Navigation


RSS : Articles / Comments


போருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம்

2:08 PM, Posted by sathiri, No Comment

லண்டனில் நடந்த 40 வது இலக்கிய சந்திப்பில்   போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம்  என்கிற  தலைப்பிலான உரை

இலக்கிய கூட்ட மண்டபத்திற்கு  உள்ளே நான் போய் சில நிமிடங்களில்  ஒருவர்   சிறிய புத்தகம் போல தயாரித்திருந்த  பிரதிகளை கொண்டு வந்து ஒவ்வொருவராக வினியோகம் செய்து கொண்டிருந்தவர் ஒன்றை என்னிடமும் நீட்டினார். வாங்கி பார்த்தேன் முகப்பில்  சாத்திரி  ரயாகர  மயாண காண்டம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.பக்கங்களை  புரட்டியபோதுதான்  அது என்னையும் ராயாகரனையும் போட்டுதாக்குவதற்காக தயாரிக்கப் பட்டி பிரதிகள் என்றுபுரிந்தது. இன்றைய நிகழ்ச்சி  சூடாகத்தான்  இரக்குமென்று புரிந்தது. அது போலவே  நான் பேசும் முறை வந்ததும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக  சில நிமிடங்கள் கழிந்தது.அதைப் பற்றியும்  எனது உரைக்குப் பின்னரான  விவாதத்தின்போது  கேள்வி பதில்களை  தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல் குழப்பங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்ததும். எனது கையில் இருந்த பிரதியை காட்டி  சாத்திரி மயான காண்டம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவே சாத்திரியை  அரிச்சந்திரன்  என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ரெிவித்தபடி  எனது உரையை  தொடங்கினேன் கீழே எனது உரையின் முழு வடிவம்.

போருக்குப் பின்  புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.

அனைவரிற்கும் வணக்கம்

இலண்டினில் இப்படி ஒரு  நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும்  நண்பர் பொளசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந் கொள்ளலாமா என கேட்டிருந்தேன். காரணம் புலம்பெயர் வாழ்வில்  இப்படியான நிகழ்வுகளில்  எதிலுமே நான் கலந்து கொள்ளாது இதுவரை  விலகியே இருந்திருக்கிறேன் அதற்கான தேவைகளும் இருந்தது.  நான் கேட்டதுமே  உடனடியாக   ஓஓஓ...தாராளமாக கலந்து கொள்ளுங்கள் ஆனால்  போருக்குப் பின்  புலம்பெயர்ந்து வாழும் எமது சமூகத்தின் அரசியல் பற்றி  20 நிமிடம் கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்பதான்..அடடடா..சொந்தச் செலவிலை சூனியம் வைச்சிட்டமே என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை  இணையங்களிலை  ஏதாவது கதை கட்டுரை  எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும் பேனையையும். அல்லது ஒரு கணணியை தந்தால் மட மடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால். இப்பிடி கொஞ்சப் பேருக்கு முன்னாலை  கதைக்கவேணும் ..அதுவும் அரசியல். ..உருப்பட்ட மாதிரித்தான்...
போரிற்கு பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் எப்படியான அரசியலை செய்யலாம்.
. என்ன செய்யலாமென்று  யோசித்துப் பார்த்தேன்    மிக சாதாரணம் ஒரே வரியில் சொல்லி விடலாம்.இப்போது  உள்ள சூழ் நிலையில் பொத்திக்கொண்டு போசாமல் இருப்பதுதான் சிறந்தது. ..
இல்லை அதை விட வேறு எதையாவது புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்யவேண்டும் என நினைத்தால் . ஜ.நா சபை வரை நடக்கலாம்.அடுத்தது   இந்த  கங்கம் ஸ்ரைல் பாடலை எடுத்து    செய்து அதில்  மகிந்தா . சோனியா.  மன்மோகன் சிங். வேணுமெண்டால்  பான்கி மூன்.  இவர்கள்  சேர்ந்து  ஆடுகிற மாதிரி  கிராபிக் செய்து  யூ ரியூப்பில்  தரவேற்றி  இணையத்தில பரவ விடுவதோடு  முகப் புத்தகத்தில்  பதிவு செய்து அப்படியே  லைக்குகளை அள்ளலாம்.யாகம் நடாத்தலாம்.தேவாலயத்தில் திருப்பலி பூசை கொடுக்கலாம்.

