Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள் 4

6:50 AM, Posted by sathiri, One Comment

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இது ஈழத்தில் இந்தியபடையின் இருண்ட காலத்தில் ஒரு போராளியின் உண்மை கதைகதையின் காலம் 1988ம் ஆண்டு சித்திரை மாதம்யாழ்குடாவின் சண்டிலிப்பாய் கிராமம் ஒருநாள் மாலை நேரம் திடீரென துப்பாக்கிவெடிச்சத்தங்கள் கேட்கிறது இந்த சத்தங்கள் அந்த கிராமத்திற்கு ஏன் ஈழத்தின் எந்த கிராமத்திற்கும் புதியதல்ல சத்தம் கேட்டசில நிமிடங்கள் மக்கள் பரபரப்பாவார்கள் ஏதாவது ஒருமரணசெய்தி வரும் அது போராளியாகவும் இரக்கலாம் பொதுமக்களாகவும் இருக்கலாம்.சில நிமிடங்களில் மக்கள் வழைமை போல தங்கள்வேலைகளை பார்க்கபோய்விடுவார்கள் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் எல்லோருக்கும் பழகிபோய்விட்டது.

அன்றும் அப்படித்தான் சத்தம் கேட்டதும் மக்கள் ஒருவரையொருவர் பார்த்து "யாரோ மாட்டுபட்டிட்டாங்கள் போலை வெடிவிழுந்தது ஆமிக்கா பெடியளுக்கா எண்டு தெரியேல்லையெண்டு " என்று விட்டு தங்கள் வேலைகளில் கவனமானார்கள்.ஆனால் அந்த கிராமத்தில் இந்தியபடை காலத்தின் இக்கட்டான சூழலிலும் போராளிகளிற்கு ஆதரவளித்து அரவணைத்த சில வீடுகளில் ஒரு வீட்டில் அந்த தாய் மட்டும் சத்தம் கேட்டதுமுதல் நிம்மதியில்லாமல் வீட்டு படைலையை எட்டி பார்ப்பதும் வீட்டிற்குள் போவதுமாக இருந்தார்.

அவர் மனதில் ஒரு பதை பதைப்பு இண்டைக்கு பெடியள் வாற நாள் வெடிச்சத்தம் வேறை கேட்டது யார் வந்தாங்களோ அவங்களிற்கு ஏதும் நடந்துதோ கடவுளே அவங்களுக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்தபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை ரதி ஒருக்கா றோட்டு வரைக்கும் போய் பார் பிள்ளை என்று மகளை சொன்னவர் பின்னர் வேண்டாம் பிறகு உன்னை தேடி நான் வர ஏலாது நானே போய் பாக்கிறன் என்றவர் வீட்டை விட்டு ஓழுங்கையால் வந்து பிரதான வீதியை எட்டிப்பார்த்தார் வீதியில் சன நடமாட்டம் இருக்கவில்லை ஏதாவது செய்தி கேட்பம் எண்டா வீதியிலையும் யாரையும் காணவில்லையென நினைத்தபடி விட்டை நோக்கி நடந்தார்.

சில நிமிடங்களின் பின்னர் வெள்ளை கைத்துப்பாக்கியை ஒருகையில் இறுக்கி பிடித்தபடி அவனது சேட்டை களற்றி அதில் கைக்குண்டை சுற்றி இடுப்பில் கட்டியபடி தாண்டி தாண்டி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது உடல் எங்கும் கீறல் காயங்கள் அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை கண்டதும் அந்த தாயார் பதறியபடி தம்பி என்னடா அப்பவும் சத்தம் கேட்கேக்கை நான் நினைச்சனான் நீங்களா தான் இருக்குமெண்டு உனக்கு வெடிபட்டிட்டுதே என்றபடி அவனை அணைத்து பிடித்தபடி கேட்கவும் வெள்ளைக்கு மூச்சிரைத்ததில் பேச்சு வரவில்லை அப்படியே நிலத்தில் அமர்ந்தபடி கையால் தனக்கு ஒன்றுமில்லை என்று சைகை காட்டியவன் த...தண்ணி என்று தட்டுதடுமாறியபடி கேட்டான்.

