Navigation


RSS : Articles / Comments


முகவரி தொலைத்த முகங்கள்.

1:44 PM, Posted by sathiri, One Comment

முகவரி தொலைத்த முகங்கள்.
மலைகள் இதளிற்காக..
சாத்திரி..பிரான்ஸ்
 ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற  கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன்  வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள்  பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு  இறந்து போயிருந்தாள். இப்போ  இந்த வீட்டில்  வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை  வரதன் வாங்கிக்  கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது  மகள்  ரைகர் என்று வைப்போம் என்றாள். அதென்ன ரைகர்  பேசாமல் தமிழில் புலி என்றே  வைப்போம் என்றார் வரதன்.நாயைப்போய் புலி எண்டு கூப்பிட ஒரு மாதிரி இருக்கு என்றாள் அவரது மனைவி.அப்போ ரைகர் என்று கூப்புடேக்கை மட்டும் ஒரு மாதிரி இருக்காதா என்று விட்டு புலி என்றே பெயரை வைத்து விட்டிருந்தார். அன்று காலைநித்திரையில் இருந்தவரை  அவரது மகளின் தொலைபேசி அழைப்பு எழுப்பிவைக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்  என்றுவிட்டு வைத்துவிட்டாள் அப்போதுதான் அவருக்கு தனது பிறந்தநாளே நினைவிற்கு வந்தது ஆனால் அதைப்பற்றி அவரிற்கு மகிழ்ச்சியோ கவலையோ எதுவும் இல்லை  நேற்றிலிருந்து லேசாய் விட்டு விட்டு நெஞ்சு வலிக்கிறது இண்டைக்கு  வைத்தியரிட்டை போகவேணும் என் நினைத்தபடி கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டதுமே அவர் எழுந்து விட்ட சத்தத்தைக் கேட்ட புலி வாலை ஆட்டிக்கொண்டு  அவரிடம் ஓடிவந்து குழைந்து கொள்ள  அதனது பாத்திரத்தில் உணவை நிரப்பி விட்டு தேனீரை தயார் செய்து கொண்டு வரவேற்பறைக்கு வந்த வரதன் தனது வழைமையான  வேலைகளில் முதலாவதை தொடங்கியவர் தனது மனைவியின் படத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு அடுத்த படத்திற்கு மாறினார்.அவரிடமிருக்கும் அரிய படங்களில் அதுவுமொன்று அதனை பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தார் ஒரு தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றில் இரண்டு கைகளையும் கட்டியபடி மாலுமி உடையில் கம்பீரமாக நடுவே வரதன் நின்றிருக்க அருகில் பலர் நின்றிருந்தார்கள்.குட்டி மட்டும் பெரியதொரு மீனை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி   தேவாலயத்தில் மன்றாடுபவனைப்போல வரதனிற்கு முன்னால் முட்டுக்காலில் நின்றிருந்தான்.அந்தப் படத்தில் இருப்பவர்களில் குட்டி மட்டுமல்ல றோகன்.பத்தன் .ராஜன். ஆகியோரும் இப்போ உயிருடன் இல்லை.ஆனால் வரதன் மீன் குழம்பு சாப்பிடும் போதெல்லாம் குட்டி கட்டாயம் நினைவிற்கு வருவான் காரணம் அவனது கைப் பக்குவம் அப்படி.. குழம்பே தனி ருசியாக இருக்கும்.அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு இன்னமும் கொஞ்சம் அதிகமாக வலிப்பது போலிருக்க  சோபவில் அமர்ந்தவர்  அப்படியே அன்றைய நாளின் நினைவுகளிற்கு பயணிக்க ஆரம்பித்திருந்தார்.
                        ...........................................                       .......................................................................
1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம்23ம் திகதி  மலை நேரம்  வங்கக் கடலின்  தெற்குப்பக்கமாக  இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடல்  எல்லையில்  அலைகளின்  தாலாட்டல்களோடு நங்கூரமிட்டிருந்தது  றெஜினா என்கிற  கப்பல். அன்று காற்று கொஞ்சம் அதிகமாகவே வீசிக்கொண்டிருந்தது  லோசான குளிரும் அடித்துக் கொண்டிருந்ததால் வேலைகளை வேகமாக முடித்தவர்கள்  தங்கள் கைகளில் இருந்த  கறுப்பு பெயின்ரை  முடிந்தவரை ரின்னரில் தேய்த்து கழுவி விட்டு  விட்டு கப்பலின்  முதலாவது தளத்தில் அமைந்திருந்த சமையலறையில்  ஆறுபேரும் குழுமியிருந்தார்கள். அனைவரது உடைகளிலும் கைளிலும் இன்னமும் கொஞ்சம் பெயின்ற் ஒட்டியிருக்கத்தான் செய்தது. குட்டியும் ராஜனும்..சித்தாவும் அன்றைய இரவுச் சமையலிற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்க றோகனும் அன்ரனும் அன்றைய இரவு  இசை நிகழ்ச்சிக்காக  அவர்கள் பல நாடுகளிலும் வாங்கியிருந்த வாத்தியக் கருவிகளான  மத்தளம் கித்தார்.உடுக்கு என்பனவற்றை  கீழ் தளத்திலிருந்து சமையலறைக்கு கொண்டு வந்து தரையில் வட்ட வடிவமாக அடுக்கி வைத்தார்கள். அவர்களிடம்  ட்ரம்   வாத்தியக் கருவி இல்லாததால் வழைமை போல நான்கு அலுமினிய  சாப்பாட்டுக்கோப்பைகளை  எடுத்து கவிழ்த்து வைத்தான் அன்ரன்.இரண்டு விஸ்கிப் போத்தல்களை  மார்போடு கட்டியணைத்தபடி வந்த பத்தன்  .அப்பாடா ஒருமாதிரி பெயின்ற் அடிச்சு முடிச்சாச்சு  ஒரு நாளைக்கு நல்லா காய விடவேணும் நாளைக்கு கனக்க வேலையிருக்காது  அதாலை என்ஜோய் பண்ணுவம் என்றபடி அதனை கீழே வைத்து விட்டு  தனது பாக்கெற்றிலிருந்து  சிகரற் பக்கற் இரண்டையும் எடுத்து கீழே போட்டு விட்டு அமர்ந்தான். அன்றிரவிற்கான சமையலை தயார் செய்து விட்டு ராஜனும். குட்டியும் .சித்தாவும் வந்து  அமர றோகன் கித்தாரில் சுருதி சேர்க்கத் தொடங்கியிருந்தான்  அன்றிரவு  அன்ரன் தான் ட்ரம்மர். எந்த வாத்தியத்தை யார் வாசிப்பபது  என்கிற  ஒழுங்கு முறையெல்லாம் அங்கு கிடையாது  யார் எதை வேண்டு மானாலும் வாசிக்கலாம் ஏனெனில் யாருமே முறையாக  வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் கிடையாது. சித்தா  கொஞ்சம்  நன்றாக  மத்தளம் அடிப்பான். றோகனும்  பத்தனும்  இயற்கையாகவே நன்றாகப் பாடுவார்கள்..பத்தன் அங்கிருந்த பிளாஸ்ரிக் கோப்பைகளிற்குள்  விஸ்கியை ஊற்றத் தொடங்க  அவர்களது  பாட்டுக் கச்சேரி ஆரம்பமானது
                                       .....................................                                 .......................................................
