Navigation


RSS : Articles / Comments


சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை

1:41 AM, Posted by sathiri, 2 Comments

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை
சாத்திரி ஒரு பேப்பர்

அண்மையில் என்னுடைய பதிவுகளில்  சிறுவர்கள் மீதான பாலியல் விடயத்திளையும் எனக்கு சிறியவயதில் நடந்ததொரு அனுபவத்தினையும் எழுதியிருந்தேன்.  அதனை படித்த பலரும் தங்களிற்கும் நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தனர்.  பொதுவாக இதனைப்பற்றி  எமது தமிழ் சமூகத்தில்  நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு.ஆனாலும் எமது சமூகத்தில்  எமது குடும்ப உறவுகளாலோ அல்லது  குடும்பத்தின் நெருங்கிய நட்புக்களாலோ  சிறுவர்கள் மீதான  பாலியல் வன்முறை  நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அது வெளியில் வருவதில்லையென்பதுதான் சோகமானது. இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையே விபரிக்கலாம்.வெளிநாடுகளில் எம்மவர்கள் பணம் சேர்ப்பதை மட்டுமே குறியாக நினைத்து பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.

அதற்காக பெரும்பாலான குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளில் தனியானவர்களை தங்கவைத்து வாடைகை வாங்குவார்கள். சில வருடங்களிற்கு முன்னர் பாரிஸ் புறநகர் பகுதியில் யரடயெல ளழரள டிழளை வசிக்கும் எனது நண்பன் ஒருவனிற்கு நடந்த சம்பவத்தையும் இங்கு எழுதுகிறேன்.நண்பனிற்கு ஒரேயொரு மகள் இருந்தாள் அவளிற்கு அப்பொழுது 11 வயது ஆகியிருந்தது நண்பன் தன்னுடைய மனைவியின் நெருக்கிய உறவுக்காரர் ஒருத்தரை தனது வீட்டில் தங்கவைத்திருந்து (அவரும் திருமணமானர் மனைவி பிள்ளைகள் ஊரில் இருந்தனர்) வாடைகைப்பணமும் அதைவிட சாப்பாட்டு காசும் தனியாக வாங்கிக்கொண்டிருந்தார். ஒருநாள் நண்பனும் மனைவியும் வேலைக்கு போயிருந்த நேரம் அந்த நபர் தண்ணியடித்து விட்டு கணணியில் நீலப்படத்தை போட்டுவிட்டு அந்த சிறுமியை பார்க்கும்படி வற்புறுத்தியதோடு பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார் சிறுமி அவர் கையை கடித்து விட்டு தப்பியோடி குளியலறையில் புகுந்து கதவை பூட்டிக்கொண்டு இருந்துவிட்டாள். விடயம் பிழைத்துப் போனதால் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். பின்னர் வீடுவந்த தந்தையிடம் சிறுமி அழுதபடி விடயத்தை சொல்லவே என்ன செய்வதென்று தெரியாமல் அவர் எனக்கு போனடித்து ஆலோசனை கேட்டிருந்தார். உடனடியாக காவல்த்துறையில் முறையிட்டுவிட்டு மகளை வைத்தியரிடம் அழைத்துப்போகவும் மிகுதியை அவர்கள் பார்ப்பார்கள் என்று ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால் அவரது மனைவி அதற்கு உடன்படவில்லை காரணம் சம்பந்தப் பட்டவர் அவரது நெருங்கிய உறவினர்.
சொந்தத்திற்குள் சண்டை வரும் என பயந்தார்.அடுத்தது போலிஸ் வழக்கு என்று போனால் மகளின்எதிர்காலம்கெட்டுவிடும்.

இந்த இரண்டு பயத்தாலும் அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மகளிடமும் இந்த விடயத்தை யாருடமும் சொல்லகூடாது என மிரட்டியதோடு பாடசாலைக்கு போனால் அவர்களிடம் மகள் சொல்லி விடுவாள் அல்லது அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்கிற பயத்தில் சிலநாட்கள் அவளை பாடசாலைக்கும் அனுப்பவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்ததாகவும் போலிசார் சம்பந்தப்பட்டவரை தேடுவதாகவும் அவன் என்னிடம் பொய் சொல்லியிருந்தான். சிலநாள் கழித்து நான் அவனிற்கு போனடித்து என்ன நிலைமை என கேட்ட பொழுது போலிஸ் இன்னமும் ஆளை தேடுவதாக சொன்னான் . உடனேயே நான் அவனிடம் சம்பத்தப்பட்டவனின் பெயர் விபரம் அதே நேரம் அவனின் படம் என்பனவற்றை எனக்கு உடனடியாக அனுப்பும்படி
சொன்னதும் நண்பனிற்கு புரிந்துவிட்டது நான் எங்காவது எழுதிவிடுவேன் அல்லது வானலைகளில் கதைத்துவிடுவேன் என்கிற பயத்தில் வழக்கு பதியவில்லை என்கிற உண்மையை சொல்லியதோடு மகளும் இப்பொழுது வழமைக்கு திரும்பி பாடசாலை போகிறாள் பிரச்சனையில்லை பேசாமல் விடு என்றான்.ஆனால் நான் விடாமல் நண்பனோடு சண்டை பிடித்தபொழுது எங்கடை பிள்ளையை கவனிக்க எங்களுக்கு தெரியும் உவர் ஏன் தேவையில்லாமல் எங்கடை பிரச்சனைக்குள்ளை தலையை விடுறார் என்று அவனது மனைவியின் குரல் எனக்கு கேட்டது. நீ தவறு விடுகிறாய் இதற்கான விலை பெரிதாய் இருக்குமெண்டு நான் நண்பனிடம் சொல்லிவிட்டு தொ.பேசியை துண்டித்துவிட்டேன்.


