Navigation


RSS : Articles / Comments


பயணம் .....................

12:04 PM, Posted by sathiri, No Comment

விமானம் இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தரையிறங்கவேண்டும் விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்கத் தொடங்குகின்றது என்கிற விமானியின் அறிவிப்பை கேட்டதுமே மனைவின் முகம் இறுகிப் போயிருந்தது..மனதிற்குள் ஊரிலுள்ள எல்லா கோயிலிற்கும் நேத்திக்கடன் வைத்திருப்பாள் என எனக்கு தெரியும் .விமனம் தரை தட்டியதும் உங்கடை சினேகிதங்களிற்கொல்லாம் நீங்கள் வாற விபரம் குடுத்திட்டீங்கள்தானே ஒரு பிரச்சனையும் வராதுதானே என்றாள்.ஒரு பிரச்சனையுமில்லை பேசாமல் வா என்று அவளை அதட்டினாலும் எனக்கு ஏ சி குளிரிலும் வியர்ப்பதைப்போல ஒரு உணர்வு இருந்தது. விமானம் நின்றதும்பயணிகள் வெளியேறத் தொடங்கினார்கள். முதல் வகுப்பு பகுதியிலிருந்த எனக்கு தெரிந்த நம்மவர் எனக்காக காத்திருந்தவர் என்னைக் கண்டதும் முதலில் எங்கை இந்தியாவுக்கோ என்று கேட்டு அசடு வழிந்ததை மனதில் வைத்து இந்தத் தடைவை எங்கை மெட்ராசுக்கோ என கேட்காமல் மிக அவதானமாக..அடுத்த மெட்ராஸ் பிளேனுக்கு இன்னும் 6 மணித்தியாலம் காத்திருக்க வேணும் வா ஏதாவது லோஞ்சிலை போய் டீ குடிச்சபடி கதைக்கலாமென்றவரிற்கு. நான் மெட்ராஸ் போகேல்லை இஞ்சை பொம்பேயிலை வெளியாலை போறன் என்றதும். பொம்பேயிலையா??யார் இங்கை இருக்கினம் ஏதும் பிசினஸ்சோ? என்றவர் முடிக்கு முதலேயே ஓமோம் இஞ்சை பால்தக்கரேயை ஒருக்கா சந்திக்கவேணும் திரும்பவும் பிரான்ஸ் வந்ததும் போனடிக்கிறன் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டு குடிவரவு குடியகல்வு(இமிக்கிறேசன்) பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


பால்தக்கரேயா? என்று தலையை சொறிந்தவர் நான் உண்மையிலேயே வெளியேதான் போகிறேனா என எட்டியெட்டிப்பார்த்து உறுதி செய்தவர் தனது விமானம் மாறும் பக்கத்தை தேடிப் போய்விட்டார். இமிக்கிறேசனில் எனது முறை வந்தது நான் எனது மற்றும் மனைவியின் கடவுச்சீட்டுக்களை அதிகாரியிடம் நீட்டினேன். எனது கடவுச்சீட்டை பிரித்து விசாவினைப்பார்த்தவர் கடவுச்சீட்டை கணணிஇயந்திரத்தில் ஒரு இழுப்பு இழுத்து பார்த்துவிட்டு வெளியேறும் சீலை எடுத்து ஒரு குத்துக் குத்தினார் அப்பொழுது மனைவியை லேசாய் திரும்பிப் பார்த்தேன் அப்பொழுழுதான் அவள் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி இழையோடியது.அடுத்ததாய் மனைவியின் கடவுச்சீட்டை பிரித்தவர் முன்னும் பின்னுமாய் பிரட்டினார் மனைவியையும் கடவுச்சீட்டையும் மாறிமாறிப்பார்த்தார்.பின்னர் எங்கே பழைய பாஸ்போட் என்றார். பழைய பாஸ்போட் பிரான்சில். கொண்டுவரவில்லை என நான் பதில் சொன்னதுமே மனைவி முந்திக்கொண்டு அது முடிந்ததால்தான் பிரான்ஸ் இந்திய தூதரகத்தில புதிதாய் எடுத்தோம் என்றாள். கடுப்பான அதிகாரி அது எனக்கு தெரியும் அதுதான் பழையதை கேக்கிறேன் என தொடங்கியவர் அதுவரை புழக்கத்தில் இருந்த ஆங்கிலம் இருவரிடமும் கிந்திக்கு தாவியது. எனக்கு பாதி புரிந்ததும் புரியாமலும் போகவே அப்பாடா நம்ம பிரச்சனை முடிஞ்சுது நான் ஒரு ஓரமாய் நிக்கலாமென ஒதுங்கிக்கொண்டாலும் .என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரு சில செக்கன் மௌனம் மட்டும் பேசியது எங்களை விடுவித்துக்கொண்டு ஒருவரையொருவர் நேராக பார்த்போது எங்கள் இருவரின் கண்களுமே கலங்கியிருந்தது.

டோனியலால் அடக்கமுடியவில்லை அழுதேவிட்டான் அவனை தட்டி தேற்றியபடி மனைவியின் சகோதரரையும் தேடிப்பிடித்தோம். அங்கேயும் சில நிமிட பாசபரிமாற்றங்கள் முடிந்தபின்னர் ஒரு வாடைகைக் காரில் ஏறினோம்.கார் நகரத் தொடங்கியது .ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவிப் பகுதியில்தான் எனது நண்பன் குடியிருந்தான். எனக்காக அந்தப் பகுதியிலேயே ஒரு விடுதியை பதிவு செய்து வைத்திருந்தான். விடுதி நோக்கி போய்கொண்டிருக்கும் போதே டோனியலின் பேச்சு முழுதுமே நடந்து முடிந்த இறுதி யுத்தம் பற்றியதாகவேயிருந்தது.இடையிடை எல்லமே வீணாய் போச்சுதே என்று சொல்லிக்கொண்டே வந்தான். நானும் வெளியால் நோட்டம் விட்டபடியே அவனிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மும்பை வெகுவாகவே மாறி விட்டிருந்தது அதிவேக வீதிகள் ..அகலப்படுத்தப்பட்ட சாலைகள் கட்டிடங்கள் என முன்னேறியிருந்தாலும் அதிகமான வாகனங்கள் புழுதி என்றும் முன்னேறியிருந்தது. நாங்கள் விடுதியயை வந்தடைந்ததும் மனைவியும் அவளது சகோதரரையும் விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் டோனியலுடன் அருகேயிருந்த அவனது அறைக்கு சென்றேன். குளவிக்கூடுகள் போல் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நாற்றமெடுத்த சாக்கடை வாசனை குறுகலான பாதை தாண்டி அவனது அறைக்குள் நுளையும் போது பார்த்துவா தலையில் அடிபடப்போகுது என்றான்.

குனிந்து உள்ளே நுளைந்தேன். ஒரு பிளாஸ்ரிக் பாயை விரித்துவிட்டு உக்காரு என்றவன் ஒரு துணிப்பையிலிருந்து இரண்டு பியரை எடுத்து வாயால் கடித்து துறந்தபடி கிளாஸ் வேணுமா என்றான்.வேண்டாமென சொல்லி ஒரு போத்தலை வாங்கிய நான் அறையினை ஒருதடைவை மேயந்தேன்.ஒரு 3 மீற்றர் நீளம் இரண்டு மீற்றர் அகலம் மட்டுமே கொண்டதொரு அறை டோனியலும் அவனது நண்பனும் குடியிருந்தனர் ஒரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி எந்தத் தளபாடங்களும் கிடையாது சுவரில் ஒரு கலண்டல் அதில் சிரித்தபடி ஜஸ்வர்யாராய். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு உடுப்புப் பெட்டிகள் இவ்வளவுதான். இந்தப் பகுதிகள் எனக்கு ஏற்கனவே பழகியிருந்தாலும் சுத்தமாக இருந்த ஜரோப்பாவில் நீண்டகாலம் இருந்துவிட்டு சாக்கடை நாத்தமும் அழுக்கான ஒரு இடத்தில் நுளையும் போது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது.அதனை நண்பனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்து வெளியேறவேண்டும் போல இருந்தது.வாயேன் முன்னையை போல கடற்கரையில் போயிருந்து பியரடிக்கலாமென்றேன். கடற்கரை முன்னையை போல இல்லடா. அந்த அட்டாக்கிற்கு பிறகு (மும்பைத்தாக்குதல்)இரவிலை சரியான கெடுபிடி கண்டபாட்டிற்கு போலிஸ்காரன் அடிப்பான் இரவு நேரத்திலை கடற்கரையோரமா ஒதுங்கிற ஜோடிகளை கூட போலிஸ் விட்டுவைக்கிறதில்லை.நீயும் வெளிநாட்டிலையிருந்துவந்து அடிவாங்கப் போறியா என்றான்.