 இவர்களோடு சேராமல் வழைமைபோல கப்பலின் மேல் தளத்தில்  இருந்த  தனது மாலுமிக்கான அறைக்கு சென்ற வரதன்  சிகரற் ஒன்றை எடுத்து பற்றவைத்து இழுத்து விட்டபடியே.தொலைத் தொடர்பு கருவின் சத்தத்தை குறைத்து வைத்து விட்டு  கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் REGENA என்கிற  பெயரோடு  இதுவரை கடலில் பயணம் செய்துகொண்டிருந்த இந்தக் கப்பல்  இன்று  அதன் பெயர் அழிக்கப்பட்டு  பெயரற்ற  கப்பலாக வங்கக் கடலின் மேற்காக  சர்வதேசக் கடல் எல்லைக்குள்  ஏழு பேருடனனும்  உள்ளே  நவீன ஆயுதங்கள்  ஏராளமான எறிகணைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் வெடிபொருட்கள் .  இராணுவத் தொழில் நுட்ப உபகரணங்களோடும் . அடங்கியகொள்கலன்களை  தாங்கியபடி  நங்கூரமிட்டிருந்தது.  . கப்பலின்  தலைமை மாலுமி வரதன் . அந்தக் கப்பலில் மற்றையவர்களை விட வயதில் அதிகமானவர் இவர்வர்தான் அதனாலேயோ என்னமோ மற்றவர்களுடன் அதிகம் பேசவும் மாட்டார். பெரும்பாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனியாகவே  இருப்பார் நிறைய சிகரற் புகைப்பார் அவர்  மது அருந்தியதை இதுவரை யாரும் கண்டதில்லை அதே நேரம் கண்டிப்பானவரும்கூட.அடுத்ததாக  உதவி மாலுமி பத்தன்.றோகனும்  சித்தாவும் கப்பலின் பொறியியலாளர்கள் கப்பலின்  இயந்திரம் தொடக்கம்  தொலைத் தொடர்புக் கருவி  சமையல் அடுப்பு திருத்துவது  தொடக்கம்  சுட்டுப் போன  பல்ப்பு மாற்றுவது வரை அந்தக் கப்பலின் அனைத்து திருத்த வேலைகளும்  அவர்களுடையதுதான்.மற்றும் இவர்களிற்கு  உதவியாகவும் சமையல் போன்ற பணிகளை செய்பவர்களாக  ராஜன். அன்ரன்.குட்டி ஆகியோர் இருந்தார்கள்.ஆனாலும் அனேகமாக அவைருமே  அனைத்து வேலைகளையும் செய்யக் கற்றுக் கொண்டிருந்தனர். வரதனும் சித்தாவும் கப்பலை எப்படி திசை பார்த்து செலுத்துவது என்று மற்றவர்களிற்கு சொல்லிக் கொடுப்பார்கள். றோகன் திருத்த வேலைகளை சொல்லிக் கொடுப்பான். நெருக்கடியான  காலங்களில் கையிலிருக்கும் அல்லது  கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி ருசியாக சமைக்கலாம் என்று குட்டிசொல்லிக் கொடுப்பான். கப்பல் ஓட்டுவதை விட குட்டியின் சமையலை கற்றுக் கொள்வதுதான் கடினமாகவும் அதே நேரம் அனைவரிற்கும் ஆர்வமான ஒன்றாகவும் இருந்தது.
                                             
 கப்பலின் இரு பக்கமும் நைலான் கயிறுகளும்.கயிற்று ஏணிகனும் தொங்க விடப் பட்டு   பலகைகளை இணைத்து  கட்டி  அதில் தொங்கிக் காண்டு நின்றபடியே மூன்று நாளாக  அனைவரும் சேர்ந்து   அதில் எழுதப் பட்டிருந்த  றெஜுனா என்கிற பெயரில் R  எழுத்தை  மட்டும் விட்டுவிட்டு மற்றையவற்றை  காஸ் லாம்பு மூலம்  சூடாக்கி அழித்து  அவற்றின் மீது கறுப்பு பெயின்ரை அடித்து முடித்திருந்தார்கள்..நாளை ஒருநாள்  பெயின்ற் நன்றாக காய்ந்ததும் ஸ்ரிக்கர்கள் போல வெள்ளைக் கலரில் தயாரிக்கப் பட்டிருக்கும் புதிய பெயரை அதில் ஒட்டிவிட்டு  லோக அதன் மேல் வெள்ளைப் பெயின்ரை அடித்து முடித்து விட்டு கப்பல் முல்லைத் தீவை நோக்கி தொடர்ந்து பயணிக்கவேண்டும்.எல்லாமே நன்றாக நடந்து முடிந்து விட வேண்டும் என்கிற தவிப்பு வரதனிற்கு இரண்டாவது சிகரற்றையும் பற்றவைத்து இழுக்கத் தொடங்கியிருந்தார்.
                    ...................................................                                      ........................................................
