Navigation


RSS : Articles / Comments


அலை மகள்.

11:14 PM, Posted by sathiri, No Comment

அலை மகள்.

அன்றைய பூரணை நிலவு அள்ளியெறிந்து கெண்டிருந்த வெள்ளொளியில்  மெல்லலைகள்  வீசிக்கொண்டிருந்த முல்லைக்கடலின்  ஓருபகுதி கைகளையும் கால்களையும் அகலப்பரப்பி அண்ணாந்து படுத்திருந்தபடி ஆயிரமாயிரமாய்  மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பூரணையின்  பூரணநிலை  பூரித்துப் போயிருந்தாள் அலைமகள். ஆகாயத்தை  பார்த்தபடியே  கடலில் கைகால்களை விரித்து மிதப்பதென்றால் அவளிற்கு அளவற்ற ஆசை.  கரையில் நின்றிருந்த பயிற்சியாளர் இரண்டாவது தடைவையும் விசிலடித்து  கையில் சிறிய சிவப்பு வெளிச்சத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டார் அவள் அசைவதாய் தெரியவில்லை.  கையிலிருந்த நடைபேசியில்(வோக்கி)தூரத்தே காவலிற்கு நின்ற  கடற்புலிகளின் படகோடு தொடர்பு கொண்டதையடுத்து  படகு அவளை நோக்கி  வந்துகொண்டிருந்தது.  அதன் அருகான வருகையை உணர்ந்து தன்னிலைக்கு திரும்பியவள் தலையை  திருப்பிப்பார்த்தாள்.  கரைக்கு போகும்படி  படகிலிருந்து கட்டளை வந்தது. நீந்திக் கரை வந்து சேர்ந்தவளிடம்.

அலை உமக்கு எத்தினை தரம் விசில் அடிக்கிறது காது கேக்கேல்லையோ ''கோபமான பயிற்சி ஆசிரியர்.  மன்னிச்சு கொள்ளுங்கோ மாஸ்ரர்  அண்ணாந்து ஆகாயத்தையே பாத்துக்கொண்டு படுத்திருந்ததிலை கவனிக்கேல்லை நேரம் போனதே தெரியேல்லை தயங்கியபடி சொல்லி முடித்தாள். விட்டால் விடியும் வரைக்கும் வெள்ளி பாத்தக்கொண்டு படுத்திருப்பீர்.   சரி மற்றாக்கள் வெளியாலை வந்து உமக்காக காத்துக்கொண்டு நிக்கிறனம் கெதியா போய் உடுப்பை மாத்திக்கொண்டு ஓடிவாரும்  கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு போய்விட்டார்.  மறைப்பில் சென்று உடலில் இறுக்கமாக அணிந்திருந்த நீச்சல் உடைகளை மாற்றி சீருடைக்குள்  நுளைந்தவள்  ஓடிவந்து  வாகனத்தில் ஏறிக்கொண்டாள். வாகனம் அவர்களது முகாமை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தது.

ஒன்றரை வருடங்களாகத்தான் அவளிற்கு  அலைமகள்  என்கிற பெயர் அதற்கு முன்னர் சோபனா. அதுவும் செந்தப்பெயர் கிடையாது.  அவளது சொந்தப் பெயர் விஜிதா.  அவள் படிக்கிற  காலங்களில் அவளது அழகான அகன்ற  கண்களை  பார்த்து  எல்லாருமே  அன்றைய காலத்தில் பிரபலமாகவிருந்த நடிகை சோபனாவின் கண்கள்  போல இருக்கிறதென்று  சொல்வார்கள். அவள் இயக்கத்தில்  சேர்ந்து பயிற்ச்சிக்கு போனபோது அவளுடன் இருந்தவர்களும்  அவளது கண்களைப்பார்த்து  சொபனாவை போல இருக்கிறாய் என்று சொன்னதால் தனது இயக்கபெயராக சோபனா என்று வைத்துக்கொண்டாள். ஓயாத அலை கிளிநொச்சி  சண்டையின்போது  வீழ்ந்து வெடித்த  எறிகணையொன்றின் துண்டொன்று அவள் இடக்கண்ணை  ஊடறுத்து போனதில் சிகிச்சை முடிய  அழகான  அகன்ற இடக்கண் இருந்த இடத்தில் ஆழமான குழியொன்று இடம்பிடித்தது. அதற்கு பின்னர் அவளை யாராவது சோபனா என்று அழைத்தாலே அவளிற்கு நக்கல் பண்ணுவது போல இருக்கும்.

சில காலங்கள் போக  கடற்புலியில் இணைந்தாள் கடுமையான பயிற்சிகள். பயிற்சி முடிவின் இறுதிநாள் நடந்த போட்டிகளில் நீண்ட நேரம் மூச்சடக்கி சுழியோடுதல்  குறுகிய  நேரத்தில் நீண்ட தூரம் நீந்துதல். அதிக நேரம் கடலில் அசையாமல் படுத்திருந்தல் என்று அனைத்திலும் முதலாவதாக வந்தவளிற்கு கடற்படை தளபதி நேரில் வந்து  நீச்சல்காரர்கள் பயன்படுத்தும் கடல் ஆழத்திலும்  நேரம் பார்க்கக்கூடியதும் தண்ணீர் உள்ளேபோகாத கைக்கடிகாரம் பரிசாகக் கிடைத்தது. அந்தக் கடிகாரத்தை அனைவரிற்கம் காட்டி பெருமை அடித்துத் திரிந்தவள் பெரும் கடற்சண்டைகளிலெல்லாம்  தனது திறைமைகளையும் வெளிக்காட்டியதொரு காலத்தில் சமாதானம் என்கிற அறிவிப்பு வந்தது. பேச்சு வார்த்தையாம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. அவளிற்கோ யார் பேசுகிறார்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நீண்டகாலம்  பார்க்காத தனது தாயாரையும் ஒரோயொரு மூத்த சகோதரனையும் யாழ்ப்பாணத்தில் போய் பார்த்துவிட்டு வர அனுமதி வாங்கியிருந்தவள். இயக்கம் யாழ்ப்பாணத்தை கைவிட்டபின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலாக போயிருந்த அரசியல் பிரிவுக்காரரோடு அவளும் சேர்ந்தே போயிருந்தாள்.

