Navigation


RSS : Articles / Comments


வெளித்தெரியாத வேர். M.S.R

12:21 PM, Posted by sathiri, No Comment


வெளித்தெரியாத வேர். M.S.R
சாத்திரி ஒரு பேப்பர்.

ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின்  தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து  பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே  இந்த  எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான்  எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது  அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய காரணம் நினைவுத் தேய்வுகள் காரமாண தவறவிட்டு விட்டேன் ஆனால் நீங்கள்  எங்காவது அவரைப் பற்றி கட்டாயம் பதிவு செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.அண்மையில் வெளியான ஜயரின்  பதிவுகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு தகவலாவது   எம்.எஸ்.ஆரைப் பற்றி இருக்கும் என எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்.

ஜயரின் ஊரான வடக்கு புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர்தான் எம்.எஸ்.ஆர் அதைவிட ஈழப் போராட்ட ஆரம்ப காலங்களில் ஜரோடு இணைந்தே பல உதவிகளையும் போராட்டக் குழுக்களிற்கு செய்தவர்.ஆயுதப் போர் என அறைகூவல் விடுத்த சத்தியசீலன் தொடக்கம். அதை அடுத்த பரிமாணத்திற்கு தள்ளிய பொன் சிவகுமாரன் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தத் தொடங்கிய  உமா. பிரபாகரன்.சிறீசபாரத்தினம்  மட்டுமல்ல  தொண்ணூறுகளின் யாழ் இடப்பெயர்வு  நடக்கும் வரை பலாலி இராணுவ முகாமை சுற்றி காவல் கடைமையில் நின்ற புலிகள் அமைப்பு போராளிவரை. இவரின் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந்து ஒரு வேளை உணவாவது உண்ணாதவர் கிடையாது.


  M.G.R என்றால் அனைத்து தமிழர்களிற்குமே  தெரியும்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அவர்  என்னென்ன உதவிகள் செய்தார் என்பதும் அனைவரும் அறிந்தது  ஆனால் அதேயளவிற்கு கொஞ்சமும் குறைவில்லாத  உதவிகளை   வெளியே தெரியாமல் செய்தவர்  M.S.R . யார் இந்த . M.S.R??.....M.S..ராஜேந்திரன்.நெடிய கண்ணாடி அணிந்த உருவம். வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து  குப்பிளான்  செல்லும் வழில் இரண்டாவதாக இருந்த கேரளா பாணியிலான  மிகப்பெரிய பழையகாலத்து வீடுதான் இவர்களது வீடு.எழுபதுகளில் பல லொறிகளை வைத்து  கொழும்பிற்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வசதி படைத்த குடும்பம். M.S.R என்கிற  எழுத்து பதித்த  லொறிகள்  பொதிகளை  எற்றியபடி  யாழ் கொழும்பு  வீதியில்  அன்றைய காலங்களில் யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.எழுபதுகளின் இறுதியில் ஆயுதப் போர் என்று தொடங்கியபோது அனைத்து போராளிகளையும் அரவணைத்து பாதுகாத்த ஒரு முக்கியமான வீடு இவருடையது.எல்லாவற்றிக்கும் மேலால் பிரபாகரனிற்கு  ஜய்யர் மற்றும் ராகவன் ஆகியோருடைய தொர்புகள் கிடைத்த பின்னர். அவரின் முக்கியமான மறைவிடம் இவரது வீடுதான். பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்ற பின்னரும்.  பொன் சிவகுமரனின் கோப்பாய் வங்கிக் கொள்ளை தோல்வியடைந்து சிவகுமார் பிடிபட்டபோது அவருடன் வங்கிக் கொள்ளைக்கு போயிருந்த கி.பி அரவிந்தன்  தப்பியோடி நேராக போய்ச் சேர்ந்தது. இந்த வீட்டிற்குத்தான். இப்படி ஆரம்ப காலங்களில் இயக்க பேதங்களற்று  அனைவரரையும் போராளிகள் என்கிற நோக்கோடு அரவணைத்தவர்தான் M.S.R என்கிற மனிதன்.

