Navigation


RSS : Articles / Comments


மீதெழல் .....

4:00 PM, Posted by sathiri, No Comment

 மீதெழல்  -சிறுகதை-சாத்திரி

வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது.
இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அன்றுதான் வேலை அதிகமாகவிருக்கும். இந்தவேலையை விட்டுத்தொலைக்க வேணும் எண்டு பலதடவை யோசித்தாலும், இதில் கிடைக்கும் சம்பளத்தை நினைத்து பேசாமல் இருந்துவிடுகிறேன். கோடை வெய்யிலில் வேலையால் வியர்த்த உடம்பு,  பைக்கை ஓடத் தொடங்கியதும்  மிதமான  கடல் காற்று பட்டு இதமாகவிருந்தது. வீடு போனதும் ஒரு குளியல் போட்டுவிட்டு சில்லென்ற பியர் ஒன்றை உறுஞ்சினால்… அதுவே என் இன்றைய சொர்க்கம்  என்று நினைத்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, எதிரே கடற்கரை சாலையை  காவல்துறையினர் மறித்து தடுப்பு போட்டு வாகனங்களை வேறு பக்கத்தால் திருப்பி விட்டுக்கொண்டிருப்தை கவனித்ததும், ஐந்து நிமிடத்தில் போய் சேரவேண்டிய வீட்டுக்கு இனி இருபது நிமிடம் சுத்தி போகவேணும். எனக்கும் சொர்க்கத்துக்கும்மான  தூரத்தை அதிகரித்த அந்த அதிகாரியை திட்டியபடியே  வீடு வந்து ஆடைகளை அவிழ்த்தெறிந்து குளியல் கூண்டுக்குள் நுழைந்து தண்ணீரை தலையில் தண்ணீரை திறந்து விடும்போது கைதொலைபேசி அடிக்கும் சத்தம்.


‘ச்சே …எனக்கு மட்டும்தான் இப்பிடியா?’ குளியலறையிலோ கழிப்பறையிலோ  இருக்கும்போதுதான் தொலைபேசி அடிக்கும். கைத்தொலைபேசி  நின்று இரண்டாம் தரமும் அடித்து ஓய்ந்து. இப்போ வீட்டு தொலைபேசி. இரண்டு இலக்கமும் தெரிந்திருப்பதால் யாரோ இங்கு எனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் ஊகிக்க முடித்து. ஏதும் அவசரமாகவிருக்கும். பாதிக்குளியலில்  நிறுத்தி துடைத்து விட்டு அதே அவசரத்தில் ஜட்டியை  போடும்போது கால் பெருவிரல் ஜட்டியில்  மாட்டிவிட , விழுந்து விடாமல் ஒற்றைக்காலில் ஒரு சிலசெக்கன்கள் ஆடும் அந்த நடனம் இருக்கிறதே அதை  பரதத்தில் அடக்கலாமா? வெஸ்டனில்  அடக்கலாமா ? என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒற்றைக்காலை தூக்கிய  நடராஜர் சிலையை பார்க்கும் போதெல்லாம் இவரும் என்னைப்போலவே  ஜட்டி போடும்போது அனுபவப் பட்டிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. உடை மாற்றி வந்து பார்த்தேன். யோகனும் தேவகியும் அழைத்திருந்தார்கள்.
‘திரும்பவும் எதோ குடும்பப் பஞ்சாயத்து போல கிடக்கு. யோகன் கனகாலமா ஒழுங்காத்தானே  இருக்கிறான். திரும்ப தொடங்கிட்டானோ’?
யோகனுக்கு அழைப்பு போனது. எடுத்ததுமே,


“டேய் எங்கை நிக்கிறாய் ? பெரிய பிரச்னை. ஒருக்கா அவசரமா வா…”
என்று விட்டு நிறுத்தி விட்டான். கன காலத்துக்குப் பிறகு இன்று நிறைய குடித்திருக்கிறானென்று கதையிலையே விளங்கியது. என் இன்றைய சொர்க்கம் நரகமாகப் போகிறது என்று மட்டும் தெளிவா தெரிந்தது. அவர்களின் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் வழியிலேயே உங்களுக்கு அவர்களைப்பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
௦௦௦௦௦௦

ஊரில் கனகரத்தினம் என்றால் தெரியாதவர் இல்லை. பரம்பரை பணக்காரர். யாழ் நகரில் இரும்புக்கடை , ஒரு சினிமா தியேட்டர், உணவு விடுதியெனப் பல தொழில்கள் செய்து கொண்டிருந்தவர். அப்படியானவருக்கு அரசியலும், அதிகாரச் செல்வாக்கும், ஊரில் ஒரு தனி மரியாதை இருக்குமெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர். அப்பாவுக்குப் பெண்பிள்ளைகள் மேல் அதிக பாசமிருப்பதைப்போலவே மகள் மீது கனகருக்கும் அளவு கடந்த பாசம். கூடவே கொண்டு திரிவார். அவளை உடுவில்  மகளிர் கல்லூரியில் சேர்த்து, அவளுக்காகவே ஒரு புது கார் வாங்கி, டிரைவர் வைத்தது மட்டுமல்ல அவள் வளர.. வளர ..வீட்டு மதிலும் உயர்த்து கொண்டே போய், அவள் எட்டாவது படிக்கும்போது   வயதுக்கு வந்துவிட, வீட்டு மதில் கோட்டை சுவர்போலாவாகி உள்ளே நடப்பது எதுவுமே வெளியே தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல அவள் வெளியே வருவதும் குறைந்து போனது. ஒருநாள் கோவில் திருவிழாவில் சேலையில் வந்திருந்த அவளைக் கண்டபோதுதான் ஊர் இளசுகள் எல்லாமே ‘அட  தேவகியா?’ இதுவென்று வாய்பிளந்து பார்த்தார்கள். அன்றுதான் நானும் அவளைப் பார்த்தேன். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தவள் போல இருந்தது.
அதற்குப்பின்னர் தேவகியின் கார் பாடசாலைக்கு போய்வரும் போதெல்லாம் சந்தியில்  இளசுகள் கூட்டம் அவளின் பார்வைக்காக ஏங்கிக் கிடந்தது. அதிலொருவன் தான் யோகன். விடயம் கனகரின் காதுக்குபோக, உலகத்திலையே கார் யன்னலுக்குத் திரைசீலை போட்டவர்  என்கிற பெருமையை பெற்றுக்கொண்டார். தேவகியின் பார்வை கிடைக்காமல் போனாலும்  காரை பார்த்தாலே போதுமென்றோ அல்லது எதோ ஒரு நம்பிக்கையில் இளசுகள் கூட்டம்  சந்தியில் காத்து நிற்கத்தான் செய்தது. ‘நீ தேவகிக்கு பின்னால் அலையவில்லையா ?’ என்கிற உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. எத்தனை தித்திப்பாக இருந்தாலும் அது எட்டாப்பழம் என்று எனக்குத்தெரியும். அதனால் நேரத்தை வீணடிக்கவில்லை.

