Navigation


RSS : Articles / Comments


க..பூ..க..போ . (சிறுகதை)

1:43 AM, Posted by sathiri, No Comment

க..பூ..க..போ .
இம்மாத  அம்ருதாவில் .
சாத்திரி ..

இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் அதற்குப் பிறகு அங்கு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருக்க முடியாது எனவே நண்பன் ஒருவனுக்கு போனடித்து ஹோட்டல் அறை ஒன்று புக் பண்ணி விடுமாறு சொல்லி விட்டிருந்தேன் .நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்குவேன் என்பதால் நண்பனும் அதற்கு அருகில் வடபழனியில்  ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்துவிட்டு அதன் விலாசத்தை எனக்கு எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தான் .
கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவை பிடித்து அறைக்குச் சென்று பயணப் பையை வைத்து விட்டு.அன்றைய பயணத்தின்போது  வீதி முழுதும் வாரி வாங்கி வந்த தூசியை உடலை விட்டு போக்க  ஒரு குளியல் போட எண்ணி குளியலறையை திறந்து லைற்றை போட்டதும் சுவரின் மூலையில் கூட்டம் போட்டு தமிழ் நாட்டின் அரசியல்  பற்றி  தீவிரமா விவாதித்துக்கொண்டிருந்த பல கரப்பான்பூச்சிகள் விர் ..என்று சுவர் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீர் போகும் குழாயினுள்ளும் ஓடி மறைய ஒரேயொரு பூச்சி திசை தவறி என்னை நோக்கிவர. கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதன்மீது ஓங்கியடித்து தண்ணீர் குழாயுள் தள்ளிவிட்டு சுற்றி வர பார்த்தேன்.எல்லாம் ஓடி மறைத்து விட்டிருந்தது .நீண்ட காலத்துக்குப் பிறகு கரப்பான்பூச்சியை கண்டதும் எனது கலியாணமும் முதலிரவும் மீண்டும் நினைவுக்கு வரவே ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீரில் நனையத் தொடங்கினேன் ..எல்லாம் சரி  என் கலியானதுக்கும் கரப்பான்பூச்சிக்கும் என்ன சம்பந்தம்? ..எல்லோருக்கும் அறிய ஆவலாயிருக்கும் எனவே இங்கே கட் பண்ணி அங்கே ஒப்பின் பண்ணுகிறேன் .
0000000000000000000000000000000000000

கல்யாணம் செய்துபார் வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழி .இப்போவெல்லாம் கலியாணம் செய்வது சுலபம் வீடு கட்டுவதுதான் சிரமம் .இன்றைய காலத்தில் வீடு கட்டுறதென்ன ஒரு வீடு வாடைக்கு எடுக்கிறதே சிரமமாகிவிட்ட காலம்.கலியாணம் என்னமோ ஒரு பிரச்னையும் இல்லாமல் காதலிச்சு சிம்பிளா பதிவுத் திருமணமா முடிச்சிட்டேன் .அதுவரைக்கும் பச்சிலரா ஒரு அறையில் ஆறு நண்பர்களோடு இருந்த எனக்கு குடும்பஸ்த்தன் என்கிற பிரமோசன் கிடைத்து விட்டிருந்தது .முதலிரவுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது கல்யாணப் பரிசாக  நட்சத்திர விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டிருந்தர்கள்.திருமணம் முடிந்து ஒரு ரெஸ்ராரண்டில் அனைவருக்கும் விருந்து.அது முடிந்ததும் எல்லோரும் பரிசுப் பொருட்களை தரத் தொடங்கினார்கள்.எனக்கு இப்போதைக்கு வீடு இல்லாதாதால் அதை வைக்க இடமும் இல்லாததால் நண்பர்கள் தரவிரும்பும் பரிசை பணமாகவே தரும்படி அழைப்பிதழிலேயே அச்சடித்து விட்டிருந்தேன். அதனால் அனைவரும் கொடுத்த என்வலப்புகளை வாங்கி பாக்கெட்டில் செருகிவிட்டு கடைசியாய் மனைவியிடம் "போகலாமா" ..என்றதும்
எங்கே ..

ஹோட்டலுக்கு தான் .

என்னது ஹோட்டலா ..

ம் ...ஸ்டார் ஹோட்டேல் ..கண்ணை சிமிட்டினேன் .

நானெல்லாம் அந்த மாதிரி பொம்பிளை இல்லை ..

ஐயையோ ..நீ தப்பா நினைக்காதை இது பிரெண்ட்ஸ் ஏற்பாடு ..

நினைச்சேன் ..உங்களை கெடுக்கிறதே அவங்கள்தான் ..

சரி இப்ப என்னதான் சொல்லுறாய் ..

முதல்லை ஒரு வீடு தேடிப் பிடியுங்கோ .பிறகுதான் எல்லாம் ...பாய் .சொல்லிவிட்டு அவளது நண்பிகளோடு போய் விட்டாள் .
என்னை மாதிரி மத்திய தர குடும்பம் ஒன்றுக்கு கொழும்பு, சென்னை மாதிரி நகரங்களிலேயே எங்களுக்கு பிடித்தமாதிரி வீடு வாடகைக்கு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு மாதிரி என்றால் பிரான்சில் ஒரு பெரு நகரத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து அதில் குஞ்சம் கட்டி அழகு பார்த்த மாதிரி. எங்களுக்கு பிடிக்கிற பிகரை விட கிடைச்ச பிகரோடை சந்தோசமா வாழவேண்டும் என்கிற மாதிரி .. பிடிக்கிற வீட்டை விட வடைகைக்கு கிடைச்ச வீட்டிலை சந்தோசமா வாழப்பழக வேணும்.
நானும்அவசரமா  நாலு வீட்டு ஏஜென்சில பதிவு செய்து ஏஜென்சிக்கு என்னுடையதும் மனைவியுடையதும் சம்பள விபரம் எல்லாம் குடுத்து . இருபது வீடு ஏறி இறங்கி எங்கள் இருவரது வேலையிடதுக்கும் கிட்டவாக ஒரு வாரத்திலேயே ஒரு அப்பாட்மென்டில் முதல் மாடியில் வீட்டு ஏஜென்சிக் காரனுக்கு பிடித்தமான ஒரு  வீடு பார்த்து சரி சொல்லி இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் கொடுத்து கையெழுத்தும் வைத்தாச்சு .  முதல் வாங்கியது கட்டில் .பால்காய்ச்சி வீடு குடி புகுந்தாச்சு.கலியாணமாகி ஒரு வாரம் கழித்து  முதலிரவு. அண்ணாந்துபார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தேன். வெள்ளைச்  சுவற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.."முன்னர் குடியிருந்தவன் எதாவது ஆணி யடித்திருப்பனோ".. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவியும் உள்ளே வர அந்த கறுப்புப் புள்ளி அசையத் தொடங்கியது.அதைக் கண்டதுமே ஆ ...., என்று கத்தியபடி கட்டிலில் ஓடியந்து ஏறியவள். கரப்பான்பூச்சி ....கரப்பான்பூச்சி ..என்று கண்ணை மூடிக் கத்தினாள்  ..

ச்சே ..எதுக்கு கரடியை கண்ட மாதிரி கத்துறாய் ..கரப்பான்பூச்சி  தானே ..அதுவும் குட்டிப் பூச்சி .

"முதல்லை அதை அடியுங்கோ" திரும்பவும் கத்தினாள் .

பல்கனியை திறந்து தும்புத்தடியை எடுத்துவந்து பூச்சியை தட்டியதும்  அது கீழே மல்லாந்து விழுந்தது கிர் ...என்று பம்பரம் போல சுத்திக் கொண்டிருக்கவே அப்படியே நசித்துவிட காலை உயர்த்தவும் .கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் உயர்த்திய காலைக் கட்டிப் பிடித்தபடி .
 "வேண்டாம்.. அத்தான் வேண்டாம்..அதனை காலால் நசித்து விடாதீர்கள் .

