Navigation


RSS : Articles / Comments


2:47 PM, Posted by sathiri, No Comment

‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி  

நடு இணைய சஞ்சிகைக்காக ....
%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%
 
வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது  தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ளலாமல் காலை வணக்கம் சொல்லியபடி  படிவத்தையும் பணத்தையும் என் அடையாளஅட்டையையும் நீட்டினேன்.  நீண்ட முக்கில் கண்ணாடி போட்டிருந்த பெண் அதை வாங்கி  சரிபார்த்தபடி, 

“நீங்கள் மொறோக்கரா ? என்றாள். 

“இல்லை…ஏன் ?” 

“மொறோக்கோவுக்குப் பணம் அனுப்புகிறீர்கள், அதான் கேட்டேன்.” 

“மொறோக்கர் தான் மொறோக்கோவுக்கு பணம் அனுப்பலாம் என்கிற புதுசட்டம் ஏதும் வந்திருக்கிறதா… ? நான் பல தடவை அனுப்பியிருகிறேனே?”  என்று கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டேன். 

“அப்படி எல்லாமில்லை. சும்மாதான் உங்களை பார்த்தால் மொறோக்கர் போல தெரியவில்லை. அதான் கேட்டேன்.” என்றபடி, பணத்தை வாங்கி கணணியில் விபரங்களை பதிவு செய்து  ஒரு படிவத்தை கையில் தரும்போது,
“என்னுடைய மூதாதையர்கள் மொறோக்கர்கர்கள். அதுதான் கேட்டேன். வேறொன்றும் தவறாக நினைக்க வேண்டாம்.” என்றபடி நீட்டினாள். 

“ஓ………  சரி மன்னிக்கவும். எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. அந்த பதட்டம், நன்றி.”
என்றபடி அதை வாங்கி அங்கேயே மேசையில் வைத்து கைத்தொலைபேசியில் படமெடுத்து மொறோக்கோ இலக்கத்துக்கு அனுப்பிவிட்டு, வேகமாகப்  போய் வாசலில் கிடந்த பத்திரிகை கடிதங்களை பொறுக்கியபடி கடையை திறந்து, கோப்பி மெசினை இயக்கிவிட்டு பத்திரிகையை தலைப்புக்களை மட்டும் மேலோட்டமாக  பார்த்தேன். 

ஓய்வுதிய வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராகத்  தொடரும் போராட்டம். ஈரான் அமெரிக்க  முறுகல் வலுக்கிறது.  எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை. அவுஸ்திரேலியா தீ விபத்து, பல இலச்சம் விலங்குகள் உயிரிழப்பு என்று தொடர்ந்தது. 

“ச்சே……  வருசக்கடைசியானா ஒரே  இழவுச்  செய்தி. இந்த வருசம் விமான விபத்து, சுனாமி இரண்டும் தான் நடக்கேல்ல”. என்றபடி பத்திரிகையை ஏறிந்து விட்டு கோப்பியை உறுஞ்சியபடி அவளின் இலக்கத்துக்கு போனடிதேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மீண்டும் சில தடவை முயற்சி பண்ணிப்  பார்த்து விட்டுப்   “பணம் அனுப்பி விட்டேன்.அதன் விபரமும் போட்டோ எடுத்து அனுப்பி விட்டேன்”. என்று செய்தி வைத்து விட்டுக் கதிரை மேசைகளைத் துடைத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தேன்.
‘இருவர் உள்ளே நுழைந்தார்கள். மேசை கதிரை அடுக்க முதலே காலங் காத்தாலையே குடிக்க வந்திட்டாங்கள்’.  என்று நினைக்கும்போதே முன்னால் வந்து நின்ற இருவரும், சட்டென்று அடையாள அட்டையை தூக்கி காட்டி, 

“டளிடாவை உனக்கு எப்படி தெரியும் ?” என்றார்கள். 

இரகசிய பொலிசாரின் திடீர் கேள்வியில் கொஞ்சம் தடுமாறிப் போனாலும் சமாளித்துக்கொண்டு, 

“தெரியும். கடைக்கு அடிகடி வருவாள். அவ்வளவுதான்.” என்றதும், 

“இப்போ சிறிது நேரத்துக்கு முன்னர் நீ அவளுக்கு பல தடவை போனடித்திருக்கிறாய். பணம் அனுப்பியதாக செய்தி வைத்திருக்கிறாய். என்ன பணம்? யாருக்கு அனுப்பினாய்?” 

இந்தக் கேள்வியில் எனக்கு லேசாய் தலைசுற்ற ஆரம்பித்திருந்தது.
“அது அவளின் அம்மாவுக்கு. அவளே அனுப்பச்சொல்லி கொடுத்திருந்தாள். அவ்வப்போது உதவியாக கேட்பாள். நானும் அனுப்புவேன்.” என்று சொன்னபடி, ஓடிப்போய் பணம்அனுப்பிய படிவத்தை  எடுத்துக் காட்டினேன். 

அதை பார்த்தவர்கள். “சரி நீ கடைசியாக எப்போ அவளை பார்த்தாய்?” 

“நேற்று இரவு எட்டு மணியளவில் கடைக்கு வந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி பணம் கொடுத்து விட்டு போனாள். பின்னர் நான் வேலை முடிந்து போகும்போது பதினோரு மணியளவில் அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்து தலையாட்டி விட்டு போய் விட்டேன்.” 
என்றதும், என் பெயர் விபரங்களை பதிவு செய்தவர்கள். புறப்படும்போது, 

“அவளுக்கு என்ன நடந்தது ? என்றதும், 

“உனக்கு செய்தி பார்க்கும் பழக்கம் உண்டா ?” 

“ஓம்……… ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.” 

“அப்போ செய்தியை பார்த்து அறிந்து கொள்.” என்று விட்டு போய் விட்டார்கள்.
நான் அவளுக்கு போனடித்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை  அவளைக்  கைதுசெய்து வைதிருக்கிரர்களா?  ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்களா? குழப்பமாக இருந்தது. பாஸ்கலுக்கு போனடித்துக் கேட்கலாமென நினைத்து அவனது இலக்கத்தை அழுத்தினேன்.  அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
“மிகஅவசரம். என்னோடு தொடர்பு கொள்.”  என செய்தி வைத்து விட்டு வேலையை தொடங்கினாலும்  மனம் ஒரு நிலையிலில்லை.
00000000000000000 

அவளை பல வருடங்களாக தெரியும். நான் வழமையாக வேலைக்கு போய் வரும் கடற்கரை வீதில் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே சுயிங்கத்தை மென்றபடி வியாபர புன்னகையை வீசி நிக்கும் பாலியல் தொழிலாளிகள் எனக்கு பழகிப்போனதொன்று. இரவு பகல், விடுமுறை பண்டிகை என்று எல்லா காலத்திலும் இவர்களை காணலாம். அப்படிதான் நான் வேலை செய்யும் மதுச்சாலைக்கு அருகில் அவளை சந்தித்தேன். அவளும் வழமை போல வாயில் சுயிங்கம், வியாபாரப் புன்னகையோடு என்னை பார்ப்பாள்.
இப்பிடி எவ்வளோ பார்த்திருப்போம் என்று நினைத்தபடியே நானும் கடந்து போய்க் கொண்டிருப்பேன். ஒரு குளிர்கால இரவு, அடை மழை, கடையிலும் யாருமில்லை. வெளியே இருந்த கதிரை மேசைகளை உள்ளே எடுத்து வைக்கப் போயிருந்தபோது, மழைக்காக சுவரோரத்தில் ஒரு பல்லியைப்போல  ஒட்டிக் கொண்டிருந்த  அவளைப் பார்த்ததும், ‘வா……….’ என சைகை செய்தேன். நனைத்த கோழிக் குஞ்சைப்போல ஓடி வந்தாள். உள்ளே வந்தவளுக்கு ஒரு கோப்பியை  போட்டு நீட்டியதும், பர்சை திறக்க போனவளிடம், 

“வேண்டாம் இருந்து ஆறுதலாக குடி”. என்று விட்டுக்  கிளாஸ்களை துடைக்கத் தொடங்கியிருந்தேன். 

