Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.3

10:40 AM, Posted by Siva Sri, One Comment

காதல் ..
 யுரேகா
அவனது கிராமத்தில் இருந்த ஒருசில கிறீஸ்தவ குடும்பங்களில் யுரோகாவின் குடும்பமும் ஒன்று. அவளிற்கு மூத்த ஒரு ஒரு சகோதரி இருந்தாள். யுரேகா அவனது ஆண்டுதான் பாடசாலை வேறு. சிறு வயதிலிருந்தே அவனிற்கு யுரேகாவை பழக்கம் என்றாலும் பெரியளவு அவளுடன் கதைப்பது குறைவு.அப்பொழுது அவர்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம். அதுவரை திருகோணமலையில் ஆசிரியையாக இருந்த அவனது சின்னம்மா மாற்றலாகி ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தார்.இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த அவனது பாடங்களில் சின்னம்மா அதிக கவனமெடுத்தார். அப்பொழுது யுரேகாவும் அவனது சின்னம்மாவிடம் படிப்பதற்கு வரத்தொடங்கியிருந்தாள்.அவன் மீண்டும் என்னதான் கஸ்ரப்பட்டு படிச்சாலும் கணக்குமட்டும். அவனிற்கு கணக்குவிட்டுக்கொண்டிருந்தது. யுரோகாவை பார் கணக்கிலை கலக்கிறாள் எண்டு எண்டு சின்னம்மா குட்டிக் குட்டி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.ஆனாலும் ஏறவில்லை. ஆனால் அவளிற்கு தமிழ் தடக்கியது விஞ்ஞானம் விண்ணாமாய் தெரிந்தது . அதனால் அவளும் அவனும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். பாடசாலை நேரம் சின்னம்மாவின் மேலதிக பாட நேரம் தவிர்ந்து அவன் அவளிற்கு தமிழிற்கும் விஞ்ஞானத்திற்கும் உதவுவது . அவள் கணக்கு சொல்லிகொடுப்பது. அவனது ஆசிரியரும் சின்னம்மாவும்வெருட்டி உருட்டு சொல்லி கொடுத்தபோதும் புரியாத கணக்கு அவள் அருகிலிருந்து புள்ளி வைத்து கோடு போட்டு பெருக்கி கூட்டி விடையை காட்டியபொழுது அவனின் மனதை கூட்டிப் பெருக்கி புள்ளி வைத்து கோலம் போட்டது போல் இருந்தது.அருகே அவளின் மூச்சுக்காற்று பட்டதுமே முக்கோணம். வட்டம் விட்டம்.ஆரை என அனைத்தின் பாகைகளும் பட்டென மனதில் பதிந்தது.அதே போல அவன் விஞ்ஞானம் விளங்கப் படுத்தியபொழுது அவளிடம் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தமிழ் பாடம்தான் அவர்களை இணைத்ததுஅப்பொழுது அவர்கள் படித்தது பத்தாவது.

டேய் எனக்கொரு கட்டுரை வேணும் சொல்லித்தாவன்.

என்னத்தை பற்றி .

 மீனவர்கள் பற்றினது .

