Navigation


RSS : Articles / Comments


சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05

1:06 PM, Posted by sathiri, No Comment

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 5

மிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததே தவிர, மற்றும்படி இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்.
அதுவரையான காலகட்டத்தில் பிரபாகரனை நிழலாக தொடர்ந்ததால், பிரபாகரனது குடும்பத்திற்கும் சொர்ணத்திற்கும் எப்படியான உறவு இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், சொர்ணம் திருமலைக்கு அனுப்பப்ட்டு விட்டார். அந்த நாட்களில் பிரபாகரனது மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கு 10 வயதுகள் இருந்தது. அவர் சொர்ணத்தை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஏதோ தற்காலிக சமாதானம் சொல்லியிருக்க வேண்டும்.
1996 இல், இம்ரான் பாண்டியன் படையணியின் நிகழ்வொன்று நடந்தது. அதற்கு பிரபாகரன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த நிகழ்வில் சொர்ணத்தை சந்திப்பேன் என சாள்ஸ் அன்ரனி நினைத்திருந்தார். ஆனால் எல்லா தளபதிகளும் வந்த நிகழ்வில் சொர்ணம் மட்டும் இல்லை. சொர்ணம் மாமாவை காணவில்லை, எங்கே அவர் என சாள்ஸ் அன்ரனி பகிரங்கமாகவே தந்தையாரிடம் கேட்டார்.
“அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இங்கே வரமாட்டார். அவர் கொஞ்சநாள் அங்கால இருக்கத்தான் வேணும்” என தந்தையார் பதிலளித்தார்.
அதற்கடுத்த நான்கு வருடங்களில் ஈழப்போரியலின் மிகப்பெரிய பண்புமாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதுவரை நினைத்தே பார்த்திருக்காத பெரும் போர்க்களங்கள் எல்லாம் நடந்தன. இந்த சமயத்தில்த்தான் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய காவலரண் வரிசையை அமைத்தார்கள். பலநூறு கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மன்னார் கடற்கரையிலிருந்து, மறு அந்தத்தில் இருந்த மணலாற்றின் நாயாற்று கடற்கரைவரை தொடர் காவலரண் அமைத்து தெளிவான எல்லைக்கோடு வகுத்து போரிட்டார்கள். இருதரப்பும் யுத்த டாங்கிகள், ஆட்லறிகள் கொண்டு மோதிக் கொண்டிருந்தன. அதாவது ஒரு மரபுப்போரின் அத்தனை அம்சங்களுடனுமான போர்.
இந்த சமயத்தில் சொர்ணம், திருகோணமலை காடுகளில் மறைந்திருந்து கெரில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இயக்கத்தில் இணைந்த காலப்பகுதில் எப்படியான போர் உத்திகளை பாவித்தாரோ, அதே உத்திகளுடனான ஒரு போர்க்களத்தில் வாழ்ந்தார். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்தது.
இந்த சமயத்தில் தமிழீழ போர்க்களம் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்கள் எதிலும் சொர்ணத்தை பங்கு கொள்ள வைக்காமல், தொலைவில் இருந்து பார்க்க வைத்து காலம் ஒரு விசித்திர கதையெழுதியது. புதிய புதிய தளபதிகள் உருவானார்கள். சொர்ணத்தின் முன்பாக மூக்குச்சளி ஒழுகத் திரிந்தவர்கள் எல்லாம், சொர்ணம் திரும்பி வந்தபோது, அவரிற்கு நிகராக களங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களில் அவர் பங்கு கொள்ளாததாலோ என்னவோ, மீண்டும் களமுனைக்கு திரும்பியவரால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதன் பின்னர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று களத்தை திறந்தார்கள். மிகப் பெரியவளங்களையும், ஆளணியையும், போரியல் உத்திகளையும் அந்தக்களம் புலிகளிடம் கோரியது. அவர்களும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஆயுதப் பஞ்சம் புலிகளிடம் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆளணிப் பஞ்சமும் ஏற்பட்டது. கிராமியப்படை, எல்லைப்படை என ஆட்களை திரட்டி சமாளித்து கொண்டிருந்தார்கள்.