அதற்கிடையில் மகள் ரதி தண்ணீரை கொண்டோடிவந்து கொடுக்கவும் அதை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தவன் மிகுதி தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு கொஞ்சம் அமைதியடைந்தவன் . நடந்ததை சொன்னான் அம்மா நானும் பிறேமும்(பிறேம் மானிப்பாயை சேர்ந்த போராளி இவனிற்று திக்குவாய் எனவே இவனை எல்லோரும் கொன்னை பிறேம் என்றுதான் அழைப்பார்கள்)அளவெட்டிக்கு போய் தும்பனை சந்திச்சிட்டு வந்து கொண்டிருந்னாங்கள் தொட்டிலடியிலை மெயின்றோட்டை கடக்கேக்கை ஆமிகாரன் திடீரெண்டு வந்திட்டாங்கள் எங்களை அவங்கள் மறிக்க நாங்கள் சைக்கிளை போட்டிட்டு ஒரு வீட்டு வேலியாலை பாஞ்சிட்டம். அவங்களும் சுட தொடங்கிட்டாங்கள்.

நல்ல வேளை வெடி பிடிக்கேல்லை பிறேம் வேறை பக்கத்தாலை ஓடிட்டான் அவனுக்கும் ஒண்டும் நடந்திருக்காத எண்டுதான் நினைக்கிறன். என்ரை கஸ்ரகாலம் நான் பாஞ்ச வேலி முள்முருக்கை வேலி அதுதான் மேலெல்லாம் கீறி போட்டிது என்று அந்த வேதனையும் சிரித்தபடி சொன்னான் .அவனின் பெயர் வெள்ளை என்று எல்லோரும் அழைத்ததே அவனது நிறத்தால்தான். நல்ல வெள்ளை உயரமான உறுதியான உடல். காலிலையும் என்னவோ குத்தி போட்டுது என்றபடி காலை திருப்பி பார்த்தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

பொறுங்கோ அண்ணை நான் பாக்கிறன் என்றபடி ரதி அவனது காலை பார்தாள் கட்டை ஏதோ குத்தியிருக்கு பொறுங்கோ தண்ணி கொண்டவாறன் காலை கழுவிட்டு பார்ப்பம் என்றபடி தண்ணீரால் காலை சுத்தம் செய்து பார்த்தாள். ஒரு தடியொன்று ஆழமாக குத்தியிருந்தது அதை மெதுவாக எடுத்துவிட்டு அந்த காயத்திற்கு கைவசம் அவர்களிடம் இருந்த கைமருந்தாக கோப்பிதூளை வைத்து கட்டிவிட்டு சரி மேலெல்லாம் கீறியிருக்கு மேலை கழுவிட்டு வாங்கோ நான் தேத்தண்ணி போடுறன் என்றவாறு ரதி அடுப்படி பக்கம் போய்விட ஒரு சேட்டையும் சாரத்தையும் கொடுத்து அந்த தாயார் சொன்னார் தம்பி உன்ரை சாரமும் கிழிஞ்சிருக்கு இந்தா இதை மாத்து இந்த உடுப்பகளை போட இந்த வீட்டிலை இனியார் இருக்கினம் என்று அவள் தனது கணவரின் உடைகளை கொடுத்தார்.

காரணம் அந்த தாயாரின் கணவனையும் ஏற்கனவே இந்திய இராணுவம் வீதியில் வைத்து சுட்டுகொன்றுவிட்டிருந்தது.༢r />??ுளித்துவிட்டு உடைகளை மாற்றி கொண்டு தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிகொண்டு கண்ணாடியின்முன் நின்று பார்த்த வெள்ளை சிரித்தபடி சொன்னான் அம்மா சேட்டு சரியான பெரிசா இருக்கு ஏதோ காச்சல் காரர் மாதிரியிருக்கு எண்டாலும் பரவாயில்லை இதுக்கை பிஸ்ரல் என்ன ? ஏ.கே யையே மறைச்சு கொண்டு போகலாம் என்றவும்.எல்லோரும் சிரிக்கவும் அந்த தாயாரும் சிரித்தபடி சொன்னார் அடுத்த முறை உனக்கு அளவான சேட்டு தைச்சு வைக்கிறன் என்றபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை வெள்ளையின்ரை அளவை எடுத்து வை நான் பிறகு துணி வாங்கி தைக்கிறன் என்றார்.

