Navigation


RSS : Articles / Comments


வயலும் வைரவரும்

2:23 PM, Posted by sathiri, No Comment

வயலும் வைரவரும்.

இந்தவார ஒரு பேப்பரில்

வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான்.

மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன். எங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை.பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம்.பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார்.அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும்.பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை அதக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இருள்அழகனும்தான்.ஆனால் ஊரிலை அந்தகாலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர் அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.

பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர்.நாய் தானே அவரின்ரை வாகனம்.எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும் தான் வைரவருக்கு துணை.யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுத்திருக்குங்கள்.நாங்களும?? வயலிலை விதை பொறுக்க வாற பறைவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிட்டிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம். அதுமட்டுமில்லை அதுதான் வைரவர் கோயில் மணியும் 2 இன்1 எண்டு பயன்படும். மாலைநேரத்திலை அந்தக்கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான்.ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது.

வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது.இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமுகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர் அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போக மாட்டார்.அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்கு மட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார்.ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை. ஒரு அறுவடைக்காலம் சிலர் வைரவருக்கு பொங்கிபடைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து(சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யப்போறன் பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அனியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது கள்ளபீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது.

ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப் போட்டு மயங்கிவிழுந்திட்டார். சுத்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக்கேக்கிற அதே வசனமான ஆ...நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது. எண்டு கேட்டார்.அதுவரை காலமும் அவரை டேய் எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் அய்யா உங்களிலை வைரவர் வந்தவர் எண்டு சொல்லவும். அவர் அப்பிடியா எண்டு கேட்டிட்டு வைரவரைப்பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார்.அதுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து. மழைவந்தால் மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத்தொடங்கிட்டார்.

அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே. உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார்.அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப்பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம் அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.

ஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு. வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம்.அவருக்கு நாங்கள் தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது.தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன் என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார். அடுத்த வெள்ளிக்கிழைமையும் வழைமை போல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர்அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர். சனங்களின் தொல்லை குறையவே.வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்தக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.

விழித்திருப்போம்

1:00 PM, Posted by sathiri, No Comment

http://www.esnips.com/doc/eab937d6-453d-48f5-813b-06334038bc48/விழித்திருப்போம்

சுது மாத்தையாவும் சுடுபாணும்

12:57 PM, Posted by sathiri, No Comment

சுது மாத்தையாவும் சுடுபாணும்.

பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்கிற விலையை விட இரண்டு மடங்கு கூடுறது வழைமையான விசயம். சிறீமாவின்ரை ஆட்சிக்காலத்திலை அவாவின்ரை பொருளாதாரக் கொள்கையாலை ஏற்பட்ட பட்டினி யாலை சனங்கள் பாணுக்கு நீண்ட வரிசையிலை காவல் நிண்டதை பலர் கதை கதையாய் சொல்லுவினம்.அது மட்டுமல்ல இந்த பாணிற்கு 83 கலவரத்தின்பின்னாலும் சாதக பாதகதான பல விசயங்கள் இருக்கவே செய்தது. எண்பதுகளிற்கு முன்னர் யாழ் குடாவில் பெரும்பாலும் ஏன் அனைத்து பேக்றிகளும் சிங்களவர்களவரே நடத்தினவை.

யாராவது ஒண்டிரண்டு பேக்கறி தமிழருக்கு சொந்தமாய் இருந்தாலும் அதில் பாண் போடுகிறவர் சிங்களவராகவே இருப்பார்.பாண் போடுகிறவரை பழைய படங்களில் வில்லனை பாஸ் எண்டு கூப்பிடுறதை போல இவரையும் (பாண்) பாஸ் எண்டுதான் சொல்லுறனாங்கள். இப்பிடி பாண் போடுகிற விசயம் சிங்களவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அல்லது பாண் எண்டால் சிங்களவனுக்கு மட்டும்தான் போடத்தெரியும் எண்டிற ஒரு நினைப்பு எங்களிட்டை இருந்தது. ஆனால் 83 ம் ஆண்டு கலவரத்தோடை இந்த நிலைமையும் தலைகீழாய் மாறிப்போச்சுது. தமிழர் கொழும்பிலை இருந்து அடிவாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்க் யாழ்ப்பாணத்திலை இருந்த சிங்களவர் பேக்கறி நடத்தினவை கனபேர் தாங்களாகவே தங்கடை ஊருகளுக்கு போகத்தொங்கிச்சினம்.