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாடலை  வரிசையாய் பாடி முடித்து  றோகன் தனது அபிமான பாடலான  சுறாங்கனியை படித்து முடித்திருந்தான்..இப்போ குட்டியின் முறை .குட்டி  தனது கரகரத்த குரலில் தோல்வி நிலையென நினைத்தால்  மனிதன் வாழ்வை நினைக்கலாமா..டெய்ங் டொய்ங்....என்று பாடத் தொடங்க   யாரும் இசையமைக்ககாமல்  குட்டியை பாத்து கையெடுத்து கும்பிட்ட படி இருந்தார்கள்..தயவு செய்து  நீ பாட்டு படிக்கக் கூடாது எண்டு எத்தனை  தரம் சொல்லியிருக்கிறம்.அதுவும் இந்தப் பாட்டுக்கு எப்பிடியடா   மேளம் அடிக்கிறது ராசா.. பாடாதை ராசா என்றான் றோகன். சரி பாட்டுத்தானே படிக்கக் கூடாது  பொறுங்கோ வாறன் என்றபடி மடமடவென படிகளில்  கீழ்த் தளத்திற்கு இறங்கி அவனது அறைக்கு போய் மடித்த ஒரு கடதாசியை கொண்டு வந்தவன்  இது என்ரை  ராசாத்திக்காக  எழுதின கவிதை ஒண்டு வாசிக்கிறன் எல்லாரும் கேட்டிட்டு  எப்பிடியிருக்கு  எண்டு சொல்லுங்கோ என்றவன்  தொண்டையை  செருமி  சரி செய்தபடியே   நான்காய் மடித்திருந்த  கடதாசியை  பிரித்து  படிக்கத் தொடங்கி னான்.
அவ்வப்போது
வட்டமிடும்
மீன் கொத்திகளிடமும்
அலையிடையை
துள்ளிப்போகும்
மீன்களிடமும்
தூரத்தே
மிதிதந்து போகும்
கடல் செடிகளிடமும்
சிறு புள்ளியாய்
ஆகாயத்தில்
அவ்வப்போது  பறந்து போகும்
விமானத்திடமும்
உன் மூக்குத்தியைப்  போலவே
இரவில்
மின்னும் நட்சத்திரங்களிடமும்
ஆழ்கடலில்
அவ்வப்போது
நான் செய்து  போடும்
கடதாசிக்
கப்பல்களிடமும்
உனக்காக  ஒரு சேதி
சொல்லியனுப்பியிருக்  கின்றேன்
அவை  உனக்கு கிடைக்காது  என்று
தெரிந்திருந்தும் கூட
ஏன் தெரியுமா??
என்னைப் போலவே
அவைகளிடம் நீயும்
எனக்காக
சேதிகள் சொல்லியனுப் பியிருப்பாய்
என்று எனக்குத் தெரியும்.
என் ..ராசாத்தி..
படித்து முடித்து  நிமிர்ந்த  குட்டியின் கண்கள் நிரம்பியிருந்தது.மற்றைய அனைவரிடமும் ஒரே மெளனம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.அந்த சில செக்கன் மெளனத்தை உடைப்பதற்காக சாப்பாட்டுக் கோப்பைகளில் ட்ரம் வாசித்துக் கொண்டிருந்த அன்ரன்  ஒரு  ட்ரம் வாத்திய கலைஞனைப் போல மடமடவென அவற்றில் தட்டிவிட்டு .குட்டியின்  ராசாத்திக்கான கவிதையை தொடர்ந்து  இப்பொழுது  றோகன் அவர்கள்  எங்கள்  சமையல் சக்கரவர்த்தி குட்டிக்காக ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்கிற பாடலைப் பாடுவார் என்று அறிவித்ததும் றோகன் கிட்டாரை தட்டியபடி பாடத் தொடங்கியிருந்தான்.பாடலின் முடிவில் அங்கு வந்த வரதன் பாடல் முடியும் வரை காத்திருந்து விட்டு ..பெடியள் எல்லாரும் சாப்பிட்டு படுங்கோ நாளைக்கு கப்பலை கொஞ்சம் துப்பரவு செய்யவேணும் என்றபடி  ஒரு கோப்பையை எடுத்து தனக்கான சாப்பாட்டை போட்டவர் பத்தனைப் பார்த்து  நீ இரவுக்கான சென்றியை பிரிச்சக் குடு என்றபடி சாப்பாட்டோடு தனது மாலுமி அறைக்கு ஏறிப் போகத் தொடங்கியிருந்தார்.
இந்த உலகத்திலேயே நடுக் கடலிலை நிக்கிற கப்பலுக்கு சென்றி போடுறவர் நம்ம வரதன் அண்ணை மட்டும்தான்.  இவருக்கு முதல்லை  தண்ணியடிக்கப் பழக்கவேணும்  அப்பதான்  நாங்கள் நிம்மதியாய்   இருகக்லாம் என்றபடி றோகன் கித்தாரை அதன் உறைக்குள் போட மற்றவர்களும் சிரித்தபடி வாத்தியக் கருவிகளை  ஒழுங்கு படுத்தி விட்டு சாப்பிடத் தயாரானார்கள்.
                                               .......................................................................
அன்று வானிலை கொஞ்சம்  மோசமாகவே  இருந்தது  அலைகள் பெரிய மலைப்பாம்புகள் போல வளைந்து நெளிந்து  கப்பலில் மோதி அசைத்துக்கொண்டிருக்க  வரதன்  கப்பலை அலைகளின் போக்கிற்கு  ஏற்ப திசை திருப்பி  அதன் அசைவை குறைத்துவிட்டு வரும்போது மற்றையவர்கள்  கப்பலிற்கு புதிதாக ஒட்டுவதற்காக ஸ்ரிக்கர்கள் போல தயாரிக்கப்பட்டு வைத்திருந்த R.SAMIR என்கிற பெயரை கப்பலின் மேல் தளத்தில்  வரிவையாக அடுக்கிமுடித்திருந்தார்கள்.அதனை வரதன் ஒரு தடைவை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே..  சரி நான் முதல் இறங்குறன் என்றபடி கயிற்று ஏணியில் குட்டி இறங்கத் தொடங்கியிருந்தான் .ஜயோ  என்கிற சத்தத்தை கேட்டு அனைவரும் ஓடிப்போய் கீழே எட்டிப் பார்த்தபோது கடல் நீரில் மெல்லிய வட்ட வடிவ நீர்த்திவலைகளில் சிகப்பு நிறம் விரிந்து சென்று கொண்டிருந்தது.வட்டமாய் சுற்றிவைக்கப் பட்டிருந்த  கயிற்றை  இடுப்பில்  கட்டி   விட்டு கடலில் குதிக்கத் தயாரான பத்தனை தடுத்து நிறுத்திய  வரதன் ராஜனோடு சேர்ந்து  கயிற்றைப் பிடித்து மெதுவாக கடலில் இறக்கியதும்.கை கால்களை அடித்து தத்தளித்தபடி கடலின் மேல் மட்டத்திற்கு வந்த குட்டியை எட்டிப் பிடித்த பத்தன்  அவனது கைகளை  தனது தோளில்  போட்டு முதுகோடு இணைத்து வரதன் எறிந்த இன்னொரு கயிற்றால் கட்டிக்கொள்ள அனைவருமாக சேர்ந்து அவர்களை கப்பலிற்குள் இழுத்த எடுத்து  கப்பலின்  மேல் தளத்தில் குட்டியை கிடத்தினார்கள்.அவன் முனகியபடியே  மயக்க நிலைக்கு போய்க்கொண்டிருந்தான்.