கட்டிப்பிடித்து தூக்கியும் மாலைபோட்டு  ஏன் சிலர் ஆராத்தி எடுத்தும் வரவேற்றிருந்தனர். அந்த ஆர்ப்பாடங்களோடு இடம்பெயர்ந்து  கோப்பாயிலிருந்த  மனது குடும்பத்தை தேடி கண்டு பிடித்து போனபோது  ஓடிவந்து கட்டிப்பிடித்து  கொஞ்சிய அம்மா..  தங்கையை கண்ட மகிழ்ச்சியில்  வளவில் கோழியை கலைத்துக்கொண்டு ஓடிய சேவலை  பாய்ந்து பிடித்து அடித்து குழம்பு வைக்க அண்ணியிடம் கொடுத்து விட்டு  என்ரை தங்கச்சி  கடற்புலி பெரிய பொறுப்பாளர் வேறை  எண்டு அக்கம் பக்கமெல்லாம் பெருமையடித்த அண்ணன்.  இரண்டு நாட்களே தங்கிவிட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பிவிட்டாள்.மீண்டும் சண்டை தொடங்கி விட்டிருந்த நாளொன்றில் கடல் கரும்புலிகளிற்காக பெயரை கொடுத்து கடிதமும் எழுதி கொடுத்து விட்டு படகோட்டும் பயிற்சிகளும் எடுத்துக்கொண்டிருந்தாள்.. முன்பெல்லாம் பெயர் கொடுத்திருந்தாலும் கடிதம் அனுப்பி பலகாலங்களின் பின்னர் அரிதாகவே அழைப்புவரும். ஆனால் கிளி நொச்சியை விட்டு இயக்கம் பின்வாங்கிய பின்னர் அழைப்புக்கள் அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது.அன்று அவளிற்கும்  அவளது முகாமில் பெயர் கொடுத்திருந்த இன்னொருத்திக்கும் அழைப்பு வந்திருந்தது. அன்றிரவு  இவர்கள் இருவருடன்  இரண்டு ஆண்களாக  நான்கு பேர் அவருடனான விருந்தின் பின்னர் ஜஸ்கிறீமும் குடித்து   சில புகைப்படங்கள் என சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் வாகனமொன்று நால்வரையும்  தாங்கிய படி போய்க்கொண்டிருந்தவேளைதான்  அவர்களிற்கான  இலக்கு என்ன  என்பதை ஒருவர் விளங்கப்படுத்தினார்.

முல்லையின் கடற்பகுதியொன்றில்  இறங்கியவர்கள்   வெடி மருந்து நிரப்பி தயார் நிலையில்  இரு சிறிய வேகப் படகுகளில் ஏறியதும் தங்களிற்கு தந்திருந்த தொலைத்தொடர்பு  கருவிகளை  தங்களோடு இணைத்து அவை சரியாக இயங்குகின்றதா என சரி பார்த்துக்கொண்டார்கள். அவளோடு படகில் ஏறியவன்  தன்னை நீலவாணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவன்  அவனே படகை இயக்கினான் .கையை  உயர்த்திக் காட்டிவிட்டு படகை  வேகமெடுத்தான். முன்னால் கடற்புலிகளின்  படகுகள் பாதுகாப்புகொடுத்தபடி வழிகாட்டியபடி போய்க்கொண்டிருந்தது.
அவர்களது இலக்கு  முல்லைக் கடலில் புதிதாக கொண்டு வந்து வந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த  நவீன ராடர்கள் பொருத்தப்பட்ட தாக்குதல் கப்பல்தான் இவர்களது இலக்கு . இலக்கை  நெருங்கத் தொடங்கியதுமே  கப்பலை சுற்றிவர பாதுகாப்பில் ஈடு பட்டிருந்த டோராக்கள் விழித்தக்கொள்ள சண்டை தொடங்கியது . கடற்புலி படகுகள்  கடற்படையின் டோராக்களை  கப்லை விட்டு தூரமாக இழுத்துச்செல்ல போக்கு காட்டியபடி சண்டையை  தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை கடற்படைக்கு  அது பழகிப்போன தந்திரமாகிவிட்டிருந்தது.  டோராக்கள் கப்பலை சுற்றியபடியே  சண்டை நடந்தது கப்பலில் இருந்தும் பீரங்கிகளை ஏவியபடி இருந்தார்கள்.மற்றைய படகு வேகமாக கப்பலை நோக்கி போய்க்கொண்ருந்தபோதே  டோராவின் தாக்குதலால் வெடித்து சிதறிப்போனது. அதுவரை தூரமாக  படகை வெட்டி வெட்டி ஓடிக்கொண்டிருந்தவன்  அவளிடம்  இப்பிடியே சும்மா சுத்திக்கொண்டு இருக்கேலாது மற்றது  வெடிச்சிட்டுது  நாங்களும் அடிப்பம் எண்டு எனக்குநம்பிக்கையில்லை  அதாலை நீ கடல்லை குதி நான் தனியா முயற்சி பண்ணிப் பாக்கிறன் என்றவனிடம்  குதிக்கமாட்டன் என்று அடம் பிடித்தாள்.