உங்களுக்கு எதுக்கம்மா கரைச்சல் நான் வசதி கிடைச்சா அடுத்தமுறை துணி வாங்கி கொண்டு வாறன் இல்லாட்டி யாரிட்டையாவது குடுத்து விடுறன் தைச்சு வையுங்கோ என்றபடி தேனீரை குடித்து விட்டு சரி நான் போட்டு வாறன் சிலநேரம் பிறேம் எங்கையாவது ஓடி ஒழிச்சு இங்கை வந்தா சொல்லுங்கோ நான் ஏழாலைக்கு போறன் அங்கை வரச்சொல்லுங்கோ என்றபடி காலில் கட்டை குத்திய வலியை தாங்கியபடி தாண்டி தாண்டி நடக்க தொடங்கினான் வெள்ளை.அதை பார்த்த ரதி அவனிடம் அண்ணை இப்பிடி தாண்டி கொண்டு என்ணெண்டு ஏழாலைக்கு போகபோறீங்கள் வேணுமெண்டா என்ரை சைக்கிளை கொண்டு போங்கோ என்றவும் வேண்டாம் தங்கச்சி இடையிலை எங்கையாவது ஆமிமறிச்சால் நான் சைக்கிளை போட்டிட்டுதான் ஒடவேணும் பிறகு சைக்கிளை வைச்சு உங்களை அடையாளம் பிடிச்சாங்கள் எண்டால் பிறகு உங்களிற்கு சைக்கிளும் இல்லை உங்களையும் கொண்டுபோடுவாங்கள் உங்களுக்குதான் கரைச்சல் என்றபடி அந்த ஒழுங்கையை கடந்து மறைந்தான்.

சிலநாட்கள் கழித்து பிறேம் கையில் ஒரு பையுடன் அந்த வீட்டிற்கு வந்தான் அதில் இரண்டு துணிகள் அதை கொடுத்து அம்மா வெள்ளை இதை உங்களிட்டை குடுத்து சேட்டு தைச்சு வைக்க சொன்னவன் எங்களிற்கு ஒரு முக்கியமான சில செய்திகள் வன்னியிலை இருந்து வந்திருக்கு அந்த அலுவலா நிக்கிறதாலை வெள்ளை இண்டைக்கு வரேல்லை வாறகிழைமை வருவம் தைச்சு வையுங்கோ என்று என்று விட்டு போய்விட்டான். சில நாட்கள் கழித்து வெள்ளையும் பிறேமும்இன்னொரு போராளியுமாக அங்கு வந்தனர். அவர்களிடம் ஒரு துணிப்பையில் நிறைய துண்டு பிரசுரங்கள் இருந்தது. வந்தவர்கள் அன்று அவசரமாகவே காணப்பட்டார்கள்.தம்பியவை சாப்பிட்டயளோ வழைமை போல அந்ததாயின் விசாரிப்பு.

அம்மா சாப்பிட்டம் தே தண்ணி தாங்கோ அதோடை கன வேலை இருக்கு வன்னியிலை தலைவரிட்டை இருந்து யாழ்ப்பாண மக்களிற்கு சில செய்தியள் பிரசுரமா அடிச்சு அனுப்பியிருக்கினம்.இந்த இக்கட்டான நிமையிலை எங்கடை திட்டங்கள் மற்றும் இந்த சிக்கலான சூழ்நிலையிலை மக்கள் எப்பிடியான செயல்பாட்டை முன்னெடுக்கவேணும் என்டு இதிலை இருக்கு படிச்சு பாருங்கோ என்று சில பிரசுரங்களை அந்த தாயிடம் நீட்டினான் . நீங்கள் படிச்சிட்டு உங்களிட்டை வாறவையிட்டையும் இதுகளை குடுங்கோ என்றான் வெள்ளை. சரி தம்பி என்று அதை பெற்று கொண்டவர் இந்தாப்பு இரண்டு பேருக்கும் சேட்டு தைச்சாச்சு போட்டு பாருங்கோ எண்று அவர் குடுத்த சேட்டினை வாங்கி போட்டு பார்த்து கொண்ட வெள்ளையும் பிறெமும் சரியம்மா நல்ல அளவாயிருக்கு நாங்கள் இந்த பிரசுரங்களை எல்லா ஊருக்கும் கொண்டு போய் குடுக்க வேணும் இப்ப நாங்கள் உடுவிலுக்கு போக வேணும்.

