Navigation


RSS : Articles / Comments


சாதனை சாதனை

10:51 AM, Posted by sathiri, No Comment

சாதனை சாதனை

சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெவ்வேறை சாதனைகள் என்று மொத்தமாக ஏழு சாதனைகளை செய்து ஊலகசாதனைப்புத்தகமான கின்னசில் இடம்பிடித்தார்.

கடைசியாய் பிரான்ஸ் இங்கிலாந்துக்கிடையிலான கால்வாயை கடந்து சாதனை செய்ய முற்பட்டபொழுது அந்தச்சாதனையாளன் இறந்து போனார்.இந்தச் சாதனையாளன் தொடக்கி வைத்ததுதான் பிறகு ஊருக்கொருத்தராய் சாதனை செய்யிறம் எண்டு வெளிக்கிட்டவை.தொடர்ந்து கைதட்டி சாதனை . தொடர்ந்து நடனமாடி சாதனை . சைக்கிளோட்டிறது.தலைகீழாய் நடக்கிறது என்று ஆளாளுக்கு வெளிக்கிட்டிச்சினம். ஆனால் மப்பிலை தலைகீழாய் நடந்து சாதனை செய்தவையளும் இருக்கினம்.ஆனால் அதெல்லாம் கின்னசிலை சேர்க்கமாட்டாங்கள்.சரி ஆனந்தனுக்கு அடுத்தபடியாய் கனக்க சாதனை செய்யவெளிக்கிட்டவர் எண்டு பாத்தால்.யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேந்த நசீர் எண்டிற தமிழ்முஸ்லிம் ஒருத்தர்.இவர் யாழ்ப்பாணம் முத்தவெளியிலை ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ளை பல விசப்பாம்புகளோடை இருந்து சாதனை செய்யிறாராம் எண்டு கேள்விப்பட்டு நானும் சைக்கிளை எடுத்து மிதிச்சுக்கொண்டு முத்தவெளிக்கு ஓடிப்போய் பாத்தன்.

ஒரு கண்ணாடிக கூட்டுக்குள்ளை சில பாம்புகள் பாவம் அடிச்ச கோரவெய்யில் வெக்கை தாங்காமல் சரியான சாப்பாடும் இல்லைப்போலை மூலைக்கு ஒண்டாய் சுருண்டு போய்கிடந்திதுகள் நடுவிலை நசீர் ஒரு கதிரையை போட்டிட்டு அவரும் வெக்கை தாங்க ஏலாமல் ஒரு விசிறியாலை விசிக்கினபடி இருந்தார்.நசீரும் ஏதோ பெரிய அனகொண்டா மாதிரி மலைப்பாம்புகளை கழுத்திலை சுத்திக்கொண்டு நாலைஞ்சு நாகபாம்பு அவரைச்சுத்தி படமெடுத்தபடி நிக்குமெண்டு நினைச்சு ஓடிப்போன எனக்கு ஏமாற்றம்தான்.ஆனாலும் படமெடுத்தவை அது பாம்பு இல்லை யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையிலையிருந்து வந்த படப்பிடிப்பாளர். படமெடுத்து அது அடுத்தநாள் பேப்பரிலை செய்தியாவும் வந்தது. அடுத்தாய் ஒருநாள் றோட்டாலை காரிலை ஸ்பீக்கரை கட்டி சாதனை உலகசாதனை சங்கானையில் அரைப்பனை உயரத்தில் அந்தரத்தில் ஆடி சாதனை செய்கிறார் வாருங்கள் வந்து பாருங்கள் எண்டு ஒருத்தர் அலறிக்கொண்டு போனார். சங்கானையிலை அரைப்பனையிலை ஆடினால் அது சங்கானை சாதனையல்லோ இவரென்ன உலகசாதனையெண்டுறார்.சிலநேரம் ஆடுறவருக்கு சங்கானைதான் உலகமோ ?? எதுக்கும் ஒருக்கால் போய் பாப்பம் எண்டு நினைச்சு சங்கானைக்கு சைக்கிளை மிதிச்சன் சங்கானை பிள்ளைச்சுண்டு மைதானத்தடியிலை பாட்டுகேட்டிது. அங்கைதான் உலகசாதனை நடக்குதாக்கும் எண்டு நினைச்சு உள்ளை போனால் ஒரு பனையை அரைவாசியளவில் தறித்து அதிலை இரண்டு ஸ்பீக்கர் கட்டி எம்.ஜி.ஆரின் வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் எண்டு பாட்டுபோய்க்கொண்டிருக்க அதுக்கும் மேலை ஒரு பலகையை மேடைபோல பொருத்தி அதுக்குமேலை ஒருத்தர் எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு கையை காலை ஆட்டினபடி நிண்டார்.அதை ஒரு பெரிய கூட்டமே ஆவெண்டு அண்ணாந்து பாத்தபடி நிண்டிச்சினம்.