அதன்பின்னர் நானும் அவனுடன் தொடர்பு கொள்வது கிடையாது ஆனால் சம்பவம் நடந்ததன் பின்னர் மிகவும் கெட்டிக்காரியான அந்த சிறுமி பாடங்களில் கவனத்தை செலுத்தவில்லை தாய் தந்தை பொய் சொல்லு என்று சொல்லிக் கொடுத்த பொய்யை தாய் தந்தையருக்கே சொல்த் தொடங்கினாள்.13 வது வயதில் பாடசாலை நேரம் வேறு சிலருடன் கஞ்சா பத்திக்கொண்டிருந்த அவளை காவல்துறை பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தது. கோபத்தில் தந்தை இடுப்பு பட்டியை கழற்றி மேசமாக அடித்ததில் அவளே காவல்துறையை அழைத்தாள். கவல்துறை அவனை கைது செய்தது மகள் பாராமரிப்பு நிலையத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டாள். அவனிற்கு ஒண்டரை வருசம் சிறை சிறையால் வெளியே வந்தவன் எனக்கு போனடித்து விபரத்தை சொல்லி எனக்கு மகளை பாக்கவேணும் ஏதாவது உதவி செய்யடா என்றான். நானும் முயற்சித்தேன் ஆனால் மகள் மறுத்துவிட்டாள்.நண்பனின் மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில். நான் நண்பனிடம் சொன்னது நீ அதிக விலை கொடுத்துவிட்டாய் ஒன்றுக்கும் உதவாத கௌரவம் பார்த்து நீ உன்னுடைய உற்றார் உறவினர்களிற்காகவும் போலியான மரியாதைக்காகவும் இன்று நடு றோட்டில்.

உளவியல் மருத்துவர்கள்  இது பெடோபிலியா என்கிற நோய்   இப்படியானவர்களை மருத்துவம்    மூலமே குணப்படுத்தவேண்டும் தண்டனை கொடுக்கக்கூடாது  என்கிறார்கள்.   உளவியல் மருத்துவர்களே இப்படித்தான் அண்மையில் நோர்வே நாட்டில் ஒரு தீவில்  கூட்டத்தில் புகுந்து 80 பேரிற்கு மேல் சுட்டுக்கொன்ற ஒருவனை  மனநோயாளி மருத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். இதுவே மேலை நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட அமைப்பில்  உள்ள ஒருவர் செய்தால் வன்முறை   தண்டனை கொடுக்கவேண்டும் என்கிறார்கள். உளவியலை விட்டுவிடுவோம். ஆனால் நாம் எமது குழந்தைகளை  இப்படியானவர்களிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்.தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம்.

1)குழந்தைகளிற்கு  மற்றையவர்களின் சாதாரண தொடுகை   விபரீதமான தொடுகை இரண்டிற்குமான வித்தியசங்களை சொல்லிக் கொடுங்கள்.
2)அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.
3)ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்..
4)சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
5)நெருங்கிய  உறவினர்களாக  இருந்தாலும் அவர்கள் அனாவசியமாக  முத்தமிடுவதை தவிர்க்க சொல்லுங்கள்.
அண்மையில் இந்தியாவில்  சிறுவர் பாலியல்  துஸ்பிரயோகம் செய்த ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பில்  துஸ்பிரயோகம்  செய்பவர்களின் ஆண்மையை  நீக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதாவது  ஊர்பாசையிலை சொல்லப்போனால் நலமடிப்பது. இது பல நாடுகளில் சட்டமாகவே உள்ளது.  சிறுவர்களை  பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் ஆண்களிற்கு   இந்தச் சட்டத்தை போடலாம் ஆனால் பெண்களிற்கு  யாமறியோம் பராபரமே...

2 Comments

Bapooji.P @ 7:19 PM

Good article.

Bapooji.P @ 7:20 PM

Good Article.