Navigation


RSS : Articles / Comments


என்னத்தை சொல்ல

2:21 PM, Posted by sathiri, 5 Comments




லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்டன் போறதிற்கு தயாராகி சனிக்கிழைமை காலைமை விமான நிலையத்திற்குள்ளை போயிட்டன்.. சனிக்கிழைமை லண்டன் நேரப்படி இரண்டு மணிக்குத்தான் பேரணி ஆரம்பமாகும் நான் பத்துமணிக்கு பிளேன் எடுத்தால் பன்னிரண்டு மணிக்கு லண்டன் லுட்டன்விமான நிலையம் போய் எப்பிடியும் ஒண்டரை மணிக்கெல்லாம் பேரணி தொடங்கிற இடத்துக்கு போயிடலாம்.என்று என்னுடைய திட்டப்படி போடிங் எடுக்கிற இடத்திற்போனால்...அங்கை உன்னட்டை கத்தி இருக்குதா...துவக்கு இருக்குதா...குண்டு வைச்சிருக்கிறியா.. என்று சில கேனைத்தனமான கேள்வியெல்லாம் கேட்டாங்கள்..இலண்டனிலை கொக்கோ கோலா போத்திலுக்குள்ளை திரவக்குண்டு வைச்க முயற்சி செய்ததிற்கு பிறகு இங்கை விமான நிலையங்களிலை குடிக்கிற தண்ணிகூட கொண்டு போகஏலாது.. அதைவிட சிலநேரம் ஜட்டியைகூட உருவிப்பாத்துத்தான் அனுப்புறாங்கள்..அவையள் கேட்ட பொருள்கள் எதவுமே என்னட்டை இல்லாதனாலை போடிங்மட்டையை தந்து அனுப்பிவிட்டாங்கள்..

சேதனையெல்லாம் முடிஞ்சு உள்ளைபோய் நான் போகவேண்டிய விமானம் எந்தக் கதவிலை வருமெண்டு பாத்தால்...கறுமம் பிடிப்பார்.. நாப்பது நிமிசம் பிந்தித்தான் வருமெண்டு சிவப்புஎழுத்திலை போட்டிருந்தாங்கள்..நாப்பது நிமிசத்தையும் போக்காட்ட என்ன செய்யலாமெண்டு நினைச்சு கைத்தொலைபேசியை எடுத்து அதிலை விழையாடிக்கொண்டிருக்க அதுவும் ஒரு பத்து நிமிசத்திலை பற்றி சார்ச் முடிஞ்சு..கீக்..கீக்.. எண்டு கத்திப்போட்டு உயிரை விட்டிட்டுது..அடுத்ததாய் பொழுது போக்க என்ன செய்யலாமெண்டு யோசிச்சு அங்கை கண்ணாலை ஒரு துளாவு துளாவிக்கொண்டிருக்க துனிசியாவிக்கு பிளேன் போகிற கதவிலை ஒரு அளகாய் அளவான ஒருத்தி
... நசார்..நசார்...ஓடிவா..
நில்லாமல்...ஓடிவா...
படிமேல் ஏறிவா...
பத்தாம்நம்பர் கதவிற்கு வா...
துனிசியா பிளேன் வெளிக்கிடப்போகுது..
துள்ளித் துள்ளி ஓடிவா...
என்று. சின்னவயசிலை நாங்கள் பாடின நிலா பாட்டை மைக்கிலை மாத்திப்படிச்சுக்கொண்டு நிண்டாள்...

