Navigation


RSS : Articles / Comments


கைரி

3:26 PM, Posted by sathiri, No Comment

punnaalai 
கைரி
————sat-01

பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் .  போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற  மனைவியின் சத்தத்தையடுத்து  பாதித் தூக்கத்தோடு வந்து  அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி  இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது  தேனீர் ஆவியில் தனது காவிப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள் கைரி.அப்படியே அந்த ஆவியை சாம்  உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
                                                                  00000000000000000000000000
1985 ம் ஆண்டின் இறுதிப் பகுதி பலாலி இராணுவ முகாமினை  சுற்றி கண்ணி வெடிகளை  வைத்து  பலாலியில் இருக்கும் இராணுவத்தினரை முகாமிற்குள் முடக்குவதற்காக புலிகள் அமைப்பினரின் கண்ணி வெடிப் பிரிவு அடங்கிய  பதினாறு பேர் கொண்ட குழுவொன்று பலாலி வசாவிளான் பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. அன்றைய காலப் பகுதியில் சாதாரணமாக இராணுவம் ரோந்து சென்று கொண்டிருந்த காலகட்டங்கள். அவர்கள் ரோந்து வரும்போது ஏதாவது ஒரு இயக்கம் கைக்குண்டை எறிந்து விட்டு ஓடிவிடுவார்கள்  குண்டு  வெடித்த சத்தம் கேட்டதும் இராணுவமும் வானத்தை நோக்கியோ அல்லது கண்டபடி சுட்டுவிட்டு முகாமிற்குள் போய் விடுவார்கள்.அப்படி அவர்கள் சுடும்போது யாராவது ஒரு பொது மகன் அதில் சிக்கி இறந்தும் போயிருப்பார். அன்றைய காலத்தில்  வசாவிளான் சந்தியில் புளொட் இயக்கம் ஒரு மண் காவலரண் அமைத்து காவல் கடைமையில் இருந்திருந்தார்கள்.பலாலிக்கு சென்ற புலிகள் அணிக்கு சாம் தான்  பொறுப்பாளன். அங்கு புளொட் இயக்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த அரியம் என்பவரோடு கதைத்து  பலாலியை சுற்றி உள்ள சிறிய பாதைகள் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வேலிகளை அண்மித்து கண்ணிகளை புதைக்கத் தொடங்கியிருந்தான்.
                                                                      
பலாலி முகாமை சுற்றி பெரும்பாலும் தோட்டக்காணிகளே இருந்தன  காலையில் தோட்டங்களிற்கு வேலைக்கு போகிறவர்களில் ஒருத்திதான்  கைரி. கறுத்த கொஞ்சம் குள்ளமான ஆனால் உழைப்பால் உறுதியடைந்த உடல்வாகு.வெற்றிலை போட்டு  காவியேறிய  பற்கள்.வாரியிழுக்கப்படாத பிசிறு பிடித்த தலைமுடியை அள்ளி கொண்டை முடிந்திருப்பாள்.மேற் சட்டை போட்டிருக்கமாட்டாள் பெரும்பாலும் அழுக்கான  ஒரே பச்சை நிறத்திலான சேலை அணிந்து அதை குறுக்கு கட்டாக கட்டியிருப்பாள்.பார்வைக்கு வயது ஒரு 55 ற்கும் 60 என்று மதிக்கத் தக்க ஒருத்தி.ஆனால் வேலைக்கு போகின்ற மற்றைய  தொழிலாளர்களை விட  அவரிடம் ஒரு வித்தியம் என்னவென்றால் எப்பொழுதும் கையில் ஒரு கேத்தலில் சுடச்சுட தேனீர் இருக்கும் அந்த கேத்தலின் வாயில் ஒரு மூக்குப்பேணி கவிழ்த்து கொழுவியிருக்கும்.சுருட்டை புகைத்தபடியே  போய்க்கொண்டிருப்பாள்.