சாகும்வரை உண்ணாவிரதம்  என்று அறிவித்து விட்டு  சில நாட்களின் பின்னர் ஒரு மனுவை யாரிடாவது  கொடுத்து விட்டு அப்படியே பேசாமல் போயிடலாம்.  உண்மையில் எனக்கு தெரியாத ஒரு விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி  சாகும்வரை உண்ணாவிரதம் என்று    அதிரடி  அறிவிப்புக்கள்  சிலரது படங்களோடு வெளியாகும்..  ஆனால்   இந்த சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம்  என்று அறிமுக காலத்தில் இருந்து  இன்று வரை  திலீபனைத்தவிரை   கொண்ட கொள்களிற்காகவே  யாராவது  உண்ணா விரதம் இருந்து  உயிரை விட்டிருக்கிறார்களா????   யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை சொல்லுங்கள்.. பிறகு எதுக்கு  சாகும்வரை உண்ணா விரதம் என்று தொடங்கி  பிறகு   அதை  சத்தமேயில்லாமல் கைவிட்டு    சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் என்னவென்று  செய்து காட்டிய திலீபனை கொச்சைப்படுத்துகிறீர்கள்...... பேசாமல்  அடையாள உண்ணா விரதம் எண்டு அறிவியுங்கப்பா..
 ஆனால்  இவை எல்லாவற்றையும் ஏற்கனவே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் பலா பலன்கள் என்ன  என்பதும்  அதனை செய்பவர்களிற்கும் தெரியும் ஆனாலும் அதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை அப்படியே  விட்டு விடுவோம் அவரகள் தொடரட்டும்.

ஆனால்  இலங்கையில் வாழுகின்ற சிறு பான்மை இனங்களான தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆக்கபூர்வமாக . நடைமுறைக்கு சாத்தியமான .யதார்த்தமான அரசியல்  எப்படிச் செய்யலாம் என்றுதான் பாரக்கவேண்டும்.  அதை செய்வது இலகு ஆனால் அதனை செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இங்கு நான்  தனியாக  தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டதற்கு காரணம். அவர்கள் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்கட்சிகளோடு இணைந்து வேலை செய்து தங்கள் அரசியல் போராட்டங்களை  தொடங்கவேண்டிய காலகட்டம் இன்:று வந்து விட்டது.என்பதற்குமப்பால் அதற்கான கட்டயம்  வந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இது இரண்டு  இனங்களிற்குமான இறுதி சர்ந்தர்ப்ம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் முடிவில் இலங்கையில் தமிழினம் தனது அனைத்து வளங்களையும் இழந்து  அதன் பலம் இழந்து  பேரினவாத அரசுடன் பேசும் பேசும் சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல். அங்கு புலிகளின்  முடிவு  என்பது   தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு அல்லது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தங்களோடேயே அனைத்தையும் அழித்துக்கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் முக்கியமானது இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான் .
இப்படியாக தமிழ்த்தரப்பினை  முழுமையாக பலவீனப் படுத்தி முடித்துவிட்ட பேரினவாதம்  அடுத்தாக  இப்பொழுது கைவைக்கத் தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீதுதான்.அதைப்பற்றி விபரமாக நான் இங்கு சொல்லததேவையில்லை.

இன்றைய  இலத்திரனியல் உலகத்தில் வினாடிக்கு வினாடி செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது. இந்த இடைவெளியை பயன்படுத்தி  இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி விட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற  தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும்  வசதி வாய்ப்புக்களை அனுபவித்து விட்டார்கள்.
இப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப் பட்டு விட்டதன் பின்னர்  தங்களிற்கு  துணை நின்ற  தமிழ்தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய் விட்ட நிலையில்  சிங்கள பேரினவாதம் தனது பார்வையை  முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலையில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு  முண்டு கொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள்  ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப் படுத்துவதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில்  தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல் தமிழ் இளைஞர்கள்  எப்படி  பேரினவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ  அதே போல இன்று பேரினவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய  முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்புக்களை காட்டத் தொடங்கி விட்டது.

இங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை  பேரினவாதிகள்  என்று அழைப்பது எதனால் என்றால்  தமிழ் சமூகமும்  சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய்  தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின்  முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது  தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும்  மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை  உண்மையான  சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய  மகிந்தாவிற்கும்  பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...

அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....

