Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4

2:18 PM, Posted by sathiri, One Comment

காமம்.
பயிற்சி முகாம்.



23 ந்திகதி  யூலை மாதம்  83 ம் ஆண்டு  வழைமைபோலவே விடிந்தது  அவனும்  அந்த ஆண்டு   க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால்  நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.

எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.

தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.
00000000000000000000000000000
அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.
0000000000000000000000000000000000
பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் அவன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது
000000000000000000000000000
அடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.

One Comment

ஜெயபாலன் கவிஞன் @ 2:44 PM

இத்தகைய போராளிகளின் மனித உணர்வுகளை காமத்தை இலத்தீன் அமரிக்க போராளிகள் இயல்பாக எழுதியிருக்கிறார்கள். ஒருபால் புணர்ச்சியும் கடி
க்கும் படர்தாமரையும் (ringworm) எல்லா இயக்க காம்புகளிலும் பொதுவான விடயமல்லவா? அல்லவா.

தலைவர்கள் பல்வேறு இயக்கத் காதல் வசப்பட்ட பிறகு காதலிப்பத்ற்காக யாரையும் சுட்டுப் புதைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் எழுத்தும் மிகவும் இயல்பாக இருக்கு சாத்திரி.