பின்னை காலங்களில் இயக்க மோதல்கள் தொடங்கிவிட புலிகள்அமைப்பின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தார். M.S.R  சரளமாக சிங்களம் கதைக்கத் தெரிந்தவர் என்பதால்  வடக்கு கிழக்கிற்கு  வெளியே  புலிகள் அமைப்பு நடாத்திய  தாக்குதல்களிற்காக  பாவித்த   அல்லது உதவிய சிங்களவர்களை   இவரது வீட்டில்தான்  கொண்டு வந்து தங்க  வைத்து  பராமரிப்பார்கள்.  அப்படியானவர்களிற்கு ஆடு  அடித்து விருந்து வைப்பதில் இருந்து  சாராயம் வாங்கி விருந்து வைப்பது வரை தனது  செலவிலேயே செய்து முடிப்பார்.அப்படியான  காலங்களில் 85 ம் ஆண்டு இறுதியில் பலாலி படை முகாமை சுற்றி காவல் நிலை அமைக்கும் பணிக்காக சென்றிருந்தவேளை எனக்கும் அறிமுகமாகிறார்.அதன் பின்னர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுவரத் தொடங்கியிருந்தேன். எந்த நேரத்தில் யார் சென்றாலும் அவர்களிற்கு தேனீர் தயாரிப்பதற்காக  அவர்கள் வீட்டு அடுப்பில் ஒரு பானையில் சுடுநீர் இருந்தபடியேதான் இருக்கும். எத்தனை பேர் போனாலும்  சலித்துக்கொள்ளாமல். அவரது மனைவி றூபியக்கா இன் முகத்துடன்  வரவேற்று சாப்பிடுறீங்களா  தேத்தண்ணி குடிக்கிறீங்களா என்று வரவேற்றபடியேதான் இருப்பார்.

அவர்கள் வீட்டின் காணியில் இருந்த கழிவறையில் மேலே சீமெந்து  தகடு(பிளாற்) போடப்பட்டிருந்தது அதனோடு ஒட்டியபடி ஒரு வேப்பமரம் அகன்று பரந்து கழிவறையின் மேல் பக்கத்தை நன்றாக மறைத்து வளர்ந்திருந்தது. அதற்குமேல் ஏறி நின்று பார்த்தால் வடக்கு புன்னாவை கட்டுவன் சந்தியில் இருந்து  குப்பிளான் வீதி இரண்டு பக்கமும் நன்றாக பார்க்கலாம். அத்தோடு அவரது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி எதிரேயிருந்த ராகவன் வீடும் தெளிவாகத் தெரியும்.  டேய் இந்த பிளாற்றிலை உங்கடை அண்ணன் பதுங்கி படுத்திருக்கிறவர் என்று எனக்கு அடிக்கடி சொல்லுவார். 86 ம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து  தாயகம் திரும்பியிருந்த  தலைவர் பிரபாகரன்.  ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகளிற்கு திடீரென  போய் பார்த்து அவர்களிற்கு நன்றி தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தக் கொண்டிருந்தார். அப்படி ஒரு  இரவுப் பொழுதில் நான்   M.S.R அண்ணரோடு அவரது வீட்டில்  அரட்டையடித்தக் கொண்டிருந்தேன்.  றூபியக்கா இரவு உணவாக புட்டு அவித்துக்கொண்டிருந்தார்.

அவரது வீட்டிற்கு முன்னால் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆயுதங்களுடன் குதித்த  பலர் மளமளவென அவரது வீட்டின் நாலு பக்கமும் புகுந்து நிலையெடுத்தார். அவரது வீட்டிற்கு  அருகேயே இரண்டு பக்கமும் புலிகள் அமைப்பின் காவல் நிலைகள் இருந்ததால் அங்கு வேறு யாரும் வரும் சந்தர்ப்பம் இல்லாததால் நாங்கள் அமைதியாக நடப்பதை கவனித்படி இருந்தோம். என்னைப்பார்த்து யாரே பெரிய தலைபோலை இருக்கு  சிலநேரம் குமரப்பாவா இருக்கலாமெண்டார். காரணம் குமரப்பா அன்றைய காலங்களில் அந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தார்.  ஆனால் தலைவர் பிரபாகரன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டதும் அட தம்பிவாறான் என்றார். அப்பதான்  எனக்கு சங்கடமாயிருந்தது தந்த வேலையை விட்டிட்டு இங்கை என்ன செய்யிறாயெண்டு பேச்சு விழலாமென எதிர்பார்த்தேன். ஆனால் வந்தவர்  M.S.R ரை கட்டித் தழுவி அண்ணை எத்தினை வருசமாச்சு  என்றபடி  நலம் விசாரித்து விட்டு என்னை பார்த்தவர்  சிரித்தபடி டேய் உனக்கும் இவங்களை தெரியுமா ஆச்சரியமாக  கேட்டவர் முழு இயக்கத்தையும்  இவர்தான் வளக்கிறார் போலை   என்று விட்டு. என்ன றூபியக்கா சாப்பாடு றெடிபோலை நல்ல நேரத்தக்குத் தான் வந்திருக்கிறன் என்றபடி குசினிக்குள் புகுந்து விட்டிருந்தார். அவருடன் மெய் பாதுகாவலர்கள் ஆறுபேர் வந்திருந்தார்கள். அனைவரிற்கும் றூபியக்கா  அவித்த புட்டு போதாது என்பதால்  மதியம் மிச்சம் இருந்த சோற்றையும் புட்டுடன் சேர்த்து  பெரிய பாத்திரத்தில் போட்டு இருந்த கறிகளையும் ஊற்றி அவசரமாய் கலந்தவர். அதை கையில் உருட்டி பிரபாகரன் கையில் வைத்தவர் தம்பி மற்றவையையும் வரச்சொல்லுங்கோ என்றார்.


