Navigation


RSS : Articles / Comments


சிமிக்கி

2:04 PM, Posted by sathiri, 2 Comments

மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்தததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள்.

நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான்.
இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா.

உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.


                                                     0000000000000000000000

ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது.

ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை.

                                                       00000000000000000000000
ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார்.
மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார்.

ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ??
தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம்.
சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும்.
கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா.
தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ??

எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே?

உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம்.

சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம்.
தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார்.
அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார்.
வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான்.

                                           000000000000000000000000
இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான்.

மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது.
மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள்.

                                                       0000000000000000
பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுதம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சட்பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு நான் நினைச்சமாதிரியே இருக்கு அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள். என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது.

கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்??

சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ?

இல்லைத்தான் .....

சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது...

எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான்.

அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும்.

விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது

நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன்.

சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே??

அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள்.

யாவும் கற்பனையே

உணர்வுகள் உறவுகள்

2:15 PM, Posted by sathiri, 4 Comments

உணர்வுகள் உறவுகள்
அம்மம்மா

இந்தவார ஒரு பேப்பரிற்காக  சாத்திரி

.காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி.

இவங்களிற்குள்ளை ஏதும் சண்டையாயிருக்குமோ??என்றும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் சண்டை பிடித்ததையும் அவன் காணவில்லை. மத்தியானமானதும் தாத்தா கள்ளடிக்கப் போய விட்டு வருவார். அவர் தூரத்தில் வரும்பொழுதே முற்றத்தில் படுத்திருக்கும் வாதாபி வாலையாட்டியபடி மெதுவாய் முனகியபடி சந்தோசத்திலை நிலத்திலை விழுந்து புரளும்.. குசினிக்குள் நின்றபடியே டேய் செம்பிலை தண்ணி எடுத்து வை தாத்தா வாறார் என்று குரல் கொடுப்பார்.தூரத்தில் தாத்தா வந்து கொண்டிருப்பார். அவர் வாறது எப்பிடி வாதாபிக்கும் உள்ளை நிக்கிற அம்மம்மாவிற்கும் தெரியும் ?? வாதாபி மணத்திலை கண்டு பிடிச்சிருக்கும். அம்மமாவுக்கும் மணக்கிற சக்தி இருக்கோ எண்டு மண்டையை போட்டு குழப்பி ஒருநாள் அவாவிடமே கேட்டும் பார்த்தான்.சின்னப்பெடியன் உனக்கு விளங்காது எண்டு சொல்லி சிரிச்சார்.

தாத்தா நேரடியாக கிணத்தடிக்குப்போய் கைகால் கழுவி விட்டு வந்து செம்புத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு அதை கொண்டுவந்து சாப்பிட சப்பாணி கட்டியமர்ந்ததும் அவன் கொண்டுபோய் வாழையிலையை குடுப்பான். பெரும்பாலும் வழையிலைதான் சாப்பிடுவார். வாழையிலை இல்லாத காலத்திலை அம்மம்மா ஒரு ஓலைப்பெட்டியை கவித்துப்போட்டு அதில் பெரிய பூவரசம் இலைகளை மெதுவாய் நெருப்பில் வாட்டி கோப்பை போல வட்ட வடிவமாய் அடுக்கி தருவார் அதிலை என்னதான் சொதி குளம்பு ஊத்தி சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடியும்வரை கொஞ்சம்கூட கீழே ஒழுகாது .

அது மட்டுமில்லை தாத்தா செருமினால் பிடரியை சொறிந்தால்.உச்சந்தலையை சொறிந்தால்.நெஞ்சை தடவினால் அதற்கெல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அது அம்மம்மாவிற்கு மட்டுமே புரியும். அதே நேரம் அம்மம்மாவின் ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தங்கள் தாத்தாவிற்கு மட்டுமே புரிந்தவை.பால் குடித்து முடித்துவிட்டதொரு குழந்தைக்கு முதுகில் தட்டி அது ஏவறை (ஏப்பம்) விட்டதும் ஆனந்தப்படும் ஒரு தாயைப்போல் தாத்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் தானது வயிற்றை தடவி ஒரு ஏவறை விட்டால்தான் அவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணலாம்.இரவில் சாப்பிட்டு முடிந்ததும் காலை நீட்டி சுவரில் சாய்ந்படி வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றியலை. பாக்கு. சுண்ணாம்பு புகையிலை. எல்லாம் அளவாய் சேர்த்து பாக்குஉரலில் போட்டு இடித்து அதை ஒரு முழு வெற்றிலையில் கொட்டி சுருட்டி அதனை இரண்டாகப்பிரித்து பாதியை தாத்தாவிடம் கொடுக்கச்சொல்லி அவனிடம் நீட்டிவிட்டு பாதியை அவர் வாயில் போட்டு மென்றுவிட்டு வாய்கொப்பளித்துவிட்டு படுக்கப் போவார்.

அவர்களின் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அனைத்தையும் சரிபாதியாய் பகிர்ந்து கொண்டதன் முழு அர்த்தமுமே அவர்கள் இரவில் பகிர்ந்து கொள்ளும் அந்த வெற்றிலையில் ததத்துவமாய் பொதிந்திருந்தது அப்பொழுது அவனிற்கு புரிந்திருக்கவில்லை.அப்படியானதொரு நாளில்தான் தாத்தா நோய்வாயப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது இறுதிக்கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு தாத்தா மயங்கிய நிலைக்கு போய்விட்டிருந்தார். அவன்தான் அவசரமாக ஓடிப்போய் நடராசா பரியாரியை அழைத்து வந்தான். வந்தவர் எல்லாம் பரிசோதித்துவிட்டு சொந்தபந்தங்களிற்கு சொல்லினுப்பிட்டு பால் ஊத்துறவை ஊத்துங்கோ எண்டு சொல்லிவிட்டு அவரின்ரை பங்கிற்கு அவரும் பால் ஊத்திவிட்டு போய்விட்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எண்டு எல்லாரும் வரிசையாய் நிண்டு பால் ஊத்தியாச்சு. ஆனால் இன்னமும் சேடம் இழுத்துக்கொண்டுதானிருந்தது. பலர் சொல்லியும் அவர் விரும்பினபடி விதம் விதமாய் சமைச்சு போட்ட கையாலை பால் ஊத்தமாட்டன் எண்டிட்டார் அம்மம்மா ..மண் பொன் எல்லாம் உரசி ஊத்தியாச்சு நேரம் போய்க்கொண்டேயிருந்தது சேடம் இழுத்துக்கொண்டேயிருந்தது. பிள்ளை உயிர் கிடந்து தவிக்கிது இப்பிடி தவிக்கவிடாதை அடம்பிடிக்காமல் பாலை ஊத்து எண்டு ஊர்பெருசுகள் எல்லாரும் வற்புறுத்தினால் பிறகுதான் விசும்பியபடி ஒரு கறண்டியில் பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினார் தாத்தாவின் மார்பு சில அங்குலம் கட்டிலில் இருந்து மேலே எழும்பி திரும்ப கீழே இறங்க மெல்லியதாய் ஒரு கொட்டாவியோடு அவரது உயிர் பிரிந்து போனது. வீடு முழுதும் ஒரே ஓலம்.
00000000000000000000

அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்.

அவனிற்காக கிளாசுகள் வாங்கித்தான் தேத்தண்ணி குடுக்கவேணும்.செத்த வீட்டிற்கு வந்ததும் வெறும் தேத்தண்ணியை குடிச்சபடி வெற்றிலையை போட்டு சப்பித் துப்பினபடியே இருப்பான் அவனின்ரை உதவியாளர் அல்லது அவனிட்டை தொழில் பழகிறவர்தான் இடைக்கிடை மேளத்தை அடிச்சபடி இருப்பினம்.கடைசி பொற்சுண்ணப்பாடல் முடிஞ்சு எல்லாரும் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் போதுதான். தேத்தண்ணி இருந்த இரத்தினன்ரை கிளாசிலை சாராயம் நிரம்பியிருக்கும். ஒரு சுருட்டை பற்றவைத்து விட்டு மேளத்தை தூக்குவான். அதுக்கு பிறகு சத்தத்தை வைச்சே இரத்தினன் அடிக்கத் தொங்கிட்டான் எண்டு எல்லாருக்கும் தெரியும்.
தாத்தா செத்த நேரம் அவரின்ரை ஆம்பிளை பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டிலை உடைனை வரமுடியாத நிலைமை அதலை அவன்தான் கொள்ளி வைக்கவேணும் தாத்தாவேறை தண்ணியடிச்சிட்டு டேய் நீ தானடா எனக்கு கொள்ளி வைக்கவேணும் எண்டு அடிக்கடி சொல்லுவார். கொள்ளி வைக்கிறதெண்டு முடிவாகிட்டுது அதுக்கு கட்டாயம் மொட்டையடிக்கவேணும். மொட்டையடிச்சால் பிறகு பள்ளிக்கூடத்திலை எல்லாரும் அவனை மொட்டைப் பாப்பா சட்டியுடைச்சான் மூண்டுபானை கூழ் குடிச்சான் எண்டு நக்கலடிப்பினம் அதாலை மொட்டையடிக்காமல் தலைமயிரை ஒட்ட வெட்டச்சொல்லி கேக்கலாமெண்டு தம்பிஜயாவை தேடிப்போனான். தம்பிஜயாவோ பின்வளவு பூவரசிலை தோல்வாரை கட்டிப்போட்டு சவரக்கத்தியை இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தான்.