அதாலை அடுத்த தரம் வரேக்கை ஆறுதலாய் கதைப்பம் என்றபடி வெள்ளையும் மற்றவர்களும் பறப்பட தயாரானார்கள். அதில் பிறேமும் மூன்றாவதாய் வந்த போராளியும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவே அவர்களிற்கு அந்த பகுதி மக்கள் நல்ல பரிச்சயமானவர்கள். எனவே அவர்களில் யாராவது ஒரவர் முன்னே சென்றால் தான் இராணுவ நடமாட்டத்தை பொது மக்கள் அவர்களிற்கு தெரிவிப்பார்கள்.எனவே மூன்றாவது போராளி முன்னே செல்ல நடுவில் வெள்ளை தனது சைக்கிளில் துண்டு பிரசுரங்களுடனும் பின்னே பிறேமும் போவது என தீர்மானித்து மூவரும் தங்கள் கைத்துப்பாக்கிகளை ஒரு முறை தாயார் இயங்கு நிலையில் இருக்கிறதா என சரி பார்த்து விட்டு அங்கிருந்து விடை பெற்று கொண்டு சைக்கிள்களை மிதிக்கின்றனர்.

பிரதான வீதிகள் எங்கும் இந்திய இராணுவம் பரவியிருந்ததால் உடுவில் பகுதிக்கு உட்பாதை ஒழுங்கைகள் ஊடாக செல்வதுதான் பாது காப்பு எனவே அவர்கள் கல்வளை ஊடாக அந்திரான் சங்குவேலி வயல்பாதைகளினுடாக செல்வது என தீர்மானித்து போகிற பாதைகளில் எதிர்படுகின்ற மக்களிடம் இராணுவநடமாட்டம் இருக்கின்றதா என விசாரித்தபடியே போய் கொண்டிருந்தனர்.சங்கு வேலி வயற்பகுதிக்கு வந்ததும் டச்சு வீதியில் சில வினாடிகள் சைக்கிள்களை நிறுத்தி வயல் வெளியை நோட்டம் விட்டனர் ஏனெனில் அந்தவீதி சண்டிலிப்பாய் உடுவில் மற்றும் கந்தரோடை என்று ஒரு முக்கோண வடிவில் அமைந்திருந்த கிராமங்களை இணைக்கின்ற வீதி

இந்த மூன்று இடங்களிலும் இந்திய இராணுவத்தின் பெரிய முகாம்கள் அமைந்திருப்பதால் திடீரென எந்த நேரமும் இராணுவம் வரலாம்.இராணுவத்தின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி எதவுமில்லை வயல்களில் பலர் வேலை செய்து கொண்டும் தண்ணீர் பாச்சி கொண்டும் நின்றனர்.அப்போ எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்கள் அண்ணை அங்கலை ஆமி நிக்கிற சிலமன் இருக்கோ??வந்தவர் சொன்னார் நான் சண்டிலிப்பாய் பக்கமா இருந்து வாறன் தம்பியவை அந்த பக்கம் இல்லை என்றபடி போய் விட மூவரும் மிக அவதானமாக சில மீற்றர்கள் இடைவெளி விட்டு உடுவில் பக்கமாக சைக்கிளை மிதிக்கின்றனர். சங்குவேலி வயல்வெளி முடிந்து ஊர்மனைகளை அண்மித்து கொண்டிருந்த வேளை எதிரே மண்வெட்டியுடன் வந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் இந்த போராளிகளை அடையாளம் கண்டு கண்களால் சைகை செய்கிறார்.

முன்னே சென்று கொண்டிருந்த போராளிக்கு இராணுவம் நிற்கிறது என்று புரிந்து விட்டது சைக்கிள் வேகத்தை குறைத்தபடி கையால் பின்னிற்கு வந்துகொண்டிருந்த வெள்ளைக்கு சைகை காட்டியபடி இராணுவம் எங்க நிற்கிறது என்று கண்களால் துளாவ "ஸ்ரொப் " என்றொரு சத்தம் கேட்டது அவனிற்கு சில மீற்றர் தூரத்தில் வேலி ஒன்றினுள் பூவரச மரங்களினுள் உருமறைப்பு செய்துகொண்டிருந்த ஒரு இராணுவத்தின் துப்பாக்கி அவனை நோக்கி குறிபார்த்த படி இருந்ததை கவனித்து விட்டான்.டேய் ஆமி பக்கத்திலையடா பாயுங்கோடா என கத்தியபடி அவன் தோட்டங்களினுள் பாயவும் பிறேம் பின்னால் தூரத்தில் வந்தபடியால் அவன் சைக்கிளை திருப்பிகொண்டு சண்டிலிப்பாய் பக்கமாக ஓடிவிட வெள்ளை சைக்கிளை போட்டு விட்டு அதில் இருந்த பிரசுரங்களையும் எடுத்து கொண்டு ஓட முயற்சித்தான்

ஆனால் பிரசுரங்கள் இருந்த துணிப்பை சைக்கிளில் மாட்டிவிட அவன் அதை இழுத்து கொண்டிருக்க இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது . அந்த குண்டுகள் வெள்ளையின் தொடைபகுதியை துளைத்து செல்ல அவன் காலை தாண்டியபடி தோட்டங்களினுடாக ஓட தொடங்கினான். வெள்ளைக்கு சூடு பட்டுவிட்டதை கவனித்த மற்றபோராளி அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து திரும்ப வெள்ளையை நோக்கி வர தொடங்கவும் அம்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தேடியபடி தோட்டங்களினுள் இறங்கி கொண்டிருந்தனர். இனி அந்த போராளியலும் ஓடமுடியாது அவர்கள் கண்டுவிடுவார்கள் எனவே அங்கு தோட்டத்திற்கு பசளைக்காக தாழ்ப்பதற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பூவரசம் குளைகளின் உள்ளே புகுந்து மறைந்து கொண்டான்.

இந்திய இராணுவத்தினர் கிந்தியில் கதைப்பது அவனிற்கு தெளிவாக கேட்டது அருகி்ல் வந்து விட்டார்கள் இனி தப்பமுடியாது என நினைத்தபடி தயாராய் இருந்த கைத்துப்பாக்கியை தனது நெற்றியின் அருகே வைத்து பிடித்தபடி அசையாமல் படுத்திருந்தான். அப்போ (இதர்கய் இதர்கய் பாக்கராவோ) இந்தா இருக்கிறான் ஓடிவா ஓடிவா .என்று ஒருவன் கிந்தியில் கத்துவது தெளிவாய் கேட்டது. அதை தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அது வெள்ளையின் கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் தான். அந்த போராளி ஒரு கணம் கண்களை மூடிகொண்டான் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. ஆம் இராணுவத்தினர் வெள்ளையை கண்டு கொண்டதும் வெள்ளை தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தன்னுயிரை போக்கி கொண்டான். இந்திய ஆதிக்க இராணுவத்தின் நித்திரையை நிம்மதியை கலைத்து கொண்டிருந்த ஒரு வீரன் எங்கள் மண்ணிற்காகவும் எங்கள் வாழ்விற்காகவும். எங்கள் மனங்களில் நீங்காத நினைவாகி போனான். தொடரும்.............

One Comment

சினேகிதி @ 9:50 AM

வணக்கம் சாத்திரி. நல்ல விவரணத்தோடு கூடிய சம்பவம்.இப்படிப்பல சம்பவங்களைப் பார்த்ததாலோ என்னவோ இதை வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் முட்டுகிறது.