அவசரமாக முதலுதவிப் பெட்டியை துக்கிக் கொண்டு ஓடிவந்த றோகன் குட்டியை புரட்டிப் போட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்த அவனது பிடரிப் பகுதியில் ஒரு துணியை வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்டிருக்க  அன்ரன்  காயப்பகுதியை  சுற்றியிருந்த தலை முடிகளை  மள மளவென கத்தரிக்கோலால்  வெட்டியபடியே டேய்..சேவிங் றேசர் ஒண்டு கொண்டு வாங்கோ என கத்த கப்பலின் படிகள் வழியே கீழே ஓடிப்போன பத்தன்  தனது  தாடி வழிக்கும் சேவிங்  றேசரை கொண்டு வந்து நீட்டினான்.தலைமுடி குட்டையாய் வெட்டிய பகுதி முழுவதையும் மெதுவாக  ராஜன் வழித்து முடித்ததும் காயத்தில் அழுத்திப் பிடித்திருந்த  துணியை விலக்கிய றோகன் காயத்தின்  மீதும் இருந்த முடிகளை வெட்டிவிட்டு இரண்டு அங்குலம் அளவிற்கு கிழிந்து போயிருந்த  அவனது காயத்தை விரல்களால் அழுத்தி இணைத்துப் பிடித்து தையல் போடத் தொடங்கியபோது அவனது பெரு விரல் குட்டியின் தலையில் உள்ளே அமிழ்வதை உணர்ந்தவன் நிமிர்ந்து  வரதனைப் பார்த்து  மண்டையோடு உடைஞ்சிருக்கு  கீழை விழேக்குள்ளை  தலை பலகையிலை  அடிபட்டிருக்கு  என்றபடி தைத்து முடித்து அதன் மீது மருந்து போட்டு துணியால் தலையை சுற்றி கட்டுப் போட்டு முடிக்கும் போதே குட்டி முழுவதுமாய் மயங்கிப் போயிருந்தான்.
                                ...........................................                                      ........................................................
குட்டி மோசமாக காயமடைந்த விடயம் உடனடியாக தாய்லாந்திலிருந்த தலைமையகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. கப்பல் தரித்து நிற்கும் திசையை  சரியாக கேட்டு அறிந்துத கொண்டவர்கள்  அடுத்ததாக  என்ன செய்யலாமென்பதை மீண்டும் அறிவிப்பதாக சொல்லியிருந்தார்கள்.அன்று பகல்  முழுதும்  ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே ஒரு பக்கம் முழுதுமாக பெயர் மாற்றும் வேலையை முடித்திருந்தார்கள். அன்ரிரவு குட்டி கண் விழித்துப் பார்த்தான் தலையை அசைக் முயன்றான் முடியவில்லை கழுத்திற்கு மேலே தலை வீக்கமடைந்திருந்தது .என்ன செய்யுதடா என்று அவனது முகத்திற்கு  நேரே குனிந்து கேட்ட றோகனிடம். முடியேல்லையடா..தலை சரியா வலிக்குதடா.என்றபடி எழுந்திருக்க முயன்றான் அவனால் முடியவில்லை  டேய்..காலை அசைக்க ஏலாமல் இருக்கடா கை மட்டும் அசைக்கிற மாதிரி இருக்கடா வலிக்குதடா என்று சத்தமிடத் தொடங்க அவனது தலையில் போடப் பட்டிருந்த துணிக் கட்டையும் மீறி காயத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.றோகன் அவசரமாக  முதலுதவிப் பெட்டியில் இருந்து வலி மருந்து ஊசியை  எடுத்து குட்டிக்கு ஏற்றிவிட்டு  அவனது கைகளை இறுக்கமாக பிடித்தக் கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் குட்டிக்கு வலி குறைந்திருக்கவேண்டும் டேய் எல்லாரும் சாப்பிட்டிங்களாடா யார் சமைச்சது என்று கேட்டதும். நான் தான் சமைச்சனான்  சாப்பிடவேண்டியது இவங்கடை தலைவிதி என்று சொன்ன ராஜனிடம்  டேய் என்ரை உடுப்பு பையிலை ஒரு பர்ஸ் இருக்கு அதை ஒருக்கா எடுத்துத்தாடா என்றான் குட்டி. ராஜன் எடுத்துக் கொடுத்த பர்சை  சிரமப் பட்டு வலக்கையால் வாங்கி பிரித்துப் பார்த்தவன் கண்களில் ஒரு மகிழ்ச்சியோடு  இத்தனை நாளா நீங்கள் கேட்ட  என்ரை ராசாத்தி இதுதான்ரா என்று காட்டினான் பாஸ்போட் அளவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் இரட்டைப் பின்னலோடு சிரித்துக்கொண்டிருந்தாள்..அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தக் கொண்டிருந்தவன். டேய் ஆறு வருசமா காதலிக்கிறம்  இந்த வருசம் கப்பல்லை இருந்து இறங்க அனுமதி கேட்டிருக்கிறன் அப்பிடி அனுமதி கிடைச்சால் என்ரை ராசாத்தியை  கலியாணம் கட்ட முடிவெடுத்திருந்தனான். சில நேரம் நான் செத்துப் போயிட்டால் தயவு செய்து பாரமான பெரிய இரும்பு ஒண்டோடை என்ரை பிணத்தை கட்டி கடல்லை போட்டு விடுங்கோடா.ஏனெண்டால் என்ரை பிணம் மிதந்து போய் சில நேரம் இலங்கை கரையிலை கிடந்து அது செய்தியா வந்து நான் செத்திட்டன் என்கிற செய்தி அவளிற்கு தெரியவேண்டாம் அவள் தாங்கமாட்டாள் என்றபோது கன்னங்கள் வழியே வழிந்த கண்ணீர்  படுக்கையில் விழத் தொடங்க . சே .. உனக்கு ஒண்டும் இல்லையடா  கெதியா சுகமாயிடும் திரும்பவும் நீ சமைச்ச சாப்பாட்டை நாங்கள்  சாப்பிடவேணும் என்று றோகன் ஆறுதல்படுத்தினான். மீண்டும் குட்டிக்கு வலியெடுக்கத் தொடங்க  இந்தத் தடைவை றோகன் மயக்க மருந்தை செலுத்தினான்.
                               ...........................................                               ............................................................
கப்பலில் இருக்கும் உதவிப் படகு ஒன்றின்  மூலம் மேலும்  பர்மாவின் ஒரு  கரையோர நகரத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அங்கு வைத்தியத்திற்கான ஏற்பாடுகள்  செய்து விடுவதாகவும் அதே நேரம் குறித்த நாள் குறித்த நேரத்திற்கு கப்பல் முல்லைத் தீவுக் கடலிற்குள்  நுளைந்து விடவேண்டும் என்கிற உத்தரவோடு   அன்றிரவு தாய்லாந்திலிருந்து பதில் வந்திருந்தது.மறுநாள்  சித்தாவும் றோகனும் படகு மூலம் குட்டியை பர்மாவிற்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டு வருவதாக முடிவெடுத்திருந்தார்கள்.அன்றிரவு ஒருவரோடு ஒருவர் பேசாமல் மெளனமாகவே கழிந்து கொண்டிருந்தது.ராஜனே குட்டிக்கு பக்கத்திலிருந்து கவனித்தக்கொண்டிருந்தவன்  அசதியில் தூங்கிப் போய் விட்டிருந்தவன் அதிகாலையளவில் திடுக்கிட்டு கண்விழித்தவன் குட்டியை பார்தவன் திடுக்கிட்டவனாய் அவனது மூக்கில் கையை வைத்துப் பார்த்துவிட்டு இதயத்தில் காதையும் வைத்துப் பார்த்தவன்  அடுத்த அறையில்  நித்திரையிலிருந்த  றோகனை அவசரமாக தட்டியெழுப்பிக் கூட்டி வந்தான்.  ஓடிவந்த றோகன் குட்டியின் கையில் நாடி பிடித்துப் பார்த்து விட்டு  கைகளை குறுக்காக அவனது இதயத்தில் வைத்து பலமாக பலமுறை விட்டு விட்டு அமுக்கியவன் ராஜனைப பார்த்து  தலையை மெதுவாக இடம் வலமாக அசைத்தான்.
குட்டி இறந்து விட்ட செய்தியை தாய்லாந்து தலைமையகத்திற்கு வரதன் அறிவித்தார்  உடலை கடலில் விசி விட்டு பயணத்தை தொடருமாறு கட்டளை வந்திருந்தது.குட்டியின் உடலைச் சுற்றி நின்றவர்களிடம் வந்த வரதன் விடயத்தை சொன்னதும்  றோகனும் சித்தாவும்  எதிர்த்ததோடு கப்பல்  பயணிக்கின்ற வழியில்  கப்பலை நிறுத்தி படகில் உடலை எடுத்துச் சென்று எங்காவது ஒரு  நாட்டுக் கரையில் அல்லது தீவில் புதைத்துவிடலாமென்று வாதிட மற்றையவர்கள் மெளனமாக நின்றிருந்தனர்.கப்பலில் உள்ள பொருட்களின் பெறுமதி என்பது மட்டுமல்லாமல் அது குறித்த நேரத்திற்கு கொண்டு போய் சேர்க்கவேண்டிய கட்டாயம் கப்பல் சர்வதேச எல்லையில் இருந்து விலகி வேறு பாதையில் பயணித்தால் இந்திய இலங்கை கடற்படையால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன என்று எல்லாமே வரதன் சொல்லிப் பார்த்தார்.ஆனால் றோகனும் சித்தவும் விடுவதாக இல்லை பொருட்களை இறக்கி விட்டு திரும்பும்வரை 12 நாட்களிற்கு குட்டியின் உடலை சமையலறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில்  பாதுகாக்கலாமா என்றும் ஆலோசித்தார்கள் ஆனால் அவை  ஒரு உடலைப் புகுத்த முடியாத சிறிய சதுரவடிவங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது.அப்போதுதான்  ஏதோ யோசித்தவனாக சித்தா அனைவரையும் மாலுமி அறைக்குள் அழைத்துப் போனவன் அங்கிருந்த கணணியில் கப்பலின் பயணப் பாதையை வரதனிற்கு காட்டியபடி அண்ணை இங்கை பாருங்கோ நாங்கள் போற பகுதியிலை இந்தப் பக்கமா  நிக்கோபர் தீவுகள் இருக்கு  கப்பலை  கிழக்குப்பக்கமா E 51 கோட்டிலை   கொஞ்சம் நகர்த்தினால் போதும்  இந்த இடத்திலை இருந்து நாங்கள்  வழக்கமா போற நாவல்த்தீவு  கிட்டத்தான் இருக்கு நாங்கள் படகிலை  உலலைக் கொண்டுபோய் இங்கை புதைச்சிட்டு வந்திடுவம் கப்பலும் சொன்ன நேரத்துக்கு  சொன்ன இடத்திற்கு போய் சேர்ந்திடும் ஒரு பிரச்சனையும் இல்லை . குட்டியை  வைத்தியத்திற்கு பர்மாவிற்கு  கொண்டு போறதுக்கும் நாங்கள்  இவ்வளவு தூரம் போய் இதேயளவு றிஸ்க் கட்டாயம் எடுத்திருக்கத்தான் வேணும் நீங்கள் மனம் வைச்சால் செய்யலாமண்ணை என்று மடமடவென்று பேசிவிட்டு அனைவரையும் பார்த்தான்.
