்ப்பது சசியும் குணமும் எங்களோடு வந்து இடையில் பிரிந்து சுடகை்கு இறங்கும் ஒழுங்கைக்குள் போய் கவனிப்பது அதற்கு அருகில்தான் விசர் பிடிச்ச தேவரதியின்ரை வீடும் இருந்தது. புறப்படத் தயாரானதும் இருள் அழகன் விபூதியை எடுத்து நெத்தியிலும் கொஞ்சத்தை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டான்.


தோட்டங்களிற்குள்ளால் இறங்கி நடக்கத் தொடங்கினோம். மெல்லிதான நிலவு வெளிச்சமும் இருந்தது .பிறேமிற்கு அடுத்ததாக கடைசியாய் இருள் அழகன் வந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் டேய் அ...அ....அ....வனை கா...கா....கா...ணேல்லையடா எண்டு கத்தினான். எல்லாரும் நிண்டு திரும்பி பார்த்தோம் . இருள் அழகளை காணவில்லை ஓடிவிட்டான். ஒராள் குறைந்ததால் திட்டத்தை மாற்றவேண்டி வந்தது. பிறேமும் சசியும் பிரதான வீதிய கவனிப்பதற்காக இடையில் பிரிந்து போய் பற்றைக்குள் படுத்ததும் எங்களிற்கு ரோச் லைற் முலம் சிக்னல் தந்தனர். நாங்கள் மூவரும். சுடலைப்பக்கமாக போய் எட்டிப்பார்த்தோம் அன்று பிணம் எதுவும் இல்லாததால் சுடலைக்காவற்காரளையும் காணவில்லை..

மயானம்  மயான அமைதியாய் இருந்தது..மயானம் அப்பிடித்தானே இருக்கும்.பின்னர் வேலியோடு ஒட்டியபடி பதுங்கியபடி பிரதான வீதிப் பக்கமாக முன்னேறிக்கொண்டிருந்தபொழுது மீண்டும் அதே "ஜயோ".....அலறல்.அப்படியே நின்று ஒருத்தரை ஒருத்தர் பாத்துவிட்டு மீண்டும் நடக்கத்தொடங்கிய பொழுது ஒழுங்கையின் மறு பக்கத்திலிருந்து ஒதிரே ஒரு உருவம் மெதுவாக பிரதான வீதிக்கு வந்தது அங்கும் இங்கும் பார்த்தது.


நாங்கள் ஆளையாள் சுரண்டி "டேய் பேய்"..எண்று மெதுவான குரலில் சொல்லிவிட்டு அப்டியே அமர்ந்து கவனித்தோம். "டேய் பேயின்ரை கால் நிலத்திலை முட்டுதா வடிவா பார் முட்டாட்டி பேய்தான் ஓடிப் போயிடுவம்" என்றான் குணம். உற்று பாத்தோம் மெல்லிய வெளிச்சம் எண்டாதை கால் முட்டின மாதிரியும் இருந்தது முட்டாத மாதிரியும் இருந்தது. பேய் வெள்ளை உடுப்போடையல்லோ வரும் இதென்ன ஒரே கறுப்பாயிருக்கு என்று காந்தன் கிசு கிசுக்க . சிலநேரம் வைரவராயும் இருக்கலாமெண்டன்.

உருவம் வீதியை கடந்து எங்கள் பக்கமாய் ஒழுங்கைக்குள் இறங்கியது எங்கள் இதயத்துடிப்பும் கொஞ்சம் அதிகரித்தது. நான் கைக்குண்டினை இறுக்கி பிடித்திருந்தேன். மறுபக்கம் இறங்கிய உருவம் குனிந்து சில கற்களை எடுத்து அருகில் இருந்த வீடுகளிற்கு எறிந்தது மீண்டும் தேவரதியின் அலறல்.

உருவம் வேலியோரமாக இருட்டிற்குள் இறங்கியது .
"டேய் பேய் மறைஞ்சிட்டுதடா வாடா ஓடிடுவம்" மீண்டும் குணம்.