‘நன்றி’. சொல்லி விட்டு கோப்பியை உறுஞ்சியபடி,
“நீங்கள் இந்தியாரா…………?” 

“இல்லை.” 

“அப்போ……….  மொரிசியரா?” 

“இல்லை.” 

“அப்போ எந்த நாடு…….. ?” 

“நிச்சயமாக பிரெஞ்சுகாரர் இல்லை. ஆனால், இப்போ பிரெஞ்சு குடியுரிமை”. 

“நாட்டை சொல்ல விருப்பமில்லையா ?” 

“அப்பிடியில்லை. சொல்லி பெருமைப்படவும் அதில் ஒன்றுமில்லை. நான் ஸ்ரீ லங்கன். உன்னைப்பார்தால் மொரோக்கன் போலவிருக்கிறது.  என்ன பெயர்?”

“எப்படிக் கண்டு பிடித்தாய் ?” 

“பெண்களைப் பார்த்தாலே ஓரளவுக்கு நாடு கண்டு பிடித்து விடுவேன். உன் பழுப்பு நிறம். கரும் சுருண்ட முடி. முட்டைக்கண்கள். குறைந்த உயரம். சிறிய  அளவான …” 

“போதும் நிறுத்து. என் பெயர் டளிடா”. 

திடீரென அவளிடம் திரும்பி, 

டளிடவா………..? எனக்கு மிகவும் பிடித்த பாடகியின் பெயர். நீ டளிடாவை அறிந்திருகிறாயா?” 

லேசாக சிரித்தவள்,
“இல்லை ஒரு பாடகி என்று மட்டும் அம்மா சொல்லியிருக்கிறார். நானும் ஒரு பாடகியாக வர நினைத்து அந்த பெயரை வைத்திருக்கலாம்.” 

“அறுபதுகளில் தன் குரலால் உலகை கட்டிப்போட்ட ஒரு பாடகி. எண்பதுகளில் பாரிஸ் நகரில் தனிமையில் காலத்தை கழித்துக் கொண்டிருந்தவள், ஒருநாள் ஒரு கோப்பை விஸ்கியில் விசத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டிருந்தாள். காரணம் இன்றுவரை தெரியவில்லை. அவள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.” 

‘ம்.’என்றவள், பின்னர் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நான் கிளாஸ்களை துடைத்து அடுக்கி முடிந்ததுமே மழையும் லேசாகி விட்டிருந்தது. அவளும் கோப்பியை குடித்து முடித்திருந்தாள். நான் சாவியை கையிலெடுத்தும், கடையை பூட்டப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். எங்களின் முதல் சந்திப்பு அதுதான். அதுக்குப்பின்னர் நான் அவளை கடந்து போகும்போது அவள் வீசும் வியாபார புன்னகை, நட்பு புன்னகையாக மாறியிருந்தது.
0000000000000000000000 

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள். எனக்கு வேலை அதிகம் . தொடங்கும்  நேரம் முடியும் நேரத்துக்கு வரையறை இல்லை.  அவளுக்கும் அதே போலதான். அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாத . எப்போதாவது பார்த்துக்கொள்ளும் போது லேசான தலையாட்டல். கொடுங் குளிர் காலத்தில் கொட்டும் மழை இரவொன்றில்தான் மீண்டும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. 

இப்போ அவள் கைகளில் கோப்பியல்ல, விஸ்கி. என் கைகளில் வழக்கம் போல துடைக்கப்படும் கிளாஸ். 

“உன் பெயரை சொல்லவில்லையே………?” 

“நீ கேட்கவேயில்லையே ………?” 

“சரி சொல்லு.” 

“சாத்திரி.” 

“காலியாணமாச்சா……….?” 

“ம்.  ஒரு மகளும். பெயர் மீரா.” 

திடுக்கிட்டவளைப்போல  விஸ்கி கிளாசை உறிஞ்சிவிட்டு,
“என்ன பெயர் சொன்னாய் ?” 

“மீரா.” 

“என் மகளுக்கு பெயர் மேரா. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” 

“தெரியுமே…….  உலகம் முழுதும் உள்ள மொழிகளில் அனைத்திலும் உள்ள ஒரேயொரு பெயர். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று அர்த்தம். 

விரக்தியாய் சிரித்தவள், கிளாசை  நீட்டினாள்.  அதை பாதி நிரப்பி ஐஸ் கட்டிகளை போட்டு நீட்டியபடியே,
“உனக்கும் கலியாணமாச்சா……?” 

 “ம்……….  ஆச்சு.  ஆனால் ஆகேல்ல.” 

‘இவளென்ன வடிவேலு மாதிரியே…’
என்று நினைத்தாலும் நான் எதுவும் கேட்கவில்லை. கிளாசை முடித்துவிட்டு, ஐம்பது யூரோவை எடுத்து மேசையில் எறிந்து விட்டு போனவளிடம்,
“ஏய்……… மிச்ச காசு.” என்று மிகுதியை நீட்ட..

தலைக்கு மேலால் கையை ஆட்டி வேண்டாமென சைகை செய்துவிட்டுத் தள்ளாடியபடி போய்க்கொண்டிருந்தாள். சரி அடுத்த தடவை வரும்போது கொடுக்கலாமென அதை தனியாக எடுத்து வைத்திருந்தேன்.
அடுத்தடுத்த சந்திப்புக்களில் அதுவும் கொஞ்சம் போதை ஏறும்போதுதான் தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கியிருந்தாள். அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவள். 

“திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த குழந்தைக்குத்  திடீரென எதோ காய்ச்சல் வந்தது. வைத்திய சாலையில் கொண்டு போய் காட்டினேன். அதுவரை நன்றாக இருந்த குழந்தை சோர்ந்து போய் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்க தொடங்கியது. எதோ வைரஸ் காச்சல் என்றார்கள். எனக்கு அதன் விபரம் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் பார்வையே போய் விட்டது . அது மட்டுமில்லை மெலிந்து படுத்த படுக்கையாகி விட்டது. என் குடும்பம் பாவம் செய்ததால் சைத்தான் குழந்தையாக பிறந்து விட்டது என்று  கணவன் சில மந்திரவாதிகளிடம் கொண்டு போய்க்  காட்டினான். அவர்களும் ஏதேதோ செய்தார்கள் சரிவரவில்லை. அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டு போய் விட்டான். குழந்தையைமீண்டும் வைத்தியரிடம் கொண்டு போனேன். அவள் வியாதிக்கு எதோ பெயர் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்திர சிகிச்சை செய்தால் மீண்டும் பார்வை வந்து விடும். அதுவும் பல கட்டமாகத்தான் செய்யவேண்டும் என்றபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால் சிகிச்சைக்கு அவர்கள் சொன்ன தொகையை கேட்ட போது தான் வந்த வேகத்திலேயே நம்பிக்கை திரும்பவும் போய் விட்டது. அம்மா தான் தன் கதைகளை சொல்லி எனக்குள் மீண்டும் நம்பிக்கையை வரவளைத்தாள். குழந்தையை அம்மாவிடம்  கொடுத்து விட்டு வேலை தேடி நகரத்துக்கு போன போதுதான் ஒரு முகவர். ‘பிரான்ஸ் போனால் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னதும் அதை நம்பி இங்கு வந்து விட்டேன்.” 

