Navigation


RSS : Articles / Comments


போத்தல் பித்தளை அலுமினியம்.

10:42 AM, Posted by Siva Sri, No Comment

போத்தல் பித்தளை அலுமினியம்.

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.

பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இப்பிடி இன்னும். அடுத்ததாய் மீன்வியாபாரிகளும். ஜஸ்பழவியாபாரிகளும் கோண் அடிப்பார்கள் அல்லது மணியடித்தபடி வருவார்கள்.

இதில் இந்த ஜஸ்பழம்தான்தான் இந்தவாரத்து கதை.ஜஸ்பழம் எண்டதும் வாயூறாத ஆக்களே இருக்க முடியாது அதுவும் புலம்பெயர்ந்து வாழுறவைக்கு ஜஸ்பழம் எண்டதும் ஊர் கோயில்திருவிழா அல்லது வேறை அதோடை சம்பந்தபட்ட மறக்கமுடியாத சம்பவம் கனக்க ஞாபகத்துக்கு வரும்.அதுமாதிரித்தான் எனக்கு ஒரு நினைவு. ஊரிலை நான் முதல் சொன்னது போலை சைக்கிளில் பின்னுக்கு ஒரு பெட்டிகட்டி அதில் ஜஸ்பழத்தை வைத்து வித்துகொண்டு வருவார்கள் பெட்டியில் கலர்கலராய் படம்கீறி அந்த ஜஸ்பழகொம்பனியின் பெயரும் எழுதியிருக்கும்.உள்ளை ஜஸ்பழமும் கலர்கலாய் இருக்கும். இதிலை கொஞ்சம் விசேசமானது ஜஸ்சொக் கொஞ்சம் விலையும் கூடுதல்.இந்த ஜஸ்பழ சைக்கிள் வியாபாரியள் சாதாரமாக ஒவ்வொருநாளும் ஊரிலை வலம் வருவினம். அடுத்ததா வாகனத்திலையும் வருவினம் இந்த வாகனகாரர் அனேகமா ஏதாவது நல்லநாள் பெருநாளிலைதான் ஊருக்கை வலம் வருவினம்.இல்லாட்டி கோயில் திருவிழாக்கள் பள்ளிக்கூட விழையாட்டு போட்டிஇப்பிடி ஏதாவது நிகழ்ச்சி நடக்கிற இடங்களிலை காணலாம்.

இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும்.அதைவிட ஜஸ்பழவானின்ரை டீசல் இஞ்சின்வேலைசெய்யிற சத்தம் பாட்டுச்சத்தத்துக்கு மேலாலை கேக்கும்.சின்னவயசிலை ஜஸ்பழம் வாங்கிகுடிக்கிறதெண்டது ஒரு போராட்டமானவிசயம். ஏணெண்டால் ஊரிரை சாதாரணமா குடும்பங்கள் எல்லாத்திலையும் குறைஞ்சது அஞ்சு அல்லது ஆறு பிள்ளையள் இருப்பினம். இதிலை வருமானத்ததை கணக்கு பாத்து வாழுகின்ற நடுத்தரக்குடும்பங்களிலை கிழைமைக்கு ஒருக்கா எல்லா பிள்ளைகளிற்கும் ஜஸ்பழம் வாங்கி குடுக்கிறதெண்டால் கட்டுபடியாகாத விசயம்.

எனவே நடுத்தரகுடும்பங்களிலை உள்ள பிள்ளையளிற்கு ஊர் கோயில் கொடியேறினால் இல்லாட்டி தீபாவளி வருசத்துக்குதான் ஜஸ்பழம். இல்லாட்டி தூரத்து உறவினர் யாராவது வீட்டுக்குவந்திட்டு போகேக்கை கையிலை தாற சில்லறை அதுவும்இல்லாட்டி வீட்டிலை இருந்து மல்லிப்பேணி. உள்ளிப்பேணிக்கை அம்மா இல்லாட்டி அம்மம்மா வைக்கிறகாசிலை சில்லறையை களவெடுத்தால்தான்(உள்ளதை சொல்லதானே வேணும்) ஜஸ்பழம் குடிக்கலாம். அப்பிடி ஜஸ்பழத்தை வாங்கி குடிச்சு முடிஞ்சாலும் கடைசியா இருக்கிற தடிக்குச்சியையும் சூப்பி அதை சப்புசப்பெண்டு சப்பி அது முரசிலை குத்தி ரத்தம் வந்தாலும் கவலைப்படாமல் சப்பி தும்பாக்கி தான் எறிவம்.இப்பிடி சின்னவயசிலை நாங்கள் ஜஸ்பழம் குடிக்க படுகிற கஸ்ரங்களை பாத்து ஜஸ்பழவியாபாரியள் எல்லாருமா சேர்ந்து எங்கடை நெஞ்சிலை ரின்பாலை வாக்கிறமாதிரி ஒரு திட்டத்தை கொண்டு வந்திச்சினம்.அதாவது ஜஸ்பழவியாபாரியளும் போத்தில் பித்தளை இரும்புசாமானை வாங்கிகொண்டு அதுக்கு மாற்றீடா பண்டமாற்று முறையிலை ஜஸ்பழம் தருவினம் .

ஆனால் என்ன நாங்கள் எந்த விலையான பெருளை குடுத்தாலும் அதுக்கு விலை நிர்ணயம் கிடையாது ஒரு ஜஸ்பழம்மதான் கிடைக்கும். எங்களுக்கு அது போதும் தானே.இனி விசயத்துக்கு வாறன் அப்ப எனக்கொரு 10 வயது இருக்கும் ஒருநாள் பின்னேரம்வீட்டிலை நானும் தங்கையும்தான் என்ரை சின்னவயது நணபன் இருள்அழகனும் ஒழிச்சு பிடிச்சு விழையாடிக்கொண்டு நிண்டனாங்கள் அந்த நேரம் ஜஸ்பழகாரனின்ரை மணிச்சத்தம் கேக்க இருள்அழகன் அவசரமாய் ஓடினான் கொஞ்ச நேரத்தாலை கையிலை ஜஸ்பழம்குடிச்சபடி வர. எங்காலை காசு எண்டு நான் கேட்கவும் அவன் சொன்னான் காசு தேவையில்லை நான் வீட்டிலை இருந்த அலுமினிய பானையை குடுத்து வாங்கினனான் எண்டான். அப்பதான் எனக்கு மூளை வேகமாக வேலை செய்தது ஓடிப்போய் வீட்டிலை பழைய பாவிக்காத சாமான் ஏதாவது இருக்கா எண்டு தேடினன் கிடைக்கேல்லை ஜஸ்பழகாரனின் மணிச்சத்தம் தூரமாக போய்கொண்டிருந்தது அவசரத்துக்கு பாவமில்லை எண்டு கழுவி கவிட்டு வைத்திருந்த பித்தளை தேத்தண்ணி கேத்திலின்ரை மூடியை தூக்கி கொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.

பின்னாலையே தங்கை தனக்கும் ஜஸ்பழம் வாங்கித்தரசொல்லி அழுதபடி ஓடிவரவே என்ன செய்யலாமென யோசித்த நான் மூடியே இல்லை பிறகென்னத்துக்கு கேத்தில் என நினைச்சு கேத்திலையும் தூக்கிகொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஏதோ லொத்தோ விழுந்த சந்தோசத்திலை சிரிச்சபடி ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.நாங்கள் ஜஸ்பழத்தை குடிச்சு முடிஞ்சு தடியை சப்பிக்கொண்டிருக்கவே வெளியிலை போயிருந்த அம்மா வந்து எங்களை பாத்திட்டு என்னட்டை ஜஸ்பழம் எங்காலை ஆர் வாங்கி தந்தது எண்டு கேட்டார். அந்த வயசிலை திட்டம் போட்டு பொய் சொல்ல தெரியாதுதானே நானும் மாமா வாங்கிதந்திட்டு போனவர் எண்டு சொல்ல அம்மாவும் பேசாமல் போய் வெளியாலை போய் வந்த களைப்பிற்கு தேத்தண்ணி போட கேத்திலை தேடினார். கேத்திலை காணமால் என்னைக்கூப்பிட்டு கேத்தில் எங்கை எண்டு கேக்கவும் நானும் பயத்திலை முழுசதொடங்க தங்கச்சி உடைனையே அம்மாதரப்பு சாட்சியாய் மாறி கேத்தில் ஜஸ்பழமாய் மாறியதை சொல்லி அப்புறூவர்ஆகி விட்டாள்.பிறகென்ன வேலியில் நின்ற பூவரசம் தடியொன்று அம்மாவின் கைகளிற்கு மாறி என்மீது விழையாடியது.

அது முடிய அம்மா என்ரை கையிலை காசை தந்து மரியாதையாய் ஓடிப்போய் ஜஸ்பழகாரன் எங்கை நிண்டாலும் தேடிப்பிடிச்சு காசை குடுத்திட்டு கேத்திலை வாங்கிகொண்டுவா என கலைச்சு விட்டார்.நானும் அழுதபடி ஜஸ்பழகாரனை தேடி இருள்அழகன் வீட்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அய்யோ அய்யோ எண்டு இளுள்அழகனின்ரை அலறல் சத்தம் கோட்டது ஏணெண்டால் இருள்அழகன் ஜஸ்பழகாரனிட்டை குடுத்தது அவங்கடை வீட்டு புட்டுபானையை

No Comment