மாயாவி
ஒரு பேப்பரிற்காக சாத்திரி
மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.
யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.
இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.
அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்திலிங்கத்தாருக்கு விழுந்த அடியோடை சனத்துக்கு பயமும் கூடிட்டுது. அதாலை எல்லா வீட்டுக்காரரும் வீகளிலை கத்தி.பொல்லு.வாள்.எண்டு தற்காப்பு ஆயுதங்களை தயார்பண்ணி வீட்டுக் கூரை வேலியளுக்குள்ளை செருகிவைக்கத்தொடங்கினது மட்டுமில்லை. மர்ம மனிசன் வந்தால் மற்றை வீட்டுக்காரரையும் எழுப்புறதுக்கு சிலரின்ரை வீடுகளிலை மணி கூட வாங்கி கட்டித்தொங்க விட்டிருந்தவை. அது மட்டுமில்லை இரவிலை கோயில் மடத்திலை சாமம் வரைக்கும் இருந்து அரட்டையடிக்கிற எங்களுக்கும் நேரத்தோடையே வீட்டுக்கு வரச்சொல்லி வீட்டுக்காரரின்ரை கரைச்சல் தாங்கஏலாமல் நாங்களும் எங்கடை அரட்டை ஆராச்சியளை ஏழு எட்டு மணிகு்குள்ளையே முடிச்சிட்டு வீட்டை போய்விடுவம்.இப்பிடியே சில நாட்களாய் திகிலாய் இருந்த எங்கடை ஊர்க்கதை. மானிப்பாயிலை மர்ம மனிசன் திரியிறானாம் எண்டு மற்றைய ஊர்களுக்கும் பரவி பரபரப்பாய் கதை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை கொழும்புக்கு லொறியிலை சாமான்கள் கொண்டுபோய் வியாபாரம் செய்யிற ஒருத்தர் கோயிலடியிலை நிண்ட எங்களிட்டை ஒரு விசயத்தை சொன்னார்.எங்கடை ஊரிலை கட்டையன் எண்டொருத்தன் இருந்தவன். உயரம் குறைவாய் ஆனால் நல்ல உறுதியான உருண்ட உடம்பு.அனின்ரை பெயரை இதிலை எழுதாமல் விசயத்தை எழுதிறன்.
அந்தக் கட்டையன் சாவச்சேரி சந்தையிலை மரக்கறி வித்ததை கண்டனெண்டு அந்த லொறிக்காரர் சொன்னதை கேட்டதும் எங்களுக்கு ஒரு பொறிதட்டிச்சிது.மரக்கறி விக்கிறதுக்கு கட்டையனிட்டை தோட்டம் இல்லை. மரக்கறியை வாங்கி விக்கிறதெண்டாலும் யாழ்ப்பாணத்திலை கிட்டமாய் கனக்க சந்தையள் இருக்கக்கூடியதாய் சாவச்சேரியிலை ஏன் விக்கவேணும் எண்டு யோசிச்சிட்டு கட்டையனை தீவிரமாய் கண்காணிக்கிறதாய் முடிவெடுத்து. வீடுகளிலை கணக்கெடுக்காத ஒரு ஏழெட்டுப்பேர் சேந்து இரவு ஒரு பன்னிரண்டு மணிவரைக்கும் ஆயுதங்களோடை தோட்டங்கள் வயல்பக்கமாய் சுத்திவந்தம்.ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை களவு போய்க்கொண்டுதான் இருந்தது. ஆயுதங்களோடை சுத்தினனாங்கள் எண்டதும் ஏதோ ஏகேயோடை சுத்தினதாய் நினைக்காதையுங்கோ. ஏகேயெல்லாம் நான் எட்ட நிண்டுதான் பாத்திருக்கிறன்.