பெடியள் வாங்கோ அக்காவின்ரை கையாலை சாப்பிட குடுத்து வைக்கவேணும் என்று கூப்பிட்டார். ஆனால்  விறைத்தபடி நின்றிருந்த பாது காவலர்கள் வரத் தயங்கினார்கள். அண்ணையின்ரை வீட்டிலை எனக்கு பாது காப்பு தேவையில்லை வாங்கோடா என்று மீண்டும் கூப்பிட்டதும்தான் ஒவ்வொருத்தராய் வந்து கையை நீட்டி சாப்பிட்டு முடித்ததும் M.S.R அண்ணன் செம்பில் தண்ணி அள்ளி அவர்கள் கைகள் கழுவ தண்ணீரை ஊற்றினார்.சாப்பிட்டு முடிந்து புறப்படும்போது  அண்ணை  எந்த உதவி தேவையெண்டாலும் எங்களிட்டை கேளுங்கோ எண்டு சொல்மாட்டன் உங்கடை உதவிதான் எங்களுக்கு தொடந்தும் தேவை என்று M.S.R ரிடம் விடை பெற்ற பிரபாகரன் என்னை பார்த்து  டேய் இங்கையே படுத்து கிடக்காமல் அலுவல்களை கவனி என்றுவிட்டு போய் விட்டார்.அப்படி எந்தனை வருடங்கள் கடந்தாலும் தலைவர் பிரபாகரனால் மறக்கமுடியாத ஒரு மனிதராகவே M.S.R இருந்தார்.

இந்தியப் படையினரின் வருகை புலிகளோடு யுத்தம் தொடங்கியதும் பலாலியில் இருந்து புறப்பட்ட இந்தியப் படையினர் வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் இருந்த அனைத்து வீடுகளையும் இடித்து தரை மட்டமாக்கினார்கள். சந்தியில் இருந்த சாமியார் வீடு . ஸ்பீக்கர் மேகனின் வீடு ராசாத்தியக்கா வீடு அவரது எரிபொருள் நிரப்பு நிலையம் என்பவற்றோடு M.S.R அவர்களின் வீடும் அவரது நடக்க முடியாத வயது முதிர்ந்த தந்தை குட்டியப்பாவோடு சேர்த்து இந்தியப்படைகளால் இடித்து  தரை மட்டமாக்கப் பட்டதோடு அவரது லொறிகளையும் கொளுத்தி விட்டிருந்தார்கள்.எப்பொழுதுமே கலகலப்பாக  இருக்கும் மனிதர் அன்றோடு இடிந்து போனார். கடைசியாய்  தப்பியிருந்த ஒரோயொரு லொறியை விற்று  எல்லாத் தொழில்களும் செய்து பார்த்தார். பின்னை காலங்களில் அவரது மூத்த மகனும் இயக்கத்தில் இணைந்து சண்டையொன்றில் தலையில் காயமடைந்து  மன நிலை பாதிப்படைந்தவனாகிவிட்டிருந்தான்.  நீண்ட காலங்களின் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டளவில்  மீண்டும்  தமிழ்நாட்டில் அவரது தொடர்பு கிடைத்போது என்னாலான சிறு உதவியினை செய்திருந்தேன். அது அவரது மகனின் மருத்துவ செலவுகளிற்கே போதுமானதாக  இருந்திருக்கவில்லை. அவரும் மீண்டும் வன்னிக்கு போய்விட எங்கள் தொடர்பும் விடு பட்டு போய்விட்டது. இறுதியில் மிகவும் வறுமையான நிலையில் வவுனியா பூந்தோட்டப் பகுதியில் வசித்து வந்தவர் அண்மையில்  இறந்து போய் விட்டார் என்கிற  செய்திமட்டுமே எனக்கு கிடைத்தது.

முன்னை நாள் போராளிகளிற்கும்  இயக்க ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பு அவர்களது வாழ்வாதாரங்களிற்கு உதவிகளையும் பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்த காலகட்டங்களில் கூட தனக்காக உதவியென்று இயக்கத்திடம் போய் நிற்காமல் இறுதிவரை அவர்களிற்காக உதவி  வெளியே தெரியாத வேராக  உதவி செய்தே மரணித்துபோய் விட்ட அந்த மனிதனை இந்த மாவீரர் நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலிக்கிறேன்.

No Comment