சின்னப் பிரச்சனை சொல்லுறன் எழுது

அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஒரு மீனவன் மனைவி பிள்ளைகளிடம் விடைபெற்று கட்டுமரமேறினான் என்று தொடங்கியவன் அன்றைய காலத்தில் அவன் படிக்கத்தொங்கியிருந்த மார்க்சியம். செஞ்சீனம். கியூபாவும் விடுதலையும். வியட்நாம். எரித்தியா .மாக்சிசம். நாசிசம். யூதாயிசம். சியோனிசம். கசம். பூசம். ரசம் எண்டு என்னென்ன இசங்களை கலக்க முடியுமோ அத்தனையையும் கலந்து ஒரு கட்டுரையை சொல்லி முடித்தான்.கட்டுரையை படித்த அவளதுதமிழாசிரியை தலையை சொறிந்தோடு உண்மையிலேயே நீதான் எழுதினியா எண்டு கேக்க அவளும் ஓமெண்டு தலையாட்ட .அவரும் வேறை நாலைஞ்சு ஆசிரியர்களிடம் காட்டிவிட்டு கடைசியிலை காலத்திற்கேற்ற கட்டுரையெண்டு முதலாவதாய் தேர்தெடுத்திருந்தார்கள்.அவளிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி அன்று அவனிடம் வந்தவள் நன்றி கூறிவிட்டு. ஜயோ.... உனக்கு எதாவது தரவேணுமே என்னவேணுமென்றாள். என்ன கேட்டாலும் தருவியா என்றான். ஓமடா என்ன வேணுமெண்டாலும் தாறன். என்ன வேணுமெண்டாலும்?? . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும்???எத்தினை தரம்தான் கேட்ப்பாய் அப்பிடி என்னதான் வேணும்.சரி அப்ப ஒரு அஞ்சுரூபா குடு குமார் கடையிலை போண்டாவும்சாப்பிட்டு ஒரு பிளேன் ரீயும் குடிக்கவேணும். என்றான். தனது கொம்பாசை திறந்து அஞ்சுரூபாவை எடுத்து நீட்டி விட்டு அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். டேய் தின்னி பண்டாரம் இந்த நேரம் அஞ்சுரூபாயா கேட்பாய் இப்பவாவது உன்ரை காதலை சொல்லி வேறை எதையாவது கேட்டிருக்கலாமே என்று மனம் அவனை திட்டியதுஆனாலும் அவனுடை அன்றைய சந்தர்ப சூழ்நிலைகளும் அவளது குடும்ப நிலையிலும். அவன் அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. இன்னொருநாள் அவள் அவனிடம்

 டேய் எனக்கொரு கவிதை வேணும்..

கவிதை எதைபற்றி ??

 காதல்பற்றி அவள் குரல் கம்மியது.

 காதலா??

யாரையாவது காதலிக்கிறியா??

 எனக்கில்லை என்ரை சினேகிதிக்கு அவள் ஒருத்தனை லவ்பண்ணிறாள் அதுதான் என்னட்டை கேட்டாள் நான் உன்னட்டை கேக்கிறன். வேண்டாமடி இப்பிடித்தான் நான் என்ரை சினேதனுக்கு ஒரு காதல் கவிதை எழுதி குடுத்து அது வாத்திட்டை பிடிபட்டு அவனைவிட நான்தான் சாறிட்டை(மானிப்பாய் இந்துவின் அதிபர்) குனியவிட்டு குண்டியிலை வாங்கினனான். நீ பயந்தால் வேண்டாம். இவளவை இப்பிடித்தான் பப்பாவிலை ஏத்துவாளவை சரி சொல்லுறன் எழுது அவன் சொல்ல சொல்ல அவள் எழுதினாள்.