அது மட்டுமில்லை ஊர் பெடியளும் பெரும்பாலும் புளொட் இயக்கம் எல்லா பேக்கறியளையும் கொளுத்த தொடங்கிட்டினம்.பேக்கறி எரிஞ்சதுக்கு அது மட்டும் காணரமில்லை சில தமிழ் பேக்கறிக்காரரும் தங்கடை வியாபாரம் நல்லா நடக்கவேணுமெண்டு பெடியளை உருப்பேத்திவிட்டும் சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.,இதிலை ஒரு விசயத்தை கட்டாயம் சொல்லவேணும். புளொட் எண்ட மாபெரும் இயக்கம் தொடங்கினதுக்கு எனக்கு தெரிஞ்சு மூண்டு நல்ல காரியம் செய்தவை ஒண்டு கோட்டை ஆமி இருக்கேக்கை அவங்கள் அடிக்கிற செல்லிலை இருந்து சனம் பாதுகாப்பாய் பதுங்க யாழ்ப்பாணம் வைத்திய சலைக்கு முன்னாலை மண்மூட்டை அடுக்கினது.

இரண்டாவது முனிசிபாலிட்டிக்கை (நகரசபை)இருந்த தாரை எடுத்து உருக்கி ஊரிலை கிடங்கு பள்ளமாயிருந்த றோட்டை திருத்தினது.மூண்டாவது சிங்களவன் எல்லாரையும் கலைச்சுப்போட்டு பேக்கறி நடத்தினது.இதுகளோடை அவையின்ரை போராட்டத்துக்கான தேவை முடிஞ்சுபோதச்சுது.சரி இனி திரும்ப கதைக்கு வாறன். அந்த நேரம் 83 பிரச்னைக்குப்பிறகும் தொடந்து சில சிங்களவர் யாழிலை இருந்தவை . இவையள் தமிழரோடை நல்லவிதமாய் பழகியதாலையும் எண்பது வீதம் தமிழராகவே மாறிவிட்டிருந்தனர் எண்டும் சொல்லலாம்.அப்பிடி இருந்தவையிலை எனக்குதெரிந்த சிலபேர் ஒருத்தர் எங்டை ஊரிலை பேக்கறி வைச்சிருந்த சுது மாத்தையாவும் ஜஸ்பழம் வித்த லொக்கு பண்டாவும் .இவையளின்ரை உண்மையான பெயர் எனக்கு மட்டுமில்லை ஊரிலை ஒருதருக்குமே தெரியாது எல்லாருமே அப்பிடி கூப்பிடுறதாலை அதுதான் அவையின்ரை பெயர். அடுத்ததாய் ஏழாலையிலை பேக்கறி வைச்சிருந்த கொத்தளாவளை .இவரை ஏழாலை குப்பிளான் புன்னாலைக் கட்டுவன் வசாவிளான் ஆக்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .மானிப்பாய் சாத்திரிக்கும் ஏழாலை கொத்தளாவளைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதையுங்கோ அது அய்யருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.. சுது மாத்தையா நல்ல உழைப்பாளி அவரேதான் பாண் போடுவார் அவரேதான் காலையிலை சைக்கிளின் பின்னால் பாண் அடுக்கிய ஒரு பெரிய தேயிலைப் பெட்டியை கட்டி கடையள் வீடுகளுக்கும் பாண் கொண்டு போய் குடுப்பார். அவர்தான் எங்கடை வீட்டுக்கும் பாண் போடுறவர்.

