Navigation


RSS : Articles / Comments


பா வா ம் பி ற பா க ர ன்.

10:50 AM, Posted by sathiri, No Commentஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம்.அதிகாலை 5 மணி
..................................................................................................................................
தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ஆசுப்பத்திரிக்கும் போகுதில்லை.இண்டைக்கு எப்பிடியும் கொண்டு போறதுதான். "மோகன் டேய் மோகன் எழும்படா. கொப்பர் இண்டைக்கும் தொழிலுக்கு போறமாதிரி இல்லை நீயாவது பெட்டியை கட்டிக்கொண்டு போட்டுவாடா. இல்லாட்டி இண்டைக்குபாடு பிச்சைதான்.

சும்மா கிடவணை நான் உந்த பெட்டி கட்டமாட்டன் சொல்லிப்போட்டன் நான் பள்ளிக்கூடம் போகவேணும்.சும்மாகிட எனக்கு நித்திரை வருது. மோகன் காலை சொறிந்துவிட்டு திரும்பவும் சுருண்டுகொண்டான்.
ஊகும்.வயித்துபாட்டுக்கே வழியைகாணேல்லை.இவர் படிச்சு கிழிச்சு பெரிய இஞ்சினியராகப்போறாராக்கும்.காஞ்ச வயித்தோடையே பள்ளிக்கு போப்போறாய்.மல்லன் மாதிரி வளந்ததுதான் மிச்சம் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.இந்த மனுசன் உழைக்கிறதை குடிச்சுப்போடும்.ஏதோ என்ரை தம்பி தப்பித்தவறி வெளிநாட்டுக்கு போனதாலை அப்பப்ப அவன் போடுற பிச்சையை வைச்சு உங்களை கொண்டிழுக்கிறன்.அதுவும் இல்லாட்டி எப்பவே உங்களுக்கெல்லாம் சோத்திலை விசம்வைச்சிட்டு நானும் செத்திருப்பன். நல்லம்மா புறுபுறுத்தபடியே கேத்திலை எடுத்து தேய்க்கத் தொடங்கினாள்.


மோகனிற்கு நித்திரையை தொடர முடியவில்லை. உண்மைதான் ஜயா மூண்டுநாளாய் தொழிலுக்கு போகேல்லைத்தான்.அம்மா சின்ன சின்ன கூலி வேலையளிற்கு போறவா.மாமாவின்ரை உதவியோடை ஒரு மாதிரி அக்காவை கட்டிக்குடுத்தாச்சு.வீட்டிலை அடுத்தது நான்தான் பெரியாள்.பதினேழுவாயதாயிட்டுது.நாட்டு நிலைமையாலையும் ஒழுங்காயில்லாததாலை படிக்காததாலையும்.முதல்தரம் பத்தாம் வகுப்பு சோதினையை கோட்டை விட்டிட்டன்.இப்ப அடுத்த தரம் எடுக்கிறதுக்கு அப்பப்ப பள்ளிக்கூடம் போறன்.நானும் வேலை ஏதாவது செய்தால் குடும்பம் கொஞ்சம் நல்லா ஓடும்.தங்கச்சியவையாவது ஒழுங்காபடிப்பினம்.நானும் வெளிநாட்டுக்கு போயிட்டன் எண்டால் பிரச்சனை முடிஞ்சுது.சிந்தனைகளை முறித்துவிட்டு மெல்ல எழும்பி கேத்தில் கொதித்துக்கொண்டிருந்த அடுப்புக்கரையில் போய் குந்தினான்.

மவராசன் எழும்பிட்டார்.இண்டைக்கு தேத்தண்ணியாவது இருக்கு நாளைக்கு சுடுதண்ணிதான்.

சும்மா புறுபுறுக்காதையணை.நான் வேலைக்கு போறன்.ஆனால் ஜயா மாதிரி பெட்டியை கட்டி பிரயோசனம் இல்லை இப்ப மீன் விக்கிற விலையிலை 500 ருபாய்க்கு வாங்கியந்து வித்தால் 100 ருபாயும் லாபம் வராது.மிச்சம் நாறிப்போம்..மினக்கெட்டு சைக்கிள் உழக்கிறதுக்கும் பத்தாது.

ஓ................அப்ப என்ன வைர யாவாரம் செய்யப்போறியளோ??இருக்கிறதைவிட்டிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதை தம்பி.

பறக்கிறதில்லை இதுவும் இருக்கிறதுதான்.நான் மண்ணெண்ணை வாங்கியந்து விக்கப்போறன்.கொஞ்சம் கயிற்றம்தான் ஆனா நல்ல லாபம் வரும்.

அதுக்கு உந்த வன்னி கின்னியெல்லாம் கடந்தல்லோ போகவேணும் உந்த பாதையள் எல்லாம் உனக்கு தெரியுமே.

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ எனக்கொரு ஜயாயிரம் ரூபாய் ஒழுங்குபண்ணித்தா.

ஆத்தை படுற பாட்டிலை குத்தியன் மொன்னிக்கழுத கதையாய் கிடக்கு நானே கஞ்சிக்கு வழியில்லைணெ்டு இருக்க ஜயாரத்துக்கு எங்கை போறது

ஏணேய் எனக்குத் தெரியும் நீ பதுக்கி வைச்சிருப்பாய் பயப்பிடாதை ஒரு கிழைமையிலை உன்ரை காசை திருப்பித் தந்திடுவன். தேதண்ணியை கெதியாய் பேடு.. ஜயாவை ஆசுப்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போட்டு வாறன்.காசை றெடிபண்ணு.கரித்துண்டென்றை எடுத்து கடித்து பல்லில் தேய்த்தபடி கிணத்தடிப்பக்கமாய் போனான்.
......................................................................................................................................................................................
ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி.

ரகு பாடசாலைக்கு தயாராகியபடி தன்னுடைய 200 சி.சி மேர்டார்சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பாடசலை சீருடையில் ஒரு இளவயது பெண்ணை அழைத்தபடி அவளின் தந்தையார் ரகுவின் வீட்டின் அகன்ற இரும்புக் கதவில் தட்டினார் .அவர்களை கண்டதும் ஜயையோ...என்றபடி ரகு வீட்டின் உள்ளே ஓடிவிட்டான். ரகுவின் தந்தையார் தாமோதரம் பிள்ளை வெளியே வந்து பார்த்தால்.அவருக்கு தெரிந்தவர்தான் சுடலைக்கு பக்கத்தில் மரக்காலை வைத்திருக்கும் ரங்கன்.

என்ன ரங்கன் இந்தப்பக்கம்.

ரங்கன் கோபத்தில் கொதித்தவனாய் சத்மாய் .இஞ்சை பாருங்கோ ஊருக்குள்ளை இருக்கிறவர் தெரிஞ்சவர் எண்ட ஒரு மரியாதையிலைதான் தான் வீடு தேடி வந்தனான்.உங்கடை மகனை கட்டுப்படுத்தி வையுங்கோ இல்லாட்டி பெரிய பிரச்னையிலை வந்து முடியும் சொல்லிப்போட்டன்.


தாமேதரம் பிள்ளையருக்கு தன்ரை மகன் ஏதோவம்பிலை மாட்டிப்போட்டான் எண்டது மட்டும் புரிந்தது."கோபத்திலை கத்தாமல் விளக்கமா சொல்லன் அவன் கடைசிப்பெடி வீட்டிலை செல்லமாய் வளந்திட்டான் ஏதாவது சின்ன குளப்படி பண்ணியிருப்பான் சொன்னத்தானே தெரியும்.


ஓ உங்களை மாதிரி காசுக்காருக்கு இதுகள் சின்னக்குளப்படிமாதிரித்தான் தெரியும்.மகளை பின்னுக்கும் முன்னுக்கும் கலைச்சு திரியிறானாம். அண்டைக்கு கடிதம்வேறை குடுத்தவனாம்.அதை இவள் கிழிச்செறிஞ்சு போட்டாளாம்.இவளை கடத்தப்போறனெண்டு வெருட்டியிருக்கிறானாம். அதாலை இவள் வேறை பயத்திலை பள்ளிக்கூடம் போகமாட்டணென்டு சொல்லிப்போட்டாள்.இண்டைக்குத்தான் எனக்கு விசயம் தெரியும். உங்கடை மகனை கண்டிச்சு வையுங்கோ. இல்லாட்டி அடுத்ததா நான் காவல்துறையிட்டை போகவேண்டிவரும். இனியும் என்ரை பெட்டைக்கு பின்னாலை திரிஞ்சதெண்டு கேள்விப்பட்டன் அதுக்கு பிறகு நான் மனிசனாயிருக்கமாட்டன்.மரம் அரியிற வாளாலை இரண்டா அரிஞ்சு தாட்டுப்போடுவன் சொல்லிப்போட்டன். என்று கோபமாய் பொரிந்து விட்டு மகளையும் அழைத்துக்கொண்டு ரங்கன் போய்விட்டான்.


தாமோதரத்தாருக்கு தலை சுத்துவதுபோலை இருந்தது அக்கம் பக்கத்திலை ஆரும் கேட்டிருப்பினமே எண்டு மெல்ல றோட்டுக்கு வந்து எட்டிப்பாத்தார். எப்பவுமே வேலை வெட்டியில்லாமல் மடத்திலை குந்தியிருக்கும் கூட்டம் இவரின்ரை வீட்டையே பாத்துக்கொண்டிருந்தது.அவமானம் மதம் பிடித்த பெரிய யானையைப்போல அவரைத்துரத்தத் தொங்கியது இரும்புக்கதவை இழுத்துப் பூட்டியவர். முன்னால் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு அங்கு மல்லிகைச்செடிக்கு கொழுகொம்பாய் நட்டிருந்த பெரிய தடியை ஆட்டி இழுத்தெடுத்தபடி டேய்ரகு என்று கத்தினார்.

குசினிக்குள் மீனாச்சிக்கு பின்னால் பம்மிக்கொண்டு நிண்ட ரகுவை இழுத்தெடுத்து விளாசத்தொடங்கினார்." டேய் நாயே பளார்....உனக்கு செல்லம் கூடிப்போச்சு.பளார் .....எல்லாருமே செல்லம் தந்து தந்துதான் உன்னை கெடுத்துப்போட்டினம்.பளார்.... இவளிட்டை சொன்னாலும்.கேக்கமாட்டாள். பளார்.... ..அப்பவே சொன்னனான் பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியனுக்கு மோட்டச்சைக்கிள் வேண்டாமெண்டு .பளார்.... .அதுவும் அதுகளுக்கு போய் லவ்லெட்டர் குடுத்திரக்கிறாய். பளார்.....அதுகளார்..நாங்களார்..பளார்..... மானம் மரியாதையெல்லாம் போட்டுது..பளார்..பளார்..பளார்....கம்பு தும்பாய்போயிருந்தது. அடித்த அடி விலக்குப்பிடித்த மீனாச்சி மேலையும் பாதிவிழுந்தது.குசினியில் பாத்திரங்கள் சிதறிய சத்தமும் ரகுவின் அலறலும் நாலைந்து வீடுகளிற்கு கேட்டிருக்கும்.


தாமோதரத்தாருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ரகு பிறந்ததிலிருந்து ஒருநாளும் இப்படி அவனிற்கு அடித்தில்லை.எப்பவாவது காதிலை பிடிச்சு செல்லமாய் திருகியிருப்பார் அவ்வளவுதான்.அவனுடைய அம்மா மீனாச்சி சொல்லவே வேண்டாம்.ரகுவிற்கு மூக்கில் தூசிபோய் தும்மினாலே போதும் பதறிப்போய்விடுவார். ரகுவிற்கு மூத்தவர் அண்ணனும் அக்காவும் இங்கிலாந்தில் திருமணமாகி குடும்பமாய் வசிக்கிறார்கள்.இன்னொரு அண்ணன் கொலண்நாட்டில். பலவருட இடைவெளிக்கு பின்னர் பிறந்தவன்தான் ரகு.கடைக்குட்டி என்பதாலும். மூத்தவர்கள் வெளிநாட்டிற்கு போகும்போது இவன் சின்னவனாக இருந்ததாலும் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை.எனவேதான் அவன் கேட்டது எதற்கும் மறு பேச்சு கிடையாது உடைனையே கிடைத்துவிடும்.இப்பவும் தானக்கு திருமணம் தோவையெண்டு சொல்லியிருந்தால் வயதைக்கூட பாக்காமல்.சொந்தத்தில் யாரையாவது பாத்து கட்டிக்கொடுத்திருப்பார்கள் ஆனால் அவன் காதல் கடிதம் குடுத்தது அதுவும் மரக்காலைக்காரனின்ரை பெட்டைக்கு குடுத்ததுதான் தாமேதரத்தாருக்கு பிறசர் ஏத்தியது.


ரகு இன்னமும் குசினிக்குள் விக்கி விம்மிக்கொண்டிருந்தான். பாளாய்போன மனிசன் இந்தாளுக்கு விசர் கிசர் பிடிச்சிட்டுது போலை இப்பிடி என்ரை பிள்ளையை போட்டு அடிச்சுப்போட்டுது. என்ரை பிள்ளை வாட்டசாட்டமாய் வசதியாய் இருக்கிறானெண்டு அவள் பல்லைக்காட்டியிருப்பாள்.அதுவும் மோட்டச்சைக்கிள்ளை வேறை திரியிறான்.சும்மா விடுவாளைவையே. தகப்பன் காரன் கண்டதும் கதையை பிரட்டியிருப்பாளவை அவளவையளின்ரை பரம்பரையே ஆம்பிளையளை மயக்கிறதுதானே வேலை என்ரை கையிலை அம்பிடட்டும் அவளின்ரை.............................கிழிச்சு விடறன்.என்று திட்டியபடியே மீனாச்சி அவனது அடிகாயங்களை டெற்றோல் போட்டு பஞ்சினால் தடவிக்கொண்டிருந்தார்.


இவன் படிச்சு பட்டம் வாங்கினது போதும் முதல்வேலையா இவனை லண்டனுக்கு அனுப்பிற அலுவலை பாததிட்டு வாறன்.இவனை வெளியிலை போக விடாதை மோட்டச்சைக்கிள் இருந்தால்தானே ஊர் சுத்துவான் எங்கை அதுகின்ரை திறப்பு..எண்டபடி மோட்டச்சைக்கிள் திறப்பை தேடியெடுத்து தனது பொக்கற்றுக்குள் போட்டபடி பக்கதிலை இருந்த கொமினிக்கேசனிற்கு போய் மூண்டு பிள்ளையளின்ரை நம்பரையும் குடுத்து அப்பா நிக்கிறார் அவசரமாம் எண்டு சொல்லி விடுங்கோ.

முதலில் கொலண்டில் இருந்த மகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.தாமேதரத்தார் மளமளவெண்டு தொடங்கியவர் மற்றயவையோடையும் கதைச்சு உடனடியாய் அவனை எடுக்கிற வழியை பாருங்கோ எண்டு ஒரே மூச்சிலை சொல்லி முடிச்சார்.
அவனையும் கூப்பிட்டு அம்மாக்கு நானும் உங்களுக்கு அக்காவும் எப்பவோ ஸ்பொன்சருக்கு குடுக்கிறதுக்கு கதைச்சனாங்கள்.நீங்கள்தான் அவன் இந்த வருசம் ஓ எல் எடுக்கிறான் முடியட்டும் எண்டு இழுத்தனியள். சரி அண்ணை அக்காவோடை கதைச்சு உடனடியா அவனை கூப்பிடுற ஒழுங்கை செய்யிறன்.அதோடை உங்கடை ஸ்பொன்சர் அலுவல்களையும் பாக்கிறன் என்று கொலண்டில் இருக்கும் மகனின் பதிலோடு வீட்டிற்கு போன போது ரகுவை காணவில்லை.
எங்கையடி போட்டான் அதுக்கிடையிலை.