ஆனாலும் நசாரை காணேல்லை..அப்பிடியே அவளையே பாத்துக்கொண்டிருந்தன்.. சத்தியமாய் ஜெள்ளுவிடுறதுக்காக இல்லை..பொழுது போகவேணுமே அதுக்காகத்தான் நம்புங்கோ...அவளின் பாட்டிற்கும் நாசர் வராததால் துனிசியா விமானம் ஓடு பாதையிலை உருளத்தொடங்கத்தான் ஒருத்தர் கையிலை இரண்டு சிவாஸ்லீகல் விஸ்கிபோத்தலோடை ஆடியசைந்தபடி வந்து அவளிட்டை நான்தான் நசார் எண்டார்.. நாசமாய் போன நசாரே...இவ்வளவு நேரமும் எங்கை போனனீ எண்டு அவள் மனதிற்குள் திட்டியிருப்பாள்... ஆனாலும் கவலையாய் ..அடடடா விமானம் கிழம்பிட்டுதே.. இனி ஒண்டும் செய்யமுடியாது எண்டதும்.. நாசருக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்து நான் காசு கொடுத்து ரிக்கற் வாங்கியிருக்கிறனாக்கும்.. என்னை விட்டிட்டு எப்பிடி பிளேன் வெளிக்கடலாம்.... எண்டு போட்டான் ஒரு போடு... அடடா இவன் நம்மஊரிலை நாகராசா எண்ட பெயரிலை பிறந்திருக்கவேண்டியவன்.. அனியாயமாய் துனிசியாவிலை நசார் எண்ட பெயரிலை பிறந்திட்டானே..எண்டு மனசு உச்சு கொட்டியது.....

நீங்க மட்டுமா காசு கொடுத்து றிக்கற் வாங்கினீங்க... பிளேனிலை இருக்கிற மூன்னூறு போரும் காசுகொடுத்துத்தான் றிக்கற் வாங்கியிருக்கிறாங்கள்..உங்கள் ஒருத்தருக்காக அத்தனை பேரையும் காக்கவைக்க வைக்கமுடியாதே...எனவே அடுத்த விமானத்திற்கு உங்கள் றிக்கற்றை மாத்திக்கொண்டு வாருங்கள்... என்று ஒரு அருமையான தத்துவத்தை அமைதியாய் சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து போய்விட்டாள்...துனிசியா நோக்கி ஆகாயத்தில் எழும்பிப்பறந்த விமானத்தை கொஞ்சநேரம்... ஆ.....வெண்டு பாத்துக்கொண்டிருந்த நசாரும் அராபி மொழியில் ஏதோ திட்டியபடி அங்கையிருந்து போய்விட்டான்...அதுவரை அவளிட்டை அடகு வைச்சிருந்த என்மனதை திருப்பியெடுத்து நான் போகவேண்டிய பிளேன் வந்திட்டுதா எண்டு பார்த்தேன்..காணேல்லை...எனக்கு வைத்திய ஆலோசனையின்படி அடிக்கடி நிறைய தண்ணிகுடிச்சிட்டு அடிக்கடி உச்சாபோகவேணும்.. அடிக்கடி குடிச்சால் அதுவும் அடிக்கடி அடிக்கத்தானேவேணும்.. அது பலவருச பழக்கமாகிவிட்டது.அதனாலை மிசினில் சில்லறையை போட்டுஒரு தண்ணிப்போத்தலை எடுத்து குடிக்கிறதும்.. அடிக்கடி போய் அடிக்கிறதுமாய் ஒரு மாதிரி நேரம் போய் பிளேனும் வந்திட்டுது.


அதோடை புதிசாய் ஒரு பிரச்சனையும் சேந்தே வந்திது.. எல்லாரும் எழும்பி வரிசையாய் நிக்க போடிங் கிழிக்கிறதுக்கு கணணி வேலைசெய்யேல்லை.அவசரமாய் இரண்டுபேர் ஓடியந்து கணணியை ஏதோ நோண்டிக்கொண்டிருந்தாங்கள்..அதிலை ஒரு பதினைஞ்சு நிமிசம் ஓடிட்டுது... காத்தாலை யார் முகத்திலை முழிச்சமோ தெரியாது எல்லாமே ஒரே அலைச்சலாவே இருக்கு எண்டு நினைக்க மனக்கண்ணிலை நம்ம தங்கமணி முகம் நிழலாய் தெரிஞ்சது.. சே என்ன இருந்தாலும் நம்ம தங்கமணி முகம்தான் ரெம்ப ராசியான முகமாச்சுதே... இது வேறை ஏதோ சகுனப்பிழையாக இருக்கும் எண்டு யோசிச்சுப்பாத்தன்..வீட்டை விட்டு வெளியே வரேக்குள்ளை ஒரு கறுப்பு நிற பென்ஸ் கார் ஒண்டு குறுக்காலை போனது..அதுதான்சகுனம் சரியில்லையாக்கும்..இனிமேல் கறுப்பு பென்ஸ்கார் குறுக்கை போனால் எங்கேயும் வெளிக்கிடுறேல்லையெண்டு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு நிக்க..