அலைமகள் சொல்லுறதை கேள் நீ இருந்தல் இன்னொரு இலக்கை  அடிக்கலாம் அல்லது இண்டைக்கு இது சரிவராட்டில் திரும்ப நீயே திரும்ப அடிக்கலாம் வீணாய் எதுக்கு இரண்டு பேரும் சாவான்.அதக்குத்தான் சொல்லுறன் குதி என்று கத்தினான். ஆனாலும் அவள் அசையவில்லை. படகின் வேகத்தை குறைத்து வெட்டி திருப்பியவன் கொஞ்சம் நிலை குலைந்த அலைமகளை கடலில் தள்ளிவிட்டு  படகின்  வேகத்தை கூட்டினான் சில நிமிடங்களில் அந்தப் படகும் வெடித்து சிதறியது இலக்கு கைகூடவில்லை. கடலில் நீந்திக்கொண்டிருந்த  அலைமகளை  அருகில் வந்த கடற்புலிகள் படகில் தூக்கி போட்டபொழுது  தலையில் இரத்தம் வளிந்து கொண்டிருந்தது சிறிது நேரத்தில் மயங்கிபோய்விட்டாள். படகில் இருந்து விழும்பொழுது அவள் தலை படகில் மோதி வலப்பக்கம் பக்கவாட்டாக வெடித்துப்போய்விட்டிருந்தது. கரைக்கு கொண்டு வந்தவர்கள் அவளை வைத்திய சாலையில் சேர்த்துவிட்டு போய்விட்டார்கள். களமும் காட்சிகளும் வேகமாக மாறிக்கொண்டிருந்தது.

   000000000000000000000000000000000000000000

வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து  26 பேரை ஏற்றி வந்த பேரூந்து யாழ்நகரத்தில் அவர்களை இறக்கிவிட்டு போய்க்கொண்டிருந்தது. அவர்களை அங்கு நின்றவர்கள் எல்லாருமே வேற்றுக்கிரக வாசிகளைப் போலவே  பார்த்தார்கள்.அவர்களது உடையும் கையிலிருந்த தொண்டு நிறுவனமொன்றின் பைகளும் அவர்களை புனர்வாழ்வு காரர் அல்லது முன்னை நாள் காரர்  என்று அடையாளப் படுத்தியிருந்தது. அவரவர்  தனியாக  விடைபெறாமலேயே மெளனமாக பிரிந்து போக அவளும் யாழ் நகரத்தை  ஒரு தடைவை பார்த்தாள் நிறையவே மாறிப் போயிருந்தது. பில்லா 2 என்ற பிரமாண்டமான கட்டவுட்டில்  அஜித் பிஸ்ரலைக்காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார்  அப்படியொரு  மொடலை  அவள் பார்த்தேயில்லை என்ன மொடல் பிஸ்ரலாக இருக்கும்  யோசித்தாள்.  எண்டாலும்  இது இப்ப தேவையில்லாத வேலை  அங்கிருந்து நகர்ந்தாள். அவளையே பலரும் பார்ப்பது போல இருந்த. நல்லவேளையாக புனர்வாழ்வு முகாமில் தொண்டு நிறுவனமொன்று அவளிற்கு கறுப்பு கண்ணாடி வாங்கிக்  கொடுத்திருந்த படியால் அவளது இடக்கண் குழி யாரையும் மிரளவைக்கவில்லை. அங்கு நின்றவரிடம் கோப்பாய்க்கு போவதற்கான  பேரூந்து  இடத்தை கேட்டு பேரூந்தில் ஏறி அமர்ந்தாள்.

தடுப்பில் இருக்கும் போதும் பிறகு புனர்வாழ்வு முகாமிலையிருந்தும்  தனது விபரங்கள் எழுதிய கடிதங்கள் கொடுத்து விட்டிருந்தாள்.  அந்த இரண்டரை வருசத்திலை ஒருதடைவை கூட வந்து பாக்கேல்லை.அவளிற்கு அண்ணனிலும் அம்மாவிலும் கோபம்தான் .சிலநேரம் கடிதம் குடுத்தாக்கள் கொண்டு வந்து குடுத்துவிட்டிருக்க மாட்டினம். இல்லாட்டி  வீட்டுக்காரருக்கு  வந்து பாக்கிறதக்கு இடம்வலம் தெரியாமல் இருந்திருக்கும்.என்று தனக்குதானே சமாதானமும் சொல்லிக்கொண்டாள். வீடு வந்து சேரும்போது  இரவாகத் தொடங்கியிருந்தது.  வீட்டிற்கு போனவளை அம்மா ஓடிவந்து கட்டியணைக்கவில்லை. அண்ணன் மகிழ்ச்சியில் சேவலைத்தேடி ஓடியிருக்கவில்லை. ஒரே மெளனம் அவரவர் குனிந்தபடி இருக்க அண்ணிதான் தொடங்கினாள்.
சனியன் செத்து துலைஞ்சிட்டு எண்டு நிம்மதியா இருந்தனாங்கள்  இப்ப என்னத்துக்கு இஞ்சை வந்தது. ஒரு வருமானத்திலை நாங்களே மூண்டு பிள்ளையளை  வளக்க படுகிற பாடு அதக்குள்ளை இதுவேறை  யார் வைச்சு சாப்பாடு போடுறதாம். பிடி பட்ட பெட்டையளுக்கெல்லாம் என்ன நடந்தது எண்டு கேள்விப்பட்டனாங்கள். உவளை மட்டும் சும்மா விட்டிருப்பாங்களோ  இனி ஆமிக்காரன் வேறை தேடி வீட்டை வரப்போறாங்கள்....

