Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் 6

12:34 PM, Posted by sathiri, No Comment

அன்று சிந்திய ரத்தம் தொடர் 6
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

கருணா அணி எங்கே பலவீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தார் வளைந்து நெளிந்து வரும் வெருகல் ஆற்றின் மறுபக்கம் கதிரவெளி என்கிற பகுதியில் இலங்கை இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்தது பிரதான வீதியும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது ஆற்றுக்கு மறு பக்கம் நிற்கும் புலிகள் அந்தப்பகுதியால் உள்ளே நுழைய இலங்கை இராணுவம் அனுமதிக்காது என்கிற நம்பிக்கையில் அந்தப் பகுதியில் கருணா தனது படைகளை நிறுத்தி வைத்திருக்கவில்லை என்று தெரிந்தது.அப்போ நோர்வேயின் அனுசரணையோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் உடனடியாக பிரபாகரனுக்கு ஒரு திட்டம் உதித்தது .புலிகள் படையணி இராணுவ முகாம் அமைந்திருக்கும் கதிரவெளிப் பகுதி ஊடாக ஆற்றை கடக்கவும் பிரதான வீதியால் வேகமாக முன்னேற இலங்கை அரசு உதவவேண்டும் என்கிற கோரிக்கையை நோர்வே ஊடாக இலங்கை அரசிடம் வைத்தார்..இலங்கை அரசின் அதிபராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையாருக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவே மீண்டும் நழுவி வாயில் விழுந்தது போன்ற மகிழ்ச்சி. 1999 ஒக்டோபர் மாதம் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் இழந்துபோன தனது வலக் கண்ணை ஒருதடவை தடவிப் பார்த்தபடியே ஒரு புன் சிரிப்போடு அதற்கான அனுமதியை வழங்கிய நேரம் அதற்கு கைமாறாக புலிகளின் தலைமையிடம் இன்னொரு கோரிக்கையை வைத்தார்.வன்னியில் பெரும் இழப்பை சந்தித்து பெற்ற பெரும் அவமானத்தை ஒரு இழப்பும் இன்றி கிழக்கில் துடைத்து விடுவதென முடிவெடுத்தவர் புலிகள் கருணா தரப்பை ஒடுக்கியதும் மட்டக்களப்பின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் அதற்கு புலிகள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்கிற கிடுக்குப்பிடி கோரிக்கையை வைத்தார் .

எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்பதுபோல என்ன விலை கொடுத்தேனும் கருணாவை ஒழித்து விடுவது என்று கங்கணம் கட்டி நின்ற பிரபாகரன் சந்திரிக்காவின் கோரிக்கைக்கு ஒத்துக்கொண்டார்.இரவோடு இரவாக புலிகள் சிறிய படகுகளில் வெருகல் ஆற்றை கடந்து பிரதான வீதியால் முன்னேறி கதிரவெளிப் பகுதியில் கருணா தரப்பு எதிர்பாரத விதமாக பின்புறமிருந்து அதிரடியாக தாக்குதலை தொடங்கினார்கள் .எதிர்பாரத இந்த தாக்குதலில் கருணா தரப்பு நிலை குலைந்து போக பெண்கள் படையணி தளபதிகளான ராசாத்தி .சுதா .நிசா .ஆகியோரோடு ஆண்கள் பிரிவு ஜிம்கலிதாத்தா .ரெஜி .றொபேட் .திருமால் ஆகிய தளபதிகளும் நுற்றுக்கு மேற்பட்ட போராளிகளும் கொல்லப் பட பலர் இதுவரை காலமும்ஒரே பாசறையில் ஒன்றாக உணவுண்டு ஒன்றாக உறங்கி பொது எதிரிக்கு எதிராக பல வெற்றிகளை குவித்த சக போராளிகளை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை நீட்ட முடியாமல் மௌனமாக சரணடைய கருணா மட்டும் தனது சிறப்பு படையணியை சேர்ந்த இரண்டாயிரம் பேரை இலங்கை இராணுவத்தோடு இணைத்து விட்டு மிகுதி படையணியை கலைந்து போகும்படி கட்டளையிட்ட பின்னர் பன்னிரண்டு பேருடன் இலங்கை அமைச்சரான அலி சாகிர் மௌலானா என்பவரின் உதவியோடு தப்பிச் சென்றார் .அதே நேரம் கருணாவை அழிப்பதற்காக உள்ளே நுழைந்த புலிகள் மீண்டும் அதே பாதையால் வெளியேற முடியாதவாறு இலங்கை இராணுவம் பாதையை அடைத்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் சிதறி ஓடிய கருணா குழுவினருக்கு ஆதரவு கொடுத்து புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி மட்டக்கிளப்பு மாவட்டத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எது எப்படியோ இலங்கை அரசும் மேற்குலகமும் புலிகளில் கருணா பிரிவை ஊக்குவித்து மோதவைத்தன் மூலம் அவர்களின் அறுபது வீத பலத்தை இழக்க வைத்து அவர்களது பேரம் பேசும் சக்தியையும் இழக்க வைத்து நோகாமல் நொங்கு குடித்து விட்டார்கள் .பாராளுமன்ற உறுப்பினரான அலி சாகிர் மௌலானா உதவியோடு தப்பிச் சென்ற கருணா ..மின்னேரியா இராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட .கருணாவுக்கு உதவியதற்காக புலிகள் தன்னை குறிவைக்கலாம் எனப்பயந்த அலி சாகிர் மௌலானா உடனடியாக அமேரிக்கா சென்று தங்கிவிட்டார் .காற்றுப் புகாத இடங்களுக்குள்ளும் புலிகள் புகுந்து விடுவார்கள் என்பதால் கருணா இராணுவ முகாமிற்குள் தங்கியிருப்பதும் தனக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்தான்.காரணம் இலங்கை இராணுவ உயர் அதிகளிகள் வரை பலரும் பணத்துக்காக புலிகளுக்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தனர்.தகல்வல்களின் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு புலிகள் பணத்தை வாரி இறைத்தனர் .புலிகளின் துல்லியமான தகவல் பெறும் விடயத்திற்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். மகிந்த அரசோடு புலிகளுக்கு யுத்தம் தொடங்கியபோது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச வடக்கில் உள்ள இராணுவ அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதற்காக பலாலி கூட்டுப்படை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் இந்தப் பயணம் மிக இரகசியமாக சில உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.கோத்தபாய ராஜபக்ச சென்ற விமானம் பலாலியில் தரையிறங்கிக் கொண்டிருக்கும் போது புலிகள் வன்னியில் இருந்து ஏவிய எறிகணைகள் விமான ஓடு பாதையில் விழுந்து வெடிக்கத் தொடங்கியிருந்தது.

