Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.2

7:01 AM, Posted by Siva Sri, No Comment

நட்பு

அவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்
அவன் காதில் பிடித்து முறுக்கியபடி

உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா?? வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.??

ஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன??

அவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.

நெல்லிக்காய் எங்கடைதானே

வாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.
0000000000000000
வருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் விபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.

முச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.

அப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.

அவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.

ஏனடா நடந்தது உனக்கு தெரியாதே??

இல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.

தாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.

ஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .

என்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.
பிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.

என்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.
மாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்கு கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.

அதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.
00000000000000000000
1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..
இப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.
இந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.


திருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.


அப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.
0000000000000000
மறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களிற்கு புரிந்தது. என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பாவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.

துப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகா வைஅவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். முன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.
000000000000000000000
திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.
00000000000000000000
இந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No Comment