மழைக்காலம் எண்டால் அனேகமான வீடுகளிலை ஈரவிறகை வைச்சு ஊதாமல் பாண்தான் காலைமைச் சாப்பாடு எங்கடை வீட்டிலையும் பாணை வாங்கி சின்னதுண்டாய் வெட்டி சிரமப்படாமல். அம்மா ஒரு பாணை பாதியாய் பிச்சு ஆளுக்கு அரைறாத்தல் பாணும் அரைச்ச சம்பலும் தருவார்.பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.சிலநேரம் அரை றாத்தல் பாண்சாப்பிட்டாலும் எங்களுக்கு பசி அடங்காமல் நாங்கள் அடிபடுறதை பாத்து அம்மா கையிலை காசை தந்து பள்ளிக்கூடம் போற வழியிலை எதையாவது வாங்கி சாப்பிடுங்கோ எண்டுசொல்லி கலைச்சு விடுவா.நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

.இறாத்தல் அழைவை போய் கிலோகிறாம் அளவை வந்தபின்னர் எல்லாப்பொருட்களையுமே நாங்கள் கிலோவிலை அழைக்கத்தொடங்கிய பின்னரும். பாணை மட்டும் இன்னமும் பேச்சுவழக்கில் இன்றுவரை இறாத்தல் எண்டுதான் சொல்லுறம். பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.

பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத்தேர்தல்களில்

3:39 PM, Posted by sathiri, No Comment

பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத்தேர்தல்களில் முதலாவது சுற்றில் நம்மவர் ஆறு வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர் விபரங்கள் பின்வருமாறு (இரண்டாவது சுற்றில் மேலும் சிலர் வெற்றிவாய்ப்புக்களை கொண்டுள்ளனர்)

Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம் (வலதுசாரிக்கட்சி)

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடதுசாரி)

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் (இடதுசாரி)

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம் (இடதுசாரி)


Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா (இடதுசாரி)


Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு (இடதுசாரி) இவர் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் மேலதிக தகவல்கள் தொடரும்

பிரான்ஸ் நகரசபைத் தேர்தல்களில் நம்மவவர்கள்

8:11 AM, Posted by sathiri, No Comment

பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம்.

1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமான வீடுகளில்(அறைகளில்) வாழந்;ந்தார்கள் பின்னர் அவர்கள் அரசியல் அகதி அந்தஸ்தை பெற்று தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கே உள்ள முயற்சியும், சிக்கனமும் சேர தமக்கென வியாபார தொகுதியை லாசப்பலில் ஏற்படுத்திக்கொண்டனர் பாரிஸில் நெருக்கமான வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் வசதிகருதி புறநகர்பகுதிகளில் குடியேறிக்கொண்டனர். புறநகர்பகுதிகளில் குடியேறிக் கொண்ட தமிழர்கள் தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள பல சமூகஅமைப்புகளை உருவாக்கி சமூகமட்டத்திலும், கிராமமட்டத்திலும் பலமுன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு தம்மை ஒரு அசைந்துகொணடிருக்கும் இனமாகவும் மற்றைய இனத்தினரிடையே அடையாளப்படுத்திக் கொண்டனர் .

இன்று எமது இளம் தலைமுறையினர் பிரஞ்சுத்தமிழர்களாக வாழத் தொடங்கிவிட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வாழப்போகியார்கள். இவர்களின் கல்வியும் உழைப்பும் பொருளாதார பலத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கான பாதுகாப்பு அரசியல்பலத்தில்தான தங்கியுள்ளது அதற்கான அடிப்டைஅரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தும் முகமாக 2008 இல் நடைபெறும் மாநகரபபை தேர்தலில் எம் இனத்தவர்கள் வேட்பாளர்களாக 14 நகரசபைகளில் 16 பிரதிநிதிகள் இணைத்துக்கொண்டுள்ளார்கள். இவர்களை மாநகரசபைளில் பிரதிநிதிகளாக்கி எமக்கான அரசியல் களத்தை நாம்திறந்து விடல் வேண்டும். இதற்கான ஒழுங்குகளை 61 தமிழ்ச்சங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டமைப்பான பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற அமைப்பு செய்துவருகின்றது.

வேட்பாளர்கள் விபரம்

(Argenteuil)(95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்

(Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம்

Goussainville(95190) குசான்வீல். செல்வி ரம்ஜா ஜெயமோகன்

Villiers Le Bel(95400) வில்லியே லூபெல் திருமதி தங்கா பாஸ்கரன்

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடது)

Garges les Gonesses(;95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்

La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன்

செல்வி சரணியா

செல்வி மதுரா

Aulnay Sous Bois(93600) ஒலுனே சூ புவா செல்வி தட்சாயினி தேவராஜ

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம்

Paris 8°(75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்

Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா

Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு

(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி