Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள். (மேஜர் டொச்சன்)

2:18 PM, Posted by sathiri, No Comment

சாத்திரி ஒரு பேப்பரிற்காக
மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992
..............................................................
   டொச்சன் காலை எழுந்து துலாவில்  தண்ணீர்  இழுத்து இறைக்க அவனது அம்மம்மா  வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின்  வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும்   அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு  நேரமாச்சு  அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு   புத்தகப் பையை  தூக்கிக் கொண்டு  வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு  வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது ஒரு முனகல் சத்தம் கேட்கவே  போன வேகத்தில் அப்படியே பின் பக்கமாக நடந்து வந்து பார்த்தான்  குப்பிளான்  ஏழாலை என்று  மூன்று மொழிகளிலும் எழுதப் பட்டு  அம்புக்குறியிட்ட  பெயர் கல்லிற்கு  பின்னால்  உரப்பை ஒன்றிலிருந்து அந்த முனகல் வந்து கொண்டிருந்தது.

கட்டியிருந்த உரப்பையை அவிழ்த்தான்  பிறந்து சில நாட்களேயான குட்டி நாயொன்று முனகியபடி வெளியே வந்தது .  யாரோ தங்கள் வீட்டு நாய் போட்ட குட்டியை கொண்டு வந்து அங்கு வீசி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது பாடசாலைக்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது. என்ன செய்யலாம்  யோசித்தான்  சந்தியில் கடை வைத்திருந்த சாமியரிடம் போய் ."சாமியண்ணை  இது றோட்டிலை கிடந்த குட்டி பாவமா கிடக்கு உங்களுக்கு வேணுமோ " என்றான் போடா என்னட்டை இரண்டு நாய் நிக்குது  அதுவும் அல்சேசன் உதை யாருக்கு வேணும் பேசாமல் றோட்டிலை போட்டிட்டு  பள்ளிக் கூடத்து ஓடடா என்றார் சாமியார்.ஆனாலும் அவனிற்கு மனம் கேட்கவில்லை  " சரி சாமியார்  உங்கடை கிணத்தடியிலை போய கொஞ்சம் தண்ணி குடுக்கிறன் என்றவன் அவரது வீட்டு கிணற்றடிக்கு போய் வாளித் தண்ணீரை  உள்ளங்கையில் அள்ளி  முன் நான்கு விரல்களையும் ஒன்றாக்கி குவித்து நாய்க்குட்டியின் வாயில் பல தடைவை பருக்கிவிட்டு  வீதி ஓரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டு மீண்டும் பாடசாலையை  நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான்.  நாய்க்குட்டி அவன் பின்னால் ஓடத் தொடங்கியிருந்தது சிறிது தூரம் போய் திரும்பிப் பார்த்து நாய்க்குட்டி தன் பின்னால் வருவதை கவனித்தவன் ....சூ..சூ..போ என்று விரட்டிப்பார்த்தான் அவன் விரட்டும்போது பேசாமல் நின்று விட்டு  அவன் நடக்கத் தொடங்கியதும் அவன் பின்னாலேயே  அது ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலை வாசல் வரை போனவன்  பின்னாலேயே வந்த நாய்க்குட்டியை தூக்கி புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுளைந்து விட்டிருந்தான்.
அன்றைக்கென்று அவனிற்கு  சோதனைக் காலம் பத்தாம் வகுப்பின் முதலாவது பாடம் ஆங்கிலம்.பாடம் நடத்துபவர் ஒட்டகப்புலத்து ஜோசப் ரீச்சர். அவரிற்கு பாடசாலையின் அதிபரே கொஞ்சம் பயப்படுவார் மற்றைய ஆசிரியர்கள்  மாணவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை அவரிற்கு  பயம் அவ்வளவு கண்டிப்பானவர்.

வகுப்பில் நுளைந்து  பாடம் நடத்தத்  தொடங்கியிருந்தபோது  முனகல் சத்தம் கேட்கவே பாடத்தை நிறுத்தி விட்டு யாரது சத்தம் போட்டது என்றார்.டொச்சனிற்கு பக்கத்தில் இருந்த இருவர் டொச்சனை திரும்பிப் பார்க்க  ஜேசப்ரீச்சர் டொச்சனைப் பார்த்து "ஜெயா எழும்பி வா "என்றதும் நெளிந்தபடி எழும்பி நின்றவனிடம் வேகமாக போய்கோபத்தோடு நீயா சத்தம் போட்டனி என்றவும் அவனது புத்தகப் பையிலிருந்து தலையை நீட்டிய  நாய்க்குட்டி மிரட்சியோடு முனகியது.பாவம்  ரீச்சர் றோட்டிலை நிண்டது  பின்னாலையே வந்தது  அதுதான் கொண்டந்திட்டன் என்று தயங்கியபடியே சொல்ல. சரி  வகுப்புக்கையெல்லாம் கொண்டு வரக்கூடாது கொண்டுபோய் வீட்டிலை விட்டுட்டு வா .என்று ஜேசப் ரீச்சர் அவனை அனுப்பி விட்டிருந்தார்.
அதற்கு பிறகு பாடசாலைக்கு போகும் நேரத்தில் மட்டும் நாயை வீட்டில் கட்டிப் போடுபவன் பாடசாலையால் வந்ததுமே அதனை அவிழ்த்து விட்டு அதனேடேயே திரிவான்.அந்த நாயும் அவனை விட்டுப் பிரியாமல் அவன் பின்னலேயே எப்போதும் திரிவதால் டொச்சன் என்கிற பெயரோடு நாய்க்குட்டியும்  ஒட்டிக் கொள்ள  ஊரில் அவனது பெயர் நாய்க்குட்டி டொச்சனாகியது.

