Navigation


RSS : Articles / Comments


தீவாளி

2:38 PM, Posted by sathiri, No Comment

தீவாளி

ஒரு பேப்பரிற்காக

தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு.

அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கொண்டாடுவினம் .இந்தியாவிலை அதுவும் வடநாடுகள்மற்றும் ராஜஸ்தான் மானிலத்திலை பெரியளவிலை 3 நாளைக்கு கொண்டாடறவை. ஒரு தீபவாளி கொண்டாட்டத்தை நான் ராஜஸ்தானிலை பார்த்திருக்கிறன். ஆனால் அங்கையெல்லாம் அன்று விரதம் இருந்து லக்சுமி தெய்வத்திற்கு படையல் செய்வது வழைமை.எங்கடை நாட்டிலையும் சிலபேர் அப்பிடிதான் செய்யிறவை ஆனால் எங்கடை ஊர்ப்பக்கம் தீபாவளி கொண்டாடுற விதமே தனி. சாதாரணமா மரக்கறி சாப்பிடுறவை கூட அண்டைக்குதான் மச்சம்(இறைச்சி). சாப்பிடுவினம். வீட்டுக்கு வெளியிலை அடுப்பு மூட்டி அதிலை ஆடு கிடந்து கொதிக்கும்.

அது மட்டுமில்லை பொதுவா தண்ணியடிக்காதவை கூட அண்டைக்கு மூக்கு முட்ட அடிச்சிட்டு செய்யிற கூத்துகள் அதுவே ஒரு திருவிழா மாதிரித்தான்.சிலர் கொஞ்சமா அடிச்சிட்டு சும்மா சினிமா காட்டுறவையும் இருந்தவை. பெரும்பாலும் ஊருக்கை பழைய கோபதாபங்களும் அண்டைக்குதான் தீர்க்கபடுறதுமட்டுமில்லை தண்ணியடிச்சவர் யாரோ தன்பாட்டிலை சிவனே எண்டு போய் கொண்டிருக்கிறவரை பாத்து டேய் உன்ரை பார்வை சரியில்லை எண்டு வம்புக்கிளுப்பினம் .சிலநேரம் அவருக்கு உண்மையிலேயே வாக்கு கண்ணாகவும் இருக்கும்.அண்டைக்கு எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை நேஸ்மாருக்கு வேலையும் கூட .ஏணெண்டால் வெட்டு கொத்து பட்டு கனபேர் வருவினம். அடுத்தா எங்கடை ஊரிலை தீபாவளி நாளுக்கெண்டே ஆட்டுக்கிடாயள் வளக்கிறவை. வீட்டிலை பிள்ளைக்கு பால்மா இருக்கோ இல்லையோ ஆட்டுக்கெண்டு விசேசமா முருக்கங்குளை தவிடு எண்டு ஊட்டி ஊட்டி வளப்பினம்.

பிறகு தீபாவளியண்டு நாலைஞ்சு குடும்பமா சேந்து வீட்டு வளவுக்கை இல்லாட்டி ஊர் ஒதுக்குபுறமா ஒரு இடத்தலை ஆட்டை வெட்டி பங்கு போடுவினம். பங்கு போடேக்கை சில நேரம் ஆட்டுக்குடலுக்குஅடிபட்டு ஆக்களின்ரை குடல் வெளியிலை வந்த கதையளும் நடந்திருக்கு.இதெல்லாம் பெரியாக்களின்ரை தீபாவளியெண்டால் இனி எங்கடை தீபாவளிக்கு வருவம். தீபாவளியண்டு எல்லாருக்கும் புது உடுப்பு வாங்கிறது வழக்கம். ஆறு ஏழு பிள்ளையள் எண்டு இருக்கிற நடுத்தர குடும்பங்களிலை எல்லா பிள்ளையளிற்கும் விதம்விதமாய் உடுப்ப வாங்கிறது எண்டது இயலாத காரியம்.அது மாதிரிஎங்கடை வீட்டிலையும் நாங்கள் ஆறு உருப்படி். அதாலை விசேசமான நாட்களிலை எங்கடை ஊர் சங்கக் கடைக்கு இலங்கை கைத்தெறி கூட்டுத்தாபனம் சிங்களத்திலை சலுசலா எண்டு சொல்லுறவை அந்த சலுசலா துணி வாறது ஒரு குறிப்பிட்ட டிசைன் துணி மட்டும் வரும்.விலையும் மலிவு.