பொல்லுத்தடிகள்.மற்றது கோயில்லை வாழைவெட்டுறதுக்கு வைச்சிருந்த வாள் இதுதான் ஆயுதம்.இரவிரவாய் சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாததாலை எங்கடை திட்டத்திலை ஒரு மாற்றத்தை செய்து பாத்தம். அதாவது விடியப்பறம்(அதிகாலை) இரண்டுமணிவரைக்கு நித்திரை கொண்டிட்டு இரண்டு மணிக்கு எழும்பி எல்லாப்பெடியளும் ஊருக்குள்ளை சுத்திவாறதெண்டதுதான் அடுத்த திட்டம். ஆனால் இதெல்லாம் எங்கடை வீடுகளுக்குத்தெரியாமல் தான் நடந்தது. எங்கடை மாற்றுத்திட்டத்துக்கு இரண்டாவது நாளே பலன் கிடைச்சிது.மானிப்பாய் நவாலி தோட்டப்பகுதிக்குள்ளை ஒரு உருவத்தை கண்டிட்டம். மெதுவாய் பதுங்கிப்போய் உருவத்தை கிட்ட நெருங்கிப்பாத்தம்.அந்த உருவம் மளமளவெண்டு பயித்தங்காய் பிடுக்கிகொண்டிருக்க. நாங்கள் எல்லாரும் கத்தியபடி ரோச்லைற்றை அடிச்சுக்கொண்டு ஓடிப்போய் பாஞ்சு ஆளைப்பிடிச்சால் நாங்கள் சந்தேகப்பட்டபடி எங்கடை ஊர் கட்டையனேதான்.யாரும் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓட வசதியாய் உடம்பிலை எண்ணெயைப்பூசியிருந்தான்.அவனை பிடிச்சு கொண்டுவந்து எங்கடை கோயிலடியிலை கரண் கம்பத்திலை கட்டிவைச்சிட்டு அடுத்ததாய் என்ன செய்யலாமெண்டு யோசிச்சம்.
முந்திக் காலங்களிலை ஊரிலை நடக்கிற களவுகள் இல்லாட்டி கள்ளரைப்பிடிச்சால் அதை ஊர் விதானையாரிட்டைதான் பொறுப்புக் குடுக்கிறது வழக்கம். அதுமாதிரி நாங்களும் ஊர்விதானையார் மற்றது ஊர்பெரியாக்களிட்டை கள்ளனை பொறுப்பு குடுக்கலாம் எண்டு நினைச்சு. பிடிச்ச உடைனை நாலைஞ்சு அடியும் போட்டிட்டு அவனை கொண்டு வந்து எங்கடை கோயிலடியிலை இருந்த கரண்டு(மின்கம்பம்)கம்பத்தோட சேர்த்து அவன் இருக்கக்கூடிய வசதியாய் பின்பக்கமாய் கையை கட்டிப்போட்டு இரண்டுபேரை போய் விதானையாரையும் வேறை ஊரிலை பெரியாக்கள் சிலபேரையும் கூட்டிக்கொண்டுவர அனுப்பிப்போட்டு மற்றாக்கள் கட்டையனுக்கு காவல் நிண்டம்.என்ரை நண்பன் இருள்அழகன் வீட்டிலையும் கொடியிலை காயப்போட்டிருந்த உடுப்புகள் களவு போயிருந்தது.அதாலை கட்டிப்போட்டிருக்கிற கட்டையனைப்பாத்ததும் இருள்அழகனுக்கு வீரம் பெருக்கெடுத்து வந்திட்டுது. அதாலை கட்டையனைப்பாத்து டேய் எங்கடை வீட்டிலை காயப்போட்டிருந்த துணியளையும் நீயா களவெடுத்தனி என்று கேட்டபடி கட்டிப்போட்டிருந்த கட்டையனின் கன்னத்தை குறி வைத்து காலால் ஓங்கி அடிச்சான். அடிச்சதுதான் தாமதம் அய்யோ எண்டு கத்தினபடி இருள்அழகன் சுருண்டு விழுந்து கத்தினான். இதென்னடா அடிவாங்கினவன் அப்பியே அசையாமல் இருக்க. அடிச்சவன் ஏன் அய்யேவெண்டு சுருண்டு விழுந்து கத்திறாணென்டு எங்களுக்கு ஒண்டும் விழங்கேல்லை. பிறகுதான் புரிஞ்சுது இருள்அழகன் காலாலை ஒங்கிஅடிக்க அந்த நேரம் கட்டையன் தலையை குனிஞ்சிட்டான் அதாலை இருள்அழகன்ரை கால் கரண்கம்பத்திலை அடிபட்டிருக்கு.