போலிசிடம் அடிவாங்கிறதை விட இந்த நாத்தமே பறவாயில்லை என்று தோன்றியது. பியரை உறிஞ்சினேன். என்னடா இப்பிடியாயிட்டுதே என்கிற டோனியலின் புலம்பலை தவிர்ப்பதற்காக பொம்பே இப்ப எப்பிடி என்று தொடக்கினேன். பொம்பே இப்பொழுது கொலைகள் கொள்ளைகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் தாதா கும்பல்களின் கள்ள வியாபாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.அவர்களிற்குள் மோதல்கள் குறைந்துள்ளது.கலவரங்களை தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் பொம்பேயை விட்டு வெளியிடங்களிற்கு சென்றுவிட்டார்கள்.என்று மும்பைபையை பற்றி பேசினாலும் அடிக்கடி முள்ளிவாய்க்காலிற்கும் போய் வந்தோம் நேரம் அதிகாலை 5 மணியாகிவிட்டிருந்தது என்னை விடுதிவரை கொண்டு வந்து விட்டவன் மறுநாள் சந்திப்பாதாக விடைபெற்றான்.
இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று பேரில் முதலாவதாக நான் இப்பொழுது சந்தித்திருப்பவன்தான் டோனியல் இவனைப்பற்றி பயணத்தில்...................

பயணம் .....................

1:59 PM, Posted by sathiri, No Comment

பயணம் .....................

பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

எயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.

அவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ?? எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் சரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்

இப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன? இந்தியாவா? என்றான்.மீண்டும் எரிச்சல்.....

நான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.


அவரும் ஓகோ சிறிலங்காவா? நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.

என்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .

அதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அதுவரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்


முன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்...

அதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா ? அது கொலைகள் இல்லையா என்றேன்..அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா?? இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்தொகையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....

பயணம் தொடரும்...................................

மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும்.

4:17 AM, Posted by sathiri, 3 Comments


மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும்.

இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.

பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.


1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.

2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.

3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.

4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.

இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..

நன்றி சாத்திரி
தொடர்புகளிற்கு sathiri@gmail.com

ஒரு கடிதம் எழுதலாமா??

2:35 AM, Posted by sathiri, 2 Comments



வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது.


ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டாலும். கரண்டுபில்.வாடைகை துண்டு.அடையாள அட்டை.வீட்டு வாடைகை .தொலைபேசி பில் இப்பிடி ஒரு கட்டு கடுதாசி கொண்டு போகவேணும். அது பத்தாதெண்டு போற இடத்திலைவேறை பல கடுதாசியளிலை கையெழுத்து வாங்கி அவங்கள் வேறை கொஞ்ச கடுதாசியளை தலையிலை கட்டிவிடுவாங்கள். இப்பிடி இந்த கடுதாசியளை வைக்கிறதுக்கெண்டே தனி அலுமாரி ஒண்டு வேணும்.அதுமட்டுமில்லை கடிதப்பெட்டியை நான் கடிதப்பெட்டியெண்டு சொல்லுறதில்லை பில் பெட்டி எண்டுதான் சொல்லுறனான் ஏணென்டால் இப்ப வளந்த தொழிநுட்பத்தாலை யாரும் எனக்கு கடிதம் போடுறதும் இல்லை நானும் யாருக்கும் கடிதம் எழுதிறதும் இல்லை. மின்னஞ்சலும் ஸ்கைப்பும்தான். அதனாலை தபால் பெட்டிக்குள்ளை தனிய காசு கட்டவேண்டிய பில்லுகளும் விளம்பரமும் மட்டும்தான் கிடக்கும் .சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாய் கடுதாசி விழம்பரங்களை குறைக்கசொல்லி பிரான்ஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ஆனாலும் கடுதாசி குறைந்தபாடில்லை.பீசா கடை. தனியார் வங்கிகள். கிளியோசியம் நாடியோசியம் எண்டு ஏதாவது ஒரு கடுதாசி கட்டாயம் பெட்டிக்குள்ளை கிடக்கும் அதுகளை தனியா பிரித்தெடுத்து எறியிறதெண்டுறதே பெரியவேலை. சிலநேரம் அதுகளோடை சேத்து முக்கியமான கடுதாசிகளையும் சேத்து எறிஞ்சுபோட்டு பிறகு அவதிப்பட்டும் இருக்கிறன்.கடிதம் எண்டதும் தான் ஞாபகத்திற்கு வருகிது .முன்பு ஊரில் இருந்த காலங்களில் தபால் காரனை கண்டாலே யார் முதலிலை ஓடிப்போய் கடிதத்தை வாங்கிறதெண்டு என்னுடைய சகோதரங்களோடை ஒரு ஓட்டப் போட்டியே நடக்கும்..


பழுப்பு நிற உறையெண்டால் எண்டால் உள்ளுர் கடிதம் கரையிலை சிவப்பு நீல கோடு போட்ட உறையெண்டால் வெளிநாட்டு கடிதம். இந்த வெளிநாட்டு கடிதத்திற்காகத்தான் நாங்கள் அடிபடுறது காரணம் கடிதம் படிக்கிறதற்காக இல்லை அதிலை உள்ள முத்திரைக்காக . அதை கிழிச்செடுத்து சேகரித்து வைக்கத்தான். கையிலை பேனை பிடிச்சு கடிதம் எழுதி எத்தினை வருசமாகிறது??என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சுமார் பதினைந்து இருபது வருசங்களிற்கு முன்னர்அம்மாவிற்கு உறவுகளிற்கு நண்பர்களிற்கு என்று யாரிற்காவது கடிதம் எழுதுவது என்றாலே ஒரு தனி சுகமான அனுபவம்.அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன். உண்மையை சொல்லத்தானே வேணும்..அதே நேரம் கடிதம் எழுதும் அந்தந்த இடங்களிற்கு ஏற்றால் போல் சின்னதாய் ஒரு கவிதை ..பொன்மொழிகள். அடுக்கு மொழி..எதுகை மோனை என்று போட்டு கடிதத்தை அழகு படுத்தி நாலு ஜந்து பக்கத்தில் எழுதியவற்றை எல்லாம் சரியாக எழுதியிருக்கிறோமா என் ஒன்றிற்கு பல தடைவை சரிபார்த்;து என்பலப்பில் போட்டு ஒட்டி அனுப்பி விட்டு அதற்கான பதில் வருகிறதா என கடிதக்காரனையும் தபால் பெட்டியையும் பார்த்;து ஏங்கிய காலங்கள்.எத்தனை....அது மட்டுமில்லை வாழ்த்து மட்டைகள் அனுப்புவதற்காக ஒவ்வொருவருக்கும் எப்படியான வடிவங்கள் அல்லது படங்கள் பிடிக்குமென தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் அவர்களிற்கான வாழ்த்து மட்டைடைகளை பல கடைகளில் ஏறி இறங்கி தெரிவுசெய்து அவரவருக்கு ஏற்றால் வசனங்களை எழுதி அனுப்புவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இந்த வருடம் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ்சிலும் ..தொ.பேசியிலும். மின்னஞ்சலிலும் வருடப்பிறந்த சில நிமிடங்களிலேயே முடிந்து போய்விட்டது. நான் பல வருடங்களாய் நாடு நாடாய் அலைந்து திரிந்த காலங்களிலும் சில கடிதங்களை தவற விடாமல் பொக்கிசமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் அவற்றில் முதல் காதலியின் கடைசிக்கடிதம்... தற்சயம் உயிரோடு இல்லாது போய்விட்ட சில நண்பர்களினது கடிதங்கள்...அம்மாவினது சில கடிதங்கள். என்பன முக்கியமானது. பேனை பிடித்து எழுதாததாலை என்ரை கையெழுத்து என்ன வடிவத்திலை இருக்குமெண்டதே மறந்து போச்சு. இப்ப பேனையை தொடுறதே எங்காவது அலுவலகங்களில் கையெழுத்து போடவும்.(முக்கியமாய் வங்கியில் கடன் பத்திரங்கள் )வீட்டு வாடைகை கட்டுவதற்கு காசோலையை நிரப்பி கையெழுத்து போட மட்டும்தான். மற்றும்படி இந்த கதையை எழுதியதைப்போலை கணணிக்கு முன்னாலை இருந்து டொக் .... டொக் ..... டொக்...தான்.. விரைவில் இதுவும் மாறி ஸ்கிறீன்டச் திரை தொடுகை எழுத்து கணணி வாங்கிட்டால் டொக் ..டொக் சத்தமும் வராது. காலப்போக்கிலை நாங்கள் மனசிலை நினைக்கிறதே கணணி திரையிலை எழுத்துக்களாய் விழுகிற காலம் வந்தாலும் வரலாம்..அப்பிடி நேர செலவு மிச்சம் எண்டு சந்தோசப்பட்டாலும்.. மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...

யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை

3:31 AM, Posted by sathiri, No Comment




மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.

அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…

அப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்? என்ன செய்கிறார்?

தனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.

எனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வாழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…

கணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…?

வன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்?

தமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

இணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்..? அவளின் கதை என்ன படியுங்கள்..

இந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.

அப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.

சிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற்றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.

அந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)

இன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.

ஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.

சிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியில் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.

தன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.

தன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.

இச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.

அடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.



உதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.


தற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.


வன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

பல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.

ஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.
http://www.youtube.c...player_embedded

http://www.youtube.com/watch?v=JC6EsXyv3i8
பிற்குறிப்பு :-
மேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.
கலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

மேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..

உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன்

3:01 PM, Posted by sathiri, No Comment




நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார்.

இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களின் உதவியாளர் கவிஞர் பொன்காந்தன்.மணியன்குளம் கிராம சங்கத்தலைவர் திரு சூரி மற்றும் மாதர்சங்கத் தலைவி ரஜனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன்.அந்த மக்கள் நம்பிக்கைகளை இழந்து போகாமல் மீண்டும் அவர்கள் வாழ்வினைக் கட்டியெழுப்ப உறுதியோடு உழைக்கவேண்டும் என்பதோடு அவர்களின் குழந்தைகளிற்குக் கல்வியினைக் கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க முன்வர வேண்டுமென்றும், அதற்கான உதவிகளையும் வழிவகைளையும் அந்த மக்களிற்குப் பெற்றுக்கொடுப்பதற்காக என்றென்றும் நேசக்கரம் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் உறுதுணையாக இருப்போம் என்கிற உறுதியினையும் தீபச்செல்வன் அவர்கள் அம்மக்களுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.



இந்த மக்களிற்கான உதவிகளை வழங்கி அவர்களிற்கான உங்கள் பாசக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நேசக்கரம் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
உதவி வழங்கல் மற்றும் மணியன்குளம் கிராமம் பற்றி கருத்துக்களோடு தீபச்செல்வனுடனான உரையாடல் ஒலிப்பதிவினைக் கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.
உதவி வழங்கல் படங்களை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்தவும்.

Akka please call me…after 13.00pm

1:57 PM, Posted by sathiri, No Comment

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

1:51 PM, Posted by sathiri, 2 Comments

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்
போக்குவரத்து 100 ரூபாய்
உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்
மொத்தம் 3000 ரூபாய்

ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய்






உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் முலமாகவோ அல்லது தொ.பே மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்..

இங்குள்ள பிள்ளைகளின் விபரங்கள் மற்றும் படங்களை நேசக்கரத்தின் அனுமதியின்றி வேறு அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ பயன்படுத்தி மேசடிகளில் ஈடுபட்டால் நேச்கரம் அமைப்பு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் என்பதனை அறியத் தருகின்றோம்.

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு

9:47 AM, Posted by sathiri, No Comment

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே.அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.

ஒலிப்பதிவினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்

நன்றி

பல்கலைக்கழகமாணவர்கள் தற்கொலைகள் பகிர்கிறார் தீபச்செல்வன்

12:10 PM, Posted by sathiri, No Comment

நேசக்கரம் அமைப்பின் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரும் யாழ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளலுமான தீபச்செல்வன் அவர்களுடனான ஒரு உரையாடல்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது.

இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.

முன்னாள் போராளி முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்

1:14 AM, Posted by sathiri, One Comment

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

உருக்கும் உண்மைகள் 3

2:59 PM, Posted by sathiri, No Comment

விரக்தியே வாழ்வாய்போன விதுசன்

விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியையும் பிடித்தபடி செல் வந்தபோதெல்லாம் வீ்ழ்ந்து படுத்தபடி ஓடிக்கொண்டேயிருந்தான். அப்படித்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் ஒரு காலையில் செல்கள் சீறிவரும் சத்தம் கேட்டது விதுசனும் பங்கரை தேடி ஓடமுதல் வீழ்ந்து வெடித்த செல்களின் சத்தங்களிடையே ..அய்யோ அம்மா என்றொரு சத்தத்துதடன் விதுசன் மயங்கிப்போனான்..

அவன் கண்விழித்துப்பார்த்தபொழுது செஞ்சிலுவைச்சங்க தற்காலிக மருத்தவ முகாம் ஒன்றில் படுத்திருந்தான் .அருகில் அவனது அப்பாவும் அழுதபடி தம்பியும் நின்றிருந்தனர்.. உடம்பின் இடப்பக்கம் ஒரே வலியாய் இருந்தது.இரு கைகளையும் ஊன்றி எழுந்திருக்க முயன்றான் அவனது வலக்கையை மட்டுமே ஊன்றக்கூடிதாகவிருந்தது..இடக்கையை ஊன்றமுடியவில்லை. அவனது இடக்கை முங்கைக்கு மேலே காணவில்லை..அந்த இடத்தில் ஒரு பந்தம் போல கட்டுப்போட்டிருந்தது..."அப்பா என்ரை கை என்று" அழுதான்..அவனது தந்தையும் அழுதார் அவனது தம்பியும் அழுதான் ..அவர்களால் அது மட்டுமே முடிந்தது..இது இவனிற்கு வீழ்ந்த இரண்டாவது இடி.. இராணுவம் முன்னேறிக்கொண்டேயிருந்தது மாத்தளனை நெருங்கிவிட்டார்கள்.ஒரு மாதமளவில் தற்காலிக மருத்துவ மனைகளையும் மூடிவிட்டு செஞ்சிலுவைச்சங்க வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். விதுசன் தங்கியிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டது. மிக மோசமான காயக்காரர்களை மட்டும் செஞ்சிலுவைச்சங்கக் கப்பலில் எற்றிக்கொண்டு புறப்பட்ட வைத்தியர்களிடம்.. "டொக்ரர் எனக்கு கை இன்னும் நோகுதுஎன்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ "என்றழுதான் அவர்கள் போய்விட்டார்கள்...புது மாத்தளன் பகுதியில் இறுதிப் பேரவலத்தின் முதலநாள் 16 ந்திகதி அதிகாலை 4' மணியளவில் இருளைக்கிழித்துக்கொண்டு மீண்டும் ஒரு குண்டுமழை... குண்டுச்சத்தங்களையும் மீறிய மனித ஓலம். இலட்சக்கணக்கான மக்கள் சில கிலோ மீற்றர் தூரத்தற்குள் பொறிக்குள் அகப்பட்டவர்களாய் யார் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். குண்டுச்சத்தத்தில் நித்திரையால் திடுக்கிட்டு விழித்த விதுசனும் அருகில் படுத்திருந்த தன் தம்பியின் கையை பிடித்தபடி தந்தைய தேடினான்.காணவில்லை