"இவளுக்கு கரப்பான்பூச்சியில்  பயமா ? பாசமா" ??..  எதுக்கடி நசிக்கக் கூடாது ..

"கரப்பான்பூச்சியை காலால் நசிக்கும் போது அதில் இருக்கும் முட்டைகள் காலில் ஒட்டிவிடும்.பிறகு நீங்கள் நடக்குமிடமெல்லாம் அதன் முட்டைகள் பரவி அதன் இனம் பெருகி விடும்" ....

இங்கை ஒருத்தன் முதலிரவே நடக்காமல் கடுப்பில இருக்கும்போது கரப்பான்பூச்சி இனப்பெருக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .."சரி இப்போ என்னதான் செய்ய" ? ..

அதை அப்பிடியே பிடிச்சு வெளியாலை எறிஞ்சு விடுங்கோ ..

 சுற்றிக்கொண்டிருந்த பூச்சியை ஒரு கடதாசியில் போட்டு பொட்டலம் செய்து யன்னலால் வெளியே எறிந்துவிட்டு வந்து  "அப்பாடா " என்றபடி லைட்டை நிப்பாட்டவும்..

"எதுக்கு லைட்டை நிப்பாட்டுரீங்கள்" ?..பதட்டத்தோடு கேட்டாள் .

முதலிரவன்று இதெல்லாம் ஒரு கேள்வியா ?....அப்போ  .....................

"எனக்கு சின்ன வயசிலை இருந்தே கரப்பான்பூச்சி க்கு சரியான பயம்.முதல்ல பூச்சியை இல்லாமல் பண்ணுங்கோ .இல்லாட்டி வேறை வீடுட்டுக்கு மாறுவம்.இப்ப லைட்டை போடுங்கோ."..

எனக்கு லைட்டை போட்டால் எதுவுமே வராது ..ச்சே ..நித்திரை வராது ...

எனக்கு பூச்சியை பார்த்தால் நித்திரை வராது .  என்றவள் போர்வையால் இழுத்து போர்த்துக்கொண்டு படுத்து விட்டாள் .

லைட்டை போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து சில்லென்ற தண்ணீரை தலையில் சிதற விட்டுக் கொண்டிருக்கும்போது காலடியில் ஒரு கரப்பான்பூச்சி .அது என்னைப் பார்த்தே சிரிப்பது போல இருந்ததது.காலால் நச்சென்று நசித்து குழாயில் தள்ளி விட்டேன் .
..........................................................................

அந்தவார இறுதி லீவு நாட்களான சனி,ஞாயிறு கரப்பான்பூச்சி ஒழிப்பு நாட்களாக பிரகடனம் செய்து .எப்படியும் மருந்தடித்து பூச்சியை ஒழித்து விடுவேன் என்று மனைவியின் காலைப் பிடித்து செய்த சத்தியத்தின் பின்னரே மறுநாள் அதிகாலை முதலிரவாய் விடிந்திருந்தது .அடுத்தடுத்த நாட்கள் கரப்பான்பூச்சியை கண்டு அவளின் அலறலோடும் . இரவு முழுதும் லைட்டை எரிய விட்டு அரைகுறை நித்திரையோடும்  கழிந்தது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்ற மருந்துக் கடை ஒன்றில் புகுந்தேன் .

"வாங்க... எலியா ,எறும்பா ,புளுவா ,பூச்சியா எதனால் பிரச்னை".. என்றபடியே வரவேற்றவளின் சிரிப்பு.. மருந்தடிக்காமலேயே என்னை கொன்றுவிடும் போல இருந்தது .என் பார்வையை மேலிருந்து கீழ் இறக்கிய படியே ..
"பூச்சி ...பூச்சி ..கரப்பான் பூச்சி க்கு  மருந்து "என்று தட்டித் தடுமாற ..
ஓ ..கரப்பான்பூச்சியா ? ஒரே நாளில் ஒழித்துவிடும். என்றபடி ஒரு ஸ்பிரேயை எடுத்து வைத்தவள். இது அபாயமான மருந்து. எனவே கைகளுக்கு கிளவுசும் முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்து அவதானமாக பாவிக்கவும். என்றபடி நான் கேட்காமலேயே அவற்றையும் எடுத்து வைத்து பில்லை நீட்டினாள் .
சனிக்கிழமை காலை கைகளுக்கு கிளவுஸ் ,மாஸ்க் எல்லாம் அணிந்து ஒப்பிரேசன் கரப்பான்பூச்சி ஆரம்பமானது. மூலை முடுக்கு எல்லாம் ஸ்பிரே அடித்து முடித்து ஒரு பூச்சி கூட வெளியே தப்பிப் போய் விடாதபடி  ஜன்னல்கள்  கதவு எல்லாம் சாத்தி விட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.பகல் வெளியே சாப்பிட்ட பின்னர்  நகரை சுற்றி விட்டு மாலை வீடு வந்து கதவை திறந்ததும் இறந்து கிடந்த பூச்சி களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் "சக்சஸ்"  என்று கத்தியபடி மனைவியை கட்டிப் பிடிக்க. "ச்சே ..கையை எடுங்கோ முதல்லை வீட்டை கிளீன் பண்ணுங்கோ" என்றாள் .வேகமாய் வீட்டை கூட்டி சுத்தம் செய்து  இறந்து போன பூச்சிகளில் இருந்து ஒரு முட்டை கூட தவறி  குஞ்சு பொரித்து மீண்டும் அதன் வம்சம்  உருவாகி விடக்கூடாது என்கிற குரூரத்தோடு அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு கொளுத்தி சாம்பலை கொண்டுபோய் கடலில் கொட்டி  திவசம் கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து முடித்து கட்டிலில் போய் விழுந்தேன்.
............................................................................
 எந்தப் பூச்சியும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்ததொரு நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவி நிலத்தை துடைப்பதற்காக பிரிஜ்சை  கொஞ்சம் தள்ளியவள் ..ஆ ........ஐயோ ..

அவசரமாய் ஓடிப்போய் .."என்னடி" ?

பூச்சி .பிரிஜ்சுக்கு  பின்னலை பூச்சி ..முதல்லை வீட்டை மாத்துங்கோ ..

பொறடி.. எதுக்கெடுத்தாலும் உடனே வீட்டை மாத்துங்கோ எண்டு கத்தாதை..மாஸ்க் ,கிளவுசோடை  சேர்த்து வாங்கின ஸ்பிரேயும் வேலை செய்யேல்லை .  ஊருக்கு போனடிச்சு அம்மாவிட்டை கேட்டுப் பார்ப்பம் எதாவது ஐடியா சொல்லுவா ..

"பூச்சியை  கொல்ல வைரசிட்டை ஐடியா கேக்கப் போறாராம்" ...புறு புறுத்தாள் ..

என்னடி நக்கலா  ?..

ஒண்டும் இல்லை.. தாராளமாய் உங்கட  அம்மாவிட்டை ஐடியா கேளுங்கோ .தம்பி கொஞ்சம் காசு அனுப்பு எண்டு கேட்பா ..அதையும் ரெடி பண்ணுங்கோ ..என்று விட்டு போய் விட்டாள் .

அம்மா விற்கு போனடித்து பிரச்சனையை சொன்னதும் " மகனே இது சின்னப் பிரச்னை வீட்டிலை எல்லா இடமும் மஞ்சள் தண்ணியை தெளிச்சுட்டு  ஒவ்வொரு மூலையிளையும் வேப்பமிலையை கட்டிவிடு " என்றார் ..

மஞ்சள் இங்கை கிடைக்கும்.கருவப்பிலையையே  கஞ்சா கடத்துற மாதிரி கஷ்டப்பட்டு கடத்தி தான் கொண்டு வாறாங்கள்.இதுக்கை வேப்பமிலைக்கு எங்கை போறது ?.

அதுக்கான தீர்வையும் அம்மாவே சொன்னார் ." கவலைப் படாதை மகனே .வேப்பமிலை நானே பார்சல் பண்ணி விடுறேன் .ஒரு ஐம்பத்தாயிரம் ரூபா அனுப்பி விடு "..