அதுவும் கொங்கிறீற் கம்பம் அடிஎப்பிடி இருந்திருக்குமெண்டு யோசிச்சுப்பாருங்கோ.அதுக்கிடையிலை ஊரிலை விதானையாரோடை கொஞ்சப்பெரிய மனுசர்எல்லாரும் நித்திரையாலை எழும்பி கோயிலடிக்கு வந்திட்டினம். இனிவந்தவை சும்மாவே இருப்பினம் எல்லாரும் கட்டையனுக்கு ஆளுக்கொரு அடிபோட . கட்டையன் எங்களைப்பாத்து "ஏன் என்னை கட்டிவைச்சு அடிக்கிறியள் சரியான ஆம்பிளையளாய் இருந்தால் என்னை அவிட்டு விட்டிட்டு யாராவது ஒற்ரைக்கு ஒற்றை தனியஅடிபட வாங்கோ. நான் தோத்திட்டால் உங்கடை தண்டனையை ஏத்துக்கொள்ளுறன்." எண்டு கத்தினான்.
களவெடுத்ததும் இல்லாமல் திமிரைப்பார் எண்டு சில பெருசுகள் புறுபுறுத்தாலும் அடிபட ஒருத்தரும் தயாராய்இல்லை.அப்பதான் என்ரை நண்பனொருவன் கட்டையனை அவிட்டு விடுங்கோ நான் அடிபடத்தயாரெண்டு முன்னுக்கு வந்தான் அவன் கராட்டியிலை கறுப்பு பட்டியும் எடுத்திருந்தவன்.சரியெண்டு நாங்களும் கட்டையனை அவிட்டு விட்டிட்டு ஏதோ வித்தை பாக்கிறதுக்கு நிக்கிறமாதிரி அவை இரண்டு பேரையும் நடுவிலை விட்டு நாங்கள் சுத்திவர நிண்டம்.என்ரை நண்பனும் கையைக் காலை வழைச்சு நெளிச்சு கராட்டி வித்தை எல்லாம் காட்டி தயாராக . கட்டையனும் தன்ரை பங்கிற்கு கையை காலை ஆட்டினவன் திடீரெண்டு சுத்திவர நிண்ட ஒருத்தரை தள்ளிவிழுத்திப்போட்டு வயல்வெளிக்குள்ளாலை இறங்கி ஓடத்தொடக்கிட்டான்.நாங்களும் கலைச்சுப்பாத்தம் அதோடை இருட்டாயும் இருந்தபடியாலை அவனைப்பிடிக்க முடியேல்லை.அதுக்குப் பிறகு கட்டையனை ஊர்ப்பக்கம் காணவேயில்லை.கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை ஒரு இயக்கத்தின்ரை முகாமுக்கு முன்னாலை ஒருதன் குத்திப் போட்டு எறியிற குண்டை கையிலை வைச்சிருந்தபடி என்னை மறிச்சு " தம்பி என்னை ஞாபகம் இருக்குதோ எண்டு கேட்டான். உற்றுப்பாத்தன். அது எங்கடை கட்டையன். பிறகென்ன என்ரை ஏசியா சைக்கிள் ஏறோப்பிளேன் வேகத்திலை அந்த இடத்திலை இருந்து மறைஞ்சிட்டுது.
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib
அண்ணை,
'குளப்பம் குளப்பம்' எண்டு குழப்பிறியள்.
நன்றி எனக்கு இந்த ள விலை அடிக்கடி குழப்பம் கிகிகி.....