ஒருநாள் வாசலில் நின்று போகிறவர் வருகிறவருக்கெல்லாம் கனகர், மகள் பத்தாவது பாஸ் பண்ணி விட்டாள் என்று இனிப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னையும் கூபிட்டு, “நீ பாசா?” என்று கேட்டு நீட்டிய இனிப்பை ‘ஒமென்றபடியே’ஒன்றை எடுத்துக்கொண்டு போய் விட்டேன். யோகன் பெயிலாகி வீட்டில் திட்டு வாங்கித் தனியார் கல்விநிலையமொன்றில் சேர்த்திருந்தான். அதுக்குப்பிறகு அவனை அடிக்கடி காணக் கிடைப்பதில்லை. அவன் பழக்க வழக்கங்களும் மாறிப்போய் அன்றைய காலத்தில் மிகக் கெட்டகாரியமான கள்ளை  குடிக்கவும் சிகரெட் பிடிக்கவும் பழகிவிட்டிருந்தான். இனிப் படிப்புச் சரிவராது என்று நினைத்த அவன் தந்தை அவர்களுக்குச் சொந்தமாகவிருந்த, ‘தங்கம்மா எலெக்ட்ரிகல்’ கடையில் தன்னோடே சேர்ந்து வியாபாரத்தை கவனி என்று விட்டு விட்டார். தேவகி மீதான காதல் யோகனுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்க, ஒருநாள் அவர்கள் கடைக்குப் பல்ப்பு வாங்கப்போன தேவகியின் தம்பியிடம், “கண்ணே தேவகி..  நீ மட்டும் என் காதலுக்கு ம்… ….சொல்லிவிடு. ‘தங்கம்மா எலெக்ட்ரிக்கலை’, ‘தேவகி எலெக்ட்ரிகலாக’ மாற்றி விடுகிறேன்.”                 என்றெழுதி ‘அக்காவிடம் கொடு.’என்று கொடுத்தனுப்பிய கடிதம் நேரே அப்பா கனகரிடம் போக, யோகனின் தந்தையை  தன்வீட்டுக்கு வரவழைத்து அவர் முகத்தில்  கிழித்தெறிந்த  கனகர்,

“என்ரை மகளின்ரை பேரிலை நூறு கடை திறக்கிற வசதி எனக்கிருக்கு. உன்ரை  கடை தேவையில்லை. ஊரிலை  இருக்கிறதெண்டா ஒழுங்கா இருங்கோ. இல்லாட்டி குடும்பத்தோடை  துலைசுப்போடுவன்.” என்று மிரட்டியவர், அவமானத்தால் தலைகுனிந்தபடியே அங்கிருந்து கிளம்பிய யோகனின்  தந்தையிடம், “அந்த கடுதாசியளையும் பொறுக்கிக்கொண்டு போடா  பொறுக்கி நாயே”என்றதும், விம்மி வந்த அழுகையை  முடித்தவரை அடக்கிக்கொண்டு, ‘ஒரு தறுதலையை பெத்த எனக்கு இது வேணும்.’ என்று நினைத்தபடியே  நிலமெங்கும் சிதறிக்கிடந்த கிழிந்த துண்டுகளை பொறுக்கிஎடுதுக்கொண்டு வெளியேறியவர், வீட்டுக்கு வந்து யோகனைப்பிடித்து முற்றத்து வேம்பில் கட்டி வைத்து அடித்ததை அன்று ஊரே  உச்சுக்கொட்டியபடி  வேடிக்கை பார்த்தது.
தேவகிக்கு கடிதம் கொடுக்கலாமா என்கிற குழப்பத்திலிருந்தவர்களுக்கு யோகனின் நிலையை பார்த்து, “இல்லை  வேண்டாம்” என்கிற தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள். இப்பவும் சத்தியமாக சொல்கிறேன் எனக்கு அப்படியொரு யோசனை வந்ததேயில்லை.
அந்த சம்பவத்துக்கு பிறகு யோகனை கொழும்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். தேவகியின் தரிசனத்துக்காகச் சந்தியில் நின்றவர்களும் குறைந்து போக, ஒரு நாள் கனகரின் வீட்டுக்கு அவரின் நெருங்கிய உறவினர்கள் இறுகிய முகத்தோடு வருவதும் போவதுமாக இருக்கவே என்னவென்று விசாரித்தால்,
“கனகரின் தாய்க்கு சுகமில்லையாம் கடுமையாகிட்டுது.” என்று சொன்னார்கள்.