இவை நீங்கள் சுவாரசியமில்லாமல்  படித்து முடித்ததை போலவே அவள் வேகமாக சொல்லி முடித்தது. 

அடுத்து அவள் மெதுவாக அடுத்தடுத்த சந்திப்புக்களில் சொன்னது:
“என் முகவரே கடவுச் சீட்டு எடுத்து ஒரு வாரம் பிரான்சுக்கான சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டு கடவுச் சீட்டை பிடுங்கி வைத்துக் கொண்டான். ஒரு கிழமை முடிந்ததும் என்னிடம் வந்தவன்,
“இப்போ உனக்கு விசா முடிந்து விட்டது. இனி ஊருக்கு போக வேண்டுமானால் முதலில் ஜெயிலுக்கு போக வேண்டும். அதை விட நான் சொன்னபடி கேட்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. உனக்கும் வேகமாக அதிக பணம் தேவை. எனக்கும் தான். ஏனென்றால் உனக்காக நானும் நிறைய செல்வழித்திருக்கிறேன். உன்கருப்பு முடி , பழுப்புத்  தோல் நிறத்துக்கு இங்கு நல்ல கிராக்கி. இரண்டு பேருமே ஒரு உடன்படிக்கைக்கு வருவோம்.  நீயும் முரண்டு பிடிக்க கூடாது.” என்றான்.
“எனக்கும் அப்போ வேறு வழியிருக்கவில்லை. அவனே வாடிக்கையாளர்களை கூட்டி வருவான்.  நான் அறையை விட்டு எங்கேயும் போகமுடியாது. சாப்பாடு தண்ணி கூட வாடிக்கையாளரைப்போலவே அறைக்கு வந்து சேரும்.  எனக்கும் குடும்பத்துக்குமான தொடர்பு குறைவுதான். எப்போதாவது அவனின் தொலைபேசியில் தொடர்பெடுத்து சில நிமிடங்கள் மட்டுமே பேச தருவான். ஆனாலும் அவனும் நல்லவன்.  வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் எனக்கும் அவனிடம் நம்பிக்கை வந்து விட்டிருந்தது. அதுக்காகவே நானும் அவன் சொன்னபடியெல்லாம் நடக்கத் தொடங்கியிருந்தேன்.  இப்படியே மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அறைக்கு தேடி வருபவர்கள் குறையத் தொடங்கினார்கள். உலகின் தொழில் நுட்பம் எப்படி வேகமாக மாறி வருகிறதோ அதுபோலவே எங்கள் தொழிலின் நுட்பத்தையும் மாற்றவேண்டியிருந்தது. நான் வீதிக்கு வந்து விட்டேன். இப்போ எனக்கும் கொஞ்சம் நின்மதி. வெளி உலகம். நிறைய மனிதர்களோடு பேசிப் பழகலாம். அதை விட முக்கியம், எல்லா பணத்தையும் அவனிடம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு இருநூறு யுரோ அவனுக்கு கொடுத்தால் போதும். நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அது எனக்கே. ஆனால் அறை வாடகை, சாப்பாடு என்செலவு . 

“இப்போதான் நீ வெளியே வந்து விட்டாயே ? பிறகெதுக்கு அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும்?” 

“தெரியாத மாதிரியே கேக்கிறியே………..? இந்த மாதிரி தொழில் நம்பிக்கை மட்டுமே மூலதனம். ஒருவரை ஒருவர் ஏமாத்திறதா சந்தேகம் வந்தாலே அவ்வளவுதான். யாரோ ஒருத்தர் உயிரோடு இல்லை. எனக்கோ  ஊரில் உள்ள குடும்பத்துக்கோ ஏதும் நடந்து விடக்கூடாது என்கிற பயம் தான்.” 

என்று விட்டு, விஸ்கி கிளாசில் கடைசி துளியை அண்ணாந்து நாக்கால் துடைத்து விட்டு,
“கணக்கில் எழுதிக் கொள்.” என்றவள் சிகரெட்டை பற்றவைத்து ஊதியபடியே வழமையான  இடத்தில் போய் நின்று கொண்டாள். 

இப்போது அவள் என் வாடிக்கையாளர். கற்பனையைக்  கண்டபடி ஓட விடவேண்டாம். அதாவது கடைக்கு மட்டும். அப்படியான நாளில் தான்  ‘ஒருஉதவி’ என்று கேட்டிருந்தாள். 

“என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. கொஞ்சம் பணம் அம்மாவின் பெயருக்கு அனுப்பி விட முடியுமா?”
என்றாள். அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. அது மட்டுமில்லை ஒருநாள் கொஞ்சம் பதட்டமாகவே வந்தவள், இன்னொரு உதவி என்றாள். 

“என்ன சொல்லு.” 

“கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பவேண்டும். மகளுக்கு கண் சிகிச்சை செய்யப்போகிறார்கள். பணம் அறையில்  இருக்கிறது.  நீ வந்தால் எடுத்து கொடுத்து விடுவேன்.” 

“நீயே கொண்டு வந்து கொடேன்.” 

“இல்லை அது அதிகபணம். எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்தது. யாராவது பறித்து விட்டால்…….? அது என் மகளின் எதிர்காலம். அதுதான் பயமாக இருக்கிறது.” 

“நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று நினைக்கவில்லை. சரி வேலை முடிந்து போகும் போது வருகிறேன்.” 

வேலை முடிந்து போகும்போது அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்தேன். நின்றிருந்தாள்.  அவளை காரில் ஏற்றிக்கொண்டு அவள் காட்டிய பாதையில் போய்க்கொண்டிருந்தேன்.அதிக தூரமில்லை. வண்டி பழைய நகரத்துள் நுழைந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தோம். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரம்.  எனக்கு பழக்கமான நகரம்தான். குறுகிய சாலைகள். எலாப்பக்கமும்  படிகட்டுகளும், பழைய கட்டிடங்களும் மட்டுமே. கோடை காலத்தில் உல்லாச பயணிகளால் நிரம்பி வழியும் தேவதைகளின் நகரம். குளிர் காலத்தில்  குப்பையைக்  கிளற வரும் பெருச்சாளிகளை விட வீதியில் யாரையும் காண முடியாது.  அப்போ அது பேய்களின் நகரம். 