நானும் கொஞ்ச நேரம் அண்ணாந்து பாத்து கழுத்து நோவெடுக்க கீழை குனிஞ்சு பக்கத்திலை நிண்ட ஒருத்தரிட்டை இவர் எத்தினை மணித்தியலம் ஆடப்போறார் எண்டு கேட்டன்.அதுக்கு அவரும் தம்பி வெளிநாடு ஒண்டிலை யாரோ எட்டுநாள் ஆடிசாதனை செய்தவங்களாம் . அதை முறியடிக்க இவர் பத்துநாள் ஆடுறதாய் முடிவெடுத்திருக்கிறார்.எண்டார்.வெளிநாடெண்டால் எந்த நாடு எண்டு திருப்பிக் கேட்டன் அவரும் தாடையை சொறிஞ்சபடி ரஸ்யாவே அமெரிக்காவே சரியாத்தெரியேல்லை ஆனால் ஆரோ ஆடினவங்களாம் எண்டார்.ஆனால் அந்த நேரம் எனக்கு உந்த உலகஅறிவு பெரிசா இருக்காதததாலை அமெரிக்காவிலையோ ரஸ்யாவிலையோ ஒருத்தரும் அரைப்பனையிலை ஆடினதாய் நான் கேள்விப்படேல்லை அதாலை சரி நம்ம ஊர்காரன் ஒருத்தன் அந்தச் சாதனையை முறியடிக்கப்போறான் எண்டுசந்தோசப்பட்டுக்கொண்டிருக்க. பக்கத்திலை இருந்த வேறை இரண்டு பேர் அண்ணாந்து பாத்தபடி இன்னொரு ஆராச்சியிலை ஈடுபட்டுக்கொண்டிருந்திச்சினம். அது என்னவெண்டால்.பனையை முழுதாய் தறிக்கிறதெண்டால் சுலபம். ஆனால் பாதியிலை தறிச்சிருக்கிறாங்கள் உண்மையிலை கெட்டிக்காரர். இதையும் உலக சாதனையிலை சேர்க்கவேணுமெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம்.எனக்கும் அது ஆச்சரியமாத்தான் இருந்தது அப்பதான் அடிப்பனையை உத்துப்பாத்தன். பாதியாய் தறிச்ச பனங்குத்தியை கீழை கிடங்கு கிண்டி தாட்டிருந்தது. ஆடுறவர் சாப்பிட மட்டும் நேரமெடுத்து உண்மையிலேயே தொடர்ந்து பத்துநாள் ஆடுவாரா இல்லாட்டி இரவு பன்னிரண்டு மணியளவிலை பாட்டையும் நிப்பாட்டிப்போட்டு எல்லாரும் படுக்கப் போனால்பிறகு இவரும் பனையாலை இறங்கி படுக்கப்போடுவாரா??எண்டு யாரையாவது கேக்க நினைச்சாலும் எதுக்கு அடுத்த ஊருக்கு வந்து அனியாயமாய் அடிவாங்குவானெண்டு நினைச்சுக்கொண்டு அங்கை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்ககொண்டிருந்த சனங்களும் அதை பாக்க பக்கத்து ஊரிலை இருந்து வேலை மினக்கெட்டு போன என்னை மாதிரி அக்கள் இருக்கும் மட்டும் இப்பிடி சோதனையான சாதனையள் நடக்கத்தான் செய்யுமெண்டு நினைச்சபடி ஊருக்கு வந்திட்டன்.


ஒருநாள் நாங்கள் வழைமைபோலை கோயிலடி மண்டபத்திலை கச்சான் கடலை வாங்கி சாப்பிட்டபடி அரட்டையடிச்சுக்கொண்டிருக்கேக்குள்ளை ஏதோ கதையிலை எங்களுக்குள்ளை ஒரு பந்தயம் வந்திட்டுது அது என்னவெண்டால் யார் அதிகளவான கச்சான் கடைலை சாப்பிடுறது எண்டதுதான் பந்தயம். அதிலை நானும் இன்னொரு நண்பனுக்குமிடையிலை போட்டிவந்திட்டுது நண்பன் தான் 3 கிலோ கச்சான் சாப்பிடுவன் எண்டான் நான் ஏதோ ஒரு வேகத்திலை 5 கிலோ சாப்பிடுவன் எண்டிட்டன்.உடைனையே எல்லாரும் சேந்து என்னை பப்பாவிலை ஏத்திவிட்டு அப்பிடி நான் 5 கிலோ கச்சான் சாப்பட்டு சாதனை செய்தால் நாங்கள் மாலை நேரத்திலை மருதடிச்சந்தியிலை இருக்கிற குமார் கடையிலை குடிக்கிற பிளேன்ரீயும் வடையும் ஒரு மாதத்துக்கு எனக்கான செலவு தங்களுடையது எண்டு முடிவெடுத்திட்டாங்கள். உடைனையே சந்தர்ப்பம் காத்திருந்த என்ரை உயிர் நண்பன் இருள்அழகன் எல்லாரிட்டையும் காசு சேர்த்து ஓடிப்போய் கச்சான் கடைக்காறியிட்டை விசயத்தை சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்துத் தரச்சொல்லி கேட்கவும் . கச்சான் கடைக்காறிக்கு ஒரே புழுகம் இன்னும் தேவையெண்டால் கேளுங்கோ உடைனை சுடச்சுட வறுத்துத்தாறன் எண்டு சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்து. மொத்தமாய் கச்சான் வாங்கினதுக்காக மேலதிகமாய் இலவசமாய் இன்னும் இரண்டு கை கச்சானையும் அள்ளிப்போட்டு குடுத்துவிட்டாள்.