சிலநாள் கழித்து அவர்களிற்கு கணிதபாடம் கற்பிப்பதற்காக அவனது சின்னம்மா அவனது புத்தகத்தை புரட்டியபொழுது அதற்குள் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்கதொடங்கினார். அவளது முகம் மாறிப்போய் விட்டிருந்தது கடிதத்தை படித்து முடித்த சின்னம்மா அவனிடம் டேய் இது எத்தனை நாளாய் நடக்குது என்றார். இவள் இப்பிடித்தான் எங்கையாவது மாட்டிவிடுவாள் எனக்குத் தெரியும் என்று மனதில் நினைத்தபடி உவள்தான் யாரோ சினேகிதிக்கு எண்டு கேட்டாள் அதுவும் ஒருக்காதான் சொல்லிகுடுத்தனான் எண்டான். சின்னம்மா ஒண்டும் புரியாமல் இரண்டுபேரையும் மாறி மாறி பார்க்க அவள் கண்கள் கலங்க நடுங்கியபடி அங்கிருந்து எழும்பி ஓடிவிட்டாள். அவன் கடிதத்தை வாங்கி படித்தான். அதில் அவன் சொன்ன கவிதை வார்த்தைகளோடு அவள் அவனிற்காக எழுதியிருந்த காதல்கடிதம். சே.. தன்ரை காதலை சொல்லவே சொந்தமாய் நாலுவரி எழுதத்தெரியாதவள் என்ன செய்யப்போறாள் என்று அலுத்துக்கொண்டான்.
                                                   000000000000000000000000000000
 இரண்டு குடும்பத்தினரும் கூடிக்கலந்து பேசி பல்கலைக்கழகம் படித்து முடிஞ்சதும்தான் கலியாணம். றோட்டு தெருக்களிலை சுற்றக்கூடாது வீட்டிலை இருந்து கதைக்கலாம். என்கிற சில கண்டிப்பான உத்தரவுகளுடன் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை இலகுவாக அவர்களது காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதற்கு அவர்கள் காதல் புனிதமானது என்றோ அல்லது காதலை வாழவைக்கவோ இல்லை. இரண்டு பக்கமுமே வலுவான வேறு காரணங்கள் இருந்தது. யுரேகாவின் மூத்த சகோதரி கா.பொ.த உயர்தரம் படித்தக்கொண்டிருந்தபொழுது சக மாணவன் ஒருத்தனை காதலித்திருந்தாள். அவன் சைவக்காரன் வேறை. அந்த காதலை தடுக்க அவளது பெற்றோர் மென்முறை வன்முறை எல்லாம் பாவித்து தோற்றுப்போயிருந்தனர். கடைசியாள் அவள் தற்கொலை முயற்சிவரைபோய் அந்தக்கதையே கொஞ்சக்காலம் ஊர்சனங்களில் வாயில் அவலாய் நிறைந்திருந்தது. எதுவும் செய்ய முடியாமல். காதலை ஏற்றுக்கொண்டனர். காதலித்த பெடியன் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் ஆனால் அவன் கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாறமாட்டான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள். இப்படியே இழுபறிப்பட்டு பல்கபலைக்கழக படிப்பு முடிந்ததும் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்துவைத்து இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவது என முடிவு செய்திருந்தனர். அவர்களும் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்தக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் மீண்டும் இவளது காதலால் அவர்களது குடும்பக்கதை ஊர்வாயில் அவலாகிவிடக்கூடாது என்பது அவர்களது பக்கத்து கவலையோடு கூடிய காரணம்.