ஒரு பழைய மரக்கதவைத் தள்ளி திறந்தவள், லைட்டைப் போட்டுவிட்டு முதலாம் மாடிக்கு ஏறிப் போய் நின்று விட்டு, “இங்கேயே நில்.” என்றவள் இரண்டாம் மாடிக்குப் போய் அங்கிருந்த ஒரு பூச்சாடியில் கையை வைத்து திறப்பை எடுத்துக் கொண்டு வந்து அறையை திறந்தாள். 

“திறப்பை எதுக்கு பூச் சாடியில் வைத்திருகிறாய்……?” 

“ஒரு தடவை என் கைப் பையை இரண்டு சிறுசுகள் பறித்து விட்டார்கள். கஞ்சாவோ கட்டையோ புகைப்பவர்களா இருக்கலாம். பாவம் அவர்களுக்கு பணத் தேவை. அதிலிருந்த பணம், வீட்டு திறப்பு எல்லாமே பறி போய் விட, நான் வீட்டுக்கு உள்ளேயே போக முடியாமல் இரவு முழுவதும் இந்த படியிலேயே படுத்திருந்து விட்டு அடுத்த நாள் மேல் வீட்டுக் காரரின் உதவியோடு கதவை உடைத்து பூட்டை மாற்றி விட்டேன். அதுக்குப்  பிறகு திறப்பை எங்காவது ஒளித்து வைத்து விட்டு போவேன்.” என்றபடி கதவைத் திறந்து, “உள்ளே வா.” என்றழைத்தாள். 

மிகச் சிறிய அறை. எல்லா வாசனைத்திரவியங்களும் கலந்த ஒரு வாசனை. ஒரேயொரு சோபா மட்டுமே. அதை விரித்து கட்டிலாகவும் பயன்படுத்தலாம். சிறிய அலமாரி. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிக்கு முன்னால் அவளது அலங்காரப் பொருட்கள். கொண்டோம் பாக்கெட்டுகள். அதுக்கடுத்து குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்த டூ இன் வண் அறை. “இரு.” என்றபடி, அவசரமாக சோபாவின் கீழே கிடந்த ஜட்டி ஒன்றை காலால் ஒரு முலையில் தள்ளிவிட்டு,  “
சிறிது நேரத்துக்கு முன்னர் வந்து விட்டுப் போனவன் ஒருவனுடையது. எதோ அவசரத்தில் இதை போட மறந்துவிட்டு போய் விட்டான். சில நேரம் அதை தேடி திரும்பவும் வரலாம்”. என்று சிரித்தவள்,
அறையை பார்த்தாயா? ஏதாவது குடிக்கிறயா? என்று கேட்க மாட்டேன். இங்கு எதுவுமில்லை.” 

இன்னொரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சப்பாத்து பெட்டிகளில் ஒன்றை எடுத்து அதிலிருந்த சப்பாத்து ஒன்றினுள் கையை விட்டு இழுத்தாள். சுருட்டி வைக்கப்பட்டிருந்த யூரோ நோட்டுக்களை என்னிடம் நீட்டியவள்,
“ஏழாயிரம் வரையுள்ளது. முடிந்தளவு விரைவாக அனுப்பிவிடு.” என்றாள். 

‘ஏழாயிரமா………..?’ என மனதில் உள்ளே திடுக்கிட்டாலும் காட்டிக் கொள்ளாமல்.
“பணத்தை எதுக்கு சப்பாத்துக்குள் ஒழித்து வைத்திருக்கிறாய் ?” 

“எனக்கென்ன வங்கி கணக்கா இருக்கு போட்டு வைக்க. அதைவிட வரும் வாடிக்கையாளர்கள்  யாராவது நான் குளியலறைக்குள் போனதும் களவெடுத்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஒரு தடவை நடந்திருக்கிறது. அதுக்குப் பின்னர் தான் இப்படி ஒழித்து வைக்கிறேன். ஆனாலும் எப்போதும் ஒரு பயத்தோடு அடிக்கடி சரி பார்த்துக்கொள்வேன். பணத்தை நாளைக்கே அனுப்பி விடுவாயா……..?” 

“அதிகமான பணம் ஒரேயடியாக முடியாது. இரண்டு மூன்று தடவை பிரித்து தான் அனுப்பலாம். உன் அம்மாவின் பெயர் விலாசம், தொலைபேசி இலக்கம் எல்லாம் என்தொலைபேசிக்கு அனுப்பிவிடு.” என்றபடி அவளை மீண்டும் ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் விட்டு  பணத்தை கடையில் கொண்டுபோய் வைத்து விட்டு போய் விட்டிருந்தேன். 

இப்போநான், அவளின் வங்கியாக மாறி விட்டிருந்தேன். அவ்வப்போது கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். கொடுக்கும்போதெல்லாம் ஒரு துண்டில் திகதி தொகை எழுதி அவளுக்கு காட்டி விட்டு தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். பணம் அனுப்பி இரண்டு வாரம் கழித்து மகிழ்ச்சியாக வந்தவள், பாருக்கு முன்னால் கதிரையை இழுத்துப் போட்டு விட்டு ‘ஒரு விஸ்கி’ என்றாள். 

“என்ன மகிழ்ச்சியாக இருகிறாய் போல…” 

“ஓம்……. மகளுக்கு ஒரு கண்ணில் சிகிச்சை முடிந்து ஓரளவு பார்வை வந்து விட்டதாம். போனில் சொன்னாள். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாம். முடிந்தளவு விரைவில் அடுத்த கண்ணையும் சிகிச்சை செய்யச்சொல்லி வைத்தியர் சொல்லியிருக்கிறாராம். 

விஸ்கியை ஊற்றி கொஞ்சம் கோலா கலந்து நீட்டியபடி, 

“பிறகென்ன மகிழ்ச்சியான செய்தி. அடுத்த கண்ணையும் செய்ய வேண்டியது தானே…….? 

“எனக்கும் ஆசை தான். அதுக்கு இன்னுமொரு பத்தாயிரம் யூரோக்கள் வேணுமே…….? 

“பத்தாயிரமா…….? உன்னிடம் இப்போ வெறும் ஆறுநூறு தானே இருக்கு?”
“ம்…….அதை சேர்க்க இன்னும் மூன்று நாலு வருசம் தேவைப்படும். சரி பார்க்கலாம்.” என்று தொடங்கிய உரையாடலோடு குடித்துக்கொண்டேயிருந்தாள். 

இடையில் கடைக்கு வந்தவனொருவன்,
“அவளிடம் என்ன போகலாமா ?”  என்றதும்.
“நான் இன்று லீவு என்னை குடிக்கவிடு. போடா. என்று திட்டி அனுப்பிவிட, அவனோ என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியேறி விட்டான்.
கடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. இப்போ குளிர் காலமென்பதால் அதிக வாடிக்கையாளர்களில்லை. வந்திருந்த மதுப்பிரியர்களும் தள்ளாடியபடி விடை பெற்றார்கள். 

