Navigation


RSS : Articles / Comments


என் இனமே என் சனமே ...

1:04 AM, Posted by sathiri, No Comment

என்  இனமே என் சனமே ...


இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின்  உரையுமற்ற ஒன்பதாவது  மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும்  விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்.
2009 ம் ஆண்டுக்குப் பின்னரும்  தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயாராக இருக்கிறார் .எரித்தியாவில் வான்புலிகளின் நூறு விமானங்கள் கூட குண்டுகளை ஏற்றியபடி பொட்டம்மானின் கட்டளைக்காக காத்திருக்கின்றது என்று கையை மடக்கி உயர்த்தி அடித் தொண்டையில் பலர் கத்திக்கொண்டிருந்தார்கள்.வருடங்கள் செல்லச் செல்ல ஐயாயிரம் பேரும் காணமல் போனது மட்டுமல்ல எரித்தியாவில் நின்றிருந்த விமானங்களும் மாயமாய் மறைந்து போய் விட்டது. தலைவர் ஏன் இன்னமும் வரவில்லையென்று கேட்டால்..அடித்தொண்டையால் கத்தியவர்கள் அனைவருமே டெங்கு வந்தவர்கள்போல.  "ம் ..வருவார்" ...என மூக்கால் முனகுகிறார்கள்.


அதே நேரம் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்களும் (அவை கொண்டாட்டங்களே தான்). புலிகளமைப்பின் சொத்துக்களை பங்கு போட்டுக்கொள்ளும் சண்டையில்  ஓன்று இரண்டாகி மூன்று நான்கு என அமீபாக்கள் போல குழுக்களாக பிரிந்து மீண்டும் இப்போதைக்கு இரண்டு குழுவாக .அனைத்துலகச் செயலகம், தலைமைச்செயலகம் என்று போட்டி போட்டுஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தியபடியே  கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு அமைப்புமே புலம்பெயர் தமிழர்களிடத்தில் புகுந்துள்ள வைரசு கிருமிகள்  தான்.இந்த இரு அமைப்புகளும் தற்சமயம் இணைத்து விட்டதாக ஒரு அறிக்கை இராமு சுபனின் பெயரில் வெளியாகியிருந்தாலும்  இல்லை யில்லை  இணையவில்லை என்கிற குரல்களும் கேட்கின்றது .வெளிநாடுகளில் பங்கு பிரிப்பு சண்டையில் யார் தங்கள்பக்கம் அதிகம் மக்களை கவர்வது என்கிற போட்டிகளோடு மாவீரர் நாளை கொண்டாடி குத்துவெட்டுகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் ஏழு ஆண்டுகள் கழித்து குறுகிய கால திட்டமிடலில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் மக்களால் மீண்டும் அனுட்டிக்கப் பட்டது.

மாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகளினதும் உறவுகளினதும் கல்லறைகளைத் தேடிய வர்களுக்கு அவை சிதைக்கப்பட்ட கற்களே கிடைத்தது.கிடைத்த கற்களையெல்லாம் பொறுக்கி குவித்து தங்கள் ஆற்றாமைகளை கண்ணீரோடு கதறியழுது அஞ்சலி செய்து முடித்திருந்தர்கள்.அழுது சிந்திய கண்ணீரைக் கூட எமது சில அரசியல் வாதிகள் சொந்தம்கொண்டாடிய கேவலமும் நடந்தே முடிந்தது.
இறுதி யுத்தத்தின் பின்னர் இறந்துபோனவொரு புலி உறுப்பினரின் படத்தை வீட்டில் வைத்து விளக்கு கொளுத்தி  அஞ்சலி செலுத்தவே முடியாத காலம் ஓன்று இருந்தது.அது எப்படி மாறியது?இலங்கைத்தீவில் தமிழர் அரசை தோற்கடித்த இரண்டாவது கைமுனு.இந்த நூற்றாண்டின் பௌத்த சிங்கள மீட்பர்  என்று போற்றப்பட்டு. நானே வாழ் நாள் ஜனாதிபதி என்று இறுமாப்போடு இருந்த ராஜபக்ஸாவை. இலங்கை அரசியல் குள்ளநரி குடும்பத்தின் வழிவந்த ரணிலும்.இலங்கையில் சீன ஆதிக்கத்தை முடிவுகட்ட மேற்குலத்தின் திட்டமிடலும் .அவர்களோடு கைகோர்த்துக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று அனைத்தும் இணைத்து ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் தான் இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதே நேரம் கடந்த வருடமே மாவீரர் துயிலுமில்லங்களை புதிப்பித்தல்,திலீபனின் நினைவுத்தூபியை புனரமைத்தல் என்று பல தீர்மானங்களை வட மாகாணசபை நிறைவேற்றியிருந்தது .அண்மையில் குறுகிய காலத்தில் அதிகளவு தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழக சட்ட சபையா? இலங்கை வடமாகாண சபையா? என்றொரு பட்டி மன்றமே நடத்தலாம்.அதில் பேச்சாளர்களாக  சுரேஷ் பிரேமச்சந்திரன் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் ஒரு அணியாகவும்.மறு தரப்பில் சம்பந்தர் ,மாவை ,சிறிதரன் ஆகியோரையும் பேசவிடலாம்.ஆனால்  கண்டிப்பாக  நீதிபதி இளஞ்செழியனைத்தான் நடுவராகப் போடவேண்டும்.ஏனெனில் அவர்தான் பேசிய அனைவருக்கும் இறுதியில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பார்.அதன் பின்னராவது தமிழர்களுக்கு ஏதும் விடிவுகாலம் கிடைக்க வழி பிறக்கலாம். 