அண்ணி கதைக்கிறதை  யோசிச்சு கதை .அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் ஆற்றாமை எல்லாத்தையும் சேத்து கத்தினாள்.

அப்பொழுதுதான் அண்ணனிற்கு வீரம் வந்திருந்தது" அண்ணியை  எதுக்கடி கத்துறாய் சும்மா உள்ள பெட்டையளையே கரை சேக்க படுகிற பாடு எனக்கு வயசுக்கு வாற வயசிலை  ஒரு பெட்டை வேறை இருக்கு. உனக்கு  வயசும் வட்டுக்கை போட்டுது  இதுக்கை நீ தடுப்பாலை  வந்திருக்கிறாய் ஒற்றைக் கண்வேறை இல்லை உன்னை யாரடி கட்டுவாங்கள். நாங்களா உன்னை  இயக்கத்திலை சேரச்சொன்னாங்கள் நீயாத்தானே  ஓடிப்போனனி  என்னாலை எல்லாருக்கும் சோறு போட ஏலாது எங்கையாவது போய் துலை. என்றவன் உள்ளே போய்விட்டான்.
அதுவரை மொளமாக நின்றிருந்த அம்மா அருகில் வந்து மெதுவாக " பிள்ளை  உன்னை  பாக்க வரேல்லை எண்டதுமே உனக்கு விளங்கியிருக்கவேணும். ஆம்பிளை பிள்ளையெண்டாலும் பரவாயில்லை ஆனால்..என்று இழுத்த அம்மாவை.   அம்மா நீயுமா.வேண்டா வெறுப்பாக பார்த்தவள் வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கியிருந்தாள்.இரவும் தனிமையும் எப்பொழுதுமே அவளை பயமுறுத்தியதில்லை. சந்திக்கு வந்தவள் தன்னுடன் தடுப்பில் இருந்து வெளியேறிய நண்பி கொடுத்துவிட்டிருந்த சிறுப்பிட்டி விலாசம் அவளிடம் இருந்தது.

0000000000000000000

சிறுப்பிட்டியில்  நண்பியின் வீட்டில் தங்கியிருந்தவளிற்கு பிரச்சனைகள் இருக்கவில்லை. ஆனாலும்  எத்தனை நாட்கள் மற்றவர்களிற்கு பாரமாக இருப்பது என்று மனது உறுத்திக்கொண்டிருந்தது.இப்போ  மீண்டும் விஜித்தாவாக மாறி விட்டிருந்தாள்.நண்பியின் அண்ணன்கள் இரண்டுபேர்  பிரான்சில் இருந்ததால்  அவளையும் அங்கு கூப்பிட  ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தது. அவளும் போய் விட்டால்  அந்த வீட்டில்  எந்த உரிமையோடு  தான் அங்கு இருப்பது என்கிற  பெரியகேள்விக்கு  ஒரு வழி கிடைத்தது. ஒஸ்ரேலியாக்கு கப்பல்லை போகலாமாம்.காசும் கனக்க இல்லை நம்பிக்கையான ஆக்கள்தான்  என்கிற தகவல். பண ஏற்பாடுகள்  அவளது நண்பியின் உதவியோடும்   அவளும் முயற்சிகள் செய்து  முடித்திருந்தனர் இனி பயண ஏற்பாடுதான். அவளிற்கு புதியதாய் இன்னொரு நம்பிக்கை பிறந்திருந்த இரவுப்பொழுதொன்றில் அவளை ஏற்றிப் போவதற்கு ஒரு ஆட்டோ வந்திருந்தது.

நீண்டகாலத்தின் பின்னரான இன்னொரு கடற்பயணம்.  இது நாட்டிற்கானது அல்ல நாட்டை விட்டு தப்பியோடுவதற்கானது. விருந்தும் இல்லை ஜஸ்கிறீமும் இல்லை.சீருடையும் இல்லை. சிறிய  கைப்பையில் சில உடுப்புக்கள் அடையாள அட்டை .புனர்வாழ்வு முகாம் சான்றிதழ்  இவைகள்தான் நண்பி கையசைத்தாள். கடற்கரையொன்றில் ஆட்டோ இறக்கிவிட்டு போய்விட  சிறிய படகொன்றில் துடுப்பு போட்டபடி நாலைந்து பேராக ஏற்றி கொஞ்ச தூரத்திலேயே நின்றிருந்த ஒரு றோலர் படகில் கொண்டு போய் சேர்த்தார்கள்.  றோலரில் ஏறியவள் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் இயந்திரத்தை இயக்கியக்கிக்கொண்டிருந்தவனை பார்த்ததும் ஆச்சரியம். "கடல் அரசன்  எப்பிடியிருக்கிறாய்"  என்றவளிடம் அருகில் வந்தவன் காதருகில் இப்ப கடல் அரசனெல்லாம் கிடையாது  வெறும் ஆண்டி. . என்ரை பெயர்  ஜேக்கப் என்றதும் தனது தவறை உணர்ந்தவளாய் நாக்கை கடித்தவள் என்ரை பெயர் விஜி என்றாள்.  அவனும் அவளோடு கடற்புலியில்  இருந்தவன் .குடாரப்பு  தரை இறக்கத்தில் திறைமையாக செயற்பட்டான் என்று பரிசும் வாங்கியிருந்தவன் அதிவேகப் படகுகளை  லாவகமாக செலுத்துவான்.  இப்பொழுது பழைய  றோலர் ஒன்றின்  இயந்திரத்தை  இயக்கிக் கொண்டிருந்தான்.