.அப்பா ..அப்பா ..என்று அலறியபடி தந்தையை தேடி ஓடிய விதுசனையும் தம்பியையும் யாரே ஒரு பதுங்கு குழிக்குள் இழுத்துப் போட்டார்கள்...சிலமணி நேர குண்டுச்சத்தம் புழுதியும் புகையுமாய் ஓய்ந்து போனது. மெல்ல சூரியவெளிச்சம் எழுந்தபொழுது ஒல்லோரும் சரணடையும்படி தமிழில் ஒலிபெருக்கி சத்தம கேட்டது அதைத்தொடர்ந்து சிங்களத்தில் கதைக்கும்சத்தங்கள்..இராணுவத்தின் நீட்டிய துப்பாக்கிகள் முன்னால் உடலில் உயிர் ஒட்டியிருந்த அனைவரும் கைகளை துக்கியபடி அவர்கள் காட்டிய பகுதியால் போய்க்கொண்டிருந்தனர்.விதுசனும் தன் ஒற்றைக்கையை துக்கியபடி தம்பியுடன் போய்க்கொண்டிருந்தான்..போகும் வழியெங்கும் பின்னர் அடுத்தடுத்து மாற்றப்பட்ட முகாம்கள் எங்கும் தன் தந்தையின் முகத்தை தேடினான்..காணவில்லை.. இது இவனிற்கான மூன்றாவது இடி....ஆறுமாதகால தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து தம்பியுடன் வடமராட்சி மணல்காடு இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டான்..அங்கு சென்ற அவனிற்கு மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வடமராட்சி பகுதியில்தான் அவனது அம்மம்மா.(தாயின் தாயார்) வசித்துவந்தார்.முன்னர் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு போய்வந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தம்பியையும் அழைத்தபடி அம்மம்மாவின் வீட்டைத்தேடிப்போனான்.தன் மகளை இழந்து தவிக்கும் அம்மம்மா தங்களைக்கண்டதும் ஆசையில் ஓடிவந்து கட்டியணைப்பாரென தவிக்கும் கனவுகளுடன் அவர்களது கதவைத் தட்டியவனிற்கு ஏமாற்றமே..

» "என்ரை மகளே இல்லாமல் போட்டுது அது பெத்த நீங்கள் எனக்கென்னத்துக்கு அதிலை ஒரு சனியனிற்கு கைவேறை இல்லை உங்களை வைச்சு சோறு போட என்னாலை ஏலாது போய் தொலையுங்கோ" என்று துரத்தி விட்டாள்.ஆசையாசையாய் தேடிப்போன அம்மம்மாவும் துரத்திவிட்ட கவலையில் நான்காவது இடியையும் தாங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு திரும்பிய அண்ணனும் தம்பியும். அங்கு முகாமில் தங்கியிருக்கு இன்னொரு தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் குடிசையில் முடங்கிப்போனார்கள்..இப்படியான நேரத்தில்தான் கடந்த மாதம்.(பங்குனி.2010.) எமது நேசக்கர உறுப்பினரான கமலாதேவி அவர்கள் மணற்காட்டு முகாமிற்கு சென்றவேளை விதுசனையும் அவனது தம்பியின் நிலைமைகளை தெரிந்து கொண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்கி பாடசாலைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் விதுசனின் எதிர்காலத்திற்காக வங்கியில் ஒரு தொகை பணமும் வைப்பிலடப்பட்டது.வழைமைபோல இந்த மாதம் குழந்தைகளிற்கான உதவிகளை வழங்குவதற்காக பாடசாலை சென்ற நேசக்கரம் உறுப்பினர்களிற்கு விதுசன் ஒரு வாரமாக பாடசலை வரவில்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களாய் அவனைத் தேடத் தொடங்கினார்கள். அவன் தங்கியிருந் வயதான பெண்ணின் வீட்டிலும் அவன் இல்லை அவனது தம்பிக்கும் அவன் எங்கு போனான் எனத்தெரியவில்லை. அவனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் தொடர்ச்சியான தேடுதலில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.அப்பொழுதுதான் அவன் மீது விழுந்த 5 வது இடி பற்றிய விபரம் தெரியவந்தது..

விதுசனிற்கு நேசக்கரம் கல்வி உதவியுடன் பணஉதவி செய்த விபரம் அறிந்துகொண்ட அவனது சித்தப்பா முறையான ஒருவர். ஒருநாள் பாடசாலையால் வீடு திரும்பிக்கொண்டிருந்த விதுசனை அழைத்துப்போய் தன்னுடன் தங்கி இனி படிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நேசக்கரம் ஊடாக கிடைத்த பணத்தினை தன்னிடம் தரும்படியும் வேறு யாரிடமும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.ஆனால் நேசக்கரம் அவனிடமோ வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்திருக்கவில்லை அவனது பெயரில் வங்கி கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் நிதந்தர சேமிப்பாகவே அந்தப் பணத்தினை இட்டிருந்தது. அதே நேரம் விதுசன் 18 வயதான பின்னர்தான் அவன் அந்தப் பணத்தினை வங்கியிலிருந்து எடுக்கலாம்..இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பியோடி வந்த விதுசன் மீண்டும் சித்தப்ப்பா தன்னை தேடிவரலாம் என்கிற பயத்தில் பாடசாலைக்கும் போகாமல் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கும் போகாமல் வேறொரு தெரிந்தவர்கள் வீட்டில் ஒழிந்திருந்தவேளை நேசக்கரம் உறுப்பினர்கள் அவனை மீண்டும் மீட்டெடுத்துள்னர்.தற்சமயம் அவனும் அவனது தம்பியும் வவுனியாவில் உள்ள நேசக்கர இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் அங்கிருந்தபடியே கல்வியினை தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன..


விதுசனின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..நன்றி

உருக்கும் உண்மைகள் 2

11:52 AM, Posted by sathiri, One Comment

எங்கே குட்டியண்ணா

வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்தபடி சியாமளா தொங்கிக் கொண்டே செல்வாள்.தன்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றைய சகோதர சகோதரிகளைப்பற்றி அவளிற்கு கவலையே இல்லை. இறுதி யுத்தத்த மேகங்கள் வன்னி மண்ணை முடிக்கொண்டபொது வானில் குண்டு வீச்சு விமானங்களின் சத்தம் கேட்டபோதெல்லாம் குட்டியண்ணா முதலில் தேடுவது இவளைத்தான் இவளையும் தூக்கியள்ளிக்கொண்டு ஓடிப்போய் பங்கரிற்குள் (பதுங்குகுழி)தள்ளி பாதுகாத்துக்கொள்வான்.

ஆனால் இராணுவம் முன்னேறிவர இவர்களது வீடும் காணியும் பதுங்கிய பங்கரும் பறிபோக எங்கே போவதென்று தெரியாமல் போய்க்கொண்டிருந்த குடும்பத்துடனருடன் குட்டியண்ணாவின் கைகளை பிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள் சியாமளா.முற்றுகைக்குள் வீழ்ந்த முல்லைத்தீவு மண்ணில் முடங்கிப்போன மக்களில் இவர்களும் அடங்கினர்..இறுதி யுத்தம் குண்டுச்சத்தங்களும் அவலக்குரலும். மரண ஓலங்கள் மட்டுமே செவிகளில் கேட்கத்தொடங்கியிருந்தது. வீட்டிற்கொருவர் போராடபோகவேண்டும் என்றிருந்த நிலைமாறி வீட்டிலிருந்த அனைவருமே போராடவேண்டும் என்கிற நிலையையும் கடந்து வீடு வாசல் அத்தனையையும் இழந்து முற்றுகைக்குள் முடங்கிப்போன அனைவருமே வயது வித்தியாசமின்றி போராடவேண்டும் என்கிற இறுதிக்கட்டம்..அப்படியொரு பொழுதில் அவளது குட்டியண்ணாவையும் காணவில்லை ..போய்விட்டான்...குட்டியண்ணா எங்கே என்று சியாமளா சகோதரியிடம் கேட்டு அழுதாள்...வருவார் அழக்கூடாது கெதியாய் வருவார். இதைத்தான் அவர்களால் சொல்ல முடிந்தது..ஒரு நாள் இரண்டு நாட்களாகி. சிலவாரத்தில் முள்ளிவாய்க்காலும் வீ்ழ்ந்துபோக அத்தனை கொடிய கோர யுத்தம் எதவும் சியாமளாவை பாதிக்கவில்லைஅவளது கேள்வி தேவை எல்லாமே குட்டியண்ணாவைப்பற்றியதாகத்தான் இருந்தது. அவளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல்..குட்டியண்ணா வெளிநாடு போயிருக்கிறார்..எங்களுக்கு இருக்க வீடு பிள்ளைக்கு நல்ல உடுப்பு விரும்பின சாப்பாடு எல்லாம் வாக்கக்கூடியமாதிரி உழைச்சு நிறைய காசோடை திரும்பிவருவார்.அதுவரைக்கும் அழக்கூடாது என்றொரு பொய்யை சொல்லி சியாமளாவை தேற்றி வைத்திருக்கிறார்கள் அவளது சகோதரிகள்..

