Navigation


RSS : Articles / Comments


இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

12:05 AM, Posted by sathiri, 2 Comments

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Posted Image

முற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று


சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என்னுடைய ஒவ்வொரு பயணமுமே மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான பயணம்தான் நியும். நான் ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை எனது திறமையால் திறக்கும் பொழுது அதிஸ்ரமும் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..

விமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன் வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி பொறுமையாக இருந்து ஆறுதலாக தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய் குடிவரவுப்பகுதியில் அதிகாரியிடம் தன்னுடையதும் நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான். அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய தாய்லாந்து கடவுச் சீட்டையும் அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க நியும்மை இழுத்து அவள் உதட்டில் இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில் ஓங்கி இறப்பர் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது. கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்
ஒருவன் மட்டையில் பன்னிச் செல்வம் எழுதி தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். அதைப்பார்த்தும் கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய் அவனிடம் அறிமுகம் செய்து விட்டு அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு அவனைப்பின்தொடந்து விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள்.

இந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து தென்னாபிரிக்கா.நைஜீரியா என்று சுற்றியடித்து இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான நீரில் குளித்துவிட்டு வந்த றோகான் துடைத்த துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே தனது சிறிய பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு அன்றிரவு நடக்கவிருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த செவ்வரளிப்பூவைப்போல நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே அகல விரிந்த கண்களால் அடியிலிருந்து முடிவரை அங்கமங்கமாக அசைபோட்டு பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று மனதில் நினைத்தான்

என்ன இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே பார்க்கின்றாயே ...

உனக்கொன்று சொல்லட்டுமா என்வாழ்வில் எத்தனையோ பெண்களில் புகுந்திருக்கின்றேன். மறுதடைவை அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை ஆனால் நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய் அதன் மர்மம்தான் எனக்கு மனதில் தோன்றவில்லை.

அதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும் உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.

என்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.

பார்த்தாயா ஆபிரிக்கா வந்ததுமே நீ நரமாமிச பட்சணியாகிவிட்டாயோ?

இல்லை நான் சைவப்புலி உன்னை கொல்லாமலேயே உண்ணப்போகின்றேன்.

இங்கேயும் புலிதானா??

நான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி விட்டது

என்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி கைகள் இரண்டையும் புலியின் கால்களைப்போல முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ அகம்மயங்க புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை வேட்டையாடி விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய் முட்டிமோத அவள் அவனிற்கு முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.

முத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை எடுத்து இரண்டையும் ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள் ஒன்றை அவனின் உதட்டில் பொருத்திவிட்டு ஜன்னல் ஓரமாக வந்துநின்று புகையை உள்ளிழுத்து ஊதியவள் இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும் குளித்துவிட்டு வெளியே போய் வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன் என்றவன் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராய் வைத்திருந்த கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன் விலை உயர்ந்த வாடைகைக்கார் என்றினை எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான் . இப்பொழுது நேரம் சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான் போனடிக்கலாமென நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து ஒரு கிறெடிட்காட்டை செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.

இந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது அதனருகே தயாராய் நின்றிருந்த றிசி தொலைபேசியை எடுத்ததும்

என்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.

ஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது இரவு சந்திப்பு முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம் இதே நம்பருக்கு திரும்ப அடிக்கிறன்.

இந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள் இப்பதான் முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம். அவனோடை கதைக்கிற ஒவ்வொரு வசனமும் கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான் உன்னை அனுப்பியிருக்கு கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உன்னை அங்கையே புதைச்சிடுவாங்கள் கவனம்.

அதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே கவித்திடுவன்.

அது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு இரண்டு மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு அதுக்காக எவ்வளவு றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு

கட்டாயம் முயற்சி செய்யிறன்.


இவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன் பாக்கலாம்.
நட்சத்திர நாய்களும் மணந்து கொண்டு திரியிறாங்கள் உடைஞ்ச நாட்டிலை இப்ப அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான் எதுக்கும் கவனம்


நானும் அறிஞ்சனான் நான் பாத்துக்கொள்ளுறன்.