"பேசாமல் இரடா கொஞ்சநேரம் பாப்பம் இல்லாட்டி லைற் அடிச்சு பாக்கலாம்" எண்றுவிட்டு இருக்கும் போதே மீண்டும் இன்னொரு உருவம் ஒழுங்கையில் இறங்கியது."டேய் ஒண்டில்லையடா இரண்டுபேய்" என்றேன் மெதுவாக.

இப்பொழுது இருளில் நின்ற உருவம் வெளியே வந்து ஒழுங்கையில் இறங்கிய மற்றைய உருவத்தோடு சேர்ந்து நாங்கள் பதுங்கியிருந்த பக்கமாக வரத்தொடங்கியது. அருகில் வரும்பொழுதுதான் ஒன்று ஆண் மற்றது பெண் என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஆண் உருவம் மீண்டும் சில கற்களை எடுத்து வீடுகளிற்கு எறிந்து விட்டு எங்களை அண்மித்து விட்டார்கள். நாங்கள் வேலியோரமாக தரையோடு ஒட்டி படுத்துகொண்டோம். எங்களை தாண்டி அவர்கள் சுடலைக்கு பக்கத்திலிருந்த காணிக்குள் புகுந்துகொண்டார்கள்.

 நாங்கள் மெதுவாக பதுங்கியபடி காணிக்கு புகுந்து கொண்டோம். அந்தக் காணிக்குள் ஒரு கிணறு இருந்தது அதன்முன்பக்கம் சீமெந்து தரைபோட்டிருந்தார்கள். சீமெந்து தரையில்மேல் போய் சேர்ந்த இரு உருவங்களிற்கும் நாங்கள் மெதுவாக போனதில் சருகு சத்தம் கேட்டிருக்கவேண்டும் கொஞ்சநேரம் அப்படியே நின்று சுத்திவர பார்த்தார்கள்.
நாங்கள் அசையாமல் நின்று கொண்டதும். ஆண் உருவம் தனது சாரத்தினை கழற்றி தரையில் விரித்தது பின்னர் இருவரும் அதில் படுத்துக்கொள்ள அவர்களிற்கு அருகாக முன்னேறியிருந்த நாங்கள் ஆளையாள் சுரண்டி சமிக்கை செய்துவிட்டு முன்று பேருமாக சேந்து ரோச் வெளிச்சத்தை அடித்படி "அசையாதை".. என்று கத்தினோம்.

ஆண் முழு நிருவாணமாக குந்தியிருந்தார் பெண் அப்பொழுதுதான் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருந்தார். வெளிச்சம் அவர்கள் மீது பாய்ந்து கொண்டிருந்ததால் அவர்களால் எங்களை பாரக்கமுடியவில்லை அதனால் அவர்கள் ரோந்து வந்த ஆமிக்காரர்கள் நாங்கள் என நினைச்சு மாத்தையா எங்களை ஒண்டும் செய்யாதேங்கோ எண்டு நிலத்தில் படுத்து கும்பிட்டார்கள்.ரோச் வெளிச்சத்தை நிறுத்திவிட்டு அவர்களிட்டை உடுப்பை போட சொல்லிப்போட்டு விசாரித்தோம்.

 ஆண் எங்கள் ஊரில் வீடுகளில் கூலிவேலைகளிற்கு போவபர் அதோடு சீவல் தொழிலாளி நல்ல உடற்கட்டானவர். அந்த பெண்ணின் வீட்டிற்கும் போய் எடுபிடி வேலைகள் செய்வார்.பெண்ணின் கணவர் அரபு நாடு ஒன்றில் கட்டிட பொறியியவாளர். இரண்டு பிள்ளைகள். மாமன் மாமியாருடன் வசித்து வந்தவர்.

மாமனார் சனி ஞாயிறு நாட்களில் யாழ்ப்பாணம் நவீன சந்தை இரவு காவல் கடைமைக்கு போய் விடுவார். பெண் மாமியாருடன் பிள்ளைகளை படுக்கவைத்து விட்டு வெளியேறிவிடுவார்.இதனால்தான் சனி ஞாயிறுகளில் மட்டும் பேய் உலாவியிருந்தது.அதே நேரம் விசர் பிடித்த தேவரதியின் அலறலும் இரவு ஆமிரோந்தும் இவர்களிற்கு கை கொடுத்திருந்தது. ஆண் தான் வந்து விட்டதை அறிவிக்கத்தான் கல்லால் எறிவார். இப்படி இவர்களை விசாரித்துக்கொண்டிருக்கும் போது குண்டு வெடித்த சத்தம் ஊரே அதிர்ந்தது.