குட்டியண்ணா இன்று உயிருடன் இருக்கின்றானா??அல்லது ஏதோவொரு இரகசிய இராணுவத்தடுப்புமகாமில் வாடுகின்றானா என்பது எவரிற்கும் தெரியாது. சியாமளா சகோதரிகளுடன் மணல்காடு அகதி முகாமில் குட்டியண்ணா வெளிநாட்டிலிருந்து திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறாள். முகாமிற்கு தொலைபேசிமூலம் சியாமளாவுடன் கதைத்தபொழுது அவள் என்னிடம் கேட்டது மாமா நீங்கள் வெளிநாட்டிலை இருந்துதானே கதைக்கிறீங்கள் உங்களிற்கு குட்டியண்ணாவை தெரியுமா???என்பதுதான்.அப்பொது எனக்கு சியாமளாவின் கதை முழுதுமாகத்தெரியாததால் நானும் தட்டுத்தடுமாறி "பிள்ளை வெளிநாடு பெரிய இடம் இஞ்சை உங்கடை குட்டியண்ணாவை தேடுறது கஸ்ரம் ....கண்டு பிடிச்சால் உங்களோடை கதைக்க வைக்கிறேன்.என்று சொல்லி முடித்தேன்.பின்னர் அவளது சகோதரி முழுவிபரங்களும் சொன்னபொழுதுதான். சியாமளாவின் குட்டியண்ணா வெளிநாட்டில் எங்காவது கிடைக்கமாட்டானா என்கிறதொரு நப்பாசை எனக்குள் தோன்றியது..இப்படி பலநூறு சியாமளாக்கள் தங்கள் குட்டியண்ணாக்களின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த முகாம்களில் வாடிக்கிடக்கிறார்கள்..எங்களால் குட்டியண்ணாக்களாக மாறமுடியாது ஆனால் குட்டியண்ணா உயிருடன் இருந்தால் என்னென்ன தன் தங்கைக்கு செய்வாரோ அதையாவது எம்மால் செய்ய முடியுமல்லவா????????

சியாமளா என்கிற சிறுமியின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

உருக்கும் உண்மை கதைகள்..உறவு 1

10:33 AM, Posted by sathiri, 4 Comments


வணக்கம் உறவுகளே....
முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் இங்கு நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி


வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்துவிட்டதொரு மகி்ழ்சியுடனும் வாழ்ந்த காலகட்டம்.அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் இளம்பருவத்தினனாக இருந்த புவிகரனிற்கும் ஒருத்தியின் மீது காதல் ஏற்பட்டது.வழைமைபோல காதல் என்றாலே எதிர்க்கிற எமது சமூகத்தின் எதிர்ப்பும் அவனிற்கு தேன்றவே காதலும் தமிழீழ காவல்துறையின் உதவியுடன் காதலித்தவளை கரம்பிடித்து புதுமணத்தம்பதிகளாய் கிளிநொச்சி நகர்பகுதியில் குடியேறினான்.அவர்களின் காதலின் அடையாளமாய் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது.அவன் செய்தது கூலிவேலைதான் ஆனாலும் குடும்பம் மகிழ்ச்சியாகவேயிருந்தது. தான் அதிகம் படிக்கவில்லை ஆனால் தன்மகளை பெடிய படிப்புகள் படிப்பித்து எதிகாலத்தில் தமிழர் நிருவாகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக்குவது என்கிற எதிர்காலக்கனவுகளுடன் அவனது வாழ்நாட்கள் உருண்டேடிகொண்டிருந்தகாலத்தில். இலங்கையில் மீண்டும் சிறிது சிறிதாக குண்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கியது.தமிழீழ நிருவாக எல்லைகள் சுருங்கத்தொடங்கிக்கொண்டிருந்தன.அதே நேரம் எல்லைகளிற்கு உள்ளேயும் ஆழஊடுருவும் படைகளால் கிளைமேர்தாக்குதல்களும் தொர்ந்துகொண்டிருந்தது.

ஆனாலும் …. அங்கு வாழ்ந்த மக்களைப்போல ஏதோ ஒரு நம்பிக்கையில் தனது அன்றாட வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.5ந்திகதி ஜப்பசி மாதம் 2008 ம் ஆண்டு அன்று வழைமைபேல தன்னுடைய மனைவி பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்கு புறப்பட்டவன் கிளிநொச்சி உருத்திரபுரம் சாலையில் வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான் ஒரு மரத்தை தாண்டும்பொழுது அவனை ஒரு பயிரோ வாகனம் ஒன்றும் வேகமாகக் கடந்தது.டமால் என்றெரு பெரிய குண்டுச்சத்தம் அது மட்டும்தான் அவனிற்கு நினைவிருந்தது.கண்விழித்து பார்த்தபொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் அவனருகில் அழுதபடி அவனது மனைவி குந்தையும் நின்றிருந்தனர்.எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை உடலெல்லாம் ஒரே வலியாக இருந்தது.அவன் விழித்துவிட்டதை கவனித்த தாதியொருவர் அருகில் வந்து "அசையாமல் படுத்திருங்கோ கிளைமேர் அடியிலை உங்கடை இடக்கால் முறிஞ்சிட்டுது ஒப்பிறேசன் செய்திருக்கிறம் காலை அசைக்கவேண்டாம்" என்று ஆலோசனை கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்..அப்பொழுதுதான் அவனிற்கு எல்லாம் நினைவிற்கு வந்தது.அடுத்தடுத்து பல சத்திர சிகிச்சைகள் நடந்தது.அவனது முழங்கால் மேசமாக பாதிக்கபட்டதால் அவனால் காலை மடிக்கமுடியாதென்பது பின்னர் தெரியவந்தது.

அவனது வருமானத்தை மட்டுமே நம்பியிருந் அவனது குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது.தன்னை பார்க்க வரும் மனைவி மகளிடம் " இன்னும் கொஞ்நாள் பொறுங்கோ நான் திரும்ப வந்ததும் நிலைமை சரியாயிடும் நான் என்ன பாடுபட்டாவது என்ரை பிள்ளையை படிப்பித்து பெரியாளாக்குவன் "என்று சொல்லிக்கொள்வான். நாளாக அவனது மனைவியும் வருவது குறைந்து போய் இறுதியில் வைத்தியசாலைப்பக்கம் வராமலேயே நிறுத்திவிட்டாள். அவள் எங்காவது வேலைக்கு போகத்தெடங்கியிருப்பாள் அதனால் நேரம் கிடைக்கமலிருக்கும் என அவனும் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். மூன்றரை மாதங்களின் பின்னர் ஓரளவு குணமடைந்தவன் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கத்தொடங்கியிருந்தான். எப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்கிற அவனது நச்சரிப்பிற்கு ஒருநாள் வைத்தியரும் இனி போகலாம் அடிக்கடி வந்து காயத்திற்கு மருந்து கட்டவும் என்று சொன்னதுதான் தாமதம் அவன் தன்னுடைய கைத்தடியுடன் மனைவி மகளை பார்ப்பதற்காய் அவன் அத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆசைகளுடன் வீடு நோக்கி போனவனிற்கு வீட்டில் யாரும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தான்..அவர்கள் அங்கிருந்து போய் ஒரு மாதங்களாகிவிட்டது ஆனால் எங்கையென்று தெரியாது என்கிற பதில்தான் கிடைத்தது. தெரிந்தவர்கள் உறவினர்கள் என்கிற தேடல் தொடர்ந்தது..