நீங்கள் மாட்டுக்கு அடிச்சமாதிரி அடிச்சுப்போட்டியள்.பாவம் கடையிலைபோய் சோடா குடிச்சிட்டு வாறனெண்டு காசு வாங்கிக்கொண்டு போனவன் இப்ப வந்திடுவான் மீனாச்சி ஆறுதல் சொன்னார்.ரகு திரும்ப வரவில்லை.தமோதரத்தாருக்கும் மீனாச்சிக்கும் பயம்பிடிக்கத்தொடங்கியது. சிலவேளை அந்தப் பெட்டையோடை ஏதும் லவ் இருந்திருக்குமோ?அதை கூட்டிக்கொண்டு......எங்கையாவது போய் தற்கொலை.................இப்படி பல சிந்தனைகள் ஓடியபடியே ஒரு நாள் போய்விட்டது.மறுநான் ரகுவின் நண்பர்கள் வீடுகளிலெல்லாம் போய் விசாரித்தனர். அதோடை மரக்காலை பக்கமும் போய் பார்த்தார்கள்.எந்த செய்தியும் கிடைக்கவில்லை.எதுக்கும் காவல் துறையிலை போய் புகார் குடுக்கலாமெண்டு யோசித்தாலும் தாமோதரத்தாருக்கு கெளரவ குறைச்சாயிருந்தது.சிலநேரம் இயக்கத்துக்கு போயிருக்கலாமெண்டு மீனாச்சிக்கு பயமாயும் இருந்தது.இரண்டு நாளாகிவிட்டது காவல்துறைக்கு போறதைத் தவிர வேறை வழியில்லை காவல் துறையில் போய் புகார் குடுத்திருந்தனர்.சிலநேரம் இயக்கத்திற்கு போயிருந்தால் பயிற்சிக்கு போனவர்களின் பெயர் விபரம் கோண்டாவில் அல்லது எழுது மட்டுவாள் முகாமில் இருக்கும் அங்கு போய் சரி பார்க்கச்சொல்லியனுப்பி விட்டிருந்தனர்.மீனாச்சி எல்லாக் கோயிலுக்கும் நேர்த்தி வைத்தபடி கோண்டாவில் முகாமில் போய் விசாரித்தார்கள்.ரகு இயக்கத்திற்கு போய்விட்டான்..................
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

09.07.1995: ஆண்டு சனிக்கிழைமை.
....................................................................................................................................................................................
சந்திரிக்கா போட்ட மோசமான பொருளாதாரத்தடை மோகனை மண்ணெண்ணெய் வியாபாரத்தில் வேகமாக முன்னேற்றியிருந்தது சைக்கிளை விட்டு 90 சி.சி றீசைக்கிள் மோட்டார் சைக்கிளிற்கு மாறியிருந்தான். தானும் அடுத்ததொரு மண்ணெண்ணை மகேஸ்வரனாகவேண்டும் ஒரு கல்வீடு கட்டவேணும்.என்பதுதான் அவனுடைய கனவு. அப்படி மகேஸ்வரன் றேஞ்சிற்கு வந்தாலும் எலெக்சனிலை நிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்திருந்தான். ஊரில் பெற்றோல் எண்டாலே என்னவெண்டு சனத்திற்கு மறந்து போயிருந்தது எல்லாமே மண்ணெண்ணெய்தான்.பெற்றோலிற்கு மாற்றீடாக ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்தது சிலர் கசிப்பில் வாகனம் ஓட முயற்சிகளும் நடந்துகொண்டிருந்தது.மண்ணெண்ணெய்க்கும் செஞ்சிலுவை கப்பலையே காவலிருக்கவேண்டிய நிலைமை .இந்த நேரத்தில்தான் யாம்போத்தல் பஞ்சு விளக்கு பிரபல்யமானது.மற்றும்படி யாராவது சிரமப்பட்டு வன்னிக்குப்போய் வவுனியாவிற்கு உள்ளே போய் அல்லது தரகுகளிடம் காசு கொடுத்து மண்ணெண்ணையை கொண்டுவந்து விற்பார்கள்.அதைத்தான் மேகன் செய்துகொண்டிருந்தான்.அப்பொழுதுதான் அதுவரை கேள்விப்பட்டேயிருக்காத ஊர்களான ஊரியான் கொம்படி கிளாலி என்பன உலகத்திற்கே தெரியவந்தது.
ஊர் நிலைமையும் மோசமாகிக்கொண்டிருந்தது அம்மான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தை பிடிச்சு புலியளை ஒழிக்கிறதெண்டு சபமெடுத்திருந்தார்.

வழைமை போல இரண்டு பிளாஸ்ரிக் மண்ணெண்ணெய் கலன்களை கட்டிக்கொண்டு அவனது மோட்டச்சைக்கிளையும் மண்ணெண்ணையிலையே ஓடியபடி வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தான்..ஆமி முன்னேறி பாஞ்சதும் பிறகு புலிபாய்ஞ்சதும் நடக்கேக்குள்ளை வன்னியலை வந்துகொண்டிருந்த மோகன் பளைப்பக்கமாய் இரண்டுநாளாய் பதுங்கியிருந்திட்டு ஊருக்கு புறப்பட்டான் .அண்டைக்கும் வலிகாமம் பக்கம் அளவெட்டியிலை இருந்த ஆமி அடிச்ச செல்லுகள் பரவலாய் விழத்தொடங்கியிருந்தது.எந்தநேரமும் பெரிய சண்டைவரலாமெண்டு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் புலியள் இருக்கினம்தானே பிறகென்ன கவலையெண்டு நினைச்சபடி மோகனின் மோட்டசைக்கிள் புகையை கக்கியபடி போய்க்கொண்டிருந்தது .திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.

ஒரு பனங்கூடல் அதுக்கு பிறகு சின்ன வயல் வெட்டை அதைதாண்டிட்டால் முருகன் கோயில் சேச்சடி வரும் பிறகு அங்காலை குடிமனையள் போய்சேந்திடலாமென நினைச்சவன் அந்தப்பக்கமும் கெலிசத்தம் வந்தது.நாசமறுப்பார் இண்டைக்கு என்ரை மண்ணெண்ணைக்கு அழிவு வைக்கமால் விடமாட்டாங்கள் போலை கிடக்கு எண்டு. நினைத்தபடி பனங்கூடலுக்குள் பதுங்கினான்.
அங்கு உருமறைப்பு செய்திருந்த இயக்காரரரின்ரை 50 கலிபர் ஒண்டு சடசடத்தது.கெலிக்கு வால்லை வெடிவிழுந்திருக்வேணும் புகைஞ்சபடி ஒரு பக்க செட்டை பிஞ்ச தும்பி மாதிரி சாய்வா பறந்தபடி காரைநகர் பக்கமாய் போனது .போக வெளிக்கிட்ட மேகனை இயக்கபெடியள் மறிச்சிட்டினம்.ஒரு கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு ஒரு புக்காரா இயக்கத்தின்ரை 50 கலிபர் சடசடத்ததுதான்.ஆனால் பெரிய வெடிச்சத்தங்கள் ஊரே அதிர்ந்தது.மேகன் காதைப்பொத்தியபடி குப்புற படுத்திருந்தான்.பலநுறுபேரின் அலறல் சத்தம் பொத்திய அவனது கைகளையும் ஊடுருவி காதில் புகுந்துகொண்டது. சேச்சுக்கு (சென் பீற்றஸ் தேவாலயம்)அடிச்சிட்டாங்கள்.மோகன் மண்ணெண்ணை கானை கழட்டி பத்திரமாய் காவேலையால் முடிவிட்டு காயம்பட்டவர்களை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏத்தி இறக்கினான்.150 பேரிற்கு மேல் இறந்து போயிருந்தனர்.

Photobucket

22.07.1995:ம் ஆண்டு
.............................................................................................................................................................................................
முன்னேறி பாய்ச்சல்லை இடம்பெயர்ந்தவையள் திரும்பவும் வீடுகளிற்கு வந்துகொண்டிருந்தார்கள்.இயக்கமும் 100 கோடி ரூபாய் தேவையெண்டு தேசிய பாதுகாப்பு நிதியெண்டு ஒரு திட்டத்தை தொடங்கி வீடு வீடாய் காசு சேர்க்கத் தொடங்கியிருந்தவை வெளிநாட்டுக்காரருக்கு ஒரு லச்சம் அரக்காது.மோகனிட்டையும் 25ஆயிரம் கேட்டு மோகன் கெஞ்சி கூத்தாடி வீட்டு நிலைமை விளங்கப்படுத்தி 15ஆயிரமாய் குறைச்சிருந்தான். அந்தக் காசும் ஒரு கிழைமைக்குள்ளை குடுக்கவேணும் அதோடை இரவுக்கு பொன்னாலைக்கு பங்கரடிக்க வரச்சொல்லி இயக்கம் கேட்டிருந்தது கட்டாயம் போகவேணும் என நினைச்சபடியே மோகனும் சங்கானை சந்தியிலை வழைமை போல பின்னேரமாய் ஒரு மேசையை போட்டு மண்ணெண்ணை யாவாரத்தை ஆரம்பித்திருந்தான்.

சுந்தரத்தார் நல்ல வெறியிலை கொஞ்சம் தள்ளாடியபடி பிளாஸ்ரிக் கானோடை வந்தவர் டேய் எனக்கு 5 லிற்றர் ஊத்து எண்டார்.

ஜயா ஆழுக்கு ஒரு லீற்றர்தான் இருக்கிறதை எல்லாருக்கும் பகிரவேணும்.அதுவும் முக்கியமா படிக்கிற பிள்ளையளிற்கு.உங்களுக்கெதுக்கு 5 லிற்றர்.

காசை எடுத்து எறிஞ்சவர்"டேய் உனகென்ன காசுதானே வேணும் இந்தா.. ....ஊத்து நான் தோட்டம் செய்யப்போறன் ஊத்து.

பிள்ளையளும் மனிசியும் பிரான்சிலை பேசாமல் நீங்களும் போய் சேருறதை விட்டிட்டு தோட்டம் செய்யப் போறாராம்.இந்தாங்கோ ஒரு லீற்றர்தான் விரும்பினால் வாங்குங்கோ இல்லாட்டி போங்கோ.

முறைத்தபடி ஒரு லீற்றர் மண்ணெண்ணையுடன் ..உந்த அகதி நாயளிற்கு என்ன செய்யிறன் பாரெண்டு புசத்தியபடி போய்க்கொண்டிருந்தார்.

அகதிகளாய் இடம்பெயர்ந்து வந்திருந்தவர்கள் அவரின்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினம் எண்ட கோபத்திலை கிணத்துக்கை மண்ணெண்ணையை ஊத்திப்போட்டாராமெண்டு காவல்துறை சுந்தரத்தாரை பிடிச்சுக்கொண்டு போட்டினமாம் எண்டு அடுத்தநாள் கேள்விப்பட்டான்.சனம் மண்ணெண்ணெய்க்கு படுற பாட்டிலை விசர் மனுசன் கிணத்துக்கை ஊத்திட்டுதாம்.நல்ல மிதி குடுக்கவேணும்.என்று மனதில் நினைத்தபடி. அடுத்தநாள் இயக்கத்திற்கு குடுக்கவேண்டி 15 ஆயிரத்தை எண்ணியெடுத்து கடதாசில் சுற்றி தலைமாட்டில் வைத்தபடிபடுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை செல் சத்தங்களுடன் விடிந்தது சிறிது நேரத்திற்கு பின்னர் மக்களை அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு இயக்கம் அறித்துக்கொண்டு திரிந்தார்கள்.ஆமி வந்தாலும் இயக்கம் திரும்பவும் பிடிக்கும்தானே என்கிற நினைப்பில் மோகனும் தன்னிடமிருந்த மண்ணெண்ணையை பத்திரமாக ஒரிடத்தில் ஒழித்து வைத்துவிட்டு இருந்த பணத்தையும் ஆளிற்கொரு மாற்றுத்துணிகளை மட்டும் எடுத்தபடி குடும்பமாக வெளியேறினார்கள். போற வழியிலையிலையே அரசியல் துறை அலுவலகத்திலை அவைக்கு குடுக்கவேண்டிய காசையும் குடுத்திட்டு போகவேணும் என மனதில் நினைத்தபடி "எணோய் நான் ஜயாவையும் கடைசியையும் ஏத்திக்கொண்டு போறன் நீ மற்றவளோடை கோப்பாய் பக்கமாய் வாந்துசேர் " என்றுவிட்டு ""முன்னேறிப் பாய்வதென்ன அம்மா நீ பின்னாடி ஓடுவதேன் சும்மா என்று சிட்டுவின் பாடலை முணு முணுத்தபடி தன்னுடைய 90 இயக்கினான்.தம்பிப் பிள்ளையரிற்கு இருமல் கூடிக்கொண்டே போனது. சூரியக்கதிரின் வெப்பமும் அதிகமாகிக்கொண்டே போனது.
......................................................................................................................................................................................
கோப்பாய் ..சாவகச்சேரி ..கிளாலி யெண்டு மல்லாவி வரை வந்து சேர்ந்தாயிற்று எங்கும் மக்கள் வெள்ளம் யார் எங்கே தங்குவதெண்டு தெரியவில்லை..வன்னியில் சொந்தங்கள் இருந்தவர்கள் பாடு ஓரளவு பரவாயில்லை .மற்றும்படி மரங்களின் கீழும் தரப்பாள்களும்.தடியில் கட்டிய சேலைகளும்தான் இருப்பிடமாகியது. தங்களின் நிலங்களையெல்லாம் மனிதர்கள் பிடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் பாம்புகளும் கலைத்து கலைத்து கொத்தியது. எங்காவது மிருகங்களை தேடியலைந்த நுளம்புகளிற்கு மனிதஇரத்தம் விருந்தாகி மலேரியாயும் வயிற்றுப்போக்கும்.தேசிய வியாதியாய்போனது.

ஆறேழு லச்சம் சனத்தை திடீரெண்டு வெளியேறுங்கோ எண்டு சொல்லிப் போட்டாங்கள்.எங்கை போறது?? எங்கை தங்கிறது?? எத்தினை நாளைக்கு தங்கிறது எண்டு ஒரு இழவும் தெரியேல்லை. போற இடத்திலை சாப்பாடு தண்ணியாவது கிடைக்குமே எண்டும் தெரியாது. மூண்டு பேர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி மூண்டுலச்சம் காசு மட்டும் வாங்கிப் போட்டு இப்பிடி வீடு காணியெல்லாம் விட்டு அனாதையாய் நடக்கவைச்சிட்டாங்களே என்று புலம்பிய படியே .கொஞ்சம் .காசு.. நகை காணி உறுதி ..எல்லாத்தையும் ஒரு துவாயில் போட்டு சுருட்டி இடுப்போடு சேர்த்துக்கட்டியபடி மீனாச்சியும் தாமோதரத்தாருக்கு பின்னலை ஓடிக்கொண்டிருந்தாள்..


கோண்டாவிலில் இருந்து மகனைத்தேடத்தொடங்கிய மீனாச்சி வன்னிக்குள் வந்ததுதம் தேடலை தொடர்ந்துகொண்டேயிருந்தார். அவரின்ரை சொந்தக்கார பெடியனொருத்தன் இயக்கத்திலை அரசியல் பிரிவிலை பொறுப்பிலை இருந்தவன் .இயக்கப்பெயர் பொழிலன் அவனைத் தேடிப்பிடித்து விசயத்தை சொன்னவர். அவனை ஒருதரம் பாத்து கதைச்சால் மட்டும் போதும் எங்கையிருக்கிறாணெண்டு சொல்லு என்று அழுது புலம்பினார். மீனாச்சியின் அழப்பறை தாங்காமல் அவனும் எல்லா இடமும் தவகல் அனுப்பி ரகுவை கண்டு பிடித்தவன்... அம்மா ஆள் பயிற்சி முகாமிலை இருக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது பொறுத்தனீங்கள் இன்னும் ஒரு மாதம் பொறுங்கோ பயிற்சி முடிஞ்சு வந்ததும் பாக்கலாம்" மீனாச்சி கொஞ்சம் ஆறுதலடைந்தாலும் அடிக்கடி அரசில் பிரிவு முகாமிற்கு போய் பொழிலனை நச்சரித்தபடியேதான் இருந்தாள்.