இதனால் அவர் எதிரணிக்கு  தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான  விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக   இலங்கை வாழ் தமிழர்களிற்கு   பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால்  அவர்களும் இந்த நாட்டில்  சகல உரிமைகளோடும் வாழும்  சுய நிர்ணய முறையிலான  தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு  இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை  அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த  பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்  1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.

இங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும்... தமிழர்களிடேயே  இனவாதம் இருக்கின்றது என்றில்லை முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு  இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்படவில்லை..பிறகு அவர்களிற்குள்ளேயே  கிறீஸ்தவர்கள்  இந்துக்கள் என்று மோதிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால்  அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள்  தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான  சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடேயும் இல்லை.
சரி பலகாலமாக வளர்க்கப்பட்ட இனவாதத்தை விட்டு  இப்பொழுதுள்ள  நடை முறைக்கு வருவம்.யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக்கான  பெண்போராளிகளின்  நிலை  மிக மோசமாக இருக்கிறது. பாவம் அவர்கள்.புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய அதே சமூகத்தால்  அதே உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை  முன்னை நாள் போராளிகள் என்று தூக்கி கொண்டாடச்சொல்லவில்லை  சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை  தமிழ் சமூகம்....இப்போ அண்மைக்காலத்திலும்  அல்ஜசீரா  தொலைக்காட்சியினர் முன்னைநாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித்திருந்தார்கள்.

 சில நேரங்களில் நீங்களும் பாத்திருக்கலாம்.. எனக்கு பார்க்கக்கிடைத்தது. அதை பார்த்தபோது அவர்கள்  ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால்  இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக  இருந்தவள் இரவு பகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள் யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கி அடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது ஆனால் இப்பொழுது  இரவு ஏழுமணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை  அதற்கு காரணம் எனக்கு பயம் அல்ல என்னை சுற்றியுள்ள சமுகம்தான்  இரவு வெளியில் போனாலே   இவள் இந்த நேரம் எங்கை போறாள்???..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ??....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில்  பப்பாளிப்பழம்  மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும்  ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய்  தாவிப் பாய்ந்து  கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே  எனக்கு பயமாக இருக்கின்றது .. .........இவள் என்ன  ஆம்பிளையா  பொம்பிளையா???? என்கிறது சுற்ற உள்ள சமூகம்.

ஆகவே இங்கு   பெரும்பான்மை  அரசிடம்  இருந்து சிறுபான்மை இனங்களிற்கான  நிம்மதியான சுதந்திரமான  வாழ்க்கையை  பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லமல்  எங்கள் சமுகத்திடம் இருந்தும் இந்த முன்னை நாள் போராளிகள் குறிப்பாக பெண்போராளிகளிற்கும் நிதந்தரமானதும் சுதந்திரமாதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம் பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம்....  அப்பாடா  சாத்திரி இப்பவாவதே ஒருமாதிரி தலைப்புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்....
யோசிக்கும்போது  நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல்  பொத்திக்கொண்டும் போக  முடியாது...அடுத்ததாக  கூறியது போல  இந்த யாகம் வளக்கிறது  ..ஜெனீவா நொக்கி நடப்பது ..காவடி எடுப்பது... இதனை பலர் செய்துகொண்டிருப்பதால். அவர்களே  அதனை தொடர்ந்து செய்யட்டும்.  ஆனால்  புலிகளின் வெற்றிகளின் போது  விசிலடித்து  மகிழ்ந்து  யுத்தத்திற்காக  பணம் கொடுத்தவர்கள்.  புலிகள்  சரியில்லை  அவர்களிடம்  ஜன நாயம் இல்லை  அவர்களின் போராட்டம் சரியில்லை.என்றவர்கள்..  வெளி நாட்டிற்கு வந்தாச்சு  அங்கை  இருப்பவர்கள் எக்கேடு கெட்டால்  என்ன  எங்களிற்கு புலியும் வேண்டாம் அரசாங்கமும் வேண்டாம்  என்று  ஒதுங்கி இருந்தவர்கள்  என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு  காரணம்..  புலம்பெயர் ந்து வாழும் அனைத்து  தமிழர்களும் ஏதோ வழியில்  காரணம்...இதனை யாரும் தட்டிக் கழிக்ககவோ மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள்.நாங்கள் சார்ந்த  சங்கங்கள்....சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததமிழன் இன்று புலம் பெயர் தேசமெங்கும் ஊர்சங்கம்..பழைய மாணவர் சங்கம். வர்த்தகர்  சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள்  வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு  தேவையில்லாத விடயம்