வேப்பமிலைக்கு ஐம்பத்தாயிரமா?..

பின்னை மரத்திலை ஏற ஆள் பிடிக்க வேணும், நல்ல இலையா பார்த்து பிடுங்க வேணும் ,பார்செல் பண்ண வேணும்,போஸ்ட் ஆபிஸ் கொண்டு போக வேணும்,எல்லாம் சும்மாவா ?.

சரி, சரி என்று விட்டு போனை வைத்து விட்டு மனைவியை பார்த்தேன்..நல்ல வேளையாக அவள் பால்கனியில் நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .
.....................................................................................
ஊரிலிருந்து பார்சலில் வந்த வேப்பமிலையை எல்லா மூலையிலும் கட்டித் தொங்க விட்டு உள்ளூர்  ஆசியன் கடையில் வாங்கிய மஞ்சளும் தெளிச்சு களைத்துப் போயிருந்தேன்.கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை காய்ந்து சருகாகிப் போயிருந்ததே தவிர  பிறிச்சுக்கு பின்னாலும்,குளியலறையும் கரப்பான்பூச்சியின் பிரதான ரியல் எஸ்டேட் குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது.மனைவியின்  ஆ ....ஐயோ ..சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது .
அடுப்படிக்குள் போகவே மனிசி பயந்ததாலை கரப்பான்பூச்சிகளின் அடுக்கு மாடி குடியிருப்பான  பிரிஜ்சை  மாற்றி விடுவதென முடிவெடுத்தேன்.அதை  முதலாவது மாடி வரை தூக்கி வரவேண்டும்.உதவிக்கு கூடவே வேலை செய்யும் மமாடுவை அழைத்திருந்தேன்.மமாடு ஆபிரிக்க செனெகல் நாட்டை சேர்ந்தவன்.பிறிச்சை தனியாகவே தூக்கும் உடல்வாகும் பலமும் கொண்டவன் .அவனின் உதவியோடு புதிய பிரிஜ்சை  கொண்டு வந்து வைத்தாகி விட்டது.
மறுநாள் வேலைக்கு போனதும் மமாடுவை பார்த்து வணக்கம் சொன்னதும் அவனும் வணக்கம் சொன்னான்.. வாய் அசைந்ததே தவிர சத்தம் வரவில்லை.
"என்னாச்சு".. நேற்று பிரிஜ்சை தூக்கியதாலை ஏதும் ஆகியிருக்குமோ ? என்று நினைத்தபடி   "என்ன ஆச்சு"... என்றதும் ..

கோபமாக தன் சட்டைப்பையில் கையை விட்டு காய்ந்துபோன சில இலைகளை எடுத்து மேசையில் எறிந்தவன் "இது என்ன "..என்றான் ..

உற்றுப்பார்த்தேன் .."அடடே  இது வீட்டிலை கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை ..இது எப்பிடி இவனிட்டை"? ..

அவனே சைகையில் சொல்லத் தொடங்கினான் .."நேற்று உன் வீட்டுக்கு வந்தனா" ...

ஆமா ...

டாய்லேட் போனனா ....

ஆமா ......

அங்கை ஒரு மூலையிலை இது தொங்கிட்டு இருந்திச்சா ....

ஆமா .....

"அதை உருவிக்கொண்டு போய் கசக்கி பத்தினன் ..சவுண்டு போயிட்டுது"..என்றான் ..

"ஏன்டா  டேய்" ..ஒரு ஆசியா காரன் வீட்டிலை காய்ந்துபோன எந்த இலை கிடந்தாலும் உடனையே அது கஞ்சா தான் எண்டு எப்பிடிடா முடிவு பண்ணுறீங்கள் ..சரி ஒண்டும் ஆகாது உடம்புக்கு நல்லது. மிகுதியையும் கசக்கி பத்து.. என்று அவனை தேற்றினேன் ..
........................................................................................
எப்பிடியோ கரப்பான் பூச்சிகள் . புது பிறிச்சுக்கு பின்னாலும் பால் காச்சி குடி கொண்டு விட்டிருந்தன. வீட்டை மாத்துங்கோ என்கிற மனைவியின் நச்சரிப்பு.வாழ்க்கை வெறுத்துப்போய் அந்த சோகத்தில் இரண்டு பியரை வாங்கி ஒன்றை மமாடுவிடம் கொடுத்து சியர்ஸ் சொல்லி உறுஞ்சிய படியே அவனிடம் சோகத்தை பகிந்து கொண்ட போது ..கை தட்டி விழுந்து புரண்டு சிரித்தான் ..

எதுக்கடா சிரிக்கிறாய் ....

இதெல்லாம் ஒரு பிரச்சனையா ??...

அடேய் ..இது தாண்டா பிரச்சனையே ...

இதை முதல்லையே என்னிடம் கேட்டிருக்கலாமே .சூப்பர் ஐடியா சொல்லியிருப்பேன் ..

சரி இப்போ சொல்லு ..

கண்ணீர் புகை அடி.  எல்லாம்  ஒரே நாளிலை முடிஞ்சிடும் ..

கலகத்தை அடக்கத் தானே கண்ணீர் புகை அடிப்பாங்கள் ..கரப்பான்பூச்சியை அடக்கவுமா ??..

அடிச்சு பார்த்திட்டு அப்புறமா சொல்லு ..

சரி கண்ணீர்ப்புகை சின்ன அளவு ஸ்பிரே தானே வாங்கலாம்.ஒவ்வொரு கரப்பான்பூச்சியா பிடிச்சி கண்ணிலையா அடிக்க முடியும் .

கவலையை விடு.செக்கியூரிட்டி சேர்விசிலை  எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கிறான் அவனிட்டை சொன்னால் ஆயுதம் விக்கிற கடையிலை கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி  கொடுப்பான்  .ஒரேயொரு குண்டு..  "புஸ்ஸ்" ...எல்லாம் குளோஸ் ..

" என்னது குண்டா"... இது சட்டப்படி குற்றமில்லையா? ஏதும் பிரச்னை வராதே ??..

கரப்பான்பூச்சி  போலிஸ் ஸ்டேசனிலை போய் வழக்கு போடாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்லை ..பயப்பிடாதை .

மமாடு கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுத்து எப்படி இயக்குவது என்றும் சொல்லிக்  கொடுத்து விட்டிருந்தான்.பயங்கர ஆயுதம் கடத்துவது போலவே.. பயந்தபடி கார் சீட்டுக்கு கீழே ஒளித்துவைத்து கொண்டு வந்து சேர்த்தாச்சு ..அடுத்த சனிக்கிழமை தாக்குதலுக்கான நாளும் குறித்து விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விபரம் மனைவிக்கும் தெரியாமல் இரகசியம் காக்கப் பட்டது ..
......................................................
சனிக்கிழமை  காலை  அந்த திக் ..திக் ..நிமிடங்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் மனைவியிடம்  கரப்பான்பூச்சிகள் மீதான எனது தாக்குதல் திட்டத்தை விளக்கிவிட்டு  கட்டிலுக்கடியில் ஒழித்து வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து டக்கென்று மேசையில் வைத்தேன் .ஆச்சரியத்தாலும் பயத்தாலும் அகல விரித்த கண்களால் என்னைப் பார்த்து .. "ஒண்டும் பிரச்சனை வராதா"..

இல்லையடி  மமாடு இதை அடிச்சுத்தான் பூச்சியை ஒழிச்சவன் ..

ஓ எல்லாம் அந்த  கறுப்பன் கொடுத்த ஐடியாவா ?..

கருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டி ..

காய்ஞ்ச வேப்பமிலையை மட்டும் களவெடுப்பானாக்கும் ..