ரகுவிற்கு பயிற்சிக்கு போனதிற்கு பிறகுதான் ஏனடா வந்தம் எண்டிருந்திச்சிது. நேரத்துக்கு நேரம் வித விதமான சாப்பாடு கைநிறைய காசு மோட்டார் சைக்கிளில் சினேகிதங்களோடை ஜாலியாய் ஊர் சுத்தித் திரிந்தவனிற்கு ...பயிற்சி முகாமில் ஒவ்வொருநாளும் ஒரேசாப்பாடு கல்லு மண் கடிபடும் . அவிச்ச கடலைக்குள்ளை சிலநேரம் பூச்சி புளுவும் அம்பிடும் . கொட்டில்லை மணல்தரையிலை படுக்கை... சிலநேரம் பங்கர் .நுளம்பு இலவச இணைப்பு.எல்லாத்துக்கும் மேலை காலங்காத்தாலை பயிற்சி தொடங்கிறதுக்கு அடிக்கிய விசில் சத்தத்தை கேக்க உயிர் போறமாதிரி இருக்கும். தப்பியோடுவமா எண்டு சில நேரம் யோசிச்சிருக்கிறான். ஆனால் பயிற்சி முகாம் தொடங்கி ஒரு கிழைமையிலை தப்பியோடின ஒருத்தனை திரும்ப பிடிச்சுக்கொண்டுவந்து எல்லாருக்கும் முன்னாலை அடிச்ச அடியை பாத்த ரகுவுக்கு வயித்தை கலக்கியது. ஓடுற யோசினையை கைவிட்டவன் அதுமட்டுமல்ல நாள் செல்லச்செல்ல பயிற்சியும் பழகிப்போனது.ஒருமாதிரி பல்லைக்கடித்படி பயிற்சியை முடித்துவிட்டான்.

பயிற்சி முடிந்து வேயொரு முகாமிற்கு அனுப்பபட்டிருந்த ரகுவை பொழிலனே நேரடியாக தேடிவந்து அழைத்துப்போய் தன்னுடைய அரசியல் பிரிவு முகாமில் வைத்து மீனாச்சியிடம் ஒப்படைத்துவிட்டு
அக்கா ஆளை கூட்டிக்கொண்டு போங்கோ நான் அவனின்ரை பொறுப்பாளரோடை கதைச்சு மூண்டுநாள் லீவு கேட்டு கூட்டியந்தனான்..தேடிவாறஅளவிலை வைக்காமல் மூண்டாம் நாள் ஆளை கொண்டுவந்து இஞ்சை விடவேணும் பிறகு எனக்கு பிரச்சனையை தரக்கூடாது... என்று பொழிலன் கண்டிப்பாக சொல்லியனுப்பி விட்டிருந்தான்.

என்ன தளுதளு வெண்டிருந்த என்ரை பிள்ளை இப்பிடி காஞ்சு கறுத்துப்போய் வருத்தக்காரன் மாதிரி வந்து நிக்கிது ..இதெல்லாம் உனக்குத் தேவையோடா என்று புலம்பியபடியே மீனாச்சி ரகுவை கட்டிப்பிடித்து அழுதபடியே அழைத்து போனார்.
அந்தக் கஸ்ரமான சூழ்நிலையிலும் மீனாச்சி காசை விட்டெறிந்து ரகுவிற்கு பிடிச்சமாதிரி விதம் விதமாய் சமையல் சாப்பாடு தடல்புடலாய் நடந்தது .கண்மூடி முழித்தது போலை மூண்டுநாள் ஓடிவிட்டது. ரகு திரும்ப முகாமிற்கு போகவேணும்.
தம்பி நான் அடிச்சுப்போட்டன் எண்டுதானே இயக்கத்துக்கு ஓடினனி.. இனி அடிக்கமாட்டனடா திரும்பி வாடா தளுதளுத்தார் தமோதரத்தார்.

எடேய் உன்ரை காம்ப் எங்கையிருக்கெண்டு காட்டு நான் வந்து உன்ரை பொறுப்பாளரோடை கதைச்சு கையிலை கால்லை விழுந்தாவது உன்னை கூட்டிக்கொண்டு வாறன் சொல்லடா என்றபடி ரகுவைக்கட்டிப்பிடித்து அழுதார் மீனாச்சி

ரகுவுக்கும் அழுகையாய் வந்தது ""அங்கையெல்லாம் ஒருத்தரும் வரேலாது எங்கடை காம்ப் வன்னிவிளாங்குளத்திலை இருந்து உள்ளுக்கை காட்டுக்கை போகவேணும்.கொஞ்நாள் போகட்டும் நானே பொறுப்பாளரோடை கதைச்சிட்டு வாறன்.""
அரசியல் முகாம்வரை தாமோதரத்தாரும் மீனாச்சியும் கொண்டுபோய் ரகுவை விட்டுவிட்டார்கள்.சில மாதங்கள் கடந்தது தாமோதரத்தாருக்கு இலண்டன் ஸ்பொன்சர் சரிவந்து அவர் மகளிடம் போய்விட்டார். மீனாச்சியோ ரகுவை விட்டு வரமாட்டன் எண்டு அடம் பிடித்து நிண்டதாலை அவரது ஸ்பொன்சர் இழுபட்டது. தாமோதரத்தார் லண்டன் போய் சேந்ததும் மீனாச்சி அதிரடி திட்டத்தில் குதித்தார் .பொழிலனின்ரை அரசியல் முகாமிற்கு போனவர் ரகுவை கொண்டுவாங்கோ இல்லாட்டி அன்னம் தண்ணி இல்லாமல் இதிலையே சாகப்போறனெண்டு முகாமுக்கு முன்னாலை குந்திவிட்டார்.
மனிசி கொஞ்சநேரம் குந்தியிருந்திட்டு பேசாமல் போயிடும் எண்டுதான் பொழிலன் நினைத்தான்.ஆனால் மனிசி அங்கையே படுத்திட்டுது.ஒரு நாள் போயிட்டுது மனிசியை விடுப்புப் பாக்கிற சனமும் சமாதானப்படுத்தி வீட்டை கூட்டிக்கொண்டு போறதுக்கு சொந்தபந்தங்களும் முகாமுக்கு முன்னாலை குவியத் தொங்கிட்டினம். பொழிலனிற்கு தர்மசங்கமாய் போகவே ரகுவின்ரை முகாம் பொறுப்பாளரோடை வோக்கில் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னான்.

முகாம் பொறுப்பாளர் ரகுவை கூப்பிட்டு
உன்ரை அம்மா பொழிலன்ரை காம்ப் வாசல்லை ஒரே பிரச்சனையாம் இந்தா அவாவோடை கதைச்சு சமாதானப்படுத்தி அனுப்பிவிடு இந்தா வோக்கியிலை கதைச்சுப்பார் இல்லாட்டி நேரை போய் கதைக்கப்போறியா ??நேரிலை போய்த்தான் கதைக்கவேணுமெண்டால் நானும் கூடவாறன். வோக்கியை நீட்டினான்.

இல்லையண்ணை ................

என்ன வோக்கிலை சொன்னால் கேக்கமாட்டாவே சரி வெளிக்கிடு நேரிலை போய் கதைச்சிட்டு வலருவம்.

அதுவுகும் இல்லை.....

அப்ப என்ன செய்யப்போறாய்.??

அம்மா என்ன சொன்னாலும் கேக்கமாட்டா....................

ம்........

நான் முதல் வீட்டை போட்டு வரேக்குள்ளையே சொல்லித்தான் விட்டவா

என்வெண்டு???

ரகுவிற்கு நாக்கு வரண்டது மெண்டு விழுங்கியவனாய்.."கெதியாய் இயக்கதை விட்டிட்டு வரச்சொன்னவா.....

அதுக்கு?????

எழுதித் தந்திட்டு போகலாமெண்டு................................

அங்கிருந்த மேசையில் ஓங்கி கையால் அடித்த பொறுப்பாளர்." என்னடா விழையாடுறீங்களா?? நினைச்ச உடனை வாறதுக்கும் விருப்பமில்லாட்டில் போறதுக்கும் நாங்கள் என்ன சத்திரமா நடத்திறம்.??ஒருதனை எடுத்து பயிற்சி குடுத்து வெளியாலை கொண்டு வாறதுக்கு எவ்வளவு கஸ்ரப் படுறம் ..எவ்வளவு செலவெண்டு தெரியுமோ??

வேணுமெண்டால்கேக்கிற காசை அம்மாட்டை காசு வாங்கி தாறன்..நான் போப்போறன்.

பொறுப்பாளரின் கை ரகுவின் கன்னத்தில் இறங்கியது." கழட்டடா குப்பியை நீ நினைச்சமாதிரியெல்லாம் போக ஏலாது .இனி நீ ஆயுதத்தை கையாலை தொடக்கூடாது நான் மேலிடத்திலை கதைச்சுப்போட்டுத்தான் முடிவு சொல்லுவன்.எனக்கு முன்னாலை நிக்காதை போ எண்டு கத்தினான்.

ரகு குப்பியை கழட்டி பொறுப்பாளரிடம் குடுத்துவிட்டு கன்னத்தை தடவி அழுதபடி போனான். முகாமிலிருந்த மற்றையவர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.

ரகு இயக்கத்தை விட்டு போவதாக எழுதிக் குடுத்ததன் பின்னர் ஆறு மாதங்கள் தண்டனைக்காலமாக அறிவிக்கப்பட்டு பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டான்.ஆறு மாத காலமும் பயிற்சி முகாமில் சமையல் செய்வது.முகாமை துப்பரவாக்குவதுதான் அவனது வேலை.அங்கையும் அவனிற்கு கிண்டல்கள் தெடரத்தான் செய்தது. ஆறுமாத காலத்தை முடித்து வீட்டிற்கு போய்விட்டான். மீனாச்சிக்கு இப்பதான் பெரியநிம்மதி. ஆனால் அடுத்த பிரச்சனை இயக்கத்தின்ரை பாஸ் முறையாலை இரண்டு பேரும் ஒரே நேரத்திலை வன்னியை விட்டு வெளியாலை பேகேலாத நிலைமை. என்ன செய்யலாமெண்டு மண்டையை போட்டுக் குளப்பிக்கொண்டிருந்வளிற்கு திடீரெண்டு வசந்தியின் நினைப்பு வந்தது.
வசந்தி மீனாச்சியின்ரை பெறாமகள் முறை .யாழ்ப்பாணத்திலை காதலிச்சு ஒரு பெடியனோடை ஓப்போய் பிரச்சனையெல்லாம் நடந்தது.சாதி மாறி காதலிச்ச பிரச்சனையெண்டபடியாலை தமிழீழ காவல்துறை தலையிட்டு அவைதான் கலியாணமும் கட்டி வைச்சவை. அதுக்குப்பிறகு அவளோடை மீனாச்சி கதைக்கிறேல்லை.இடம் பெயந்து வந்து இப்ப இஞ்சைதான் பக்கதிலை எங்கையே கொட்டில் போட்டு இருக்கினமாம். கையிலை குழந்தோடை நிவாரணம் வாங்கிக் கொண்டு போகேக்குள்ளை அவளை மீனாச்சி பாத்திருக்கிறா.முதல்வேலையா வசந்தியை தேடிப்பிடிக்கவேணும்.
வசந்தியை தேடிப்பிடிச்ச மீனாச்சி " எடியேய் உன்னை அண்டைக்கு றோட்டிலை கண்டனான் நீ சரியாய் கஸ்ரப் படுறியாம் எண்டு கேள்விப்பட்டன்.என்னதான் பிரச்சனையெண்டாலும் ஒருத்தருக்கு கஸ்ரம் எண்டால் சொந்த இரத்தம் துடிக்குமல்லோ. அதுதான் உன்னைத் தேடித்திரிஞ்சனான்.இந்தாடி பிடியடி" எண்டு பத்தாயிரம் ரூபாயை வசத்தியின் கைகளில் திணித்தார். வசந்தியும் கண்கலங்கினாள்.

அடுத்தடுத்து சிலநாட்கள் வசந்தியை சந்தித்து கதைச்ச மீனச்சி ஒருநாள் மெதுவாய் விசயத்தை அவிழ்த்தார். " எடியே உன்னட்டை சொன்னால் என்ன... எனக்கும் இப்ப ஏலாது அடிக்கடி நெஞ்சுவலி வருகிது இஞ்சை எல்லா டாக்குத்தர் மாரிட்டையும் காட்டிப்போட்டன். கொழும்புக்கு போகச்சொல்லிப் போட்டாங்கள்.நான் தனியா என்னெண்டு போறது இவன் ரகுவையும் கூட்டிக்கொண்டு போனால்தானே எனக்கு உதவியாயிருக்கும். ஆனால் இவங்கள் குறுக்காலை போவார் ஒராழுக்கு அதுவும் எனக்கு மட்டும்தானாம் பாஸ் தருவாங்கள். அப்பதான் உன்ரை நினைப்பு வந்தது. நான் கேட்டால் நீ மாட்டன் எண்டே சொல்லப் போறாய். நீ பிணை நிண்டியெண்டால் நான் போய் வருதத்தை மாத்திப் போட்டு வந்திடுவன். அதுவும் நீ சும்மா பிணை நிக்கவேண்டாம். நீயும் பாவம்தானே பிள்ளைகுட்டிக்காரி உனக்கு 50 ஆயிரம் தாறன். ஒண்டும் அவசரமில்லை யோசிச்சு உன்ரை மனிசனிட்டையும் கேட்டு சொல்லு. ஆனால் கட்டாயம் திரும்வந்திடுவன் பயப்பிடத் தேவையில்லை. ஏதோ நான் வருத்தத்திலை வன்னிக்கை சாகிறதோ இல்லை கொழும்பு போறதோ எண்டிறது உன்ரை கையிலைதான் இருக்கு.

வசந்தியும் யோசித்தாள் இருக்கிற கஸ்ரத்திற்கு ஜம்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் எவ்வளவு பெரிய உதவி அதே நேரம் வீட்டுக்காரர் எல்லாருமே வெறுத்து ஒதுக்கி இருக்கேக்குள்ளை மீனாச்சி பெரியம்மாதான் தேடிவந்து உதவினவா. வருத்தம் எண்டு தானே உதவி கேக்கிறா.பாவம் இந்த உதவிகூட செய்யாட்டில் மனிசரில்லை.

மீனாச்சியும்.வசந்தியும் புலிகளின் பாஸ் அலுவலகம் நோக்கி நடந்தனர்.
.........................................................................................................................................................................
12.01.1997 ம் ஆண்டு பாரிஸ்

மோகன் கேஸ் எழுதிறவருக்கு முன்னாலை பயபக்தியாய் அமர்ந்திருந்தான்

ஒரு வெள்ளைப் பேப்பரையும் பேனையையும் எடுத்தவர்
தம்பி உம்மடை முழுப்போர் குடும்ப விபரத்தை சொல்லும் என்றபடி எழுதத் தொடங்கினார்.

என்ரை பேர் தம்பிப் பிள்ளை மோகன் குடும்பத்திலை நான் இரண்டாவது மூத்த அக்க ஒராள் கட்டிட்டா அவாக்கு இரண்டு பிள்ளையள். எனக்குப்பின்னாலை இரண்டு தங்கச்சியள்

அப்பா அம்மா??

ஜயா இல்லை மோசம்போட்டார் ஒரு தங்கச்சி இயக்கத்துக்கு போட்டாள் அம்மாவும் கடைசியும்தான் வன்னிக்கை இருக்கினம்.

கேஸ் எழுதிறவனின்ரை கண்ணிலை ஆயிரம் வாற் பிரகாசம் மின்னியது. பேப்பரில் எனது தந்தை இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று எழுதிஅதை சுத்தி பேனையாலை ஒரு வட்டம் போட்டார்.

அவர் என்ன எழுதுகிறார் என மெதுவாக எட்டிப்பார்த்த மேகன் எட உங்கடை ஜயாவும் ஆமி சுட்டு மோசம் போட்டாரே என்றான்

தம்பி நான் என்ரை கேஸ் எழுதேல்லை உமக்குத்தான் கேஸ் எழுதிறன் உம்மடை அப்பாவைத்தான் ஆமி சுட்டுகொண்டது.

