Navigation


RSS : Articles / Comments


ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 11

8:28 AM, Posted by sathiri, No Comment

ஈழ போராட்டத்தில்.....பாகம் 11


ஈழபோராட்டத்தில் இறங்கிய போராட்ட இயக்கங்கள் இந்தியா தவிர்ந்த வேறு பிற நாடுகளிலும் பயிற்சிகள் எடுத்திருந்தன என்று கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அதில் முக்கியமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ அமைப்பான பி எல் ஓ விடமும் நிக்கரகுவா வின் விடுதலைஇயக்கங்களிடமும் பயிற்சிகளையும் எடுத்திருந்தனர். இதில் ஈரோஸ்.புளொட்.ஈபிஆர்எல்எவ். ஆகிய இயக்கங்களே அடங்கும் .அதைவிட இலங்கை அரசிற்கு ஆயுத உதவி மற்றும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய இஸ்ரவேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல தமிழ் இயக்கமான புளொட் அமைப்பிற்கும் பயிற்சிகளை வழங்கியது.


காரணம் இஸ்வேலின் இலங்கையுடனான நட்பு முழுக்க முழுக்க இராணுவ நலன் சார்ந்ததாகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.இலங்கையில் பிரச்சனை இருக்கும் வரைதான் தாங்கள் தங்களது இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது மட்டுமல்ல அவற்றை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை களமாகவும் இலங்கையை அது வைத்திருந்தது அதே போல தென்கிழக்காசியாவிலேயே இஸ்ரவெலிடம் இருந்து இலங்கை அரசே அதிகளவு ஆயுததளவாடங்களை வாங்கிய நாடும் ஆகும்.எனவே தான் மொசாட் அமைப்பு தமிழ் இயக்கங்களிற்கும் பயிற்சிகளை வழங்கியது இதன் விபரங்களை மொசாட்டின் ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிமிருந்தார். புளொட் அமைப்பில் பாலஸ்தீன பி்.எல்.ஓ விடம் பயிற்சி பெற்றதாக கூறிக்கொண்ட பலர் உண்மையிலேயெ மொசாட்டிடம்தான் பயிற்சி எடுத்திருந்தனர்.பயிற்சி எடுத்தவர்களிற்கு தாங்கள் உண்மையில் யாரிடம் பயிற்சி எடுக்கிறோம் என்று உண்மையில் தெரிந்திருந்திருந்ததா? என்பது தெரியவில்லை.

ரெலோவிற்கு இந்திய இராணுவமே பயிற்சிகளை தொடர்ந்தது. புலிகள் அமைப்பு பின்னர் தமிழ் நாட்டிலும் தமிழீழத்தின் பகுதிகளிலும் பயிற்சி பாசறைகளை நிறுவி தாங்களே பயிற்சிகளை வழங்க தொடங்கினார்கள் வேறு எந்த வெளிநாட்டிடமும் பயிற்சி உதவி என்று போகவில்லை. காரணம் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் 80 களில் ஆயுதபோராட்டம் முனைப்பு பெற்றவேளையில் அனேகமான எல்லா இயக்கங்களும் பாடசாலைகளிற்கு வந்து அங்கு மாணவர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டுவதற்காக மாணவர்களை அழைத்து வகுப்புகள் வைப்பார்கள்.

அப்படியே தங்கள்: அமைப்பில் இணைய விரும்புபவர்களையும் இணைத்து கொள்வார்கள்.அப்படி ஒரு நாள் நான் படித்த கல்லூரியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் ஒரு வகுப்பை வைத்தனர் நானும் போயிந்தேன் அதில் அவர்கள் கியுபா விடுதலை போராட்டம்பற்றி அழகாக விழங்கபடுத்தி அதை போல நாமும் போராடவேண்டும் என்று கூறி கியூபா விடுதலை போராட்டம்பற்றி தமிழில் சிறிய ஒரு புத்தகம் ஒன்றையும் அனைவரிற்கும் தந்துவிட்டு போனார்கள். அடுத்ததாக புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன் ஒரு வகுப்பை வைத்தார்.