இதே காலப்பகதியில் இன்னொரு தட்டுப்பாடும் அவர்களிடம் ஏற்பட்டது. யுத்தகளத்தை வழிநடத்தும் கட்டளைத்தளபதியொருவரை புலிகள் தேடினார்கள். என்னதான் புதிய நட்சத்திரங்கள் தோன்றினாலும், முழுக்களங்களையும் வழிநடத்தும் திறமை மற்றும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான தன்மை என்பனவற்றை கொண்டவரும், அதேசமயத்தில் மூத்த தளபதியாகவும் இருக்கும் ஒருவரை புலிகள் தேடினார்கள்.
இதுவரை அந்த பாத்திரத்தை வகித்து வந்த கருணா பற்றிய பல கசப்புக்கள் இயக்கத்திற்குள் உருவாகியிருந்தது. குறிப்பாக களமுனைகளில் அவர் சப்தகி முதலான சில பெண்போராளிகளுடன் கொண்டிருந்த பகிரங்க பாலியல் உறவு களமுனையிலிருந்த எல்லா போராளிகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முறைதவறிய பாலியல் உறவிற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பிற்கிடமில்லாத மரணதண்டனை வழங்கினார்கள். எனினும், ஜெயசிக்குறு களம் தீவிரம் பெற்றபின்னர், ஆட்பஞ்சம் நிலவியதாலும், வருடக்கணக்கில் போராளிகள் காடுகளில் அடைந்து கிடப்பதாலும் இந்த விவகாரத்தில் சற்று மேம்போக்கான கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். எனினும் நடைமுறைகள் ஒரு மரபாக உருவாவதைப் போல, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவென்பது தண்டனைக்குரிய அல்லது மனித நடத்தைக்கு முரணான விடயம் என்பதைப் போன்ற ஒரு மனப்பிரதிமை பெரும்பாலான போராளிகளிடம் படிந்திருந்தது. இந்த சூழலில் போராளிகளின் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தளபதியின் நடத்தை விடுதலைப்புலிகளை சங்கடப்படுத்தியது. அதற்காக அவரை தண்டனைக்குட்படுத்தவும் முடியவில்லை. ஜெயசிக்குறு களமுனையின் கட்ளைத்தளபதி அவர்தான். மற்ற மூத்ததளபதிகள் கள அனுபவமற்றிருந்தனர்.
பொட்டம்மான் விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாகரனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் களமுனையை வழிநடத்தும் நிலைக்கு அப்பால் சென்று விட்டார். மற்ற மூத்தவர்களில் ராயு, கடாபி, சூசை, பதுமன் போன்றவர்கள் தரைக்களமுனை செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவில்லை. எதோவொரு துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.  பானு, தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றவர்கள் கட்டளைத்தளபதிகளாக தங்களை நிரூபிக்காதவர்கள்.
இப்பொழுதுதான் தீபன் புதிய நட்சத்திரமாக உருவாகியிருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக பொறுப்புக்களை ஒப்படைக்கும் மனநிலையில் பிரபாகரன் இருக்கவில்லை.
எஞ்சியவர் சொர்ணம். அவர் கிழக்கில்.
ஒரு மனிதர் எவ்வளவுதான் அதிதீவிர திறமை கொண்டவர் எனினும், ஒழுக்கம், முன்னுதாரணம், அமைப்பு விசுவாசத்தில் சறுக்கினாலும் பிரபாகரன் அவருடன் சமாளித்துக் கொள்வதில்லை என்பதற்கு அந்த சமயத்தில் இரண்டு உதாரணங்கள் இருந்தன. ஒன்ற கருணா. மற்றது பால்ராஜ். நான் குறிப்பிட்ட இந்த மூத்தளபதிகள் பட்டியலில் பால்ராஜ் இருக்கவில்லை. அவர் இந்த சமயத்தில் ஒதுங்கியிருந்து விட்டு, மெதுமெதுவாக மீண்டும் அரங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார். 1998இல் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். பெருமளவு ஆட்லறிகளை கைப்பற்றிய பின்னரும், அதனை பத்திரமாக கொண்டு வரும் பாதை கைப்பற்றப்படாததால் அவை அங்கேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியடையவில்லை. இந்த தாக்குதலை வழிநடத்திய பால்ராஜ் அதன்பின், பலகாலம் முகாமில் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்தார். (பால்ராஜ் தொடர்பில் பின்னர் விரிவாக பார்க்கலாம்).