சரி அந்திரட்டிச் சோறு சாப்பிடலாமென நினைத்துக்கொண்டிருக்கும் போது தான்  யாருமே நம்பமுடியாத அந்த செய்தி கசிந்தது. பொதுவாகவே இது போன்ற பெரிய இடத்து சங்கதிகள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களால் தானே கசிவது வழமை. தேவகியின்  கார் டிரைவர்  லீவன்று கள்ளடித்து விட்டு விடயத்தை மனைவியின் காதில் பெல்லடித்து விட்டார். அடுத்தநாள்  டிரைவரின் மனைவி தன் தம்பியிடம் குசுகுசுக்க, அவன் வந்து என்னிடம்  அக்கம்பக்கம் பார்த்தபடியே அந்த மாபெரும் ரகசியத்தை சொல்லி விட்டான். பிறகென்ன விடயம் மெதுவாக ஊரெங்கும் பரவத்துவங்கியது.
‘என்னது தேவகி ஓட்டிட்டாளா. ?’ ஆ ..வென்ற வாய் மூடவே பலருக்கும்  சில நிமிடமெடுத்தது. அதை விட அதிர்ச்சி, அவள் பொட்டு ரங்கனோடை  ஓடிட்டாள் என்றதுதான். ‘பொட்டு ரங்கன்’ சின்ன வயதிலிருந்தே கனகரின் இரும்புக்கடையில் வேலை பார்க்கும் மலையகத்தை சேர்ந்தவன். அங்கேயே வேலை, சாப்பாடு, படுக்கை. அவன் அழுக்குத் தெரியாமலிருக்க காக்கி உடையே அணிவான். மொட்டையென்று  யாரும் சொல்லி விடக்கூடாது என்பதுக்காக  கட்டையாக வெட்டிய முடி. யாரைப்பர்தாலும் மெல்லிய புன்னைகோடு ஒரு தலையசைப்பு. அதிகம் பேசவும் மாட்டான். எப்போதும் ஒரு சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் அவன் பெயரிலும் அது ஒட்டிக்கொண்டது. ஞாயிறு ஒரு நாள் லீவன்றுமட்டும் படத்துக்குப் போவான். அதுவும் கனகரின் தியேட்டரில் ஓடும் படத்துக்குத்தான். காரணம் டிக்கட் எடுக்கத்தேவையில்லை. இப்படி கனகரை சுற்றியே அவனது உலகம் இருந்ததால் கனகருக்கும் அவனில் நல்ல நம்பிக்கை வந்து விட்டிருந்தது. இப்போ கனகருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதால் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவார். பொட்டுரங்கன் தான் இரவு  கணக்குப்பார்த்து கடையை பூட்டி விட்டு காசை கொண்டுவந்து கனகரிடம் கொடுத்து விட்டு போவான். நேரம் பிந்தி விட்டால் கனகரின் கார்கராச்சில் படுத்துக்கொள்வான்.
எங்கே, எப்போ, எப்பிடி வருது என்று தெரியாமல் வருவதுக்கு பெயர்தானே காதல். தேவகிக்கும் ரங்கன் மீது அது வந்துவிட ஓடி விட்டார்கள். ரங்கனோடு  ஓடி விட்டாளாம் என்றதும் ஊர்  இளைஞர்கள் எல்லோரும் கண்ணாடி முன்னால் போய் நின்று,

“எங்களிடம் இல்லாதது அப்பிடியென்ன ரங்கனிடம் இருந்திருக்குமென” வளைத்து வளைத்து பார்த்தார்கள், நானும்தான்.
தேவகி ஓடிப்போன விடயம் தெரியாமலிருக்கத்  திரை போட்டு மூடிய கார் வழக்கம்போல  பாடசாலை நேரத்துக்கு போய் வந்து கொண்டிருந்திருக்கிறது. கனகரின் தாய்க்குச்  சுகமில்லை என்றதையும் எல்லாரும் நம்பி விட்டிருந்தனர். அந்த இடைவெளிக்குள் கனகர் தனது அத்தனை  பலத்தையும், வளத்தையும் பாவித்து மலையகம் முழுவதும் தேடி ஒரு கிழமையில்  தலவாக்கலையில் தலைமறைவாக இருந்த தேவகியை கண்டுபிடித்து விட்டார். அவளை ஊருக்கு கொண்டு வராமல் அப்படியே கொழும்புக்கு கொண்டு போனதும் அடுத்த நாளே யோகனின் குடும்பமும் கொழும்புக்கு போயிருந்தனர். யோகனுக்கும் தேவகிக்கும் அவசரமாக கொழும்பிலேயே கலியாணம் நடந்ததாகத் தகவல் மட்டும் ஊரில் இருந்தவர்களுக்கு கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே தலவாக்கலையில் நடந்த தேடுதலில் தீவிரவாதி கைது என்று பொட்டு ரங்கனின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அதுக்குப்பிறகு அவனுக்கு என்ன நடந்ததென்று யாருக்கும்தெரியாது. ஆனால் கனகரோடு மோதினால் இதுதான் நடக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். அந்தக் கிழமையே நான் பிரான்சுக்கு வருவதுக்காகக் கொழும்பு போயிருந்தபோது யோகனை சந்தித்திருந்தேன். கனகர் தன்பெரும்பாலான  சொத்தைத் தன் பெயரில் எழுதித்தந்து தன் காலில் விழுந்து கெஞ்சியதால் தேவகியை கட்டிக்கொண்டதாகப் பெருமையாக சொன்னான். அவரே தங்களை லண்டனுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக சொல்லியபோதே பழிவாங்கி விட்ட திருப்தி அவன் கண்களில் தெரிந்தது. நானும் பெறாமையோடு இங்கு வந்து சேர்த்து விட்டேன்.
00000000000000000000000