ஜயோ அண்ணை என்ரை ஜயாவை ஆமி சுடேல்லை ஜயா ஒரே கசிப்படி அதோடை இடைக்கிடை அம்மாக்கும் அடி. ஒருநாள் நெஞ்சை பொத்திக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்திலை சங்கானை ஆஸ்பத்திரிக்கு நான் தான் கொண்டு போனனான். குளிசை தந்திச்சினம்அவை சொல்லிச்சினம் ஆளுக்கு கான்சர் போலை கிடக்கு அனேகமா ஈரல் பெரிஞ்சிருக்கவேணும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ எண்டிச்சினம். பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனம். கண்போம்.. ஆளுக்கு ஈரல் பொரிஞ்சுதான் போச்சுது கான்சர் உடைனை மகறகமவுக்கு கொண்டு போங்கோ எண்டாங்கள். மகறகம எங்கை கிடக்கெண்டு நாலு பேரிட்டை விசாரிச்சு இஞ்சை மாமாவுக்கும் போனடிச்சு காசு அனுப்பச்சொல்லிப்போட்டு காவலிருந்தம். மாவின்ரை காசு வாறத்துக்கு முதல் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்திட்டான்.நாங்களும் இடம் பெயர்ந்து வன்னிக்குள்ளை வந்திட்டம். மல்லாவிக்கை தான் முழுச்சனமும் அடைஞ்சுபோய் இருந்தனாங்கள். சாதரமணமாய் காயப்பட்டவைவைக்கே மருந்து வசதியள் இல்லாத நேரம். ஜயாக்கு கான்சர் மருந்துக்கு எங்கை போறது அவர் வன்னியிலையே செத்துப்போனார்.

தம்பி ஆயிரம் பேருக்கு மேலை கேஸ் எழுதி விசா எடுத்துக்குடுத்திருக்கிறன்.நீர் சொல்லுறமாதிரி நான் கேஸ் எழுதினால் நீர் கெலிங்பாற பிற்றக்கொட்டுவாதான்.உமக்கு விசா வேணுமெண்டால் நீர் விபரங்களை மட்டும் சொல்லும் நான் எழுதித்தாற கேசை அனுப்பும்.இல்லாட்டி நடையை கட்டும் எனக்கு அடுத்த கேஸ் பின்னாலை நிக்கிறார்.

இல்லையண்ணை மன்னிச்சுக்கொள்ளுங்கோ நீங்களே விரும்பினமாதிரி எழுதுங்கோ.

சரி தம்பி உடம்பிலை ஏதும் காயங்கள் கிடக்கோ

கொஞ்சம் யோசித்தவன் ம் ..ஓமண்ணை ஒருக்கா என்ரை 90 யின்ரை சைலெஞ்சர் பட்டு வலக்கால்லை எரிஞ்சகாயமெண்டு இப்வும் பெரிசாய் இருக்கு பிறகு கடைசியாய் கிளாலியை கடக்கேக்கை ஆமி அடிச்ச செல் ஒண்டு நான் சரியாய் விழுந்து படுக்கிறதுக்கிடேலை கிட்ட வந்து விழுந்து வெடிச்சதிலை எனக்கு பின்பக்கத்திலை செல் பீஸ் பட்ட காயம் ஒண்டும் இருக்கு

உமக்கு ஒவ்றாவிலையே காட்தான் அரக்காது. ஆனால் நான் சொல்லுற புறுவ்கள் எல்லாம் உடைனை எடுக்கவேணும். நான் எழுதித் தாறதுகளை உடைனை எடுக்கிற வேலையை பாரும்.என்றபடி ஒரு துண்டில் மரணஅத்தாட்சிப்பத்திரம். காயம் பட்டதற்கான வைத்தியரின் அத்தாட்சி பத்திரங்கள்.கிராம சேவையாளரின் உறுதிக்கடிதம் என்று எழுதி நீட்டியவர். இதுகளை கெதியாய் எடும். அதோடை உம்மடை அப்பா செத்தது சூட்டுக்காயத்தாலையெண்டும் உமக்கு வலக்காலிலை எரிகுண்டு பட்டதெண்டும் பின்னாலை செல்பட்டதெண்டும் விபரமாய் டொக்ரர் சேட்டிபிக்கற்றுகளும்.எழுதியெடும்

அண்ணை இதெல்லாம் ஊரிலையிருந்தே எடுக்கவேணும்...இழுத்தான்

தம்பி விபரமில்லாத ஆளாய் இருக்கிறீர். உதிலை லாசப்பல் பக்கம் போனாலே ஆரையும் பிடிச்சு லைசன்சிலை இருந்து பிறப்பத்தாட்சி பத்திரம் மரண அத்தாட்சி பத்திரம் ஊர் விதானை மாரின்ரை கடிதம் எல்லாம் எடுக்கலாம். ஆனாலும் பிரெஞ்சுக்காரன் கெட்டிக்காரன் கனக்க கள்ளமெண்டு பிடிச்சிருக்கிறான். அதாலை கண்டவையிட்டையும் போய் வாங்காமல் நான் ஒரு நம்பர் தாறன் அவருக்கு போனடியும் எல்லாம் செய்து தருவர். ஒறிச்சினல்மாதிரியே இருக்கும் என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.

மோகன் பவ்வியமாக எழுந்து கையில் என்பலப்பில் இருந்த ஒருதொகையை கொடுத்து அண்ணை இந்தாங்கோ அட்வான்ஸ் மிச்சம் கேஸ் எடுக்கேக்கை தாறதெண்டு மாமா சொன்னவர்.

ம்...நான் கடன் வியாபாரம் செய்யிறேல்லை தம்பி கட்டாயம் கேஸ் எடுக்க வரேக்குள்ளை மிச்சத்தை கொண்டுவரவேணும் அப்பதான் கேஸ் தருவன். வாறகிழைமை வாரும். எதுக்கும் வரமுதல் ஒரு போனடிச்சு முடிஞ்சிட்டுதோ எண்டு கேட்டிட்டுவாரும் நான் சொன்ன புறுவுகள் மறக்கவேண்டாம்.

விடைபெற்றான் மோகன் அடுத்தாவாரம் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கேசை எடுப்பதற்காக மிகுதி பணத்துடன் போயிருந்தான் ஆவணங்களை சரிபார்த்தவர். தமிழில் எழுதிய வாக்குமூலம் ஒன்றினையும் அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும்கொடுத்து. தம்பி தமிழிலை உள்ளதை வடிவாய் மனப்பாடம் பண்ணி வையும் ஒவ்றா காரன் குறுக்கு கேள்வியள் கேட்பான் டக்கு டக்கெண்டு பதில் சொல்லவேணும். முக்கியமாய். திகதி மாதங்கள் கவனம்.எல்லாத்தையும் ஒரு போட்டோகொப்பி எடுத்துப்போட்டு ஒவ்றாவுக்கு அனுப்பும்.

மோகன் விடைபெற்றான் போகிற வழியிலேயே இரயிலில் பலதடைவை படித்துப்பார்த்தவன் ""சங்கானை ஞானவைரவரே எனக்கு காட் கிடைக்க வேணும் நல்லதொரு வேலை கிடைக்கவேணும். கல்வீடு கட்டவேணும்.உனக்கு வடைமாலையோடை பொங்கல்"".என்று நேத்திக்கடன் வைச்சபடி கேசை அனுப்பிவிட்டிருந்தான்.விசா பதில் வரும்வரை லாசப்பல் தமிழ்க்கடை ஒன்றில் சாமான் அடுக்கும் கள்ளவேலையும் ஒன்று கிடைத்திருந்தது. ஞான வைரவரிற்கு வடைமாலை விருப்பம் இருந்ததோ இல்லாட்டி கேசை படிச்ச ஒவ்றா காரனிற்கு பரிதாபம் ஏற்பட்டதோ தெரியாது மோகனை கூப்பிட்டு கனக்க கேள்வி ஒண்டும் கேக்கேல்லை அகதி அந்தத்து ஏற்கப்பட்டுள்ளது என்று கடிதம் வந்திருந்தது. வைரவரே நானும் உன்னை ஏதோ சிம்பிளா நினைச்சன் நீ பேய்காய்தான் உனக்கு வடைமாலை என்று மனதில் நினைத்தபடி வேலை ஒன்று தேடத்தொடங்கியிருந்தான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
20.06.1997 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.
விமான நிலையத்தினுள் புகுந்துவிட்டிருந்த ரகுவிற்கு கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடி கையசைத்படி மீனாச்சி நின்றிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தது ரகு கைகாட்டியபடியே மறைந்து போனான். "போய் இறங்கி போன் வந்ததும் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேத்தி வைச்சபடியே தங்க எலி வாங்கிக் குடுங்கவேணும். " என்று மனதில் நினைத்தபடி வாகனத்தில் போய் மீனாச்சி ஏறினாள்.

மீனாச்சி வவுனியா தாண்டியதுமே தாண்டிக்குளத்துக்கு அங்காலை நினைக்கவே விரும்பவில்லை நடந்தெல்லாம் கெட்ட கனவாய் மறந்து போனாள். அதாலைதான் பிறந்து வளந்த ஊர்கோயில் தாமரை வைரவருக்கே நேத்தி வைக்காமல் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்திருந்தாள். ரகுவும் இத்தாலியிலை இறங்கி சுவிசுக்குள்ளை போய் சேந்திட்டானாம் எண்டு செய்தி கிடைச்சதும். இரண்டு பவுணில் ஒரு எலி செய்து பிள்ளையார் கோயில் ஜயரின் அரிச்சனைத்தட்டில் போட்டாள்.ஜயருக்கு வாயெல்லாம் பல்லு......அடுத்த ஒரு மாதத்திலேயே மீனாச்சிக்கும் கொலண்ட் ஸ்பொன்சர் கிடைத்து வந்து சேர்ந்துவிட்டாள்.

சுவிசில் அகதி விசா கேட்ட ரகு சுறிச்மானிலத்திற்கு அருகில் ஒரு இடத்திற்கு ஒரு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தான்.உதவிப்பணம் மட்டும் கிடைத்து வேலை ஏதும் செய்யமுடியாது என்பதால் பொழுது போக்குவதற்கு சுரிற் பாணெவ்(இரயில் நிலையம்)அங்கைதான் சில தமிழ் பெடியளோடை பழக்கம் கிடைச்சது அவர்கள்தான் பாம்பு குறூப் எண்டு பிறகு தெரியவந்தது.ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சுறிச் பொது பூங்காதான் அவர்களது சந்திப்பிடமாக மாறியிருந்தது.இரவு நேரம் செல்லச் செல்ல பியர் . கட்டை.கஞ்சா.என்று அந்தப்பூங்கா அவர்களிற்கு ஒரு சொர்க்கமாக மாறிவிடும்.இடையிடை வேறு யாருடனாவது அல்லது வேறு தமிழ் குழுக்கழுடனும் மோதல்களும் நடக்கும்.சண்டைகளை பாத்தால் ஏதும் பெரிய விடயமாக இருக்காது பெரும்பாலும் பெட்டையளை அடிப்படையாக கொண்டு தொடங்கினதாய்தான் இருக்கும்.பெட்டையை நக்கலடிச்சது.வெவ்வேறை குறுப்பிலை இருந்த பெடியள் ஒரு பெட்டையை லவ் பண்ணினது. பெட்டையை பின் தொடர்ந்து போனது இப்பிடித்தான் சண்டையள்.. சூறிச் பொலிசும் ஆரம்பத்திலை தமிழ் குழு சண்டையளை ஏதோ பெரிய அளவிலை நினைச்சுத்தான் தனிப்படை அமைச்சு வேகமாய் விசாரணை எல்லாம் செய்தவங்கள். பிறகு விசாரிச்சு கொண்டு போனதிலை அவங்களுக்கே வெறுத்துப்போச்சு. இப்பவெல்லாம் தமிழ் பெடியள் சண்டை எண்டு தகவல் போனாலே ஆறுதலாய் ஆடி அசைஞ்சு எல்லாம் முடிஞ்சால் பிறகு வந்து அங்கை காயப்பட்டவையளை ஆஸ்பத்திரிக்கு அனுபிப்போட்டு விசாரணையை தொடங்குவாங்கள்.

பாம்பு குறூப்பிலை சேர்ந்த ரகு தானும் புலியள் இயக்கத்தின்ரை றெயினிங். தவளைப்பாச்சல் நடவடிக்கைக்கு தானும் தவளை மாதிரியே பாய்ஞ்சு பழகின்னனான்.முல்லைத்தீவு முகாமுக்கள்ளை முதலாவதா புகுந்ததுநான்தான் என்று கொழுத்தி விட்ட வாணங்களை பலரும் நம்பி அண்ணாந்து பாத்தனர். அதுகளுக்குள்ளை நடந்த சண்டை ஒண்டிலை ரகு ஒருத்தனை கத்தியாலை குத்திப்போட்டான் குத்து வாங்கினவன் தப்பிட்டான்..குத்துவாங்கின பெடியனுக்கு விசா இல்லை அதோடை அவனும் அடிபாட்டு குறூப் எண்டதாலை அவனும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்லை. அதோடை ரகு கீரோவாகிட்டான். அதுக்குப்பிறகு எந்த சண்டையெண்டாலும் பாம்பு குழு அவனைத்தான் கூப்பிடுவினம்.
.............................................................................................................................................................................................
01.05 1998 ம் ஆண்டு
அன்று மேதினம்.தொழிலாளர் தினம்
இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.

வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.
சிக்காகோ நகரில் கொன்று குவிக்கப்பட்ட தொழிலாளர்களின் நினைவாக அவர்களிற்கு மே மாதத்தில் மலர்கின்ற சிறிய வெள்ளைப்பூக்களால் அஞ்சலி செலுத்து முகவாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் உலகம் முழுவதுமே தொழிலாளர்கள் மே முதலாம் திகதி ஒன்று கூடி ஊர்வலம் நடாத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வில் ஒரு நூற்றாண்டு கடந்தும் மே தினக்கூட்டத்தில் இரத்தக்களரி நடக்கும் இடமாக சுவிஸ் சூறிச் மானிலம் விளங்கியது. அதுவும் ஈழத் தமிழர்களால்.

பல வருடங்களாக சுவிஸ் மக்களாலும் சுவிஸ்வாழ் வேற்றின மக்களாலும் தொழிலாளர் கட்சியின் செங்கொடிகள் ஏந்தி ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் எண்பதுகளின் இறுதியில் சிவப்பு கறுப்பு கலந்த கொடிகளுடன் இணைந்து கொண்டார்கள். டொச்சு .பிறெஞ்சு.இத்தாலி.துருக்கி ஆகிய மொழிகளுடன் "அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் "என்று தமிழிலும் கோசங்கள் கிழம்பியது. இவர்கள் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் இனம் மொழி மதம் இவையனைத்தையும் கடந்து உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வுடன் மற்றைய இனத்தவர்களும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் வேறும் பலர் இணைந்து கொண்டார்கள் அவர்கள் கொடியிலும் சிவப்பு வர்ணம் இருந்தது ஆனால் கோசம் வேறாக இருந்தது ""எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்."" ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என்கிற கோசங்களும். எங்கள் தலைவன் பிரபாகரன் என்கிற கோசமும் மாற்றமடைந்தது ..அடியடா அவனை உதையடா.வெட்டடா.. என்றும் வேறு சில கெட்ட வார்ததைகளாகவும் மாறிப்போனது. எங்கும் இரத்தக்களரி மற்றைய இனத்தவர் திகைத்து நின்றனர். வருடத்தில் ஒரேயொருநாள் நிம்மதியாக இருக்கலாமென நினைத்திருந்த சூறிச் காவல்த்துறையினரிற்கு வேலை வந்து விட்டது. பலரையும் கைது செய்து விசாரித்தனர். அடிபட்டது இலங்கைத்தமிழர்கள்தான் ஆனால் இரண்டு பிரிவு வாக இருக்கின்றனர்அப்பொழுதுதான் அவர்களிற்கு புரிந்தது நாங்கள் தான் முதல்லை ஊர்வலம் நடத்த தொடங்கினாங்கள் அதாலை . அவங்களை ஊர்வலம் நடக்க விடமாட்டம். எண்டனர் ஒரு குறூப். நாங்கள்தான் நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறம் எங்கள் தலைவன்தான் உயர்ந்தவன் எனவே நாங்கள் அவங்களை ஊர்வலம் நடத்த விடமாட்டம் என்றனர் மற்றைய குறூப். இரண்டு குறூப்பையும் விசாரித்த அதிகாரிக்கு தலையை சுத்தியது. தங்கடை நாட்டிலை வாழ வழியில்லையெண்டு இஞ்சை வந்து தஞ்சம் கோரிப்போட்டு எங்கடை நாட்டிலை யாரார் ஊர்வலம் நடத்தலாம் நடத்தக்கூடாது எண்டு இவங்களே தீர்மானிப்பாங்களாம். என்று நினைத்தபடி கைதுகள் தண்டனைகள் தொடர்ந்தது.