அதில் முன்னர் ஈ.பி யினரின் வகுப்பில் கலந்து கொண்ட அனைவருமே திலீபன் நடாத்திய வகுப்பிற்கும் சென்றிருந்தோம்.அதில் திலீபன் இலங்கையரசின் அடக்குமுறைகள் படுகொலைகள் முக்கியமாக மாணவர்மீதான தரப்டுத்துதல் பற்றிய உள்நோக்கம் என்பனவற்றை விபரித்து விட்டு யாரிற்காவது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகேட்கலாம் என்றார். அப்போது ஒரு மாணவன் எழுந்து திலீபனிடம் அண்ணா முதலில் கூட்டம் வைத்த ஈ.பி யினர் கியூபா விடுதலை போராட்டத்தை பற்றி விழங்கபடுத்தி அழகாக உதாரணமும் காட்டி அந்த நாட்டு மக்களை போலவே நாங்களும் போராட வேண்டும் என்று சொல்லி இதோ இந்த புத்தகத்தையும் தந்தார்கள் ஆனால் நீங்கள் எந்தநாட்டு விடுதலை போராட்டத்தையும் உதாரணமாக சொல்லவில்லையே என் உங்களிற்கு தெரியாதா??என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

அதற்கு திலீபன் சிரித்தபடியே சொன்னார் தம்பி உதாரணத்தை நானும் சொல்லலாம் வியட்னாம் கியூபா பாலஸ்தீனம் என்று வேறுநாட்டு போராட்டங்களை பற்றி சொல்வது கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்கும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று காட்டி உங்களிடம் ஒரு மதிப்பை உயர்த்ததான் இவை உதவுமே தவிர உண்மையான எங்கள் போராட்டத்திற்கு இவை பெரிதாய் உதவாது எங்கள் போராட்டத்திற்கான உதாரணங்களை அனுபவங்களை எங்கள் போராட்டத்திலிருந்தேதான் பெறவேண்டும் உதாரணமாய் கியூபா கெரில்லா யுத்தத்திற்கு அந்த நாட்டின் இயற்கை அமைப்பு மலையும் காடுகளும் போராளிகளிற்கு உதவின அதைபடித்துவிட்டு காடுகளோ மலைகளோ இல்லாத எங்கள் யாழ் குடாநாட்டில் எப்படி கெரில்லா யுத்தத்தை முன்னெடுப்பது?? என்றுதலையை போட்டு குழப்பவேண்டாம்

எங்கள் குடாநாட்டின் ஒழுங்கை அமைப்புகள் தான் எங்கள் கெரில்லா யுத்தத்தின் காப்பரண்கள் விரும்பினால் அறிவை வளர்த்து கொள்ள மற்றைய விடுதலை போராட்டம்பற்றிய புத்தகங்களையும் படியுங்கள் என்றார். இந்திய படையுடனான புலிகளின் யுத்தத்தின் போதும் ஏன் இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன் திலீபன் அன்று சொன்னது எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.இப்படி வேறுநாடுகளில் பயிற்சிகள் பெற்றும் வேறுநாட்ட போராட்டங்களை பற்றியே பக்கம் பக்கமாக பேசியும் எழுதியுமே மற்றைய இயக்கங்கள் காலத்தை கடத்தி காணாமல் போயும் விட்டன.இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் அதன் செயற்பாடுகளை நியாயபடுத்தும் புஸ்பராசாவும் கூட விதிவிலக்கல.

இதில் இந்தியா ஈழபோராட்ட அமைப்புகளிற்கு பயிற்சிகள் வழங்கினாலும் இந்த அமைப்புகள் ஒன்றாய் இணைந்துவிடாதபடி மிக கவனமாக பார்த்து கொண்டார்கள் ஏனெனில் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் தங்கள் கட்டுபாடுகளை மீறி இவர்கள் ஈழத்தை அமைத்து விடுவார்கள் என்கிற பயத்தினால் இடைக்கிடை அந்த அமைப்புகளிற்கிடையே பிரச்னைகளை உருவாக்குவதிலும் ஏன் அந்த இயக்கங்களின் உள்ளேயே கூட பிரச்சனைகளை உருவாக்கி விட்டுகொண்டும் தான் இருந்தனர்.இந்த விடயத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இயக்க உட்படுகொலைகளிற்கு றோவினரின் பினனணி இருந்தது என்று புஸ்பராசாவே ஒத்துகொள்கிறார்.