தம்பி ஜயா மொட்டையடிக்காமல் கொஞ்சம் ஒட்டவெட்டினால் காணும்தானே??

தம்பி இது சடங்கு சம்பிரதாயம் இதுகளை மீறக்கூடாது எண்டபடி அவன் தலையில் தண்ணியை தெளித்து வழிக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனின்ரை சலுனிலை பலவருசமாய் வைத்து தம்பிஜயா தேய்த்தக்கொண்டிருந்த சீனாக்காரத்தை எடுத்து கீழைபோட்டு உடைத்துவிட்டான் அதற்கு எப்பிடியும் பழிவாங்கியே தீருவான் என்பது அவனிற்கு தெரியும்.மொட்டையடித் முடித்தவன் தம்பின்ரை மண்டை வடிவான உருண்டை மண்டையெண்டு பழிவாங்கிவிட்ட திருப்தியில் சொல்லிச் சிரித்தான்.

எல்லாரது அழுகுரல்களோடையும் வேலியை வெட்டி பிணம் வீதியில் இறங்கியது வேட்டி கட்டியபடி மொட்டைத்தலை தோளில் கொள்ளிக்குடத்துடன் அவனும் ஊர் ஆண்களும் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பட்டினத்தார் பாடலும் எவ்வொரு சந்தியிலும் இரத்தினனின் மேளச்சமாவுமாக சுடலைக்கு போய் சேர்ந்ததும் அடுக்கியிருந்த மரக்குற்றிகளில் பிணத்தை கிடத்தி பெட்டியை பிரித்தார்கள். அவனை பிணத்தை சுற்றி வலம்வரச்சொன்ன தம்பிஜயா கொடுவாக்கத்தியால் கொள்ளிக் குடத்தில் கொத்தி அதிலிருந்து வழிந்த நீரை பிணத்தை நோக்கி தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.கடைசியாய் தாத்தாவின் தலைமாட்டில் கொள்ளியை செருகியபோதுதான் அவனால் அடக்கமுடியாமல் அழுகை விம்மிவெடித்தது. அப்பிடியே திரும்பிப் பாக்காமல் வீட்டிற்கு போகச்சொன்னார்கள்.

எட்டுச்செலவு வரைக்கும் ஒவ்வொருநாளும் ஒப்பாரிபெண்டுகள் சொந்தக்காரரின் பட்டிணி பண்டம் எண்டு நாட்கள் போய் எட்டுச்செலவும் முடிந்து அடுத்நாள். டேய் செம்பிலை தண்ணியெடுத்து வாசல்லை வையடா எண்டு வழைமைபோல குசினிக்குள் இருந்து அம்மம்மா குரல் குடுத்தார். என்ன இது மனிசி பழக்கதோசத்திலை சொல்லுதோ எண்டு நினைக்க வாதாபியும் மெதுவாய் முனகியபடி வாலை ஆட்டியபடி நிலத்தில் கிடந்து புரண்டது.அவனிற்கு பயம் வரவே செம்பில் தண்ணியை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான். தாத்தாவின் படத்திற்கு முன்னாள் ஓலைப்பெட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு வாட்டிய பூவரசம் இலைகளை வட்டமாய் அடுக்கிக்கொண்டிருந்தார் அம்மம்மா....