மேலே பேச்சாளர்களின் பெயர்களில் சுமதிரனின் பெயரை ஏன் எழுதவில்லையென நீங்கள் கேட்கலாம்.தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளில் இலங்கையின் மும்மொழிகளில் நல்ல புலமையும்.சட்டமும் ,அரசியலும் செய்யத் தெரிந்த ஒரேயொரு அரசியல்வாதி அவர் மட்டுமே.கஜேந்திரகுமாருக்கும் மும்மொழியும்,சட்டமும் தெரியும் அவருக்கென்ன குறைச்சல் எண்டு என் சட்டையைப்பிடிக்க யாராவது வரலாம்.அவருக்கு மொழியும் சட்டமும் தெரிந்திருக்கலாம் ஆனால் அரசியல் சுத்தமாக தெரியாது.தெரிந்திருந்தால் 2010 ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்.வெளியே வந்த பின்னரும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்.இதை எழுதியதற்காக சுமத்திரனின் செம்பு என்கிற பட்டம் எனக்கு வழங்கப்படலாம். அதைனையும் வாங்கி ஒரு கரையில் வைத்துவிட்டு தொடர்கிறேன்.


வெளிநாடுகளில் நடக்கப்போகும் மாவீரர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார பாராளுமன்ற உறுப்பினர்  ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.இந்தியாவிலிருந்து அந்த நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட  மிகப்பெரும் அரசியல் தலைவர்களான வா. கௌ தமன்.  ஆர் கெ  செல்வன்மணி ..ஐய நா சபை வாசலிலேய கம்பு சுத்தி அமெரிக்காவை மிரள வாய்த்த வை கோ  ஆகியோரும் வரவளைக்கப்பட்டு அவர்களின் வீராவேசப்பேசுக்களின் எச்சில் பட்டே  பழுதாகிப் போய் விட்ட  மைக்குகளை ஒருவர் அடிக்கடி தட்டி. கலோ..டெஸ்டிங் ..வன் ..டூ ..திரீ ..சொல்லிக்கொண்டிருக்கும்போதே  மறுபக்கம் கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று களை கட்டும் .

இவை எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பறக்க. மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் மாலைகள் சுமந்து .மலர்களின் நடுவே  தீபங்களின் ஒளியோடு வரவேற்க. ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....

அதே போல இதுவரை காலமும் வெளிநாடுகளில் நடந்தது போலவே தாயகத்திலும் இந்தத்தடவை மாவீரர் வணக்க நிகழ்வுகளை யார் முன்னே நின்று செய்வதேன்கிற குழுப்பிரிவினைகள் தொடங்கி விட்டது.வன்னியில் விளக்கேற்றி கைநீட்டி படமெடுக்க சிறிதரன் எம் பி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முன்னைநாள் போராளிகள் (முன்னைநாள் போராளிகள் என்கிற சொற்பதத்தில் எனக்கு உடன்பாடில்லை ) சிலர் இணைத்து "ஜனநாயகப் போராளிகள்". என்கிற அமைப்பை தொடக்கி கிழக்குமாகாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்து வருகிறார்கள்.அதே நேரம் திடீரென "  'தமிழ்த்தேசிய ஜனநாயகப் போராளிகள் "..என்கிற இன்னொரு அமைப்பு          மாவீரர் நாளுக்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டம் வேகமெடுத்த எண்பதுகளில் "ஈழம்".. என்கிற அடை மொழியோடு எப்படி முப்பதுக்குமதிகமான இயக்கங்கள் தோன்றியதோ அதைப்போலவே இப்போது அடுத்ததடுத்து அதி புதிய ..அதிநவீன ..புத்தம்புதிய ..அதி விசேஷ ..ஜனநாயகப் போராளிகள்".. என்கிற அடைமொழியோடு பல கட்சிகள் உரு வாகலாம் .எத்தனை கட்சிகள் என்னென்ன கொள்கைகளோடு உருவானாலும் .வெளிநாடுகளில் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் மாவீரர்களின் தியாகங்களையும் அவர்களது அர்பணிப்பையும் தங்களுடையதே என யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.அவை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பொதுவானவை.இனமத பேதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவை.
,வீரவேசப்பேச்சுக்கள்,கொத்துரொட்டி போடும் சத்தம், செல்பி போட்டோக்கள் ,பந்தம்கொளுத் துவதற்காக அரசியல் வாதிகளின் அடிதடிகள் ,மண்ணில் விழுந்து புரண்டு அழும் தாய் ,மனதுக்குள்ளேயே மௌனமாய் விம்மிவெடிக்கும் சக தோழர்கள் .உறவுகளின் ஓலங்கள் இத்தனையையும் கடந்து. தனக்காக யாரேனும் ஒற்றை விளக்கேற்றமாட்டார்களா ? ."என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா" ? என்கிற புலம்பலோடு எம் தலைவனின் ஆன்மா நந்திக்கடலோரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ..