நீங்களும் செய்து பாக்கலாம்
12:21 AM, Posted by sathiri, No Comment
நீங்களும் செய்து பாக்கலாம்
சாத்திரி(ஒரு பேப்பர்)
வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.
சரி தயாரா??
தேவையான பொருட்கள்
1)கூகிழ் தேடி
2)விக்கி பீடியா தகவல்
3)கூகிழ் வரைபடம்
4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்
5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)
6)ஒரு தமிழ் அகராதி
தயார்ப்படுத்த வேண்டியவை
1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.
2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.
3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)
4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.
இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)
முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்
கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு
.
பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.
ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.