Navigation


RSS : Articles / Comments


மனங்கள் கனக்கின்றது மாவீரரே

9:46 AM, Posted by sathiri, One Comment



மனங்கள் கனக்கின்றது மாவீரரே
இந்தவார ஒரு பேப்பரிற்காக
சாத்திரி



மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையும் தனித்தனியாக வெளியிடப் போவதாக தகவல்கள் ...

இந்தமுறை கலக்கப் போறது யாராம் என்று என்னோடை கதைக்கும் போது ஒரு நண்பன்என்னிடம் கேட்டான். அவன் தமிழ் தொலைக்காட்சியளிலை நடக்கிற கலக்கப் போறது யாரு அசத்தப் போவது யாரு எண்டிற நகைச்சுவை நிகழ்ச்சியை பற்றித்தான் கேக்கிறானாக்கும் என நினைச்சு நானும் என்னட்டை தமிழ் தொலைக்காட்சி ஒண்டும் கிடையாது அதுகளை பாக்கிற நேரமும் கிடையாது . ஏதாவது தேவையெண்டால் கணணியிலை தேடிப் பாத்திடுவன். எண்டன் ஏடேய் அதை நான் சொல்லேல்லை இந்த முறை மாவீரர் நாள் உரையை பற்றி கேட்டன் ..ஏனெண்டால் ஆளாளிற்கு அறிக்கை விடப் போறம் எண்டு கதையள் அடிபடுது அதைத்தான் கேட்டனான் எண்டான்.. அப்படி கேட்டது அவனுடைய தவறு இல்லை ..உலகமே உற்று நோக்கிய பிரபாகரனின் மாவீரர் நாள் கொள் கொள்கை விளக்க உரையை "கலக்கப் போவது யார்?? "என்று கேட்கின்ற அளவிற்கு 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் தாங்களே தாயகத்திலுள்ள தமிழரிற்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பல பிரிவுகளாகி நிற்கும்புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

1989 ம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் உரையானது மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் தொடங்கி புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கங்கங்களோடு புலிகள் அமைப்பானது அன்றைய காலகட்டங்களில் தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் என்னென்ன செய்திகளை சொல்லவிரும்புகின்றனர் . தாயகத்து மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களிடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர் அவர்களது கடைமைகள் என்ன. சர்வதேசத்திடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர்.என்கிற விடயங்கள் அடங்கியதாக இருக்கும். புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாக வாசிக்கப் படும் அந்த உரையினை உலகநாடுகளே உன்னிப்பாக அவதானித்தபடி இருக்கும். உரையில் பிரபாகரன் எந்தெந்த விடயங்களை அழுத்திச் சொல்கிறார். எங்கு நின்று நிதானித்து சொல்கிறார். எங்கு ஏற்ற இறக்கங்கள் வருகின்றது என்று அனைத்துமே அலசி ஆராயப்படும்.காரணம் வருடத்தில் ஒரு முறைமட்டுமே பேசுபவர் பிரபாகரன் அதுவும் அந்த மாவீரர் நாள் உரை மூலமாகத்தான். மிகுதி அனைத்திற்குமே செயல்வடிவம்தான் அதனால்தான் அதற்கு அத்தனை மதிப்பு..

2008 ம் ஆண்டுடன் மாவீர் நாள் கொள்கை விளக்கவுரை நின்று விட்டது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். ஆனால் எமக்காகவும் எமது மண்ணிற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் நினைவிடங்களையும் கூட இலங்கை இராணுவம் சர்வதேச விதிகளையும் மீறி அழித்து தரைமட்டமாக்கப் பட்ட நிலையில். அங்கு வாழும் மக்களாலும் அவர்களிற்கான அஞ்சலியை செலுத்த முடியாத நிலையிலும். புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாய் அந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை நினைவாக்க மனதில் உறுதியெடுத்து அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தவேண்டியது எமது கடைமையல்லவா??அதுதானே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையாகும்.
அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தங்கள் அமைப்பின் சார்பில் ஓவ்வொரு அஞசலி அறிக்கையை விடலாம்.ஆனால் அது மாவீரர் நாள் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்க உரையாக அமையாது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வாசிக்கப்படாத எந்தவொரு உரையும் மாவீரர் நாளின் புலிகள் அமைப்பினது கொள்கை விளக்க உரையாக அமையாது.அதனை எந்தவொரு தமிழர் மட்டுமல்ல சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது. மற்றைய அனைத்து உரைகளுமே மாவீரர்களிற்கான அஞ்சலி உரையாகவே கணிக்கப்படும்.


பல பிரிவுகளாக பல்வேறு இடங்களில் பல்வேறு அறிக்கைகளுடன் மாவீரர் நாள் நடைபெறப் போகின்றது என்கிற செய்திகளிற்கிடையில் கடந்த ஞாயிறு 18.ந் திகதி பிரான்சில் பாரிஸ் நகரில் பிரான்சின் தமிழ் அமைப்பக்களில் முக்கியமான அமைப்புக்களும் மக்களும் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். கலந்துரையாடலின் இறுதியில் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையாக ஒருமித்து மாவீரர் வாரத்தினை கடைப்பிடிப்பது. அனைவரும் இணைந்து மாவீரர்களிற்கான அஞ்சலி பிரசுரம் ஒன்றினை வெளியிடுவது. அதே நேரம் கடந்த காலங்களில் இடம் பெற்றதைப் போன்று நிகழ்வு மண்டபத்தில் வியாபாரக் கடைகள் போடுவதற்கு வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. சிறுவர்களிற்காக பிஸ்கற்றுக்களும் குடிபானம் மட்டும் வினியோகிப்பது என்கிற ஒருமனதான தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

இது மனதிற்கு ஆறுதலைத்தரும் செய்தியாக மட்டுமில்லாது மாவீரர்களின் தியாககங்கள் வீண் போகவில்லை என்கிற மகிழ்ச்சியையும் தருகின்றது. ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி சுவிஸ் ஆகிய நாடுகளில் இன்னமும் இழுபறி நிலைகள் உள்ளதாகவே தெரிகின்றது. அவர்களும் ஒன்றிணைந்து எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தி உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோமென இந்த வருட மாவீரர் வாரத்தில் உறுதியெடுக்கவேண்டும்.
மாவீரர் வாரத்தை பிரிந்து நின்று வெறுமனே அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும் தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம்.
தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும் சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும்.

தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர்.அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வோம்
நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.மனிதராவோம்.

கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செல்வங்களை ..கார்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து நாமும் மாவீரர் புகள்பாடுவோம்.

One Comment

vinu @ 9:59 PM

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=forums&section=topics&rep_filter=update&f=33&t=92495&secure_key=f5f359337ca99fcc7aa083449ac4baed&st=&rep_filter_set=0


and you too commented for that ....


This post is a copy paste post from the following blog-link!
this post posted on 4th September which is some what at 19:00 hrs and where and which the one i refer over here got the first comment at 16:30 hrs on the 3rd September!

so kindly check the link and give a recognition to it's original Author!!!

Thank you

http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post.html




this report i filed at

http://www.yarl.com/forum3/index.php?app=core&module=reports&rcom=post&tid=92495&pid=694588&st=

you too can register a complaint at this place!