ஒருவாறு அவள் இருக்குமிடத்தை அறிந்து அங்கு போய்விட்டான்..அங்கு போன பின்னர்தான் தெரிந்தது அவள் மனைவி அப்பொழுது இன்னொருத்தனிற்கு மனைவியாகிருந்தாள். அவர்களிற்குள் வாக்குவாதங்கள் நடந்தது பிள்ளையை தன்னிடம் தருமாறு சண்டைபிடித்தான். இறுதியாய் பிள்ளையை பலவந்தமாக தூக்கிக்கொண்டு கைத்தடியை ஊன்றியபடி நடக்க முயன்றவன் சாரம் அவிழ்ந்து போக சாரத்தையும் பிடிக்கமுயன்று தட்டுத்தடுமாறி நிலத்தில் விழுந்துபோனான். வேகமாய் வந்தவள் பிள்ளையை பறித்து விட்டு "உனக்கு காலும் ஏலாது இனி நீ பிச்சைதான் எடுத்து பிழைக்கலாம் நீ எப்பிடி பிள்ளையை வளக்கப்போறாய் எங்கையாவது போய் செத்து தொலைஞ்சு போ..."என்ற அவளது வார்த்தைகள் அவனிற்கு இன்னொரு கிளைமோர் வெடித்ததைப்போல இருந்தது..பிள்ளையையும் இழந்து அவனது எதிர்காலக்கனவுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகள் போலவே சுருங்கிப்போய் சூனியமாய் நின்றது.

புவிகரனின் இன்றைய நிலையை அவனது குரலிலேயே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9

12:17 PM, Posted by sathiri, 3 Comments

ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9
- இரா.துரைரத்தினம் -
R.Thurairatnam
thurair@hotmail.com

முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி.
தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான்.
தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது.
ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது.
ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அமைய இருக்கின்றது.
இதை நான் சொல்லும் போது இவர் என்ன மகிந்தவின் பக்கம் சென்றுவிட்டாரா மகிந்தாவுக்காக அல்லது டக்ளஸ், கருணாவுக்காக பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?என்று நீங்கள் யோசிக்கலாம்.
வடக்கு கிழக்கில் தேர்தல் அரசியல் களநிலவரங்களை பார்க்கும் போது எமது அரசியல் பலத்தையும் மகிந்தவின் கைகளில் கொடுத்துவிடப்போகிறோம் என்று அச்சமே எழுந்திருக்கிறது.
சிங்கள தேசம் வகுத்த சூழ்ச்சியினால் வடக்கு கிழக்கில் இன்று ஒன்றுமையாக இருந்து செயற்பட வேண்டிய தமிழர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமது பலவீனம் வெளிப்பட்ட நிலையில் அச்சமடைந்திருந்த டக்ளஸ், கருணா போன்றவர்கள் இன்று காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு நாம் படுகின்ற பாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக நமது தமிழர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எப்படி சொல்லமுடியும். வடக்கு கிழக்கில் தமிழர்கள்தான் வெற்றிபெறப்போகிறார்கள். உங்களுக்கு என்ன பையித்திமா பிடித்து விட்டது என்று என்னை கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.
ஆனால் யதார்த்தம் எங்கள் விருப்பத்திற்கு மாறாகத்தான் இருக்கிறது.

ஓவ்வொரு மாவட்டமாக இருக்கும் களநிலவரங்களையும் வாக்குகள் எவ்வாறு பிரிக்கப்பட போகிறன என்பது பற்றியும் முதலில் பார்ப்போம். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு பின்னர் தமிழரின் அரசியல் தலைமை யாரிடம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
இம்முறை தமிழர் பிரதேசங்களில் வாக்குகள் பிரிக்கப்பட்டு முன்னணியில் இருக்கும் தமிழ் கட்சிகளின் வாக்குவங்கிகளை குறைப்பதற்காகவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காகவும் மகிந்த ராசபக்ச அரசு மிகவும் திட்டமிட்டு செயற்பட்டிருக்கிறது.
இலங்கையிலேயே ஆகக்கூடிய கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடும் மாவட்டங்களில் அம்பாறை முதலாம் இடத்திலும் மட்டக்களப்பு இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

முதலில் யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்( கிளிநொச்சி தொகுதி உட்பட) வாக்காளர்களாக தேர்தல் திணைக்களத்தால் 7இலட்சத்து 21ஆயிரத்து 359பேரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் புள்ளிவிபரத்திணைக்களம் இறுதியாக 2008ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 18வயதிற்கு மேற்பட்டவர்கள் 3இலட்சத்து 70ஆயிரத்து 620பேரே இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், யாழ்மாவட்டத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முதல் வெளியேறியவர்கள் உட்பட அங்கு இல்லாத பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாததன் காரணமாகவே 7இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கிருந்த வாக்காளர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் 7இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தார்கள் என்று கூட பிரசாரம் செய்தனர்.
2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்த 95வீதமான மக்கள் வாக்களித்தனர்.
தற்போது கிளிநொச்சி தொகுதி மற்றும் பருத்தித்துறை தொகுதியின் பெரும்பகுதியான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப்;பிரிவில் உள்ள மக்களில் பலர் இறுதிக்கட்ட போரின் போது இறந்துள்ளனர். பலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். முகாம்களில் இருக்கும் பலர் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வில்லை. இதன் காரணமாக நடைபெறப்போகும் தேர்தலில் 2இலட்சத்து 50ஆயிரத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கப்போகிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 27 அணிகள் போட்டியிடுகின்றன. 324 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்து பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் கட்சிகள் வரிசையில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, பிள்ளையான் அணி ஆகிய கட்சிகளும், சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் டக்ளஸ் போன்றோரும், ஐக்கிய தேசியக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவி உட்பட சிலரும், இடதுசாரி முன்னணியில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரும், போட்டியிடுகின்றனர். மகிந்த ராசபக்சவின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சியினால் நிறுத்தப்பட்டிருக்கும் சுயேச்சைக்குழுவுக்கு செங்கைஆழியான் க.குணராசாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழுவுக்கு எழுத்தாளர் தெணியானும் தலைமை தாங்குகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 44154 வாக்குகள் யாழ்.மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இம்முறை இந்த வாக்கு எண்ணிக்கை அக்கட்சிக்கு அதிகரிக்குமே ஒழிய அவை வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களின் தனிப்பட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் நிவாரணங்களை நம்பியிருக்கும் அகதி முகாம் மக்கள் அரசு தரப்பினருக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வாக்கு இப்பொதுத்தேர்தலில் 50ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகுதியாக இருக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் வாக்குகளைத்தான் ஏனைய 26அணிகளும் பிரிக்கப்போகின்றன.

சுயேச்சைக்குழுக்கள் ஆசனங்கள் எதையும் எடுக்கப்போவதில்லையாயினும் அவர்களும் கணிசமான வாக்குகளை பிரித்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெணியான் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழு சுமார் 10ஆயிரம் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக சில சுயேச்சைக்குழுக்களும் கணிசமான வாக்குகளை பிரிக்கலாம். இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
திருமதி மகேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கூட சுமார் 15ஆயிரம் வாக்குகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.( 2000, 2001ஆண்டு தேர்தல்களில் மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
வெற்றிபெற முடியாதவர்கள் என கணிக்கப்படும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் என இந்த 24 அணிகளும் மொத்தம் 50ஆயிரம் வாக்குகளைப்பெறுவார்கள் என்பது திண்ணம்.
எனவே மிகுதி 85ஆயிரம் அல்லது 90ஆயிரம் வாக்குகளைத்தான் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் தங்களுக்குள் பிரிக்கப்போகிறார்கள்.
இதிலிருந்து தமிழ் கட்சிகள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதால் யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கு எவ்வாறு வெற்றிவாய்ப்பை தேடிக்கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு
,
வவுனியா, மன்னார் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னிமாவட்டத்தை பார்ப்போம். வடக்கு கிழக்கில் வன்னிமாவட்டம் மட்டுமே தமிழர் தரப்பிற்கு ஓரளவு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தாலும் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதாலும் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதாலும் தமிழர்களுக்கு வர வேண்டிய இரு ஆசனங்கள் முஸ்லீம்கள் சிங்களவர்கள் கைகளுக்கு போகப்போகிறது என்பதே உண்மை.
வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 16 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 28அணிகளில் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்மாவட்ட வாக்காளர்களின் இனவிகிதாசார அடிப்படையில் 5 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதால் அதிலிருந்து தெரிவு செய்யப்படப்போவர்கள் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாகத்தான் இருப்பார்கள்.
வன்னிமாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 66ஆயிரத்து 976ஆக இருந்த போதிலும் இவர்களில் கணிசமானவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தின் போது இறந்துவிட்டார்கள். மிகுதிப்பேர் வன்னி மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இந்நிலையில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை. இது தவிர வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சுமார் 7ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் வன்னி மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறதே ஒழிய அதிகரிக்கவில்லை. இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திலும் சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (சிலோன் பாம் உட்பட பல பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவது பற்றி பின்னர் தனியாக பார்ப்போம்)