நான் பிரான்ஸ் வந்து சுமார் மூன்று மாதமளவில் லண்டன் போவதாக சொன்ன யோகனும் தேவகியும் இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரே ஊரவன், உறவுக்கரனும் கூட என்பதால் வந்த உடனேயே என்னைத் தேடி போனடித்திருந்தான். அப்போ நான் பிரெஞ்சு படிக்க வகுப்புக்கு சென்று கொண்டிருந்ததால் வகுப்பு முடிந்த ஒரு மாலைப்பொழுதில் ஆளுக்கொரு பியர் கேனுடன் பூங்கா ஒன்றில் பேசத்தொடங்கியிருந்தோம். உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வேலையும் வீடும் தேடுவதாக சொன்னவன், அதுக்காக என் உதவியும் கேட்டிருந்தான். நீண்ட நேரம் நான் ஆவலுடன் காத்திருந்த தேவகியை பற்றி ஒரு வார்த்தை  கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்க நானாகவே “தேவகி எப்பிடி இருக்கிறாள்”? என்று கேட்டதும் , ஒரு இழுப்பில் பாதி பியரை முடித்தவன்,  “ஓ…….. அந்த ஓடிப்போனவளா? அவளுக்கென்ன இருக்கிறாள்.”
“அவளின்ரை அப்பன் எங்களை லண்டனுக்குத் தான் போக அனுப்பினவன். ஆனால் அவள் படிச்சவள் கெட்டிக்காரி, இங்கிலீஸ் வேற தெரியும். அங்கை போனதும் டெவலப் ஆகிப் பிறகு என்னை விட்டிட்டு திரும்பவும் ஓடிடுவாள். அதாலைதான் நான் இங்கை வந்திட்டேன்.” என்று சொல்லி முடித்தவன் அடுத்த இழுப்பில் மீதிபியரையும் முடித்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
பிரான்சில் வந்தாரை வாழவைப்பது உணவுவிடுதி வேலைகள்தான். அப்படியொரு உணவகத்தில் யோகனுக்கு வேலையொன்று தேடிக்கொடுத்திருந்ததோடு எனது வீட்டுக்கு அருகிலேயே  ஒரு வீடும் பார்த்து கொடுத்திருந்தேன். ஆனால் யோகனுக்கு உணவு விடுதி வேலை என்பது பகுதிநேர வேலையைப்போல், ஏனென்றால் தேவகியை ஓடிப்போனவளே  என்று திட்டுவதும் அடிப்பதும்தான் முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தான். அவளின் பெயரே அவளுக்கு மறந்துபோய் ‘ஓடிப்போனவள்’ என்கிற பெயரே மனதில் பதிந்து விடுமளவுக்கு  ஸ்ரீராமஜெயம் சொல்வது போல ஒரு நாளைக்கு குறைந்தது நூறு தடவையாவது  சொல்லிக்கொண்டேயிருப்பன். அவர்களோடு நெருங்கிப்பழகும் ஒரேயொருவன் நான் தான் என்பதால் தேவகியின்  நரகவாழ்க்கை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இரவு நேரங்களில் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலீசுக்கு போனடித்து அவர்கள் வந்து யோகனை எச்சரித்து விட்டு போனதும் நடந்திருந்தது.

“உங்களுக்கு ஏதாவது பிரச்னை கொடுக்கிறனா? நீங்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தேவகியிடம் கேட்டதற்கு,
“இல்லையில்லை குடித்தால் சத்தம் போடுவார் வீட்டு சாமான்களை உடைப்பார். அவ்வளவுதான். எனக்கு  உடல் ரீதியாக எந்த பிரச்னையும் கொடுப்பதில்லை.” என்று சொல்லி விட்டாள்.
சிலஇரவுகள் கடும்குளிரில் அவளை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டிருக்கிறான்.  அதைப்பார்த்து யாராவது பொலிசுக்குப் போனடிதால் அன்றிரவு முழுவதும் அவனை போலீஸ்  நிலையத்தில் கொண்டுபோய் வைத்திருந்து விட்டு எச்சரித்துக் காலை அனுப்பி விடுவார்கள். பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருப்பான். ஆனால் அடுத்த வாரஇறுதி நாளில் மீண்டும் முருங்கையில் ஏறி விடுவது வழமையாகிப்போனது. தேவகியும் புகார் கொடுப்பதில்லை. ஒருநாள் அவன் அடித்தஅடியில் தேவகி மயங்கி விழுந்துவிடக் கொஞ்சம் பயந்து போனவன், எனக்குதான் அவசரமாக போனடிக்க, நான்தான் முதலுதவிப் பிரிவுக்கு போனடித்து அவளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோயிருந்தேன். அப்போதும் யோகன் வரவேயில்லை. அவளுக்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஐந்தாவதுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பெண்குழந்தைக்குத் தாயாக போகிறாள் என்கிற விடயத்தை  வைத்தியர் சொன்னார். தேவகிக்குப் பிரெஞ்சுமொழி தெரியாதென்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சில் நானே மொழிபெயர்துக்கொண்டிருந்தேன். அந்தச் செய்தியை தேவகிக்கு சொன்னதும் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமற்ற வழமையான  இறுகியபடியே  முகத்தை வைத்துக்கொண்டு,

“இங்கை என்ன பிள்ளை எண்டும் சொல்லிடிவினமோ”? என்றாள்.
“ஓம் என்ன பிள்ளை எண்டது மட்டுமில்லை, என்ன திகதி. கரு தரித்து  இப்போ எத்தனை  சென்றி மீற்றர் குழந்தை வளர்ந்திருக்கு எண்டு எல்லாமே விபரமா சொல்லிடுவினம்.”
என்றதும், பெண் குழந்தை தானே என்று மீண்டுமொருமுறை கேட்டு உறுதிப்படுத்தியவள்  மெல்லிதாக புன்னகைத்தாள். அதன் அர்த்தத்தை என்னால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் யோகனை திருமணம் செய்த பின்னர் அவளது முதலாவது புன்னகை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

“எப்படி மயங்கி விழுந்தாள்? உடல் முழுதும்  தழும்புகள் உள்ளது. உடலும் மிக பலவீனமாக உள்ளது. நீங்கள்தான் அவரது கணவனா?” என்று  குறுக்கு விசாரணை கேள்வியை கேட்டார் வைத்தியர். நான் கொஞ்சம் பதறிப்போய் “அவள் கணவனில்லை நண்பன்.”  என்றதும் லேசாக தலையை ஆட்டியவர், “அவரது கணவனால் அவருக்கு பிரச்சனைகள் உண்டா?” என்றார்.  எங்கள் உரையாடல் வேறு எதோ விவகாரமாக போகிறது என்பதை உணர்ந்த தேவகி  குறுகிட்டு “என்ன கேக்கிறார்?” என்றாள்,
“உடம்பில கன தழும்புகள்  இருக்காம். புருசனாலை ஏதும் பிரச்சனையோ எண்டு கேக்கிறார்”  என்றதும், “நோ….. நோ எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நான்தான் அடிக்கடி மயங்கி விழுந்திடுறேன் எண்டு சொல்லுங்கோ.”  என்று விட்டாள்.