“சரி கடை சாத்த வேண்டும்”. என்றதும், 

நீ வேலை நேரத்தில் குடிக்க மாட்டாய் எனக்குத் தெரியும். ஒரு நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து  நிறைய குடிக்க வேண்டும். சரியா………?” என்றபடி நடக்கத் தொடங்கியிருந்தாள். கடையை சாத்தி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்த நேரம் கீல்ஸ் சப்பாத்துக்களைக் கழற்றி கையில் பிடித்தபடி தள்ளாடிய படியே போய்க்கொண்டிருந்தவளிடம்,
“ஏய்…………  வந்து ஏறு. வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.” என்றதும், அதுக்காகவே காத்திருந்தவளைப்போல ஓடி வந்து ஏறிக்கொண்டவள். வீடு வந்ததும், 

வீட்டுக்கு வாயேன். போன தடவை வந்த போது எதுவும் கொடுக்கவில்லை. இப்போ ஒரு ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. ஒரு கிளாஸ் குடித்து விட்டு போ.” 

“வேண்டாம்……… நீ நிறைய குடித்திருக்கிறாய். போ. இன்னொரு நாளைக்குப்  பார்க்கலாம்.” 

“என்ன……… பயப்பிடுறியா ? நான் ஒண்டும் செய்ய மாட்டேன். வா.” 

ஒரு பெண் ஒருவனைப்பார்த்து பயப்பிடுறியா என்கிற ஒரு வார்த்தையே அவனை உசுப்பி விடும். 

“எனக்கா………..பயமா……..?” என்றபடி அவள் பின்னல் போயிருந்தேன்.

 புதிதாக இருந்த விஸ்கியை எடுத்து என்னிடம் நீட்டி,
“நீயே திற.” என்றபடி இரண்டு பிளாஸ்டிக் கப்புகளை எடுத்து நிலத்தில் வைத்து விட்டு, அவள்  நிலத்திலேயே குந்திவிட சமஅளவில் விஸ்கியை ஊற்றிய போது தான், ‘ஐயையோ  கலக்க எதுவுமே வாங்கவில்லை .மறந்து விட்டேன்’. என்றவளிடம், “பரவாயில்லை.” என்றபடி ‘சியஸ்’ சொல்லி ஒரே மடக்கில் விழுங்கி விட்டேன். 

லேசாய் எரிந்தபடி இதயத்தை ஊடறுத்து இறங்கியது. “இன்னும் கொஞ்சம்……” என்றாள். அடுத்த தடவை எரியவில்லை. “சரி போகிறேன்.” என்று எழுந்தபோது, தட்டுத்தடுமாறி எழுந்தவள் என்னை  இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ளத்  தள்ளி விடவும் முடியாமல், அணைக்கவும் முடியாமல் அசையாமல் நின்றிருக்க.

 ஒரு கை என்சட்டைக்குள் நுழைந்து முதுகில் வருடிக் கொடுக்க, உள்ளே போன விஸ்கியும் அவளின் அரவணைப்பும் சூடேறத் தொடங்கியிருந்தது. 

“உனக்கு கட்டிப் பிடிக்கத் தெரியாதா……….. ? “என்று காதருகில் லேசாக கேட்டாள். 

“இல்லை விடு…….. நான் போக வேணும்.” 

அவளின் மறுகை என் பிடரியில் தழுவி தலையை பலவந்தமாக இழுத்து குனிய வைத்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தபோது, எனக்கு என் மேலேயே சந்தேகம் வரத் தொடங்கியிருந்தது. ‘இதுக்குமேல் போனால் எல்லாமே கட்டுப்பாட்டை இழந்து விடும். ஓடு’ என்று உள் மனது துரத்தியது.
“மனைவி காத்திருப்பாள் போகவேணும்.” என்றபடி கொஞ்சம் பலவந்தமாகவே அவளை விடுவித்துக்கொண்ட போது சோபாவில் அமர்ந்து.
“என்ன பயந்துட்டியா………?” என்றபடி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

 வேகமாக வெளியே வந்து காரில் ஏறி உள்ளே லைட்டை போட்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தேன். அவளின் லிப்ஸ்டிக்  உதட்டில் ஓட்டியிருந்ததது. தண்ணீர் போத்தலை எடுத்து முகத்தைக் கழுவித்  துடைத்து விட்டுக் காரில் ஏறினாலும் மீண்டும் வெளியே வந்து சட்டையை கழற்றி நன்றாக உதறிப்போட்டுக் கொண்டேன். 

ஏனென்றால் சாப்பாட்டில் நீள முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்திருக்கும்  உறவு நீடிக்குமாம் என்று மனைவி சாவகாசமாக சொல்லி விடுவாள். என் சட்டையில் ஒருநீள  முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்தது என்று தப்பிக்க முடியாது. நீலப்பட நாயகனைப்போலவே என்னை பார்ப்பாள். அதனால் கால்சட்டையையும் கழற்றி உதறி போட்டுக்கொண்டு வீடு போனாலும், டளிடாவின் பெர்பியூம் வாசனை என்னில் ஒட்டியிருப்பது போலவேயிருந்தது. நல்லவேளை மனைவி நித்திரை. மெதுவாக குளியலறையில் நுழைந்து ஆடைகளை அவிழ்த்து அழுக்கு கூடையில் போட்டு விட்டு ஒரு குளியல். படுத்து விட்டேன். 

மறுநாள் கடைக்கு வரும்போதே புதுமணப் பெண்ணைப்போல வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவள், 

“என்ன நேற்று நன்றாக உறங்கினாயா ?” என்று கிண்டலாகவே கேட்டாள். 

 “என்ன நக்கலா……….? உனக்கு சரியான போதை போல. 

“உண்மையை சொல்லவா… ? எனக்கு அவ்வளவு போதையில்லை. ஆனால் முதன்முதலாக என் மனதுக்குப்பிடித்த ஒருவனை  கட்டித் தழுவிக்கொண்டேன். 

கொஞ்சம் திடுக்கிட்டவனாகவே, 
“என்னது ………?” 

“பயப்பிடாதே. அவ்வளவும் தான். இனி அப்படியொரு தர்ம சங்கடத்தை உனக்கு நான் கொடுக்க மாட்டேன்.” என்று விட்டு போய் விட்டாள். கோடையும் குளிருமாக மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அவ்வப்போது  வழமை போல பணம் அனுப்பவும் சேமிப்பில் வைக்கவும் வந்து போய்க்கொண்டிருந்தவள், இந்தவருடக்  குளிர் காலத்து இரவொன்றில் கொஞ்சம் சோர்வாக வந்தவளிடம், 

“என்ன கோப்பி போடவா ?” என்றதும், 

“இல்லை எனக்கு விஸ்கி.” என்றாள். 

“உன்னை வீட்டில் மட்டும் கொண்டு போய் விட மாட்டேன்.” என்றபடி விஸ்கி கிளாசை நீட்டியதும், 

“சிரிக்கும் மனநிலையில் நானில்லை.” என்றபடி அதை உறிஞ்சியவளிடம், 

“ஏன் ஏதும் பிரச்சனையா…………? 

“ம். ஓரளவு சரி வந்த பார்வையும் மகளுக்கு மீண்டும் மங்கலாகிப் போய்க்கொண்டிருக்கிறதாம். உடனடியாக அடுத்த சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போதைக்கு எதோ ஊசி போட வேண்டுமாம். அதுக்காக கொஞ்சம் பணம் தருகிறேன். நாளை அனுப்பி விட முடியுமா?” எனப்  பணத்தை நீட்டினாள். அதை வாங்கியபடி,
“சிகிச்சையை செய்ய வேண்டியதுதானே… ? சேர்த்திருக்கும் பணத்தை அனுப்பி விடலாமே…….? 