வன்னி மாவட்டத்தில் 28அணிகள் போட்டியிட்டாலும் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி இணைந்த ஐக்கிய தேசியக்கட்சி, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில்தான் கடுமையான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.
இம்முறை கணிசமான தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்ற தமிழர்களும், அப்துல் ரிசாத் பதியுதீன், மக்ருப் போன்ற முஸ்லீம் வேட்பாளர்களும், பிரேமரத்ன சுமதிபால, சமிந்த உபுல் பாலசூரிய ஆகிய சிங்களவர்களும் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்றவர்கள் கணிசமான வாக்குகளைப்பெற்று அக்கட்சிக்கு கொடுத்தாலும் அவர்கள் அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படப்போவதில்லை. ஏனெனில் முஸ்லீம்கள் அனைவரும் ஒருமித்து தமது விருப்பு வாக்குகளை ரிச்சாட் பதியுதீன், மக்ருப் போன்றவர்களுக்கே அளிப்பார்கள். முஸ்லீம் வேட்பாளர்களே 30ஆயிரத்திற்கு மேற்பட்ட விரும்பு வாக்குகளை பெறும் சந்தர்ப்பமே காணப்படுகிறது. இவ்வளவு விருப்பு வாக்கை கனகரத்தினமோ கிசோரோ, பெற முடியாது. எனவே தமிழ் வேட்பாளர்கள் வாக்குகளை எடுத்து முஸ்லீம் சிங்கள வேட்பாளர்களைத்தான் வெல்ல வைக்க முடியும். அந்தக் காரியத்தை இந்த இருவரும் கச்சிதமாகச் செய்துமுடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இம்முறை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஒரு ஆசனத்தையும் பெறலாம் என நம்ப்படுகிறது. சில வேளைகளில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் ஒரு ஆசனத்தை பெறலாம்.

திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சைக்குழுக்களுமாக 31அணிகளில் 217வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2,41,133 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களே பெரும் சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த பொதுத்தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே இரு பிரதிநிதிகளை பெற முடிந்தது. இம்மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகளும் முஸ்லீம்கள் சிங்களவர்கள் தரப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டால் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்பட முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, உட்பட சில தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, சிவாஜிலிங்கம் அணி போட்டியிடும் இடதுசாரி முன்னணி உட்பட சிங்கள கட்சிகளும் தமிழ் வாக்குகளைப்பிரிப்பதால் இம்முறை திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் சிறிலங்காவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி 68995 வாக்குகளினைப் பெற்றது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.
கடந்த முறை தமிழரசுக்கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் 3808 வாக்கு வித்தியாசமே காணப்பட்டது.
இந்த முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் சிலவும் காணப்படுகின்றன.
தற்போது சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. திருகோணமலையில் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிந்து போகாது இருப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சிங்களவர்களையும் தமிழர்களையும் இணைத்திருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக இருந்திருந்த மக்ருப் அவர்களை இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கிறது. கடந்த முறை மக்ரூப் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக 4ஆயிரம் வாக்குகளைப்பெற்றிருந்தார். இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் கட்சியின் வாக்கு பலத்தை அதிகரிக்கவே செய்யும்.
அதுமட்டுமன்றி 2004ம் ஆண்டில் 74869 ஆக காணப்பட்ட மூதூர்தொகுதி முஸ்லீம் வாக்காளர்களின் தொகை 2010ம் ஆண்டில் 85401 ஆக அதிகரித்துள்ளது. 5ஆண்டுகளில் 10542 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 70ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சாதகமான நிலையும் அக்கட்;சியே ஆகக்கூடிய வாக்குகளைப்பெறக்கூடிய கட்சியாகவும் காணப்படுகிறது.
அதே போன்று 2004ம் ஆண்டில் 63161 ஆக காணப்பட்ட சேருவில தொகுதியின் பதியப்பட்ட சிங்கள வாக்காளர் எண்ணிக்கை 2010இல் 69047 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் அத்தொகுதியில் 5886 பேர் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

முஸ்லீம் சிங்கள வாக்காளர் அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது கடந்த 5 வருடங்களில் 12ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தமிழ் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.
முஸ்லீம் சிங்கள வாக்காளர்கள் தொகை அதிகரித்த அதேவேளை அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருக்க கடந்த முறை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போட்டியிட்டு பெற்ற 68995 வாக்குகளைத்தான் அங்கு போட்டியிடும் 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகளும் 15க்கு மேற்பட்ட சுயேச்சைக்குழுக்களும் இம்முறை பிரிக்கப்போகின்றன.
தமிழரசுக்கட்சியைத்தவிர அங்கு போட்டியிடும் ஏனைய தமிழ் கட்சிகள் 10ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறப்போவதில்லை. தாங்கள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என்று அங்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சிறிதரன், பிள்ளையான் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். திருகோணமலையைப்பொறுத்தவரை தமிழ் கட்சிகளில் வெற்றிபெறக்கூடிய வாக்கு வங்கியைக்கொண்ட ஒரே ஒரு தமிழ்கட்சி தமிழரசுக்கட்சிதான். பல தமிழ் கட்சிகள் அங்கு போட்டியிட்டால் தமிழர் தரப்பில் ஒரு பிரதிநிதியும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் சம்பந்தனை தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வெறியில் இவர்கள் அனைவரும் திருகோணமலையை குதறிவருகின்றார்கள்.
இம்முறை தமிழரசுக்கட்சி சார்பில் ஒரு பிரதிநிதியே தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதுவும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்தான் அந்த ஒரு பிரதிநிதித்துவத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியும். ஒற்றுமையின்றி செயற்பட்டால் அது கூட கிடைக்காது 2000ஆம் ஆண்டில் ஏற்பட்டில் கிடைத்த பாதகமான முடிவைத்தான் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும். 2000ஆம் ஆண்டில் மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிட்டே அந்த முடிவுவை சந்திக்க நேரிட்டது. இம்முறை 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தாவது பாடங்களை கற்று தங்களின் சுயநலங்களை விட்டு திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் தமிழ் சமூகத்திடம் இல்லையே.