அதே நேரம் இந்த போராட்ட அமைப்புகளிற்கும் தமிழ் நாட்டு தமிழர்களிற்கும் அதிகளவு நெருக்கத்தையும் இந்தியபுலனாய்வு துறை விரும்பவில்லை அதற்குள்ளும் அவ்வப்போது ஏதாவது சதிசெய்துகொண்டேதான் இருந்தனர். ஆனாலும் இந்த விடயத்தில் றோ அதிகாரிகளால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லையென்றே சொல்லலாம்.தமிழ்நாட்டின் அரசியல் விழையாட்டுக்களை தவிர்த்து பார்த்தால் தமிழ்நாட்டு தமிழரின் ஆதரவும் அக்கறையும் ஈழத்தமிழரிற்கு எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.தற்பொழுது அது புத்துயிற் பெற்று இன்னும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவும் சில இந்திய கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில புலனாய்வு அதிகாரிகளிற்கும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது எனவே தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுஎழுச்சியும் ஈழத்தமிழரின் வெற்றியுமே இவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டுவரும்

.இதை விடுத்து இந்திய படை காலத்தை பார்த்தால் ஈழத்தில் இந்திய படைகாலத்தில் கூட இந்திய அரசு தங்கள் ஒட்டுகுழுவாக ஒரு குழுவை வைத்திருக்காமல் அங்கும் பல குழுக்களையே வைத்திருந்தனர் காரணம் ஒரேயொரு குழுவை வைந்திருந்து அது சில நேரம் தங்கள் மக்களை தாங்களே எப்படி துன்புறுத்தி படுகொலைகளை செய்வது என்று மனம் மாறியோ அல்லது வேறு விடயங்களால் இந்திய அதிகாரத்துடன் முரண்பட்டு பிரிந்து போய் விட்டாலோ அது இந்திய அதிகாரத்திற்கு பேரிழப்பாகிவிடும் எனவே தான் ஒன்று கைவிட்டு போனாலும் இன்னொன்று தங்கள் தாளத்திற்கு ஆடும் என்பதால் பல குழுக்களை இயக்கி அதில் எந்தகுழு தங்களிற்கு அதிக விசுவாசமாய் இருக்கிறதோ அதன் விசுவாசத்திற்கேற்ப அதற்கு சலுகைகளை வழங்கினர்.

அப்படி அதிகவிசுவாசம் காட்டியகுழுதான் புஸ்பராசா சார்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமாகும். அவர்களின் கீழ் ஒரு தமிழ் தேசிய இராணுவம் என்று ஒரு படையணியை உருவாக்கி ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பையும் நடாத்தி வடக்குகிழக்கு மகாணத்தை கடதாசியில் சில கையெழுத்துகளால் இணைத்து தங்கள் நூலில் ஆடும் வரதராஜபெருமாளை முதலமைச்சரும் ஆக்கினார்கள்.இன்று இந்திய அரசால் உருவாக்கபட்டஅந்த வடக்கு கிழக்கு கடதாசி இணைப்பைகூட தமிழருடன் செய்து கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தே பழக்கபட்ட சிங்கள இனவாதம் அதையும் கிழித்து குப்பையில் போட்டுவிட்டு கூத்தாடுகிறது. அதைபார்த்து மண்டையை சொறிந்தபடியே மகிந்தராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பு குடுத்து மகிழ்கிறது இந்திய மத்தியஅரசு.இந்த இந்திய இராணுவத்தால் உருவாக்கபட்ட தமிழ் தேசிய இராணுத்தின் பின்னால் தமிழ் மக்களின் சொல்லமுடியாத வேதனைகள் இழப்புக்கள் அழுகைகள் அவலங்கள் என்று ஏராளம் ஏராளம்.அடுத்த பாகத்தில் அவற்றையும் பார்த்து கொண்டு இந்த தொடரை முடிவிற்கு கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன்.

No Comment