ஆனையிறவிற்கு அப்பாலான களமுனைகளில் முதற்கட்ட மாற்றம் செய்ய பிரபாகரன் நினைத்து அந்த பகுதிகளில் பால்ராஜ் கட்டளை வழங்கினார். எனினும், அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில இளநிலை கட்டளைத்தளபதிகள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன், கருணாவை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டதுடன், கிழக்கு அணியை கிழக்கிற்கே அனுப்பி வைத்தார்.
மீண்டும் சொர்ணத்தை அழைத்தார் பிரபாகரன். யாழ்ப்பாணத்திற்கான சண்டையை வடக்கிலுள்ளவர்களே பிடிக்க வேண்டும் என்பதும் பிரபாகரனின் நிலைப்பாடாக இருக்கலாம் என இந்த கட்டுரையாளர் ஊகிக்கிறார். அந்த சமயத்தில் வன்னியில் தங்கிய கிழக்கு படையணிகள் பின்தள பணிகளிலேயே ஈடுபட்டன.
மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, அரசியல்த்துறை தாக்குதலனி, சாள்ஸ் அன்ரனி படையணி என்பன களத்தில் இருந்தன. தென்மராட்சியின் பெரும்பகுதி புலிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் வரை சென்றிருந்த புலிகள் சில கிலோமிற்றர்கள் பின்வாங்கி பாதுகாப்பான பகுதிகளில் நிலைகளையமைத்து கொண்டனர். இந்த களம் சொர்ணத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மீதான புலிகளின் நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து இராணுவமும் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. இராணுவத்தரப்பிலும் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. மேஜர் ஜெனரல்கள் ஜானக பெரேரா, சரத் பொன்சேகா போன்றவர்கள் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்கள் இடைவெளி எடுத்து இருதரப்பும் தங்களை மீள் ஒழுங்கு செய்தன. இந்த அவகாசம் இந்திய தலையீட்டால் உருவானதென இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவம் தங்களை மீள் ஒழுங்கு செய்ததன் பின்னர், தென்மராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த சமயத்தில் ஜானகபெரேராவின் இராணுவ நுட்பங்கள் புலப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள சொர்ணத்திடம் எந்த உத்தியும் இருக்கவில்லை. அதுவரை மிகப்பெரும் போர்க்கள அதிசயங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு வந்த படையணிகளிற்கு என்ன நடந்ததென்பது  யாருக்கும் புரியவில்லை.
இதற்கு சில வாரங்களின் முன்னர்தான் புலிகள் இத்தாவிலில் ஒரு பெட்டித் தாக்குதல் நடத்தி ஆனையிறவை வீழத்தி தென்மராட்சிக்குள் நுழைந்தார்கள். அதே பெட்டியை ஜானகபெரேராவும் கையிலெடுத்தார். சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து, தென்மராட்சியில் படையினர் பெட்டித்தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான போராளிகள் மரணமாகிக் கொண்டிருந்தார்கள். மாலதி மற்றம் சோதியா படையணி போராளிகள்தான் அதிகளவில் இறந்தனர். போராளிகள் மரணமானதுடன், ஒவ்வொரு இடமாகவும் பறிபோய்க் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ஆளணி இழப்பில்லாத யுத்தம் பற்றி பிரபாகரன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்த சமயம். அவரது சிந்தனைக்கு நேர் எதிரான யதார்த்தம் தென்மராட்சியில் நிலவியது.
இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நவீன ஆயுதமொன்றையும் இறக்குமதி செய்திருந்தனர். 14.5 mm ரகத்தை சேர்ந்த கனரக பீரங்கியது. அந்த ஆயுதத்தை ஏனைய போராளிகளே அறியாமல்த்தான இரகசியமாக வைத்திரந்தார்கள். அதற்கு “ஆமை”யென்ற சங்கேதப் பெயரும் வைத்தார்கள். அந்த யுத்தத்தில் இராணுவத்தால் முதன்முதலில் அந்த ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலதிகமாக ஆட்களை இழக்க கூடாதென்பதற்காக விடுதலைப்புலிகள் தங்கள் படையணிகளை முகமாலைவரை பின்வாங்கிக் கொண்டார்கள். சொர்ணத்திற்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு, பயனற்றது. அவர் பற்றி மேலும் மோசமான அப்பிராயம் பிரபாகரனிடம் ஏற்பட்டது. அவர் தரையுத்தமுறைக்கே ஏற்றவர் அல்லவென நினைத்தாரோ, அல்லது அளவிற்கதிகமாக அவரை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்க நினைத்தாரோ தெரியவில்லை, அவரிற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினார். அவர் கடற்புலிகளிற்கு மாற்றம் செய்யப்பட்டார். சூசை தலைமையில் இயங்கிய கடற்புலிகளில், மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பாக சொர்ணம் நியமிக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகள் அடுத்த நெருக்கடியை சந்திக்கும் வரை அவர் அந்த பொறுப்பிலேயே இருந்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய வேண்டியிருந்தது. “கிழக்கு குழப்பக்காரர்களை” கட்டுப்படுத்த பிரபாகரன் தேர்வு செய்தது சொர்ணத்தை. ஏற்கனவே மாத்தையா விவகாரத்தையும் அவர்தான் கையாண்டார். என்னதான் களமுனை செயற்பாடுகளில் அதிருப்தியிருந்தபோதும், அவர் பற்றிய நம்பிக்கை பிரபாகரனிடம் குறைந்து விடவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
கிழக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், சொர்ணம் மீண்டும் திருகோணமலை பொறுப்பாளராகினார்.
திருகோணமலையின் மாவிலாற்று பகுதியில் போராளிகளின் தற்காலிக காவல்மையம் இருந்தது. இரவில் ஆற்றைக்கடக்கும் முன்னர் போராளிகள் ஆற்றின் நீரை மறித்துவிட்டு செல்வதும், மறுநாள் திரும்பும் போது திறந்து விட்டு வருவதும் வழக்கம்.
ஒருநாள் இந்த நடைமுறை தவறிவிட்டது. காவல்க்கடமைக்கு சென்ற அணி திரும்பி வரும்போது ஆற்றை திறந்துவிட மறந்து விட்டனர். ஆற்றுநீர் வராததையடுத்து, சிங்கள விவசாயிகள் நினைத்தார்கள், விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆற்றுநீரை மறித்துள்ளார்கள் என. விவசாயிகள் தரப்பில், திருகோணமலை அரசியல்த்துறை பொறுப்பாளர் எழிலனுடன் ஒரு சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளிற்கு ஒரு தொகை பெற்றோல் உள்ளிட்ட பொருட்களை வழங்க சிங்கள விவசாயிகள் தாமாக முன்வந்தார்கள். தானாக வருவதை ஏன் விட வேண்டும் என எழிலன் நினைத்தார். அதனை சொர்ணத்திடமும் சொல்லி, ஆற்றுநீர் திறந்து விட வேண்டுமெனில் சற்று அதிகமாக பொருட்கள் புலிகளால் கோரப்பட்டது. இதன் பின்னர் நடந்தவை வரலாறு.
சொர்ணம் தலைமையில் மூதூர் மீது ஒரு படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் மீது மிகை மதிப்பீடு உலகளாவிய அளவில் இருந்தது. ஏன், விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. அந்த நடவடிக்கையின் முடிவில், முழு திருகோணமலையையும் விட்டு புலிகள் பின்வாங்கி வந்தனர்.
சொர்ணம் வன்னி வந்ததன் பின்னர், இந்த கட்டுரையாளர் உள்ளிட்ட சில நண்பர்கள் கூடியிருந்த சமயம் ஒன்றில் சொர்ணத்தை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர், திருகோணமலையில் என்ன நடந்ததென கேட்டார். சொர்ணம் தனது வழக்கமான பாணியில் சிரிப்புடன் பதில் சொன்னார். “எடேய்.. எங்கடயாக்களின்ர கோமணம் எந்தளவில இருக்குதென்டு பார்க்க, ஒரு ரெஸ்ற் நடத்தின்னான். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டுது. தொங்கல் வரை ஓட நீங்களும் ரெடியாக இருங்கோ” என்றுவிட்டு போனார்.