மட்டக்களப்பு மாவட்டம்
கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களுமாக மொத்தம் 45 அணிகளில் 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கையில் அதிக கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடும் இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பாகும். அத்தனை சுயேச்சைக்குழுக்களும் அரசியல் கட்சிகளும் தமிழர்களின் வாக்குகளை பிரித்தெடுப்பதையே குறியாகக்கொண்டு களமிறக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 3இலட்சத்து 33ஆயிரத்து 644 ஆகும். இம்மாவட்டத்தில் தமிழர்கள் 74வீதமாகவும் முஸ்லீம்கள் 25வீதமாகவும் காணப்படுகின்றனர். வாக்காளர் இனவிகிதாசார அடிப்படையில் தமிழர் தரப்பில் 4பேரும் முஸ்லீம்கள் தரப்பில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்மறையாக முஸ்லீம்களே அதிக பிரதிநிதிகளை பெறும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, புளொட், ஈழவர் ஜனநாயகக்கட்சி சிவாஜிலிங்கம் அணியினரின் இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியகட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.
சுயேச்சைக்குழுக்கள், அரசியல் கட்சிகள் என 26தமிழ் அணிகள் போட்டியிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வாக்கு வங்கியை தமிழரசுக்கட்சி மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் ஆசனங்களைப்பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப்பெறக்கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன. தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு நிட்சயம் ஆபத்து ஏற்படத்தான் போகிறது.
தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் லட்சுமி சுந்தரம், பிள்ளையானின் கட்சியில் போட்டியிடும் செல்வேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப்பெற்றாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. அவர்கள் வாக்குகளைப்பிரிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளின் வெற்றிவாய்ப்பிற்கே வழிவகுக்க போகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 3,33,644 ஆகும். இம்மாவட்டத்தில் கடந்த 5வருட காலத்தில் 30ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 25 வீதமான முஸ்லீம்கள் 15ஆயிரம் வாக்காளர்களால் அதிகரிக்க 74வீதமான தமிழர்கள் 14ஆயிரம் வாக்களார்கள் மட்டுமே அதிகரித்திருக்கிறார்கள். இதனால் 75ஆயிரமாக இருந்த முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 90ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் வேட்பாளர்கள் 5பேரும் முஸ்லீம் வேட்பாளர்கள் 3பேரும் போட்டியிடுகின்றனர். அக்கட்சியின் முஸ்லீம் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகியோரும் தமிழ் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, கணேசமூர்த்தி மற்றும் சத்தியவரதன், குலசேகரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த ஐந்து தமிழ் வாக்காளர்களும் தலா 5ஆயிரத்திற்கும் 10ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வாக்குகளை அக்கட்சிக்கு எடுத்துக்கொடுத்தாலும் விருப்பு வாக்கு அடிப்படையில் ஒருபோதுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தப்பித்தவறி மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் மூவரும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள். அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் முஸ்லீம் மக்களுக்கு ஒரு அறிவித்தலை விடுத்திருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் முஸ்லீம்கள் அனைவரும் ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகிய மூவருக்கும் தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தது. இதன் படி எப்படியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு குறைந்தது 40ஆயிரத்திற்கு குறையாத வாக்குகள் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த மூவரும் 40ஆயிரம் விருப்பு வாக்குகளைப்பெறுவது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் அக்கட்சியில் போட்டியிடும் தமிழர்களால் 15ஆயிரத்திற்கு மேல் விருப்பு வாக்குகளைப்பெற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழர்களால் அக்கட்சியில் உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாக்குகளை சேகரித்து கொடுக்க முடியுமே ஒழிய கணேசமூர்த்தியாலோ அல்லது தங்கேஸ்வரியாலோ நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியாது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் தமிழர்கள் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்படுவதற்காக பயன்படப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கும் செல்ல வேண்டும். அதை விடுத்து தமிழர்களின் வாக்குகளில் முஸ்லீம்களோ முஸ்லீம்களின் வாக்குகளில் தமிழர்களோ பிரதிநிதியாக வருவது அந்த சமூகங்களுக்கிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும். முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமை உணர்வை வளர்த்துவரும் சிறிலங்கா அரசு இத்தேர்தல் மூலமும் இரு சமூகங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கவே வழிவகுத்திருக்கிறது.
பல சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவதாலும் தமிழ் கட்சிகள் வாக்குகளைப்பிரிப்பதாலும் தமிழரசுக்கட்சி கடந்த முறையைப்போன்ற ஒருவெற்றியை பெற முடியாவிட்டாலும் மூன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளையாவது பெறுவதாக இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டால் மட்டுமே அந்த இலக்குகளையாவது அடைய முடியும்.
தமிழ் மக்கள் இந்த ஆபத்துக்களை உணராது உதிரி தமிழ் கட்சிகளுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளுக்கோ வாக்களித்தால் 4முஸ்லீம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்படும் அபாயம் ஏற்பட்டு விடும். இதை உணர்ந்து மட்டக்களப்பு தமிழ் மக்கள் செயற்படாவிட்டால் வரலாற்று தவறு ஒன்றை இழைத்துவிட்டார்கள் என்ற பழி அவர்கள் தலையில் சுமத்தப்பட்டு விடும். இத்தவறை மட்டக்களப்பு தமிழ் மக்கள் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அம்பாறை மாவட்டம்
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகளும் 48 சுயேச்சைக்குழுக்களுமாக 66 அணிகளின் சார்பில் 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கென 4அடி நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாகவும் இது வாக்காளர்களுக்கு மட்டுமல்ல வாக்கு எண்ணும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பெரும் சிரமங்களையே ஏற்படுத்தப்போவதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதிலும் முக்கியமாக தற்போது 18வீதமாக குறைந்திருக்கும் தமிழ் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை பறிப்பதற்காக மகிந்த அரசு செய்த கைங்கரியம் என்றே அம்பாறை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப்பிரிப்பதற்காக தமிழர் விடுதலைக்கூட்டணி, சிவாஜிலிங்கம் அணி, பிள்ளையான் அணி, ஆசனங்களைப்பெறக்கூடிய வாக்கு வங்கி இல்லாத பல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4இலட்சத்து 20ஆயிரத்து 835 வாக்காளர்களில் சுமார் 75ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் பட்சத்திலேயே ஆகக் கூடியது ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியும். பல தமிழ் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவது தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும். அம்பாறை மாவட்டத்தில் கிடைக்க கூடிய ஒரு ஆசனத்தை கூட தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற அச்சம் தற்பொழுது தமிழ் மக்களுக்கு எழுந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தமிழரசுக்கட்சி இம்முறை ஒரு ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்ட மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்த ஐந்து மாவட்டங்களில் இருக்கும் நிலையை இப்பொழுது பார்த்திருக்கிறோம்.
இதன் படி அம்பாறை மாவட்டத்தில் மகிந்த ராசபக்சவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் என்பது உறுதி.
திருகோணமலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியே அதிக வாக்குகளைப்பெற்று போனஸ் ஆசனத்துடன் இரு ஆசனங்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு வன்னி யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கூட தமிழர்கள் பிரிந்து நின்று மோதிக்கொள்வது மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கே வழிவகுக்கும்.
அவ்வாறு வடகிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் தமிழருக்கு கிடைக்கும் தோல்வியும் வீழ்ச்சியும் சாதாரணமானதல்ல.
மே 19ல் எத்தகையை வெற்றியை சிங்கள தேசம் பெற்றுக்கொண்டதோ அதற்கு சமமான ஒரு வெற்றி கிடைத்துவிட்டதாக ஏப்ரல் 9ஆம் திகதி மகிந்த தரப்பு எக்காளமிடப்போகிறது
தமிழர்களின் ஆயுதப்பலத்தை மட்டுமல்ல அரசியல் பலத்தை கூட வீழ்த்தி விட்டதாகவும் தமிழர் தலைமை தனது கைகளுக்கு வந்துவிட்டதாகவும் அவர்கள் ஆர்ப்பரிக்கத்தான் போகிறார்கள்.
தமிழ் மக்களுக்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே பலம் வடகிழக்கில் உள்ள அரசியல் தலைமை ஒன்றுதான்.
அந்த அரசியல் தலைமையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களே ஏப்ரல் 9ஆம் திகதி உங்கள் முன் இரு தெரிவுகள் தான் இருக்கப்போகிறது.
ஓன்று தமிழரின் அரசியல் தலைமையை அழித்து விட்டோம் என்ற மகிந்தவின் வெற்றிக்களிப்பில் பங்குகொள்வது
இரண்டு 2009ம் ஆண்டு மே 19க்கு பின் விடைதெரியாது தேம்பி...திகைத்து.....அழுது.....விழுந்தது போல மீண்டும் எழ முடியாத பாதாளத்தில் நின்று அழுவதுதான்.
யோசியுங்கள்....எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று.

உறவுகளிடம் கை நீட்டுகிறான்

10:56 AM, Posted by sathiri, No Comment


யுத்தத்தில் ஏற்கனவே தன்னடைய தாயாரையும் தந்தையையும் இழந்து இறுதி யுத்தத்தின் போது எறிகணையில் தன்னுடைய ஒரு கரத்தையும் இழந்து உடலில் இன்னனும் செல்துண்டுகளை தாங்கியபடி மருத்துவ வசதிகள் இன்றி தன்னுடை பத்துவயது சகோதரனுடன் முகாமில் தங்கியிருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் விதுசன் வயது பதின் நான்கு. அவனை அவனது சொந்தஉறவான அம்மம்மாவும் ஏற்காததையடுத்து தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்ந்துவரும் இவன் தனக்கு கல்வி கற்க உதவுங்கள் என்று புலம்பெயர் உறவுகளிடம் கை நீட்டுகிறான்..கரம் கொடுங்கள்..இங்கு அவனது வேண்டு கோளை நேரடியாக கேட்கலாம்.
http://nesakkaram.org/