 இவன்பக்கத்தில் என்னவென்றால் அப்பொழுது இயக்காரரோடு அதிகமாய் திரியத்தொடங்கியிருந்தான். அந்த வருசம் சோதினையில் கோட்டை விட்டுவிடுவானொ என்று பயம்வேறை. கொஞ்சம் இறுக்கமாய் கண்டிச்சால் அடுத்தநாளோ இயக்கத்திற்கு ஓடிவிடுவானோ என்கிற கவலை அதாலை இந்தகாதலாவது அவனை கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்று நினைத்தார்கள்.இந்தக்காரணங்களால் அவர்கள் காதலில் எரிந்த பச்சைவிளக்கு வெளிச்சத்தின் பலாபலன்களை நன்றாகவே அனுபவித்தனர். சின்ன சின்ன சில்மிசங்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் தவறவிடுவதில்லை. அவளும் அளவோடு அனுமதித்திருந்தாள் என்பதைவிட அவளிற்கும் அது பிடித்திருந்தது. எல்லை மீறும்பேதெல்லாம் நுள்ளிவிடுவாள்.

எப்பிடித்தான் இவளவை அடக்கிறாளவையோ என்று அவனிற்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்கிறமாதிரி அவனது காதல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் அவனது இயக்கத்தின் தொடர்புகளை குறைக்கச்சொல்லி அவளது நச்சரிப்பும் கூடிக்கொண்டே போனது.அவளின் நச்சரிப்பு கூடும்பேதெல்லாம் அவளது உதடுகளை இவனது உதடுகள் மூடிவிடும். ஆனாலும் ஒருநாள் அவள் விடவில்லை நீ என்னை ஏமாத்துறாய் உண்மையா என்னை விரும்பிறியா?? உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது?? அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா?? பதறினாள். அவிழ்த்து காட்டினான் u சிவப்பாய் தெரிந்தது எனக்கு வேறை வழிதெரியேல்லை ureka என்றவனிற்கு.சும்மா ஏதோ கோபத்திலை சொல்லிட்டன் அதக்கு இப்பிடிபோய் செய்திட்டியே.. என்றவளின் கண்ணீர்த்துளியொன்று uஎழுத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே எரியிது இதுக்கை இவள்வேறை கண்ணீர் ஊத்தி எரியவைக்கிறாள் எண்டு அவன் எரிச்லை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தபொழுது ரீ கொண்டு வந்து வைத்து விட்டு கொடுப்பிற்குள் ஒரு நமட்டு சிரிப்புடன் அவளது தயார் போனார். தன்ரை மகளை கையிலை கையிலையே குத்திட்டான் இனி கைவிடமாட்டான் என அவர் நினைத்திருக்கலாம்.அடுத்தநாள் கோயிலடியில் அவனது கையை பார்த்த அவனது நண்பன் ஒருத்தன் டேய் என்னடா கையிலை பு னா எண்டு சூடுவைச்சிருக்கிறாயெண்டான்.

ஆங்கில எழுத்து தமிழில் அர்த்தத்தையே மாற்றிவிட்டது அப்பொழுதுதான் அவனிற்கு புரிந்தது.

 உன்ரையாளிற்கு என்னடா பேர்.??

 மலர்....

மலரெண்டால் ம எண்டெல்லோ வரும் அதென்ன பு..??

புஸ்பம் எண்டும் சொல்லலாம்.

அதுதான். டேய் அது பல்லில்லாத வாதியின்ரை பழைய பகிடி உண்மையை சொல்லடா.

 டேய் வெங்காயம் தமிழிலை யோசிக்காமல் இங்கிலிசிலை யோசி.. கொஞ்சம் உத்துப்பாத்தவன் u அட யுரேகாவா?? வாயை பிளந்தான்   
                                                            000000000000000000000000000                                                                                                                                                                                                                               
அன்று கா.பெ.த. சாதாரணம் இறுதிப் பரீட்சை எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்தான் நல்லமழை கொட்டிக்கொண்டிருந்தது . நண்பர்களிடம் விடைபெற்றவன் சைக்கிளை மிதித்தான் அந்தோனியார் கோயிலின் முன்னால் இருந்த பஸ் நிலையத்தில் சைக்கிளோடு அவள் காவலிருந்தாள். சைக்கிளை விட்டு இறங்கியவன் அவளோடு சேர்ந்து நனைந்தபடி சைக்கிளை உருட்டினான் அவளிடம் குடை இருந்தது விரிக்கவில்லை.
நல்லா எழுதினியா??

 ம்..ஏதோ எழுதியிருக்கிறன்.

 இந்த நாலுமாத லீவிலை என்ன செய்யப்போறாய்.

என்ரை எலெக்றொனிக் சாமான் திருத்திற படிப்பை தொடருவம் றிசல்ட் வந்தாபிறகு யோசிப்பம்.

 டேய் இது எங்கடை வாழ்க்கை பிரச்சனை நீ சர்வசாதாரணமாய் சொல்லுறாய்.

 அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுறாய்.

 நாங்கள் இரண்டு பேருமே யூனிவசிற்றி போனால்தான் எங்கடை வாழ்க்கையே.

 ஓ... பெயில் விட்டால் கழட்டிவிட்டிடுவியா??

ஏனடா இப்பிடி கதைக்கிறாய் நான் எவ்வளவு கனவுகளோடை இருக்கிறன் தெரியுமா??