ஆனாலும் வருடாவரும் மேதினக்கூட்டத்தில் சண்டையும் தொடர்ந்தது.எண்பதுகளில் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் குறிப்பாக சூறிச் நகரம் புளொட் அமைப்பு மற்றும் புளொட் ஆதரவாளர்களையே அதிகமாகக் கொண்டிருந்தது.புலிகளின் அமைப்பிற்கு முரளி பொறுப்பேற்றபின்னர் அவரின் போச்சாற்றல் மற்றும் நிருவாகத்திறமை என்பன சுவிஸ்தமிழர்களை புலிஆதரவாளர்களாக மாற்றியது.இவருடைய காலத்திலேயே மேதினக் கூட்டத்தில் புலிக்கொடிகளுடனும் பிரபாரனது படங்களுடனும் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட சில தகாத செயற்பாடுகளும் நிதி கேட்டு சிலரை நேரடியாக மிரட்டியதாலும் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது.
அன்று மேதினம் ரகு குழுவினர் ஒரு காரின் டிக்கியில் பேஸ்போல் மட்டைகள் பொலுகள் உடலில் மறைக்கப்பட்ட கத்திகளுடன் தயாரானார்கள். அந்தக் குழுவின் தவைர் குகன் மற்றவர்களிற்கு திட்டத்தை விளங்கப்படுத்தினான் .இதுதான் இவங்களுக்கு கடைசி ஊர்வலம் இண்டைக்கு எப்பிடியும் ரஞ்சனை போடுறது. எல்லாரும் ஒதுங்கிட்டாங்கள் அவன் மட்டும்தான் இப்ப தனியா ஆடுறான் அவனுமில்லாட்டி அடுத்தவருசம் அனைத்து அடக்கு முறையளையும் உடைப்பம் எண்டு கத்த ஒருத்தரும் வரமாட்டாங்கள். பஸ் ஸ்ரான் தாண்டி பார்க் வற இடத்திலை கரை நிப்பாட்டி வைப்பம். நாங்களும் சனத்தோடை ஊர்வலமாய் வந்து காருக்கு கிட்டை நிப்பம் அங்கள் வந்ததும் தொடங்குவம்.

இவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுதே புளொட் ஆதரவாளர்களும் திட்டம் தீட்டினார்கள். அவங்கள் எப்பிடியும் வருவாங்கள் நாங்கள் எங்கடையாக்களோடை போகாமல் அவங்களுக்கு முதல் வெள்ளையளோடை கலந்தபடி வெள்ளையளுக்கு நடுவிலையே போவம். அடிவிழுந்தால் வெள்ளையளிற்கும் சேந்துதான் விழும் அப்பதான் பிரச்சனை பெரிசாகும். புலியள் எண்டால் இப்பிடித்தான் எண்டு எல்லாருக்கும் தெரியவரும். இவர்கள் திட்டம் இப்பிடியிருக்க சூறிச் நகர காவல்த்துறை எப்பிடியும் சிறிலங்கன் அடிபடுவாங்கள் என்று எதிர்பார்த்தபடி தங்களது திட்டத்துடன் ஊசார் நிலையில் நின்றிருந்தார்கள்.

ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது மேளதாளங்கள் பாண்ட வாத்திய இசைகள்.பலமொழிகளில் கோசங்கள்.இவற்றுடன் நட்டுவமேளம் நாதஸ்வர இசையுடன் எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசமும் உரத்து ஒலித்து .ரகு குழுவினர் கார்டிக்கியை திறந்து ஆளிற்கொன்றை கையில் எடுத்தனர்.கொக்கியே விழையாடத் தெரியாத ரகுவின் கையிலும் ஒரு கொக்கி மட்டை.புளொட் கொடி ஏந்தியிருந்தவர்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள் சனங்கள் சிதறி ஓடத் தொடங்க ஊசார் நிலையிலிருந்த காவல்த்துறை செயலில் இறங்கியது.
ரகு ஒரு மாதகாலம் கவலில் வைக்கப்பட்டு அவனிற்கான அகதி அந்தஸ்த்து கோரலும் நிராகரிக்கப்பட்டு பதினைந்து நாட்களில் சுவிஸ் நாட்டை விட்டு வெறியேறிவிடவேண்டும் அதன் பின்னரும் சுவிசில் இருந்தால் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவான் என்று காவல்த்துறை எச்சரித்து விடுவித்திருந்தது.
சுவிசில் ஜெனிவா ஊடாக பிரான்ஸ் நோக்கி போய்க்கொண்டிருந்த கார் ஒன்றில் ரகு அமர்ந்திருந்தான்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
20.02.2000 ஆண்டு. பாரிஸ்
மோகனிற்கு நிரந்தரமாக உணவு விடுதியென்றில் வேலை கிடைத்துவிட்டது. பாரிஸ் 20 ல் ஸ்ருடியோ(சிறியஅறை)ஒன்றையும் எடுத்து தனியாகவே தங்கியிருந்தான்.வெளிநாடு வந்த கடனை அடைப்பதற்காக பெரிய சீட்டும் ஒண்டு போட்டிருந்தான். அன்று மாலை வேலையால் வந்தவன் அவசரமாக தமிழ் தொலைக்காட்சியை போட்டான் காரணம் வன்னியில் ஓயத அலைகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த நேரம் அது. எனவே வேலையிலேயே மோகனிற்கு கவனம் போகவில்லை ஊரிலை என்ன நடக்கிறது புலிகள் எங்கையெங்கை பிடிச்சிட்டினம் எந்தப்பக்கமாய் முன்னேறிக்கொண்டு போகினம் என்று அறியிற ஆவல்.இடைக்கிடை கைத்தெலைபேசியிலை தெரிஞ்சவர்களிடமெல்லாம் புதினம் கேட்டுக்கொண்டே வேலையை செய்துகொண்டிருந்தான். தமிழ் தொலைக்காட்சியில் விசேட செய்திகளில் புலிகள் ஆனையிறவுப் பகுதியை அண்டிபகுதிவரை முன்னேறி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும். ஆனையிறவுத்தளம் விரைவில் வீழலாமென எதிர்பாக்கப்படுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லை ஆய்வாளர் வல்லவன் கூட தொலைபேசியூடாக வந்து புலிகள் ஆனையிறவை எப்படித்தாக்குகிறார்கள் என்னென்ன வியூகத்தில் தாக்குகின்றார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.உவர் வல்லவன் ஆயிறதிலை சரியான கெட்டிக்காரன்.அரசியல்.. இராணுவத்தாக்குதல்..கலாச்சாரம் எண்டு என்ன கிடைச்சாலும் சப்பி சக்கையாக்கி துப்பிப் போடுவார். அதாலையே அவரை சக்கை லைக்கை லா வல்லவன் எண்டுதான் எல்லாரும் சொல்லுறவை.

மோகனிற்கு ஒரே புளுகம் எப்பிடியும் ஆனையிறவை பிடிச்சிடுவாங்கள்.என்ரை தங்கச்சியும் ஏதாவது ஒருஇடத்திலை நிண்டு அடிபட்டுக்கொண்டிருப்பாள்.கடவுளே ஒரு கெடுதியான செய்தியும் வரக்கூடாது எண்டு சுவரில் மாட்டியிருந்த கலண்டர் பிள்ளையாரை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டான். வீட்டு அழைப்பு மணி அடிச்சது எடுத்து யாரது எண்டான். நான்தான் உதயன் .....
உதயன் பாரிசில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் ஒருவன்.அவன் ஒரு உணவுவிடுதியில்தான் வேவை செய்கிறான் வேலை ஓய்வு நேரம் மற்றும் லீவுநாள் எல்லாம் இயக்கத்தின்ரை பிரசுங்களை கொண்டு திரிந்து விக்கிறது.நிதி சேகரிக்கிறதுதான் இவனது இரண்டாவது வேலை . மெல்லிய கறுத்த உருவம் முன் நெற்றிவழுக்கை தோளில் தொங்கும் பை அது நிறைய புலிகள் அமைப்பின் பிரசுரங்கள் சி டிக்கள் புத்தகங்கள். ஒரு கணக்கு கொப்பி தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அலைவான். இயக்கத்துக்கு ஜம்பது ரூபாய் தருவதாக சொல்லி விட்டு ஜம்பது தரம் அலைய வைத்தாலும் சினக்காமல் சிரித்தபடியே "வணக்கம் இண்டைக்காவது தருவியளோ இல்லாட்டி இன்னொரு நாளைக்கு வரவோ" எண்டுதான் கேட்பான். எங்கை தமிழாக்கள் இருந்தாலும் மணந்து பிடித்து அவையளின்ரை வீட்டு அழைப்பு மணியை அடித்துவிடுவான். புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இயக்கத்தை வெறுப்பவர்கள் கூட ஆரம்பத்தில் அவனை திட்டி அனுப்பினாலும் பிறகு உதயனை பார்த்து பரிதாபப் பட்டு பணம் குடுத்திருக்கினம். காரணம் அவனின்ரை கதை அணுகு முறை அப்பிடி.
மோகன் கதைவைத் திறந்துவிட உள்ளே வந்த உதயன்.

என்ன இண்டைக்கு லீவுதானே

இல்லை ஒருத்தனுக்கு சுகமில்லையெண்டு காத்தாலை வேலைக்கு கூப்பிட்டாங்கள் போட்டு இப்பதான் வந்தனான்.இந்தாங்கோ உங்கடை காசு எடுத்து வைச்சிருக்கிறன்.

செய்தி பாக்கிறியள் போலை எப்படி அடி ..இதுதான் கடைசி அடியாய் இருக்கும் ..

உண்ணானை சொல்லுறன் பெரிய சந்தோசம். ஆனால் என்னமாதிரி ஆனையிறவு விழுமோ??

என்ன இப்பிடி கேட்டிட்டியள் உள்ளை இறங்கி நிக்கிறது ஆர்??பால்ராச் அண்ணையல்லோ.விழாமல் எங்கை போகப்போகுது.

அவரைபத்தி கேள்விப்பட்டிருக்கிறன் ஆள் பெரிய விண்ணன் தானாம். ஆனையிறவு விழவேணும் அதுதான் என்ரை ஆசை.

இப்ப உள்ள நிலைமையிலை நிதி கொஞ்சம் கூடுதலாய் தேவைப்படுதாம் அதலை அவசரகால நிதி சேகரிக்கிறம் குறைஞ்ச தொகை ஆயிரம் யுரோ கேக்கிறம் ஆனால் அது குலுக்கல் முறையிலை திருப்பித் தருவம்.

இஞ்சை பாருங்கோ உதயன் அவசரகால நிதி அவசரமில்லாத நிதி எண்டெல்லாம் என்னட்டை கேக்ககூடாது . உங்களுக்கு ஆரம்பத்திலையே சொல்லியிருக்கிறன் எனக்கு வந்த கடன் இருக்கு. அதைவிட எனக்கொரு கனவு இருக்கு கல்வீடு கட்டுறது. என்ரை தங்கச்சியும் இயக்கத்திலைதான் இருக்கிறாள்.என்ரை செலவுகளையும் சமாளிச்சுதான் ஒரு நாளைக்கு இரண்டு யூரோ எண்டு சேத்து உங்களுக்கு மாதம் அறுபது யூரோ தாறன்.அதைவிட சிடியள் புத்தகங்கள் கலண்டர் வாங்கிறன் இவ்வளவுதான் என்னாலை ஏலும்.இந்தாங்கோ அறுபது யூரோ.

இயக்கம் ஆனையிறவு வரைக்கும் போயிட்டுது கூடுதலாய் ஒரு ஜம்பது யூரேவை குடுக்கலாமா எண்டு யேசித்தாலும். எதுக்கும் ஆனையிறவு விழட்டும் அடுத்தரம் சேத்து குடுக்கலாம் எண்டு நினைத்தபடி காசை நீட்டினான்.
உதயன் கணக்கு கொப்பியை எடுத்து மேகன் அறுபது யூரோ எண்டு வரவு வைத்தவன் ""சரி கேட்டுப்பாத்தன் வசதி இருந்தால் முயற்சி பண்ணி பாருங்கோ. சந்திப்பம்."
உதயன் போய்விட்டான்.


லாசப்பல் பக்கம் போனால் இன்னமும் செய்தியள் ஏதாவது கிடைக்கும். வரேக்குள்ளை ஒரு பங்காட்டு இறைச்சியும் ஒரு சப்பட்டையும் வாங்கி கொண்டந்து சமைச்சிட்டு சப்பட்டையை அடிச்சிட்டு சாப்பிட்டு ஒரு படம் பாக்கலாம் எண்டு நினைச்சபடி வெளிக்கிட்டான்.என்ன தான் ரி வி ..றேடியோவிலை செய்தி கேட்டாலும் எங்கடையாக்களிட்டை லா சப்பலிலை செய்தி கேக்கிறமாதிரி வராது.இயக்கம் ஒரு ராங்கை அடிச்சாலும் அதை பத்தாலை பெருக்கி பத்து ராங்க் அடிச்சிட்டாங்களாம் எண்டுவாங்கள். அதுவும் ஒருத்தன் தானே நேரை அடிச்சமாதிரி அக்சனோடை சொல்லுவான். அது பொய் எண்டு தெரிஞ்சாலும் கேக்க ஒரு திறிலாத்தான் இருக்கும்.........
......................................................................................................................................................................................
15.03.2009ம் ஆண்டு பாரிஸ் பிரான்ஸ் குற்றத்தடுப்பு பிரிவு பாரிஸ் அலுவலகம்.
பாரிசின் குற்றத்தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜோன் பியரின் அலுவலகம். ஜேன்பியர் ஜரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் இரண்டு தமிழ் தொலைக்காட்சிகளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ஜேன் பியரிற்கு தற்சமயம் முக்கியமானதொரு நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அது ஈழத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் வன்முறைகள் நடக்காமல் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும். இதுதான் அவனது இறுதி நடவடிக்கை இந்த நடவடிக்கை முடிந்ததுதம் அவன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போகிறான். இதே இவன் காவல் துறையில் இருந்துவிட்டு பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவின் சாதாரண அதிகாரியாக 1988 ம் ஆண்டு கடைமையில் இணைந்த பொழுதும் ஒரு ஈழத் தமிழரை புலன் விசாரணை செய்ததுடன் ஆரம்பித்திருந்தான். 88 ம் ஆண்டு இறுதியில் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் ஒரு தமிழரின் காரை எல்லைக்காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்.