ஆமி வந்திட்டான் எனவே அவர்களையும் இழுத்துக்கொண்டு பின்னால் தோட்டங்களிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டோம்.சிறிது நேரம் துப்பாக்கி சூட்டு சத்தங்களும் கேட்டது ஆமி சந்தியில் நிண்டு சுட்டு விட்டு மாகல் நோக்கி போய்க்கொண்டிருந்தான். முன்னால் போய்கொண்டிருந்த ஜுப்பில் பெரிய லைற் ஒன்றை பூட்டி சுத்திவர அடித்து பாத்தக்கொண்டே போனார்கள். இனி இந்த பேய் விழையாட்டு விழையாடினால் சந்தியில் கட்டுவைச்சு போடுவம் எண்டு எச்சரித்து அவர்களையும் கலைத்து விட்டோம்.

அடுத்தநாள் குண்டு சத்தத்தை பற்றித்தான் ஊரிலை சனத்தின்ரை கதையாயிருந்தது. நாங்கள் கோயிலடிக்கு வந்திருந்தம் இருள் அழகன் மட்டும் வரவில்லை. அங்கு தோட்டம் செய்யும் ஒருவர் கோயில் வாளை கையில் தூக்கியபடி வந்துகொண்டிருந்தார். அவரை அப்படியே மடக்கினம். "தம்பியவை இது கோயில் வாள். காத்தாலை தோட்டத்துக்கு போனனான் வரம்புகரையிலை கிடந்தது எப்பிடிவந்தது எண்டு தெரியேல்லையெண்டார்".

"ஜயா இரவிலை பிள்ளையார் உலாவுறவராம் அவர்தான் கொண்டுவந்து உங்கடை தோட்டத்திலை போட்டிருப்பார் இனி உங்களுக்கு நல்லகாலம்தான்".என்றபடி  வாளை வாங்கிட்டன்.அவரோ. "பிள்ளையரே நீதான் காப்பாத்தவேணும்" எண்டு கோயிலிலை விழுந்து கும்பிட்டிட்டு வீபூதியை எடுத்து பூசிக்கொண்டு போயிட்டார். இனி இருள் அழகனை தேடி போகவேணும் அவனின்ரை வீட்டுக்கு எல்லாருமாய் போனம்.

"குறுக்காலை போவாரே என்ரை பிள்கை்கு என்னடா செய்தனீங்கள் அவனுக்கு ஒரே குலைப்பன் காச்சல் காசாயம் காச்சி குடுத்திருக்கிறன். குறயைாட்டி சாமியாரிட்டை கொண்டு போய் விபூதி போடவேணும் ராத்திரி நீங்கள் தான் குண்டும் எறிஞ்சிருப்பியள் இனி இந்தப் பக்கம் வரக்கூடாது".. என்று திட்டி  அவனின் தாயார் எங்களை கலைத்துவிட்டார்.நாலைந்து நாள் கழித்து தலையை தொங்கப் போட்டபடி மீண்டும் இருள் அழகன் எங்களை தேடி கோயிலடிக்கு வந்திருந்தான்.

பி.கு.. அன்று என்னுடன் பேய் பிடிக்க வந்தவர்களில் பிறேம். புலிகள் இயக்கம். உயிருடன் இல்லை.
காந்தன் முதலில் புளொட் பின்னர் புலிகள்..உயிருடன் இல்லை
சசி ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் உயிருடன் இல்லை.
குணம்.வைத்தியர் அவுஸ்ரேலியா
இருள்அழகன்.(சிவா)பிரான்ஸ் . செய்யாத தொழில் இல்லை ஆறு மாதம் முதலாளி ஆறுமாதம் தொழிலாளி.