Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..

12:19 PM, Posted by sathiri, No Comment

அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4
புதிய தலைமுறை வார இதழுக்காக ..
இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார்.ஏனென்றால் அவரது திட்டப்படி யாரும் எதிர்பார்க்காது வடக்கிலும் கிழக்கிலும் கடத்கரையோரமாக உள்ள இராணுவ கடற்படை முகாம்களை முதலில் கடல்புலிகளை கொண்டு கடல்வழியாக தாக்குவதோடு இறுதிப் போரை தொடக்குவது இதுதான் திட்டம்.பேச்சு வார்த்தை தொடங்கியபோதே கடற்புலிகளை பலப் படுத்த அதற்கென தனியாக வெளி நாடுகளில் நிதி சேகரித்து நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் தங்களால் அனுப்பி கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை படித்தவர்களைக் கொண்டு முல்லைத்தீவு கடற்பகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியவர்கள் சிறிய அதிவேக தாக்குதல் படகுகள்.வெடிமருந்துகளை நிரப்பி இலகுவாக தாக்குதல் நடத்தும் கரும்புலித்தாக்குதல் படகுகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் என கட்டியதோடு கடல்புலிகளுக்கும் கடினமான பயிற்ச்சிகள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது .
அதேநேரம் இந்த தாக்குதலுக்காகவே வெளிநாடொன்றில் வாங்கப்பட்ட விசேடமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அவர்கது இரண்டு கப்பலும் முல்லைத்தீவுக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது .

கப்பல் ஆயதங்கள் வந்திறங்கியதும் சண்டை தொடங்கிவிடும் எனவே ஆயுதக் கப்பல்களின் வருகைக்காக கடற்புலிகள் காத்திருந்தார்கள் அந்தக் கப்பலோடு தொலைதொடர்பில் இருந்த நபருக்கு திடிரென தொடர்புகள் விட்டுப் போனது.ஆயுதக் கப்பல்களிட்கு என்ன நடந்தது ..
சர்வதேசக் கடலில் திடிரென தோன்றிய இரண்டு யுத்த விமானங்கள் ஆயுதங்களை ஏற்றியபடி முல்லைத்தீவுக் கடலில் நுழைந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தன ஒரு கப்பல் உடனே வெடித்துச் சிதறிவிட இரண்டாவது கப்பல் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டும் சர்வதேசக் கடலுக்குள் சென்று மறைந்து விட்டது
..கப்பலில் ஆயுதங்கள் வந்த விடயம் எப்படி இலங்கை அரசுக்கு தெரிய வந்தது யார் தகவல் கொடுத்தது..தாக்குதலை நடத்தியது இலங்கை விமானப்படையா ...இந்தியாவா ...இப்படி பல கேள்விகளோடு புலிகளின் தலைமை தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தைக்கு தலைமை தங்கிக் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் ஒரு அமெரிக்க அதிகாரி போனை காதில் வைத்த அன்டன் பலசிங்கத்திடம் " சமாதன காலத்தில் எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள் ..உங்கள் போக்கு எங்களுக்கு நம்ம்பிக்கை கொடுக்கவில்லை.சமாதானத்தில் உண்மையோடும் நேர்மையோடும் இருங்கள்.அதை குழப்பி சண்டையை தொடங்கினால் அதுக்கான விளைவுகள் மோசமானதாக இருப்பதோடு அதன் முழுப் பொறுப்பளிகளும் நீங்களே" ..என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு பதில் எதையும் எதிர் பாராமல் போனை வைத்து விட்டார் .

தாய் லாந்தில் தங்கியிருந்த அன்டன் பலசிங்கத்திற்கு எதுவுமே புரியவில்லை பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்திய போதுதான் விபரங்கள் புரிந்தது.எந்த தாக்குதலையும் இப்போ செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் .
ஆயுதங்கள் வராமல் போனதாலும் அமெரிக்காவின் அழுத்தத் தாலும் அப்போதைக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் பிற்போடப்பட்டது .ஆனால் ஆயுதக் கப்பல் வருகிற தகவல் யார் கொடுத்தது எப்படி பெற்றார்கள் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்கிற விபரங்களை பின்னர் பார்ப்போம் .அதற்கிடையில் மெல்லப் புகைந்து கொண்டிருந்த கருணா விவகாரம் பெரிதாக வெடித்து விட்டிருந்தது.கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த கருணாவை சாந்தப் படுத்துவதற்காக பேச்சு வார்த்தை குழுவில் கருணாவையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.அப்போ தாய்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சர்வதேச நாடுகள் புலிகளின் பிரதிநிதிகளிடம் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதும் அன்டன் பாலசிங்கம் அவர்கள் சிறிது யோசித்து விட்டு நாங்கள் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுகிறோம் ஆனால் அதுக்கான சம்மதத்தினை தலைமையிடம் ஆலோசித்து சொல்வதாக சொன்னதும் உடனே குறிக்கிட்ட கருணா .நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம்.
தலைமை அதுக்கான அதிகாரத்தை தந்திருக்கிறது சமஸ்டி முறையிலான தீர்வை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போடுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்குவித்து கையெழுத்து போட வைத்துவிட்டார் .