எனக்கும்தான் நிறைய கனவுகள் இருக்கு ஆனால் உன்னை மாதிரி சுயநலக்கனவுகள் இல்லை.
அப்பொழுது அவர்கள் மருதடி பிள்ளையார் கோயிலின் முன்னால் வந்திருந்தார்கள். எனக்குத்தெரியும் நீ என்ன நினைக்கிறாயெண்டு எனக்கொரு சத்தியம் பண்டு . என்னவெண்டு?? நீ இயக்கத்துக்கு போகமாட்டனெண்டு என்ரை தலையிலை சத்தியம் பண்டு. அந்தோனியார் அறிய நான் இயக்கத்துக்கு போகமாட்டன். அந்தோனியார் வேண்டாம் பிள்ளையார் மேலை சத்தியம் பண்ணு. அந்தோனியார்தானே உங்கடை கடவுள். அதாலைதான் சொல்லுறன் உங்கடை கடவுள்மேலை பண்ணு. சந்தர்பம் பாத்து அடிக்கிறதிலை பெட்டையள் கெட்டிக்காரியள் என்று மனசிலை நினைச்சவன். மருதடி பிள்ளையாரை திரும்பி பாத்தபடி பிள்ளையாரே உனக்குமேலை சத்தியம்பண்ண மனசுக்கு கஸ்ரமாயிருக்கு என்று நினைத்தவன் பிள்ளை......ஆர் மேலை சத்தியமாய் இயக்கத்துக்கு போகமாட்டன் அவள் தலையில் அடித்தான்.அவளிருந்த உணர்ச்சி வேகத்தில் பிள்ளைக்கும் ஆருக்கும் இருந்த இடைவெளியை கவனிக்கவில்லை.கொம்பாசை திறந்து பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டிவிவிட்டு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

000000000000000000000

அவனது நண்பன் சுரேஸ் புளெட் இயக்கதில் இருந்தவன் அவனிடம் தன்னுடைய சைக்கிளை கொடுத்து வீட்டில் கொடுத்துவிட சொல்லிவிட்டு மானிப்பாயில் இருந்த இரகசிய முகாமில் அன்புவை சந்தித்தான். நீங்கள் சொன்னமாதிரி சோதினை எழுதியாச்சு இங்கை இருந்தால் வீட்டு காரர் தேடி பிடிச்சிடுவினம். அதாலை கெதியா அனுப்புங்கோ என்றான். அன்றே அன்பு அவனை மாதகல் கொண்டுபோய் சேர்த்து பீற்றரிடம் ஒப்படைத்திருந்தான்.அவனோடு சேர்த்து ஏழுபேர்பீற்றரின் பொறுப்பில் பண்ணத்டதெரிப்பு பத்திமாதா கேயிலிற்கு அருகில் யாருமற்ற பாழடைந்த வீடு ஒன்றில் தங்கியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் சொந்தமாக வள்ளங்கள் அதிகம் இருந்ததில்லை பெரும்பாலும் கடத்தல் காரர்களின் வள்ளங்கள் அல்லது மீனவர்களிடம் வாடைகைக்கு எடுக்கும் வள்ளங்களையே பாவித்தனர். அனைத்து இயக்ககங்களின் நிலைமையும் அப்பிடித்தான். அடைமழையும் காற்றுமாக இருந்த காரணத்தால் எந்த கடத்தல் வள்ளங்களும் இந்தியாவிற்கு போகவில்லை . ஏதாவது வள்ளம் இந்தியாவிற்கு போகிறதா என ஒவ்வொருநாளும் பீற்றர் கடற்கரைக்கு போய் விசாரித்துக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருத்தர் அதிகம் கதைக்காமலேயே இருந்தனர் அதைவிட இயக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக சொந்த பெயர் ஊர் விபரம் மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது பொதுவான் விதி. ஆனால் இரண்டுநாள் பொனதுமே அவர்களிற்கு கதைக்க ஒரு விசயமும் இல்லாமல் போக தாங்களாகவே தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கியிருந்தனர்.