சரி நியும் எப்பிடி இருக்கிறாள் ஒண்டும் பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல் பாத்துக்கொள்.

அவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு பிரான்சும் இங்கிலாந்தும் பாக்கவேணுமாம் ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்


சரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா
தெலைபேசி துண்டிக்கப் படுகின்றது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
றோகன் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்யையும் அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி பார்த்தவன் தயாராய் வைத்திருந்த சிகப்பு நிற மேலாடை(கோட்) அணிந்தபடி எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான். களுக்கென சிரித்தவள். இதென்ன நிறக்கலவை ஆனாலும் பரவாயில்லையன்றாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணைப்போல கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை சட்டையோடு தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள். உண்மையை சொல்லட்டுமா?? மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள் கசங்கிவிடும். வேண்டாம் போகலாம் என்றான்.

இருவரும் விடுதியை விட்டு வெளியே வந்ததும் அங்கு ராக்சியில் நின்றிருந்த ஒருவன் தன்னுடைய ராக்சியை பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும். ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான் இடமென சைகையிலேயே காட்டிவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். றோகானின் கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது வாசலில் நின்ற காவற்காறன் மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான். நான் மெமேயை (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை எடுத்து காவற்காரனிடம் நீட்டவே. அதை வாங்கியவன் நீங்கள் மெமேயை சந்திக்க வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன் இன்னொருத்தனை அழைத்து அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.

கடதாசியுடன் போயிருந்தவன் இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து அவர்களை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும். வந்த பெண் நியும்மையும் காவற்காரன் றோகனையும் காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம் எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர். அவர்களது கைப்பையையும் பரிசோதித்து விட்டு அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள் அழைத்துச்சென்றனர். உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை நோட்டம் விட்டான் விறைப்பான காவலர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள் மறைத்து வைத்திருந்திருக்கலாம். பங்களாவின் நடுவில் பிரமாண்டமான நீச்சல்தடாகம் எவளையும் காணவில்லை. காவலர்கள் அவர்கள்இருவரிடமும் ஒரு அறையை காண்பித்து அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி விடைபெற்றனர். அறைக்குள் பலவகையான குடிபானங்கள் சிற்றுண்டி என்பன அழகாக அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது நல்வரவு இவை உங்களிற்கானவை என ஒரு வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே அதன் ஜன்னலை திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை கவனித்தான் பங்களாவின் பிற்பகுதி கடற்கரை கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை வள்ளங்கள் வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.

ஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை ஒருதடைவை பார்த்தவன் ரையை சரி செய்தபடி என்ன நியும் எதுவும் பேசாமல் இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா?? என்றான். பயமா எனக்கா நீ அருகில் இருக்கும் பொழுது என்னையே எனக்கு ஞாபம் இருக்காது பயம் என்னுள் எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால் சப்பாத்துக்களை காலால் தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள் நியும்.சிறிது நேரத்தில் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என றோகனை அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில் ஒத்திகை பார்தபடியே அறையை விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் நன்கு உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றி உடல் அதனை காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன் ஜீன்ஸ் அணிந்த சாராசரி உயரத்துடன் ஒருவன் அமர்ந்திருந்தான் அவன்தான் மெமேயாக இருக்குமோ என றோகன் நினைத்தமாத்திரமே எழுந்த அவன் வணக்கம் வாருங்கள் இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின் கைகளை குலுக்கும் பொழுதே எனக்கும்தான் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.மெமேயே பேசத் தொடங்கினான்

உங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது அதில் நீங்கள் திரும்ப திரும்ப கேட்கின்ற இலகு ஏவுகணைகள் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும் ஒழுங்கு செய்யலாம்.

மொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை எமக்குள்ளது

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதிரெதிரான வல்லரசு நாடுகளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தில் ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக் குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில் ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுப்பதில்லையென்பதுதான் அது
ஆனால் யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில் பாவிக்கபட்ட ஏவுகணைகளை இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும் ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர் கியுபாவிலும் அதுவே நடந்தது. இங்கெல்லாம் யுத்தம் முடிவிற்கு வந்ததுமே முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.


ஏன்??

அவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது இலகுவாக அவற்றை கொண்டு தாக்கலாம்.
உங்களிடமிருந்து முன்னர் நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே??

அவை சாம் பழைய தயாரிப்புக்கள்தானே உடைந்த இரஸ்சியாவில் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். அதனால் நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும் செய்திருக்க முடியாதே உங்களால். அங்கேயும் நீங்கள் தவறிளைத்திருக்கிறீர்கள். ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி


அது ஏதே தவறாக நடந்துவிட்டது

அதேதான் அதுதான் தவறு இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நீங்கள் உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த விடயங்களிற்கு வருவோம். இந்தத் தடைவை பணத்தைவிட பொருட்களாகவே எதிர் பார்க்கிறோம். என்னதான் தென்அமெரிக்கா கெக்கெயின் கிடைத்தாலும் ஆசியா கெறோயினிற்கும் கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது. அதோடு ஒரு உதவியும் வேண்டும் எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில் நீங்கள் இறக்கிவிடவேண்டும் அவ்வளவுதான் நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி


பொருட்கள் சரி ஆனால் உங்கள் பொருட்களை இறக்குவது நான் முடிவெடுக்க முடியாது அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின் பாதாள அரசனால் அங்கு போக முடியாதா?

நான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும் உங்கள் கடல் வலையமைப்பு என்பது பிரமாண்டமானது . உலக நாடுகளிற்கே தலைவலியை கொடுக்கின்றது அந்தளவிற்கு இன்னமும் என்னால் முடியவில்லை அது எப்படி உங்களால் சாத்தியம்.

எல்லாம் எங்கள் தவைனின் திறமை அதற்கென தேர்ந்தெடுத்து திறமையானவர்களை நியமித்திருக்கிறார்.


இப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது சாவகாசமாக பேசலாமா? உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன் வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.
எங்களது தேசம் உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம். அங்கு போதைப்பொருட்கள் கிடையாது விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது அனாதைகள் கிடையாது

மெமே சத்தமாய் சிரித்தபடி.. என்ன சொல்கிறாய் உங்கள் தேசம் உருவானால் அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.


அது எனக்கும் தெரியும் எனது தேசம் உருவாகின்ற அந்தப் பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.

சரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது உங்கள் நண்பியையும் அழைத்து வாருங்கள் போகலாம்.


அந்த அறையில் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தேவைக்கு அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும் முடன் உள்ளே நுளைந்த றோகனிடம் என்ன குடிக்கிறாய் சம்பெயினா??கொக்ரெயிலா? என்றான் மெமே சம்பெயின் என்றதும். சம்பெயினோடு உனக்கு ஒரு அழகையும் சேர்த்து தருகிறேன். இதோ அந்த அழகி மக்கும்பா இவள் உனக்காக என்று ஒருத்தியை நோக்கி கையை காட்டிய மொமே. கறுப்பழகிகளை உரித்துப்பார்த்திருக்கின்றாயா என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே உரித்திருக்கிறேன். ஆனால் இவள் பேரழகியாக தெரிகின்றாள்.


மேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள் பேல தெரியவில்லை அங்கங்கள் எல்லாம் அளந்து செய்து அச்சில் வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை மொமேக்கு அறிமுகம் செய்த றோகன். நீ எப்படி ?? .எனக்கு ஆசிய அழகி இதுதான் முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக் கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை கொண்டுவந்து அங்கிருந்த கண்ணாடி மேசையில் பிரித்து பரப்பி பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு கொக்ரெயில் கிண்ணத்திலிருந்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒன்றை றோகனிடமும் மற்றையதை மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான். நேராக உறுஞ்சிய இரு குளாய்களும் ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று கொண்டது.

ஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை திறந்து றோகனிடம் நீட்டிய மொமே இவை கியூப விசேட சுருட்டுகள் ஒன்றை பிடித்துப்பார் என்றதும் சிந்துபோயிருந்த கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி ஆழமாய் அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில் தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு
00000000000000000000000000000000000000000000000000000000000000000

குகநாதன் அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில் சாதாரண வியாபாரி ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கலாமென நினைத்து சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர். தலவாக்கலையில் சுருட்டுக்கடை முதலாளியாகியிருந்தார். லயத்தில் வாழ்ந்த வேலம்மாள் காதலியாகி மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது றோகன் என பெயர் வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை மகனை பெரிய படிப்பு படிக்கவைத்து சாதாரண யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன வைத்தியர் அல்லது பொறியிலாளர் அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும் வளர்ந்தது. தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட அவரிடம் மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில் இடமும் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம் நாள் அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் ஓலச்சத்தங்களும் சிங்களத்தில் பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது சிலர் சிங்களத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். போலிசும் இராணுவமும் அவனது விடுதிக்கு முன்னால் காவல் நின்றனர். றோகனிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடன் கூட இருந்த சிங்கள மாணவர்கள் அவனை வெளியே போகவேண்டாம் என தடுத்தனர். சின்ன வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய றோகனிற்கு அப்பொழுதுதான் தான் ஒரு தமிழன் என்று உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என தவித்தான் ஒரு கிழைமை கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு போயிருந்தான் அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில் சூடு அடங்கியிருக்காத சாம்பல் மட்டுமே இருந்தது.

தாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதவர் அப்பவிட்டை சுருட்டு கடன்வாங்கிற றோகித்தான் கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு அழுதார். அதுதான் சாம்பலின் சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது. அடுத்தது என்ன எல்லாமே சூனியமாக தெரிந்தது. தோட்டக்காட்டாளை கலியாணம் செய்திட்டான் என்கிற காரணத்திற்காக ஒட்டு உறவு வைத்திராத தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை மட்டும் அவர் ஊர் கோயில் திருவிழாவில் போய் பார்த்துவிட்டு முருங்கைக்காயும் மாம்பழமும் கொண்டுவருவார்.

உன்ரை மாமி நல்லவா இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு றோகனிற்கு அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணமானார்கள்.
அவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான் இளவயதில் சாதி மாறி ஒருத்தரை காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து தாவடிசுடலையில் போட்டிருந்தார்களாம். அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை இடத்திலை கொண்டு போய் விட்டிட்டனமாம். அதை கேள்விப்பட்டு றொகனின் தந்தைதான் அவரிற்கு வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு பணமும் அனுப்பியிருக்கிறார் அவர் இப்பொழுது சுதுமலை சிம்மையா பாரதி பாடசாலையில் ஒரு ஆசிரியை பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை நேரில் தேடி கண்டு பிடித்தபொழுது றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில் இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து படிப்பதற்காக இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை இந்தியாவில் படித்து முடித்தவன் மும்பையில் கப்பல் தெழில்நுட்பம் படித்தவன் அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி படிப்பினை அயர்லாந்தில் பூர்த்தி செய்ததும் அப்படியே புலிகளுடன் இணைந்து கொண்டான். இவனது பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம் பேசுபவனாகியிருக்கிறான்.
00000000000000000000000
என்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி மக்கும்பா சுருட்டின் நுனியை வெட்டி அதில் நெருப்பை மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால் ஏதோ ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய் முடிந்த விடயத்தை றிசிக்கு தெரியப்படுத்தவேண்டும் தூங்கிவிடக்கூடாது என்று நினைத்தவன் தன்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அலாரம் வைக்கலாமா என யோசித்தான். சே இப்படியொரு பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா இன்னொரு இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன் எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான் கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான் இந்தோனேசியா யலாங்பாரு வீதியோரத்து தொலைபேசி கூண்டு மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.
என்னமாதிரி

எல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை போடுறான். அது சரியெண்டால் மிச்சம் சரி

என்னது புது டீல்

ஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை வட அமெரிக்கா கரை ஒன்றில் இறக்கிவிடவேணுமாம்.
அது முடியாதெண்டால்
அதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை எதிர்பார்க்கிறான். சரியெண்டால் எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.

சரி பெரியது கிடைச்சதா??

அதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.

சரி நான் முடிவு சொல்ல முடியாது அங்கை கேட்டு சொல்லுறன் ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு திரும்ப எடு
மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியவன்
என்னவாம்

டீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற இடம் விபரங்களை அனுப்பிவிடு

சரி மச்சான் அதோடை இந்தமுறை நானும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன் எண்டு கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு

சரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு நீ வழமையான தீவுக்கு போய் நில். அங்கை வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.

மிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.

மொறிசியசில் ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் அனுப்பி விடுறன். சரி மச்சான் சந்திப்பம் ..


புலிகளின் இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவு கடலில் சிலநாட்கள் நங்கூரமிட்டுவிட்டு திரும்பவும் சர்வதேச கடலில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தன.
றோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு தாயாரும் மாமியும் செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர். வன்னியில் ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது
00000000000000000000000000
2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின் அதிகார நிருவாக மாற்றங்கள் நடந்தேறியது அதில் றோகனின் நண்பர்கள் பலரும் விலக்கப்பட்டு தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து திரும்பவும் கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள். பேரம் பேசும் காலங்களில் அவனது போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த ஆஸ்மா என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை அவனையும் வெளியேறுமாறு 2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில் அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன் அதற்கு முன்னர் நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை சுற்றி காட்டிவிடலாமென நினைத்து அவளை அழைத்துவந்து மூன்று வாரங்கள் பாரிஸ் நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும் நியும்மை தாய்லாந்திற்கு திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான் அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை நாடு நாடு என்று ஓடியே நாட்கள் போய்விட்டிருந்தது.

நானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே கழிந்துவிடும் எனவே இனி முடிந்தளவு அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை முடிவைமாற்றிவிட்டடிருந்தான். சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை வைத்திய ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற ஒரு அழகிய கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில் நாட்டு நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவிர வேறு எந்த தொடர்புகளையும் அவன் வைத்திருக்கவில்லை அதன் காரணம் ஒன்று அவன் விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று எப்படியாவது மணந்து பிடித்துவிடுவார்களோ என்கிற பயம். அப்படியான தொரு காலத்தில் 2005 ம் ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல் அவனிற்கு பழக்கமானது வானொலி நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி அதனை அழுத்தியவன்.

கலோ என்கிற சத்தத்திற்கு
றோயர் றோயர் றிசி என்றான்.

றிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய் எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி??

நீதான் கையையும் வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியே கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ??

சரி சுவிஸ் நம்பர் விழுது ஆனால் நீ எங்கை நிக்கிறாய்

சுவிசிலைதான் இருக்கிறன் மூண்டு வருசமாய்

ஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா?

ஓம் மச்சான் இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும் கிடைச்சிருக்கு

நியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.

ஓமடா கதைக்கிறனான் எனக்கொரு மகனும் இருக்கிறான்.

ஓ உன்னோடையா இருக்கிறாள் .

இல்லை கடைசியா எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள். பிறகு அங்கை அனுப்பிட்டு அவளையும் அந்த தொழிலை கைவிட்டிட்டு கடைசியாய் என்னட்டை கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை கிராமத்திலை ஒரு கடைபோட்டு குடுத்தனான். ஒருநாள் போனடிச்சு தான் சுகமில்லாமல் இருக்கிறதாய் சொன்னாள். எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை தனக்கெண்டும் ஒருத்தரும் இல்லை அதாலை தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம் பிடிச்சாள். பிறகு என்னத்தை சொல்லுறது.

என்ன செய்யப் போறாய் கூப்பிடுற யோசனை ஏதும் இருக்குதோ??

நானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் நினைச்சனான் ஆனால் நான்தான் நல்லதொரு மகனாய் இருக்கேல்லை ஆனால் நல்லதொரு அப்பாவாய் இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை கலியாணம் செய்யேல்லையெண்டு சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை எழுதிட்டுதான் கூட்டியரலாம்

நல்லது அதை செய்யவேண்டியதுதானே

இப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா அதை தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும் அதுதான் முதல் வேலை அம்மாட்டையும் சொல்லிட்டன்


மகனுக்கு என்ன பெயர்

நான் தான் வைச்சனான் திலீபன்.


இப்படியாக அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை தொடந்து கொண்டேபோனது...