                                                      ………………………………………………
இப்பேதெல்லாம் புளொட்டின் காவல் நிலைகள் புலிகளின் கைகளிற்கு மாறியிருந்தது.பலாலி முகாமில் இருந்த இராணுவம் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு முன்னேறி விட்டிருந்தார்கள்.அடுத்ததாக அவர்களது இலக்கு  புன்னாலை கட்டுவன் மத்திய மகாவித்தியாலயம் ஆகும்.அதனை  பிடித்து அங்கு முகாம் அமைப்பதற்காக  இராணுவம் முன்னேறி வருவதும் புலிகள் மறித்து தாக்குவதுமாக  இருந்து கொண்டிருந்த ஒரு நாளின் காலைப் பொழுதில் வழைமைபோல  தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு போய்க்கொண்டிருந்த நேரம் இராணுவம் தாக்குதலை தொடங்கியிருந்தது.புலிகளும் எதிர் தாக்குதலை நடத்தத்தொடங்க வானில் எழுந்த உலங்கு வானூர்தி தாக்குதலை  நடத்தத் தொடங்க பலர் மரங்களிற்கு கீழ் பதுங்கியும் சிலர் நிலத்தில் விழுந்தும் படுத்திருக்க  கைரி மட்டும் கையில் கேத்தலோடு  சேலைத் தலைப்பை எடுத்து தலைக்கு மேலே பிடித்தபடி சாதாரணமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.அதனை கவனித்த சாம்  ஏய் கிழவி சாகப்போறியா என்றபடி கைரியை இழுந்து மண் காப்பரணிற்குள் தள்ளிவிட்டு வானத்தை நோக்கி சுட்டவன் தயாராய் கட்டி வைக்கப் பட்டிருந்த அவுட் வாணங்களை மட மளமளவென கொழுத்திவிட்டான் அவை வானத்தில் போய் பெரிய சத்தத்தோடு வெடிக்கத் தொடங்க புலிகள் ஏதோ ஆயுதத்தால் தாக்குகிறார்கள் என நம்பிய உலங்கு வானுர்தி பலாலி முகாமிற்குள் போய் இறங்கிக் கொண்டது.
சிறிது நேரத்தில் சண்டை முடிந்ததும்  கைரி அங்கிருந்து போய் விட்டாள். மறுநாள் வழைமை போல வேலைக்கு போக வந்த கைரி காவலரணில் நின்றவனை பார்த்து   வாயில் இருந்து சுருட்டைஎடுத்தவள் தனது காவிப்பற்கள் தெரிய சிரித்தபடி  தம்பி தேத்தண்ணி வேணுமோ என கேத்திலை நீட்டினாள்.அவன் வேண்டாமென தலையசைக்க.ஏன் தம்பி அவங்களும் நல்லவங்கள் தானே  தோட்டத்திலை வேலை செய்யேக்குள்ளை  விசுக்கோத்து (பிஸ்கற்)எல்லாம் சாப்பிட தாறவங்கள்.எதுக்கு அவங்களோடை அடிபடுறியள் என்றவளை எரிச்சலுடன் பார்த்தவன்  அவளிற்கு  ஈழம். விடுதலை .போராட்டம் என்று வகுப்பெடுக்க விருப்பம் இல்லாமல். விசுக்கோத்து தந்தால் நல்லவங்களா??சரி சரி பேசாமல் போ..என்றதும் சுருட்டை புகைத்தபடி காவலரணைக்கடந்து போய்க்கொண்டிருந்தாள்.பின்னர் ஒவ்வொருநாளும் வழைமைபோல  வேலைக்கு போகும் போது காவலரணில் நிற்கும் அவனிடம் அவன் தேத்தண்ணி வேணுமா என கேட்பதும் அவன் வேண்டாமென தலையசைப்பதும் வழைமையானதொன்றாகி விட்டிருந்தது.
