Navigation


RSS : Articles / Comments


ஜயோஅப்பா அடிக்காதையுங்கோ

3:01 PM, Posted by sathiri, No Comment

ஒரு பேப்பருக்காக

விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமில்லை தொலைபேசி தொல்லை பேசியாவும் மாறிப்போச்சுது.இன்றைய நிலைமை இப்பிடியிருக்கு முந்தி ஊரிலை தொலைபேசியை காணுறதெண்டாலே அபூர்வம்.

முக்கியமா அரசாங்கம் சம்பந்த பட்ட கச்சேரி புகையிரத நிலையம்.தபால்கந்தோர்.காவல்ந??லையங்களிலையும் மற்றது பெரிய பணக்காரர் அதுவும் அரசியல் செல்வாக்கு இருக்கிறவையின்ரை வீடுகளிலைதான் தொலைபேசி இருக்கும்.இதன் இணைப்புகள் வீதியிலை ஒருபக்கம் கரண் கம்பம் எண்டால் மற்றபக்கம் பதிவாய் கம்பங்கள் நட்டு பித்தளை கம்பிகளால் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். தொலைபேசி பெரியதாய் கறுப்பாய் கிட்டத்தட்ட ஒரு மூண்டு நாலு கிலோ பாரமாவது இருக்கும். நீங்கள் வெளிமாவட்டத்திற்கு யாரோடையாவது கதைக்கிறதெண்டாலே நேரடியாய் அடிச்சு கதைக்க முடியாது .

தொலைபேசி கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அடிச்சு நீங்கள் கதைக்கபோற இலக்கத்தை குடுத்திட்டு தொலைபேசிக்கு பக்கத்திலை ஒரு கதிரையை போட்டு காவல் இருக்க வேண்டியதுதான் அவையள் அந்த இலக்கத்துக்கு அடிச்சு லைன் கிடைச்சதும் உங்களுக்கும் அடிச்சு இணைச்சு விடுவினம்.அப்பிடி நீங்கள் கதைச்சு கொண்டு இருக்கேக்கை எங்கையாவது கம்பி இணைப்பிலை காவோலை விழுந்து கம்பி அறுந்தால் உங்கடை கதையும் அறுந்து போகும்.எனக்கு சின்னவயசிலை ஒரு பெரிய சந்தேகம் நாங்கள் கதைக்கிறது எப்பிடி இந்த கம்பிக்குள்ளாலை போகுது எண்டு பலநாள் யோசிச்சுபாத்தும் பிடிபடேல்லை ஒருநாள் அதை ஆராச்சி பண்ணிபாக்கவேணும் எண்டு நினைச்சு ஒருநாள் தந்தி கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்க அந்தவழியாலை வந்த சித்தப்பா கண்டிட்டு பூவரசம் தடியொண்டை புடுங்கி வீடுவரைக்கும் கலைச்சு அடிச்சு கொண்டு வர அதை பாத்திட்டு அப்பா ஏன் மகனுக்கு அடிக்கிறாயெண்டார்.

அதுக்கு சித்தப்பா சொன்னார் உன்ரை மகன் தந்திக்கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்கிறான் இப்பிடியே விட்டா நாளைக்கு கரண்டு கம்பத்திலை ஏறி கரண்வருதாஎண்டு கையை வைச்சு பாப்பான் எண்டார்.பிறகென்ன மிச்சத்துக்கு அப்பாவும் கூரையிலை செருகியிருந்த பிரம்பை உருவ என்ரை ஆராச்சியும் அதோடை நிண்டுபோச்சுது.இல்லாட்டி இண்டைக்கு நானும் ஒரு விஞ்ஞானியாகி குறுந்தாடியும் வைச்சு கண்ணாடியும் வெள்ளை கோட்டும் போட்டபடி விஞ்ஞான விளக்கம் குடுத்துகொண்டிருப்பன். இப்பிடி உங்களுக்கு விண்ணாணம் எழுதிகொண்டிந்திருக்கமாட்டன் என்னாலை இப்ப குறுந்தாடி தான் வைக்க முடிஞ்சுது விஞ்ஞானியா வரமுடியேல்லை எல்லாத்தையும் சித்தப்பா கெடுத்துப்போட்டார் சரி ஆராச்சிதான் பண்ண முடியேல்லை ஒரு நாளாவது தொலைபேசியிலை யாரோடையாவது கதைக்கவேணும் எண்டு எனக்குள்ளை ஒரு ஆசை ஏன் பேராசை எண்டே சொல்லலாம்.

ஆனால் அந்த நேரத்திலை எங்கடை ஊரிலை இரண்டே இரண்டு தொலைபேசி தான் இருந்தது ஒண்டு தபால்கந்தோரிலை மற்றது ஒரு பெரிய அரசியல்புள்ளி ஒருதரின்ரை வீட்டிலை.83ம் ஆண்டு கலவரம் நடக்கேக்கை எங்கடை ஊர்ச்சனம் எல்லாம் தங்கடை சொந்தங்களின்ரை செய்தி அறிய இவரின்ரை வீட்டு தொலைபேசியைதான் சுத்திவர காவல் நிண்டது இப்பவும் நல்ல ஞாபகம். அந்தநேரத்திலை இந்த வெளிநாட்டு அழைப்பெல்லாம் வாறேல்லை .அனேகமா கொழும்பிலை இருந்து இல்லாட்டி ஏதாவது மாவட்டத்திலை இருந்து அவசர செய்தி மட்டும் வரும்.எங்கடை ஊரிலை உள்ளவைக்கு ஏதாவது அவசர செய்தியெண்டால் ஒண்டு தந்தி வரும் அல்லது அந்த அரசியல்வாதி வீட்டுக்கு தொலைபேசிவரும் செய்தியை சொல்லிவிடச்சொல்லி.