தான் என்ன செய்தாலும் சொன்னாலும் பிரபாகரன் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொள்வார் என்கிற அதீத நம்பிக்கையில் கருணா அப்படி செய்து விட்டார் .ஆனால் அந்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்ததுமே வன்னிக்கு சென்ற கருணாவிற்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் யாரைக்கேட்டு தமிழீழக் கோரிக்கையை கை விட்டு விட்டு சமஸ்டிக்கு கையெழுத்துப் போட்டீர்கள் என்று பிரபாகரன் கோபமாக திட்டித் தீர்த்தது மட்டுமல்லாது பேச்சு வரத்தைக் குழுவிலிருந்து அன்டன் பாலசிங்கமும் கருணாவும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.பேச்சு வார்த்தை குழுவுக்கு தமிழ்ச்செல்வன் பொறுப்பாக போடப்பட்டார் . அதுவரை பிரபாகரனின் வலது கரமாக எல்லைகளற்ற அதிகாரத்தோடு வலம் வந்த கருணா மீது பெறாமை கொண்டிருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகள் பலர் கருணாவே சதிசெய்து கையெழுத்து போட வைத்து விட்டதாகவும் அதனால் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்ற சாட்டுகளை வைத்ததும் கருணாவை வெறுப்பேத்தி விட்டிருந்தது .
.அன்டன் பாலசிங்கம் வேதனையோடு லண்டன் சென்றுவிட பெரும் சீற்றத்தோடு கருணா மட்டக்கிளபிற்கு திரும்பியிருந்தான்.பல தளபதிகள் முன்னிலையில் பிரபாகரன் திட்டியது பெரும் அவமானமாக கருதியவன் அடுத்தது என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து நடக்கப் போகும் விபரீதக் காட்சிகளையும் இரத்தக் களரிகளையும் அரங்கேற்றப் போகும் சகுனி கருணாவை சந்திக்கிறான் ..

யார் அந்த சகுனி ...கருணாவின் பிளவையும் புலிகளின் அழிவையும் யார் எழுதினாலும் அதில் தராகி சிவராம் என்கிற பெயரை தவிர்த்து விட்டு எழுத முடியாது.இங்கு நான் அவரை சகுனி என்கிற அடைமொழியோடு அழைத்தாலும் .சிறந்த பத்திரிகையாளர் .இராணுவ ஆய்வாளர் .பத்தி எழுத்தாளர் .புத்திஜீவி .மேற்குலக இந்திய மற்றும் இலங்கை அரச மட்டத்திலும் உளவமைப் புகளோடும் தொடர்புகளை கொண்டவர் .இறுதியாய் கொல்லப் பட்ட பின்னர் மாமனிதர் .இப்படி பல முகங்கள் அவருக்குண்டு அதே நேரம் ஈழத்தில் தோன்றிய முக்கிய ஆயுதப் போராட்ட குழுக்களான P.L.O.T தமிழீழ மக்கள் விடுதலை கழகம் .L.T.T.E.விடுதலைப் புலிகள் இரண்டையுமே அதன் போராட்டப் பாதையிலிருந்தும் விலகவைத்து அழித்தொழித்து முடித்ததில் தராகி சிவராமின் பங்கு முக்கியமானது.
எனவே சிவராம் என்கிற மனிதரைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அடுத்து நகரலாம்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்கிளப்பு நகரில் பெரும் வசதி படைத்த குடும்பப் பின்னணியை கொண்டவர். தர்மரத்தினம் சிவராம் என்பதுதான் இவரது பெயர் .பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் 83 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யூலை கலவரத்தின் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு P.L.O.T அமைப்பில் இணைத்து கொண்டார்.அவரது புத்திசாலித் தனம் ஆங்கிலப் புலமை என்பன P.L.O.T தலைவர் உமா மகேஸ்வரனை கவர்ந்து கொள்ளவே தலைமையோடு நெருக்கமானார் .பின்னர் அந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அதனால் நடந்த உட்படுகொலைகள் அனைத்திற்கும் தலைமைக்கு உறுதுணையாய் நின்றதோடு பல படுகொலைகளை அவரே செய்தார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது .புலிகளின் பல தாக்குதல்களில் உயிர் தப்பியவர் பின்னர் புலிகள் அமைப்பிற்கு சார்பு நிலையெடுத்து வேலைகள் செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலிகளுக்கு சார்பான அரசியல் இராணுவக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியதோடு புலிகளின் தலைமையோடும் தொடர்புகளை கொண்ட ஒரவராகராகவும் .அதே நேரம் இயல்பாகவே கிழக்கு மாகாணத்தின் மேல் அவர் கொண்ட பற்றால் கிழக்கு பிரதேச வாதி யாகவும் மாறியிருந்ததோடு மட்டுமல்லாமல் அதனை அவர் பகிரங்கமாக எழுதவும் பேசவும் தயங்கியதில்லை .

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அன்டன் பாலசிங்கம் புலிகளால் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் தங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையோடு இருந்த ஒரு சிலரில் சிவராமும் ஒருவர்.அந்த இடம் தமிழ்செல்வனுக்கு போய் விடவே தமிழ்ச்செல்வன் வகித்த அரசியல் பொறுப்பாவது கிடைக்குமென எதிர்பார்த்தார் அதுவும் கிடைக்கவில்லை.சிவராம் விடயத்தில் புலிகளின் தலைமை தங்கள் தேவைகளுக்கு பாவிப்பதற்காக நம்ப நடந்ததே தவிர நம்பி நடக்கவில்லை .இதனால் லேசான வருத்தத்தில் இருந்தவருக்கு கருணாவின் விவகாரம் காதில் தேனாய் வந்து பாயவே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிழக்கு பிரதேச வாதம் உறுமத் தொடங்க வன்னியோடு கருணாவை பிரித்தெடுத்து .மீன்பாடும் தேன்நாடு என பெயரெடுத்த மட்டக்கிளப்பை தனிநாடக்கி. கருணாவை தலைவனாக்கி தானே அதற்கு அரசியல் ஆலோசகர் என்கிற திட்டங்களோடு கருணாவை சந்தித்தான் ..

No Comment