இப்படி தன்னுடைய நாய்க்குட்டியோடு ஒருநாள்  மாலை சந்திக் கடைக்குபோய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்போது  பலாலியில் இருந்த ரோந்து வந்த ராணுவத்தினர் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் நின்றவர்களையெல்லாம் சோதனை செய்து விட்டு அவர்களை வீதியில் முழங்காலில் இருந்தியிருந்தார்கள். டொச்சனும் அதற்குள் அகப்பட்டுவிட கைகளை பிடரிப் பக்கமாக  வைத்தபடி  முழங்காலில் இருத்தப் பட்டான். நாய் இராணுவத்தினரை பார்த்து குலைக்கவே ஒரு ஆமிக்காரனின்  துப்பாக்கிமட்டையால் நாயை ஓங்கி அடிக்கவே அடிவாங்கியடி முனகிக் கொண்டு ஓடிய நாய் சிறிது தூரத்தில் நின்று திரும்பவும் குலைத்துக்கொண்டிருக்க  அதனை நோக்கி நடந்த ஆமிக்காரனிடம் வேண்டாம் சேர் பாவம் குட்டிநாய் அடிக்கவேண்டாம் என்று டொச்சன் மன்றாட அவன் ஒரு கல்லை எடுத்து நாயை நோக்கி எறிந்துவிட்டு போய்விட்டான்.

வீட்டிற்கு போன டொச்சன் நாயை எடுத்து தடவியபடியே பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்திருந்தவன்.குட்டி நாயை இப்பிடி அடிப்பாங்களா என்று  அதனை அடித்த ஆமிக்காரனை  நினைக்க கோவமாக வந்து கொண்டிருந்தது.இவங்களிற்கு ஏதாவது செய்யவேணும் என யோசித்தபடியே படுத்திருந்தவன் மறுநாள் ஈவினை பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய முகாமிற்கு போய்  அக்காச்சியை சந்தித்து இயக்கத்தில் சேரப் போவதாக தனது விருப்பத்தை சொல்லியிருந்தான்.முதல்நாள் அடி வாங்கிய அவனது நாயும் தாண்டித் தாண்டிப் அவனிற்கு பின்னாலேயே போயிருந்தது. நாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த்த அக்காச்சி நாங்கள் நாயை எல்லாம் இயக்கத்துக்கு எடுக்கிறேல்லை என்றதும் அதனை கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து விட்டு டொச்சன் இயக்கத்திற்கு போயிருந்தான்.
                                                                  000000000000

பயிற்சியை முடித்தக்கொண்ட  டொச்சன்  புலிகள் அமைப்பு பலாலி இராணுவத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருபப்தையறிந்து  தன்னை  பலாலிப் பகுதிக்கு  அனுப்பி வைக்குமாறு  அன்றைய பொறுப்பாளர் கிட்டுவிடம் அனுமதி பெற்று வந்திருந்தவன் அவனது முதலாவது சண்டையே  அவன் கல்விகற்ற வசாவிளான் மகா வித்தியாலயத்தை  பலாலி இராணும் கைப்பற்ற எடுத்த முயற்சியை  முறியடித்த சண்டையாக அமைந்திருந்தது.இராணுவத்தை மீண்டும் பலாலி முகாமிற்குள் துரத்திய பின்னர்  வசாவிளான் சந்தியில் துப்பாக்கியோடு நின்றிருந்த டொச்சனை பார்த்த ஜேசப் ரீச்சர் டேய் my student  god bless you என்று பெருமையாக சொல்லிககொண்டு போயிருந்தார்.பலாலி இராணுவ முகாமைச் சுற்றி நடந்த அனைத்துச் சண்டைகளிலும் டொச்சனின் பங்கு முக்கியமானதாக இருந்தது மட்டுமல்லாமல் யாழ்  தொலைத்தொடர்பு முகாம் மீதான தாக்குதல்  மயிலியதனை முகாம் மீதான தாக்குதல் என்பவற்றோடு முக்கியமானதொரு விடயம் புலிகள் அமைப்பானது ரெலோ அமைப்பின் மீது தாக்குதலைத் தொடங்கிய பின்னர்  தலைமறைவாகிவிட்டிருந்த  அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை யாழ் குடா முழுவதும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த சயமயத்தில் கோண்டாவில் பகுதியில் அன்னக்கை ஒழுங்கையில் இளையப்பா என்பவரின் தோட்டத்தில் மறைந்திருந்த சிறீ சபாரத்தினத்தை  டொச்சனே  முதலில் அடையாளம் கண்டு  அவர் ஓடித் தப்பிவிடமுடியாதவாறு சிறீ சபாரத்தினத்தின் காலில் சுட்டுக் காயப்படுத்திவிட்டு கிட்டுவிற்கு உடனடியாகத் தகவல் அனுப்பிவிட்டிருந்தான் பின்னர் அங்கு வந்த கிட்டுவால் சிறீ சபாரத்தினம் சுட்டுக் கொல்லப் பட்டது அனைவரும் அறிந்ததே.