கைரியைப் பற்றி ஊருக்குள் விசாரித்தவரை அவர்கள் சொன்னது.அவள் ஆயக்கடைவை பிள்ளையார் கோயிலிற்கு யாரோ எழுதிவைத்துவிட்டுப்போனதொரு பனங்காணியில்  ஒரு கொட்டில் அதற்கு  பின்னால்அவளது கழிவறை(கக்கூஸ்)   கொஞ்சம் தூரமாக ஒரு கிடங்கை வெட்டி அதில் குறுக்கே ஒரு பனங்குற்றியை போட்டு அதனைச்சுற்றி   கிழுவந் தடிகளை நட்டு பனையோலையால்  அடைத்த வேலி . அந்தப் பனங்காணிக்கு பாதுகாப்பு வேலி எதுவும் கிடையாது இதுதான்  அவளது குடியிருப்பு.ஆனால் அவள் ஒரு உதவாதவள்.குடிகாரி.இளமையா இருந்த காலத்திலை ஊருக்குள்ளை கன ஆண்களை கையிற்குள்  வைச்சிருந்தவள்.தோட்ட வேலைக்கு போற இடத்திலை ஆமிக்காரரையும்  விட்டு வைக்கிறேல்லை.இவளது தொல்லை தாங்கமுடியாமல்தான் அவளின்ரை  புருசன் காரனும் தண்ணியடிச்சு செத்துப் போயிட்டான்.ஒரேயொரு மகன்  தேவன் அவனும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கத்துக்கு போயிட்டான்.இள வயதிலை ஆடின ஆட்டத்துக்கு இப்ப கொஞ்சம் மூளை பிசகாயிட்டுது.எல்லாம்  கடவுளின்ரை தண்டனை.இப்பதான் ஊருக்குள்ளை கன குடும்பம் நிம்மதியாய் இருக்கு.இப்படி ஊருக்குள் கிடைத்த தகவல்களை வைத்து அவனும் கைரியைப் பற்றி அதே விம்பத்தை கட்டி வைத்திருந்தான்.
                                                      ……………………………………………………………..
அன்று ஈ. பி. ஆர்.எல்.எவ் அமைப்பை தடை செய்து அவர்களது முகாம்கள் அனைத்தையும் தாக்கி தப்பியோடியவர்களை  புலிகள் தேடிக்கைது செய்து கொண்டிருந்த நாள்.  அவனும் தனது குழுவை வீதியெங்கும்  காவலில் நிறுத்திவிட்டு  ஆயற்கடைவை பிள்ளையார் கோயில் மடத்தில் இருந்தபடி  நடைபேசியில்(வோக்கி ரோக்கி)  கட்டளைகளை  கொடுத்தக்கொண்டிருந்த வேளை வழைமைபோல் கையில் கேத்தலுடன் லேசாய் தள்ளாடியபடியே  வந்த கைரி அவனின் பக்கத்தில் போய் குந்தியபடி தம்பி உம்மோடை கொஞ்சம் கதைக்கவேணும்.
s-01 நடைபேசியின் சத்தத்தை குறைத்தபடி .என்ன தண்ணியடிச்சிருக்கிறியா??
ஏன் தண்ணியடிச்சாக்களோடை கதைக்க மாட்டியளோ??
கசிப்பு எங்கை வாங்கினனி??
சொல்லமாட்டன்  சொன்னால்  அவனை நீங்கள் அடிப்பியள்.
ம்…சொல்லு என்ன வேணும்.
நீங்கள் பெரிய சாதிக்காரனோ??
கொஞ்சம் திடுக்கிட்டவன்..எதுக்கு அப்பிடி கேக்கிறாய்.
நான் எப்ப தேத்தண்ணி குடிக்கக் கேட்டாலும் வாங்கி குடிக்கிறேல்லை அதுதான் கேட்டனான்.