“எவ்வளவு சேர்ந்திருக்கிறது……..?”
நான் குறித்து வைத்த துண்டை எடுத்துப்பார்த்து விட்டு.
“இப்போதைக்கு ஆறாயிரத்து இருநூறு.” 

“இன்னும் குறைந்தது இரண்டாயிரம் தேவை. அதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?” 

“என்னிடமும் இப்போ அவ்வளவு தொகை இல்லை. யாரிடமாது கேட்டுப் பார்கிறேன். கிடைத்தால் நல்லது.” 

“சரி விடு. எல்லாம் அவன் நினைத்தபடி நடக்கட்டும்.” என்று மேலே காட்டியவள், வெறும் கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பிவிட்டு, 

“நீ இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது ?” 

“ஏழு வருசமிருக்கும்.” 

“அதுக்கான ஆதரரம் ஏதாவது இருக்கா ?” 

“பாஸ்போட் மட்டும்தான். அதுவும் என்னிடமில்லை.” 

“நன்றாக யோசித்துப்பார். வேறை ஏதாவது…….?” 

“வேறை ஏதாவதென்றால் ஆரம்பத்தில் வீதியில் நிக்கும்போது சில தடவை வீசா இல்லாததுக்காக என்னை கைது செய்திருகிறார்கள்.” 

“மேசையில் தட்டிய நான், 

“அது போதும். எப்போதாவது இரவு தடுத்து வைதிருந்தார்களா? நீதிபதி ஒருவர் முன்னால் கொண்டுபோய் உன்னை நிறுத்தியிருந்தர்களா?” 

“அது முதல் தடவை. அப்படி நடந்தது.” 

“அப்போ உன்னை விடுதலை செய்யும்போது ஏதாவது பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதில் ஒரு பிரதி உன்னிடம் கொடுத்தார்களா ?” 

“எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய்………?” 

“கேட்டதுக்குப் பதில் சொல்லு.” 

“ம்…….. கொடுத்தார்கள். அதை எங்கேயோ தொலைத்து விட்டேன். 

“அது போதும். நாளைக்கே உன் அம்மாவுக்கு போனடித்து உன் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை உடனடியாக அனுப்பி வைக்கச் சொல்லு.” 

“எதுக்கு…….? 

“பிரான்சில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்த ஆதாரத்தோடு நிரூபித்து வதிவிட உரிமை வாங்கி விடலாம். அது மட்டுமில்லை, உன் மகளை இங்கு வரவழைத்து சிகிச்சை கூட செய்து விடலாம். 

“உண்மையாகவா……..? அவள் கண்கள் விரிந்தது. 

“உண்மை. விண்ணப்ப படிவங்கள் ஒன் லைனிலேயே எடுக்கலாம். நான் அதை செய்கிறேன். அதே நேரம் உன்னை இத்தனை வருடங்களாக தெரியுமென மூன்று பிரெஞ்சுக்காரர்களின் கடிதம் வேண்டும். ஒன்று நான் எழுதலாம். உனக்கு தெரிந்த இருவரின் கடிதம் எடுக்க வேண்டியது உன் பொறுப்பு.” 

கொஞ்சம் யோசித்தவள்,
“வழமையாக கொண்டோம் வாங்குகிற பாமசிக் காரரிடம் வாங்கலாம். இன்னுமொருவர்…….ஓகே. அவரிடமும் வாங்கலாம்.” 

“யாரந்த முடி திருத்தும் கடை வைத்திருக்கும் கிழவன் தானே……..?” 

“உனக்கெப்படித் தெரியும்.” கொடுப்பினுள் சிரித்தாள். 

“அடிக்கடி உன்னோடு கதைத்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர் தான்.  பிள்ளைகள் இல்லை. மனைவி பல வருடங்களுக்கு முன்னர்  இறந்து விட்டார். நான் கூட முன்னர் அவரிடம் தான் முடி வெட்டிக் கொள்வேன். இப்போ அவருக்கு வயசாகி விட்டதால் கை நடுங்குகிறது. அதனால் அவரிடம் போவதில்லை.” 

“நல்ல மனிதர் தான். பேச்சுத் துணைக்காக என்னிடம் அடிக்கடி வருவார். பின்னர் வாரத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் கடையை சாத்தி விட்டு சமையல் செய்து வைத்து  என்னை அழைப்பர். பகல் முழுவதும் அவரோடேயே கழிப்பேன். பணம் வேண்டாமென மறுத்தாலும் பலவந்தமாக திணித்து அனுப்பி விடுவார்.” 

“அதெல்லாம் இருக்கட்டும். கடிதத்தை வாங்கி விடு. அது சரி, பின்னர் போலிஸ் உன்னை கைது செய்வதில்லையா?” 

“இல்லை. எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. அவர்களுக்கு வேண்டியதை அவ்வப்போது கொடுத்து விட வேண்டும்.” 

“கொஞ்சம் அதிர்ச்சியாகவே, என்னது இலஞ்சமா……….? இந்த நாட்டு போலீசா…….? 

“நீ நினைப்பது போல பணமாக இல்லை. அவர்கள் இரகசியமாக தனித்தனியாக  அழைப்பார்கள். நாங்களும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். அவர்களும் எங்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம்.” 

“உண்மையாகவா………?” 

“உன் நண்பன் பாஸ்கல் கூட அவ்வபோது அழைப்பான். அவனிடம் கேட்டு விடாதே. அவன் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். பாவம் தெருவில் என்னோடு நிக்க வேண்டும்.” என்று சிரித்தபடி கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பினேன். 

“எனக்காக அந்த டளிடா பாடலை ஒருக்கா போடுகிறாயா ?” என்றதும் யூ டியுப்பில் அதை எடுத்து ஓட விட்டேன்.
Je ne rêve plus, je ne fume plus
Je n’ai même plus d’histoire
நான் இனி கனவு காணவில்லை, இனி புகைப்பதில்லை
என்னிடம் இப்போது ஒரு கதை கூட இல்லை
நீங்கள் இல்லாமல் நான் அழுக்காக இருக்கிறேன்
நீங்கள் இல்லாமல் நான் அசிங்கமாக இருக்கிறேன்
நான் ஒரு ஓய்வறையில் அனாதை போல இருக்கிறேன்
நான் இனி என் வாழ்க்கையில் வாழ விரும்பவில்லை
நீங்கள் வெளியேறும்போது என் வாழ்க்கை முடிகிறது
எனக்கு இனி வாழ்க்கை இல்லை, என் படுக்கை கூட இல்லை
இது ஒரு நிலைய தளமாக மாறுகிறது
நீங்கள் கிளம்பும்போது
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
நீங்கள் எப்போது என்று உங்களுக்குத் தெரியாது
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது
அது விரைவில் இரண்டு ஆண்டுகள் ஆகிறது
நீங்கள் கவலைப்படவில்லை என்று
ஒரு பாறை போல
பாவம் போல
நான் உங்களிடம் தொங்குகிறேன்
நான் சோர்வாக இருக்கிறேன்
அவர்கள் இருக்கும்போது மகிழ்ச்சியாக நடிப்பது
நான் ஒவ்வொரு இரவும் குடிப்பேன்
ஆனால் அனைத்து விஸ்கிகளும்
என்னைப் பொறுத்தவரை எங்களுக்கும் அதே சுவை இருக்கிறது
எல்லா படகுகளும் உங்கள் கொடியை சுமக்கின்றன
நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
நான் உங்கள் இரத்தத்தை உங்கள் உடலில் ஊற்றுகிறேன்
நீங்கள் தூங்கும் போது நான் ஒரு இறந்த பறவை போல இருக்கிறேன்
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
இன்னும் உங்கள் தோலுக்கு முன் எனக்கு திறமை இருந்தது
இந்த காதல் என்னைக் கொல்கிறது
அது தொடர்ந்தால்  தனியாக இறந்துவிடுவேன்
ஒரு முட்டாள்தனமான குழந்தையைப் போல என் வானொலியின் அருகில்
பாடும் என் சொந்தக் குரலைக் கேட்பது
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
அது சரி, எனக்கு உடல் நலமில்லை
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
என் இதயம் முற்றிலும்  சரியில்லை
சுற்றிலும் தடுப்புகள் உள்ளன
என் உடல் நலமில்லை ஏன்  என்று கேட்கிறீர்களா?
 