இருள் அழகன் கச்சானை கொண்டுவந்து எனக்கு முன்னால் கொட்டினதுமே எனக்கு அடிவயித்திலை ஒரு இலேசான மாற்றம் தெரிஞ்சிது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஒரு நிபந்தனையை வைச்சன் அதாவது கச்சான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் எனக்கு பிளேன்சோடா வாங்கித்தரவேணும் இதுதான் நிபந்தனை அதுக்கும் எல்லாரும் தலையாட்ட.எல்லாரும் கச்சானை உடைச்சு உள்ளங்கையிலை வைச்சு தேச்சு தோலை ஊதி ஊதி என்ரை கையிலை தர பிளேன் சோடாவை குடிச்சபடி என்ரை கச்சான் தின்னும் உலக சாதனை ஆரம்பமானது.கோயிருக்கு கும்பிட வந்தவையள் கூட கொஞ்ச நேரம் மடத்தடியிலை நிண்டு என்ரை உலக சாதனையை ரசிச்சு பாத்திட்டு "" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி இதுக்குள்ளை கச்சானை திண்டு இன்னும் பித்தம் தலைக்கேறி விசராக்கப்போகுது"" எண்டு வாயார வாழ்த்திவிட்டுப்போனார்கள்.இரண்டு கிலோ தாண்டியதுமே வயித்துக்குள்ளை வாயுக்குமிழிகள் ஓடிவிழையாட ஆரம்பிச்சது.மூன்றாவது கிலோவைத் தொட்டதும் முட்டிமோதிக்கொண்டிருந்த வாயுபகவான் வழிகிடைத்த இடத்தால் டர்ர்ர்ர்...................டர்ர்ர்ர்.......................என்று வெளியேறத்தொடங்கவே நானும் காற்றோட்டமாய் வயற்கரைப்பக்கமாய் சரிந்திருந்தபடியே மிச்ச சாதனையை தொடர்ந்தேன்.பிளேன் சோடா குடித்த வாயு வாயால் ஏவறையாய்(ஏப்பமாய்) வெளியேறிக்கொண்டிருந்தது.நலாவது கிலோவை கஸ்ரப்பட்டு அனுப்பிக்கொண்டிருக்க வயிற்ரை பிரட்டி சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கவே .

நண்பர்களிடம் போட்டி விதியில் சின்ன மாற்றம் செய்து சத்தி எடுத்திட்டு தொடந்து சாப்பிடலாமா எண்டு கேட்டுப்பாத்தன். அப்பிடியெல்லாம் செய்யமுடியாது அப்பிடிச்செய்தால் பந்தயத்தில் தோத்துப்போனதாக தீர்மானம் கொண்டுவருவோமெண்டு மிரட்டினார்கள். இவங்டை பெரிய ஜ.நா. சபைத்தீர்மானம் என்று நினைத்தபடி அடுத்த பிடி கடைலையை வரியல் போட்டேன் அவ்வளவுதான் உவ்வாய்ய்ய்க்........எண்டு ஏதோ அணை உடைஞ்சு வெள்ளம் வந்த மாதிரி சத்தி(வாந்தி) வந்து அந்த வெள்ளத்திலை எனக்கு முன்னாலை இருந்த நண்பர்கள் எல்லாரும் நனைஞ்சு போச்சினம். பிறகென்ன என்னைத் திட்டியபடியே கொயில் கிணத்திலை எல்லாரும் குளிச்சிட்டு மடத்தையும் கழுவிசுத்தம் செய்துபோட்டு போட்டினம். அண்டைக்கு கடைலை சாப்பிடுற போட்டியிலை தோத்துப்போனாலும் இண்டைக்கு வெளிநாட்டிலை இருந்தபடி கணணியிலை கடலை போடுறதிலை உலக சாதனை நிகழ்த்தியே தீருவது எண்டு உறுதியாய் இருக்கிறன்

No Comment