அப்பிடியெல்லாம் இல்லை நீ பாவம் கூலி வேலை செய்து உழைக்கிறனி அதே நேரம்….நீ  சுத்தமாயில்லை என்று சொல்ல வாயெடுத்தவன் அதனை  விழுங்கிவிட்டு..அது சரி நீ கதைக்கிறதை பாத்தால் தெளிவா இருக்கு உன்னை கொஞ்சம் மூளை சுகமில்லாதவள் எண்டு ஊருக்குள்ளை சொல்லினம் எதுக்கு இப்பிடி திரியிறாய்.
கேத்தலை திறந்து அதற்குள் இருந்த சிறிய போத்தலை எடுத்து கசிப்பை ஒரு முடறு குடித்தவள் அதை மூடி மீண்டும் கேத்தலிற்குள் வைத்து விட்டு வாயை துடைத்தவள்.தம்பி எனக்கு இப்ப எத்தினை வயசு சொல்லும் பாப்பம்.
ஒரு 55 இருக்குமோ??
விழுந்து விழுந்து சிரித்தாள்.
உண்மையிலேயே லூசா இருக்குமோ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே
இடுப்பில் செருகி வைத்திருந்த தீப் பெட்டியை எடுத்து அதற்குள் பாதி எரிந்திருந்த  சுருட்டை உருவி பத்தவைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை விட்டபடி எனக்கு இப்பதான் 43 ஆகிது இப்பவும் நான் குளிச்சு நல்ல துணி போட்டா வடிவாத்தான் இருப்பன்.ஆனா என்ரை ராசா என்னை விட்டு போகேக்கை மகனுக்கு நாலு வயது.அவர் போன கையோடை இந்த ஊரிலை சந்தி வீட்டு பெரியய்யாதொடக்கம் என்ரை சாதி சனத்திலை உள்ள ஆம்பிளையள் வரைக்கும் இரவிலை  என்ரை கொட்டிலுக்குள்ளை வராத ஆக்கள் கிடையாது .எனக்கெண்டு எந்த உதவியும் இல்லை இவங்களை எதிர்க்கிற திராணியும் இல்லை.இவங்களிட்டை இருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் நானே இப்பிடி மாறிட்டன்.இப்ப எனக்கு எந்த  ஆம்பிளையாலையும் பிரச்சனையள் இல்லை.
 சரி இப்ப உன்ரை பிரச்சனை என்ன அதை மட்டும் சொல்லு
காத்தாலை ஏரியா பொறுப்பாளர் ராசனின்ரை காம்புக்கும் போய் சொல்லிட்டுத்தான் போனனான்.என்ரை மகனை மட்டும் ஒண்டும் செய்து போடாதையுங்கோ ராசா.எனக்கு கொள்ளி போட அவன் மட்டும்தான் இருக்கிறான்.எங்கையாவது அம்பிட்டா என்னட்டை கொண்டு வந்து தாங்கோ நான் அவனை எங்கையாவது அனுப்பி விடுறன்.என்று கலங்கிய கண்களோடு கையெடுத்து கும்பிட்டாள்.
சரி சரி அழாதை  நான் வோக்கியிலை அறிவிக்கிறன்.எங்கையாவது அம்பிட்டா கட்டாயம் வீட்டை அனுப்பி விடுறன்.என்றபடி வோக்கியில் விபரத்தை அறிவித்தக் கொண்டிருக்கும் போதே கைரி எழுந்து தலைக்கு மேல் கை கூப்பி  பிள்ளையார் கோயிலை பார்த்து கும்பிட்டு விட்டு கேத்திலைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து போய் விட்டாள்.
                                                                 ……………………………………….
