
அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாதிரி..
நீ.. நான்..வாடி போடி என்கிற ஒருமைகள் அற்றுப்போய்..நீங்கள் நாங்கள் என்கிற ஒரு அன்னியத் தன்மையில்..அழைக்கவேண்டியிருக்கும்.எனக்கும் ஜரோப்பாவில் சிறுவயது தோழி ஒருத்தி இருக்கிறாள்..நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வெளிநாடு வந்தவள்..அவளது கணவன் நல்லவர்தான் ஆனால் ஊரில் வாழ்கின்ற ஒரு சராசரி குடும்பத் தலைவனைப்போன்ற கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் சந்தேகம்..வருடத்தில் ஒருதடைவைதான் அவர்களது வீட்டிற்கு போவேன்.. மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..அதுவரை கலகலவென பல விடயங்களையும் கதைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரிடம் என்னகதைப்பது என்று தெரியாமல் திக்கித் திணறி " என்ன வேலையோ.?? இப்பதான் முடிஞ்சதோ??எப்ப லீவு??என்று உப்புச்சப்பில்லாத சில கேள்விகளுடன் சும்மாதான் சுகங்கள் விசாரிக்க போனடிச்சனான்.என்று ஒருமாதிரி கதைத்து போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்..
அவளதும் பிள்ளைகளினதும் மற்றும்.கணவரினதும் . பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..மற்றும்படி அவளது வீட்டிற்கு போகும் பொழுது அவளது கணவரிற்கு ஒரு வைன் போத்தல். பிள்ளைகளிற்கு விழையாட்டுப்பொருள் என்று வாங்கிவிட்டு அவளிற்கும் ஏதாவது வாங்கலாமென்று யோசிப்பேன்..அவளிற்கு என்னநிற உடைபிடிக்கும்.என்னென்ன பொருட்கள் பிடிக்கும் என்கிறதெல்லாம் எனக்கு அத்துபடியாய் தெரிந்தாலும் அவளிற்கு பிடித்தமானவற்றை யெல்லாம் எடுத்து பலதடைவை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு கடைசியில் எதுவுமே வாங்காமல் போவதுதான் வழைமையாகிவிட்டது..அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் நான் என்னை மறந்து போடி என்று சொல்லி விட்டாலும் ..நாக்கைக்கடித்து மன்னிப்பு கேட்டு அவளது கணவனைப்பார்த்து வழியவேண்டியிருக்கும்.
அவர்களுடன் உரையாடும் பொழுதும்.. எங்கள் ஊர் பற்றியதும்..எங்கள் சிறுவயது சமாச்சாரங்கள் உறவுகள் பற்றிய விடயங்களை பெரும்பாலும் தவிர்த்து ..அவர்களது பிள்ளைகள் பற்றியும்..அவளது கணவன் பற்றியுமே அதிகம் பேசுவோம்..ஆனாலும் அவள் கணவன் விடாக்கண்டன்.நான் கொண்டு போன வைன் போத்தலை உடைத்து கிளாசில் ஊற்றியபடி தொடங்கும் உரையாடலில் ""இவள் படிக்கேக்கை ஒருத்தரையும் காதலிக்கேல்லையோ""என்று கதையோடு கதையாய் சிரித்தபடி அடிக்கடி கேட்பார்..""சேச்சே அவள் நல்லபிள்ளை குனிஞ்சதலை நிமிரமாட்டாள்..ஒரு பெடியளோடையும் கதைக்க மாட்டாள்.நான் பக்கத்து வீடு அதோடை சின்னவயதிலையே பழக்கம் எண்டதாலை என்னோடை மட்டும்தான் கதைப்பாள்""..என்றொரு நற்சான்றிதழ் பத்திரத்தை கொடுத்த கையோடையே அடுத்த கேள்வி வந்து விழும்..இவள் காதலிக்காட்டிலும் இவளின்ரை கலருக்கும் வடிவுக்கும் பெடியள் யாராவது காதல் கடிதம் குடுத்திருப்பாங்கள்தானே??அப்பிடியும் நடக்கேல்லையோ ""என்று அவளைப் பார்த்து சிரித்தபடிகேட்பார்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்..ஒருத்தருமே கொடுக்கவில்லையென்று பொய்யும் சொல்லமுடியாது..யாரும் நம்ப மாட்டார்கள்.
ஏனென்றால் பாடசாலை நாட்களில் அது நிச்சயமாக அனைவருக்குமே நடந்திருக்கக்கூடிய விடயம்..அதே நேரம் கடிதம் கொடுத்து..அல்லது அவள் படிக்கின்ற காலங்களில் ஒருத்தனை காதலித்து அவளிற்காக நானே கடிதம் பரிமாறியதை நிச்சயமாக இப்பொழுது அவள் கணவனிடம் சொல்லமுடியாது.. அப்படியான சந்தர்ப்பத்தில் சமாளிப்பதற்காக முன்னாலிருந்த வைனை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவரது கேள்விக்கணைகளில் இருந்து தப்புவதற்காக ""படிக்கிற காலத்திலை நீங்கள் பல பெட்டையளிற்கு கடிதம் குடுத்து அடிவாங்கி அனுபவம் போலை "" என்று ஒரு ஏவுகணையை அவர்மீது ஏவி விட்டு அது உலகமகா படிகிடிபோல நான் வில்லங்கத்திற்கு விழுந்து விழுந்து சிரிக்க..அவரும் பதில் சொல்லாமல் அசடுவழிந்தபடி அடுத்த விடயத்திற்கு மாறிவிடுவார்..
அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.. நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??நடந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..எனவே நன்றி வணக்கம்..
:-(
அந்த சினேகிதி வீட்டுக்கு இனி போறதில்லை என முடிவெடுத்து விட்டீர்கள் போல... :)
//ஆதிரை @ 8:43 PM
அந்த சினேகிதி வீட்டுக்கு இனி போறதில்லை என முடிவெடுத்து விட்டீர்கள் போல... :)//
அதெப்பிடி போகாமல் விடுறது
அண்ணா வணக்கம்.திரைப்பட நகைச்சுவைகளை பார்த்துச்சிரித்தது எப்போதென்றே நினைவில்லை.சிரிப்புக்கு பதிலாக இப்படி சிரமபடுகிறார்களே என் இரங்குவதுதான் மிகுதியாக இருக்கும்.மனசு சரியில்லாத நேரங்களில் எதையோ கிறுக்க நினைக்கிற மனதுக்கு நல்ல மருந்து கிடைச்சிட்டுது.உங்கள் வரிகள்.சத்தியமாக சொல்கிறேன் வார்த்தைகளால் மட்டுமல்ல எழுதும் வரிகளாலும் மயக்க முடிகிறதே உங்களால்.
வாழ்க வளமுடன்
நவம் உமைபாலன்
நல்லாத்தான் போன்ல என்ஜோய் பண்றீங்க போல.....
"அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.."
உங்களுடைய ஸ்ரெடிக்கு வாழ்த்துகள்..
நன்றாக உள்ளது நண்பரே