‘ச்சே. இந்த பொம்பிளையளே  இப்பிடித்தான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து பழிவாங்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டாள்.’ என்று எனக்கு அவள் மீதே கோபம் வந்தது. எப்படியெல்லாமோ ஒரு மகாராணி போல வாழ வேண்டியவள். கல்லானாலும் கணவன் புல்லாய் குடிச்சிட்டு அடிச்சாலும் புருஷன் எண்டு அவன்மீது பக்தியாய்  இருக்கிறாளா? இல்லை இவளுக்கு லூசாக்கிட்டுதா? என்று புரியாமலிருந்தது .
சில நாட்கள் வைத்திய சாலையிலேயே அவளை தங்கியிருக்க சொல்லி விட்டதால்  வெளியே வந்து யோகனுக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு அவன் அப்பா ஆகப்போகிறான்  பெண் குழந்தை என்று சொன்னதும், அவனோ அவசரமாக,
“என்னைப்பற்றி அந்த ஓடுகாலி ஒண்டும் சொல்லேல்லை தானே”? என்று கேட்டான்.

“இல்லை தானே வழுக்கி விழுந்ததா  சொன்னவள். ஆனால் டொக்ரருக்கு  சந்தேகம் வந்திட்டுது விடுத்ததுவிடுத்து கேட்டார். அவள் ஒண்டும் சொலேல்லை. சரியான பலவீனமா இருக்கிறாள். இனிமேல்  கொஞ்சம் கவனமாயிரு. ஏதும் நடந்தால் நீயும் உள்ளுக்கை போகவேண்டி வரும். வாழ்கையை வீணாக்காதை.” என்று முடித்து விட்டேன்.
அவன் வைத்தியசாலைப் பக்கமே போகாததால் பயந்து விட்டானா என்று நினைத்துக்கொண்டு  ஒவ்வொரு நாளும் நான் வைத்திய சாலைக்கு சென்று தேவகியோடு  உரையாடிவிட்டு  செல்வது வழமையாகிவிட்டிருந்தது. சில நாளில் தேவகியும் வீடுபோய் விட்டாள். பின்னர் மிதிலா பிறந்ததும் யோகனில் சிறிது சிறிதாக மாற்றமேற்படத் தொடங்கியிருந்தது. தேவகியில் காட்டிய அத்தனை  வெறுப்பையும் மிதிலாமேல் அன்பாகப் பிழிந்தான். என்னோடு கதைக்கும் போதும்  மிதிலா என்று தொடங்கி  மகளைப்பற்றி பேசத் தொடங்குபவன் காலப்போக்கில் மகளைப்பற்றி மட்டுமே பேசுபவனாக மாறிப்போனது மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை  குறைத்து  சத்தம்போட்டு பேசுவதைக்கூட  சுத்தமாக நிறுத்தி விட்டான். அந்த யோகனா இவன் என்று நானே ஆச்சரியப்படும்  அளவுக்கு மாறிப்போயிருந்தான். அவனுக்கு மகள் மீதான பாசத்தை பார்க்கும்போது எனக்கு கனகரின் நினைவும் வந்துபோகும். எனக்கும் திருமணமாகி  மகள் பிறந்துவிட இப்போ நாங்கள் குடும்ப நண்பர்கள். தேவகிக்கு அடியும் பேச்சும் இல்லாமல் போனது எனக்கு நிறையவே ஆறுதல். ஆனால் அவள் மட்டும் இன்னமும் செதுக்கி விட்டதைப்போலவே உணர்வுகளை கூட மாற்றி காட்டாத  எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரத் தனத்தோடு இருந்தாள். மிதிலாவுக்கு இப்போ இருபத்துநான்கு வயது. படித்து முடித்து விட்டு வீட்டுஏஜென்சியில்  வேலை பார்க்கிறாள். இப்படி எல்லாமே நல்லா போய்கொண்டிருந்த நேரத்தில் தான்  ….
0000000000000000000000000

யோகன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவை திறந்தவன், “வாடா….. வா… ”  என்று வாயிலிருந்த விஸ்கி மணத்தோடு வரவேற்றவன், “இந்த சோனியளை நாட்டை விட்டு துரத்த வேணும். அகதியெண்டு சொல்லிக்கொண்டு பிச்சையெடுக்க இங்கை வாறது. பிறகு இங்கை குண்டு வைக்கிறது.” என்று ஒரு தீவிர பிரெஞ்சு வலதுசாரியைப்போலவே  திட்டியபடி  தயாராயிருந்த கிளாசில் விஸ்கியை ஊற்றி எனக்கு நீட்டினான். தொலைக்காட்சியில்  கடந்த வருடம்  எங்கள் நகரத்தில் துனிசியா நாட்டுக்காரன்  கனரக வாகனத்தால் அடித்துக்கொல்லப்பட்ட  நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்கு பிரான்சின் அதிபர் மக்குரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார். நான் உள்ளே போனதுமே அடுப்படிக்குள் நின்றிருந்த தேவகி வழக்கம் போலவே அமைதியாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எனக்கிருந்தால் அதனை தேவகிக்கே  பரிந்துரை செய்வேன்.

“பார் வீட்டுக்கு வந்த உன்னை வா எண்டு கூட சொல்லாமல் எவ்வளவு அமசடக்கமா உள்ளை போறாள். எல்லாம்  இந்த ஓடு காலியால வந்தது. எல்லா சோனியளையும் அடிச்சு கொல்ல வேணும்.” என்று கத்தினான்.
துனிசியன் வாகனத்தால் பொது மக்களை கொலை செய்ததுக்கும் தேவகிக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பிப்போய்  விஸ்கியை ஒரே மிடறில் விழுங்கியபோது, கதவை திறந்து மிதிலா வர அவளுக்குப் பின்னால் பதுங்கியபடி இன்னொரு இளைஞன் உள்ளே வருவதா விடுவதா என தயங்கிக் கொண்டிருந்த போது, “இஸ்மாயில் உள்ளே வா.” என்றாள் .
“அங்கிள் இது இஸ்மாயில். துனிசியன். என்னோடை வேலை செய்யிறான். நாங்கள் லவ் பண்ணுறம். இரண்டு பேரும்  சேர்ந்து வாழப்போறம். உங்கடை பிரெண்டுக்கு அது பிடிக்கேல்லை. அவருக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கோ.”
என வேகமாகச் சொல்லிவிட்டுத்  தன்அறைக்குள் புகுந்தாள். இப்போ எனக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் ஆனால்  முழுவதுமாக புரியவில்லை. கையில் சில பைல்களோடு வெளியே வந்து,

“அப்பா தனிய என்னுடைய டொக்கியுமெண்டுகள் மட்டும்தான் எடுத்துக்கொண்டு போறன். நீங்கள் வாங்கித்தந்த ஒரு உடுப்புக்கூட கொண்டு போகேல்லை. இஸ்மாயிலும் நானும் இனி சேர்ந்து வாழப்போறோம். உங்களுக்கு விரும்பினால் எப்பவானாலும் வந்து பார்க்கலாம்.” என்று விட்டு கிளம்பும்போது அறையின் கதவு திறந்து வெளியே வந்த தேவகி  கையிலிருந்த பணத்தை அவளின் கையில் திணித்துத்  தன்கழுத்திலிருந்த சங்கிலியையும் அவள் கழுத்தில் போட்டுவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். சந்தேகமேயில்லை நோபல் பரிசு அவளுக்குத்தான். ஆனால் இவ்வளவு நேரமும் யோகன் சோனகரை எதுக்கு திட்டினான் என்பது மட்டும் விளங்கியது.
மிதிலா வெளியே போவதை விறைத்து பார்த்தபடியே  இருந்தவன். அவள் போனதும் அவனது அத்தனை கோபமும் வீராப்பும் உடைந்து ஒரு குழந்தைபோல பெரும் சத்தமாய் விக்கிவிக்கி அழத் தொடங்கிவிட்டான். அவனை தட்டித்தடவி  ஆறுதல் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் அறைக்கதவை திறந்து வெளியே வந்த தேவகி எங்களிருவரையும் மாறிமாறிப் பார்த்தவள், மிதிலா சாத்தாமல் சென்றுவிட்டிருந்த வெளிக்கதவை சாத்திவிட்டு மீண்டும் தன் அறைக்குள் புகுந்து சடாரெனக் கதவைச் சாத்திக்கொண்டாள்.
‘ச்சே என்ன பொம்பிளை இவள் ? ஒரு புருசன்காரன் பிள்ளை பிரிந்து போகிற துயரத்தில்  குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறான். ஆறுதல் சொல்லாமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்துகிறாளே! கொஞ்சம்கூட  மனிதாபிமானமே இல்லாத கல்நெஞ்சக்காரி.’

என்று நினைத்தபடி கொஞ்ச நேரத்துக்கு முன்னர் அவளுக்குப் பரிந்துரை செய்த நோபல் பரிசை மீளப்பெற்றுக்கொண்டு யோகனுக்கு ஆறுதல் சொல்லிச் சோபாவில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
மகள் போன சோகத்தில் அன்று  வேலைக்கும் போகாமல் குடிப்பதும் தேவகியை திட்டுவதுமே  முழு வேலையாக செய்து கொண்டிருந்தவன், அடுத்த நாளும் காலை எழுந்து தெளியாத பாதி போதையில் கடைக்குப்போய் விஸ்கி வாங்கிக்கொண்டு வந்து கதவைத்திறந்து ‘அடியே ஓடிப்போனவளே…..’ என்று கத்தியபடி அறையை திறந்து பார்த்தான். வீட்டில் அவள் இல்லை.   விஸ்கியை  திறந்து மேசையிலிருந்த கிளாசில் ஊற்ற போனபோது அதனடியில் இருந்த கடிதத்தை எடுத்து மங்கலாகத் தெரிந்த எழுத்துக்களை கண்ணை கசக்கிவிட்டுப்  படிக்கத் தொடங்கினான்.
பேனாவால் உன் பெயரைக்கூட எழுத எனக்கு மனமில்லை …..

இத்தனை வருடங்களாக  எனக்கும் என் மகளுக்கும் இருக்க இடமளித்து உடை உணவு கொடுத்ததுக்காக நன்றி சொல்லப் போவதுமில்லை. ஏனெனில் ஊரில் தன்கௌரவமும்  செல்வாக்கும் பணத்திமிரும் சரிந்து போய்  விடக்கூடாது என்பதுக்காக கனகரத்தினம்  உனக்கு சேவகம் செய்ய என்னையும் பெரும்செல்வத்தையும் உன்னிடம் ஒப்படை த்திருந்தார். அவர் கொடுத்த பொன்னும்பொருளும் பணமும் என்னையும் என்மகளையும் காலம் முழுதும்  வைத்துச் சாப்பாடு போட போதுமானது. ஆனாலும் அதுக்குக் கைமாறாக உனக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் காமத்தைக் கரைக்க என்னைப் பயன்படுத்த அனுமதித்துள்ளேன். அதில் மகளை காப்பாற்றும் என் சுயநலமும் இருந்தது. என்வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா என்று தெரியா விட்டாலும் மகிழ்வோடு சுமந்து கொண்டிருந்த எனக்கு இங்கு வைத்தியர் பெண்குழந்தை என்று சொன்னதுமே நானும் இன்னொரு தடவை  பிறந்தது போன்ற உணர்வு. என்மகளை நன்றாக வளர்த்து  நல்ல கல்வியை கொடுத்து அவள் விரும்புகிறவனின்  கையில் பிடித்து கொடுப்பதே என்னுள் முழுவதுமாகப் பரவியிருந்தது. உன் காமக்கரைசலில் ஒருகரு உருப்பெற்று விடாமலிருக்க அத்தனை அவதானமாகவிருந்தாலும்  இரண்டுதடவை  என்அவதானம் பிழைத்துப் போய் சுயமாகவே  முயற்சிஎடுத்து  கருவைக்கலைக்க நான் பட்ட வேதனையும் வலிகளும் ……வேண்டாம், அவற்றை உனக்கு விளங்கப்படுத்த வேண்டிய தேவையுமில்லை. எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் நிச்சயமாக  உன்னுடையதும்  என்தாய் தந்தை உறவுகள் அனைவர் மீதுமுள்ள வெறுப்பு அனைத்தையும் அந்தக்குழந்தை மீது காட்டி விடுவேனோ என்கிற பயம்தான் என்னை அப்படியொரு முடிவைஎடுக்க வைத்தது.

