ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான்.
கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம் மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு போக அங்கேயே தங்கியிருந்த குழந்தையின் தந்தையும் ஓடிவந்து பார்தார் ரோச்லைற் வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர் கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில் குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான் பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி முடித்தார்.
குழந்தையை குளிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின் குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய் அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.
இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க வார்ட்டில் பத்தாம் இலக்க கட்டிலிலா பிறந்தது
ஓம் சாமியார்.
சாமியார் கள்களை மூடினார் அம்மா தாயே நாகபூசணி எந்த குழந்தை பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ அந்த சாத்தானின் குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும். பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று மனதில் துதித்தவர்.
அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை சாத்தானின் குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும் வேல் முருகனின் பெயரை இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர் குழந்தையின் காதில் ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை சொன்னதும் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா ஆபத்து என்றபடி கவலையுடன் கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.
வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார் காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத் தட்டு கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில் எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு புரிந்தது. உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே குழந்தை உணவு உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோஞ்சானாய் வளர்ந்தது.
0000000000000000
இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை கச்சான் கடலை வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால் போய் நின்றவன்.
சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.
அவனை குனிந்து பார்த்த சாமியார் யாராப்பா நீ உனக்கென்ன உண்மை தெரியவேண்டும்.
சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??
கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர் பின்னர் அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி தெரியலையேப்பா என்றார். ( இந்தக் காலகட்டங்களில் சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)
அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??
என்ன பெயரப்பா ??
ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ
அதுவா திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின் திருவாட்டி கொளரி அம்மையின் அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.
நல்லவேளை இந்த அர்தத்தையே எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே .கந்தன் கடம்பன்.வேலன் இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும் வகுப்பிலை வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை என்ரை பெயரை கூப்பிடும்போது அவர் பாட்டுபாடுறார் என்று நினைச்சு நான் நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி அவன் கீழே குனிய. அய்யோ அம்மா தாயே காப்பாற்று சாத்தனின் குழந்தை பத்து வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன் எறிந்த கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார் மயங்கி விழுந்தார்.
00000000000000
திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம் வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன் எல்வைவரை ஓடி ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன் பிராங்போட் விமான நிலையத்தில் நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற பெயரில்



பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா நினைச்சு பார்த்தன் அதோடை அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர். அந்த சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.
GOOD WORK. SUGU