. அதைவிட  எங்கள்  பிரதமர்  திரு  உருத்திர குமார் இருக்காக.....
ஆம். நாடு கடந்த தமிழீழ அரசு ..உலகத்தமிழர் பேரவை. பிரித்தானியத் தமிழர் பேரவை. எல்லா நாடுகளிலும் இருக்கும்  மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடுகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள்.  அதை விட மிக   மிக முக்கியமாக  இலங்கைத் தீவில்  தமிழர் தரப்பையும். தமிழ் பேசும் முஸ்லீம்  தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  அமைப்புக்கள்.  காணரம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து  கத்தினாலும்  சர்வதேசம் என்பது  அங்கிருந்து வரும் குரலிற்கே  அதிகளவு   செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனெனன்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல..எனவே எல்லாருமே ஒரு பொது நோக்கத்தோடு இணைந்து  ஒவ்வொரு அமைப்பில்  இருந்தும் ஒரு பிரதிநிதியை  தேர்வு செய்து  ஒரு குழுவை  உருவாக்க வேண்டும்.  அந்தக் குழு  பேச்சு வா்த்தையில் ஈடுபடவேண்டும்.......

யாரோடு?????....பேச்சு வார்த்தையில் ஈடபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை  யாரோடை பேசிறதெண்டு சொல்லவேயில்லையே......??. இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்..........

அப்பவே நினச்சம் ஜயா.சாத்திரி இதைத்தான் சொல்லுவானெண்டு...பெரிய தொகையா வாங்கியிருப்பானோ??? இலங்கை புலனாய்வுத்துறை  அனுப்பியிருக்குமோ??? இணக்க அரசியல்  செய்யச்சொல்லுறானோ????இப்படித்தான்  பலர் நினைக்க முதல்  எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.இதனை பேச்சுவார்த்தை என்பதை விட  ஒரு பேரம் பேசுதல். நிகோசியேசன்.இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால்.எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ. அமெரிக்காவோ..ஜ.நா.சபையோ. இந்தியாவோ..வந்து வாங்கித் தருவார்கள் என்றும். ஒவ்வொரு ஆண்டும் ஜ.நா  கூடும்போது  இலங்கையரசிற்கு  எதிராக  தீர்மானம் கொண்டு வந்து  மகிந்தா அரசை கலைத்து போர்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தாவையும் கோத்தபாயாவையும். கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. ஏனென்றால்  மக்காளால் தெரிவு செய்யப் பட்ட  ஒரு நாட்டின் அதிபரை அது எந்த மக்கள்  என்றெல்லாம்  கிடையாது   அவர் பதவில் இருக்கும் போது  விசாரணையே செய்யமுடியாது  இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம்.  அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது.அப்படியிருக்கும்போது  பதவியில் இருக்கும் மகிந்தாவை  அதுவும் போர் குற்றவிசாரநை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது  நடக்கவே நடக்காது.

அவரது பதவி பறி போனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம் ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று சொன்னேன்.  அடுத்ததாக    எம்மவர்களால்  நடாத்தப்படும் போர்குற்ற விசாரணை  போராட்டங்களில் பொன்சேகா  பெயர் இல்லை ஏனெண்டால் அவர் இப்ப நம்மாள்...
இந்தியா எங்கள் பிரச்சனையை  தீர்க்கவேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம் ஆனாலும் அதன்  வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் எதனையும்  உடனடியாக நாங்கள் எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் கொகை வகுப்பு என்பதே  இந்திய நலன் என்பதற்குமப்பால்  இந்திய கொள்கை வகுப்பளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இந்தியாவின் கொள்கைவகுப்பாகின்றது  இந்த கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில்  எடுத்தில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு.இந்தியா தனது நலன்களிற்காக  இலங்கைத் தீவில் பிரச்சனைகளை உருவாக்குமே தவிர தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்னபதும்  எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது.அது மட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே   இலங்கையரசிற்கு அழுத்தத்தை கொடுத்து  பிரச்னையை தீர்த்திருக்கலாம்.. ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது  தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை..