சரி" கெதியா வெளிக்கிடு இண்டைக்கு இரவு ஹொட்டேல்லை தான் தங்கவேணும்  அதுக்கான உடுப்பு எல்லாம் ரெடி பண்ணு ..என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து மிகுதி எல்லாவற்றையும்பிரிஜ்ச்சில்   அடைந்து விட்டு சிறிய பையில் துணியோடு தயாராய் நின்றிருந்தவளை  "நீ ஓடிப்போய் காரிலை இரு.. நான் குண்டை எறிஞ்சிட்டு ஓடி வாறன் "..என்றதும் "சரி கவனமா வாங்கோ" ...என்று விட்டு போய் விட்டாள் .
வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் சரியாக சாதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வெளியே வந்து போத்தல் வடிவில் இருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து " அப்பனே முருகா ,பிள்ளையாரே, அல்லாவே, அந்தோனியாரே ,பெரியாரே"  ..என்று எல்லா மத கடவுளையும் .மனதில் வேண்டியபடி அதன் பாதுகாப்பு கிளிப்பை இழுத்து வீட்டுக்குள் எறிந்துவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி பூட்டிவிட்டு படிகளில் வேகமா இறங்கிக்கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் தனியாக வசிக்கும் பிரெஞ்சுக் கிழவி மேலே ஏறிக்கொண்டிருந்தார் .
போகிற வேகத்தில் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னேன் .பதில் வணக்கம் சொல்லாமல் என்னை முறைத்து விட்டு போய்க்கொண்டிருந்தார் ."ஆரம்பத்தில நல்லா சிரித்து கதைச்ச கிழவி இப்பவெல்லாம் முறைக்குது.என்னவாயிருக்கும்".. என்று நினைத்தபடி போய் விட்டேன் .
அன்றைய பகல் பொழுதும் தெருத் தெருவாக அலைந்தே கழிந்து போய் மாலையானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலிவான ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம் .நம்ம ஹோட்டலுக்கும் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியில் எழுந்து நின்று விழுந்து விழுந்து ஒருத்தன் வரவேற்றான் .
அவனிடம் .."றூம்  இருக்கா" ?...

இருக்கே ..லக்ஸ்சறி  ? ஸ்டாண்டர்ட் ..எது வேணும் ..

ஸ்டாண்டர்ட்  போதும் ..

எத்தினி நாளைக்கு ?..

நாங்கள் இந்த ஊர் காரங்கள் தான்.  ஒரே இரவுக்கு மட்டும் போதும் ..

மனிசியை பார்த்து லேசாய் கொடுப்புக்குள் சிரித்தபடி  "ஓ ...ஒரே ஒரு இரவுக்கு மட்டுமா"..என்றான் .

"டேய் ..டேய் ..அது என்னோடை பெண்டாட்டி"" எண்டு சொல்லி அவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது . எதுக்கு வம்பு என்று உள்ளுக்குள்ளே உறுமிக்கொண்டிருந்த சிங்கத்தை சாந்தப்படுத்தி விட்டு.பெயர் விபரத்தை கொடுத்து அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதும் ."என்ஜோய்"  என்று கண்ணடித்த படியே அறை சாவியை எடுத்து நீட்டினான் .சிங்கம் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துக் கொள்ள.. அடக்குவதை தவிர வேறு வழியில்லை .

அவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அறையை தேடிப்பிடித்து நுழைத்ததும் கட்டிலில் விழுந்தபடி..  "அவனின்டை மூஞ்சியும், முகரகட்டையும்.பரதேசி" .

யாரை திட்டுறீங்க? ..

ரிசெப்சனில் நின்டவனை ...அவனின்டை பார்வை ,பேச்சு சரியில்லை ..

அப்பிடி எதுவும் வித்தியாசமா எனக்கு தெரியலையே ..

"இல்லடி  உனக்கு புரியாது"..என்று அவளுக்கு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் "ஓ..கோ  அப்பிடியான பெண்ணுகளை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறிங்களா"? ..என்று அடுத்த கேள்வி வந்து விழும் .சனியனை பிடித்து எதுக்கு பனியனுக்குள்ள விடவேணும்.என்று நினைத்தபடி பேசாமல் படுத்து விட்டேன் .

மறுநாள் மதியமளவில் வீட்டுக்கு போய் பார்த்தேன் சில பூச்சிகள் மயங்கி கிடந்தன .கண் எரிச்சலாக இருக்க யன்னல் கதவு எல்லாம் திறந்து விட்ட பின்னர் வழக்கம்போல் வீட்டை கூட்டி பூச்சிகளை கொளுத்தி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்து விட்ட பொழுது சமையலறையில் இருந்து   "ஆ ..ஐயோ "..ஓடிப்போய் பார்த்தேன் .கதிரைக்கு மேல் ஏறி நின்றபடி   "ஓவனுக்குபின்னலை ..பின்னலை" .. கத்தினாள் .

ஓவனை நகர்த்திப்பார்த்தேன் .சிறிய சந்தில் இருந்தபடி தினாவெட்டா என்னைப் பார்த்து மீசையை ஆட்டிக்கொண்டிருந்தது.கொலைவெறியோடு மீசையில் பிடித்து இழுக்க அதை அறுத்துவிட்டு ஒட்டிவிட்டது.அறுந்த பாதி மீசையோடு மனைவியை திரும்பிப்பார்த்தேன் ..

"நீங்களும் உங்கடை கண்ணீர்ப்புகை ஐடியாவும் .ஊகும் .. சமைக்கிற வேலையை பாருங்கோ".

சமைக்கிறதா ? பேசாமல் பீட்சா  ஒடர் பண்ணவா ?

என்னது பீட்சாவா ? அதோடை முதல் எழுத்தே சரியில்லை எனக்கு வேணாம்..

எழுத்தை எதுக்கடி பாக்கிறாய் பேசாமல் தின்ன வேண்டியதுதானே ..

அதை நீங்களே தின்னுங்க எனக்கு சமைச்சு வையுங்க .நான் குளிச்சிட்டு வாறன்" ..என்றபடி குளியலறைக்கு போய் விட்டாள் .

ச்சே ..கறுப்பன் தந்த ஐடியாவும் பெயிலியர் .என்கிற கோபத்தில் பிரீசரில் இருந்த கோழியை எடுத்து மைக்குரோனில் வைத்து சூடாக்கி இளகவைத்து கத்தியால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டிய போதே அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது . "யாராயிருக்கும்"?..என்று நினைத்தபடியே கதவின் துவாரத்தால் பார்த்தேன்.வெளியே ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள் .

"ஐயை.. யோ .. கரப்பான்பூச்சிக்கு கண்ணீர்ப்புகை அடிச்சது தெரிய வந்திருக்குமோ"..என்று லேசாய் உதறல் எடுக்கவே பயத்தை காட்டாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு கதவைத் திறந்ததும்.சட்டென்று இருவரும் துப்பாக்கியை உருவியபடி  "கத்தியை கீழே போடு கையை உயர்த்து ".. என்று  கோரஸில் கத்தினார்கள் ..

கத்தியை கீழே போட்டு விட்டு கையை உயர்த்தவும் போலீஸ்காரன் என்னை சுவரோடு தள்ளி துப்பாக்கியை தலையில் அழுத்தியபடி என்  கால்களை அகல வைக்கச்சொல்லி உத்தரவிட்டவன். உடலை  மேலிருந்து கீழாக ஒரு தடவை தடவி முடித்து விட்டு   போலீஸ்காரியிடம்  "வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை".. என்றான்  .நல்ல வேளை நான் உள்ளே ஜட்டி போட்டிருந்ததால் தப்பித்தேன் .

அதே நேரம் சத்தம் கேட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவி  பதறிப்போய்  "என்ன பிரச்னை"  என்றவும் ..அவளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த போலீஸ்காரி "மேடம்.. பயப்பட வேண்டாம் உங்களை கொலை முயற்சியில் காப்பாற்றி விட்டோம் .இனி உங்கள் கணவரால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது "..என்றவளின் கையை உதறியவள்  "கொலை முயற்சியா யார் சொன்னது"? ..

"உங்களை கணவர் போட்டு அடிப்பதாகவும் அதனால் உங்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.இப்பொழுதும் உங்களை கொலை செய்ய முயற்சித்ததால் தானே குளியலறையில் போய் ஒழிந்துகொண்டீர்கள் .நல்ல வேளையாக நாங்கள் வந்து காப்பாற்றி விட்டோம்" ..