அப்படியானால் மிதிலா யாரென்று உனக்குள் இப்போது சந்தேகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். அது என்னுடையதும் ரங்கனுடையதுமான உண்மையான காதலில்  கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள்அல்ல. இந்த உண்மையை நான் அவளிடம் சொல்லவில்லை, சொல்லப்போவதுமில்லை. உனக்கு துணிவிருந்தால் நீயே அவளிடம் சொல்லிக்கொள்ளலாம். எனது இத்தனை வருட நோக்கம், தவம் இப்போ நிறைவேறி விட்டது. நான் போகிறேன். என்னை தேடும் முயற்சியில் இறங்காதே. அதில் பயனுமில்லை. இப்போ உன் விஸ்கியை  தாராளமாக  குடிக்கலாம். சியேர்ஸ்…..
இப்படிக்கு
ஓடிப்போனவள்
கைகள் வேகமாக நடுக்கமெடுத்து போதை இறங்கி விட்டிருந்தது. தொண்டை வரண்டது போலவிருக்கக் கிளாசில் ஊற்றிய விஸ்கியை கலவையில்லாமலே ஒரே மடக்கில் குடித்தவன், ‘அது என்னுடையதும் ரங்கனுடைதுமான உண்மையான காதலில் கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள் அல்ல.’
என்கிற வசனத்தை திரும்ப திரும்பப் பல தடவை படித்தவன், மேசையில் ஓங்கி குத்திவிட்டு   தொலைபேசியை எடுத்து அழுத்தினான்.
00000000000000000000000000