. கணணியை நோண்டியவர்கள்.. களைச்சுப்போய் கைவிரித்துவிடவே ஒருவர் செய்யவேண்டிய வேலையை நாலுபேர் செய்யத்தொடங்கினார்கள்..என்னதான் விஞ்ஞானம் தொழில்நுட்பம் எண்டு தொங்கினாலும் இப்பிடியான நேரங்களிலை மனிதவலுதான் கைகொடுக்குது..ஒருத்தர் பாஸ்போட்டையும் போடிங் மட்டையையும் சரிபார்க்க ஒருத்தர் போடிங்கை கிழிக்க இரண்டுபேர் பயணிகளின்ரை பெயர்களை பதிவேட்டிலை சரிபாத்து ஒரு மாதிரி நானும் .அந்த நாலு பேரிற்கு நன்றி ....சொல்லியபடி விமானத்திலை ஏறி குந்திட்டன்...விமானம் உருளத்தொடங்க வழைமையாய் நடக்கிற பாதுகாப்பு எண்டிற பெயரிலை நடக்கிற பயமுறுத்தல் தொடங்கியது. குமட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்யிறது. மூச்சடக்கினால் என்ன செய்யிறது பிளேன் பழுதாகி விழப்போகுதெண்டால் என்ன செய்யிறது எண்டது ஸ்பீக்கரிலை சத்தம் போய்க்கொண்டிருக்க அங்கையும் இரண்டு அழகான பெண்கள் அதற்கு அபிநயம் பிடித்து காட்டிக்கொண்டிருந்திச்சினம்.பிளேனிலை ஏதாவது கோளாறு எண்டால் அதை கடலுக்குள்ளை இறக்குவம்.. எல்லாரும் எல்லாரும் கையிலை ஒரு சாமான்கூட எடுக்காமல் பாதுகாப்பு ஜாக்கெட்டை போட்டுகொண்டு கடலுக்கை குதியுங்கோ எண்டதையும் மெல்லிய புன்னகையோடை சிரிச்சபடியே சொல்லிட்டு போயிட்டாளவை..

ஊரிலை ஆமிக்காரன் கலைச்சு செல் அடிக்கேக்குள்ளையே காணி உறுதியை கையிலை எடுத்துக்கொண்டு ஓடினஇனம் நம்மஇனம்.. அப்பிடியான இனத்திலை பிறந்தஎனக்கு கையிலை எதுவுமே எடுக்காமல் கடலுக்கள்ளை குதி எண்டு சொன்னது மனதுக்கு கஸ்ரமாய்தான் இருந்தது..அப்பிடி குதிக்கவேண்டி வந்தாலும் கஸ்ரப்பட்டு எடுத்த பிரெஞ்சு சிற்ரிசன்பாஸ்போட் நனைஞ்சிடும் எண்டகவலையும் வந்திட்டுது.. எண்டாலும் அப்பிடி எதுவும் நடகக்கூடாது எண்டு மருதடிப்பிள்ளையாரை மனசுக்கை நினைச்சபடி லண்டனிலை போய் இறங்கிட்டன்.விமானம் ஒருமணிநேரம் பிந்தினதாலை என்னை ஊர்வலத்துக்குக்கு கூட்டிக்கொண்டு போறத்திற்கு வந்தவர் ஏதோ பிரசவ ஆஸ்பத்திரி வாசல்லை நிண்டவர் மாதிரி கையை பிசைஞ்சபடி அங்கையும் இஞ்சையும் நடக்கிறதும் போனை பாக்கிறதுமாய் நிண்டார்.