 புலிகளிற்கும்.ஈ.பி. ஆர்.எல்.எவ்விற்கும்  நடந்த மோதல்களை தங்களிற்கு சாதகமாகப் பயன்படுத்தி பலாலி ஆமியும் அச்சுவேலி சந்தியை  பிடிக்கும் முயற்சியில் முன்னேற முயன்று கொண்டிருந்ததில் மூன்று நாட்களாக சண்டை நடந்துகொண்டிருந்தது.இரவில் பலாலி பிரதான தளத்திலிருந்து அதிகமாக செல்லடித்தார்கள்.அப்படி அடித்த செல்லொன்று கைரியின் கக்கூஸ் கிடங்கிற்குள்ளும் விழுந்து வெடித்ததில் கிடங்கு தூர்ந்துபோய் அதைச்சுற்றியிருந்த காவோலை வேலியும் எரிந்து போய் விட்டிருந்தது.கட்டையிலை போவார் .நாசமா போவார். பீ கிடங்குக்கை  குண்டு போட்டவங்கள் உருப்பட மாட்டாங்கள் என்று பலாலி ஆமிக்காரரை திட்டியபடியே வழைமை போல வேலைக்குனு பேவதற்கு கேத்தலோடு வந்த கைரி அவனிற்கு மூக்கு பேணியில் தேனீரை ஊற்றி நீட்டியபடியே  தம்பி மகனின்ரை தகவல் ஏதும் தெரிஞ்சதோ என்றாள். இல்லை எல்லா  முகாமுக்கும் அறிவிச்சிருக்கிறன் தப்பியோடின கனபேர் புளொட்காரரின்ரை உதவியோடை இந்தியாக்கும் போயிருக்கிறாங்கள்.ஏதும் தகவல் கிடைச்சால் சொல்லுறன் என்றபடி வெறும் மூக்குப் பேணியை அவளிடம் நீட்ட இண்டைக்கு இவங்கள் எனக்கு வேலை வைச்சிருக்கிறாங்கள் இன்னொரு பீ கிடங்கு வெட்டவேணும் என்றவளிடம். ஆமிக்காரன் விசுக்கோத்து தாறவன் நல்லவன் எண்டு சொன்னாய் இப்ப திட்டுறாய்.நீங்களும் தான் அடிக்கிறியள் அது எங்கை போய் விழுதெண்டு ஆருக்கு தெரியும் அது மாதிரி அவனும் அடிச்சது என்ரை கிடங்கிலை விழுந்திட்டுது . சுருட்டை இழுத்து புகை விட்டபடி வேலைக்கு நடக்கத் தொடங்கியிருந்தவளிடம் அதென்ன உன்ரை பேர் கைரி வித்தியாசமாயிருக்கே ??.. நின்று திரும்பிப் பார்த்து  என்ரை பெயர் கைராசி  அதை என்ரை ஆச்சி கைரி எண்டு கூப்பிட்டதாலை அதையே எல்லாரும்  கூப்பிடத் தொடங்கிட்டினம். உண்மையிலை என்ரை கை.. ராசிதான் என்ரை கையாலை தேத்தண்ணி வாங்கி குடிச்சனியள்தானே உங்களுக்கு ஒண்டும் நடக்காது நல்லாயிருப்பியள் . போய்க்கொண்டிருந்தாள் .அவள் இழுத்து விட்ட சுருட்டு புகை அவனது நாசியில் ஏறிக்கொண்டிருந்தது.