காரில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக்கருவிகள் மற்றும் ஒரு வானொலி இயக்குவதற்கான கருவிகளும் இருந்தது உடனடியாக அவரை கைது செய்ததோடு பொருட்களையும் பறிமுதல்செய்த எல்லைக்காவல் காவல்துறையினர் பரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிற்கு தகவல் அனுப்பியிருந்தனர். பாரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டினை உடைத்து சோதனை செய்தபொழுது மேலும் சில தகவல் தொடர்பு கருவிகளுடன் புலிகள் இயக்கத்தின் பத்திரிகைகள் பிரசுரங்கள் என்பனவும் அகப்பட்டது. எல்லையில் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளிற்காக பாரிசிற்கு கொண்டுவரப்பட்டார். புதிதாக குற்றப்புலனாய்வு பிரிவில் பதவிற்றிருந்த ஜேன்பியர் அவரை விசாரிக்கிறான்.அந்தப் பொருட்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்திற்காக பெல்யியம்புறுக்செல்லில் சபீனா விமானத்தில் ஓற்றப்பட்டு அவனும் அதனுடன் பயணிக்கவேண்டும் இடையில் கைது செய்யப்பட்டுவிட்டான். அந்த விசாரணைகளின் போதுதான் ஜேன் பியரிற்கு சிறிலங்கா தீவில் புலிகள் இயக்கம் பற்றிய விபரங்கள் தெரியவருகின்றது. ஆனால் அவனது விசாரணைகள் எல்லாம் கைப்பற்றப் பட்ட பொருட்களால் பிரான்ஸ் நாட்டிற்கு ஏதாவது கெடுதல்கள் சதி வேலைகள் உண்டா என்பதுதான். அப்படி எதுவும் இல்லை அதனால் கைது செய்யப்பட்டவர் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விடுதலை செய்யப் படுகிறார்.அவரை விடுதலை செய்தாலும் தன்னுடைய தொழில் ரீதியாக புலிகள் இயக்கம் அதன் செயற்பாடுகள் முக்கியமாக பிரான்சில் அவர்களது செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் அதனை கண்காணிக்கவும் விடுதலை செய்யப்பட்டவருடன் தனிப்பட்ட நட்பை பேணுகிறான்.


அதனால் நிறையவே ஈழத்தமிழர் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்கிறான். அதன்பின்னர் இலங்கையில் இந்தியப் படைகாலத்தில் புலிகள் இந்தியப்படை மோதல்கள் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அனிதா பிரதாப் சி என் என் செய்தி சேவைக்காக பிரபாகரன் பற்றி தயாரித்திருந்த சிறு விவரணம் வெளியாகியிருந்தது அதனை பிரான்சின் பிரபல பத்திரிகையான. லு மோந் பத்திரிகை பிரபாகனின் படத்துடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தனர்.பிரபாகரனைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஜேன்பியரிற்கு அந்தக் கட்டுரை அவரின் மீது ஒரு ஈர்ப்பை கொடுத்திருந்தது. காரணம் இந்தியப்படையின் ஆளணி ஆயத பலம் என்பதும் புலிகளின் பலம் எனபதும் ஊகிக்கக்கூடியதுதான்.. கட்டுரையில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தினை வெட்டியெடுத்து அதை சிறிய பிறேமில் போட்டு தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களின் படங்களுடன் அலுவலக மேசையில் வைத்திருந்தான். அதன் பிறகு எத்ததையோ வடிவங்களில் பிரபாகரனின் படங்கள் வெளிவந்திருந்த போதும் அவன் அந்தப் படத்தை மாற்றவில்லை அதுமட்டும்தான் அவனை ஈர்ந்திருந்தது. அதே நேரம் அவனிடம் விசாரணைக்கு வரும் தமிழர்களிடமெல்லாம் பிரபாகரனின் படத்தைக்காட்டி இவரைத் தெரியுமா. இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லத் தவறுவதில்லை..

அவன் அப்படி சொல்லும் பேதெல்லாம் விசாரிக்கப்படும் தமிழர் இவன் பிரபாகரனை தனக்கு பிடிக்கும் எண்டு சொல்லி தானும் எங்களுக்கு சார்பானவன் எண்டு காட்டி எங்களிட்டை உண்மையை கறக்கப் பாக்கிறானோ??எண்டு நினைச்சவையளும் உண்டு அதே நேரம் பிரபாகனை தெரியுமெண்டு சொன்னால் எப்பிடி தெரியும் எங்கை தெரியுமெண்டு கேள்வி கேட்டு என்னையும் புலி எண்டு உள்ளை தூக்கி போட்டுவானோ எண்டு பயந்து தெரியாது எண்டு சொன்னவையளும் உண்டு.

Photobucket

தெரியாது எண்டு யாராவது சொல்லும் போதெல்லாம் தலையாட்டி சிரிப்பான். தொடர்ச்சியாக தமிழர்களுடன் பழகியதில் கொஞ்சம் தமிழும் கொச்சையாய் கதைக்கப் பழகியிருந்தான் விசாரணை செய்பவர்களை வணக்கம் சுகமாக இருக்கிறீங்களா என தமிழில் கேட்டபடி விசாரணையை தொடங்குவான். அதுவரை அவனை தமிழில் திட்டிக்கொண்டிருந்தவர்கள் அவனது தமிழை கேட்டதும் திடுக்கிட்டு நான் திட்டினது எல்லாம் விழங்கியிருக்குமோ என நினைச்சு பல தடைவை மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் உண்டு .அதே நேரம் புலிகள் அமைப்பின் பிரான்ஸ் கட்டமைப்பில் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் யார் இறங்கினாலும் அவன் தன் கடைமை தவறியது கிடையாது கைது செய்து விசாரணை செய்து தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான். அதுமட்டுமில்லை பாரிசில் இயங்கிய அனைத்து தமிழ் அடிபாட்டு குறூப்புகளின் பெயர்கள் அதன் உறுப்பினர்களின் விபரங்கள் எல்லாமே அவனிற்கு அத்துபடி. அவைகளில் பலரிற்கு தண்டனை வாங்கிக் கொடுத்திரக்கிறான். பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் கைதுகளும் இவன் தலைமையிலான குழுவே தகவல்களை திரட்டி விசாரணைகளையும் செய்திருந்தனர்..இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து அவனது இறுதி நடவடிக்கையும் ஈழத்தமிழர் பற்றியதுதான். காரணம் ஈழத்தமிழர்கள் பற்றிய தகவல்கள் .அதுபற்றிய பரிச்சயமும் அவனிற்கு அதிகமாக இருந்ததால் அவனிடமே அந்த பொறுப்பு ஓப்படைக்கபட் பட்டிருந்தது.

ஜேன் பியர். அலுவலகத்தினுள் தேவன் நுளைந்தான். தேவன் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர். பாரிஸ் நகரில் குற்றச்செயல்களிற்காக கைது செய்யப்படும் தமிழர்களின் காவல்த்துறை விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர்களிற்கு பிறெஞ்சு மொழியறிவு இல்லாதிருந்தால் மொழிபெயர்ப்பிற்காக காவல்த்துறை அழைப்பவர்களில் தேவனும் ஒருத்தன்.

தேவனிற்கு கொடுத்து வரவேற்ற ஜேன் பியர்.

வணக்கம் தேவன் மீண்டும் உங்ளது சேவை எங்களிற்கு தேவை தற்சமயம் நடக்கும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டங்களின் பொழுது யாராவது உணரச்சி வயப்பட்டு வன்முறைகளில் இறங்கலாம்..அல்லது இந் ஆர்ப்பாட்டங்களின் வன்முறைக் குழுக்கள் புகுந்து தமக்கு சாதகமாக்கி வன்முறையை துண்டலாம். அல்லது குழப்புவதற்காகவே வேறு சிலரும் முயற்சிக்கலாம். எது எப்படியோ பொது மக்களோ சொத்துக்களோ பாதிக்கப்படக்கூடாது அதுதான் எனது நோக்கம் . அதற்கான நான் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒரு பாண்டிச்சேரி தமிழரும் உள்ளார். ஆனால் அவரிற்கு உங்கள் வித்தியாசமான உச்சரிப்புக்கள் புரிவதில்லை. இந்த நடவடிக்கை முடியும் வரை எம்முடன் நீங்கள் ஒத்துளைக்கவேண்டும் முக்கியமாக ..பல தொலைபேசி உரையாடல்கள் உடனுக்குடன் எமக்கு மொழிபெயரக்கப்படவேண்டும்.கொஞ்சம் அதிகமான வேலை சிரமம் தருவதற்கு மன்னிக்கவேண்டும்.

பரவாயில்லை எனது தொழில் அதுதானே இதில் சிரமம் பாக்க முடியாதே.

நல்லது இந்த தமிழ் தொலைக்காட்சியில் எங்கெங்கு ஆர்பாட்டங்கள் நடைபெறப்போகின்றது எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது என்கிற விபரங்கள் உடனுக்குடன் அறிவித்தல் கொடுத்தபடி இருக்கிறார்கள் அவைகளை எனக்கு குறிப்பெடுத்துத்தாருங்கள். உங்களிற்கு சிரமம் இல்லாமல் பணி செய்ய அனைத்து வசதிகளுடனும் ஒரு அறை ஒழுங்கு செய்துள்ளேன் உங்கள் பணிகளை உடைனேயே தொடங்கலாம் நன்றி
தேவன் தமிழ் தொலைக்காட்சிகனை பார்த்து குறிப்பெடுத்தபடியே பதியப்பட்டிருந்த தொ.பே அழைப்புக்களை மொழி மாற்றீடு செய்து பதியத் தொடங்கினான். தமிழ் தொலைக்காட்சியில்.... ""எல்லாரும் வீதிங்கு வாங்கோ எங்கடை சனம் சாகுதுகள் எல்லாரும் போராடவேணும். தயவுசெய்து றோட்டிலை இறங்குங்கோ"" என்று மீனாட்சி அழைத்தபடி இருந்தான்.
......................................................................................................................................................................................
20.03.2009
பிரான்சிற்கு வந்து சேர்ந்த ரகு பிரான்சில் அகதி தஞ்சம் கோரியிருந்தான் அது நிராகரிக்காப்பட்டு மீள் பரிசீலனைக்காக அனுப்பிவைத்திருந்தான் அதுமட்டுமல்ல அவன் கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான் என நினைத்து அதே நேரம் விசாவும் அவனுக்கு பிரச்சனையாய் இருந்தபடியால் நல்ல விசா உள்ள பெட்டை ஒண்டையும் அவர்களது சொந்தத்தில் தேடி மீனாச்சி கலியாணம் செய்து வைத்து விட்டிருந்தாள்.ஆனாலும் ரகுவிற்கு சும்மாயிருக்க முடியவில்லை .பாரிஸ் லாசப்பல் பக்கம் போய் நட்புகளை பிடிக்கத் தொடங்கினான். லா சப்பலிலும். முக்காப்புலா. மின்னல்.வெண்ணிலா .விழுதுகள் .என பல குழுக்கள் இருந்தது. ரகு முக்கப்புலா குழுவில் இணைந்து அடிபாடுகளில் இறங்கியவன் முக்காப்புலா அமைப்பின் தலைவன் ஒரு கொலைகேசில் உள்ளேபோக இப்பொழுது ரகுதான் அதற்கு தலைவன்.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் தனது குழுவோடு புலிக்கொடியோடு முன்னிற்கு நின்று கத்தத் தொடங்கியிருந்தான்.

ஜேன் பியரின் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் சாதாரண உடையில் உலாவத் தொடங்கியிருந்ததோடு அந்தப் பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் இரகசியக் கமாறாக்களையும் பொருத்தி கண்காணிக்கத் தொங்கியிருந்தனர்.

லண்டனில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தது. ஊர்வலங்களில் கலந்து கொள்ளாமல் அதுவரை சும்மாயிருந்த தமிழர்களையும் அது உலுப்பி விட்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் வலுப்பெற்றது. அப்பொழுது லண்டன் நகரை இணைக்கும் பிரதான மேம்பாலம் ஒன்றினை இளையோர்கள் மறித்து போராட்டத்தை நடத்தினார்கள்.அது பல இங்கிலாந்து ஊடகங்களின் பார்வைகளையும் திருப்பியிருந்தது.அதையடுத்து பாரிசிலும் தமிழர்கள் லா சப்பல் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பொலிசார் குவிக்கபட்டனர்..ரகுவும் புலிக்கொடி ஒன்றைமுதுகில் போட்டு சுப்பர் மானைப்போல கட்டியபடி தன்னுடைய குழுவினருடன் வந்தவன். அங்கு கிடந்த குப்பை வண்டிகளை இழுத்து வீதியில் தள்ளி தீவைத்தவன் அங்கிருந்து வேகமாக இன்னொரு குறுக்கு வீதியில் புகுந்தான். வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டது. கார்களின் கோண் சத்தம் தீயணைப்பு வண்டியின் சைரன் போலிஸ் வாகனங்களின் சைரன் என ஒரே இரைச்சலாய் மாறியது. அந்த வழியால் வந்து மாட்டுப்பட்டு நின்ற கார்களில் ஒருத்தி திட்டியபடியே கோணை அடிக்க அவளது காரின் பக்கக் கண்ணாடியை சலோப் என கத்தியபடி ஓங்கி அடித்தான் அது சிதறியது

அத்தோடு நிக்காமல் வரிசையாக சில கார்களிற்கும் அடித்துக்கொண்டே போனான். அப்பொழுது அந்தப்: பக்கத்தால் வந்து கொண்டிருந்த 31 ம் இலக்க பஸ் போக்கு வரத்து இறுகியதில் லா சப்பல் பகுதியில் நின்றுவிட அதிலிருந்த மக்கள் இறக்கிப் போய் கொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்கு வந்த ரகு குழுவினர் அந்த பஸ்சையும் அடித்து நொருக்கிவிட்டு எங்கள் தலைவன் பிரபாகன் என்று கத்தியபடி போய்கொண்டிருந்தனர் . இவையனைத்தையும் போலிசாரின் இரகசிய கமராக்கள் பதிந்து கொண்டிருந்தன. ஜேன்பியரிற்கு தகவல்கள் உடனுக்குடன் போய்க்கொண்டிருந்தது முடிந்தளவு வன்முறையை கட்டுப்படுத்துங்கள் யாரையும் உடனே கைது செய்யவேண்டாம் தேவைப்பட்டால் கண்ணீர் புகையை பாவிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தான்.


பாரிசில் நிலைமைகள் இப்படியிருக்க இலண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனை எழுப்புவதற்காக இலண்டன் புலிகளின் பணியக பொறுப்பாளர்கள் திட்டமிட்டனர் பரமேஸ்வரனிற்கு விசா இல்லை அவன் விசா எடுக்கிறதுக்காகத்தான் உண்ணாவிதரம் இருக்கிறான் அவனை எழுப்பிப் போட்டு எங்கடையாக்கள் ஒராளை இருத்தப்போறம் என்று தங்கள் பொறுப்பாளரிற்கு தகவல் அனுப்பியிருந்தாரகள். அந்தத் தகவல் வெளியே கசிந்ததில் வேறு பலர் பரமேஸ்வரனின் போராட்டத்தை குழப்பவேண்டாம் அதை மாத்தினால் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது பேல இருக்கும் அவனுக்கு சனத்தின்ரை ஆதரவும் இருக்கு . அதையும் இழக்கவேண்டி வரும் எண்டு நடேசனிற்கு செய்தி அனுப்பி விட்டிருந்தனர். எல்லாத்தையுமே நாங்கள்தான் செய்யவேணுமெண்டு அடம்பிடிக்காதேங்கோ சனத்தை அவங்கடை பாட்டிலை விரும்பின படி செய்யவிடுங்கோ எண்டு நடேசன் கண்டிப்பாக சொல்லிவிட்டிருந்தார்.