அவளும் சேர்ந்தே பாடியவள், அடுத்த கிளாசையும் முடித்து விட்டு,  “பணத்தை மறக்காமல் அனுப்பி விடு.” என்று விட்டு போய் விட்டாள்.
வேலை முடிந்து போகும்போது தொலைத்துவிட்ட எதையோ தேடுபவளைப்போல  சிகரெட்புகையை ஊதியபடி  லேசாக தள்ளாடிய படியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அன்றிரவு குளிர் வேறு அதிகமாக இருந்தது. கடலில் அலை வேறு அதிகமாக இருந்தது. மழை பெய்யுமென வானிலை அறிக்கை வேறு போனில் காட்டிக் கொண்டிருந்தது. காரை நிறுத்தி வீட்டில் கொண்டு போய் விடவா என கேட்க நினைத்தாலும், அன்றைய அனுபவத்துக்கு பிறகு நான் அப்படியொரு முயற்சியை எடுத்ததில்லை. எனவே கையசைத்து விட்டு போய் விட்டேன். அதுதான் நான் கடைசியாகப் பார்த்தது.
Ooooooooooooooooooooooooo 

அன்று பாஸ்கலின் வரவுக்காகவே காத்திருந்தேன். இந்தக் கிராமத்தின் காவல்துறை அதிகாரி அவன், நீண்டகால நண்பன். இரவு அவன் வரும்போதே, “செய்தி தெரியுமா?” என கேட்டபடி வந்தான். 

“என்ன ஸ்ட்ரைக் தானே……..? 

“இல்லை……… டளிடா விடயம்.” 

“அதுக்குதான் உனக்கு போனடிதேன். காலை இரண்டு சிவில் போலிஸ் வந்து விசாரித்து விட்டு போனார்கள் என்ன நடந்தது?” 

“ஓ………. தெரியாதா? அவள் இறந்து போய் விட்டாள். யாரோ நேற்றிரவு அவளை கொண்டுபோய் காட்டுப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு எரித்துக் கொன்று விட்டார்கள்.” 

இழவுச் செய்திகள் எனக்கு புதிதில்லை தான். ஆனாலும் அது டளிடா என்றதும் லேசாகத்  தலை கிறுகிறுத்தது. 

“நிச்சயமாக தெரியுமா ? அது அவள் தனா?” 

“ம்.  அவள்தான். நானும் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன். அவளின் கைப்பை பற்றைக்குள் கிடந்தது. அதில் அவள் தொலைபேசி இருந்தது. அதிலுள்ள விபரங்களை வைத்துத்தான் அடையாளம் கண்டோம். ஏனென்றால்  டயரை போட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.  உடல் அடையாளம் காண முடியாதவாறு எண்பது வீதம் எரிந்து விட்டது.” 

“என்ன கொடுமை. யாரென்று தெரியுமா………?” 

“காட்டு பகுதிக்கு செல்லும் வீதியில் உள்ள சி சி டி வி காமராவையும் அவள் உடல் கிடந்த இடத்தில் இருந்த கார் டயர் அடையாளத்தையும் வைத்து ஒருவனை கிரைம் பிரிவு கைது செய்திருக்கிறார்கள். அவன் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் உறுப்பினர். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு அவ்வளவு தான் தெரியும்.” 

“ஏன் செய்தான்……….?” 

“நிச்சயமா ஒருத்தன் தனியாக செய்திருக்க முடியாது. விசாரணை முடிவில்தான் தெரியும். வெளிநாட்டவர்களைக் குறிப்பாக பாலியல்தொழில் செய்யும் பெண்களை, அதுவும் இஸ்லாமியப்  பெண்களை குறிவைத்து இயங்குகிறார்கள். அது அவர்களுக்கு இலகுவான இலக்கு. கைது செய்யப் பட்டாலும் இலகுவாக கொஞ்ச நாள் தண்டனையோடு வெளியே வந்து விடுவார்கள்.” 

“என்ன……. நீயே இப்பிடி சொல்கிறாய்?” 

“ம்……இறந்து போனவர் சட்டத்துக்கு புறம்பாக இங்கு தங்கியிருந்தவர். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்தவர். அவர் சார்பாக வாதாட கூட யாரும் வர மாட்டார்கள். இவ்வளவும் போதுமே குற்றவாளிக்கு.” 

“ஆனால் சட்டம் என்று ஒண்டு இருக்கு தானே……?” 

லேசாக சிரித்தபடி, “ஒரு பியர்.” என்றான். 

அவனுக்காக கிளாசில் நிரப்பிய பியரின் நுரையைப் போலவே அவளின் நினைவுகள் அத்தனையும் என்னுள் ஒருதரம் பொங்கி அடங்கியது. மூளையின் ஓரத்தில்சின்னதாக ஒட்டியிருந்த அவள் மகளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவது போலவிருந்தது. அவனுக்கான பியரை வைத்துவிட்டு கழிப்பறையில் போய் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்திய குளிர் நீரால் அடித்து கழுவி துடைத்து விட்ட பின்தான் அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்க முடிந்தது. ஒரு முடிவெடுத்தேன். 

அவளின் மத முறைப்படி இறந்துபோனால் உடல் சூடு ஆறுவதுக்கு முன்னரே மசூதிக்கு கொண்டுபோய் வாழ்நாளில் ஏதும் பாங்கள் செய்திருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்து புதைத்து விடுவார்கள். அப்போதான் ஆன்மா சொர்க்கம் போகும் என்பது அவர்களது நம்பிக்கை. உடல் கிடைக்கா விட்டால் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்கள் முறைப்படி உடலை எரித்து சாம்பலை கடலிலோ ஆற்றிலோ நீரில் கரைத்து சடங்கு செய்வார்கள்.
பியரை உறுஞ்சிக் கொண்டிருந்த பாஸ்கலிடம் போய்,
“அவள் எரிக்கப்பட இடத்திலிருந்து கொஞ்சம் சாம்பல் மட்டும் எடுத்துக் கொடுக்கிறாயா……?” 

திடுகிட்டவன், “என்ன என் வேலைக்கு முடிவு கட்ட போகிறாயா…………?” 

