Navigation


RSS : Articles / Comments


நானும்அவனும்

4:31 AM, Posted by sathiri, No Comment

நானும்அவனும்
….................................

ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி ….


இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்..

அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா ()பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன் .

கொஞ்சம் திகைத்துப் போயிருந்தாலும் . கடவுளையோ பேயையோ நம்புகிறவனில்லை என்பதால் யாரோ கள்ளன் தான் வந்திருக்கிறான் என நினைத்து இருட்டில் தட்டித் தடவி வந்து என் போனை எடுத்து அதிலிருந்த டோச் வெளிச்சத்தை அடித்தபடி. கள்ளன் வந்தால் தாக்குவதுக்காக கதவுக்கு பின்னாலேயே மறைத்து வைத்திருந்த கொட்டானை எடுத்துக்கொண்டு டோச் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்தேன் . கொட்டும் மழையில் நெடிய, கறுத்த, ஆடைகளேதுமற்ற அம்மணமான அந்த உருவம் நின்றிருந்தது .அண்ணாந்து பார்த்தேன். மழைத்துளிகள் என் கண்ணில் வீழ்த்து மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது .."என்னடா நலமா".. என்று என்னைப் பார்த்து அது கேட்ட அதே நேரம் அதன் பின்னாலிருந்து வெளிவந்த சிவந்த கண்களையுடைய பெரிய கறுத்த நாயொன்று என் மீது பாய்ந்து அதன் கால்களை என் மார்பில் வைத்து முகத்தை நக்க தொடங்க.. அது வரை என் பின்னாலேயே பதுங்கியிருந்த என் பூனை மீனு பயத்தில் மழையென்றும் பாராமல் தோட்டத்தில் பாய்ந்து பின் மதிலையும் தாண்டி ஓடி விட்டிருந்தது .

இப்போ எனக்கு நினைவுக்கு வந்து விட்டிருந்தது "ஓ நீயா ..எத்தனை வருடங்களாகி விட்டது என்ன இப்பிடி திடீரெண்டு சரி உள்ளே வா" ..என்றதும்

அவன் வாசலால் குனிந்து உள்ளே வர நாயும் பின்னாலேயே உள்ளே வந்தது ..அதுக்கிடையில் நான் ஓடிப்போய் படுக்கையறை கதவு சாதியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வந்தேன்.நனைந்து போயிருப்பாய் என்றபடி துவாயை எடுத்து நீட்டியபோது அவன் உடல் காய்ந்து விட்டிருந்தது நாய் மட்டும் உடலை ஒரு உதறு உதறி விட்டு படுத்துக் கொண்டது ..சோபாவில் சரிந்திருந்தவனின் இடுப்பில் துவாயை போட்டு விட்டு .எத்தனை வருசமாச்சு எப்படி என்னை தேடி வந்தாய் என்றேன்.

இத்தனை வருசமாச்சு என்னை நீ தேடி வந்தாயா. முறைத்தான் .

எனக்கு ஊருக்கு வர முடியாது ஆனா உன்னைப்பற்றி அடிக்கடி அம்மாவிடம் விசாரிப்பேன் ,.

என்ன சொல்லு  வா ..

புளிய மரத்தடியில வெறும் சூலமா ஒரு கொட்டிலுக்கு கீழ இருந்த உனக்கு இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்திட்டுதாம். கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து ஐயர் வந்து பூசை செய்யுறாராம் எண்டு சொன்னா..

வேற என்ன சொன்னவா ..

சின்னதா ஒரு தேரும் செய்து கொண்டிருக்கினமாம் ..

அதுவும் உண்மை தான் .அதை விட வேற ஒண்டும் சொல்லேல்லையோ ..

இல்லையே ..

நான் குடியிருந்த புளிய மரத்தையே தறிச்சுப் போட்டாங்கள்

அட நாசமறுப்பு.. என்னத்துக்கு தறிச்சவங்கள் ..

எனக்கு கோயில் கட்ட தான் ..

அந்தப்பெரிய மரத்தை எப்பிடி தறிச்சவங்கள் ..

மிசின் வைச்சு அரிஞ்சு தள்ளிட்டான்கள் ..

அட கடவுளே ….

ஓம் கூப்பிட்டனியே …

இல்ல ....ஓம்... நீ கடவுள் எண்டதை ஒரு செக்கன் மறந்து போனன் .மிச்சத்தை சொல்லு ..