றோலர் நகரத் தொடங்கியது.  படகில்  பெண்கள்  குழந்தைகள்  என நாற்பத்தியாறு பேர் இருந்தனர். அவள்  தடுப்பிலும்   புனர்வாழ்விலும் பார்த்த சில  முகங்களும்  தெரிந்தது. படகின் பாதியை எரிபொருளும் சாப்பாட்டு சாமான்களும் தண்ணீர் கான்களும். நிரப்பியிருந்தது. ஒரு  இரவும் ஒரு பகலும் ஓடி முடித்த றோலர் இரண்டாவது நாளின்  இரவில்  இயந்திரம் இயங்க மறுத்தது. ஆளாளிற்கு முகத்தில் கலவரம். ஜேக்கபிடம் போனவள் என்ன பிரச்சனை என்றாள்.  ஏதாவது சின்னப் பிரச்சனையாத்தான் இருக்கும் தொடந்து ஓடினதாலை இஞ்சின் சரியான சூடாயிருக்கு ஆறினால் பிறகுதான்  கை வைக்கலாம். நாங்கள் பெருங்கடலுக்கை வந்திட்டதாலை இனி பிரச்சனையில்லை  ஆறுதலாய் நிண்டும் போகலாம்  விடிஞ்சு  வெளிச்சம் வந்தால்தான்  வடிவாய் பாக்கலாம் என்றான் .அதைக்கேட்டபின்னர்தான் அனைவரிற்கும் நிம்மதி.  அன்று பெளர்ணமி நாள் நல்ல வெளிச்சமாக இருந்தது  கடலின் அசைவும் அதிகமாவே இருந்தது  கடல் அசைவு ஒத்துவராமல்  சத்தியெடுத்தவர்கள்.  அழுத குழந்தைகள் என்று எல்லாருமே நித்திரையாகிப் போயிருந்தார்கள்.

அண்ணாந்து வானத்தைப்பார்தபடி நின்றிருந்தவளின் அருகில் வந்தஜேக்கப்  என்ன விஜி அண்ணாந்து பாத்தபடி யோசினை  உமக்கு  ஒஸ்ரேலியாவிலை  சொந்தக்காரர் யாரும் இருக்கினமோ?

இல்லை உனக்கு?

எனக்கும் ஒருத்தரையும் தெரியாது  

அதுசரி எனக்கு ஆரம்பத்திலையிருந்தே ஒரு சந்தேகம் நாங்கள் ஒழுங்கா ஒஸ்ரேலியா போய் சேருவமா?

ஏன்  என்னிலை நம்பிக்கையில்லையோ?

உன்னிலை நம்பிக்கையிருக்கு ஆனால் இந்த பழைய றோலர் படகிலைதான் நம்பிக்கையில்லை.

செத்துபோயிடுவம் எண்டு பயப்பிடுறியா.

பயமா? மெல்லிதான் புன்னகைத்தவள். ஊரிலை தினம் தினம் சாகிறதை விட இப்பிடி கடல்லை ஒரு நாளிலை செத்துப்போகலாம்.அதுக்குத்தான வந்தனான்.

அப்ப எதுக்கு இவ்வளவு செலவு பேசாமல் குளத்திலையோ கிணத்திலையோ விழுந்திருக்கலாமே நக்கலாகவே கேட்டான்.

ஓசியிலை தற்கொலை செய்யிற அளவுக்கு நான் ஒண்டும் கோழையில்லை.

சரி சரி ரென்சன் ஆகாதை  சும்மா பகிடிக்குத்தான்.   உனக்கு  ஒரு அண்ணன்  இருக்கிறதாய்  சொன்ன ஞாபகம். ஒஸ்ரேலியாவிலையும் ஒருத்தரையும் தெரியாதெண்டுறாய் இப்பிடி தனியா வேறை  வெளிக்கிட்டிருக்கிறாய்  என்ன செய்யப் போறாய்.?

ஒரு பெருமூச்சை உள்ளிழுத்த விட்டபடி   புனர்வாழ்வு முகாமிலையிருந்து வெளியேறிய பின்னர் நடந்து முடிந்தவற்றை  அவனிடம் சொல்லி முடித்தாள்.

அனைத்தையும் கேட்டு  முடித்தவன் அவளிடம் சரியாத்தான் கஸ்ரப் பட்டிருக்கிறாய்  ஒவுஸ்ரேலியாபோனதும் யாரையாவது கலியாணம் கட்டிக்கொண்டு அடுத்த வாழ்க்கையை ஆரம்பிக்கப் பார்

கலியாணமா?  இயக்கத்துக்கு போகேக்குள்ளை  இருபது வயது  பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை  இரண்டரை வருசம் தடுப்பும்  புனர்வாழ்வும். இப்ப வயது முத்பத்தெட்டை  எட்டித்தொடப் போகுது ஒற்றைக்கண்ணும் இல்லை வசதியும் இல்லை. இப்பவெல்லாம்  மனசுக்கு முடியாதெண்டு  தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.