அதைவிட எங்கடை மாமா ஒருதர் சங்கக்கடை மனேச்சரா இருந்தவர் அவரிட்டை சொல்லி விட்டால் இன்னமும் கொஞ்சம் மலிவா வாங்கியருவார். அனேகமான தீபாவளிக்கு எங்களுக்கு எல்லாருக்கும் சலுசலாதுணியிலை டிசைன் போட்டது சில மீற்றர் டிசைன் போடாதது சில மீற்றர் எண்டு வாங்குவினம்.எங்கடை ஊரிலை ஒரு தையல் காரர் இருந்தவர் எனக்கு தெரிந்து இதுவரை உலகத்திலேயோ மீற்றர் அளவை பாவிக்காமல் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற ஒரேயொரு கெட்டிக்கார தையல்காரர் அவர்தான். அவரிட்டை துணியையும் குடுத்து எங்களையும் காட்டிவிட்டால் போதும். அது மட்டுமில்லை தையல் காரரிட்டை அப்பா ஒரு வசனம்சொல்லுவார் "வளர்ற பிள்ளையள் பாத்து கொஞ்சம் பெருசா தையுங்கோ எண்டுவார்." பிறகென்ன பார்வையிலையே அளவெடுக்கிற தையல்காரர் எங்களை பார்க்காமலேயே தைக்கிற காற்சட்டையை நாங்கள் போட்டு அதுக்கு இரண்டு பக்கமும் ஊசி குத்திவிட்டால்தான் இடுப்பை விட்டு கீழை விழாமல் நிக்கும். அதோடை ஒரு கலர் துணியிலையே அண்ணனுக்கு சேட்டு அக்காக்கு சட்டை எனக்கு காற்சட்டை தங்கைக்கு பாவாடை எண்டு எல்லாம் தைச்சு மிச்ச துணி கொஞ்சம் பெரிசா மிஞ்சினால் வீட்டுக்கு யன்னல் சீலை அதிலையும் மிஞ்சினால் தலைகணி உறை எண்டு பல கலர் மயமா இல்லாமல் ஒரோயொரு கலர் மயமா இருக்கும்.

அடு்த்ததா தீபாவளியண்டு எங்களையெல்லாம் வரிசையா இருத்தி குளிக்க வாத்து புது உடுப்பை போட்டு எங்களுக்கு கையிலை ஆளுக்கொரு கற்பூரகட்டியை கையிலை தந்து கோயிலுக்கு அனுப்பி விடுவினம் கோயிலுக்கு போய் அதை கொளுத்தி கும்பிட்டிட்டு அடுத்த வேலையா ஊரிலை இருக்கிற எங்களுக்கு படிப்பிக்கிற வாத்தியார் மற்றும் எங்கடை சொந்த காரர் வீடுகளுக்கு போய் புது உடுப்பை காட்டிபோட்டு அவை கையிலை தாற சில்லறைகளை வாங்கி கொண்டு சந்தோசமா வருவம்.தீபாவளிக்கு மறுநாள் மட்டும் பாடசாலைக்கு சீருடை போடத் தேவையில்லை ஒரு நாள் விசேட சலுகை தருவினம் அண்டைக்கு நாங்கள் தீபாவளி உடுப்பை போட்டு கொண்டு போய் பள்ளிகூடத்திலையும் கலர் காட்டலாம்.

ஆனால் பலருக்கு தாய்தகப்பன் தீபாவளி உடுப்பே பள்ளிக்கூட சீருடையை வாங்கி குடுத்திருப்பினம் அவைபாடு அண்டைக்கு கவலைதான். இப்படித்தான் ஒரு தீபாவளிக்கு வழைமை போல எங்கள் ஆறு பேருக்கும் சலுசலா ஒரேகலர் துணியிலை தைச்ச உடுப்பை போட்டுக்கொண்டு நாங்கள் வரிலையாய் கோயிலுக்கு போய்கொண்டிருக்க வீதியிலை போன யாரோ ஒருத்தர் " சலுசலா விளம்பரம் போகுதடா டோய்" எண்டு கத்த அப்ப கொஞ்சம் வளந்திருந்த அண்ணன் கோபத்திலை வீட்டை வந்து சேட்டை கழட்டி எறிஞ்சதோடை சலுசலா துணி உடுப்பிலை கொஞ்சம் மாற்றம் வந்தது. பிறகு நாங்களும் வளர வளர வீட்டிலை காசை வாங்கி எங்களுக்கு பிடிச்ச துணியை வாங்கி யாழ்ப்பாணம் புதிய சந்தை கட்டிடத்திலை இருந்த நியூ டீசன்ஸ். ஈரான். எண்டு பிரபலமான தையல் கடைகளை நோக்கி போக ஆரம்பித்து விட்டடோம்.ஆனாலும் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற எங்கள் ஊர் தையல்காரருக்கும் மவுசு இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியாக எங்களிற்கு நரகாசுரனை பற்றியதோ கிருஸ்ணர் அவதாரம் எடுத்து கொலை செய்ததை பற்றி கதையை பற்றிய அக்கறை எதுவுமே இல்லை. பின்னர் நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போதும் கூட குண்டுச்சத்தங்கள் வெடியோசைகளின் நடுவிலும் எங்களை பொறுத்தவை மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக தீபாவளி வருடா வருடம் வந்து போய் கொண்டிருந்தது.

1987ம் ஆண்டும் தீபாவளி வந்தது ஆனால் வழைமையான இலங்கை இராணுவத்தின் வெடியோசையுடன் அல்ல மாறாக அமைதிகாக்கும் படை என்கிற முத்திரையுடன் வந்த இந்திய அழிவுப்படையின் வெடியோசைகள் மத்தியில் அந்த தீபாவளிநாள் விடிந்தது அன்று எனது தந்தையையும் எனது சகோதரியையும் இந்தியப்படைகள் எங்கள் வீதியில் வைத்து சுட்டுகொன்று கொழுத்திவிட்டு போயிருந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி நாளும் எங்கள் குடும்பத்திற்கு நினைவுநாளாகி போனது.

No Comment