“இல்லை. ஒன்றும் பிரச்னை வராது. கொஞ்சாமா ஒரு பிடி மட்டும்………..” 

“விசாரணை முடியும்வரை அதெல்லாம் முடியாது. இப்போ அந்த இடம் கிரைம் பிரிவின் கட்டுப் பாட்டிலிருக்கு.” 

“இருக்கட்டுமே……….நீ கூட அவளை பாவித்திருக்கிறாய். அந்த நன்றிக்காவது செய்.” 

“ஓ…….. சொல்லி விட்டாளா? சரி நாளை கொண்டு வந்து தருகிறேன்.” 

ஆனாலும் எனக்கு அவனில் நம்பிக்கையில்லை கடுதாசியை கொளுத்தி அந்த சாம்பலை கொண்டுவந்து கொடுத்து போலிஸ் புத்தியை காட்டி விடுவான். எனவே,
“சரி வேண்டாம். சனமேயில்லை. பியரை குடித்து முடி. கடையை பூட்டி விட்டு இரண்டு பேரும் போகலாமென முடிவெடுத்து இரண்டு பேருமே போனோம். அவன் காட்டிய இடத்தில காரை நிறுத்திவிட்டு போனில் உள்ள டோச் வெளிச்சத்தில் நடந்துபோய்  ‘போலீஸ்’ என என எழுதப்பட்டிருந்த சிவப்பு வெள்ளை நாடா கட்டியிருந்த இடத்தில் கொஞ்சம் சாம்பலை அள்ளி தயாராய் கொண்டுபோயிருந்த பொலிதீன் பையில் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டிருந்தோம். 

அடுத்தநாள் காலை தபால்நிலையத்தில் பணத்தை அனுப்பிய பின்  மொரோக்கோ இலக்கத்துக்கு விபரத்தையும் அனுப்பி விட்டு கடையை திறந்து  விஸ்கி போத்தலின் மூடியை திறந்து வாயில் கவிழ்த்து அது தொண்டை வழியே களக்  களக் என்று இறங்கும் சத்தம் நீண்ட நாளின் பின்காதில் கேட்டது. பாதி முடிந்து விட மீதியை எடுத்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு  முடி திருத்தும் கடைக்கு போயிருந்தேன்.  கடை பூட்டியிருந்தது. அண்ணாந்து பார்த்தால்  கிழவன் கடற்கரையை பார்த்தபடி வீட்டு பல்கனியில் நின்றிருந்தார். பெரிய டைடானிக் ஜாக் எண்டு நினைப்பு. 

“ஓய்ய்…….என்ன கடை பூட்டா ?”  என்றதும், 

“ஓம்.  இன்று புதன் கிழமை. கடை லீவு என்றார். 

அவள் இனி வர மாட்டாள். வந்து கடையை திற.”  என்றதும் வேகமாக வந்து கடையை திறந்து என்னை உள்ளே தள்ளி,
“என்ன சொன்னாய் ? நான் காத்திருப்பது உனக்கு எப்பிடித் தெரியும்?” என்றவரிடம், 

“முதல்ல மயிர வெட்டு. பிறகு சொல்லுறேன்.” 

சாதாரணமாவே கை நடுங்கும் அவருக்கு இன்னமும் வேகமா நடுங்கத் தொடங்கியிருந்தது. 

“எப்பிடி வெட்ட வேணும்………. சொல்லு.” 

“மொட்டை.” 

“என்னது…….? மொட்டையா? நீ குடித்திருக்கிறாய். உளறாதே ………” 

“சொன்னதை செய்.”  என்றதும், மெசினை எடுத்து வழித்தார். கண்ணாடியில் மொட்டைத்தலையைச்  சரி பார்த்த போது நிலத்தில் கொட்டியிருந்த மயிரையெல்லாம்  கூட்டிக் கொண்டிருந்தார். எல்லா இனத்தினதும் மதத்தினதும் சாதியினதும்  மயிரெல்லாம் குப்பையாய் ஒரு மூலையில் குவிந்து கிடந்தது. 

“சரி இப்பவாவது சொல்லேன். எப்பிடித் தெரியும்? ஏன் வர மாட்டாள்?” 

“அவளுக்காக என்ன சமைத்து வைத்திருக்கிறாய் ?” 

 லேசான வெட்கத்துடன், “அவளுக்கு பிடித்தமான  மட்டன் தஜின் செய்து வைத்திருக்கிறேன்.” 

“சரி போய் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வா.” 

கொஞ்சம் தயங்கிய படியே மேலே வீடுக்கு போய் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் மட்டன் தாஜின்  கறியும் அதுக்கு மேல் ஒரு பாண் துண்டையும் வைத்து கொண்டு வந்து நீட்டியவர், இனியாவது சொல்லலாம் தானே என்பது போல பார்த்தார். 

“செய்தி படித்தாயா ? பெண் எரித்துக்கொலை.” 

“ம்……… படித்தேனே.” 

“அது அவள்தான்.  இனி வர மாட்டாள்.” 

“ஓ………. ஏசுவே……. யார் செய்தது?” 

“யாரோ உன்னைப்போலவே ஏசுவை நம்பும் ஒருத்தன்.”
அவரின் கண்களில் வழிந்த கண்ணீரை எனக்கு தெரியாமல் திரும்பி துடைத்துக் கொண்டார். 

“என்ன அழுகிறாயா ? இவ்வளவு அன்பு வைத்திருந்தால் நீ அவளை திருமணம் செய்திருக்க வேண்டும். சரி இந்த கிண்ணம் உனக்கு தேவையா?
‘இல்லை.’ என்று தலையசைத்தபடி  கதிரையில் அமர்ந்தவர், அங்கிருந்து வெளியேறிய என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். 

வெளியேவீதியை தண்டி  வந்து  கடலைப் பார்த்தேன். மெல்லிய அலைகள் மட்டுமே. மீனைத் தேடி வளைய வரும் நீர் காகங்களைத் தவிர யாருமில்லை. நிலத்தில் மண்டியிட்டு போத்தலை திறந்து மேலும் சில மிடறுகளை விழுங்கி விட்டு, 

“ஓ………. அல்லாஹ் உனை எப்படி தொழுவதென்று எனக்குத் தெரியாது. டளிடா தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்திருக்கலாம். அவள் பாவங்களை மனித்து சொர்க்கத்தினுள் அனுமதிக்குமாறு ரிழ்வான் மலக்கிடம் கட்டளையிடும். அவள் ரூஹ்   சாந்தியடையட்டும்.” 

என்றபடி சாம்பலை எடுத்து கடலில் தூவி,  மிச்சமிருந்த விஸ்கியையும் கடலில் தெளித்துவிட்டு. 

‘டளிடா நீ என்னை எவ்வளவு நேசித்தாயோ அவ்வளவு நானும் உன்னை உன்னை நேசித்தேன்’ என்றபடி மட்டன் தஜினை கிண்ணத்தோடு கடலில் விட்டேன். அது தள்ளாடிய படியே அசைந்து கொண்டிருந்தது. கடல் நீரை கொஞ்சமெடுத்து தலையில் தெளித்து விட்டு.  நான் மொட்டையடித்த காரணத்தை மனைவி கேட்பாள் என்ன சொல்லலாமென  யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.

No Comment