Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.

3:21 PM, Posted by sathiri, No Comment

இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

பி.கு என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே என்னைப்பற்றிய விபரங்கள் பெரும்பாலும் தெரிந்திருந்தது பின்னர் என்னைப்பற்றிய சகல விபரங்களையும் அவரிற்கு தெரிவித்த பின்ரே எங்கள் திருமணம் நடந்தது எனவே இதை எழுதுவதும் அவரிற்கு தெரியும் எனவே எங்கள் தனிப்பட்ட வாழ்கையிலும் எவ்வித பிரச்சனைகளும் வராது என்பதை உறுதி செய்தபின்னரே எழுதத் தொடங்குகிறேன்.

சிறியின் சின்ன வயதுப்பராயம். ஒருவயதாக இருக்கும் போதே சிறுநீரக நோயினால் தாக்கப்பட்டதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய காரணத்தால் அவனது அம்மம்மாவினால் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றான். நினைவு தெரியாத காலத்திலேயே அம்மம்மாவுடன் வளர்ந்ததால் அவனிற்கு நினைவு தெரிய வந்த காலங்களில் அவன் அம்மம்மாவையே அம்மா என்று அழைக்கத் தொங்கியது மட்டுமல்ல எவ்வித கவலைகளுமற்ற செல்லப்பிள்ளையாக வளர்ந்துவந்த காலங்கள். அவனிற்கு அப்பொழுது ஒன்பது வயது அவனது வீட்டிற்கு அருகிலேயே நகைசெய்யும் ஒருத்தர் இருந்தார்(பத்தர் அல்லது தட்டார்) அவரிற்கு ஒரு நகைக்கடையும் இருந்தது கடையின் பிற புறத்தில் நகை வேலைகள் செய்வார்கள். அவரது மகனிற்கும் சிறிக்கும் ஒரேவயது மட்டுமல்ல இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தும் வந்தனர். சிறி மாலை நேரங்களில் அவனுடன் விழையாடப் போவதோடு அங்கு நகை செய்வதையும் வேடிக்கை பார்ப்பான். நகை செய்பவர்கள் துருத்தியில் நெருப்பை பெரிதாக்கி அந்த நெருப்பை வாயில் ஒரு சிறிய குளாயை வைத்து ஊதி நெருப்புச்சுவாலையை வேகமாக ஒரு இடத்தில் குவியவைத்து அதன் நுனியில் தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ உருக்குவதை மாயவித்தைபோல பார்த்து ரசிப்பது அவனது வழமை. சிலநேரங்களில் அந்த நகை செய்பவர் தன்னுடைய மகனை தன்மடியில் இருத்தி குளாயால் நெருப்பை ஊதவைத்து பொன்னை எப்படி உருக்குவது என்று பழக்குவார் சிறிக்கும் அதைபோல செய்து பார்க்கவேண்டும் போல் இருக்கும். நீண்டநாட்களதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறியை ஒருநாள் அவர் நீயும் செய்து பாரக்கப்போகின்றாயா என்றதும் சிறிக்கு அளவற்ற சந்தோசம். அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.

பின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். ஓட வெளிக்கிட்டவனை இழுத்து பிடிக்கவே அவன் பலத்தசத்தமாய் சத்தம்போட்டு அழத்தொடங்க இங்கை நடந்ததை வீட்டிலை சொல்லாதை அப்பிடி சொன்னாயெண்டால் கடையிலை மோதிரத்தை களவெடுத்திட்டாயெண்டு எல்லாரிட்டையும் சொல்லுறதோடை மட்டுமில்லாமல் பொலிசிலை பிடிச்சு குடுத்துடுவன் என்று மிரட்டி அனுப்பி விட்டிருந்தார்.

அவன் வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை எப்படி சொல்வதென்றும் அவனிற்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் அவன் அன்றிலிருந்து நண்பனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல். அவரை கண்டாலே அவனிற்கு வெறுப்பும் பயமும் வரும் அவரை பார்ப்தையும் தவிர்த்துவந்தான். ஆனால் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மனநிலை மீண்டுவர நீண்டகாலங்கள் எடுத்தது. இப்பொழுது அவனிற்கு பதினேழு வயது அவர் மீதான பயம் போய் விட்டிருந்தது. ஆனாலும் அந்த சம்பவத்திற்காக அவரை பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கான தருணமும்வந்தது அந்த வருடம் அவர்கள் கோயில் திருவிழா . திருவிழா முடிவதற்கிடையில் பத்தனிற்கு பாடம் படிப்பிப்பது என்று திட்டம் போட்டு அதற்கு உதவியாக இன்னொரு நண்பனையும் சேர்த்துக்கொண்டான். அன்று அவர்களது திருவிழா நாள் அன்றிரவு திருவிழா முடிந்து அவரது மனைவி பிள்ளைகள் எல்லாரும் வீட்டிற்கு போய்விட அவர்மட்டும் கடைசியாக கணக்கு வழக்கு முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் இருந்த வீதி விளக்கை சிறி ஏற்கனவே கல்லெறிந்து உடைத்துவிட்டு இருட்டில் அவனது நண்பனுடன் பதுங்கியிருந்தான்.

அவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை.

இங்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவேளை தனக்கு நடந்ததை அன்றே கூறியிருந்தால் பெரியவர்கள் கேட்டிருப்பார்களா?? அவன் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது நகைக்கடைக்காரர் மோதிரத்தை களடிவடுத்துவிட்டான் என்பது தான் பெரிதளவும் நம்பப்பட்டிருக்கும். சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதே என்று அவனை யே மீண்டும் அவனது உறவுகள் மிரட்டிஅடக்கியிருக்கும். அல்லது அவனது வீ¨ட்டிற்கும் நகைக்கடைக்காரரிற்கும் இதுபற்றி பேசாமல் வேறு ஏதாவது தகராறு நடந்திருக்குமே தவிர பாதிக்கப்பட்டவனிற்கான எவ்வித ஆறுதலோ உளவியல் சிகிச்சைகளோ நிச்சயம் நடந்திருக்காதது மட்டுமல்ல குற்றவாளிக்கும் எவ்வித தண்டனையும் கிடைத்திருக்காது ஏனெனில் எமது சமுதாயஅமைப்பே அப்படியானதுதான்.

No Comment