தனது குறுந்தாடியை  சில  வினாடிகள் சொறிந்தபடி யோசித்த வரதன் சரி ..கெதியா பேர் மாத்திற வேலையளை முடிப்பம் சித்தா சொன்ன இடத்திற்கு போறதுக்கு மூன்று நாள்பயணம் செய்யவேணும்  உடலைக் கொண்டு போய் புதைச்சிட்டு வாறதுக்கு ஆறு மணித்தியலம் தரலாம் அதுக்குள்ளை எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திடவேணும் அதே நேரம் குட்டியின்ரை உடலை நாலு நாளைக்கு இப்பிடியே வைச்சிருக்க  ஏலாது அதை  ஒரு போர்வையாலை நல்லா சுத்தி அதுக்கு மேலை பொலித்தீன் ஒன்றாலையும் முழுதா மூடி சுத்திக்கட்டி கப்பலின்ரை அடித்தளத்திலை கொண்டு போய் வையுங்கோ அங்கை  குளிரா இருக்கும் அதாலை  லேசிலை பழுதாகாமல் இருக்கும் என்று சொன்னதும் அனைவரும் ஒரு நிம்மதிப்பெமூச்சோடு மிகுதி வேலைகளைத் தொடருவதற்காக அங்கிருந்து கிழம்பிப் போனார்கள்.
  கப்பல் பெயர் மாற்றும் வேலைகளை முடித்துக்கொண்டு தொடர்ந்த பயணத்தின் நான்காவது நாள் அதிகாலை சூரியன் லேசாய் சோம்பல் முறித்து கடற்போர்வையை  விலக்கி எழத் தொடங்கியிருந்த நேரம் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் உதவிப் படகில்  குட்டியின் உடலும் பள்ளம் தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்களும் ஒரு  நீலக் கலர் பிளாஸ்ரிக்பேப்பரால் மூடப்பட்டிருந்தது. சித்தாவும் .றோகனும்.அன்ரனும் படகில் போய் குட்டியின் உடலைப் புதைத்துவிட்டு வருதாக முடிவெடுத்திருந்தார்கள். சித்தா  உதவிப் படகில் எரிபெருளை சரிபார்ததோடு மேலதிகமாகவும் இரண்டு  எரிபொருள் கேன்களை எடுத்து வைத்து விட்டு  திகை காட்டி தொலைத் தொடர்புக் கருவி  பைனாக்குலர்  என வேண்டி அனைத்தையும் தயார் செய்து வைக்க கப்பலின் சமயலறைப் பகுதிக்கு சென்ற றோகனும் அன்ரனும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த  கைத் துப்பாக்கிகளை எடுத்து சரிபார்த்து இடுப்பில் செருகிக் கொண்டு படகில் ஏறி அமர்ந்தார்கள். படகு மெதுவாக கடலில் இறங்கியதும்  கப்பலுடனான அதன்  இணைப்பை அன்ரன் எடுத்துவிட சித்தா படகை இயக்கினான் கப்பலில் நின்றவர்களைப் பார்த்து றோகன் கை கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்  படகு நாவல்த்தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது.
                                                       ..................................................................
நாவல்த் தீவு என்பது அதன் உண்மையான பெயர் அல்ல நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் மனிதர்கள் வாழாத ஒரு அழகான தீவு.மலைக்குன்றுகளோடு ஒரு ஏரியும் காடுகளையும்  விலங்குகளையும்  பறவைகளையும் கொண்ட இந்தப்பூமியில் உள்ள  சொர்க்கம் என்று அந்தத் தீவைச் சொல்லலாம். கடற்கரையிலிருந்து  இரண்டு கிலோ மீற்றர் தூரம் காட்டினூடாக  பயணம் செய்தால்   அந்த அளகான ஏரியை அடையலாம். அந்தத் தீவு நாவல் மரங்களை  அதிகமாகக்கொண்டுள்ளதால்  அதற்கு இவர்களாகவே வைத்தபெயர்தான் நாவல்த்தீவு.வேலைகள் எதுவும் இல்லாத தருணங்களில் கப்பலை பாதுகாப்பான  சர்வதேசக்கடல் பகுதியில் நங்கூரமிட்டுவிட்டு  படகு மூலம் இந்தத் தீவிற்கு வந்து ஏரிக் கரையோரம்     கூடாரம் அமைத்து தங்கி  மனப் பாரங்கள் அனைத்தையும்  இறக்கி வைத்து  உலகத்தையே மறந்து அங்குள்ள  தென்னை மரங்களின் இளநீரும் வழுக்கையும்  சூரை நாவல் பழங்களை  ரசித்தும் .மிருகங்களை வேட்டையாடி சமைத்துண்டு சில நாட்கள் மகிழ்ச்சியாய் இருப்பது  இவர்களது வழைமை. அந்தத் தீவிற்கு இவர்களைத் தவிர வேறு யாருமே வந்து போனதற்கான தடயங்கள் எதனையும் அதுவரை அவதானித்திருக்கவில்லை. அந்த நாவல்த்தீவில் ஏரிக்கரையோரம்  பரந்து விரிந்து வளர்ந்திருந்த ஆலமரத்தடியில்  குட்டி சமைத்த உணவை  இரசித்து உண்டு அவனோடு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த இடத்திலேயே அவனது உடலைப் புதைப்பதாக முடிவெடுத்திருந்தான் றோகன்.
படகு சுமார் இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்னர்   சித்தா  துல்லியமாக  அவர்கள்  வழைமைபோல் நாவல்த்தீவில்  கரையிறங்கும்  இடத்திற்கு  படகினை  கொண்டு வந்து  சேர்த்திருந்தான்  யாருடையதாவது நடமாட்டம் இருக்கிறா எனக் கவனித்தவர்கள்   படகை தள்ளி கரையில் ஏற்றியதும் குட்டியின் உடலைத் தூக்கி கடற்கரையில் கிடத்தினார்கள் அதிலிருந்து துர் நாற்றம்  வீசத்தொடங்கியிருந்தது எனவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் அன்ரன்  பெரியதொரு தடியை வெட்டி எடுத்துவர அந்தத் தடியோடு  குட்டியின் உடலை சேர்த்துக் கட்டி சித்தாவும்  அன்ரனும் தோழில் தூக்கிக் கொள்ள றோகன் மற்றைய  பொருட்களை  தூக்கியபடி ஏரிக்கரையை  அடைந்திருந்தார்கள்.