அதில் ஒருத்தனை காதலிச்சவள் ஏமாத்திவிட்டாளாம். அவனின்ரை காதல் கதை எங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவியது. ரெயினிங் முடிஞ்சு வந்ததும் முதல்வெடி அவளுக்குத்தான் எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அன்று அஞ்சாவது நாளாகி அடைமழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அன்று மாலை கடற்கரைக்கு போயிருந்த பீற்றர் 'இண்டைக்கு இரண்டு வண்டிபோகுது அதிலை ஒண்டிலை இடமிருக்காம் இண்டைக்கு நீங்கள் போகலாமெண்டான்' அப்பொழுதுதான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஏழுபேராக காத்திருந்தவர்களில் இரண்டா ம் நாள் ஒருத்தனும் மூன்றாம் நாள் ஒருத்தனும் வீட்டிற்கு போய்விட ஜந்து பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். ஒருத்தலும் கனக்க உடுப்பு எடுக்கவேண்டாம். காற்சட்டைக்கு மேலை ஒரு சாறம். ஒண்டுக்மேலை இன்னொன்றாய் இரண்டு சேட்டு மட்டும் போடச்சொல்லியிருந்தான். ஏதோ வெளிநாட்டிற்கு போறது போல சூட்கேசில் உடுப்பபுக்களை கொண்டு வந்திருந்தவர் கவலையோடை மூண்டாவது சேட்டை போட்டுக்கொண்டார். இரவு எட்டுமணியளவில் அனைவரையும் பீற்றர் கடற்கரைக்கு அழைத்துப் போயிருந்தவன்.அங்கு நின்றவர்களிடம் கதைத்துவிட்டு அவர்களை கடற்கரையோரமாய் இருந்த கொட்டிலுக்குள் அமர வைத்துவிட்டு போய்விட்டான் .இருவர் வள்ளங்களில் பொருட்களை ஏற்றிமுடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டிருந்தனர்.

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பிடியே எங்களை கடற்கரையிலை விட்டிட்டு போயிட்டானோ? என்றான் ஒருத்தன். சே ..பீற்றர் அப்பிடி செய்யமாட்டான் அவனை எனக்கு நல்லாத்தெரியும். என்றான் இவன். சிலநேரம் ஆமிக்காரன் வந்தால் என்ன செய்யிறது எந்தப்பக்கமாய் ஓடுறது எண்டான் இன்னொருத்தன். ஆமிவந்தால் கடல்பக்கமாய் ஓடி தண்ணிக்கை படுக்கலாம். சே .சே எனக்கு நீந்தத் தெரியாது மற்றப்பக்கம் பனை பக்கமாய் ஓடுறதுதான் நல்லது. ஓடினால் கட்டாயம் சுடுவாங்கள் பேசமல் இப்பிடியே இருக்கிறதுதான் நல்லது அவங்கள் வந்து கேட்டால் நாங்கள் மீன்பிடிக்கிற ஆக்கள் எண்டு சொல்லுவம். இப்பிடியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே வேறு நாலு பேருடன் பீற்றரும் வந்து கொண்டிருந்தான்.அவர்களை கண்டதும்தான் அவர்களிற்கு நெஞ்சுக்கை தண்ணி வந்தது மாதிரி இருந்தது.அவர்கள் எல்லாருமாக சேந்து வள்ளங்களை கடலிற்குள் தள்ளிக்கொண்டிருக்க . அவர்களிடம் வந்த பீற்றர் என்ன பயந்துட்டியளோ..ஓட்டி ஒருத்தான் தண்ணியடிச்சிட்டு எங்கையே படுத்திட்டான் தேடி பிடிச்சுக்கொண்டுவர நேரம்போட்டுது. கெதியவாங்கோ என்று அவர்களை அழைத்துப்போய் பொருட்கள் குறைவாய் இருந்த வள்ளத்தில் நால்வரும் மற்றையதில் ஒருவருமாய் ஏறச்சொன்னான். அவனிற்கு இதுதான் முதல் கடற்பயணம். அவனிற்கு அவனுடன் வந்த மற்றையவர்களிற்கும்தான். வள்ளம் புற்படும் முன்னர் ஓட்டி அவர்களை பாத்து . பெடியள் கவனமா கேளுங்கோ நல்லா முன்பக்கமாய் போய் ஆளோடை ஆள் நெருக்கமாய் இருங்கோ. யாருக்காவது சத்தி வந்தால் அப்பிடியே பின்னாலை வந்து இந்த கயித்தை பிடிச்சுக்கொண்டு கடலுக்கை எடுக்கவேணும் சொல்லிப்போட்டன். போட்டுக்கை யாராவது சத்தியெடுத்தால் கடலுக்கை தூக்கியெறிஞ்சு போட்டு போடுவன். சத்தியெடுத்தால் கடல் தண்ணியிலை வாயை கொப்பிளிச்சுபோட்டு கொஞ்சம் குடியுங்கோ பிறகு வராது என்று பயமுறுத்தும் பிரசங்கம் ஒன்றை வைத்துவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நெஞ்சில் சிலுவை போட்டுக்கொண்டவன். வள்ளத்தில் பூட்டியிருந்த மூன்று இயந்திரத்தில் ஒன்றை இயக்கினான். அவர்களிற்கு கைகாட்டிக்கொண்டிருந்த பீற்றரும். மாதகல் கடற்கரையும் மெல்ல மறையத்தொடங்கியிருந்தது.