அதிஸ்ட வசமாக உயிர்தப்பிய கோத்தபாய கொழும்பு வந்ததும் யார் அந்த கறுப்பாடு என்று அனைத்து அதிகாரிகளையும் திட்டியதோடு சில அதிகாரிகளை மாற்றமும் செய்திருந்தார்.
ஆகவே தன்னைப் பற்றிய தகவல்களும் புலிகளுக்கு போய் விடலாம் எனவே நாட்டை விட்டு வெளியேறுவதே புத்திசாலித் தனம் என நினைத்திருந்தான்.அன்றைய கால கட்டத்தில் தான் மலேசியா கோலாலம் பூரில் இலங்கை வாலிபர் ஒருவருக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி என்றொரு சிறிய பெட்டிச் செய்தி மலேசிய பத்திரிகைகளிலும் சில இணைய ஊடகங்களிலும் வெளி வந்திருந்தது.குத்தப்பட்ட அந்த வாலிபர் யார் ? குத்தியது யார் ? ஏன் குத்தினார்கள் என்கிற மேலதிக தகவல் எதுவும் இன்றி அந்த செய்தியானது அப்படியே அமுங்கிப் போய் விட்டிருந்தது.அமுங்கிப்போன அந்த செய்தியை இப்போ மீளவும் கொஞ்சம் மேலிழுத்து பார்ப்போம் .
புலிகள் கருணா பிளவு ஆரம்பிக்கும் போதே கருணா தனது மனைவி பிள்ளைகளை பத்திரமாக மலேசியாவிற்கு அனுப்பி விட்டிருந்தான். அவர்கள் மலேசியாவில் 80 களில் இலங்கை முன்னாள் அமைச்சராகவும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராகவும் இருந்த ராஜதுரை என்பவரின் உதவியோடு தங்க வைக்கப் பட்டிருந்தனர்.ராஜதுரை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதோடு கிழக்கு பிரதேசவாதம் பேசும் ஒருவராகவும் இருந்தவர் இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதும் மலேசியவிலேயா தங்கிவிட்டிருந்தார் .இவரின் உதவியோடு மலேசியாவில் தங்கியிருந்த கருணா குடும்பத்தினரின் பாது காப்புக்காக தனக்கு நம்பிக்கையான ஒருவனையும் கருணா நியமித்திருந்தான்.
கருணாவை எப்படியாவது போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்கிற வெறியோடு கிழக்கில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் புலனாய்வு குழுவினர் கருணா நாட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அறிந்ததும் பொட்டம்மானுக்கு தகவலை அனுப்பி வைத்தனர் .

அவன் தனது குடும்பத்தினரிடம் மலேசியா சென்றிருக்கலாம் என முடிவெடுத்த பொட்டம்மான் கருணாவை கண்ட இடத்தில் போட்டு விடும்படி கட்டளையோடு உடனடியாகவே ஒருவனை மலேசியா அனுப்பி வைக்கிறார்.
பொட்டம்மான் அனுப்பிய ஆள் மலேசியா சென்றதுமே அங்குள்ள புலிகள் அமைப்பு ஆதரவாளர்களின் உதவியோடு கருணா குடும்பத்தினரின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்து விட்டாலும் கருணா அங்கு இருக்கிறானா என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் பகுதியை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தான். தங்களை யாரோ கண்காணிப்பதாக கருணாவின் குடும்பத்திற்கு பாது காப்பாக நியமிக்கப் பட்டவனுக்கு ஒரு சந்தேகம் வரத் தொடங்கியது . ஒரு நாள் திடீரென பொட்டம்மானின் ஆளை வழி மறித்து அவனிடம் நீயார் என்று கேட்டதும் அவன் தயாராய் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டான்.இந்தச் சம்பவம் தான் சிறு செய்தியாக வந்திருந்தது .தங்கள் உதவியாளருக்கு கத்திக்குத்து விழுந்துவிட்டது என்றதுமே புலிகள் தங்களை நெருங்கி விட்டார்கள் என்று அறிந்த கருணா குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி லண்டன் சென்று விட்டனர்.
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது கருணா குளு குளு ஊட்டியில் ஒரு பங்களாவில் சூடான தேநீரை உறிஞ்சிய படி செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

No Comment