 அங்கு   நின்றிருந்த குரங்குகள்  அவர்களைக் கண்டு பயந்தபடி  ஓடிப்போய் மரங்களில் ஏறிக் கொள்ள  உடலை ஆலமரத்தின் அடியில்   வைத்து விட்டு   அன்ரனும் சித்தாவும்  கிடங்கை வெட்டியபடியே  எகிப்திய மம்மி போல் சுற்றிக் கட்டப் பட்டிருந்த குட்டியின் உடலையே வெறித்துப் பர்த்தபடி நின்றிருந்த றோகனிடம்..டேய்  அங்கையே நிக்காமல்  சாப்பாட்டிற்கு ஏதாவது வழிபண்ணு  பண்டி முயல் எதையாவது  கொண்டுவா என்றதும். பார்வையை விலக்கிய றோகன் பண்டி முயல்  தேடிப் பிடிக்க நேரமாகும் இண்டைக்கு தொங்குமான்தான் தான்  என்றவன்   இடுப்பில்  செருகியிருந்த துப்பாக்கியை  உருவியபடி பயந்தோடிப்போய்  மரங்களில் ஏறியிருந்த குரங்கு ஒன்றை குறிபார்த்தான்  அதன் மடியில் ஒரு குட்டி கட்டிப் பிடித்திருந்ததை  கவனித்தவன் கையை தாழ்த்தி மறுபக்கம் சலசலப்பு வந்த   இன்னொரு மரத்திற்கு பார்வையை  திருப்பியிருந்தான்  அங்கு இரண்டு குரங்குகள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தன  இரண்டையும் மாறி மாறி குறிபார்த்துக் கொண்டிருந்தான்  சண்டை பிடித்துக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று மற்றொன்றை   அடித்து அதன் காதினை கடித்து விட்டு பல்லை இழித்து உறுமி மரக் கிழையை வேகமாய் உலுப்பிக் கொண்டிருக்க  அடி வாங்கிய குரங்கு காது பிய்ந்து இரத்தம் ஒழுகியபடி  ஓடிப்போய் மரக்கிளைக்கு பின்னால்  பதுங்கியபடியே வழிந்த தனது இரத்தத்தை கையால் தொட்டு நக்கிக் கொண்டிருக்க அந்தக்குரங்கை நோக்கி றோகன் குறிவைத்தான்.
டுமீல் என்கிற வெடிச் சத்தத்தை கேட்ட குரங்குகள்  பறவைகள் பற்றைகளிற்குள்  இருந்த ஊர்வன  என அனைத்துமே  அந்தத்  தீவையே அதிர வைக்கும் அளவிற்கு சத்தமிட்டபடி எல்லாப் பக்கமும் சிதறியோடின. எதுக்கடா அடிச்ச  குரங்கை விட்டிட்டு  அடிவாங்கின குரங்கை சுட்டனி என்கிற ராஜனின்  கேள்விக்கு  என்னைப் பொறுத்தவரை தோற்றுப் போனதுக்கு பிறகு உயிர் வழுறதிலை அர்த்தம் இல்லை அது  குரங்காயிருந்தாலும் சரி என்றபடி குண்டடிபட்டு தெப்பென விழுந்த குரங்கை போய் எடுத்து வந்த றோகன் ஒரு மரக் கிளை இடுக்கில் அதன்  தலையை  செருகிவிட்டு  அதற்கு கீழே நிலத்தில் சவளால்  கிடங்கை   தோண்டியவன் இடுப்பு பட்டியின் கூட்டில் மடித்து செருகி வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுத்து விரித்து குரங்கை உரித்து அதன் தோல்  குடல் அனைத்தையும் அந்தக் கிடங்கிற்குள் போட்.டு மூடி முடித்தான்.அங்கு எழுத்த பெரும் சத்தம் கொஞ்சம்  கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருந்தது.  உரித்து முடித்த குரங்கு பார்ப்பதற்கு அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப்போல இருந்தது. காட்டு இலைகளை வெட்டி அதன் மீது வைத்து விட்டு  காய்ந்து போயிருந்த  தடிகளைப் பொறுக்கி  ஒருஇடத்தில் குமித்து நெருப்பை மூட்டியவன்  ஒரு தடியை வெட்டி அதன் ஒரு முனையை  சீவி கூராக்கி அதில் குரங்கை குத்தி நெருப்பில் பிடித்து வாட்டத் தொடங்கியிருந்தான்.
கிடங்கை வெட்டி முடித்திருந்த சித்தாவும் அன்ரனும்  றோகனையும் அழைக்க மூவருமாகச் சேர்ந்து குட்டியின் உடலை கிடங்கில் போட்டு மண்ணால் மூடிவிட்டு குரங்குகள் மீண்டும் அந்தக் குழியை தோண்டி விடாமல் இருக்க அதன் மீது அங்கிருந்த கற்களையும் மரக் கிழைகளையும்   எடுத்து அதன் மீது அடுக்கினார்கள்.அதன் பின்னர் தென்னையில் ஏறிய அன்ரன் சில இளம் தேங்காய்களை உதைந்து வீழ்த்தினான்.குடிப்பதற்கு வசதியாக சீவியிருந்த  ஒரு தேங்காயையும் வாட்டிய  குரங்கின் ஒரு தொடையையும் குட்டி புதைக்கப்பட்ட குழியின் கால்பகுதியில் ஒரு இலையில் சித்தா வைத்ததும்.மூவருமாக  அங்கு தலை குனிந்து சில வினாடிகள் மெளன அஞ்சலி செலுத்தியவர்களின் கண்கள் கலங்கியிருந்தது. அதன் பின்னர் ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் வாட்டிய குரங்கு இறைச்சியை உண்டு இளநீரை குடித்து விட்டு  நாவல்த்தீவை விட்டு புறப்படும்போது டேய் ..நேரம் கிடைக்கிற ஒரு நாளைக்கு குட்டியை புதைச்ச இடத்திலை ஒரு சமாதி கட்டவேணும் என்று விட்டு கடலையே வெறித்தக்கொண்டிருந்தான் றோகன்.தீவு அவர்களை விட்டுத் தூரமாகிக் கொண்டிருந்தது.
                                 ....................................................                    .....................................................