சாறத்தால் கழுத்துவரை போர்த்துக்கொண்டு குந்தியிருந்தவனின் நினைவுகள் அப்பொழுதுதான் அவளை நினைக்கத்தொடங்கியிருந்தது. ஜஞ்சு நாளாச்சு இப்ப எப்பிடியும் ஊருக்கே விசயம் தெரிஞ்சிருக்கும்.அவளிற்கும் தெரிஞ்சிருக்கும். என்ன செய்திருப்பாள்??. அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்..?? சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ?? சே என்னை மறக்கமாட்டாள். நான் வரும்வரைக்கும் காவலிருப்பாள்.. அவள் காவலிருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை நான் அவளுக்கு செய்து குடுத்த சத்தியம் எல்லாத்தையும் மீறிட்டன். அவள் தொடந்து படிப்பாள். என்ரை படிப்பு இதோடை முடிஞ்சுது.அதோடை இயக்கத்திலை வேறை காதலிக்கக்கூடாது எண்டு சட்டம்வேறை .அவளை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம். காதலிக்கேக்குள்ளையும் கட்டிப்பிடிக்கேக்குள்ளையும் எங்கை போனது இந்தப் புத்தி. சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.. வள்ளத்தின் மூன்றாவது இயந்திரமும் இயக்கப்பட அது கடல் நீரை இன்னும் வேகமாகக் கிழிக்கத்தொடங்கிருந்தது.அந்தக் கும்மிருட்டில் இடக்கையின் மணிக்கட்டை பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை வலது கையால் அந்த இடத்தில் தடவிக்கொண்டான்

                                                        0000000000000000

வருடங்கள் உருண்டோடி விட்டிருந்தது அவன் அவளை பின்னர் இரண்டொரு தடைவை கண்டிருந்தாலும் கதைத்தில்லை. கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று செய்திகள் அவனிற்கு கிடைத்து. ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை நான்கு வருடத்திலேயே அவளின் கணவனிற்கு மூளைப்புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்து விட்டான். சில காலங்களின் பின்னர் அவளது விலாசத்தை கண்டு பிடித்து இரத்மலானை கடற்கரை பக்கமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அவளது மாமியார் கதவைத் திறந்தார் பின்னால் மானார். நான் யுரேகாவின்ரை பிறெண்ட். யுரோகாவை பாக்கலாமோ??என்று இழுத்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற அவர்களிடம். அருணும் எனக்கு பிறெண்ட்தான் ஆனால் அவனின்ரை பிரச்சனை நடக்கேக்குள்ளை நான் வெளிநாட்டிலை. இப்பதான் வந்தனான். அதுதான் வந்தனான் .இப்பிடி பல தான்..நான்..ற்கு பிறகுதான் வாங்கோ என்றபடி கதவு திறந்தது கையில் ஒன்று பின்னால் ஒன்று யுரேகா வந்துகொண்டிருந்தாள். கொழும்புத்தண்ணிக்கு முன்னை பாத்ததைவிட கொஞ்சம் நிறமாய்தான் இருந்தாள் கொஞ்சம் உடம்பும் வைத்திருந்தது ஆனாலும் அழகு கட்டுக்குலையாமலத்தான் இருந்தது. நீயா எப்பிடி வீட்டை கண்டு பிடிச்சனி. ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள்.அதே கணம் மாமன் மாமியை பார்த்து விட்டு அகலத்தை உடைனேயே குறைத்துக்கொண்டாள். வழைமையான விசாரிப்புக்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் போது மாமியார் தேனீரை கொண்டு வந்து வைத்துவிட்டு போனதன் பின்னர். பேச்சு அவர்கள் பக்கம் பக்கமாய் திரும்பியது. கடைசியாய் உன்னை எவ்வளவோ தேடினனான் உன்ரை அம்மா கூட உன்ரை தகவல் ஒண்டும் தெரியாது எண்டிட்டா. நீ இருக்கிறியா இல்லையா எண்டு கூட தெரியாத நிலைமை. எனக்கும் வேறை வழி இருக்கேல்லை. அருணும் நல்வர் எந்தக் குறையும் இல்லை ஆனால் என்ரை விதி அவ்வளவுதான். அவளின் கண்கள் கலங்கியது. பின்னர் அவன் பேச்சை மாற்றி வேறு விடயங்களை பேசியபின்னர் விடைபெற்றபொழுது வெளியே வாசல்வரை வழியனுப்ப தனியே வந்தவளிடம். அதுவரை தொண்டையில் உருண்டுகொண்டிருந்த விடயத்தை மெதுவாய் துப்பினான்.