இதன் பின்னர் யுத்தம் வன்னிக்கு வந்தது. மன்னாரில் ஆரம்பித்த யுத்தத்தை எதிர்கொள்ள புலிகள் ஒவ்வொரு தளபதிகளாக மாற்றிமாற்றி பார்த்தனர். அதனால் பலன் ஒன்றும் கிட்டவில்லை. சிலர் சற்று கூடுதல் காலம் தாக்குப்பிடித்தார்கள் அவ்வளவுதான். தீபன் மல்லாவியில் சில காலம் தாக்குப் பிடித்தார். வேலவன், ஜெயபுரத்தில் தாக்குப்பிடித்தார். ஆனாலும் படையினர் கையாண்ட நீர்பரவுவதைப் போன்ற உத்திக்கு, அகன்ற களத்தில் ஒரு இடத்தில் பலவீனம் தென்பட்டாலே போதும். இதற்குள்ளால் படையினர் நுழைந்து விடுவார்கள். மல்லாவியும் வீழ்ந்ததன் பின்னர், மீண்டும் சொர்ணம் களமிறக்கப்பட்டார். ஒவ்வொரு சிறு பட்டினங்களும் ஒவ்வொரு தளபதியின் பொறுப்பில் இருந்தது. மாங்குளம் சொர்ணத்திடம் வந்தது. போர்க்களத்தில் அவரைத் துரத்திய துரதிஸ்டம் அங்கும் வந்தது.
அந்த சமயத்தில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் தீவிரம் பெற்றிருந்தது. தளபதிகள் குறிவைக்கப்படாமல் இருக்க, களமுனைகளிற்கும், மூத்ததளபதிகளிற்கும் இரும்புக்கவசமிட்ட பவள் கவசவாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மாங்குளத்தில் நடந்ததை அந்த சமயத்தில் போராளிகள் பகிடியாக இப்படி சொல்வார்கள். மாங்குளம் களத்திற்கு சொர்ணம் பவள் கவசவாகனத்தில் சென்றார். சில நாளிலேயே நடந்து பின்வாங்கி வந்தார். ஏனெனில், இராணுவத்திடம் அவரது பவள் கவசவாகனமும் சிக்கிக் கொண்டது.
இதன் பின்னர் புலிகளிற்கு தெரிவுகள் இருக்கவில்லை. எல்லாப்பக்கத்தாலும் யுத்தம் அவர்களை சூழ்ந்து விட்டது. பிரபாகரன் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சொர்ணத்தை ஏற்கனவே இரண்டுமுறை தனக்கு துணையாக அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இபபொழுது மூன்றாவது முறையாகவும் அழைத்தார். யுத்தம் புதுக்குடியிருப்பிற்கு வந்து விட்டது. இந்த சமயத்தில் சிதறியிருக்கும் விடுதலைப்புலிகளின் வளங்களையும், ஆளணியையும் ஒருங்கிணைக்க பாதுகாப்பு செயலர் என்ற ஒரு பதவிநிலையை புலிகளும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் முதலாவது பாதுகாப்பு செயலர் தமிழேந்தியப்பா. அந்த சமயத்தில் புலிகள் கேப்பாப்பிலவின் மீது ஒரு தாக்குதல் நடத்தினார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் செய்த குறிப்பிடும்படியான ஒரேயொரு வெற்றிகரமான தாக்குதல் அதுதான். அவர் கணக்கில் புலி. அது மாதிரி எந்த தளபதியிடம் எத்தனை போராளிகள் உள்ளனர் என்பதை பார்த்து, பொறுக்கியெடுப்பதிலும் கில்லாடி. ஆனால், இந்த திறமை மட்டும் போதவில்லை போலும். மற்றும் இன்னதென இந்த கட்டுரையாளரால் தெளிவாக குறிப்பிட முடியாத காரணங்களினால் அவர் மாற்றப்பட்டு, சொர்ணம் அந்த பொறுப்பை எடுத்தார்.