2008 ம் ஆண்டு தாயகத்தின் நிலைமை மேசமானதாய் மாறிக்கொண்டேயிருந்தது பழைய வெளிநாட்டு கட்டமைப்பினரை உதவுமாறு தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில் மீண்டும் றோகனிடமிருந்து றிசிக்கு ஒரு அழைப்பு

என்னமச்சான் நிலைமை மேசமாய் போகுது

ஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் என்ன செய்யிறது

என்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு எஸ்.ஓ தொடர்பெடுத்தது

என்னவாம்

வண்டியொண்டு சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.

என்ன செய்யப் போறாய்

போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்

உனக்கென்ன விசரோ??

இருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப் போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது இப்ப போகமல் இருந்திட்டு பிறகு கவலைபட்டு பிரயோசனம் இல்லை.

எனக்கென்னவோ புத்திசாலித்தனமாய் தெரியேல்லை

உன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம் முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம். விதியை மாத்தியிருக்கிறம்.


இது விதியில்லை பல நாடுகளின்ரை மதி. சதியெண்டும் சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை ஸ்ரிபன் பிடிபட்டதோடையே சர்வதேச வலையமைப்பு நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும் போயிட்டுது. இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார் குறிப்பிட்ட இடத்தை தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு இரண்டில்லை ஒன்பது அடிபட்டிட்டுது இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு

இருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன் அதுக்குத்தான் என்னை கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா
என்னை கேட்டவைதான் ஆனா யோசிச்சுபார் எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை திரும்ப ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது அது உதவாது அதாலை மாட்டன்எண்டிட்டன்.

நீ ஒரு சுயநலவாதியடா இப்ப குடும்பம் பிள்ளையை விட்டிட்டு போக உனக்கு மனசில்லை
அப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால் எனக்கென்னவோ அவன் பிடிபட்டதுமே எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ் பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம் அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது


நான் போறதெண்டு முடிவெடுத்திட்டன் ஆனால் ஒரு உதவி உன்னட்டை கேக்கிறன்

என்னது

நான் சிலநேரம் திரும்பி வராமல் போனால் என்ரை மகனின்ரை பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால் எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை பிறந்தநாள் வருசம் பிறந்த முதலாம் திகதிதான் விலாசம் அனுப்பி விடுறன்.


அப்பிடியெல்லாம் நடக்காது போயிட்டுவாடா.

துருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு எஸ் எம் எஸ் றிசிக்கு வந்திருந்தது
ஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில் நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.
இல்லை என்ன நடந்தது
செய்தியை பார்

அவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.


இன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல் நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.

அத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
000000000000

மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு காலையில் றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான் நன்றிகள் சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது மகனிற்கு மகிழ்ச்சி நன்றாக படிக்கிறான் அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான். வளர்ந்து விட்டான் இனி அவனது தந்தைபற்றிய விடயத்தை அவனிற்கு சொல்லாமென நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை எழுதி அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம் அவன் படிப்பை குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள் போகட்டும். அதுவரை அவனது பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இருக்கும் நன்றிகள்.

யாவும் உண்மை


கதையை இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.
நட்சத்திர நாடு.. அமெரிக்கா
நட்சத்திர நாய்கள் .அமெரிக்கா சி.ஜ.ஏ உளவமைப்பு மற்றும் அவர்களிற்காக பணத்திற்கு வேலை செய்பவர்கள்
உடைந்த கிழக்கு நாடு. உக்ரேய்ன்.
கீழ் கறுப்பு நாடு ..எரித்தியா
எஸ்.ஓ . புலிகளின் கடற்படை தளபதி சூசை
நட்சத்திர நாய்களின் பக்கத்து நாய்கள். கனடா உளவமைப்பு
வழைமையான தீவு .சீசெல்ஸ்.

2 Comments

Anonymous @ 3:57 AM

நல்லதொரு பதிவு ரோகனை மாதிரி அந்தமுகம்தெரியாமல் வித்தாகிபோனவர்களின் கதைகள் ஈழத்திற்க்கு சிலுவை சுமந்த வரலாறுகள் வெளிவரவேன்றும் நன்றி சாத்திரியார்

Anonymous @ 5:20 AM

Hi thankz for the article. I heard a bit about this before. There was one of my relation was in same thing . It was in the year of 2003.i think u r the risi isnt it? Sorry for writing in english