அன்றிரவு கப்பலின் மேல்தளத்தில்  றோகன் கையில் விஸ்கி போத்தலை வைத்தபடி சிகரற்றை புகைத்தபடியிருந்தான்.மாலுமி அறைக்குள் சென்ற ராஜன் வரதனிடம் மெதுவாக  அண்ணை..றோகன் கனக்க குடிச்சிருக்கிறான் சொன்னாலும் கேக்கிறான் இல்லை   நீங்கள் கொஞ்சம் போய் சொல்லிப் பாருங்கோ..என்றான்.றோகனின் அருகில் வந்த வரதன் கையிலிருந்த பிளாஸ்ரிக் கிண்ணத்தை நீட்டினார்.போதையில் சுருங்கியிருந்த றோகனின்  கண்கள்ஆச்சரியமாக விரித்தபடி என்ன ?..விஸ்கி வேணுமா என்றதும். தலையை மெதுவாக மேலும் கீழுமாக ஆட்டிய வரதன் றோகன் கிண்ணத்தில் ஊற்றிய விஸ்கியை தண்ணீர் கலக்காமலேயே ஒரு மடக்கில் குடித்தவர்.நானும் தண்ணியடிக்கிறனான்தான் ஆனால் எங்கடை வேலையளை முடிச்சிட்டு ஓய்வா இருக்கிற நேரத்திலை மட்டும். இந்த தண்ணியடிக்கிறது மட்டுமில்லை  உணர்ச்சிவசப்படுறது.பாட்டுப் படித்து கும்மளம் அடிக்கிறது.அழுகிறது.எல்லாமே எனக்கு தந்த வேலையை முடிச்சிட்டுத்தான்.இதுகளிலை கவனத்தை சிதற விட்டால் எங்கடை வேலை செய்ய முடியாமல் போயிடும் இப்ப கப்பல்லை இருக்கிற பொருள்களையெல்லாம் பத்திரமா கொண்டு போய் சேர்க்கவேண்டியதுதான்  எங்கடை முதல் வேலை பிறகுதான்  மிச்சமெல்லாம் ..நல்லா பழகிட்டு இப்பிடி இழப்பு வரேக்கை  கஸ்ரமாயிருக்கும். அதாலைதான் நான் உங்களோடையே அதிகமா கதைக்கிறேல்லை. இதெல்லாம் உனக்கும் போகப் போக பழகிடும் போய் படு என்று றோகனின் தோழில் தட்டி விட்டு வரதன் மீண்டும் மாலுமி அறைக்குள் போய்விட எதையே நினைத்த றேகன் அவசரமாய் கீழ்தளத்திற்கு சென்று  படுக்கையறையில் குட்டியின் பயணப்பையை திறந்து ஆராய்ந்தான் அதற்குள் எதுவுமே எழுதப்படாத வெற்று டயறி ஒன்றும் அவனது கடவுச்சீட்டு கப்பலில் வேலை செய்வதற்கான ஆவணங்கள் அடையாள அட்டை என்பனவற்றை எடுத்துப் பார்த்தான்.அவற்றில் எழுதப் பட்டிருந்த பெயர் விலாசங்கள் எல்லாமே போலியானதாகத்தானிக்கும் என்பது றோகனிற்கு தெரியும் அவனது பர்சை திறந்து பார்த்தான் ராசாத்தியின் சிரித்த கறுப்பு வெள்ளை புகைப் படமும் மடித்து வைக்கப் பட்டிருந்த குட்டி எழுதிய கவிதையும் இருந்தது அவற்றை  எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் மேற்தளத்திற்கு வந்தவன் போத்தலில் கொஞ்சமாய் மீதமிருந்த விஸ்கியையும் குடித்து முடித்துவிட்டு அந்தப் போத்தலிற்குள் குட்டி எழுதிய கவிதைக் கடதாசியில் ராசாத்தியின் புகைப் படத்தையும் சுருட்டிபோத்தலிற்குள் போட்டவன் அதனை நன்றாக இறுக்கி மூடிவிட்டு கடலிற்குள் வீசியெறிந்தான்..குட்டியின் கவிதை வரிகளைப் போலவே அந்தக் கவிதையும் ராசாத்தியின் கைகளிற்கு போய் சேராது என்பதும் றோகனிற்கு தெரியும்  முழங்கால்களை மடித்து  தலையைத் தொங்கப் போட்டபடி  அங்கேயே அமர்ந்திருந்தான் வரதன் கப்பலை  முல்லைத் தீவுக் கடலை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார்.
                        ...............................................................              .......................................................................
தொலைபேசி மணியடித்துக் கொண்டிருந்தது வரதன் அதனை எடுப்பதற்கு முயற்சித்தார் முடியவில்லை புலி வழமைக்கு மாறாக அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது.இப்பொழுது வரதனிற்கு நெஞ்சு வலி இல்லை  அவர் பஞ்சைப்போன்று அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு உணர்வு  ஒரு ராக்கெற்றின் வேகத்தை விட அதிகமாய்  காற்றைக் கிழித்தக் காண்டு வானத்தில் பறந்தார் இன்னொரு சூரியகுடும்பம்  முன்னாலும் நட்சத்திரக் கூட்டங்கள் அவர் பின்னாலும் தெரிந்தது அதேயளவு வேகத்தில் மீண்டும் கீழே இறங்கினார்  அந்தப் படத்தில் இருந்த  அதே தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றின் முன்னால் அவரது மனைவியும்  றோகன்.சித்தா.குட்டியுடன் வேறு நண்பர்களும் அவரைப்பார்த்து கையசைத்தனர்.கடற்கரையோரத்தில் தடிகள் நடப்பட்டு கலர் கலராக பலூன்கன் பறக்கவிடப்பட்டு அங்கு ஒரு மேசைமேல்  வர்ணக்கலரில் ஒரு கேக்கும் வைக்கப்பட்டிருந்தது அந்தரத்தில் பறந்துகொண்டிருந்த வரதன் அவர்களருகே சென்று தரையிறங்கினார்.மனைவி அவரை அழைத்து கேக்கை  வெட்டவைத்து ஒரு துண்டினை அவரிற்கு ஊட்டிவிடும்போது  சுற்றி நின்று அனைவரும் கைதட்ட றோகன் தனது கித்தாரை வாசித்தபடி "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்" என்று படிக்கொண்டிருந்தான். ஆனால் வரதனின் காதுகளில் புலி குரைக்கும் சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.