"கடவுளே நான் அலறுவது உண்மைதான் ..கணவன் அடிப்பதால் அல்ல ..கரப்பான்பூச்சியால் .இப்பவும் அவர் என்னை கொல்ல வரவில்லை ..ஏற்கனவே கொலை செய்து  ஆறு மாதமாய்  பிரிஜ்ச்சில் அடக்கம் செய்யப் பட்டிருந்த கோழியைத்தான் வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரமா பார்த்து நீங்கள் வந்து பெல்லை அடிச்சிட்டீன்கள்" ..என்று சொல்லி முடித்த பின்னர்தான் என் தலையில் அழுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்தான் .
ஆனாலும் போலீஸ்காரி விடுவதாய் இல்லை..  "மேடம் கணவருக்கு பயந்து பொய் சொல்ல வேண்டாம் உன்மையிலேய அவர் உங்களை அடித்தால் உடனேயே எங்களுக்கு போன் பண்ணுங்கள் .டைவோஸ் எடுக்கிறதுக்கான சட்ட ஆலோசனை,லாயர் ,எல்லாம் இலவசமாகவே கொடுப்போம்".. என்று சொல்லியவள் என்னை லேசாய் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் .

"பார்ரா ..ஒரு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு என்னமா பாடு படுறாங்கள் ..போனடித்து போட்டுக் குடுத்து யாரா இருக்கும்"?.. என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தபோது ..எதிர் வீடுக் கிழவி ஆமை தலையை இழுத்தது போல கதவுக்கு உள்ளே தலையை இழுத்தாள்.என்னைப் பார்த்து முறைததுக்கான அர்த்தம் அப்போ தான் எனக்கு புரிந்தது ..
..........................................................................................
இந்த சனியனை ஒழிக்க என்னதான் வழி என்று கூகிளில்  "கரப்பான்பூச்சியை ஒழிப்பது எப்படி".. என்று அடித்துப் பார்த்தேன் .ஒரு கட்டுரை வந்து விழுந்தது ..கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த உயிரினம்  என்று தொடங்கியது ..
"அடாடா  நம்மள மாதிரியே கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியிருக்கு நமக்கு நெருங்கிய உறவு.அதுதான் சுத்திச்  சுத்தி வருது"..என்று நினைத்தபடி அரை மணித்தியால கட்டுரையை பொறுமையாய் படித்தேன்.. இந்த பூமிப் பந்து சுற்றிக்கொண்டிருக்கும் வரை அதனை அழிக்க முடியாது என்று  முடிந்திருந்தது ..""அடங்"".....

பூமி சுத்திறதை நிப்பாட்ட முடியாது.எனவே பூச்சி இல்லாத புது வீடு பார்கிறதாய் முடிவெடுத்து வீட்டு ஏஜென்சியில் போய் பதிவு செய்ததும்..   "உங்களுக்கு என்னென்ன வசதிகளோடை வேணும்"  என்றான் ..

"தண்ணி, கரண்டு, இல்லாவிட்டலும் பரவாயில்லை கரப்பான்பூச்சி இல்லாமல் இருக்க வேணும்". என்ற என்னை ஏற இறங்க பார்த்தவன் ..  புது பில்டிங்,புது பெயிண்ட் ,நாலாவது மாடி ஒரு வீடு இருக்கு பார்க்கிறின்களா?.என்றதும் தலையாட்டி விட்டு அவன் பின்னலையே போய் பார்த்தேன் .வீடு பிடித்திருந்தது.பூச்சி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை ..

"என்ன வீடு பிடிச்சிருக்கா".  என்றவனிடம் ..

பிடிச்சிருக்கு  ஆனால் இரவிலும் ஒருக்கா பாக்க முடியுமா ?

இரவிலையா  எதுக்கு ?..

"ஒரு வேளை பகலிலை பூச்சி எங்கையாவது ஒழிச்சிருக்கும் .இரவிலை வெளியை வரும்.அதாலை இரவும் ஒருக்கா பார்த்திட்டேன் எண்டால் மனதுக்கு திருப்தியா இருக்கும். நாளைக்கே அட்வான்ஸ்  குடுத்திடுவேன் " ....என்று இழுத்தேன்.

"உனக்காக நான் நைட் டியூட்டி எல்லாம் பாக்க முடியாது.இந்தா சாவி .விடிய விடிய இங்கயே இருந்து பாத்திட்டு காத்தாலை சாவியை கொண்டுவந்து கொடுத்திட்டு போ" ..என்று தந்துவிட்டு போய்விட்டான் .

அன்றிரவு நீளக்கருப்பு கோட்டு,தொப்பி,கறுப்புக்கண்ணாடி,கையில் டார்ச் லைட்  என்று பழைய படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் போலவே வெளிக்கிட்டு கொண்டிருக்கும்போது .."என்னங்க இது கோலம் .இரவிலை கறுப்புக் கண்ணாடி வேறை"..

அப்போ தாண்டி கரப்பான்பூச்சிக்கு என்னை அடையாளம் தெரியாது ..

நானும் கூடவே வரவா ?..

வேண்டாம். நீ சத்தம்போட்டு ஊரையே கூட்டிடுவாய்.பூச்சி ஓட்டிடும் ..என்று விட்டு கிளம்பி விட்டிருந்தேன் .அப்பார்ட்மெண்ட் கதவை மெதுவாக திறந்து பூனையைப்போல அடிமேல் அடிவைத்து உள்ளே போய் டார்ச் லைட்டை திடீர் திடீரென எல்லாப் பக்கமும் அடித்துப் பார்த்தேன் . ""அப்படா எந்தப் பக்கமும் பூச்சி இல்லை"" .

மறு நாளே அட்வான்ஸ் கொடுத்து .வீட்டு ஏஜென்சிக் காரன் காட்டிய இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டு திறப்பும் வாங்கியாச்சு.அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக சாமான்கள் எல்லாம் பெட்டிகளில் பொதி செய்யத் தொடக்கி விட்டிருந்தோம்.புது வீட்டுக்கு லிப்ட் வசதி இருந்தது ஆனால் வீடு மாறுபவர்கள் பொருட்களை லிப்டில் ஏற்றக் கூடாது  என்று எழுதி ஒட்டியிருந்தார்கள் பாவிகள் .கண்ணீர்ப்புகை புகழ் மமாடுவும் உதவிக்கு வந்திருந்தான்.வார இறுதி இரண்டு நாளும் பொருட்களை புது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.நாலாம் மாடிக்கு பொருட்களோடு ஏறி இறங்கி நாக்கு தள்ளிவிட்டது.

மறுநாள் காலை அலாரம் சிணுங்கியது.வேலைக்கு கிளம்ப வேண்டும். உடம்பு அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தது. "என்னங்க நீங்கள் பாத்ரூம் போறிங்களா இல்லை நான் போகட்டா "?...

"நீயே .. போ..நான் இன்னும் ஒரு பத்து நிமிசம் படுக்கிறேன்"..  என்று விட்டு போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன் .

இன்னமும் ஒழுங்கு படுத்தப் படாமல் வீடெங்கும் பரவிக் கிடந்த பொருட்களை தாண்டியபடி குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திய சத்தம் கேட்டது .ஒரு நிமிடம் சென்றிருக்கும் .......

என்னங்க ..ஐயோ ..ஆ ஆ ஆ.......................................................
க .பூ ..க ..போ ..கரப்பான்பூச்சியும் கடந்து போகும்

உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .

1:57 PM, Posted by sathiri, No Comment


உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .
புதிய தலைமுறை  வார இதழுக்காக ..
சாத்திரி பிரான்ஸ் .