அவரை நான் பாக்கிறதும் அதுதான் முதல்தடைவை.என்னைக் கண்டதும் நீங்கள்தானே சிறி எண்டார்.. ஓம் சொறி பிளேன் கொஞ்சம் லேட்டாயிட்டுது எண்டன்..என்னை மேலையும் கீழையுமாய் ஏற இறங்கப்பாத்தவரிற்கு நான் பிளேனிற்கு பின்னாலையே ஓடிவந்தவன் மாதிரி தெரிஞ்சிருக்கவேணும்..சரி சரி பரவாயில்லை ஊர்வலம் தொடங்கியிருக்கும் இடையிலை எங்கையாவது போய் சேர்ந்துகொள்ளுவம்..என்றபடி அவசரமாய் அங்கையிருந்து புறப்பட்டுப்போய் ஊர்வலத்திலை ஒருமாதிரி இணைஞ்சிட்டம்...எப்பிடியும் ஒண்டரை இலச்சத்துக்கும் மேற்பட்ட தமிழர் கூடியிருந்த அந்த ஊர்வலத்தில் சர்வதேசத்தை நோக்கி.. இனப்படுகொலையை நிறுத்து.. தமிழீழம் வேண்டும்...என்று ஒலித்த இலட்சம் குரல்களில் என்னுடைய குரலும் கலந்திருக்கும் என்கிற மனநிறைவுடன் லண்டன் கை பார்க் திடலைவிட்டு வெளியேறினேன்.. வேறை என்னத்தை சொல்ல.......

5 Comments

Mark K Maity @ 3:04 PM

thanks.

shahra... @ 8:56 PM

//அப்பிடி குதிக்கவேண்டி வந்தாலும் கஸ்ரப்பட்டு எடுத்த பிரெஞ்சு சிற்ரிசன்பாஸ்போட் நனைஞ்சிடும் எண்டகவலையும் வந்திட்டுது.. எண்டாலும் அப்பிடி எதுவும் நடகக்கூடாது எண்டு மருதடிப்பிள்ளையாரை மனசுக்கை நினைச்சபடி லண்டனிலை போய் இறங்கிட்டன்.//

//தமிழீழம் வேண்டும்...என்று ஒலித்த இலட்சம் குரல்களில் என்னுடைய குரலும் கலந்திருக்கும் //

ttpian @ 5:11 AM

good,it is the need of the hour:unless we do,who else will do?
i just wait,wait for a flash news....tigers made a big assault.....sla gone to HELL!
prabha.please do....
k.pathi
kaaraikal

ராஜ நடராஜன் @ 11:40 PM

மச்சி என்றும் Fish என்றும் எரா என்றும் கேட்டுத் திரிந்தவனுக்கு கடல் உணவுகள் என்ற சொல்லைத் தெரிய வைத்தது உங்கள் தமிழ்.

இன்றைக்கு புதிதாக ஆங்கிலத்துக்கு நிகரான மனிதவலு சொல்லையும் கற்றுக்கொண்டேன்.இடுகைக்கு நன்றி.

sathiri @ 7:58 AM

//ராஜ நடராஜன் @ 11:40 PM

மச்சி என்றும் Fish என்றும் எரா என்றும் கேட்டுத் திரிந்தவனுக்கு கடல் உணவுகள் என்ற சொல்லைத் தெரிய வைத்தது உங்கள் தமிழ்.

இன்றைக்கு புதிதாக ஆங்கிலத்துக்கு நிகரான மனிதவலு சொல்லையும் கற்றுக்கொண்டேன்.இடுகைக்கு நன்றி.//
வருகைக்கு நன்றிகள்.. இங்கும் பலரிற்கும் புரியவேண்டும் என்பதற்காக பல ஆங்கில வார்த்தைகளை அப்படியேதான் பயன்படுத்தியிருக்கின்றேன்..இனிவரும் காலங்களில் தவிர்த்துக்கொள்கிறேன் நன்றி.