அவளருகில்  இன்னமும் நெருக்கமானவன்  நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை  நானே ...

அவன் முடிக்க முதலேயே எழுந்த பேரலையொன்று  படகை  தூக்கி பக்கவாட்டாக போடவே  படகு உடைந்து  மூழ்கத்தொடங்கியது.  தண்ணீரிற்குள் அமிழ்ந்து போன அவளும்  சுதாகரித்துக்கொண்டு நீந்தி மேலே வந்து பார்த்தாள்.  ஒரே ஓலக்குரல்கள்.  வரமாட்டார்கள் என்று தெரிந்தும்  அந்தோனியாரையும் பிள்ளையாரையும்   மாதாவையும் அம்மாளையும்  காப்பாற்றச்சொல்லி  அழைத்த குரல்கள்.நீந்தத்தெரிந்தவர்கள் எங்கே போவதென்று தெரியாமல் ஆளிற்கொரு பக்கமாய் நீந்தத்தொடங்கியிருந்தாரகள்.  மிதந்துகொண்டிருந்த  பிளாஸ்ரிக் கான்கள்  உடைந்த படகின் பலகைகளையெல்லாம் தேடித் தேடி  தத்தளித்தவளிர்களிடம் கொடுத்துக்கொண்டிருந்த ஜேக்கப் விஜியை கவனித்தவன் அவசரத்தில்  அவளது பெயரையும் மறந்து "அலை அந்த பிள்ளையை காப்பாத்து என்று கத்தினான். தாயொருத்தி தனது பிள்ளையை தலைக்கு மேலே தூக்கியபடி தாண்டுகொண்டிருந்தாள். ஒரு செக்கன்கள் அமைதியாக அனைத்தையும் பார்த்தவள் அந்த இடத்தை விட்டு நீந்தத் தொடங்கினாள் . " அலை போகாதை அலை இவங்களை காப்பாத்து..போகாதை  ..... எடியேய் போகாதையடி ஜேக்கப் கத்திக்கொண்டிருந்தான். தனது மனதிற்கு முடியாது என்று தோன்றும் எதையும் முயற்சிப்பதில் அவளிற்கு இப்போதெல்லாம்  ஆர்வமில்லை.

இந்தப் பெருங்கடலில்  கடல் நீரின்குளிரிலும் இந்த செக்கனில் போகாத உயிர்கள் சில நிமிடத்திலேயோ  அல்லது சில மணித்தியாலங்களின் பினன்னரோ போகத்தான் போகின்றது. அதோ அவசரமாய் நீந்திக் கொண்டிருப்பவர்களிற்கும் இந்த நிலைதான் .  நீந்துவதற்கு இடைஞ்சலாக இருந்த நீள பாவாடையையும் கைநீள சட்டையையும் உருவியவள்  இங்கு என்னை பார்ப்பதற்கு எந்த கலாச்சாரக் கண்களும் இல்லை என நினைத்தபடியே  கடலில் நழுவ விட்டபடி வேகமாக நீந்தினாள். இப்பொழுது அவளிற்கு எந்த இலக்குகளும் இல்லை  அவலச்சத்தங்களிலிருந்து தூரமாக போய்விடவேண்டும் அது மட்டுமே நோக்கம். நீண்ட நேரம் நீந்தியிருப்பாள் இப்பொழுது கடலின் இரைச்சலைத்தவிர அவளது காதிற்குள் எதுவும் இல்லை. அப்படியே  திரும்பி கை கால்களை  அகலவிரித்து அண்ணாந்து  படுத்துக்கொண்டாள். அழகிய நிலவும்  அதைச்சுற்றி ஆயிரமாயிரம் நட்சத்திரங்களும். இந்த உலகம் எவ்வளவு அழகானது அதே நேரம் அவ்வளவு பயங்கரமாதும்கூட.  எனக்கு மட்டும் ஏன் பயங்கரத்தின் பக்கங்கள் மட்டும்  அதை நானாகத் தேடிப்போனேனா? அல்லது  அவை என்மீது வலிந்து திணிக்கப்பட்டவையா?? அவளின் ?கேள்விக்கு அவளேதான் பதிலும் சொல்லியாக வேண்டும். எவ்வளவு நேரம் அப்படியே ஆகாயத்தை பார்தபடி இருந்திருப்பாள் எனத்தெரியாது  கடல் குளிரில் உடல் விறைக்கத் தொடங்கி கை கால்கள் சோர்வடைந்து  அவளது இடக்கண் குழியில் கடல் நீர் நிரவத்தொடங்கியிருந்தது.

Posted Image

சிலநாட்கள் கழித்த பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் ..கரையொதுங்கும் சடலங்கள் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்தர்களுடையதாக இருக்கலாம்.



யாவும் கற்பனை அல்ல

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

12:07 PM, Posted by sathiri, 2 Comments

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய  மடல்.
சாத்திரி ஒரு பேப்பர்.

முன்னை நாள் தமிழ் தேசிய  கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ.  வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி  பகிரங்க மடலும் அறிக்கையும்  எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர்.  கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென  அண்மையில்  ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை  படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும்.

ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து  அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே  அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்திற்கு முன்னாடி றீவைண் பண்ணி அப்படியே திரும்ப ஓடவிடுங்க. .ஓட விடுவோமா??  விடுதலைப் புலிகளில் மட்டு அம்பாறை பொறுப்பாளர்  கருணா விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு  தான் பிரிந்து போய் விட்டதாக அறிவித்திருந்த நேரம். மட்டு அம்பாறை  மாவட்டங்களில்  இருந்த புலிகளின் முகாம்களில் தலைவர் பிரபாகரனின் படங்களை அகற்றிவிட்டு தன்னுடைய படங்களை வைக்குமாறு கட்டளையிட்டிருந்த நேரம்.மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த நிலாவினி  தனக்கும் கருணாவிற்கும் இருந்த கள்ள உறவு காரணமாக தன்னுடைய விசுவாசத்தினை கரணாவிற்கு காட்டுவதற்காக  தேசியத் தலைவரின் படங்களை உடைத்தும் கிழித்தும் எறியுமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் தலைவரது படங்களை பல முகாம்களில் போராளிகள் கழற்றி பத்திரமாக ஒழித்து வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது.  அப்படி கருணா அறிவித்த சில நாட்களில்  கிழக்கு பாராளுமன்ற  உறுப்பினர்கள் பலர் வன்னிக்கு போய்விட மற்றையவர்கள் மொனமாக இருந்த காலகட்டம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக நீங்கள் உங்கள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியிருந்தீர்கள். மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தினை கிழித்தெறிந்தது மட்டுமல்லாது ஒரு படி மேலே போய்  தலைவரின் கொடும்பாவியையும் கொழுத்தியிருந்தீர்கள் என்பதனை மறுக்க முடியாது  காரணம் அன்று அந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அன்று செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்களர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

அன்றைய சம்பவத்திற்கு பின்னர் கருணாவிற்கு ஆதரவாக நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டிருந்தீர்கள்.பின்னர்  மட்டு அம்பாறையில் கருணாவின் அதிகாரம் கலைக்கப்பட்ட பின்னர்   புலிகளின் தலைமை தாராக்கி சிவராம் ஊடாக தொடர்பு கொண்டு உங்களை வன்னிக்கு வருமாறு அழைத்திருந்தனர். அப்பொழுது வன்னிக்கு சென்ற சந்திரநேரு சந்திரகாந்தனுடன்  வன்னிக்கு சென்றிருந்தீர்கள். புலிகள் உங்களை வன்னிக்கு அழைத்தற்கு காரணம்  கொழும்பில் புலிகள் ஒரு ஆடம்பர மாடிக்குடியிருப்பு ஒன்றினை உங்கள் பெயரில்  வாங்கி அதனை தங்கள் பாவனைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மாடிக்குடியிருப்பினை  வாங்குவதற்கான  புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இலண்டன் கிளையில் இருந்தே பணம் வழங்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காகவே அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது. வன்னியில் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் கஸ்ரேவை சந்தித்த நீங்கள் கிழக்கில் நடந்த சம்பவங்களிற்காக கஸ்ரேவை கட்டிப்பிடித்து பல தடைவை மன்னிப்பும் கேட்டிருந்தீர்கள்  அப்பொழுது  மற்றை பாராளுமன்ற  உறுப்பினர்களான் கனகரத்தினம்.செல்வராசா கஜேந்திரன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரும் உடனிருந்திருந்தனர்.

அன்று இரவு உங்களை சந்தித்த பொட்டு அம்மான்  நீங்கள் செய்த வேலைக்கு உங்களை போட்டுத் தள்ளியிருக்கவேணும் ஆனால் உங்கள் தேவை இன்னமும் எங்களிற்கு இருக்கிறது என்றபொழுது  உங்களுடன்  அதே சந்திரகாந்தனும். துரோணர் மற்றும் சாத்தப்பனும் அங்கு இருந்திருந்தனர். அன்று உங்களை  புதுக்குடியிருப்பிற்கு  அழைத்து சென்றவரே தற்சமயம்  தலைமை செயலகம் என்று  சொல்லிக் கொண்டு  இலண்டனில் வசிக்கும்  சங்கீதன்தான் இவையெல்லாம் வெளிநாடு வந்ததும்  இங்கிலாந்தின் உறைபனிக் குளிரில் உங்களிற்கு மறந்து போயிருக்கலாம் ஆனால் இப்பொழுது படிப்படியாக  ஞாபகம் வரத்தொடங்கியிருக்கும்.

நீங்கள் வெளிநாடு வந்த சில காலங்களில் உங்கள் பெயரில் இருந்த  புலிகளின் கொழும்பு வீடு மருமகனின்  பொறுப்பில் இருந்தது  அதனை அறிந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் உங்கள் மருமகனை கைது செய்து  அந்த வீட்டையும் கையகப்படுத்தியிருந்தனர்.  ஆனால்  புலிகளின் முடிவிற்கு பின்னர்   அன்று மகிந்தாவுடன் நெருக்கமாக இருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிசோர்  மூலமாக மகிந்தாவுடன்  தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டினை  மீள பெற்றதுடன் உங்கள் மருமகனும் விடுவிக்கப்பட்டுவிட்டார். இப்போ பல கோடி பெறுமதியான புலிகளின் சொத்து உங்கள் கைகளில். வெளிநாட்டில் மகிந்தாவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்படியே  மகிந்தாவுடன்  டீலை போட்ட நீங்கள் கில்லாடிதான் போங்கள். அது மட்டுமல்ல  பின்னர்  புலம்பெயர் தேசத்தில்  நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி அதை வைத்து உருப்படியாக ஏதாவது செய்யலாமென நினைத்து அதற்கான  தேர்தல்கள் நடந்த பொழுது அதனை உடைப்பதற்கென்றே  திட்டமிட்டு அதற்குள் புகுந்து வேட்பாளராகியிருந்தீர்கள்.  உங்கள் சுயமுகம் தெரியாமல்  பழைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற நினைப்பில்  வாக்குகளை போட்டுவிட்டார்கள்.

