தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-
சாந்தி ரமேஷ் வவுனியன் -
'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல் வெளியீட்டினை கடந்த வெள்ளி 25.07.08 அன்று சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார்.
எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது. போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை.
குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை. தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம்.
இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ? வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.
ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள். ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான்.
சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள். மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை.
இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும். இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.
தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-
3:54 AM, Posted by sathiri, No Comment