அக்டோபர் மாதம் 3ம் திகதி அமெரிக்காவின் முன்னணி தொலைக்கட்சி தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து  மில்லியன்  யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த  நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.இந்திய மதிப்பிற்கு  74 கோடி ரூபாய்கள் .உலகக் கொள்ளை வரலாற்றிலேயே ஒரு தனி நபரிடம் இவ்வளவு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் இதுதான் . இது வரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.இவ்வளவு கச்சிதமான கொள்ளையையை நிச்சயம் ஊதாப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிறனர் பிரெஞ்சு காவல் துறையினர் .

 யாரிந்த  ஊதாப்புலிகள்.   Pink Panther என்றதுமே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது அமெரிக்காவை சேர்ந்த Friz Freleng  என்பவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப் பட்ட கதா பாத்திரமும் அவர்களுக்கு   பிடித்தமான காட்டூன் படங்களும்   தான். ஆனால் நான் இங்கு  சொல்ல வருவது உலகின் மிகப் பயங்கர கொள்ளையர்களான ஊதாப் புலிகளைப் பற்றியது.

சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் அதன் ஆளுகையின் கீழிருந்த மேலும் பல நாடுகளும் பிரிந்து தனித் தனி சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.அப்படி உருவான யுகோஸ்லாவியா நாட்டின் ஆளுகைக்குள் இருந்த நாடுகள் மீண்டும் உடைந்து பல நாடுகள் உருவானதில் செர்பியா தனி நாடாக இயங்குகின்றது.சோவியத் யூனியனின் உடைவின் போது செர்பிய இராணுவத்தினரே ஊதாப் புலிகள் என்கிற கொள்ளை  அமைப்பை 1996 ம் ஆண்டு உருவாக்கினார்கள். இவர்களின் தொகை சுமார் அறுநூறில் இருந்து ஆயிரம் பேர் வரை இருப்பார்கள் என்கிறனர் சர்வதேசப் புலனாய்வுப் போலீசார்.

உலகம் முவதும் சுமார் 110 க்கும் அதிகமான கொள்ளைகளை நாடாத்தி முடித்துள்ளனர்.இதுவரை காலமும் உலகை உலுக்கிய இத்தாலியில் தோன்றிய மாபியா கொள்ளைக் கும்பலை பின்னுக்குத்தள்ளி இன்று சர்வதேச பொலிசாரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் முன்னணி கொள்ளையர்களாக மாறிவிட்டிருகிரர்கள் .
இவர்களின் ஸ்பெசாலிட்டி  விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை குறிவைத்து கொள்ளையடிப்பதுதான்.

அது நகைக்கடையாகட்டும்,வங்கியாகட்டும்,அல்லது தனி நபர்களாக இருக்கட்டும் இவர்களது குறி விலையுயர்ந்த வைரங்கள் பதித்த நகைகளே.அதே நேரம் கொள்ளைகளின் போது  யாருக்கும் பயங்கர காயங்கள் ஏற்படுத்துவதோ, சுட்டுக்கொலை செய்வதோ கிடையாது .அது அவர்களது தொழில் தர்மம் .பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் 250 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
பாதுகாப்பும் தொழில் நுட்ப வசதிகளும் வளர்ந்து விட்ட மேற்கு நாடுகளில் பொலிசாருக்கு சவால் விட்டபடி எப்படி இவர்களால் அதுவும் பட்டப் பகலிலேயே கொள்ளைகளை நடத்தமுடிகிறது என்றால் அவர்களின் துல்லியமான இலக்குத் தெரிவும் .கண்ணிமைக்கும் வேகமுமே காரணம் .ஒரு வேளை இலக்குப் பிழைத்து விட்டல் மேலதிகமாக எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

இவர்களின் கொள்ளையின் வேகத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம்.2009 ம் ஆண்டு 13ந் திகதி ஜூலை மாதம் பிரான்சின்  கேன்ஸ் நகரில் பிரபலமான  Cartier நகைக் கடைதான் இவர்கள் இலக்கு .கடைக்கு நேரே எதிரில் வீதியை கடந்தால் வெறும் பத்து மீற்றர் தூரத்தில் தான் காவல் நிலையம்.மதியமளவில் வேகமாக வந்த கார் ஓன்று நகைக்கடை கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து கொள்ள அதிலிருந்து இறங்கிய இருவர் வேகமாக நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு தப்பிவிடுகிறார்கள்.கடைக்குள் கார் பாய்ந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வந்து அங்கு என்ன நடக்கின்றது என்று அங்கிருந்தவர்களும் பொலிசாரும் உசாரடைவதற்க்குள் கொள்ளையடித்தவர்கள் வேலையை முடித்துக்கொண்டு பறந்து விட்டார்கள்.இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 41 செக்கன்கள் தான்.கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி 15 மில்லியன் யூரோக்கள் .

ஆனாலும் இதுவரை உலகம் முழுதும் ஊதாப்புலிகள் ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.இந்த அமைப்பின் முக்கியமான மூளை எனப்படும் இருவரை அவர்கள் மாறு வேடத்தில் இருந்தபோது 2007 ம் ஆண்டு மொனாகோ போலீசார் சர்வதேச பொலிசாரின் உதவியுடன்  ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்தனர்.மாறு வேடமென்றால் நம்பியார் போல கன்னத்திலை மச்சம் வைத்த மாறுவேடமல்ல.நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள் பிரேசிலில் சென்று  பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் பழைய அடையாளங்கள் எதுவுமே தெரியாத மாதிரி முகத்தையும் உடலையும் மாற்றிக் கொண்டு மொனாக்கோ வங்கியில் பல மில்லியன் பணத்தை வைப்பிலிட வந்திருந்தபோதே கைது செய்யப் பட்டனர்.மொனாக்கோ வங்கியும் சுவிஸ் வங்கியைபோலவே கறுப்புப்பணத்தை வைப்பிலிடலாம்.எந்தக் கேள்வியும் கிடையாது.எனவே இந்திய அரசியல் வாதிகள் கவனத்திலெடுக்கவும்.

இவர்களின் கைதின் பின்னர் பிரான்சில்  ஊதாப் புலிகளின் நடவடிக்கைகள் குறைந்திருக்கிறது என்று போலீசார் நிமதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த வேளை  கடந்த வருடம் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவிற்கு அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுவிஸ்லாந்து நாட்டு நகைக்கடை ஓன்று காட்சிப் படுத்த கொண்டு வந்த நகைகளில் 103 மில்லியன் யூரோ பெறுமதி வாய்ந்த வைரம் பதித்த நகையை பகல் 11.30 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொள்ளையடிக்கப்பட்டது. C.C. TV கமெராவில் ஒருவர் கண்ணாடியிலான பாதுகாப்பு பெட்டியை திறந்து வைரநகையை எடுப்பது பதிவாகியுள்ளது.ஆனால் நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை.
கொள்ளையடித்தவர் யார் எங்கே போனார் என்கிற எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் தாடையை சொறிந்துகொண்டிருக்கும் போதே பாரிசில் வைத்து kim kardashian னிடம் அடுத்த கொள்ளை நடந்துள்ளது.