இன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்  எம்மவர் எல்லாரது கவனத்தையும் திருப்பியிருக்கின்றது ..நல்ல விடயம். ..தமிழர்கள்  என்கிற  ரீதியில் அதற்கான தார்மீக கடைமை அவர்களிற்கும் உண்டு.ஆனால் அது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதனையும் இது கொண்டு வந்துவிடாது . ஏன்  ??சட்ட மன்றத்தில் முதவமைச்சர் ஜெயலலிதாவே  தீர்மானம் போட்டிருக்கிறாரே  என்று சொல்லலாம்.  அது கூட அடுத்த லோக்சபா  தேர்தலிற்காக  ஈழத் தமிழர் விவகாரத்தை   மீண்டும் தன் கையில் எடுத்து டெசோ  மூலமாக  தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை  மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக  கருணாநிதி போட்ட திட்டத்தை  முறியடிக்க  சாதுரியமாக  மாணவர் போராட்டங்களிற்கு ஆதரவளித்து  சட்ட மன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த  உணர்சியலையின் ஆதரவுகள் அனைத்தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி  அரசியல் சாதுரியத்தை காட்டி விட்டிருக்கிறார். ஜெயலலிதா..இது அவர்களது  அரசியல் என்றாலும்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது  எமங்கு வந்தவரை இலாம்  என்பதோடு இதை வைத்துக்கொண்டு  நாங்கள் அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்தப் போகிறோம்  என்தில் தான் மிகுதி தங்கியிருக்கின்றது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை..

அதே நேரம் இந்தியா என்பது 28 மானிலங்களையும்.  ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு  28 மானிலத்தில் ஒரேயொரு மானிலம்  அந்த மானில அரசின் எந்த பிரதிநிதியும்  மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை  இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம்  மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழ் நாடு அரசு   தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறைவேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே  ஆயிரக்கணக்கில்  இருக்கின்றது.  அதை விட  மத்திய  அரசானது  தமிழ்நாட்டையும் தமிழர்களையும்  எந்தளவு  கவனத்தில்  எடுக்கின்றது  என்பதற்கு அண்மைய  உதாரணம். இரண்டு  மலையாள  மீனவர்களை இந்திய கடல் எல்லையில்   இத்தாலிய  கப்பல் சிப்பந்திகள்  சுட்டு கொன்றதும்  இந்தியா  எடுத்த  நடவடிக்கைளும்.  அதே நேரம்  இன்றுவரை  சுமார் நானூறு தமிழ்நாட்டு தமிழர்கள்  இலங்கை இராணுவத்தால்  கொல்லப்பட்டு  பலர் இலங்கை சிறையில் வாடினாலும்  அதற்காக  ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல்   இலங்கை நட்பு நாடு என்று    அதனை தாங்கி பிடிக்கும்  இந்தியாவை  நாம் எவ்வளவு  தூரம் நம்பலாம். இது கேள்விதான்.
வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது அண்ணன் தம்பி பிரச்சனை நாங்கள் அடித்து கொள்ளுவோம்  கட்டியும் பிடிப்போம் எனவே   இதனை எங்களிற்குள்  தீர்த்துக்கொள்கிறோம் என்று இந்தியாவிற்கு  பகிரங்கமாக அறிவித்திருந்தார்  அன்றைய இலங்கை ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசா.இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன் படுத்தாமல்  .அனுப்பியாச்சு..

 அடுத்ததாக  சர்வதேசம். வருடா வருடம் ஜ.நா சபையில்  தீர்மானம் கொண்டு வரும். இந்த வருடமும் கொண்டு வந்தது. அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு  போவார்கள்.  தீர்மானத்திற்கு  ஆதரவாக  25 நாடுகள் ..எதிராக   18 நாடுகள்  வாக்களித்தன..  10 நாடுகள்  வாக்களிப்பில்  கலந்து கொள்ளவில்லையென்று செய்திகளிள் வெளியாகும்.  ஆனால் தீர்மானம் என்னவென்றால்  இலங்கையில்  நடந்து முடிந்த   மேசமான  வன்முறைகளை   இலங்கையரசு விசாரிக்கவேண்டும்.  அதவது  இலங்கையில் நடந்தது படுகொலைகள் என்றோ  இனவழிப்பு என்றோ அங்கு  குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அதை அவர்களே  விசாரிக்கவேண்டுமாம். களவு எப்படி நடந்தது  கள்ளனே  விசாரிக்க வேண்டுமாம். தீர்மானம் நல்லாயில்லையா???? ஆகவே சர்வதேசமும்  தமிழரிற்கானதொரு தீர்விற்காக  இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக் போவதில்லை. அவர்களின அழுத்தங்கள் எல்லாம் இலங்கையரசை பணிய வைத்து தங்கள் சார்புநிலை  எடுக் வைத்து  தங்கள் பொருளாராதார  நலன்களை  பேணுவது மட்டுமே.