 யுரேகா தயவு செய்து குறை நினைக்காதை நீ விரும்பினால் நான் உ..............ன்...............னை..........க..............லி. அவன் முடிக்கவில்லை. பிளீஸ் ஸ்ரொப்பிற். என்றாள் அவள் ஸ்ருப்பிற் என்றது மாதிரி அவனிற்கு கேட்டது. நான் உன்னட்டை காதலைத்தான் எதிர்பாத்தனான். கருணையை இல்லை..நான் உன்னிலை வைச்ச காதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு. நான் சாகும் வரைக்கும் அது அப்பிடியேதான் இருக்கும். எனக்கு நல்ல புருசன் கிடைச்சார். அதே நேரம் தங்கடை மகளை பாக்கிறமாதிரி நல்ல மாமா..மாமி. என்னை பாக்கினம். இனி என்ரை பிள்ளையளை நல்லா வளக்கிறதுதான் என்ரை நோக்கம். நீ இப்பவும் உங்கடையாக்களின்ரை வேலையாய்தான் கொழும்பக்கும் வந்திருப்பாய். தயவுசெய்து இனி என்னை பாக்கஇங்கை வராதை. இதுதான் நாங்கள் சந்திக்கிறது கடைசியாய் இருக்கட்டும். என்டு படபடத்து முடித்தவள் அவனது கையை இழுத்து தனது கையில் சுருட்டி வைத்திருந்த சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு போ இனிவராதை என்றுவிட்டு வேகமாய் உள்ளே போய்விட்டாள். காதுக்கு பக்கத்தில் 50 கலிபர் ஒண்டு அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்தது தன்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தவன் கையை விரித்து பார்த்தபோது சில 500 ரூபாய் தாள்கள் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதை திரும்ப அவளிடம் கொடுக்கலாமென நினைத்து பார்த்தபொழுது கதவு சாத்தப்பட்டுவிட்டிருந்த. என்னங்கடா இவளவை காதல் அப்பிடியே இரக்குதாம் கலியாணம் கட்ட கேட்டால் மாட்டாளாம். புரிஞ்சு கொள்ளவே முடியிதில்லை. ஒரு லயன் லாகர் 75 ரூபாய்தானே கையிலை 3000 ஆயிரம் ரூபாய் இருந்தது கடற்கரை பக்கமாய் இருந்த BAR ஒன்றை நோக்கி நடந்தபோது இடக்கை மணிக்கட்டை பார்த்தான் எந்த அடையாளமும் இல்லை. பி.கு. அன்று இயக்கத்தில் மாதகல் கரை பொறுப்பாக இருந்த பீற்றர் பின்னர் சயனைற் உட்கொண்டு இறந்துவிட்டான். அதன் விபரங்கள் நான் எழுதும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.
 கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.1

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 2

One Comment

அரி @ 8:40 PM

நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.