ஆனந்தபுரம் சண்டையும் முடிந்ததன் பின்னர், புலிகள் தவிர்க்கவே முடியாத ஒரு வலிந்த தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் தளபதிகள் இருவர். ஒருவர் சொர்ணம். மற்றவர் சாள்ஸ் அன்ரனி. முள்ளிவாய்க்கால், மாத்தளன், சாலை உள்ளிட்ட நிலப்பிரப்பை பிரிக்கும் சிறுகடலை கடந்து தேவிபுரம் பகுதியில் ஏறுவதுதான் திட்டம். அதன் பின்னர், சுதந்திரபுரம் பகுதிவரை பக்கவாட்டாக பரவி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஏறுவது. இராணுவத்தின் பின்தளத்தை குழப்புவது இதுதான் திட்டம். கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இரண்டு மூன்றுநாள் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 800 போராளிகள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில்  விடுதலைப்புலிகளில் ஏற்பட்டிருந்த இன்னொரு மாற்றத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி அமைப்பிற்குள் குறிப்பிடும்படியான நிலைக்கு முன்னகர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் கனிணி பிரிவுதான் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு நிர்வாக அலகு என்பதற்கு அப்பால், தனியான இயக்கத்தைப் போல ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டன. இதனால் போராளிகள், நீ பிரபாகரனின் இயக்கமா, சாள்ஸின் இயக்கமாக என பகிடியாக கேட்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.
சாள்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளன். மோசமான தலைவன். அவரது நிர்வாக நடைமுறைகள், போர்க்களக்கதைகள் பற்றிய நகைச்சுவை சம்பவங்களை ஒருபெரும் திரட்டாகவே தயார் செய்யலாம். அவரை போராளிகள் இரகசியமாக புலிகேசியென அழைத்து வந்தனர். (இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னனை ஒத்த செயற்பாடுகளை குறிக்க அந்த பெயர் பயன்படுத்தப்பட்டது)
சாள்ஸின் வரவு தளபதிகளிற்குள் என்னவிதமாக எண்ணத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் தெளிவாக குறிப்பிட முடியாதென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், அப்படியான சம்பவங்கள் பரவலாக பதிவு செய்யப்படவில்லை. பல தளபதிகள் சாள்ஸை அரவணைத்து செல்லவே விரும்பினார்கள். இவர்களில் பானு முன்னிலையில் இருந்தார். இதனால், பானு எது சொன்னாலும் சரியாக இருக்குமென சாள்ஸ் நம்பினார். சாள்ஸ் தொடர்பான எதிர்மறையான இரண்டு சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. கடற்புலிகளின் தளபதி சூசை சாள்ஸின் முன்னிலைக்கெதிரான அதிருப்தியை பல சந்தர்ப்பத்திலும் காட்டினார். சாள்ஸ் நடத்திய பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் இரண்டு விதமாக சாள்ஸை பேசியிருக்கிறார்.
ஒருமுறை, “கொப்பர் உருவாக்கினதெல்லாததையும் அழிக்கிறதுக்கென்டே பிறந்திருக்கிறாய்” என பல போராளிகளின் மத்தியில் மாத்தளனில் பேசினார். மற்றது இன்னும் கடுமையானது. தமிழுணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைப்பது. அதனை சூசை பற்றிய பகுதியில் பார்க்கலாம்.
தேவிபுரத்திற்குள் புலிகளின் படையணிகள் நுழைந்ததும், படையினர் வேவுவிமானங்களின் உதவியுடன் அந்த சாவலை எதிர் கொண்டனர். அணிகள் நகர்வதை வேவுவிமானங்களினால் அவதானித்து, தரை நகர்வு மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த சண்டை மிகமோசமான தோல்வியில் முடிந்தது.
சண்டையின் இரண்டாம் நாளே சொர்ணம் மிக மோசமாக காயமடைந்தார். அவரது கால்த் தொடை எலும்பொன்று உடைந்தது. சாள்ஸ் அன்ரணியும் காயமடைந்தார். இதனையடுத்து அணிகள் பின்வாங்கத் தொடங்கின.
இந்த சமயத்தில் தேவிபுரத்தில் 75 பேரைக் கொண்ட பெண்கள் அணியொன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அத்தனைபேரும் இரண்டொருநாள் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள். இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டதும், அவர்கள் ஒரு தோட்டாவைத்தானும் சுடாமல் கைகளை உயர்த்தி விட்டனர்.
அவர்கள் முன்னரங்க நிலைகளில் இருந்த படையினரின் உடற்தேவைக்காக பகிர்ந்து வழங்கப்பட்டார்கள். பின்னர், மாத்தளன் வைத்தியசாலைக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் இருந்த படையினரின் முன்னரங்க மண்ணரனில் நிர்வாணமாக ஏற்றிவிட்டனர்.
அந்த யுத்தகளத்தில் எதிர்த்தரப்பை கோபமடைய வைக்க இப்படியான நிறைய வேலைகள் நடந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு வழிகளிற்குள் நுழைந்த படையினர் அந்த பெண்கள் பற்றிய கிண்டல்களை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்களிற்கு எதிர்முனையில் தமது சகபோராளிகளான பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தது, முன்னரணில் இருந்த போராளிகளிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அது அவர்களின் உளவுரணை சிதைக்கவல்லது. காலையில் ஏற்றப்பட்டவர்கள். விடயம் சாள்ஸ்சின் ஆலோசனையில் இருந்து, பின்னர் அவர் தனது தந்தையுடன் ஆலோசித்தார். அந்தப்பெண்களின் கைகளில் துவக்கு கொடுக்கப்பட்டிருந்ததுதானே. இனி நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியே வைத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சினைப்பர் அணி அந்தப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மண்ணரனில் நின்றவர்களை சுட்டார்கள். அது தவிர, எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதன் பின்னர், சொர்ணம் படுத்த படுக்கையாகவே இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தே களத்தை வழிநடத்தினார். அவர்தான் முழு களத்தையும் கவனித்து கொண்டிருந்தார்.
இதே சமயத்தில் அவர் தன்னுடனிருந்த போராளிகளிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். “அண்ணைக்கு ஏதும் நடக்க முதல் நான் செத்திடுவன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் ஆளணி தட்டுப்பாடு, ஆயுதத்தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. இதனால் களமுனைகளை கட்டுப்படுத்த முடியாமல் சொர்ணம் திண்டாடிக் கொண்டிருந்தார். அந்த தட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பத்தில் அவரை விரக்தியடைய வைத்தது. தொலைத் தொடர்பு கருவியிலேயே அனைவரும் அனைத்தையும் பேசிக் கொண்டனர். பின்தளங்களிற்கு வந்து சந்திக்க பொழுதும் இடமும் இருக்கவில்லை. இந்த கட்டுரையாளர் சொர்ணத்தின் கட்டளைகளையும், விரக்தி பேச்சுக்களையும் தொடர்ந்து தொலைத்தொடர்பு வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார்.
2009 மே 14ம் திகதி அன்று காலையில் கட்டளைத்தளபதி வேலவனுடன் சொர்ணம் ஏதோ தர்க்கப்பட்டு கொண்டிருந்தார். ஆளணி பற்றாக்குறையையடுத்து, வேலவனின் உதவியாளர்களையும் களமுனைக்கு அனுப்பும்படி சொர்ணம் சொல்ல, வேலவன் ஏதோ அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இது நடந்து ஒரு அரைமணித்தியாலத்திற்குள்- காலை சுமார் 10 மணியிருக்கும், அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அவருக்கு மிக அருகில் எறிகணையொன்று விழுந்தது. அதன் சிதறலில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட காலைவிட மற்றக்காலிலும் காயமடைந்து விட்டார். அவரிற்கு அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர்களும் சுதாகரிக்க முன்னர், தனது கழுத்தில் இருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு மரணமானார். அவரது உடலத்தை அந்த முகாமிலேயே (வெள்ளாமுள்ளிவாய்க்கால்) போராளிகள் புதைத்தனர்.
(அவர் 2009.05. 14 அன்று மரணமானபோதும், அவர் 15ம் திகதி இறந்ததாகவே தற்போது குறிப்பிடப்பட்டு வருகின்றது)