தற்சமயம் பிரான்சில் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் பொலிசாரும், இராணுவமும் பாதுகாப்பு கடமையில் இருக்கும்போது.kim kardashian தங்கியிருந்த விடுதிக்கு காலை  சைக்கிள்களில்  வந்த ஐவரில் ஒருவர் வாசலில் காவல் நிற்க .இருவர் தங்களை சிவில் போலீசார் என அறிமுகப்படுத்தி ரிசெப்சனில் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றைய இருவர் முதலாம் மாடியிலிருந்த kim kardashian தங்கியிருந்த அறைக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.அதேநேரம் kim குளியலறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கொள்ளையடித்தவர்கள் சாவகாசமாக சைக்கிளிலேயே தப்பிச்சென்றுள்ளார்கள்.குளியலறையிலிருந்து வெளியே வந்த kim நகைகள் அடங்கிய தனது பையை காணாது ஹோட்டேல் பணியாளர்களை அழைத்த பின்னர்தான் விபரம் தெரியவந்தது.கொள்ளையர்கள் அனைவரும்  40 திலிருந்து  50 வயதுக்குள்ளனவர்கள் என்று விடுதி ரிசெப்சனிஸ்ட்  கூறியுள்ளார். அவர்கள் தப்பிச்செல்லும்போது  வைரம் பதித்த சிலுவையோடு கூடிய செயின் ஒன்றை வழியில் தவறவிட்டு சென்றுள்ளார்கள்.அதனை போலீசார்  தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அதில் கொள்ளையர்களின் கை ரேகை அடையாளம் பதிந்திருக்குமா ? இல்லையா ? என்பதற்குமபால் ..கொள்ளை நடந்தபோது kim kardashian னின் மெய் பாதுகாவலர் உட்பட விடுதி ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.சி சி டிவி கமராவில் அவர்கள் பதியப்படாமல் போனது எப்படி .

kim குளியலறையில் இருந்தபோது துல்லியமாக கொள்ளையர்கள் அறைக்குள் புகுந்தது எப்படி.அந்த தகவலை யார் கொடுத்தது.அதி உயர் பாதுகாப்பு கொண்ட விடுதி அறையின் கதவை எப்படி அவர்கள் திறந்தார்கள்?என கொள்ளையடிக்கப் பட்ட பத்து மில்லியன் யுரோவுக்கும் அதிகமான கேள்விகள் மிஞ்சிக் கிடக்கின்றது..விடை கிடைக்குமா தெரியாது ..கொள்ளையடித்தவர்கள் ஊதாப் புலிகள் என்பதைத் தவிர.. இதுவரை வேறெந்த தகவல்களும் இல்லை ..கொள்ளையர்கள் பிடிபடும்வரை kim kardashian னைப் பார்த்து.. "ஊதாக் கலரு ரிப்பன்.. யார் கொள்ளைக்கு  அப்பன்" ..என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் ..




அஞ்சலி – சிறுகதை

3:46 PM, Posted by sathiri, No Comment

அஞ்சலி – சிறுகதை


வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டு.. பத்திரிகை போடுபவன்  எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன்.  நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை  சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “.  “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”.  .”காணவில்லை.  அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச் செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அனைத்துக் காவல் நிலையங்களும்   தீயணைப்பு நிலையங்களும்,  கடலோரக் காவல் நிலைகளும்  உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்  உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவியுங்கள்’.

என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம்.
உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே…… தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின்  இலக்கத்தைத் தேடினேன் .  ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால்  நோக்கியாவிலிருந்து  ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும் சிறியண்ணாவின்  கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன்.
பிட்சா போடுகிறவன்  ஒரு நாள் லீவு வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும்  வேலைக்கு வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும்  லீவு தரமுடியாது என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை.  அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும்    நான்தான் கவனிக்க வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி விட்டேன்.
*******************************

காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல் வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று  அவனை லேசாய் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது .

‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத் தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான்.  லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து  அதற்குப் பணமும்   கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர்  பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான  குய்னேசில் நடந்தது. வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில் நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில்   இரவு வீடு திரும்பியபோது  அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வைத்துவிட்டு   “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ் தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது.  காதல் மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில் தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான்.
*******************************

நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும் ஒருவர்.  சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு திருமணமாகியிருந்தது,  கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும் திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில்  கதைத்துப் பேசவும் அவரது கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார். கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு வாங்குவதுண்டு.  அவர்களுக்கு அஞ்சலி  பிறந்த பின்னர்  அவர் நகர மத்தியில் பெரிய கபே பார்  ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும் வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம் கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன் பின்னர்  கடைதான் அவர்களுக்கு வீடு .  அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள் செல்லப் பிள்ளையானாள்.

Angel bar நகர மத்தியில் அமைந்திருந்ததால்  அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை,   அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள்.    லீவு நாட்களில் சிறி  அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள்.    ஒரே செல்ல மகள் என்பதால் அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும் மாறிவிட்டிருந்தாள்.   நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம்  “டேய் மாமா  டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப் பிடுங்கிவிடுவாள்.  “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன்.  பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து விட்டிருந்தது.
“டேய்  புகையிது புகையிது”  என்று பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன்.  ஓம குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த பிட்சா.  எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து  “என்ன யோசனை”?  என்றான்.

நான்..    “இல்லை அஞ்சலி” என்று   சொல்லவும்

“ஓ …அஞ்சலினா ஜோலியா”  ஒழுங்கா வேலையைப் பார் என்று முறைத்து விட்டுப்போனான்.  எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான   மாவை உருட்ட ஆரம்பித்தேன்….
*******************************

மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது    அவனுக்கு   யாரையும் தெரியாது.  மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது.  கிராமசபை உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது.  வேலை வாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு   உணவு விடுதி ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது.
ஆனால் இரவு நேரத்தனிமையையும்   மகனின் நினைவுகளையும்  போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.  மனைவி லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து  குடித்து முடித்த பியர் கேனை ஆத்திரம்   தீர நசுக்கி எறிவான்.  எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும்  மறக்க நினைத்த அத்தனையும் மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத்  தலை சுற்றிச்  சுய நினைவிழந்துபோய் விடுவான்.

நினைவுகளை கொல்வதற்காக அடுத்த  தெரிவாக கஞ்சா  என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில் நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு  இப்போதெல்லாம் வேலை முடிந்ததும் இரவில்  இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான்.
அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து  இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து பொத்திப் பிடித்து  கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில் கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி ஆழமாக உள்ளே இழுத்தான்.   பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம் அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது  கொஞ்சம் சிறியதாக  உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு குனிந்து பார்த்தான்.  தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது .  அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை.    அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது.  “என்னைப் போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை அணைத்துத் தூக்கியவன்   உனக்கு என்ன பெயர் வைக்கலாம்  என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின் முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு   எல்லாமே லொக்காதான் .
*******************************

அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம்  கிடைத்துமிருந்தது.  அவரது கடையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது.  என்னைப் போலவே அவர்களும் புதினம் அறிய வந்திருக்கலாம்.  யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். சிறிய   வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று  “ஏதாவது அருந்துகிறீர்களா” என்றவளிடம்  ஒரு கோப்பிக்குச்  சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன்.  சிறி அண்ணா பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை.   என்னைக் கண்டதும் வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார்.   அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை நோக்கியே திரும்பின.

“அண்ணை என்ன இது குழந்தை மாதிரி”    என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் .   என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர்.

“தம்பி நீ  மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை  அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும்  நம்பிக்கையாலையும்   உன்னைக்   கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “.

”சரியண்ணை  நடந்தது நடந்து போச்சு,  விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்”

”அவங்களும்  அந்தப் பெடியன் ரெமியையும் அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” .

”கடைசிவரை அந்த ரெமியோடை தான்  சினேகிதமா …….?”

”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப் பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும் களவாய்ப் பத்துவாள்.  எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.”

”அப்போ என்னதான் நடந்தது .?”

”முந்தா நாள்  காலமை ஒரு சினேகிதியைப் பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை.   இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”.
“பேப்பரிலை இளம் தாய் எண்டு போட்டிருக்கே”  என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப் போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே தொட்டிலில்  சாயலில் அஞ்சலியைப் போலவே  ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது .
இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை   ஏழு மாசம் .

பணிப்பெண் கோப்பியை நீட்டினாள்,  அதனை அவசரமாக விழுங்கியபடி… 

 “எங்கை சுமதியக்கா”?

”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.”

“சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது”  என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து
“அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப் பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி”  என்றவரிடம் விடை பெறும்போது  வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும் பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி.

“தம்பி   சில நேரங்களிலை  உங்களிட்டை    5 … 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன்,  என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின.

“போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை”  என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து  முதல் நாள் பேப்பரில் அஞ்சலியின்  “காணவில்லை” என்கிற அறிவித்தலை வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய பேப்பரை எடுத்துப் புரட்டினேன்.  அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா  போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன்.  போன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சரி இன்றைக்கும்   நான்தான் பிட்சா போடவேண்டும்.
*******************************

மதியத்துக்கு  தேவையான உணவு, தண்ணீர்,  நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை பார்ப்பதுமாக இருந்தது.  அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான்.
வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ் துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது,  வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல்  மூத்திரம் பெய்து விட்டு வந்தது.

யாருமற்ற காடு, காற்று மரங்களில் மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை. பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான்.  மெதுவாகவே நடந்து சென்ற லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து   அவனது காலடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது.  அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு மீண்டும் பந்தை எறிந்தான்.  இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது.

“களைத்துப்போய் விட்டாயா…. சரி”  என்றபடி அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து  வைன் போத்தலை எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை எடுத்து விட்டுப் பார்த்தான்.  பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக் கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது .
*******************************

நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து  வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள்.  சில காலங்களின் பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள்  “மாமா இவன்தான் ரெமி  என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள்.
வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய போது  அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி   பதில் வணக்கம் சொன்ன விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின்  தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை.  வேண்டா வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன்.

சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன்.  அது மட்டுமல்ல இரயில் நிலையத்தின் பின்னால் உள்ள   கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு அமர்ந்திருப்பாள்.  “இந்தக் காலத்து பிள்ளைகள்”  என்கிற ஒரு பெரு மூச்சோடு   கார் ஒலிப்பானை ஒலிக்காமலும்   காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு .
அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு அவதானித்துக்கொண்டிருந்தேன்.   திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து தள்ளிவிட  நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி நின்றிருந்தான்.  கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச் செல்ல  அனைவரும் ஓடி விட்டார்கள்.

தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத் தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன்.    கண்கள் சிவந்து, வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும்   “ஒண்டுமில்லை” என்றபடி சீற்றில் சாய்ந்து கொண்டாள்.   ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

“எங்கை மாமா போறாய்? ”

”உங்கடை கடைக்கு”

”எதுக்கு? ”

”உன்ரை  அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்”

”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ”

“பேசாமல்   வா”

”காசு தர முடியுமா முடியாதா ?”

“முடியாது ”  என்றதும் அவள்  ஆசனப்பட்டியை எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே,  நான்  சட்டென்று பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை  ஒலிக்கத் தொடங்கின. ஒருவன்  “ஏய் …பைத்தியக்காரா”  என்று சத்தமாகவே கத்தினான்.
எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள்.   “எடியே நில்லடி ” என்று நான்  கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப் போய்விட்டாள்.   எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு  இரண்டு அடி  போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும்.    பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின்  சத்தம் எதுவும் செய்ய முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய் அவரிடம் விபரத்தை சொன்னதும்  அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார்.  கோபத்தோடு எனக்கு அவமானமும் சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன்.   அதுதான் நான் அவரோடும் அஞ்சலியோடும் பேசிய   இறுதி நாட்கள்.
*******************************

அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கொள்ள, அதிலிருந்து இறங்கியவன்  காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான தடித்த  பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான்.     காரிலிருந்து ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா”  என்று அழைத்தபடியே  பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த அஞ்சலியிடம் நீட்டினான்.

அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம் அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல்  அமர்ந்துகொள்ள,  அவளருகே அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான்.   இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி யிருந்தனர்.    போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன் இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது.

சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக்   கொக்கெயின் பொட்டலத்தையும்  எடுத்தவன் சினிமா  டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து  கொட்டி சிகரெட் பெட்டியில் மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை  எடுத்து  “இந்தா அஞ்சலி” என்று நீட்டினான்.

”இல்லையடா  எனக்கு வேண்டாம்”

”ஏன் ?”

”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்”
”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை”

”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்”

“ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய்  இதெல்லாம் ஒரு காரணமா?”

”வேண்டாம்  விட்டிடேன்”

“சரி எனக்கும் வேண்டாம்”  என்றபடி பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப் போத்தலை எடுத்துச் சட்டென்று   தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி  உடைந்த போத்தலால் அதைக் கிழித்து   இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய்  எதுக்கடா இப்பிடி” என்றாள்.

“அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ? எனக்கு நீ வேணும்”  என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத் துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த  தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு நிமிந்தவளின் கண்கள் சிவந்து,  கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன.

அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன் சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண் மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்”   என்று இழுத்து விட்டிருந்தான்.  அவள் கைகளை ஓங்கி  நிலத்தில் அடித்த சத்தத்தில்  மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று  அலறிப் பறந்து போனது.  இறுதியாய் உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன்  முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது.
எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன் கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை   ஒட்டிக்கொண்டு இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல் பக்குவமாக  அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன் கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் .
*******************************

வைனைக் குடித்துமுடித்துவிட்டு  சிறிய சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி குட்டித்தூக்கம்  போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக் கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான்.  மாலை மூன்று மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம் நிற்கவேண்டும்.  எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு முன்னர் லொக்கவோடு  செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள் வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது   அதே வேகத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தது.

“இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான் அவசரமோ ”   என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான்.  லொக்கா அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது.

கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள் நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து மருந்தை இழுத்தெடுத்தவர்  இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில் அழுத்தியபடி மருந்தை செலுத்தினார்.  மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல் வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல் ஒற்றையும் வாங்கிச் சென்றவன்  லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில் தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன் இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு   இரண்டாவது   கிளாஸில்  விஸ்கியை நிரப்பத் தொடங்கியிருந்தான் .
*******************************

யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள்  வைத்திருக்கும் சிறிய கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான்.  இரத்தம் உறைந்துபோயிருந்த  ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த தால்  சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது.
ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து  கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு  மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன்    “என்னடி முறைக்கிறாய் ”  என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித் தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை   அரிந்து முடித்து இயந்திர வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான்.  ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுவிட்டு வெட்டும்போது    சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில் போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு  தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப்  பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி விழுந்த  நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் .
*******************************

அன்றும் வழமைபோல பத்திரிகையைத் தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப் போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான்.   “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி  கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”.. என்றதுக்கு  கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன்  “லொக்காவுக்கு வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது.  அதுக்கு வயசாகி விட்டதால்  கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர் சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்து கண்கள் கலங்கின.
“சரி சரி கவலைப் படாதே”  என்று அவனது தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும்   “ஏய், இந்தப் பெண், அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான்.

“ச்சே  என்ன இவன்…. மணிரத்தினம் படம் எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி “தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில் இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின் பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது.

”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர் இந்தக்  காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாகப் போய் விட்டான்.

ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.  மறுநாள் பத்திரிகையில்  “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன்  தொடர்பாக ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன்  விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான்.  அவன் கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப் பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.   உடலின் சில பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர்  கண்டெடுத்தனர்.  அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான்.

அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது”

’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப் பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின் கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான்.  எனக்கு வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன்.

அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின் செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்”  என்றிருந்தது.  நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய மலர்க்கொத்து  ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர்.
பல மெழுகுவர்த்திகள் இன்னமும் எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது  “ச்சே  சிறியண்ணர் இவளுக்கு அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன்  “காதலே ஏன்  இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய கடதாசியில்  ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது.  அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் .

ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய எனக்கு  “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது.  அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி வீதிக்கு இறக்கியபோது தான்  நான் போட்ட சில்லறைகளை ஒருவன் பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.  கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு  “ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான்.  அதற்கிடையில் பின்னால் ஒரு வண்டிக்காரன் ஒலிப்பானை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன்.  ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம்.  நெற்றியில் விரல்களை அழுத்தி யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.