ஆகவேதான்  சாட்சிக் காரனை விட சண்டைக்காரனேடு  பேசுலாம் என்கிறேன். தனித் தமிழீழத்திற்கான  வாக்கொடுப்பு வேண்டும் என்று  தமிழகத்திலும் போராட்டங்கள்  சூடு பிடித்திருக்கிற நேரத்திலை   சில நேரம்  ஜ. நா சபையே  வாக்கெடுப்பு நடத்தி  தமிழீழத்தை வாங்கி  தந்தாலும் தரலாம்  இந்த நேரம் போய்  இந்த நேரத்திலை சாத்திரி  வேணுமெண்டே குளப்புறானே........

சரி  ஜ. நா சபையே நாளைக்கு  இந்த தீர்மானத்தை நிறைவேற்றி  இலங்கையில் வாக்கெடுப்பு  நடத்தி அதற்கு வாக்குகளும் விழுந்து விட்டது  என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போ தமிழீழத்தை கொண்டுபோய் யார்  கையில் கொடுப்பது.  சம்பந்தர் தலைமையிலால தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமா??? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும்  பதிவு செய்யப் படாத கட்சியாக  உள்ளுக்குள் தமிழரசு  கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு  உடைனேயே   சைக்கிள்  சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது  டக்லசிடமா????டக்லஸ் ஒட்டுக்குழு  துரோகி என்பார்கள்.  அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான்.  அதனாலை அங்கை விடுவம்  தமிழீழத்தை   இங்கு  நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமா??   முடியாதே   உருத்திரா கே.பின்  ஆள் என்கிறார்கள். சரி இந்த  ஜி. ரி. எவ்...  பி. ரி.. எவ்...   இவங்களும்  இடைக்கிடை  ஏதாவது  கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான்  இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது...  சரி அப்ப  வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு  மாவீரர் தினத்தை  இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே  அவங்களிட்டை  கொண்டு போய் குடுக்கலாமா??.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு  முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும்.  என்ன தான் செய்யலாம்  தமிழீழத்தின்  அரசாங்கத்தை நிருவகிக்க  தமிழீழத்  தமிழர்கள்  சரியான   தகுதியானவர்கள் யாருமே இல்லையே  என்ன செய்யலாம்  ஒரு மாறுதலுக்காக  கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா??? வை.கோ....நெடுமாறன்.... இவர்கள் தமிழ் நாட்டில் இருந்து  தமிழீழத்தை நிருவாகிக்கலாம்.  எப்பிடி ஜடியா??

ஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை ..தனி நாட்டை..  சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி ..சுயநலம் இன்றி  தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த  அக்கறைகளோடு  வழி நடாத்தக் கூடிய   ஒட்டு மொத்த தமிழர்களின்  நம்பிக்கைகளையும் பெற்ற  பலமானதொரு  அமைப்பு எம்மிடம் உள்ளதா??????........இல்லை.....அது மட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை. ... பக்கத்து நாட்டுக் காரனையும் வெளி நாட்டுக்காரர்களையும் நம்பி காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் போகின்றோமா??
அல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு  முதலில்  அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும்.  அவர்கள் நிலங்கள்  இருக்கவேண்டும் .  எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும்.  எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர் .. எமது உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்தும்  இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை.. பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு  எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும்.  முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும். பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப் படுத்தப் படவேண்டும்.  அதற்கு  நான்  முன்னர் கூறியது போல் அனைத்து  தமிழர் தரப்பையும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு  குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை  தொடங்கவேண்டும்.  அந்த பேச்சு வார்த்தைகள்  ஊடாக  சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு  அவர்களிற்கு  காவல்த்துறை  மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு  நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்..  அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை  தூக்கி நிறுத்த முடியும்.  அவர்கள் அரசியல் ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள்  எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால்  அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள்  தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.