ஆனால் தேர்தல்கள் முடிந்த கொஞ்ச காலங்களிலேயே உங்கள் சுயமகம் தெரிந்தது  நாடு கடந்த அரசை இரண்டாக உடைக்க முயற்சித்தீர்கள் அதிலிருந்து  பலருடன் வெளியேறுவதாக அறிக்கையும் வெளிவந்தது  ஆனாலும் பெரியளவில் உங்கள் பருப்பு வேகவில்லை.   அப்பப்போ பகிரங்க மடலும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேதான் இருந்தது.  சில காலங்களிற்கு முன்னரும் ஒரு  அறிக்கை  விட்டிருந்தீர்கள் காரணம் சிறீலங்கா அரசிற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டு  ஏன் இன்னமும்  சிறீலங்கா அரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெறுகிறீர்கள் என  ஒரு பத்திரிகையாளர் கேட்தற்காக  வெளிவந்த அறிக்கை  அது .அதில் நீங்கள் சொல்லியிருந்த காரணம்  கிழக்கு மாகாணத்தில் முன்னை நாள் போராளிகளை எந்த உதவி அமைப்புக்களும்  கவனிப்பதில்லை  எனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை  முன்னை நாள் போராளிற்காக  செலவிடுகிறேன் அதற்காகத்தான் அந்த ஓய்வூதியத்தை பெறுகிறேன் என்று  சொல்லியிருந்தீர்கள்.  அந்த அறிக்கை வெளி வந்த ஒரு சில நிமிடங்களிலேயே   ஒரு தொண்டர் அமைப்பு  உங்களிடம் இருக்கும் கிழக்கு மாகாண முன்னை  போராளிகளின் விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம் என மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

அதற்கு உங்கள் பதில் எதுவும்  இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில்  நீங்கள் யாரிற்கு உதவினீர்கள் என்கிற  விபரங்கள் கூட இல்லை   அப்படியானால் நீங்கள் யாரிற்கும் உதவவும் இல்லை  எங்களிடம் உதவிகோருபவர்களி்ன்  விபரங்களும் இல்லை  அரசாங்க ஓய்வூதியப்பணம் உங்கள்  வங்கி கணக்கிற்கு  பத்திரமாக போய் சேருகின்றது. அப்படித்தான் அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பறக்கணித்தாலும் அங்கு தேர்தல் நடக்கத்தான் போகின்றது அங்கு சிறீலங்கா சுதந்திர கட்சியும்  முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்து  தமிழரின் அங்கீகாரமானது கேள்விக்குறியாகிவிடும் இதுதான்  சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பது. அதைத்தான் நீங்கள் செய்யச்சொல்கிறீர்கள்.   அப்போ உங்கள் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது யார்??
வழைமையாக நான் எந்தக் கட்டுரைகள் எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாக  தொடர்புகொண்டு அவர்களது கருத்தையும் கேட்டபின்னரே கட்டுரையை வெளியிடுவது வழைமை ஆனால் நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை காரணம்   நீங்கள் யார் ??பெரிய அரசியல்வாதியாச்சே  மறுநாளே மறுப்பறிக்கை வெளியிட்டு விடுவீர்கள்எனவேதான் பரம இரகசியமாக சில கேள்விகளை இங்கு வைக்கிறேன் அதற்கான பதில்களை  படுத்திருந்து யோசிப்பீங்களோ றூம் போட்டு யோசிப்பீங்களோ தெரியாது  ஆனால் எந்த நேரமும் ஒரு பேப்பரிற்கு அனுப்பி வைக்கலாம்.

1)கருணா பிரிவின் போது கிழக்கு மாகாணத்தில் இருந்த அத்தனை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனமாகவோ அல்லது  கருணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்போது நீங்கள் மட்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின்  கொடும்பாவியை  கொழுத்தியது ஏன்?

2)புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட கொழும்பு வீட்டினை  மீட்பதற்காக மகிந்தவுடன் பேரம்பேசியபடியே  வெளிநாடுகளில் தமிழ் தேசியம். போராட்டம் என எப்படி உங்களால் ஊடகங்களில் மக்கள் தலையில் மிளகாயும் இஞ்சியும்  அரைக்க முடிந்தது.

3)இலங்கையரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு இன்னமும் எதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதிய பணத்தினை பெற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள்.

4)உங்கள் ஓய்வூதிய பணத்தினை பாதிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்காக செலவிடுவதாக அறிக்கை விட்டிருந்தீர்கள் இதுவரை அதனால் பயன் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவீர்களா

5)நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து போட்டியிட்டு விட்டு சொற்ப காலத்திலேயே  அதனை உடைக்க முனைந்தது எதற்காக

6)கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து  கிழக்கு முழுதும் உள்ள நிருவாக ஆட்சி அலகுகளும் சிங்களத்திடம் போய் சேர்ந்துவிட்டால் உங்களிற்கு இலாபம் கிடைக்கலாம் ஆனால் கிழக்கு மக்களிற்கு என்ன இலாபம்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம்  அதனை நாமும்  இரகசியமாக பிரசுரிப்போம்.
கேள்வி அவ்வளவுதான்  பதிலிற்காக  வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சாத்திரி.