                                                                        0000000000000000000000

ஒரேயொரு வருடகாலம்தான் காட்சிகள் வேகமாக மாறி விட்டிருந்தது.ஊரெங்கும் இந்தியனாமி பரந்து நின்றிருந்தார்கள்.கன ரக ஆயுதங்களோடு வாகனங்களில் வீதி வலம் வந்தபுலிகள் சைக்கிள்களில் கைத் துப்பாக்கிகளோடு மட்டும் ஒழுங்கைகளினுடாக ஒழிந்து திரியத் தொடங்கியிருந்தார்கள்.தினம் சுற்றி வழைப்புக்கள்.தேடங்கல்.ஆங்காங்கே சண்டைகள்.மரண தண்டனைகள்.புளொட்டிடம்  இருந்து புலிகளிடம் மாறிய  காவலரண்கள் எல்லாம் இப்போ இந்தியனாமியினதாய் மாறி விட்டிருந்தது மட்டுமல்லாமல் அதிகரித்தும் இருந்தது.வடக்கு ஏழாலையில் ஏழு கோயிலடியில் இருந்த வாழைத் தோட்டம் ஒன்றில் சாம் தனது  நண்பர்களோடு பதுங்கியிருந்த மதியப் பொழுதொன்றில் சைக்கிளில் வேகமாய் வேர்க்க விறுவிறுக்க  ஓடிவந்த லோலோ சை்சகிளை நிறுத்தி விட்டு தனது  இடுப்பில் இருந்த பிஸ்ரலை உருவி மகசீனை கழற்றியவன் மளமளவென  ரவைகளை எண்ணி விட்டு ஆறு அடிச்சிருக்கிறன் ஆள் தப்பியிருக்காது என்றவனிடம் யாரது என்று தலையை கீழிருந்து மேலாக ஆட்டி சைகையில் கேட்டதும் சந்தி வீட்டு பெரியய்யா ஜே.பியர்தான் கனதரம் றை பண்ணினான் இண்டைக்குத்தான் அம்பிட்டவர்.தோட்டத்துக்குள்ளை நிக்கிறார் எண்டு ஒருதன் வந்து சொன்னவன் அங்கை வைச்சே போட்டாச்சு.உவன் கைரின்ரை  மகனும் இந்தியாவிலையிருந்து வந்து புன்னாலைக் கட்டுவன் சந்தி ஆமியோடைதானாம் நிக்கிறானாம் வீட்டை போய் வாறவனாம் அடுத்தது அவன்தான் என பிஸ்ரலின் குளாயினுள் ஒரு துணியை கம்பியால் தள்ளி துடைத்தபடி  சொல்லி முடித்திருந்தான்.

அடுத்தநாள் காலை சாம் அச்சுவேலிப்பகுதிக்கு போகவேண்டிய தேவை  இருந்தது அதற்குஒழுங்கையூடாக போய்  ஆயக் கடைவை பகுதியில்   புன்னாலை கட்டுவன் பிரதான வீதியை கடக்கவேண்டும் தனது கைத்துப்பாக்கியை சரி பார்த்து இடுப்பில் செருகிக் காண்டு ஏழாலையிலிருந்து குப்பிளான் ஊடாக புன்னாலைக் கட்டுவனை நோக்கி சைக்கிளை மிதித்தான். பிரதான வீதியை  அண்மிக்கும்போதே எதிரே ஒழுங்கையில்  இந்தியனாமி தென்பட சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்த வீட்டு வேலியை தாண்டி ஓடத் தொங்கியிருந்தான் ஆமியின் சூட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தது.கோயிலுக்கு பின்னால்  இருந்த பனங்கூடல் ஊடாக ஓடியவன் கைரியின் குடிசையை கடந்து ஓடும்போது கைரி குடிசை வாசலில் இருந்த அடுப்பில் கேத்திலை வைத்து ஊதிக் கொண்டிருந்தாள்.நாய்களின் குரைச்சல் சத்தம் அதிகமாகிக் கொண்டும் இருந்தது இந்திய னாமி சுற்றி வழைத்து விட்டதை அவனால் உணர முடிந்திருந்தது. அவனையே பர்த்துக்கொண்டிருந்த  கைரியின் குடிசைப் பக்கமாக திரும்பவும் ஓடி வந்தவனிடம்  என்ன தம்பி பிரச்சனையோ ?