கலவி முடிந்த களைப்பு இருவரினதும் மூசுக்காற்று அறை முழுதும் பரவி ஜன்னல் கண்ணாடிகளிலும் அப்பியிருந்தது. இடுப்புவரை இழுத்து விடப்பட்ட போர்வைக்குள் என் மார்பின் முடிகளை அவள் கைகளால் கோதி விளையாடிக்கொண்டிருக்கும்போது,    இடைவிடாமல் அழைத்த தொலைபேசியை எடுத்துக் காதில்வைத்தேன்.
“மச்சான் எங்கை நிக்கிறாய்? மனிசியைக் காணேலை. கடிதமெழுதி வைச்சிட்டு எங்கையோ ஓடிப்போயிட்டாள். எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்லை. பொலிசுக்குப் போறது நல்லதெண்டுபடுது. உடன வாறியோ?”
“என்னடா சொல்லுறாய்?அப்பிடி ஒண்டும் இருக்காது. பதட்டப்படாதை. நான் ஒரு  மீற்றிங்கில  இருக்கிறன். அரை மணித்தியாலத்தில வாறன்.” போன்  கட்டானது.
“யாரது? என்ரை  புருசன் தானே?”
“ம் …..”
“என்னவாம்?”
“உன்னைக் காணேல்லையாம். பதட்டமாயிருக்கிறான். பொலிசுக்குப் போறதுக்கு என்னை வரட்டாம்.”
“நீயே  கண்டு பிடிச்சு குடுக்கலாமே?”
“எனக்கென்ன  விசரோ …அதுசரி கடிதத்திலை என்ன எழுதி வைச்சனி?”
“எல்லாமே ..”
“எல்லாமே எண்டால். மிதிலாவைப் பற்றியுமோ?”
“ம் ……”
“அடியே அவன் மிதிலாவிலை எவ்வளவு பாசமெண்டு உனக்கு தெரியும்தானே. உயிரையே வைச்சிருக்கிறான். தற்கொலை செய்தாலும் செய்துபோடுவான். எதுக்கு அதை சொன்னனி?”
லேசாக சிரித்தவள், “தற்கொலை செய்யிறதெண்டால் இவ்வளவு நேரத்துக்கு செய்திருக்க வேணும். தண்ணியை போட்டிட்டு உனக்கு போனடிச்சு விவரம் சொல்லிக்கொண்டிருக்க  மாட்டான். நண்பனிலை பாசமெண்டால் இப்பவே ஓடிப்போ.”
“சரி ..சரி .. கோவிக்காதை. அவளை மேலே இழுத்து உதட்டில் ஒரு இச் வைத்து அடுத்ததா என்ன செய்யிற திட்டம்?”
“ஓடிப்போகப் போறன்..”
“யாரோடை?”
என் வலப்பக்க மார்பு காம்பை விரல்களால் கசக்கி நுள்ளியவள், “உங்களைத் திருத்தவே முடியாதடா” என்று என்னைத் தள்ளிவிட்டாள்.
பயங்கர வலியெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல், லேசாய் தடவிவிட்டு  மீண்டும் அவளை இழுத்தணைத்து, “சரி என்ன செய்யப் போகிறாய் ? அதையாவது சொல்லு.”
என்னிலிருந்து விடுவித்து முகட்டை அண்ணாந்து பார்த்த படியே, “என்னைச்சுற்றி  மனித முகங்களோடு நாக்கில் நீர்வடிய அலைந்த ஓநாய்களில் நீ மட்டும் கொஞ்சம் நல்ல ஓநாய். அதுதான் கடைசியாக  உன்னோடு இருந்திட்டு போகவந்தன்.”
“அப்போ நானும் நல்லவனில்லையா?”
“உற்ற நண்பனுக்கும் ,ஊரில இருக்கிற மனிசிக்கும் போனடிச்சு தேவகியோடை  படுத்திருக்கிறன். நான் நல்லவனா எண்டு கேள், அவையே சொல்லுவினம்.”
கேள்வி  சுருக்கென்று  குத்தினாலும் சிரித்து சமாளிப்பதைத்  தவிர வேறுவழியில்லை.
“நான் கெட்டவன் என்றால் எதுக்கு இவ்வளவுதூரம் பழகினாய்?
“உண்மையை சொல்லு உனக்கு  என்னில ஆசை இருக்கேல்லையா?”
“அது வந்து ….. “
“உன்னால இல்லையெண்டு சொல்லமுடியாது. என்னை  சாறியில கோயில்லை வைச்சு பார்த்த பார்வையிலையே எனக்கு விளங்கிட்டுது. எல்லாரையும் போல உனக்கும் அதை எனக்கு சொல்ல பயம். அந்த விசயத்தில யோகன் பரவாயில்லை. ஆனா பிறகு என்னை டொக்டரிட்டை  கூட்டிக்கொண்டு  போன பிறகு யோகனுக்கும் எனக்கும் கலியாணம் நடந்ததிகதியும்  கர்ப்பமான திகதியும் வித்தியாசமா இருக்கே? எண்டு என்னட்டை  நீ கேட்டுச் சிரித்த அந்த விசமச் சிரிப்பிலையே எனக்கு விளங்கிட்டுது.”
“ஆனா நான் உன்னை வெருட்டேல்லை …..”
“அந்த சிரிப்பை விட வேறையென்ன வேணும். எனக்குப் பொம்பிளைப்பிள்ளை எண்டு தெரிஞ்ச துக்கு பிறகு எல்லாத்துக்குமே நான் தயாராகிட்டன். அதை வளத்தெடுத்து அவள் விரும்பிறவனுக்கே கையிலை பிடிச்சு குடுக்கிற வரை உன்னால எந்த பிரச்னையும் வராமலிருக்க நானே உன்னோடை இசைஞ்சு போறதைத் தவிர வேற வழியிருக்கேல்லை…”
“பரவாயில்லையே புத்திசாலி எண்டு மனதுக்குள் பாராட்டினாலும். இந்தத்தடவை விருது எதையும் பரிந்துரைப்பதாயில்லை. சரி எங்கேதான் போகப்போகிறாய்?”
“அதெல்லாம் உனக்கு சொல்லத்தேவையில்லை. போகமுதல் கடைசியாய் இன்னொரு தடவை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் என்றபடி போர்வையை விலக்கி எழுந்தவள் அதே போர்வையால் என் கைகள் இரண்டையும் கட்டியவளிடம்,
“ஏய் ..என்ன செய்யுறாய் …. ?”
என் உதட்டில் அவளின்  சுட்டு விரலை அழுத்தி,
“உஸ் ……எதுவும் கதைக்க கூடாது.” என்றுவிட்டு இறுக்க கட்டிய கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பின்பக்கமாக கட்டில் சட்டத்தில் கட்டியவள், மேலே ஏறி அமர்ந்திருந்து உதட்டில் முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தாள்.
“கள்ளி ..இப்படியெல்லாம் உனக்கு தெரியுமா?”
என்தொடைகளுக்கு நடுவே அவள் தலை அசையத்தொடங்கியதும், “இதுக்காகவாவது ஏதாவது விருது கொடுக்கத்தான் வேணும்” என்று நினைத்தபடியே இன்பவலியில் லேசாய்க் கண்ணை மூடியபோதுதான் அந்த மரணவலி ..
“ஐயோ…..”.
உடைந்த குழாயிலிருந்து தண்ணீர் சீறியடிப்பது போல தொடை நடுவே இரத்தம் சீறிக்கொண்டிருக்கத் தாங்கமுடியாத வலியில் உடலைப் புரட்டிப்புரட்டிக் கால்களைக்   கட்டிலில் அடித்துக் கட்டியிருந்த கைகளையும் விடுவிக்கும் முயற்சியோடு கத்திக்கொண்டிருக்க, எழுந்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடைக்குள் துப்பியவள், பல நாள் பட்டினி கிடந்த சிறுத்தையொன்று  கிடைத்த  மானைக் கலைத்து வேட்டையாடிக் களைப்பை மறந்து பசிக்குச் சாப்பிட்டு முடித்த பின்னர் ருசிக்காக வாயில் வழியும் இரத்தத்தை நாவால் சுழற்றி நக்குவதைப்போலவே தன் வாயில் வழிந்த இரத்தத்தை  நாவால் துடைத்து  உச்சுக்கொட்டி ருசித்து விழுங்கிவிட்டு,
“இது இருக்கிறதால தானே உங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆட்டம் ?” என்றபடி தலகணையை எடுத்து என் முகத்தில் அழுத்திப்பிடிக்க, மூச்சுத் திணறிக் கண்கள் இருண்டு அடித்துக்கொண்டிருந்த கால்கள் சோர்ந்துபோய் உடல் குளிர்ந்து லேசாகி  பறக்கத் தொடங்கியது போலதொரு உணர்வு.
அசைவுகள் அனைத்தும் அடங்கியதும் தலகணையை எடுத்துப் பார்த்தவள், அவசரமாக உடைகளை அணிந்தபடி வெளியேறிவளின் உருவம் நிழலாய் தெரிய எனது  வாய் முணுமுணுத்தது, “ஓ …டி …ப் …போ…ன ..வ ..ளே …….. !”