இந்த தந்தியிலையும் தொலைபேசியிலையும் எவ்வளோ செய்தியளை பரிமாறலாம் ஆனாலும் எங்கடையாக்களுக்கு அந்த நேரம் ஏதாவது விபத்து இல்லாட்டி யாராவது செத்தால்தான் தந்தியடிக்கிற இல்லாட்டி தொலைபேசியடிக்கிற பழக்கம்இருந்ததாலை தந்தி வந்தால் அதை பிரிச்சு வாசிக்காமலேயே ஒப்பாரிவைக்க தொடங்கிவிடுவினம். அதே மாதிரித்தான் அந்த அரசியல் வாதியின் வீட்டு வேலைக்கார பெடியன்வந்து யாராது வீட்டில் உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு கெதியா வாங்கோ எண்டாலே போதும் வீட்டுகாரரர் பக்கத்து வீட்டு காரர் எல்லாரும் அலறியடிச்சபடி ஓடுவினம்.இது இப்பிடியிருக்க ஒருநாள் யாழ்ப்பாணநகரத்துக்கு போன நான் என்ரை நீண்ட நாள் தொலைபேசிகதைக்கிற ஆசையை அண்டைக்கு நிறைவேற்றலாம் எண்டு நினைச்சு யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குள்ளை நுளைஞ்சன் ஆனால் யாருக்கு அடிக்கிறதெண்டு யோசிச்சு பாத்தன் ஏணெண்டால் தொலைபேசியிலை கதைக்கிற அளவுக்கு எனக்கு ஒருதரையும் தெயாதது மட்டுமில்லை எனக்கு தெரிஞ்சவையின்ரை வீடுகளிலை தொலைபேசியும் இல்லை.

அதாலை எங்கடை ஊர் அரசியல் வாதியின்ரை வீட்டுக்கு போனடிச்சு எங்கடை வீட்டு காரரை கூப்பிட்டு கதைப்பம் எண்டு நினைச்சு அந்த வீட்டு இலக்கத்தை தபால்கந்தேர் காரரிட்டை சொல்ல அவரும் தொலைபேசியிலை விரலை விட்டு சுழட்டி போட்டு றிசீவரை தந்தார்.அந்த வீட்டிலை தொலைபேசியை எடுத்தவரிட்டை நான் அப்பாவின்ரை பெயரை சொல்லி அந்த வீட்டு காரரோடை அவசரமா கதைக்கவேணும் ஒருக்கா கூப்பிடுங்கோ நான் ஒரு அஞ்சு நிமிசத்தாலை திருப்ப எடுக்கிறன் எண்டிட்டு வைச்சிட்டன். அந்த வீட்டு வேலைக்கார பெடியன் செய்தி சொல்ல வீட்டை போன நேரம் வீட்டிலை அம்மம்மாவை தவிர வேறை ஒருத்தரும் இருக்கேல்லை.அவனும் அம்மம்மாவிட்டை உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு அவசரமாம் கெதியா வாங்கோ எண்டு சொல்லவும். அம்மம்வாவும் கொழும்பிலை இருந்த மாமாவுக்கோ இல்லாட்டி திருகொணமலையிலை இருந்த சின்னம்மாவுக்கோ ஏதோ நடந்திட்டு எண்டு நினைச்சு ஒப்பாரிவைக்க பக்கத்து வீட்டுகாரரும் சத்தம்கேட்டு வந்து அம்மம்மாவை சமாதானப்படுத்தி எல்லாருமா சேந்து அந்த வீட்டிலை வந்து என்ரை தொலைபேசிக்காக காவல் நிண்டிச்சினம்.

நான் மீண்டும் அடிக்கவும் பக்கத்து வீட்டுகாரர்தான் கதைத்தார் அவர் என்னிடம் தம்பி அந்தவீட்டிலை மாமியாரை தவிர மற்றாக்கள் ஒருதரும் இல்லை நீங்கள் என்ன பிரச்சனையெண்டாலும் என்னட்டை சொல்லுங்கோ நான் பக்கத்து வீட்டுகாரர்தான் எண்டாலும் அவையின்ரை குடும்பத்திலை ஒருத்தர் மாதிரி அதாலை பிரச்சனையில்லை என்னட்டை சொல்லுங்கோ நான் அவையிட்டை பக்குவமா எடுத்து சொல்லுறன் எண்டு படபடப்பாய் கதைத்து கொண்டிருக்கவும் எனக்கு அம்மம்மாவின் அழுகை சத்தம் தொலைபேசிக்குள்ளாலை கேட்டது. அப்போதான் என்ரை விழையாட்டு வினையாபேச்சுதெண்டது எனக்குவிழங்கியது .

உடனே அவரிடம் நான் தான் கதைக்கிறது என்கிற விபரத்தை சொல்லி அம்மம்மாவை அழவேண்டாமெண்டு செல்லுங்கோ நான் சும்மாதான் போனடிச்சனான் கொஞ்ச நேரத்திலை வீட்டை வாறன் என்று சொல்லி தொலை பேசியை வைத்து விட்டு வீட்டுகாரர் வர முதல் முதலே வேகமாய் போய் அம்மம்மாவை சமாதானப்படுத்தி விடலாமென்று நினைத்து சைக்கிளை மிதித்தேன். ஆனால் நான் வீட்டிற்கு போகும் போதே வீட்டுக்காரர் எல்லோரும் முற்றத்தில் நின்றபடி என்வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.நான் சைக்கிளை நிறுத்தியதும் அப்பாவின் கை கூரையில் செருகியிருந்த பிரம்பை உருவியது. பிறகென்ன அய்யோ அப்பா அடிக்காதேங்கோ இனி இப்பிடி செய்யமாட்டன்.......................

No Comment