அதே போலத்தான் சுவிசிலும் இளையோர்கள் போராட்டம் நடத்தவிடாமல் சுவிஸ் பணியககம் குறப்பாக கிருஸ்ணா அம்பலவாணர் போன்றவர்கள் தடுத்தனர். அப்பொழுது இசுவிஸ்ளையோர் அமைப்பிற்கு பொறுப்பாக குரு என்பவர் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிஐந்தார். இளையோரை போராட்டம் நடாத்தவிடாமல் தடுக்கிறார்கள் என்கிற குருவின் வாக்கு முலம் பதியப்பட்டு நடேசனிற்கு போட்டுக்காட்டப்பட்டது.. பின்னர் நடேசனின் தலையீட்டால் இளையோர் அமைப்பு போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்பட்டனர். அதுக்கு பின்னர்தான் அம்பலவாணர் திடீரென ஜ.நா சபைக்கு முன்னாலை சாகும்வரை உண்ணாவிதரம் என்று அறிவித்து விட்டு பின்னர் பேர்ண் வெளிநாட்டமைச்சகத்திற்கு முன்னால் என்று செய்தி வெளியாகியிருந்ததுபேர்ண்முருகன் கோயில் உண்ணாவிதரத்தை ஆரம்பித்தார். சுவிஸ் ஜெனிவாவில் இருந்த ஜ.நா சபையை பேர்ண் முருகன் கோயிலுக்கு மாத்திட்டாங்களா என்று பலரும் சந்தேகப்பட்டனர். உண்ணாவிதரம் தொடங்கிய மூன்றாவது நாள் அவர் தனது மனிசிக்கு போனடிச்சு எடியேய் என்னாலை முடியேல்லை போலிசுக்கு போனடி என்று சொல்லி பிறகு அவரின்ரை மனிசி என்ரை மனுசன் சாகப் போறார் காப்பாத்துங்கோ எண்டு போலிசுக்கு போனடிக்க ..போலிஸ் வந்து அவரை அப்பிடியே கட்டிக்கொண்டு போய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு பேய்விட்டனர்.அதே குரு பின்னர் இளையோரமைப்பையும் தவறாக வழிநடத்தி பின்னர் சுவிசில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்ததையும் குளறுபடியாக்கிக் கொண்டிருக்கிறார் தற்சமயம் வரை.

Photobucket

25.03.2009
பிரான்சில் ஒருங்கிணைப்பு குழுவினர் கைது செய்யப்பட்ட பின்னர் சில மாதங்கள் பிரான்சில் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை பலர் பயம் காரணமாக பொறுப்பெடுக்க முன்வரவில்லை அதே நேரத்தில் தான் டென்மார்க்கில் இருந்து மயூரன் விடுதலை என்கிற பெரில் பிரான்ஸ் பொறுப்பை ஏற்கிறார். அவர் பயமில்லாமல் தொடர்ந்தும் வேலைகள் செய்தவர்களிற்கு ஒரு கூட்டத்தை வைத்தார் உதயனும் அதில் இருந்தான். நாட்டிலை இப்ப இருக்கிற சிக்கலான நிலைமை உங்கள் எல்லாருக்கும் தெரியும் இப்ப எங்கடை பெரிய பிரச்சனையே நிதிதான் பெரும்தொகை நிதி தேவைப்படுது அந்த நிதி உடைனை திரட்டினால்தான் தாயக்திலை எங்கடை மண்ணையும் மக்களையும் காப்பாத்தலாம்.எனவே நீங்கள் சாதாரணமாய் குறைஞ்சது இரண்டாயிரம் யுரோ ஒவ்வொருத்தரிட்டையும் வாங்கவேணும். ஆதரவாளர்களிட்டை எவ்வளவு வங்கிகளிலை கடன் எடுத்துத் தர இயலுமோ எடுத்துத் தரச்சொல்லி சொல்லுங்கோ. கடைக்காரரிட்டை குறைஞ்சது ஜயாயிரம் யுரோ கேளுங்கோ உடைனை இதை செய்யவேணும் எண்டான்.
மாவிலாறிலை தொடங்கி மடு பிறகு கிளிநெச்சிவரை போய் நிக்கிது இந்த நேரம் சனங்களும் கன கேள்வி எங்களை கேக்கினம் பதில் சொல்லத் தெரியேல்லை அதோடை முதல் பொறுப்பாளர் பிடிபட்டா பிறகு யார் இப்ப பொறுப்பு எண்டும் சனத்துக்கு தெரியாது அதாலை நீங்கள் பொதுவா ஒரு கூட்டம் வைக்கவேணும் என்று உதயன் தலையை சொறிந்தான்.
கட்டாயம் அடுத்த ஞாயிற்று கிழைமை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சவையளை வரச்சொல்லுங்கோ நான் கதைக்கிறன் ஆனால் புது பொறுப்பாளர் நாட்டிலை இருந்து வந்திருக்கிறார் எண்டு அவையளிட்டை சொல்லுங்கோ.
நீங்கள் டென்மார்க்கிலை இருந்தல்லோ வந்தனியள்.
ஓம் ஆனால் நாட்டிலை இருந்து வந்தவர் எண்டால்தான் என்ரை சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும் அப்பதான் நான் சொல்லுறதை அவையள் நம்புவினம் அதாலை நாட்டிலை இருந்து வந்தவர் எண்டே சொல்லுங்கோ.

உதயன் மேகனின் வீட்டிற்கு போயிருந்தான் வீட்டு சுவரில் மோகனின் தங்கையின் படம் பெரிதாக்கப்பட்டு மாலை போடப் பட்டிருந்தது. அதைபாத்ததும் உதயனிற்கு இரண்டாயிரம் யுரோ கேக்க தயக்மாய் இருந்தது.
உதயனை வரவேற்ற மோகன். கிளிநொச்சி சண்டையிலை செத்திட்டாளாம் பொடிகூட எடுக்கேல்லையாம் இப்பதான் போனகிழைமை எனக்கு அம்மா முல்லைத்தீவிலை நிண்டு போனடிச்சவா .ஒரு கொமினிக்கேசன்தான் இயங்குதாம் அதுக்கு சனம் வரிசையிலை நிக்குதாம் அதுவும் எப்ப போகும் எண்டு தெரியாது எண்டார். அதோடை எங்கடை கடைசியையும் பாப்பா குறூப் வந்து பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் எண்டு சொல்லியழுதா என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. என்ன நடக்கும் இயக்கம் திருப்பி அடிக்குமோ இல்லாட்டி....ஏதாவது தெரியுமேமோகன்??

உண்மையை சொன்னால் எனக்கும் ஒண்டும் தெரியாது புதிசா ஒரு பொறுப்பாளர் நாட்டிலையிருந்து வந்திருக்கிறார் வாற ஞாயிற்று கிழைமை கூட்டம் வைக்கிறார் கட்டாயம் வாங்கோ அதோடை அவசரகால நிதியும் சேர்க்கிறம் ஒராளிட்டை இரண்டாயிரம் வாங்கிறம் யோசியுங்கோ என்றுவிட்டு உதயன் விடைபெற்றான்.

ஞாயிற்றுக் கிழைமை அந்தப் பாடசாலையில் கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது விடுதலை பேசத்தொடங்கினார்.
எங்கள் பலம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் தந்திரோபயமாகத்தான் பின்வாங்கியுள்ளோம். இந்த பின்வாங்கல் தற்காலிகமானதுதான். ஆனால் இப்பொழுது எமது மக்களிற்கான வாழ்வா சாவா என்கிற நிலைமை இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்கவேண்டுமானால். எம்மால் முடிந்தளவு நிதியை வழங்கினால் அங்கு கள நிலைமைகள் மாறும் இல்லாவிடில் எதிரி எம்மை அழித்துவிடுவான். எனவே விரைவாக உங்கள் பங்களிப்புக்களை செய்யுங்கள்.
.............................................................................................................................................................................................
மறுநாள் மேகன் உதயனிற்கு போனடித்து இரண்டாயிரம் யுரோ றெடி பண்ணிவைச்சிருக்கிறன் எங்கை சந்திக்கலாம்.
கொஞ்ச நேரத்திலை லா சப்பல் புட்டுக்கடைக்கு வருவன் அங்கை வாங்கோ.

உதயன் விடுதலைக்கு போனடிச்சான் உங்களிட்டை சேத்த காசையும் கணக்குகளும் தரவேணும். அதோடை இனி நான் நிதி சேகரிக்கிற வேலையளையும் விடப்போறன். இனி என்னாலை ஏலாது.மனச்சாட்சி இடம் குடுக்குதில்லை.
உதயன் விடுதலையிடம் பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைத்தவன் அவனது தோள்பையில் மிச்சமிருந்த பிரசுரங்கள் சி. டி க்களையும் எடுத்து கொடுத்துவிட்டு விடைபெற்றவன். பத்து வருடங்களிற்கு மேலாக அவனது தோளில் தொங்கிய அந்த தோல்பையை இனி எனக்கு தேவைப்படாது என்று சொல்லியபடியே வீதியோரத்தில் கிடந்த குப்பை வாளியில் எறிந்து விட்டு லா சப்பல் இரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். தோளில் பை இல்லாத உதயனை பலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் அடையாளமே கண்டுகொள்ளவில்லை.

அன்று மோகன் வேலைக்கு போகும் பொழுது கையில் பெரியதொரு போர்வையுடன் போயிருந்தான். அவனது முதலாளி அவனிடம்.

மோகன் என்ன போர்வையோடை வருகிறாய் வீடு இல்லையா றோட்டிலையா படுக்கப் போகிறாய். ..

இல்லை எங்கடை நாட்டிலை நடக்கிற படுகொலைகளை எல்லாருக்கும் தெரியப்படுத்த எங்கடையாக்கள் நாலுபேர் ஈபிள் ரவருக்கு முன்னாலை உண்ணாவிதரம் இருக்கினம்.
வேலை முடிய அவையளோடை நானும் போய் விடியும் வரை இருக்கப் போறன். சரியான குளிர் அதுதான் போரவையை கொண்டந்தனான்..


சரி சாப்பிடாமல் இருந்தால் எல்லாருக்கும் உங்கடை பிரச்சனை தெரிந்திடுமா??


அது ... அது ...ஏன் சாப்பிடாமல் இருக்கினம் என்ன காரணம் எண்டு எல்லாரும் கேட்பினம் தானே. அப்ப நாங்கள் விசயத்தை சொல்லுவம்.


அதையே சாப்பிட்டிட்டு சாதாரணமாய் நின்று சொன்னாலும் கேட்பினம்தானே??

அதுகள் எங்கடை போராட்ட வடிவம் உங்களுக்கு புரியாது


உங்கடை போராட்ட வடிவம் எங்களிற்கு புரியாது என்கிறாய் பிறகு அந்த வடிவத்தாலையே புரியவைக்கப்போறம் என்கிறார் முரண்பாடாக உள்ளதே


மோகனிற்கு எரிச்சலாக வந்தது ஆனாலும் அக்கிக் கொண்டு சாப்பிடாமல் இருந்து தங்களை வத்தி போராட்டத்தை நடத்தினால் தான் எங்கடையாக்கள் எல்லாரும் தாங்களும் வீதியிலை இறங்கி போராட முன்வருவினம்.

கொஞ்சம் பொறு பிரச்சனை உங்கடை நாட்டிலைதானே.

ஓம்.

பாதிக்கபடுகிறது உங்களது இனம் தானே ??

ஓம்.

அப்ப இங்கை வாழுகிற உங்கடை இன மக்கள் எல்லாரும் தாங்களாய் வீதிக்கு வருவினம் தானே போராடுவதற்கு.. பிறகெற்கு சாப்பிடாமல் கஸ்ரப்பட்டு அவையளை வரவழைக்கவேணும்.

மோகனிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை அது..வந்து....அப்பிடித்தான் ..ஆனால் எனக்கு இந்த சனி ஞாயிறு லீவும் வேணும் நான் பெல்ஜியம் ஜ.நா சபைக்கு முன்னாலை நடக்கப்போற ஆர்ப்பாட்டத்துக்கு போகவேணும்.

அது இருக்கட்டும்இப்ப பொதுவாகவே பெல்ஜியம் ஜ.நா சபை கூட்டத்தெடர் இல்லை அதைவிட சனி ஞாயிறு லீவுநாள் உங்கடை ஆர்ப்பாட்டத்தை பார்கிறதற்கு அங்கை யார் இருக்கப் போகினம்

அதுதான் எனக்கும் புரியேல்லை எப்பவுமே ஜ.நா சபை லீவு நேரம் இல்லாட்டி சனி ஞாயிறு லீவு நாட்களிலைதான் எங்கடையாக்கள் ஊர்வலம் ஆர்பாட்டத்தை ஏற்படு செய்யினம். ஊரவலமாய் போய் வாசல் காவல் காரனிட்டை மனு குடுக்கிறதே வேலையா போச்சுது. ஆனால் சுவிசிலை ஒருதடைவை அங்கத்தைய இளையோரமைப்பு மட்டும்தான் உருப்படியா ஜ.நா.சபை கூட்டத் தொடர் நடக்கேக்குள்ளை ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம். ஆனாலும் போகமல் இருக்க முடியேல்லை போகவேணும்.

உனக்கு எப்ப லீவு வேணுமோ தாராளமாய் எடுத்துக்கொள். ஆனால் எனக்கென்னவோ உன்னுடைய பிரச்சனையே புரியவில்லை
..........................................................................................................................................................................
ஜெர்மனியில் பிரித்தானிய மற்றும் சீனத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அதன் ஏற்பாடுகளை ஜெர்மனிய தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் சுஜாதா செய்திருந்தார். அதற்கு முதல் பெல்யியம் ஜ.நா சபைக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவரும் அவரே. அவரிடம் வந்த ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன். இவங்களுக்கு நாங்கள் சும்மா வெளியிலை நிண்டு கத்தி பிரயோசனம் இல்லை அதாலை இண்டைக்கொரு வேலை செய்யப் போறம். நீங்கள் எம்பசி வாசலுக்கு கிட்ட கூடுதலா பெண்களை முன்னாலை விடுங்கோ. பிரான்சிலை இருந்து ரகு குறூப்பை கூப்பிட்டிருக்கிறன் அவங்கள் இடையிலை புகுந்து கல்லெறிஞ்சு எம்பசி கண்ணாடியளை உடைச்சிட்டு சனத்தோடை சனமாய் மாறி போயிடுவாங்கள் நீங்களும் கொஞ்ச பெட்டையளிட்டை கல்லை குடுத்துவிடுங்கோ. பயப்பிடாதையுங்கோ நிறை சனம் எண்டபடியாலை பொலிஸ் கண்டு பிடிக்காது


இந்தத் திட்டம் ஆi;ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்த பாதர் இமானவேலிடம் யாரோ சொல்லிவிட அவர் ..ஒருத்தரும் கல்லெறியக்கூடாது அப்பிடி செய்தால் இனியொரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரமாட்டாங்கள். எறிஞ்சால் நானே பொலிசிலை பிடிச்சுக் குடுத்திடுவன் என்று வாகீசனிடம் சொல்லிவிட அங்கு அருகில் வந்து விட்ட ரகுவிற்கு செய்தி போனது. சே.......பாதிரிக்கு தேவையில்லாத வேலை இவ்வளவு தூரம் வந்திட்டம் சும்மா திரும்பி போகேலாது என்ன செய்யலாமென யோசித்தவனிற்கு ஒரு யோசனை தோன்றியது . கல்லுத்தானே எறியக்கூடாது தனது நண்பர்களை அழைத்து விடயத்தை சொன்னான். பிரித்தானிய தூதரகத்தினுள் முட்டைகள் போய் விழ ஆரம்பித்தது. பாதுகாப்பு அதிகாரி ஒருத்தன் வந்து பிரித்தானிய கொடியை பத்திரமாக இறக்கி உள்ளே கொண்டு சென்றான். அப்பொழுது சில கற்களும் உள்ளேபோய் விழ மேலதிகமாக போலிசார் அங்குவர ரகு குழுவினர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
மினக்கெட்டு வந்ததுக்கு பிரயொசனம் இல்லாமல் போச்சுது என்ன செய்யலாமென மற்றவரகளுடன் ஆலோசித்தான். நோர்வேயிலை செய்தமாதிரி சிறிலங்கன் எம்பசியை உடைச்சுப்போட்டு போவம் எண்டான் ஒருத்தன். டேய் ஜெர்மன் பொலிசை விழையாட்டா நினைக்காதை அவங்கள் பிரெஞ்சு பொலிசு மாதிரியில்லை பிடிச்சாங்களெண்டால் கட்டிக்கொண்டு போய் கட்டுநாயக்காவிலை இறக்கிவிட்இடிட்டுத்தான் மற்றவேலை பாப்பாங்கள். வேண்டாம் பிரான்சுக்கே திரும்பி போவம் என்று முடிவெடுத்தார்கள்.
.............................................................................................................................................................................................
19.05.2009 செவ்வாய்
. வேலையில் நின்ற மோகனின் கைத் தொலைபேசி அடித்தது எடுத்தான் அவனது நண்பன் ஒருவன். டேய் நியூஸ் தெரியுமோ தலைவரின்ரை பொடியெண்டு சி என் என் னிலை காட்டுறாங்கள். மோகனிற்கு தலைசுற்றி கண்கள் மயங்குவது போலை இருந்தது கிழே குந்தி இருந்துவிட அவனிற்கு பக்கத்தில் நின்றவன் முதலாளியை கூப்பிட்டு விசயத்தை சொல்லவும்.
இவன் கொஞ்சநாளாய் இப்பிடித்தான்..என்றபடி அவனை வீட்டிற்கு போய் ஓய்வெடுத்து வரும்படி அனுப்பிவிட்டான். வீட்டிற்கு வந்தவன் இரண்டுநாளாய் வேலைக்கே போகவில்லை ஏதாவது ஒரு செய்தி தவைர் இருக்கிறார் என்று சொல்லாதா?? தலைவர் தான் இருக்கிறன் எண்டு எதிலையாவது அறிவிக்கமாட்டாரா என இரண்டு நாளாய் உலகத்தின் அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளை பாத்தும் வானொலிகளையும் கேட்டும் களைத்துப்போய்விட்டான். பலம் தக்கவைக்கப்பட்டிரக்கு பணம்தான் பிரச்சனையெண்டு விடுதலை சொன்னவர் எதுக்கும் அவருக்கு போனடிச்சு பாப்பம் என நினைத்து விடுதலையின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினான். அந்த இலக்கம் பாவனையில் இல்லை என்று சொல்லியது

22.05.2009
ஜேன் பியரின் அலுவலகத்தில் இருபத்தியொரு தமிழர்களின் கோப்புக்கள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய குழுவினரை அழைத்தவன் நாங்கள் நடவடிக்கையில் இறங்கும் நேரம் வந்துவிட்டது. இன்று இருபத்தியொரு பேரையும் கண்காணியுங்கள். இன்று இரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் அனைவரையும் கைது செய்துவிடவேண்டும். என உத்தரவிட்டவன். தேவனை அழைத்து அனேகமாக நாளையுடன் உங்களிற்கும் விடுதலை கிடைத்துவிடும். இன்று விடிய விடிய வேலை உண்டு தயாராக இருங்கள் என்று சொல்லியவன். என்னுடைய குழு நடவடிக்கைக்கு இறங்கி விட்டார்கள் அதனை கவனிக்கவேண்டும் மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றான்.
அன்று வேலைக்கு போயிருந்த மோகன் லா சப்பல் பக்கம் போனாலாவது ஏதாவது செய்தி கிடைக்கும் என நினைத்து லா சப்பலில் இறங்கி நடந்து கொண்டிருந்தான் அனைத்து தமிழர் முககங்களிலும் ஒரு இறுக்கம். யாரை பார்த்தாலும் என்னவாம். இருக்கிறாரா?? இல்:லையா என்கிற கேள்விதான். லா சப்பலின் பின்பறமாக இருந்த இரயில்வே பாலத்தில் ரகு குழுவினர் நின்று தண்ணியடித்தபடியிருந்தனர்.

அவர்களை கண்டதும் மோகனுக்கு மனதில் சின்தொரு மகிழ்ச்சி ஏனெண்டால் ரகு தான் இயக்கத்திலை கனகாலம் இருந்தவன் எண்டும் கடைசி நேரம் வரைக்கும் வன்னியோடை தொடர்பிலைஇருந்தவன்எண்டும் அடிக்கடி சொல்லியிருக்கிறான் அவனுக்கு விசயம் தெரிஞ்சிருக்கும் என்று நினைத்தபடி ரகுவிடம் போனவன். என்னமாதிரி செய்தியள்ளை படத்தை அடிக்கடி காட்டுறாங்கள் .ஆனால் இஞ்சை கனபேர் இருக்கிகிறார் எண்டினம் உனக்கு ஏதாவது தெரியுமே எனக் கேட்டான். லேசாக மற்றவர்களை பார்த்து ஒரு ஏளனப்பன்னகையை வீசியவன் நான் பதில் சொல்லியே களைச்சுப் போனன். எண்டவன் பிளாஸ்ரிக் கிண்ணத்தில் விஸ்கியை ஊற்றி கலந்து மோகனிற்கு நீட்டியவன் .இஞ்சை வடிவாய கவனி என்றபடி அங்கு நின்ற காரின் போனற் மீது படிந்திருந்த தூசியில். ஒரு வட்டத்தை போட்டான் இதுதான் நந்திக்கடல் 18 ந திகதி விடியப்பறம் நாலுமணி சொர்ணம் தலைமையிலை இருபது படகுகள் எல்லாத்திலையும் கரும்புலியள் தலைவரும் ஒரு படகிலை ஏறுறார். படகுகள் ஸ்ரட் ஆகிது தலைவரின்ரை படகுக்கு முன்னாலை அஞ்சு படகு வலப்பக்கம் அஞ்சு இடப்பக்கம் அஞ்சு பின்னாலை அஞ்சு ..நந்திக்கடல் பாதியை தாண்டேக்குள்ளை ஆமிக்காரன் கண்டிட்டான். அடிபாடு தொடங்கிது.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்த சாதாரண கார் ஒன்றில் சிவில் உடையிலிருந்த காவல்த்துறையினர் இறங்கி போலிஸ் என்று தங்கள் அடையாள அட்டையை உயர்த்தி காட்டிய அதே நேரத்தில் கைத்துப்பாக்கிகளையும் அவர்களை நோக்கி நீட்டியபடி கையை உயர்த்தச் சொன்னார்கள். கையில் விஸ்கி கிளாசுகளுடன் நின்றுகொண்டிருந்தவர்கள் அதனை அப்படியே கீழே போட்டு விட்டு கையை உயர்த்தினர்.

மேகனிற்கு கிளாசை கீழேபோட மனமில்லை அதனை காரில் மேல் வைத்து விட்டு கையை உயர்த்தினான். எங்கேயோ தயாராய் நின்ற போலிஸ் வான் ஒன்று சைரன் அடித்தபடி வேலகமாய் வந்து நின்றது . மோகனின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த ஒருவர் அவனை அங்கிருந்து போகும்படி கூறிவிட்டு மற்றைய அனைவரும் விலங்கிட்டு வானில் ஏற்றப்பட்டனர். சே....... நந்திக்கடலுக்குள்ளால தலைவர் உடைச்சுக் கொண்டு வெளியாலை போறதுக்கிடையிலை பிறெஞ்சு பொலிஸ்காரன் வந்து கெடுத்துப் போட்டான் என்று திட்டியபடி போய்க்கொண்டிருந்தான்.
.....................................................................................

ஜேன்பியரிற்கு முன்னால் விலங்கு கழற்றப்ட்ட நிலையில் ரகுவிறைப்பாய் அமர்ந்திருந்தான் உங்களிற்கு பிறெஞ்சு நன்றாக புரியுமா??
இல்லை கொஞ்சம் புரியும்.

உங்களிற்கு உதபுவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்துள்ளோம்.


என்னை எதற்காக கைது செய்தீர்கள் நான் செய்த தவறு என்ன??


மொழி பெயர்ப்பாளர் வந்ததும் உங்களிற்கு விளக்கமாக கூறுகிறேன்.


. சிறிது நேரத்தில் உள்நுளைந்த தேவன் ரகுவிற்கு தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்தான்


ஜேன்பியர் வழைமையான சம்பிரதாயகேள்விகளான பெயர் விபரம் விலாம் என கேட்டு கணணியில் பதிந்தவன். அவனது குற்றங்களை வகைப்படுத்தினான். பொது மக்களிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது தனியார் சொத்து பொது சொத்துக்களிற்கு சேதம் ஏற்படுத்தியது. எனத் தொடங்கியவன் ஒரு கார் கண்ணாடியை உடைக்கும் பொழுது அதில் இருந்த பெண்ணிற்கு கண்ணாடி துகள்கள் கண்ணில் புகுந்து மோசமாக பாதிக்கபட்டது. யெர்மனிவரை சென்று குழப்பம் விழைவித்து என அனைத்தையும் சொல்லிவிட்டு இவையனைத்தையும் ஒத்துக்கொள்கிறீரா எனக்கேட்டான்.

இவையெல்லாம் தான் நான் செய்த குற்றங்களா?? இவை குற்றமல்ல எமது போராட்டம். உலகத்திற்கும் உங்களிற்கும் எமது மக்கள் படுகின்ற துன்பங்களை எடுத்துச்சொல்வதற்கு எங்களிற்கு வேறை வழியில்லை.


பாரிஸ் 10ல் ஒரு கடையை உடைத்து நாசம் செய்து கடையில் இருந்த சிலரை மோசமாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்கள் வைத்தியசாலையில் உள்ளனர்.
அவங்கள் எங்கடை எதிரியள் அவங்கள் தான் எங்கடையாக்களை படுகொலையள் செய்யிறாங்கள். அதை நீங்களும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறியள். அவங்கள் அங்கை கொலை செய்யலாம் நாங்கள் அடிச்சால் குற்றமா??


இதுஉங்கள் நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கான விசாரனையல்ல பிரான்ஸ் நாட்டில் அதன் சட்டங்களை மதிக்காமல் நடந்த சம்பவங்களை பற்றிய விசாரணை இங்கு எமக்கு எல்லாருமே சமம். வன்முறையை யார் செய்தாலும் குற்றம்தான்.


எமது விடுதலைக்காகத்தானே எங்கடை தலைவர் போராடினவர் அவரை பயங்கரவாதியெண்டு பிரான்சும்தான் சொல்லி எங்களுக்காக போராடின இயக்கத்தை தடை செய்திருக்கினம். எங்கள் தலைவனிற்காக எதையும் செய்வேன் உயிரையும் கொடுப்பேன் அதை நீங்கள் வன்முறையெண்டால் தாராளமாக என்னை உள்ளை போடுங்கோ.


நல்லது என்றபடி ஜேன்பியர் கோப்பு ஒன்றை எடுத்தவன் அதிலிருந்த ஒரு தாளை மட்டும் எடுத்து அதில் மெல்லிய பச்சை வர்ணத்தால் கோடிட்ட இடத்தை மட்டும் ரகுவிற்கு படித்துக்காட்டச்சொல்லி தேவனிடம் கொடுத்தான். தேவன் படிக்கத் தொடங்கினான் அப்பொழுதுதான் ரகுவிற்கு புரிந்தது அது அவன் பிரான்சில் அகதி அந்தஸ்த்து பெறுவதற்காக எழுதிய அவனது விணப்பம். ரகுவின் முகம் வெளிறத் தொடங்கியது. தேவன் தொடர்ந்து படித்தான்.


பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னை புலிகள் அமைப்பினர் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் வன்னியில் உள்ள ஒரு பயிற்சிமுகாமிற்கு அனுப்பி வைத்தனர். எனக்கு புலிகள் அமைப்பில் இணையவோ பயிற்சி எடுக்கவோ விருப்பம் இல்லை ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் பயிற்சி தொடங்கி இரண்டு வாரத்தில் சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியேடினேன். தப்பியேடியநான் எனது வீட்டிற்கு மீண்டும் செல்ல இயலாது காரணம் புலிகள் இயக்கம் என்பது மிகவும் கொடுரமான அமைப்பு அவர்களது தண்டனைகளும் கொடுரமானதாகவே இருக்கும். சுட்டும் கொன்று விடுவார்கள். எனவே நான் அவர்களிடம் அகப்படாமல் தப்பி யோடி கொழும்பிற்கு வந்து சேர்ந்திருந்தேன் கொழும்பிற்கு வந்து கொட்டாஞ்சேனையில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து எனது படிப்பினை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவேளை ஒருநாள் சிறீலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினராலும் சுற்றிவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளிற்குள்ளாக்கப்பட்டேன்.

சித்திரவதைகள் தாங்கமுடியாமல் நான் இயக்கத்தால் பலவந்தமாகவே பயிற்சிக்கு அழைத்து செல்லப்படதாக கூறியிருந்தேன். அனால் அவர்கள் நம்புவதாக இல்லை தொடர்ந்தும் சித்திரவதைகளை அனுபவித்தேன் அப்பொழுது பெரும் தொகை பணத்தை எனது தாயார் சிறீலங்கா காவல்த்துறையினரிற்கு கொடுத்து என்னை மீட்டு பிரான்சிற்கு அனுப்பிவைத்தார். எனவே சிறீலங்காவில் எனக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளாலும் இலங்கையரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இலங்கையரசு நிருவாகத்தாலும் உயிரிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரான்சில் நான் அகதி தஞ்சம் கோரியுள்ளேன்..... நிறுத்திவிட்டு தேவன் ரகுவை திரும்பிப் பார்த்தான்.

அண்ணை கொஞ்சம் தண்ணி தருவியளோ??


ஜேன்பியர் ஒரு படத்தினை ரகுவிடம் காட்டி இவரை தெரியுமா என்றான்.


ரகு மிண்டி விழுங்கியபடி ஓம் கேள்விப்பட்டிருக்கிறன் என்றான்.


இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்றபடி அவன் பதிவு செய்த ஆவணங்களை அவனிடம் நீட்டியபடி ஒரு பேனாவையும் நீட்டி கையெழுத்து போடுங்கள் என்றான்.


அண்ணை என்னை சிலோனுக்கு ஏத்துவாங்களோ?? அண்ணை தெரியாமல் பெடியளோடை சேந்து சும்மா பகிடியாய் முசுப்பாத்திக்கு செய்து போட்டன் மன்னிச்சு கொள்ளச் சொல்லுங்கோ. என்றவன் ஜேன் பியரை பாத்து மிஸ்யூ... எக்சுசே முவா மிஸ்யு ... பறதோம் மிஸ்யு. என்றான்

தம்பி நான் ஒண்டும் நீதிபதி இல்லை அதுமாதிரித்தான் அவரும் .. அவர் முடிவு செய்யிறெல்லை. உங்களை நீதிமன்றத்திலை ஒப்படைப்பினம். அவையள் முடிவு செய்வினம்.


ஒரு போலிஸ் காரர் வந்து ரகுவிற்கு விலங்கிட்டு அழைத்துச் சென்றார்...........
ஜேன்பியரின் சேவைக்காலம் முடிவடைந்து விட்டது அன்று அவன் தனது அலுவலகத்தை புதிதாக பொறுப்பேற்பவரிடம் ஒப்படைக்கவேண்டும். அலுவலகத்தினுள் ஒரு கடுதாசி பெட்டியுடன் உள் நுளைந்தவன் அங்கிருந்த தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் பெட்டியில் போட்டவன் படங்களையும் ஒவ்வொன்றாக கழற்றி பெட்டியில் போடத் தொடங்கினான். கடைசியாய் பிரபாகரனின் படத்தை எடுத்து கையில் வைத்தபடி சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தமிழில் பா வா ம் பிற பாகரன் என்று சொல்லி தலையாட்டியபடியே படத்தினை தனது பெட்டியில் போட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.


முற்றும்.

யாவும் கற்பனையல்ல

பிற் குறிப்பு ..ரகு 5 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான். சிறைத்தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவான். மேகன் இறுதியுத்தத்தில் காணாமல் போன தாயாரையும் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தங்கையையும் தேடிக்கொண்டேயிருக்கிறான்..உதயன். வேறு மானிலத்திற்கு போய் அமையாக வாழ முயற்சிக்கிறான். தேவன் தனது மொழி பெயர்ப்பு வேலையை விட்டுவிட்டான். ஜேன் பியர் ஓய்வு பெற்று தனது கிராமத்திற்கு போய் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளான். வாகீசன் ஜெர்மன் சிறையில் இருக்கிறான். சுவிஸ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் குரு அங்கு முன்னர் இயக்கத்திற்கு வேலை செய்த அனைவரையும் துரோகிகள் என அறிவித்து விட்டு தானே புதிய பொறுப்பாளர் என பிரகடனம் செய்துள்ளான்.

No Comment