ஆமிக்காரன் வாறான் போலை கிடக்கு வீட்டுக்கை போய் ஒழியப்பு என்றாள்.இல்லை இதுக்கை ஒழிக்கேலாது கிட்ட வந்திட்டாங்கள் இதை திறந்து பாத்தலே பிடி படவேணும் என்று சுத்திவர பாத்தவனிடம்  ஏதோ யோசித்தவள்  சுருட்டையும் நெருப்பெட்டியையும்  கையில் எடுத்தபடி  சரி கெதியா வா..அப்பு என்று அவனின் கையைப் பிடித்து  குடிசையின் பின்னால் பனையோலை வேலியல் அடைக்கப் பட்டிருந்த  இருந்த கக்கூஸ் கிடங்கிற்கு இழுத்துப் போனவள் அவனை ஒரு மூலையில் இருந்தி அவசரமாக ஓடிப்போய் சில காவேலைகளை எடுத்து வந்து அவனை மூடி விட்டு காத்திருந்தாள்.நாய்களின் குரைப்புச் சத்தசம் அண்மையாக கேட்கத் தொடங்கியதோடு கைரியின் நாயும் குரைத்தது. கக்கூசின் வாசலை ஓலைத் தட்டியால் சாத்திவிட்டு குழியின் நடுவே குறுக்காக போடப் பட்டிருந்த பனை மரக் குற்றியில் தனது சேலையை  முழங்காலிற்கு மேலே உயர்த்தி விட்டு குந்தி அமர்ந்தவள் சுருட்டை வாயில் வைத்து தீப்பெட்டியில் குச்சியை உரசி  பக்.பக் கென்ற சுருட்டை பற்ற வைத்த சத்தத்தோடு  சாமின் இதயத் துடிப்பும் வேகமாகி அவனது காதுகளிற்குள் இறங்கிக் கொண்டிருந்தது.
 ஏ உதர் யாக்கர் தேக்கோ…(ஓய் அங்கை போய் பார்) என்கிற சத்தம் கேட்டது ஒருவன் நடந்து வரும் சத்தம் அருகாக வந்து கொண்டிருந்தது சாம் தனது  கை துப்பாக்கியை இறுக்கமாகப்பிடித்திருந்தான். வந்தவன் தட்டிக்கு மேலால் எட்டிப்பார்க்கவும் கைரி சத்தமாக ஓய் பேழுறதை எட்டிப் பாக்கிறான் என்றபடி எழும்ப  வந்த ஆமிக்காரன்  ஓகே..ஓகே..என்றபடி அங்கிருந்து போய்விட்டான்.சில நிமிடங்களில் இந்தியனாமி அங்கிருந்து போய் விட்டதை உறுதி செய்தகைரி  தம்பி வா ராசா என்று சத்தம் கொடுத்ததும் கையில் இருக்கப் பிடித்திருந்த துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு காவேலைகளை விலத்திவிட்டு வெளியே வந்தவன் கைரிக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்படபோனவனிடம். இன்னும் கொஞ்சம் பொறு அவங்கள் தூரமா போகட்டும் வா தேத்தண்ணி குடிச்சிட்டுப் போ..என்று அழைத்துப்போய் அவனிற்கு தேனீரை ஊத்திக் கொடுத் தவள். ஏன் ராசா சந்தி வீட்டு பெரியய்யாவை சுட்டவங்கள் லோ.லோ தான் சுட்டதெண்டு கதைக்கிறாங்கள் பாவமல்லோ??
உனக்கும் அவரை பிடிக்காதுதானே அவரும் உன்ரை கொட்டிலுக்கை புகுந்தவர் எண்டு அண்டைக்கு சொல்லி கவலைப் பட்டனி.பிறகென்ன இப்ப பாவம் எண்டுறாய்.
ஆனாலும் ஒரு உயிரல்லோ?? அதை விட இது தண்டனை அவருக்கில்லையே  அவர் போய் சேந்திட்டார்  அவரின்ரை குடும்பமல்லோ அனுபவிக்கப்போகுது.
பாதி தேனீரை குடித்தவன் ..சரி நான் போயிட்டு வாறன்.
தம்பி இன்னொரு விசயம்.
என்ன??