பின்னர் வடமராச்சியில் தொடங்கப்பட்ட ஒப்பிறேசன் லிபரேசன் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தபோது  வல்லை வெளிக்கு அருகில் அச்சுவேலிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்த செல்லின் துண்டொன்று டொச்சனின் கழுத்துப் பகுதியை அறுத்துச் சென்றிருந்தது.நல்லவேளையாக  அவனது தொண்டைக் குளாய்கள் அறுபட்டுப் போகாததால் உயிர்தப்பியிருந்தான் அதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே  மீண்டும் இந்திய இராணுவத்துடனான மேதல்கள் தொடங்கிவிட. ஒரு சுற்றி வளைப்பில்  கைதாகி இந்திய இராணுவத்தால் காங்கேசன் துறை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தவன் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு விடுதலையாகி மீண்டும் புலிகளோடு இணைந்து செயற்படத் தொடங்கினான்.1992ம் ஆண்டு மாவீரர்தினத்தையொட்டி புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கு எங்கும் பெரும் தாக்குதல்களை  திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். அதே நேரம்  யாழ் குடாநாட்டை  கைப்பற்றும் திட்டம் ஒன்றினையும்  இலங்கை  இராணுவம்  முன்னெடுத்து  5 முனைகளில்  தாக்குதல்களை  தொடங்கியிருந்தார்கள்  அதனை  தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக கிடங்கினை  ஊடுருவித் தாக்கி அழிப்பதும் புலிகளின் திட்டத்தில் ஒன்று.

அதற்கான வேவுத் தகவல்கள் அனைத்தும் திரட்டப் பட்டு  பலாலியின் கிழக்குப் பகுதியான  மயிலிட்டி ஊடாக தொடர்ச்சியான காவலரண்களை தாக்கியடி முன்னேறி ஆயுதக் கிடங்கினை அழித்தொழிக்கவேண்டும் இந்தப் பொறுப்பு  டொச்சனிடம் ஒப்படைக்கப் படுகின்றது.தனது அணியினருடன்  நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தாக்குதல்களை தொடங்குகிறான். மயிலிட்டி யிலிருந்து கடற்கரைப்பக்கமாக 4.5 கி.மீற்றர் தூரம் வரையிலான காவலரண்களை  தகர்த்தபடி டொச்சனின் அணியினர்  பலாலித் தளத்தினுள் ஊடுருவுகின்றார்கள்.அதிகாலையளவில் அவர்கள் இலக்கான ஆயுதக் கிடங்கினை நெருங்கி அதன் மீது மூர்க்கமான தாக்குதலை தொடுக்கின்றார்கள் ஆயுதக் கிடங்கு பெரும் சத்தத்தோடும் இரவைப் பகலாக்கிய வெளிச்சத்தோடும் வெடித்துச் சிதறியபடி எரியத் தொடங்குகின்றது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டொச்சன்  தொடந்து அடியுங்கோடா என்று தனது அணியினரிற்கு கட்டளையிட்டபடியே ஆயுதக் கிடக்கை தகர்த்து விட்ட செய்தியினை நடைபேசி மூலமாக (வோக்கி) மற்றைய அணியினரிற்கு தெரிவித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த எதிரியின் துப்பாக்கி குண்டொன்று அவனது தலையில் துளைபோட்டு வெளியேற  யாழ் குடா மீதான  பெரும் படையெடுப்பினை  தடுத்து நிறுத்திய  மன நிறைவோடு தான் நேசித்த மண்ணினை தனது குருதியால் நனைத்தபடி வீழ்ந்தவனை  பூமித்தாய் அரவணைத்துக் கொள்கிறாள்.

பி.கு .டொச்சனின் தாயார் டொச்சன் சிறு வயதாக இருந்தபேதே இறந்து போய்விட அவனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட்டிருந்ததால் டொச்சனையும் அவனது தங்கையையும்  அம்மம்மாவே வளர்த்து வந்தார். டொச்சனின் சகோதரி தற்சமயம் கனடாவில் வசிப்பதாக அறிந்தேன்.