Navigation


RSS : Articles / Comments


10:27 AM, Posted by Siva Sri, No Comment

தமிழ்க்கவியுடனான ஒரு சந்திப்பு

தமிழ்க்கவி என்கிற தமயந்தி (வயது 66)மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது இரண்டு மகன்களும் ஒரு பேத்தியும் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகிப் போனதோடு இவரது கணவரும் இறுதி யுத்தத்தில் இறந்து போனார். ஆரம்ப காலப் போராளிகளிற்கு அவர் அக்கா.அடுத்த கட்ட போராளிகளிற்கு அன்ரி.அல்லது மம்மி. அதற்குமடுத்த கட்ட போராளிகளிற்கெல்லாம் அவர் அம்மம்மா.இப்படி புலிகள் அமைப்பின் மூன்று தலைமுறை போராளிகளிற்கு நன்கு அறிமுகமானதும் அவர்களின் அன்பு கொண்டவருமான தமிழ்க்கவி புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு தவிர்ந்த புறக் கட்டமைப்புக்களான  அரசியல்.பிரச்சாரம்.கலை பண்பாட்டுக் கழகம். தொலைக்காட்சி. வானொலி. பத்திரிகை என . இருபது வருடங்களிறகு மேலாக  பணியாற்றியவர்.இலங்கை இராணுவத்தால் கைதாகி முகாமில் அடைக்கப் பட்டு  புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப் பட்டு  விடுதலையானர்.இன்று  வன்னி இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியமாகி நிற்பதோடு தனது அனுபவங்களை  ஊழிக்காலம் என்கிற ஒரு நாவல் வடிவத்தில் தந்துள்ளார்.

இவர் சென்னை வந்திருந்ததை அறிந்து அவரது விலாசத்தினை பெற்றுக் கொண்டு அவர் இருந்த முகப்பேர் பகுதிக்கு என்னுடைய ஒரு நண்பரோடு  சென்றிருந்தேன். சென்னையில் இப்போ இருக்கின்ற சிறிய இடத்திலெல்லாம் குடியிருப்புக்களை சிறிது சிறிதாகக் கட்டி வாடைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது  முக்கிய தொழில். அப்படி ஒரு சிறிய அடுக்கு மாடி கட்டிடம் தான் அவரது விலாசம். ஒடுங்கிய படிக் கட்டுக்களில் அவரது வீட்டைத் தேடி  முதலாவது  இரண்டாவது என ஏறி நான்காவது மாடியை கடந்து மொட்டை மாடிவரை போய் விட்டேன்  அவரது வீட்டைக் காணவில்லை. மொட்டை மாடியில் ஏறி நின்று சுற்றி வர பார்த்தபோது அங்கு அமைக்கப் பட்ட சிறிய ஒரு அறையில் இருந்து சிரித்தபடியே இதுதான் எனது மாளிகை வாருங்கள் என வரவேற்றவர்.கவனம் குனிந்து உள்ளை வாங்கோ என்றார்.
மொட்டை மாடியில் இரண்டு மீற்றர் சதுர அளவில்  சுவர் எழுப்பி மேலே சீற் போட்ட கூரை.இதுதான் அவரது வீடு இங்கு அவரும் அவரது ஒரு பேரனும் வசிக்கிறார்கள்.நான் கவனமாய் குனிந்து உள்ளே போனதும் இஞ்சை கதிரையெல்லாம் கிடையாது என்றபடி ஒரு பாயை விரித்து விட்டு அவசரமாக தேனீருக்காக அடுப்பை மூட்டி தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு ஒரு பிஸ்கற் பக்கற்றை பிரித்தவர் அங்கு மிங்கும் பார்த்து விட்டு அங்கு கிடந்த ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்து நிலத்தில் வைத்து இதுதான் தட்டு என்றபடி அதில் பிஸ்கற்றுக்களை கொட்டி சாப்பிட சொல்லி விட்டு ரின் பால் பேணியை உடைத்து பால்தேனீர் போட்டு  கொண்டு வந்து அமர்ந்தார்.நீண்ட நேரம் அவரோடு உரையடிவிட்டு விடை பெற முன்னர் நாங்கள் வாங்கிப் போன அவரது புத்தகத்தில் வீரமும் தீரமும் விலை பேச முடியாதவை. வெற்றி அல்லது வீர மரணம் இதுவே எமது தாரக மந்திரம் அன்புடன் தமிழ்க்கவி என்று கையெழுத்திட்டு தந்தார்.

 நான் சென்னையை விட்டு புறப்பட முன்னர் அவரை தொடர்பு கொண்வதாக சொல்லி விடை பெற்றோம்.
நான் சென்னையை விட்டு புறப்படு முன்னர் அவரை புத்தக சந்தையில் சந்தித் திருந்த போது தான் அவசரமாக வேறு வீடு தேடுவதாக சொன்னார். காரணம் நாங்கள் மற்றும் வேறு பத்திரிகையாளர்களும் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்றதில் ஆத்திரமடைந்த வீட்டு முதலாளி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டாராம் என்றார்..வேண்டு மானால் வீட்டு முதலாளியோடு  நாங்கள் கதைத்து பார்க்கவா என்றதற்கு வேண்டாம் எங்களிற்கும் மான ரோசம் இருக்கு றோட்டிலை படுக்கிறது ஒண்டும் எனக்கு புதிசில்லை வீட்டை விட்டு போ.. எண்டு சொன்னதுக்கு பிறகு எனக்கு அங்கை இருக்க விருப்பம் இல்லை பாலத்துக்கு கீழை படுத்தாலும் இனி அங்கை இருக்க மாட்டன் வீடு தேடுறன் என்றார்.முடிந்தளவு நானும் உதவுவதாக கூறி விடை பெற்றேன்.அவரது ஊழிக்காலம் இன்னமும் முடியவில்லை...

No Comment