மகன் இந்தியாவிலையிருந்து வந்து நிக்கிறான் என்னை பாக்கத்தான் வந்தவன்.இன்னும் கொஞ்ச நாளிலை திரும்ப இந்தியா போயிடுவான்.அவனை ஒண்டும் செய்துபோடாதையுங்கோ.என்றபடி  அவனைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டவளின் கண்கள் கலங்கியிருந்தது.
சரி. கெதியா போகச் சொல்லு என்று விட்டு  சாம் அங்கிருந்து போய் விட்டான்.
                                 ………………………………………………………………………………….
sat-03
அடுத்தநாள் மதியமளவில் குப்பிளான் சந்தி ராணியக்காவின்  கடையடியில் சாம் ஒரு வாழைப் பழத்தை வாங்கி வாயினுள் தள்ளிக் கொண்டிருக்கும் போது  இயக்கத்திற்கு ஊரில் தகவல் சொல்லும்  பபியன்  வந்து அண்ணை  ..இப்பதான் கைரின்ரை மகன்  வீட்டை வந்திட்டு போனவன்.வாற வழியிலை லோலோ விட்டை விசயத்தை சொன்னான். லோ லோ கைரி வீட்டுப் பக்கமா போறான்.
கைரின்ரை மகன் திரும்ப போயிட்டானா??
ஓமண்ணை போயிட்டான்.போகேக்குள்ளைதான் நான் கண்டனான் என்றான் பபியன்.
பிறகெதுக்கு லோலோ  கைரி வீட்டை போனவன் ஏதோ விபரீதமாக நடக்கப்போவதை உணர்ந்தவனாய்  சைக்கிளை கைரி வீட்டை நோக்கி வேகமாய் மிதித்தான்.சாம் கைரி வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே சில சூட்டுச் சத்தங்கள் அவனது காதில் விழுந்தது சாம் மேலும் வேகமாக சைக்கிளை மிதித்தான்.அடுத்த சில நிமிடங்களில் எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்த லோலோ  அண்ணை கைரியை போட்டிட்டன் ஆமி வரப்போறான் கெதியா இங்கையிருந்து ஓடுங்கோ என்றபடி அவனை கடந்து போய் விட்டிருந்தான். திரும்ப போகலாமா? விடலாமா என யோசித்த சாம் முடிந்தவரை மூச்சிரைக்க சைக்கிளை மிதித்தான் .
கைரியின் வீட்டு முற்றத்தில் கைரி நெற்றியிலும் மார்பிலும் இரத்தம் வழிய பின் பக்கமாக சரிந்து விழுந்து போயிருந்தாள். அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும்.கவிழ்ந்து கிடந்த அலுமினிய சாப்பாட்டுக் கோப்பையில்  சோறும் கோழிக்கறியும் சிதறிக் கிடந்தது.அவளின் நாய் அங்குமிங்கும் ஓடியபடி சாமை பார்த்து குரைத்ததோடு ஊழையிடவும் செய்தது. மேலே பனை மரத்திலிருந்த ஒரு காகம் தமக்கான  உணவு கிடைத்து விட்டதென்று கரைந்ததைத் தொடர்ந்து அங்கு வந்த பல காகங்கள் கீழிறங்கி சிந்திக் கிடந்த சோற்றை கொத்தத் தொடங்கியிருந்தது .  ஒரு காகம் ஆவென்று வாய் திறந்து கிடந்திருந்த கைரியின் வாயிலிருந்த சோற்றை  கொத்திக்கொண்டிருந்தபோது  இன்னொரு காக்கை அவளது கண்களை கொத்தத் தொடங்கியிருந்தது..அங்கிருந்து புறப்பட்டவனிடம். ஏன்  தேத்தண்ணி குடிக்கேல்லையோ  என்கிற கைரியின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பி நிமிர்ந்து பாத்தவனிடம் .தேத்தண்ணி  ஆறிட்டுது  சூடாக்கி தாறன் என்றபடி சாமின் மனைவி தேனீரை தூக்கிக் கொண்டு போயிருந்தாள்.