நான் செவிடு எண்டு நினைச்சு ஒவ்வொரு நாளும் சவுண்ட் பொக்ஸ் வைச்சு பாட்டு போடுறாங்கள் .விளங்காத சமஸ்கிருதத்தில பூசை வேறை

ஏன் உனக்கு சமஸ்கிரதம் விளங்காதோ ..

அடேய் நான் தமிழ்க்கடவுளடா எனக்கெதுக்கு சில்லெடுத்த சமஸ்கிருதம்.அதுவும் அவன் எனக்கு கணபதி கோமத்தை சொல்லிக்கொண்டு இடைக்கிடை வைரவராய நமகா ..எண்டு அடிச்சு விட. விசர் சனமும் அது வைரவர் மந்திரமெண்டு நினைச்சு கும்புடுதுகள் . அதைவிட மோசம் இப்போவெல்லாம் பச்சையரிசி பொங்கல் அவல் மோதகம் . எனக்கே சுகர் வந்திடும் போலவிருக்கு வடை எப்போவாவது ஒருதரம் கண்ணுல காட்டுறாங்கள் அதையும் படைசுப்போட்டு தொட்டால் சுடுவேன் எண்டு ஐயர் தீபத்தை முகத்துக்கு முன்னாலேயே காட்டுறான் .





சரி .உலகம் முழுக்க சுத்தி நாய் களைச்சுப் போய் விட்டுது அதுக்கு கொஞ்சம் தண்ணி வைக்கிறாயா.. என்றதும் நான் ஓடிப்போய் பூனையின் கிண்ணத்தை கழுவி தண்ணீரைஅதில் வைத்ததும் நாய் லபக் லபக்கென்று குடிதுக்கொண்டிருக்கும்போதே வேறொரு லபக் லபக் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தேன் .மேசையிலிருந்த விக்கியை போத்தலோடு எடுத்து அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருந்தான். "வைரவா நீயா" ..என்றதும் பெரிய மீசையை வருடி விட்டு "என்ன நீயா நானா" எண்டு. உன் பாட்டன் எனக்கு தினமும் சிரட்டையில் கள்ளும் நண்டு மீன் பொரியல் என படைத்தது விட்டுதான் அவனே சாப்பிடுவான் விசேட நாளில ஆட்டுக்கறியும் கிடைக்கும் ம்.. அதெல்லாம் ஒரு காலம் ..பெருமூச்சொன்றை விட்டான் ..



ஒரு உடுப்பு கூட போடாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறியே வெட்கமாயில்ல..


இல்ல...ஏனென்டால் பட்டுத் துணியில எனக்கு கோவணம் வேற கட்டி விடுறாங்கள்.அதுதான் எனக்கு வெட்கமாயிருக்கு

குளிரேல்லையோ எண்டு கேட்டலும் இடக்கு முடக்கா ஏதும் பதில்தான்வரும் ..சரி இவ்வளவு தூரம் என்னை எதுக்கு தேடி வந்தனி ?..

எனக்கு நீயொரு கோயில் கட்டவேணும்...
நான் அதிர்ந்துபோய் "வைரவா என்ன விளையாடுறியா" நானிருக்கிறதே வாடகை வீடு .கனடாப்பக்கம் போய்ப்பார் ..அங்கைதான் ஐயப்பன் தொடக்கம் அம்மா பகவான்னெண்டு ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் கோயில் கட்டி வைசிருகிறான்கள் .கட்டாயம் உனக்குமொரு கோயில் யாராவது கட்டியிருப்பான்கள் ..


இப்பதானே சொன்னான் உலகம் முழுக்க சுத்தி வாறனெண்டு .அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை ஒரு வைரவர் கோயில் கூட இல்லை .

என்னட்டை அவளவு வசதியில்லையே வைரவா ..


நீ நினைக்கிற மாதிரி பெரிய கோயில் எல்லாம் வேண்டாம் எதோ ஒரு மரத்துக்கு கீழை ஒரு சூலம் மட்டும் போதும். எந்த சத்தம் சந்தடியுமில்லாமல் இருந்தாலே போதும் நீ விரும்பினா விஸ்கியோ வோட்காவோ அப்பப்போ ஒரு வடை மாலை அது போதும் .மொத்தத்தில என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும்.

உனக்கொரு ஐடியா சொல்லவா ..

ம் சொல்லு …

எதுக்கு.. கோயில் குளமெண்டு அலையாமல் பேசாமல் பேஸ் புக்கில ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலையே குடியிருக்லாமே ..

வைரவர் விழுந்து விழுந்து சிரிக்க நாய் வேற அவ்.... என்று உளையிட்டது ..

எதுக்கு இப்ப சிரிக்கிறாய் ..

அடேய் நான் பேஸ் புக்கில் குடியிருக்க தொடங்கினால் ஒவ்வொரு நாளும் ஒரு செல்பியாவது போடுவேன் அப்போ உங்கள் பிழைப்பு என்னாவது …...

அதுவும் உண்மைதான் வைரவா உன் உயரத்துக்கும் கலருக்கும்.. அதுக்கும் ..எல்லா லைக்கும் உனக்குத்தான் விழும் ..அதை விட உலகத்தில் உள்ள எல்லா வடையும் மாலையா வந்து உன் கழுத்தில தான் விழும் ..


வைரவர் மீண்டும் சிரித்தார் ...


சரி வைரவா உனக்கு வீட்டு தோட்டத்திலேயே நான் கோயில். ச்சே .. ஒரு சூலம் நடுகிறேன் கவலைப்படாதே என்றதும் எழும்பி மீண்டும் விஸ்கி போத்தலை வாயில் வைத்து உறிஞ்சி விட்டு வெளியே போக . நாயும் பின்னல் ஓடவே மீண்டும் ஒரு பெரும் மின்னல் தோன்றி மறைய அதன் வெளிச்சத்தில் கண்ணை மூடி திறந்து பார்த்தேன். வைரவரையும் அவரின் வாகனத்தையும் காணவில்லை

வைரவ ராசாவே உன் அற்புதமே அற்புதம். உன் நாமத்தின் பெயராலே.உன் வார்த்தையின் பெயராலே . சாத்தான்கள் விலகியோடட்டும்உனக்காக நாளை சூலம் நடுகிறேன் . என்று வாய் முணு முணுக்க தொடங்க ..

வைரவர் வீட்டுக்கு வந்திட்டுப்போனதை இப்பவே உடனே ஓடிப்போய் மனிசியை தட்டியெழுப்பி சொல்லமா எண்டு யோசித்தாலும். "ச்சே சும்மா தண்ணியை போட்டிட்டு புலம்பாதை" .. எண்டு எட்டி உதை விழும்.நாளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லலாமெண்டு என்று நினைத்து பேசாமல் படுத்து விட்டேன் ..

ஆனாலும் நித்திரை வரவில்லை . வைரவருக்கு சூலம் நடுறதெண்டால் அவருக்கு பிடிச்சது பொதுவா புளிய மரம்தான் .இந்த ஊரில.. இந்த நாட்டிலையே புளிய மரமில்லை .வீட்டு தோட்டத்தில நிக்கிறது ஒரு வாழை மரம் . அடுத்தது தோடை மரம் .வாழை மரத்துக்கு கீழை சூலத்தை நட முடியாது ஏனென்டால் குளில் காலத்தில அது பட்டுப்போகும். அப்பிடி நிண்டு பிடிச்சாலும் குலை போட்டதும் வாழையை வெட்டும் போது வைரவருக்கும் வெட்டு விழும் . அதால தோடை மரத்துக்கு கீழயே நடலாம் அதுவும் புளித்தோடை தான். புளிக்கு புளி வைரவருக்கும் லொக்கேசன் செட்டாகும் .சூலத்துக்கும் சிரமப்பட தேவையில்லை கன காலமா கார் கராச்சுக்குள்ள நீள இரும்புக் கம்பியொண்டு கிடக்கு அதை இரண்டா வெட்டி ஒண்டை வளைச்சு மற்றதை நிமித்தி நடுவிலை ஒட்டி விட்டா போதும் வைரவர் ரெடி என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் நித்திரையாகிப் போனேன் .

காலை கண்விழித்தபோது மனிசி குளியலறையில் பல் தீட்டிக்கொண்டிருந்த நேரம் வைரவர் வந்ததை சொல்லாமா என்று யோசித்தேன் . வேண்டாம் எல்லா கடவுளையும் கிண்டலடிக்கிறதா எனக்கு மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதால சூலத்தை தோடை மரத்துக்கு கீழ நட்டு .வடை மாலை போடும்வரை சஸ்பென்சாக வைத்து விட்டு சொல்லாமென நினைத்து ..அவரிடம் போய் "என்னப்பா எனக்கு கொஞ்ச நாளாவே வடை சாப்பிட வேணும் போலவிருக்கு" .. எண்டதும் வாயிலிருந்த பிரஸ்சை எடுத்து விட்டு தொட்டியில் துப்பியவர் ..."உனக்கு எப்ப பாத்தாலும் இதே நினைப்பு அதுவும் காலங் காத்தாலை" .. என்று அக்கிளில் ஒரு குத்து விழுந்தது ..

மீண்டும் பல்லு தீட்ட தொடங்கியவரிடம் .."இல்லை உண்மையாவே உளுந்து வடை சாப்பிட வேணும் போலவிருக்கு வேலை முடிஞ்சு வந்ததும் பத்து வடையாவது சுட்டு வைக்கேலுமோ" என்றதும் .மீண்டும் பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்து தொட்டியில் துப்பியதுமே . குத்து விழலாமென நினைத்து சட்டென்று இரண்டடி பாய்ந்து நின்று கொண்டேன் .."சரி சரி போ" ...என்றார் .தோட்டத்தில் வந்து நின்று தோடை மரத்துக்கடியில் எந்த பக்கமாக வைரவரை நடலாமென யோசித்தாலும் நம்ம வைரவருக்குத்தான் வாஸ்து ஆகமம் எல்லாம் கிடையாதே எதோ ஒரு பக்கம் ஊன்றி விட்டா போதும் .மரத்தடியை கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன் .மனம் முழுதும் வைரவர் நினைப்பிலேயே நிரம்பியிருந்தது போகும் வழியில் இருந்த தேவாலயத்தின் உச்சியில் இருந்த சிலுவை கூட சூலம் போலவே தெரிந்தது பிதா, சுதன், பரிசுத்த வைரவரின் பெயராலே ஆமென் என்று சூலம் போட்டுக் கொண்டேன் ..

வேலை முடிந்து வீடு வந்ததுமே வடை வாசம் மூக்கை துளைத்தது.வண்டியை விட்டிறங்கி கராச்சுக்குள் புகுந்து இரும்பை தேடத் தொடங்கியிருந்தேன் காணவில்லை .தேடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மனைவி ..

என்ன வேலையால வந்ததும் கராச்சுக்குள்ள நோன்டிக்கொண்டிருக்கிறியள் ..

இங்கின ஒரு இரும்புக்கம்பி கிடந்தது அதை தான் தேடுறன் ..

அதுவா கன காலமா கிடந்தது கறள் பிடிச்சுப்போய் கிடக்கெண்டு பழைய சமான் லொறி வரேக்குள்ள எடுத்து போட்டிடேன் ..

எனக்கு நேற்றிரவு விழுந்த இடிச்சத்தம் இப்போ காதில் கேட்டது ..வைரவா ஏனிந்த சோதனை இருந்த ஒரேயொரு இரும்புக்கம்பியையும் மனிசி தூக்கி எறிந்சிட்டுது நான் என்ன செய்வேன் . புதுசா கம்பி வாங்கி உனக்கு சூலம் செய்து கோயில் வைக்கிற அளவுக்கு என்னட்ட வசதியில்லை என்னை மன்னிசுக் கொள் என்று வேண்டி விட்டு சுட்ட வடை வீணாகிப் போக கூடாது தானே என்பதுக்காக அதை துக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட கதிரையில் அமர்ந்ததும் எங்கேயோ இருந்த தேனீ ஓன்று விர் என்று வடையில் வந்து குந்த .. "கன காலத்துக்கு பிறகு நானே இப்பதான் வடை சாப்பிட போறேன் .ச்சே ..போ" ..என்று நான் கையால் விசுக்கி கலைக்க..வேகமாகமேலே எழும்பி ஒரு சுற்று சுற்றி விட்டு என்னை நோக்கி வந்தது ..

ஐயோ ..சாமி கண்ணை குத்திட்டுது என்று கண்களை பொத்தியபடி கத்தினேன் …..

No Comment